சித்திரமே 34
![]()
சித்தாராவை ஆழ்ந்து பார்த்தான். இப்படி ஒன்றை கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னவோ? ஆனால் அது அவனால் முடியாத காரியமல்ல.
“நான் மன்னிப்பு கேட்டுட்டா ஓகே வா?”
“அவங்க உன்னை மன்னிச்சுட்டா நான் ஃபாரின் போக மாட்டேன்.” என்று அழுத்தமாக கூற, விக்ரம் அப்போதே கைபேசியை எடுத்து மருதநாயகத்தை அழைத்து விட்டான்.
“ஹலோ?”
“நான் விக்ரம்”
“ம்ம்.. சொல்லுங்க”
“உங்க கிட்ட பேசனும். வீட்டுக்கு வர முடியுமா?”
“வீட்டுக்கா? என்ன விசயம்? சித்து நல்லா இருக்கா தான?” என்று விசாரித்தார்.
உடனே சம்மதம் சொல்ல தயக்கமாக இருந்தது அவருக்கு. மகள் வரக்கூடாது என்று கூறி விட்டாளே.
“நல்லா இருக்கா. எனக்கு தான் பேசனும். நீங்க ரெண்டு பேரும் வர்ரீங்களா?”
“ஓஓ.. சரி வர்ரோம்”
“எப்ப முடியும்?”
“நாளைக்கு வர பார்க்கிறோம்”
“ஓகே. வச்சுடுறேன்” என்று வைத்து விட்டு மனைவியை பார்த்தான்.
“நாளைக்கு வர்ராங்களாம்” என்று சொல்லி வாயை மூடும் முன், அவளது கைபேசி இசைத்தது.
எட்டி எடுத்தவள் காதில் வைத்தாள்.
“சொல்லுங்கபா.” என்று ஆரம்பித்தாள்.
“ம்ம்.. ஆமா.. வாங்க வாங்க. இல்லபா.. சரி.. ம்ம்.” என்று பேசி விட்டு வைத்து விட்டாள்.
நாளை பெற்றோர்கள் வருவது உறுதியாகி விட, சித்தாரா எழுந்தாள்.
“உட்காரு.. இப்ப தான நடந்த?”
“நான் ரூம்க்கு போகனும்” என்றவள் எழுந்து நடக்க, விக்ரம் வந்து கையை பிடித்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் சித்தாராவின் பெற்றோர்கள் வந்து சேர, அங்கு சுந்தர், வேதவல்லி, அல்லி, விசாகா எல்லோருமே இருந்தனர். விதார்த் மட்டும் பள்ளிக்கு சென்றிருந்தான்.
“வாங்கபா ம்மா.” என்று சித்தாரா எழுந்து வரவேற்றாள்.
“எப்படிடா இருக்க? இப்ப வலி இல்லாம நடக்க முடியுதா?” என்று மகளது உடல் நிலையில் அக்கறை கொண்டு பேச ஆரம்பித்தனர்.
சித்தாராவும் அவர்களோடு பேசிக் கொண்டிருக்க, விக்ரம் வந்து விட்டான்.
“இப்ப எதுக்கு எங்கப்பா அம்மாவ கூப்பிட்டேன்னு உங்களுக்கு சொல்லல இல்லையா?” என்று எல்லோரையும் பார்த்த சித்தாரா, “விக்ரமும் வேதவல்லியும் என் வாழ்க்கையில விளையாடுன விளையாட்டுக்கு, இவங்க கால்ல விழுந்து விக்ரம் மன்னிப்பு கேட்க போறான்” என்று அறிவித்தாள்.
“என்ன? விக்ரம் எதுக்கு உங்கப்பா அம்மா கால்ல விழனும்?” என்று வேதவல்லி தான் முதலில் எகிறினாள்.
“நீயும் உன் தம்பியும் சித்தாரா வாழ்க்கையில விளையாடுனீங்களா?” என்று சுந்தர் கேட்டு வைக்க, வேதாவிற்கு பகீரென்றானது.
“அது.. அது.. அவ..” என்று தடுமாற, “அதுல அக்காவுக்கு பங்கில்ல. நான் தான் காரணம்” என்று விக்ரம் முன்னால் வந்தான்.
சுந்தருக்கு நம்ப முடியவில்லை. வேதா எதையும் செய்யாமல் சித்தாரா பழி போடுவாளா? பொய் பழி என்றால், இத்தனை பேர் இருக்கும் போதே சொல்வாளா என்ன? மனைவியை அழுத்தமாக பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.
சித்தாரா தான் அவர்களை அழைத்து இருந்தாள். முக்கியமாக வேதவல்லி வர வேண்டும் என்று கூறி இருந்தாள். மனைவியை தனியாக அனுப்ப விருப்பமில்லாமல், சுந்தரும் வந்து விட்டான்.
“என்னை மன்னிச்சுடுங்க…”
“மாமா” என்று சித்தாரா அழுத்தி சொல்ல, விக்ரம் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“என்னை மன்னிச்சுடுங்க மாமா.. அத்த. நான் உங்க மகள ரொம்பவே நோகடிச்சுட்டேன்” என்று கூறி, அவர்கள் காலை தொட்டு விட்டான்.
வேதவல்லி, மருதநாயகம், மகாதேவி மூவர் மட்டுமே பதறினர்.
“ஏய்.. என்னடா அவங்க கால பிடிச்சுட்டு..” என்று வேதா கத்த, சித்தாரா திரும்பி முறைத்தாள்.
“ஏன்..? எங்கப்பா கால்ல விழுந்தா உன் தம்பி குறைஞ்சுடுவானா? உன் வீட்டுக்காரு உன் அப்பா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குனதே இல்லையா?” என்று முறைக்க, வேதாவின் வாய் கப்பென மூடிக் கொண்டது.
இல்லை என்று சொல்ல முடியாதே. ஆனாலும் தம்பி அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டுவதை ஏற்க முடியவில்லை. அவளுக்கு அவளுடைய தம்பி பெரிய மகாராஜனாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அநியாயம் செய்தால், மன்னிப்பை வேண்டித்தான் ஆக வேண்டும்.
விக்ரமை எழுப்ப மருதநாயகம் போராடினார்.
“அய்யோ.. எந்திரிங்க.. எந்திரிங்க மாப்பிள்ளை” என்று அவனை எழுப்ப, அவன் அசையவே இல்லை.
“மன்னிச்சுடுங்க” என்று மட்டும் கூற, “சரி மன்னிச்சுட்டேன்” என்று கூறி பிடித்து எழுப்பி விட்டார்.
“என்னமா நீ?” என்று மகளை கடிந்து கொள்ள, “என்ன இருந்தாலும் அவரு உன் புருஷன் மா” என்று மகாதேவியும் அதட்டினார்.
“சோ வாட்? புருஷன்னா தூக்கி உச்சானி கொம்புல உட்கார வைக்கனுமா? பணமும் பதவியும் ஒருத்தனுக்கு நல்லத கத்து கொடுக்குதோ இல்லையோ.. பண்பு கத்து கொடுத்துரும். நீங்க ரெண்டு பேருமே பெரியவங்க தான? உங்க கால்ல விழுறதுல அவனோட கிரீடம் இறங்கிடுமா? பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்குறது தப்பா?”
சித்தாரா பெற்றோரையும் விக்ரமையும் முறைத்துக் கொண்டே பேச, பதில் சொல்ல முடியாமல் மூவரும் நின்றனர்.
“அதே பண்பாடு தான் புருஷன மத்தவங்க கிட்ட விட்டுக் கொடுக்கவும் கூடாதுனு சொல்லுது”
வேதவ்லி இப்போது இடையே புகுந்தாள்.
“எங்கப்பா ம்மா மத்தவங்க கிடையாது. அவன் விழ வேணாம்னா நீ வந்து விழுறியா? நீதான அன்னைக்கு அவன் நடிக்கிறான்னு அடிச்சு சொல்லி என்னை துரத்தி விட்ட?” என்று கேட்டு, வேதவல்லியை அழுத்தமாக பார்த்தாள்.
“அமைதியா இரு” என்று சுந்தர் மனைவியின் கையை பிடித்து அருகே இழுத்துக் கொண்டான்.
“வந்துட்டா.. பெரிய இவ மாதிரி” என்று கடுப்பாக முனங்கிக் கொண்டாள் சித்தாரா.
“சரி சரி.. அமைதியா இரு. போனது போகட்டும். இனி எல்லாத்தையும் மறந்து நல்லபடியா வாழுவோம்” என்று மருதநாயகம் கூற, விக்ரம் சித்தாராவை தான் பார்த்தான்.
அவள் சொன்னதை செய்து விட்டான். இனி அவளும் சொன்னதை செய்ய வேண்டும்
“எல்லாரும் வாங்க. . அதான் எல்லாம் சுமூகமா முடிஞ்சதுல? எதாவது சாப்பிடலாம்” என்று அல்லி அழைக்க, அவர்கள் நகர்ந்தனர்.
“இனி ஃபாரின் போக மாட்டல?” என்று விக்ரம் சித்தாராவின் அருகே வந்து கையைப்பிடித்துக் கொண்டு கேட்க, மேலும் கீழும் தலையாட்டினாள்.
“ஆண்ட்டி..” என்ற சித்தாரா கண்ணை காட்ட, அவர் வேகமாக பூஜை அறைக்குள் எல்லோரையும் அழைத்துச் சென்றார்.
சித்தாராவும் அங்கு நடக்க, விக்ரமும் அவள் கையை பிடித்தபடி வந்தான்.
உள்ளே சாமிபடங்களுக்கு கீழ் தாலி இருந்தது. அவன் கட்டியது தான். விபத்தன்று கழட்டி வைத்தது. மீண்டும் சித்தாரா போடவே இல்லை.
தாலியை பார்த்து விட்டு விக்ரம் அவளை திரும்பிப் பார்க்க, “இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
மறந்து விடக்கூடிய நாள் இல்லையே. விகரமின் பிறந்தநாள். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்ட நாளும் கூட.
“முதல் கல்யாணம்.. சாமி இருந்தது, கூட இவங்க யாருமே இல்ல. ரெண்டாவது தடவ என் அப்பா அம்மா மட்டும் தான் இருந்தாங்க. சாமியும் இல்ல. மத்தவங்களும் இல்ல. இப்ப எல்லாருமே ஒன்னா இருக்காங்க. தாலிய போடுறியா?” என்று தலைசாய்த்து கேட்க, விக்ரம் இமை சிமிட்டாமல் அவளை பார்த்தான்.
அவள் புருவம் உயர்த்த, மெல்லிய சிரிப்போடு அந்த தாலியை எடுத்துக் கொண்டான். கண்ணை மூடி எல்லோருமே அவர்களது நலவாழ்விற்காக வேண்டிக் கொண்டனர்.
திரும்பி அவள் கழுத்தில் தாலியை போட்டு விட்டு, அதில் குங்குமத்தையும் வைக்க சொல்லி அல்லி கூற, வைத்து விட்டான்.
மனநிறைவோடு எல்லோருமே வெளியே வந்தனர். வேதாவை தவிர. ஆனால் அவளை கண்டு கொள்ளத்தான் யாருமில்லை.
எல்லோரும் சாப்பிட்டு பேசிக் கொண்டிருக்க, சித்தாரா மாத்திரை போட எழுந்தாள்.
“டேப்ளட் போட்டு தூங்கனும். நீங்க இருங்க. ஈவ்னிங் போகலாம்” என்று பெற்றோர்களிடம் சொல்லி விட்டு அவள் நடக்க, விக்ரம் அவளது கையை பிடித்துக் கொண்டான்.
நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள், அவனோடு நடந்து லிஃப்டில் நுழைந்தாள்.
அவளை அறையில் கொண்டு வந்து சேர்த்தவன், அவள் அமரப்போகும் முன் தாவி அணைத்திருந்தான்.
அந்த அணைப்பில் ஆச்சரியப்பட்டாலும், விலகாமல் அமைதியாக நின்றாள்.
“ரொம்ப ரொம்ப சாரி தாரா. உன் கால்ல தான் நான் முதல்ல விழுந்துருக்கனும்” என்று கூற, சித்தாரா சிரித்து விட்டாள்.
அவனை விலக்கி விட்டவள், “இப்ப கூட நான் ரெடி. விழு” என்று காலை காட்டினாள்.
“உனக்கு ஆசைனா விழுந்துட்டு போறேன்” என்று குனிந்து காலை தொட்டு விட, அவள் வாய்விட்டு சிரித்தாள்.
குனிந்திருந்தவன் அப்படியே அவளை தூக்கிக் கொண்டான்.
ஒரு கையில் குச்சியை விடாமல் பிடித்துக் கொண்டவள், “என்னால நடக்க முடியும்” என்று முறைத்தாள்.
“இது வரை நடந்தது போதும். ரெஸ்ட் எடு” என்று கூறி மெத்தையில் அமர வைத்து, அவளது குச்சியை வாங்கி ஓரமாக வைத்து விட்டு, அருகே அமர்ந்து அவள் கையை பிடித்துக் கொண்டான்.
“என்ன?”
“என்னை மன்னிச்சுட்டியா?”
“தெரியல”
“அப்படினா?”
“மன்னிச்சுட்டனானு தெரியல. பட் கோபமெல்லாம் போயிடுச்சு.”
“இன்னொரு உண்மைய சொல்லனும்”
“என்ன?”
“அந்த வீடு கெஸ்ட் ஹவுஸ் இல்ல”
“தெரியுமே”
“தெரியுமா?”
“ம்ம். அது உங்களோட பழைய வீடு. உங்க அம்மா பாட்டி எல்லாரும் இருந்தப்போ அங்க தான் வாழ்ந்தீங்கனு ஆண்ட்டி சொன்னாங்க”
“எப்போ?”
“இங்க வந்த மறுநாள். இந்த குடும்பத்த பத்தி எல்லாம் விசாரிச்சேன். அப்போ இதையும் தெரிஞ்சுக்கிட்டேன்”
“அப்ப கூட என் மேல கோபமா தான இருந்த?”
“அது கெஸ்ட் ஹவுஸ் இல்லனு ஆகிட்டா, நீ பேசுனது எல்லாம் இல்லனு ஆகிடுமா என்ன?”
“சரி தான்… அப்ப இனிமே எங்கயும் போக மாட்டல?”
“போவேன்”
“ஏய்.. பேச்சு மாறாத”
“நான் எங்க மாறுனேன்? ஃபாரின் போக மாட்டேன்னு தான் சொன்னேன். எங்கப்பா கூட எங்க ஊருக்கு போக மாட்டேன்னு சொல்லலயே?”
“நோ..” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “அதெல்லாம் நீ எங்கயும் போகக்கூடாது. நான் விடமாட்டேன்” என்றான்.
அவனை பிடித்து தள்ளி விட்டவள், “இன்னும் நீ அன்னைக்கு நடந்துக்கிட்டதுக்கு விளக்கம் கொடுக்கல” என்று கேட்டாள்.
“ஆமால..” என்றவன் ஒரு பெரு மூச்சு விட்டான்.
“அன்னைக்கு காலையில அக்கா வந்து அப்படிப்பேசும்னு எதிர்பார்க்கல. அக்காவா நடிக்கிறேன்னு சொல்லும் போது, என்னால உடனே இல்லனு சொல்ல முடியல. எங்கப்பா சாகும் போது சொல்லிட்டு செத்தத நான் மறந்துட்டேனோனு அக்கா வருத்தப்படும்னு தான், அதுக்கு ஏத்த மாதிரி பேசுனேன். கல்யாணம் நடந்தத சொல்லி இருந்தா, உடனே அக்கா டைவர்ஸ் வாங்குனு சொல்லிடும். எல்லாத்தையும் மறைச்சுட்டு அக்காவுக்கு ஏத்த மாதிரி பேசுனேன். நீ உடனே வெளிய போவனு எதிர்பார்க்கல. உன்னை கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லிடலாம்னு நினைக்கும் போது, ஆஃபிஸ்ல இருந்து போன் வந்துச்சு.
உங்கப்பா கூட நிறைய போட்டி போடுவேன். அதுல பெருசா நான் நம்பி இருந்த ஒன்னு என் கைய விட்டு போயிருச்சு. உங்கப்பா ஜெயிச்சுட்டாருனு தெரிஞ்சதும், செம்ம கோபம். அப்ப நீ வந்து பேசவும், அவர் மேல வந்த கோபத்த உன் மேல காட்டிட்டேன். நீ போனப்புறம் ரெண்டு மாசம் வீம்புக்கு வேலையை பார்த்துட்டு இருந்தேன். அதுவும் நீ போகும் போது வாசீகன முறைச்சுட்டு போன போல? அவன் சொல்லிட்டே இருப்பான். நீ முறைச்ச முறைப்புல அவன் பயந்துட்டான்.
போகப்போக உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். சரி உன் வீட்டுக்கு வரலாம்னு பார்த்தா, உங்கப்பா கூட போட்டி போட்டதுல எல்லாம் வரிசையா தோத்துட்டே இருந்தேன். அதுவே உன்னை தேடி வரவிடாம வேலைய மட்டுமே பார்க்க வச்சுடுச்சு”
“வாகீசன் இப்ப எங்க?”
“அவன் வேற நாட்டுல இருக்கான். இங்க உன்னை பார்க்க வரனும்னு அவனுக்கு ஆசை. ஆனா அதுக்கு நேரமே இல்லாம அடுத்தடுத்து அவன் வாழ்க்கையில பிரச்சனை நடக்குது. இங்க வந்தா வருவான்”
“ம்ம்”
“சாரி தாரா. நான் அப்படி பேசிருக்கவும் கூடாது. உன்னை கண்டுக்காம விட்டுருக்கவும் கூடாது” என்று மன்னிப்பு கேட்க, அவள் அமைதியாக இருந்தாள்.
அவளது மன்னிப்பு உடனே கிடைக்காது என்று புரிய, தன் தோளில் சாய்த்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்.
தொடரும்.
