சித்திரமே 4
![]()
வேலை முடிந்து சித்தாரா வரும் போதே, விதார்த்தும் வந்து இறங்கினான். அவனுக்கு தேர்வு ஆரம்பித்து இருந்தது. அதனால் பள்ளியிலிருந்து சீக்கிரமே வந்து சேர, சித்தாரா சாலையில் காத்திருந்து மகனை கையோடு அழைத்துக் கொண்டு வந்தாள்.
தேர்வில் எழுதிய வினா விடைகளை பற்றி அவன் பேசிக் கொண்டிருக்க, சித்தாராவும் கேட்டுக் கொண்டே வந்தாள்.
வீடு நெருங்க, “ம்மா.. அப்பா” என்று கைகாட்டினான் விதார்த்.
ஒரு வாரமாக ஆள் காணாமல் போனதில், சித்தாரா சிரித்துக் கொண்டிருந்தாள்.
‘பயந்துட்டான் போலயே.. ஆளயே காணோம்’ என்று நினைத்துக் கொண்டிருக்க, இப்போது முன்னால் வந்து நின்றிருந்தான் விக்ரமசேனா.
அன்று காரை தெருவுக்கு வெளியே விட்டிருந்தவன், இன்று வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தான்.
காரை விட்டிறங்கி மகனை பார்த்தபடி வேகமாக வந்தான்.
‘என்ன திரும்ப வந்து நிக்கிறான்?’ என்று யோசனை ஓட, விதார்த் ஒரு வாரமாக பார்க்காத தந்தை இருகை நீட்டியதை பார்த்து, அன்னையை ஏக்கமாக பார்த்தான்.
“போ” என்று சித்தாரா கையை விட்டு விட, துள்ளி குதித்து தந்தையிடம் ஓடினான்.
இத்தனை நாட்களில், தந்தை மீது அவன் கொண்ட அதிருப்தியை சித்தாரா போக்கியிருந்தாள். விதார்த்தும் எப்போது மீண்டும் தந்தையை பார்ப்போம் என்று ஆர்வமாக இருந்தான். பல முறை கேட்கவும் செய்தான். அவள் தான் எதெதோ சொல்லி சமாளித்து வைத்திருந்தாள். அதனால் பார்த்ததுமே ஓடிச் செல்ல, விக்ரம் வேகமாக முன்னால் வந்து தூக்கிக் கொண்டான்.
மகனை தூக்கிப்போட்டு பிடித்து விளையாட்டு காட்ட, சித்தாரா அதை கண்டும் காணாமல் கதவை திறந்து உள்ளே சென்றாள்.
மகனோடு விக்ரமும் உள்ளே வந்தான்.
“ப்பா.. நீங்க வந்துட்டீங்கனு சொன்னா யாருமே நம்பலபா.. நாளைக்கு ஸ்கூலுக்கு வர்ரீங்களா?” என்று விதார்த் ஆர்வமாக கேட்க, “கண்டிப்பா.. நாளைக்கு நாம கார்ல போகலாம்” என்றான் விக்ரம்.
“அப்போ அம்மா?”
“உங்கம்மாவும் ஸ்கூலா படிக்கிறாங்க?” என்று விக்ரம் அவளை மேலும் கீழும் பார்த்தபடி கேட்க, விதார்த் வாயில் கை வைத்து கேலியாக சிரித்தான்.
“இல்லயே.. அம்மா வேலை பார்க்குறாங்க. நான் அம்மாவயும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொன்னேன்”
“ஓஓ.. உங்கம்மா நான் கூப்பிட்டா வர மாட்டாங்க. நீ கூப்பிடு. கூட்டிட்டுப் போகலாம்”
“ம்மா.. நாம ஸ்கூலுக்கு போகலாமா?”
“நான் தான் உங்க ஸ்கூலுக்கு நிறைய தடவ வந்துருக்கேனே. உங்கப்பாவ கூட்டிட்டுப் போ” என்றவள், வேகமாக உடை மாற்ற சென்று விட்டாள்.
“உங்கம்மாவுக்கு ஓவர் பிடிவாதம்டா மகனே” என்று உதட்டை பிதுக்கியவன், விதார்த்தோடு பேச ஆரம்பித்து விட்டான்.
உடைமாற்றி வந்தவள், விதார்த்துக்கான மாற்றுடையை எடுத்து வந்து வைத்து விட்டு, “விது.. ட்ரெஸ் சேன்ஜ் பண்ணு” என்று கூறியதோடு நகர்ந்து விட்டாள்.
விக்ரம் பொறுப்பை எடுத்துக் கொண்டான். மகனுக்கு அத்தனை வேலைகளையும் செய்து விட்டு, சித்தாராவை பார்த்தான்.
அவள் சிற்றுண்டி சிலவற்றை கொண்டு வந்து வைத்து விட்டு, மகனை சாப்பிட சொல்ல, “அப்பாக்கு?” என்றான் மகன்.
“நீ சாப்பிடு தங்கம். நான் உங்கம்மாகிட்ட வாங்கிட்டு வர்ரேன்” என்று சமையலறை பக்கம் நடந்தான்.
‘இவன் கிட்ட எதோ வித்தியாசம் தெரியுதே’ என்று யோசித்தபடி பின்னால் சென்றாள்.
உள்ளே நுழைந்ததும் விக்ரம் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். பார்த்த பார்வையில் ரசனை. பார்வை மீண்டும் முகத்துக்கு வந்தால், அங்கு அக்னி பிழம்பு காட்சியளித்தது.
“என்ன லுக்கு? கண்ண நோண்டிருவேன்” என்று அவள் எகிற, விக்ரம் பொங்கி வந்த சிரிப்பை அடக்கினான்.
“என்ன சிரிப்பு?”
“நான் உன்னை இத விட அதிகமா… பார்த்துருக்கேன். அப்போ எல்லாம் கண்ண தோண்டலையே?”
“வாட்?” என்று அதிர்ச்சியாக கேட்ட, “உஸ்ஸ்” என்று அவளது சத்தத்தை அடக்கினான்.
அவள் காதருகே வந்து, “மறந்துடுச்சா? அதெப்படி மறக்கும்? ஆதாரமா தான் விது இருக்கானே” என்று ரகசியமாய் பதில் கூறினான்.
முகம் சிவந்து விட்டது அவளுக்கு. அவ்வளவும் கோபத்தில்.
“யூ..” என்று ஆரம்பிக்க, “விக்ரம சேனா.. ” என்று எடுத்துக் கொடுத்தான்.
“உன் மூஞ்சி.. இப்ப எதுக்கு வந்த நீ? மறுபடியும் பையன் வேணும்னு கேட்கவா? தாராளமா கூட்டுட்டு போ.” என்று பெருந்தன்மையாய் பேசி, கோபத்தை அடக்கினாள்.
“அப்படியா?” என்று கேட்டவன், சிரிப்போடு வெளியேறி விட்டான்.
“மூஞ்சி.. சிரிப்ப பாரு..” என்று பொறுமியவள், சட்டென யோசனைக்குள்ளானாள்.
‘முதல்ல வர்ரப்போ அப்பாவியா இருந்தானே.. இவனா ஆன்டி ஹீரோனு இருந்தான். இப்ப வில்லங்கமா இருக்கான். என்னவா இருக்கும்?’ என்று யோசிக்கும் போதே, வெளியே விதார்த் குதிக்கும் சத்தம் கேட்டது.
“ஐஐ.. ஜாலி ஜாலி” என்று கூச்சலோடு அவன் குதிக்க, சித்தாரா வெளியே வந்தாள்.
மகனின் சந்தோசத்தை கேள்வியாக பார்க்க, மகன் கேட்காமலே விடை சொன்னான்.
“ம்மா.. இனிமே அப்பா இங்க தான் இருப்பாராம். டெய்லி அப்பா கூட கார்ல ஸ்கூலுக்கு போவேனே” என்று அறிவித்து தந்தையிடம் பாசத்தை பொழிய, சித்தாரா தான் புரியாத அதிர்ச்சியோடு பார்த்தாள்.
விக்ரம் அவளை பார்த்து கேலியாக புருவம் உயர்த்த, உடனே சமாளித்துக் கொண்டு “சரி சரி. இப்போ படிச்சு முடிக்கிறியா இல்லையா? நாளைக்கு எக்ஸாம் எழுதனும்ல?” என்று கூறியதும், வேகமாக அமர்ந்து பாடங்களை எடுத்தான் விதார்த்.
“ம்மா.. வாங்க” என்று பாடம் சொல்லித்தர அழைக்க, “இரு வர்ரேன்” என்று அறைக்குள் சென்று விட்டு திரும்பினாள்.
சித்தாரா பாடம் சொல்லிக் கொடுப்பதை விக்ரம் வேடிக்கை பார்த்தான். அவனது மனம் எதெதோ யோசித்துக் கொண்டிருந்தது.
பாடம் முடிந்து மகன் வந்ததும், காரை எடுத்துக் கொண்டு சுற்றக் கிளம்பினர்.
“ஹப்பா.. இப்பவாவது தனியா கொஞ்ச நேரம் உட்கார முடிஞ்சதே.. வாய் விட்டு புலம்ப கூட முடியாம பார்த்துட்டே இருக்கான்” என்று முதலில் அவனை திட்டி விட்டு, பிறகு குழப்பமானாள்.
“ஏன் இப்படி நடந்துக்குறான்? இங்க ஏன் தங்கனும்? நான் வர மாட்டேன்னு சொல்லிட்டதாலயா? அதுக்காக அவன் இங்க இருக்கனுமா? என்னடா குழப்பமா இருக்கு..? அன்னைக்கு பிள்ளை மட்டும் தான் வேணும்னு சொன்னான். இப்ப என் கிட்ட வேற மாதிரி நடந்துக்குறான். இவன் கேரக்டர நாம தான் தப்பா ஜட்ஜ் பண்ணிட்டோமா? இந்த கதை உலகமும் புரியல. கதையில இருக்கவனுங்களயும் புரிஞ்சுக்க முடியல. இதுக்கு இடையில நாம போட்ட ப்ளான் என்ன ஆகும்?”
மாற்றி மாற்றி எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டே அமர்ந்து இருக்க, தந்தை மகன் இருவரும் வந்து விட்டனர்.
அதற்கு மேல் எதையும் யோசிக்காமல், மகனுக்கு உணவு கொடுத்து விட்டு விக்ரமை பார்த்தாள்.
அவன் எதோ கைபேசியில் தீவிரமாக பேசியபடி வாசலில் நின்று இருந்தான்.
‘அப்படியே புடிச்சு தள்ளி விட்டுட்டு கதவ பூட்டுனா என்ன?’ என்று யோசனை ஓட, அவனை முறைத்து விட்டு மகனை தூங்க வைத்தாள்.
அவன், “அப்பா வரட்டும்” என்று அடம்பிடிக்க, அவன் பேசிக் கொண்டிருப்பதை காட்டி படுக்க வைத்தாள். ஆடிக்களைத்ததில் அவன் நன்றாக தூங்கி விட்டான்.
சித்தாரா மகனை தூங்க வைத்து விட்டு வெளியே வர, “தூங்கிட்டானா?” என்று கேட்டபடி பேச்சை முடித்துக் கொண்டு விக்ரம் வந்தான்.
“நீ எப்ப கிளம்புற?” என்று சுற்றி வளைக்காமல் சித்தாரா நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தாள்.
“எங்க?”
“இங்க இருந்து”
“ஏன் போகனும்?”
“ஏன் இருக்கனும்?”
இருவரும் கேள்வியும் பதிலுமாக, பதிலே கேள்வியாக பேசிக் கொண்டிருக்க, சித்தாராவிற்கு கடுப்பாக இருந்தது.
“நான் போறதா இல்ல தாரா.. இங்க தான் இருப்பேன்”
“தாரானு சொல்லாத. இங்க இருந்து நீ என்ன செய்யப்போற? மறுபடியும் யாருக்காக பழி வாங்க என் பையன யூஸ் பண்ணிக்கிற? ஓஓ.. என்னை பழி வாங்கவா? நீ துரத்துனப்புறம் உன் கால்ல வந்து விழலனு என் மகன பிரிச்சு பழி வாங்குற ப்ளானா? நல்ல ஐடியா தான்”
அவள் பேசப்பேச, விக்ரமின் முகம் இறுகி கறுத்தது.
“சட் அப் தாரா”
“தென் கெட் அவுட்.”
“நோ சான்ஸ்”
“கழுத்த பிடிச்சு வெளிய தள்ள மாட்டேன்னு தைரியமா?”
“தள்ளி தான் பாரேன்” என்று அவன் சட்டையை மேலேற்ற, ஒரு நொடி ஆழ மூச்செடுத்தவள் சட்டென அவனது கையை பிடித்து முதுகுப்பக்கம் திருப்பி வளைத்து பிடித்திருந்தாள். எதுவும் செய்ய மாட்டாள் என்று சாதாரணமாக நின்றிருந்தவன், இந்த தாக்குதலை எதிர் பார்க்கவில்லை.
அவளை தடுக்க எழுந்த கையையும் சேர்த்து பிடித்தவள், “இப்படியே கைய உடைச்சு விடனும் போல தோனுது. உடைக்கவா?” என்று கேட்டாள்.
ஒரு நொடி ஆச்சரியத்தில் அசந்து நின்றவன், அடுத்த நொடி அவளை உதறி அதே வேகத்தில் திரும்பினான்.
உதறலில் லேசாக தடுமாறியவளை, தாங்கிப்பிடித்துக் கொண்டான்.
“என் கையவே உடைக்க கிளம்பிட்ட.. நைஸ்” என்று கூறி சிரிக்க, “மரியாதையா கைய எடு” என்று எச்சரித்தாள்.
மேலும் அவளை தன்னோடு நெருக்கியவன், “நான் இங்க இருக்கதுல உனக்கு என்ன பிரச்சனை? என் மகன் கூட இருக்க போறேன். ஏன் நான் இருந்தா உன் மனசு ஸ்லிப் ஆகிடுமா? என் மேல லவ் வந்துடுமா?” என்று முகத்தை நெருங்கி கேட்டான்.
கோபமாக வாயைத்திறக்கப்போனவள், உடனே சுதாரித்தாள்.
“என்ன ட்ரிக்கா?” என்று நக்கலாக கேட்க, அவன் கண்ணில் ஒரு பளபளப்பு.
“நீ மாறிட்ட தாரா”
“எப்படி?”
“முன்னாடி எல்லாம் இந்த மாதிரி பேசுனா உடனே அதுல விழுந்துடுவ. இப்பலாம் கண்டு பிடிக்கிற?”
‘அது ஹீரோயின்டா. நான் வில்லி. நானும் லூசாவே இருப்பேனா?’ என்று மனதில் சிலுப்பிக் கொண்டவள், அவனை கூர்மையாக பார்த்தாள்.
“என்ன பண்ணுறது? இப்படிப்பட்ட பேச்சுல விழுந்து, பெருசா ஏமாந்தட்டேன். அதுக்கப்புறம் திருந்தனும்ல? இல்லனா மறுபடியும் தலையில மிளகாய் அரைக்க வந்துடுவியே”
இடம் பார்த்து குத்த, அவனது இலகுத்தன்மை சட்டென ஒரு நொடி தொலைந்து மீண்டது.
“நல்லா பேசவும் கத்துக்கிட்ட.. நீ புது மாதிரி இருக்க தாரா. ஆனா இதுவும் எனக்கு பிடிச்சுருக்கு” என்று கூறி கண்சிமிட்டி வைத்தான்.
‘அழகா தெரியுறானே’ என்றது சித்தாராவின் மனம். உடனே அதை தூக்கி போட்டு விட்டு, “டாபிக் மாத்தாம விசயத்துக்குவா. நீ இங்க இருக்க முடியாது.” என்று கோபமாக பேசினாள்.
“எனக்கு என் மகன் கூட இருக்கனும் தாரா. நீ அவன என் கிட்ட விட மாட்டேங்குற. அவன் நீயில்லாம இருக்க மாட்டான். ரெண்டு பேரையும் என் வீட்டுக்கு கூப்பிட்டா பிகு பண்ணுற. அதான் நானே வந்துட்டேன்”
“உன் வீட்டுக்கு எப்ப கூப்பிட்ட நீ?”
“விது..” என்று ஆரம்பித்தவன் உடனே நிறுத்தி, “சரி.. இப்ப நான் கூப்பிடுறேன். நீ வீட்டுக்கு வர்ரியா? நீ, நான், விது ஒன்னா இருக்கலாம்” என்று கேட்டான்.
கேட்டு விட்டானே தவிர நம்பிக்கை எல்லாம் இல்லை. மிகவும் தன்மானம் பார்ப்பவள். அவன் ஏமாற்றினான் என்று தெரிந்ததும், அவளது செய்கை எல்லாம் அவனை அடியோடு ஒதுக்கியது. தனியாகவே குழந்தை பெற்று வளர்த்து இருக்கிறாள். அவளது சுயமரியாதையை விட்டு விட்டு எப்படி வருவாள்?
“உன் வீட்டுக்கு…” என்று இழுத்தவள், மனதில் சிலபல கணக்குகள்.
‘வெண்பனி இவன் வீட்டுல புக்ஸ் கிடைக்கும்னு சொன்னாளே. போகலாமா? எப்படியும் கதை அடுத்த கட்டத்துக்கு நகரனும்னா இவன் வீட்டுக்கு போறது தான் சரி.’ என்று யோசித்து முடிவுக்கு வந்தாள்.
“வர்ரியா?” என்று விக்ரம் கேட்க, “போகலாமே” என்று விட்டாள்.
விக்ரமுக்கு அன்று கிடைத்த பல ஆச்சரியங்களில் இது பெரும் ஆச்சரியம். நம்ப முடியாமல் என்ன பேசுவதென்றே தெரியாமல், சில நொடிகள் அசந்து போய் நின்று விட்டான்.
“நிஜம்மாவே வர்ரியா?”
“நீ நிஜம்மா தான கேட்ட?”
“ம்ம்”
“ம்ம்” என்று சித்தாரா தோளை குலுக்க, “தட்ஸ் க்ரேட். வா போகலாம்” என்றான் சந்தோசமாக.
“இப்பவா? நான் அங்க வரனும்னா சில கண்டீசனும் இருக்கு. அத பத்தி நாளைக்கு பேசலாம். இப்ப பசிக்குது.” என்றதோடு வேகமாக சென்று உணவை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
அவனுக்கும் உணவு இருக்க, எதோ ஒரு யோசனையுடன் சாப்பிட்டு முடித்தான். அடிக்கடி அவள் மீது பார்வை மாறி மாறி படிந்தது. ஆனால் அவள் அசராமல் அமர்ந்து இருந்தாள்.
சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்து பார்த்தான். மகன் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க சித்தாராவும் வந்து விட்டாள்.
“குட் நைட்” என்றதோடு அவள் மகனருகே படுத்து விட, விக்ரம் அந்த மெத்தையை பார்த்தான். சிறிய மெத்தை என்றாலும் அவனும் படுக்கலாம் தான். ஆனால் முன்னேற்பாடாக வெளியே ஒரு போர்வையை போட்டு விட்டு படுக்க சொல்லி விட்டாள் சித்தாரா.
அதனால் மீண்டும் ஹாலுக்கு வந்து படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. மனதில் பல யோசனைகள் ஓட, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.
தொடரும்.
