சித்திரமே 5
![]()
காலையில் மகனை பள்ளிக்குக் கிளப்பி முடிக்க, விக்ரம் அவனை அழைத்துக் கொண்டு காரில் கிளம்பினான்.
தீராத மகனின் சலசலப்போடு சித்தாரா சொன்ன முகவரியைத்தேடி வந்து சேர்ந்தான். அங்கு ஓரமாக காரை நிறுத்தி விட்டு, மகனை தூக்கிக் கொண்டு பள்ளி அருகே சென்றான்.
விதார்த் தன்னுடன் படிக்கும் சிலரை பார்த்து விட்டான்.
“மகேஷ்.. இவர் தான் எங்கப்பா. நான் சொன்னப்போ நம்பலல. வந்துட்டாரு பாரு” என்று கூறி குதூகலித்தான்.
அந்த மகேஷ் நெடுநெடுவென தோற்றத்தோடு நின்றவனை அண்ணாந்து பார்த்து விட்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தான்.
“ஓகே.. டைம் ஆச்சு விது. உள்ள போ. எக்ஸாம் எழுதிட்டு வெயிட் பண்ணு. அப்பா வர்ரேன்” என்று கூறி உள்ளே அனுப்பி வைத்தான்.
விக்ரமுக்கு கையாட்டி விட்டு, விதார்த் உள்ளே சென்று விட்டான்.
சில பிள்ளைகளின் பெற்றோர்கள் அவனை அதிசயமாக பார்த்தனர். அவர்களுக்கெல்லாம் விதார்த்தின் தந்தை இறந்து விட்டதாக தான் செய்தி கிடைத்திருந்தது. இப்போது புதிதாய் ஒருவன், அதுவும் விதார்த்தை உரித்து வைத்த தோற்றத்தில் தந்தை என்று வந்து நிற்கவும், ஆச்சரியமாக இருந்தது.
அவனது பளபள தோற்றமும் அங்கு நின்று இருந்த காரும் மேலும் ஆச்சரியப்பட வைத்தது.
தங்களது பிள்ளைகளை உள்ளே அனுப்பி விட்டு அவனிடம் பேச வர, அதை கவனிக்காதது போல் கைபேசியை காதுக்கு கொடுத்து விட்டு விறுவிறுவென காரை நோக்கி நடந்தான்.
இது போல் பேச வருபவர்களிடம் அவன் பேசுவது இல்லை. யாரிடமும் பேசிப்பழகும் சுபாவமும் அவனுக்கு இல்லை. தொழிலில் கூட தேவையற்று யாரையும் நண்பராக்கிக் கொள்ள மாட்டான்.
தொழில் தொழிலோடு இருந்தால் மட்டுமே நல்லது. மீறி நட்பானால், அதைக் கொண்டு சலுகைகள் தேடுவார்கள் என்ற கொள்கை உடையவன்.
அப்படிப்பட்டவன் இங்கு இருப்பவர்களிடம் பேசிவிடுவானா என்ன?
எதையும் பார்க்காமல் நேராக சென்று காரில் அமர்ந்தவன், அதை எடுத்துக் கொண்டு கிளம்பியும் விட்டான்.
வீடு வந்து சேர அங்கு வாசலில் ஒரு பெரிய மனிதர் நின்று இருந்தார். யாரென்று தெரியாமல் யோசனையுடன் இறங்கினான்.
விக்ரம் மகனோடு கிளம்பிய சில நிமிடங்களில், அந்த வீட்டின் முதலாளி வந்து நின்றார்.
“என்ன சார்?” என்று கேட்டபடி சித்தாரா வந்து நிற்க, “என்னமா நடக்குது இங்க?” என்று கோபமாக ஆரம்பித்தார்.
“என்ன நடக்குது?”
“தனியா பிள்ளையோட இருக்க பொண்ணுனு பாவம் பார்த்து வீடு கொடுத்தா, யார் யாரோ வந்து நைட் தங்குறாங்க. இது குடும்பம் நடக்குற இடம். இப்படியா நடந்துப்ப?”
ஆரம்பமே அவளை தவறாக பேச ஆரம்பிக்க, சித்தாராவுக்கு சுள்ளென கோபம் ஏறியிருந்தது.
“யோவ் வேலைய பார்த்துட்டு போயா” என்று கூறத்தான் அவளுக்கு ஆசை. ஆனால் அடக்கிக் கொண்டாள்.
அந்த முதலாளியை சற்று நக்கலாக பார்த்தபடி, “அப்ப நைட் மட்டும் தங்க கூடாது. பகல்ல வந்து போனா சரிங்குறீங்க?” என்று கேட்டு வைத்தாள்.
“என்னமா திமிரா பேசுற?” என்று அதிர்ச்சி பாதி அவளது நக்கலில் கோபம் பாதியாக கேட்டார்.
சித்தாராவிற்கு சுள்ளென ஏறியிருந்தது.
“உனக்கு வாயிருக்கு பேசத்தெரியும்னு என் மேல சேர வாரி இறைப்பியா? இந்த வேலையெல்லாம் என் கிட்ட வேணாம். பதிலுக்கு நானும் பேசுனா மரியாதை மிஞ்சாது. நைட் யாரோ ஒரு ஆம்பள இந்த வீட்டுல வந்து தங்கியிருக்கான். அதுக்காக அவன் யாரு என்னனு கேட்காம உன் இஷ்டத்துக்கு பேசுவியா? அவன் எனக்கு அண்ணனா இருந்தா? இல்ல எனக்கு தம்பியா இருந்தா? யோசிச்சு பேசனும்”
விரல் நீட்டி அவள் எச்சரிக்க, அந்த முதலாளிக்கு அடி வாங்கிய உணர்வு. யார் என்ன என்று பொறுமையாக விசாரிக்காமல், எடுத்த எடுப்பில் வந்ததும் வராததுமாக அவள் மீது பழியை சுமத்தினால் அடிபட தான் வேண்டும்.
“தனியா இருக்க பொம்பளனு அக்கறையா பேச வந்தா..” என்று இழுத்தார்.
“உன் அக்கறை எனக்கு வேணாம். இப்ப என்ன வீட்ட காலி பண்ணனுமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் விக்ரம் வந்து நின்றான்.
“காலி பண்ணிக்கிறோம். அட்வான்ஸ மட்டும் கரெக்ட்டா எண்ணி வை. வாங்கிட்டு கிளம்புறோம்” என்று கூறியவள், விக்ரமை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.
அவன் யோசனையாக இருவரையும் பார்த்து விட்டு, “யார் இது?” என்று விசாரித்தான்.
“இந்த வீட்டு ஓனர்”
“என்னவாம்?”
“இந்த வீட்ட காலி பண்ணவாம். அட்வான்ஸ கொடு காலி பண்ணுறேன்னு சொன்னேன்” என்றவள் முதலாளி பக்கம் திரும்பி, “இவர் விதார்த்த பெத்த அப்பா. பேரு விக்ரம சேனா. சந்தேகம் தீர்ந்துட்டா இடத்தை காலி பண்ணுங்க. நாங்க வீட்ட காலி பண்ணிக்கிறோம். அட்வான்ஸ் மட்டும் மறக்காம வந்துடனும்” என்று ஒரே போடாக போட்டு விட்டு, “நீ உள்ள போ” என்று விக்ரமை பார்த்து கூறினாள்.
அவனுக்கும் இது போன்ற ஆட்களிடம் சமமாக பேசி பழக்கமில்லை. அதனால் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விட்டான்.
அந்த முதலாளி அதிர்ந்து போயிருந்தார். எவனோ ஒருவன் என்று தான் செய்தி வந்திருந்தது. வந்து பார்த்தால் விதார்த்தை உரித்து வைத்த தோற்றத்தில் தந்தை ஸ்தானத்தில் ஒருவன் நிற்கிறான். அதுவும் அவனது பளபள தோற்றம், வந்திறங்கிய காரின் மதிப்பு, அத்தனையும் அவரை மலைக்க வைத்து பேச்சை சில நொடிகள் தடை செய்திருந்தது.
சித்தாரா வீட்டு பக்கம் திரும்பவும் தான் திகைப்பு கலைந்து, “நில்லுமா” என்றார்.
“என்ன?”
“விதார்த் அப்பா செத்துட்டார்னு சொன்ன. இப்ப வந்து நிக்கிறார். பொய் சொன்னியா?”
‘இந்தாள… இருயா.. உன்னை குழப்பி விடுறேன்’ என்று கடுப்பாக நினைத்தவள், “இல்லயே உண்மைய தான் சொன்னேன்” என்றாள்.
“என்னம்மா விளையாடுறியா? செத்தவன் எப்படி திரும்பி வர முடியும்?”
“வந்துருக்காரே.. அதான அதிசயம்”
“என்ன கிண்டலா?”
“உண்மைய சொன்னா கிண்டலா? சத்தியமா உள்ள போனது விதார்த்த பெத்த அப்பா தான். ரெண்டுபேரும் ஒரே ஜாடைனு பார்த்தாலே தெரிஞ்சுருக்குமே”
“நான் அத சொல்லல.. செத்துப்போயிட்டான்னு சொல்லி தான வீடு வாடகைக்கு குடி வந்த? ஏன் அப்படிச்சொன்ன?”
“அவர் அப்போ செத்து போயிட்டாரு ஓனர்”
அந்த முதலாளி தலையை பிய்த்துக்கொள்ளாத குறை.
‘யாரு கிட்ட..?’ என்று கெத்தாக நினைத்தவள், “நீங்க போய் அட்வான்ஸ எண்ணுங்க. எங்களுக்கு வேலை இருக்கு” என்றவள் அவர் அடுத்து பேச வந்ததை கவனிக்காமல், உள்ளே சென்று கதவை அடைத்து விட்டாள்.
“எதுக்கு ஆர்கியூ பண்ணிட்டு இருக்க நீ? என் விசயத்துல தலையிடாதனு சொல்லிட்டு வர வேண்டியது தான?” என்று விக்ரம் கேட்டான்.
உள்ளே அமர்ந்து இருந்தாலும் பேச்சு காதில் விழுந்து இருந்தது.
“அதே தான். நான் என்னமோ பண்ணிட்டு போறேன். நீ அட்வைஸ் பண்ணாம உன் வேலைய பார்” என்று பட்டென விக்ரமுக்கு கூறியிருந்தாள்.
அவன் கொடுத்த கல்லை அவன் மீதே எறிந்து விட்டு உள்ளே சென்றவள், இட்லியை எடுத்து வந்து வைத்தாள்.
“கைய கழுவிட்டு வந்து சாப்பிடு” என்றதோடு கைபேசியை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
விக்ரமுக்கும் பசி இருக்க, சாப்பிட அமர்ந்தான்.
“சொல்லு என்ன கண்டீஷன்ஸ்?” என்று சாப்பிட்டபடியே கேட்க, சித்தாரா நிமிர்ந்து பார்த்தாள்.
விக்ரம் புருவம் உயர்த்த, சித்தாரா தோளை குலுக்கினாள்.
“உன்னால செய்ய முடியுமானு கொஞ்சம் டவுட் தான்”
“சொல்லிப்பாரேன். செய்யுறனா இல்லையானு தெரிஞ்சுடும்”
“ஃபைன். நான் உன் வீட்டுக்கு என் மகனோட வரனும்னா.. முதல்ல நாம கல்யாணம் பண்ணிக்கனும். அதாவது உண்மையான கல்யாணம்”
வாயில் கொண்டு சென்ற கை அப்படியே நின்று விட, அவளை அதிர்ச்சியாக பார்த்தான். அவன் நினைத்தது வேறு. இவள் கேட்பது வேறல்லவா?
சற்று முன் தான் வாகீசனிடம் பேசி விட்டு வந்திருந்தான். அவன் சொன்னது என்ன? இங்கு நடப்பது என்ன?
“என்னடா உன் மகன் எப்படி இருக்கான்? உன்னை வீட்டுக்குள்ளயாச்சும் விட்டாங்களா சித்ரா?” என்று கேட்டான் வாகீசன்.
காரை லாவகமாக ஓட்டியபடி, “கிண்டலா? நான் அவளயும் விதுவயும் அங்க கூட்டிட்டு வர ப்ளான் போட்டுருக்கேன்” என்றான்.
“அதுக்கு சித்ரா ஒத்துக்கனுமே?”
“ஓகே சொல்லிட்டா”
“நிஜம்மாவா? நம்பவே முடியல?”
“ம்ம்”
“அப்ப நாளைக்கு வந்துடுவீங்களா? நான் சித்ரா கிட்ட பேசனும். கடைசியா ஒரு பார்வை என்னை பார்த்துட்டு போனாங்களே.. ஹப்பா.. இன்னும் மறக்க முடியாது.” என்று அந்த பார்வை தந்த பயத்தில் உடல் சிலிர்த்தான்.
“நாளைக்கே எப்படி வர முடியும்? விதுக்கு எக்ஸாம் போகுது. அது முடிஞ்சு தான் டீசி வாங்கனும். அப்புறம் தான் கிளம்பனும்”
“அப்ப உண்மையாவே இங்க வர்ரீங்க? ரைட்.. ஆனா எனக்கென்னமோ இது இவ்வளவு ஈசினு தோணல”
“ஏன் தோணல?”
“இல்ல.. நீ பண்ண காரயத்த நானே இன்னும் மறக்கல. சித்ரா எப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்து மன்னிச்சு உன் கூட வருவாங்க?”
“உனக்கு அடி வேணுமா?”
“இல்லடா.. எனக்கு தோனுறத சொல்லுறேன். எனக்கென்னமோ நிறைய கண்டீசன் போடுவாங்கனு தோனுது”
சட்டென விக்ரம் புருவம் உயர்த்தினான். சித்தாராவும் நிபந்தனைகளை பற்றி கூறியிருந்தாள் அல்லவா? அதை வாகீசனும் கணித்து விட்டானே?
“கண்டீசனா?”
“ஆமா.. அப்படித்தான் கதைங்கள்ள வரும். லைக்.. நான் உன் கூட வர்ரது என் பையனுக்காக மட்டும் தான். அப்படி இப்படினு இந்த மாதிரி”
“எந்த மாதிரி கண்டீசன்?”
“நாம பிள்ளைக்காக ஒரே வீட்டுல இருக்கோம். மத்தபடி உனக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு சாப்பிட்டுக்கிறேன். உன் காசுல பத்து பைசா கூட எனக்கு வேணாம். ஊருக்கு தான் நாம புருஷன் பொண்டாட்டி. உள்ள நீ யாரோ நான் யாரோ.. இப்படி பல வரும். எதுக்கும் உசாரா இரு”
“பை.” என்று எதையும் சொல்லாமல் துண்டித்து விட்டு வந்து விட்டான்.
இங்கு வந்து பார்த்தால், முதல் நிபந்தனையே வித்தியாசமாக இருந்தது.
“என்ன சொன்ன?”
மீண்டும் கேட்க, “கல்யாணம். அதுவும் ரிஜிஸ்டர் பண்ணி கல்யாணம் நடக்கனும்” என்று அழுத்திக் கூறினாள்.
“ஓஹோ” என்றவன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
“கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்ணும் போது, உன் சொத்துல பாதி எனக்கும் விதுவுக்கும் நீ எழுதி வைக்கனும்”
சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு இதைக்கேட்டதும் தொண்டைக்குழியில் உணவு சிக்க, இறும ஆரம்பித்து விட்டான்.
அவனாகவே தலையில் தட்டி தண்ணீரை எடுத்து குடித்து அமைதியாகும் வரை, சித்தாரா வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விக்ரமுக்கு, காதலித்த போது.. அதாவது அவன் காதலிப்பதாக நடித்த போது, அதிக சிரிப்பில் புரையேறியதும் அவனோடு சேர்ந்து கண்கலங்கிப்போன சித்தாரா தான் நினைவு வந்தாள். இந்த சித்தாரா அசையக்கூட இல்லை. வேடிக்கை பார்த்தாள்.
என்னவோ இழந்து விட்டது போல, அன்று அனுபவித்த அதே வலி இன்றும் கிடைத்தது. உள்ளே விழுங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“சொத்துல பாதினா? அது நான் மட்டும் பண்ண முடியாது. வீட்டுல இருக்க எல்லாரும் சைன் பண்ணனும்”
“நான் உன் குடும்ப சொத்த கேட்கல. உன்னோட தனிப்பட்ட சொத்துல பாதி வேணும்”
“ஆஃபிஸ்ல..”
“ஆஃபிஸ்ல எதுவும் வேணாம். என்னால வேலையெல்லாம் பார்க்க முடியாது.” என்று பட்டென கூறியிருந்தாள்.
விக்ரமுக்கு எல்லாமே தலைகீழான உணர்வு கிடைக்க, சாப்பிட்டு முடித்து விட்டு வந்து அவள் முன் வந்து அமர்ந்தான்.
“சோ உனக்கு சொத்து வேணும்”
“எஸ்”
“கல்யாணமும் பண்ணனும்”
“ம்ம்”
“வேற?”
“கல்யாணம் பண்ணிட்டோம்னு புருஷனா நடந்துக்க முயற்சி பண்ணக்கூடாது. பண்ணாலும் நடக்காது. அதுனால முடிஞ்ச வரை என் விசயத்துல இருந்து தள்ளியே இரு”
‘இது மட்டும் கரெக்ட்டா இருக்கு’ என்று மனதில் கடுப்பாக நினைத்துக் கொண்டான்.
“அப்ப எதுக்கு கல்யாணம்?”
“லாஸ்ட் டைம் மாதிரி ஒன்னுமே இல்லனு என்னை ஏமாத்திடக்கூடாதுல? அதுக்கு. அதுக்கு தான் கல்யாணமும் சொத்தும்”
“குட் ப்ளான்”
பாராட்டா? நக்கலா? என்று தெரியாத வகையில் கூறினான். ஆனால் அவள் அதை மதித்தால் தானே?
“அப்புறம் நான் உனக்கு பொண்டாட்டியா தான் அந்த வீட்டுக்கு வருவேன். சும்மா எவளோ ஒருத்தியா அங்க வந்து அசிங்கப்பட நான் ரெடியா இல்ல. அதுக்கு நான் இங்கயே இருப்பேன்”
“ஓஹோ.. மேல?”
“எனக்கு அங்க தனி ரூம் வேணும். உன் வீடு பெருசு தான? தனி ரூம்ல இருந்துப்பேன். விதுக்கு எங்க பிடிக்குதோ இருக்கட்டும்”
“புருஷன் பொண்டாட்டியா வந்து தனி ரூம் வேணுமா?”
“ஹலோ.. ஊர் உலகத்துல எனக்கு மரியாதை குறைய கூடாதுனு தான் கல்யாணம். மத்தபடி உன் வீட்டுல இருக்கவங்களுக்கு நான் யாருனு நல்லாவே தெரியும். அப்புறம் என்ன வேசம் வேண்டியிருக்கு?”
“அப்புறம்?”
“அவ்வளவு தான்”
“இதுக்கெல்லாம் நான் சம்மதிக்கலனா?”
“நீ தனியா விதுவ கூட்டிட்டுப் போக வேண்டியது தான். ஆனா அவனும் நான் இல்லாம இருக்க மாட்டான். இதுக்கு மேல உன் விருப்பம்”
பேச்சு முடிந்தது என அமைதியாகி விட்டாள். விக்ரம் தான் இப்போது யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.
தொடரும்.
