சித்திரமே 6

Loading

அன்று மாலை விக்ரம் மகனை அழைக்கக் கிளம்பும் போது, சித்தாராவையும் உடன் அழைத்தான்.

“எதுக்கு?”

“வெளிய போயிட்டு வரலாம். இன்னைக்கோட அவனுக்கு எக்ஸாம் முடியுதுல?” என்று கேட்க, சித்தாராவும் தலையாட்டி விட்டாள்.

மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் பற்றி பேசியதோடு சரி. சித்தாரா அதற்கு மேல் எதையும் பேசவில்லை.

விக்ரமும் மகனோடு இருக்கும் நேரம் தவிர, மற்ற நேரம் எல்லாம் மடிக்கணினியில் புகுந்து கிடந்தான். ஒரே ஒரு நேரம் மட்டும் சித்தாராவை கேள்வி கேட்டான்.

“நீ வேலைக்குப் போகல?”

“ஏன்?”

“வீட்டுலயே இருக்கியே”

“வேலைய விட்டுட்டேன்”

“விட்டுட்டியா? திடீர்னு எப்படி? சும்மா வேலைய விட்டு நின்னுட முடியுமா?”

“திடீர்னு எல்லாம் இல்ல. ஏற்கனவே வேலை வேணாம்னு சொல்லி இருந்தேன். எனக்கு பதிலா ஒருத்தர தேடுற வரை போயிட்டு இருந்தேன். இப்ப நின்னுட்டேன்”

அன்று, தவப்பாண்டியை அவனது குடும்பத்தில் மாட்டி விட்ட அன்றே, சித்தாரா தன் வேலையை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டாள். முதலாளி பேசிப்பார்த்தும் அவள் அசைவதாக இல்லை.

“தவப்பாண்டிய வேலைய விட்டு அனுப்பிடுற முடிவுல தான் இருக்கோம். நீ ஏன்மா போற?” என்று கேட்க, “இல்ல சார்.. எனக்கு இனி வேலை வேணாம். எனக்கு பதிலா யாரையாவது ஹையர் பண்ணுற வரை வர்ரேன். அப்புறம் நான் நின்னுடுவேன்.” என்று சொல்லி விட்டு தான் வந்திருந்தாள்.

முதல் நாளே கதையில் சில விசயங்கள் பிடிக்கவில்லை. அதில் அந்த வேலையும் ஒன்று. அதனால் தான் அதை வேண்டாம் என்று விட்டிருந்தாள். அவளுக்குத்தான் இங்கு எதைச்செய்யவும் அனுமதி உண்டே.

இப்போது விக்ரமுடன் வெளியேற, வீட்டு உரிமையாளரின் மனைவி வந்து நின்றார்.

“இவரு தான் விதுவோட அப்பாவா?” என்று கேட்டுக் கொண்டே வந்து நிற்க, “நீ போய் கார ஸ்டார்ட் பண்ணு” என்று விக்ரமை அனுப்பி விட்டாள்.

“என்ன விசயம்?” என்று அவர் கேட்டதை கொஞ்சமும் மதிக்காமல் தன் விசயத்திற்கு வந்தாள்.

அந்த பெண் முகத்தை சுருக்கி நொடித்துக் கொண்டார்.

“உடனே காலி பண்ண போறோம் அட்வான்ஸ கொடுனு கேட்டியாமே.. உடனே எப்படித்தர முடியும்? காலி பண்ணனும்னா ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லனும்”

அதிகாரமாக வந்தது வார்த்தைகள்.

‘இது வேறயா?’ என்று நினைத்தவள், “ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் சொல்லுறேன். எப்ப அட்வான்ஸ் கைக்கு வருதோ அப்ப தான் வீட்ட காலி பண்ணிக் கொடுப்பேன்” என்றவள் காரை திருப்பி நிறுத்திய விக்ரம் பார்க்கவும், “நீங்க போயிட்டு ஒரு மாசம் கழிச்சே போன் பண்ணுங்க. எனக்கு வேலை இருக்கு” என்று விட்டு வேகமாக நடந்தாள்.

அவர் திகைத்து நிற்க, காரில் ஏறி கிளம்பி விட்டாள்.

“என்னவாம்?”

“நத்திங்”

“நீ ஏன் இந்த மாதிரி ஏரியால வந்து தங்கியிருக்க? வேற இடமே கிடைக்கலயா?”

‘அந்த ஹீரோயின் பண்ண‌வேலை. ரெண்ட் கம்மினு இங்க வந்து தங்கியிருப்பா’ என்று நினைத்தாலும் அவனுக்கு பதில் சொல்லவில்லை. அவளை ஒரு நொடி திரும்பிப்பார்த்த விக்ரம், சாலையில் கண்ணை பதித்தான்.

விதார்த் வந்ததும் அவனை தூக்கிக் கொண்டு, “பிரின்ஸிபல் ரூம் எது?” என்று கேட்டான்.

“ஏன்?”

இப்போது அவன் பதில் சொல்லாமல் நடக்க, சித்தாராவும் சென்றாள்.

அறையில் உள்ளவரிடம் அனுமதி கேட்டு விட்டு, உள்ளே சென்று அமர்ந்தனர்.

எடுத்ததுமே விக்ரம் விதார்த்தின் டீசி பற்றிப்பேச, அவர் ஆயிரம் கேள்விகளை கேட்டார். ஆனால் எதற்கும் விக்ரம் பதில் சொல்லவில்லை.

“விதார்த்தோட டீசி வேணும். எப்ப கிடைக்கும்?” என்ற கேள்வியோடு நிறுத்திக் கொண்டான்.

“எதுக்கு சார்? இப்ப தான் எக்ஸாமே முடிஞ்சு இருக்கு . அதுக்குள்ள டீசி எப்படி தர முடியும்? நீங்க வித்தார்த்தோட அப்பாவா? வேற ஸ்கூல் மாத்த போறீஙகளா?”

அவர் கேள்வியை அடுக்க, விக்ரம் அவரை கூர்மையாக பார்த்து விட்டு சலிப்போடு சித்தாராவை பார்த்தான்.

“வேற ஊர் போறோம் சார். எப்ப வாங்கிக்க முடியும்னு சொல்லுங்க” என்று சித்தாரா தான் நடுவே வந்தாள்.

“ரெண்டு வாரம் ஆகும் மேடம்”

“ஓகே.. நான் வந்து அத கலெக்ட் பண்ணிக்கிறேன்” என்று அவள் கூறியதும், விக்ரம் எழுந்து மகனோடு சென்று விட்டான்.

சித்தாரா அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினாள். அவள் வரும் முன்பே தந்தை மகன் இருவரும் காரை நெருங்கி‌ இருந்தனர்.

“சித்ரா.. நில்லுங்க” என்று ஒரு பெண் அழைக்க, திரும்பி பார்த்தாள்.

அந்த பெண் விதார்த்தின் தோழனை பெற்றவள்.

“உங்கள பார்க்கவே முடியல. விதார்த்தோட அப்பா வந்துட்டாரு போல?” என்று கேட்க, சித்தாராவிற்கு சலிப்பாக இருந்தது.

“ஆமாங்க. அவங்க அப்பா வந்துட்டாங்க. கார்ல வெயிட் பண்ணுறாங்க. நாங்க கிளம்பனும்.‌ அப்புறமா பேசலாமே” என்று பேச்சை துண்டித்தவள் உடனே நடக்கவும் ஆரம்பிக்க, அந்த பெண் இழுத்து வைத்து பேச முடியாமல் விட்டு விட்டாள்.

விக்ரம் நேராக அருகே இருந்த பெரிய நகரத்திற்கு காரை திருப்பினான். அங்கு சென்று சாப்பிங் செய்து மகனுக்காக எதெதோ வாங்கியவன், சித்தாராவை பார்க்க அவளும் தனக்கென சில பொருட்களை வாங்கிக் கொண்டாள்.  முக்கியமாக உடை.

‘இந்த ஹீரோயின் வச்சுருக்க இத்துப்போன ட்ரஸ்ஸ எல்லாம் என்னால போட முடியாது’ என்று நினைத்து இருந்தாள். வேறு வாங்கலாம் என்றால், அந்த ஊரில் கிடைக்கவில்லை.

இப்போது கிடைத்தது. வாங்கிக் குவித்து விட்டாள்.

விக்ரம் பணம் செலுத்த வர, அவனைத்தடுக்கவில்லை.

‘ஹீரோயின் தடுப்பாளோ? தன்மானக்காரினு? எல்லா டவுட்டையும் கதைய படிச்சு க்ளியர் பண்ணிக்கிறேன்’ என்று முடிவு செய்து கொண்டாள்.

அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர். ஓடியாடி பொருட்களை வாங்கிய விதார்த், வந்ததும் அதை கடை பரப்பிப் போட்டு விளையாட ஆரம்பித்து விட்டான்.

“இங்க வா” என்று சித்தாராவை அழைத்த விக்ரம், அவள் முன்னால் ஒரு பத்திரத்தை வைத்தான்.

‘அதுக்குள்ள ரெடி ஆகிடுச்சா?’ என்று ஆச்சரியமாக பார்த்தாலும், அதை எடுத்து படித்துப் பார்த்தாள்.

விக்ரம சேனாவின் சொத்தில் முழு உரிமையும் விதார்த்துக்கும் சித்தாராவுக்கும் கொடுத்து இருந்தான். அதில் அவனது கையொப்பமும் இருந்தது.

படித்து முடித்தவள், “நான் பாதி தான கேட்டேன்?” என்று புருலம் உயர்த்தி கேள்வி கேட்டாள்.

“முழுசாவே உனக்கு தான். பாதி எதுக்கு?” என்று விக்ரம் புன்னகைக்க, சித்தாராவின் முகத்தில் கிண்டலாக ஒரு சிரிப்பு வந்தது.

“சொல்லு. என்ன ப்ளான்?” என்று கேட்டு, ஒரு நொடி அவனை ஆச்சரியப்படுத்தினாள்.

“இதுல நீ சைன் பண்ணிட்டா, நாம கல்யாணத்த ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல போய் பண்ணிட்டு, ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். அதான் ப்ளான்” என்றான் அவள் கேட்பது புரியாதது போல்.

“ஓஹோ.. ஆனா.. சம்திங் ஃபிஸ்ஸி.. எதுக்கு இந்த மொத்த உரிமை?”

“ஏன்? சந்தேகமா பார்க்குற மாதிரி இருக்கே”

உடனே அந்த பத்திரத்தை தூக்கி ஆட்டிக்காட்டியவள், “கேட்டதுக்கு மேல அள்ளிக் கொடுக்கனும்னா அதுல எதாவது உள் நோக்கம் கண்டிப்பா இருக்கும். லவ் பண்ணும் போது அள்ளி அள்ளி அன்ப கொட்டுனியே.. அதே மாதிரி இப்போ சொத்த கொடுக்குற. என்ன ப்ளான் போட்டு வச்சுருக்க?” என்று கேட்டு வைத்தாள்.

விக்ரமின் முகம் இறுகி விட்டது.  பழைய விசயத்தை அவள் இழுப்பது என்னவோ அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனது இயல்பை மீறி அமைதியாக நடக்கிறான்.

எல்லாம் எதற்காக? இவளை இங்கிருந்து அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான். பொங்கி வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்தியவன், அவளை அழுத்தமாக பார்த்தான்.

“இது உனக்காக இல்ல. என் பையனுக்காக. அவனுக்காக கொடுக்குறதுல அளவு எல்லாம் வச்சுக்க முடியாது” என்று அமைதியாக பேசியவனை பார்த்து சித்தாராவிற்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவன் ஏன் நல்லவனா இருக்கான்? ஆன்டி ஹீரோ தான? இல்ல வெண்பனி கதைய மாத்திட்டாளா?’ என்று சந்தேகம் வந்தது.

ஆனாலும் அப்போதைக்கு எதையும் பேசாமல் கையெழுத்து போட்டு முடித்தாள்.

“நாளைக்கு நைட் கிளம்புவோம். பேக் பண்ணுறதுனா பண்ணிக்கோ” என்று முடித்தவன், அவளை கண்டு கொள்ளாமல் கைபேசியில் எதையோ பார்க்க ஆரம்பித்து விட்டான்.

“எங்க?”

“நம்ம வீட்டுக்கு”

“அந்த கெஸ்ட் ஹவுஸ்க்கா?” என்று ஏளனமாக கேட்டு வைக்க, விக்ரமுக்கு கடுப்பானது.

“இல்ல. வீட்டுக்கு தான்”

“பார்ரா..! யாரோ சொன்னாங்களே.. உன்னை எல்லாம் இங்க தான் வைக்க முடியும். மருதநாயகம் பொண்ணுக்கெல்லாம் குடும்பத்துல இடமில்லனு.. என்னவோ சொன்ன மாதிரி இருந்துச்சு”

சித்தாராவின் குரலில் அத்தனை ஏளனம். கூடவே என்னவோ உள்ளே வலித்தது.

‘அந்த ஹீரோயின எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்கான் பாவி. உனக்கு அத விட பத்து மடங்கா வலிக்க வைக்கல நான் வில்லி இல்லடா’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு பழச கிளறுற?” என்று தன்னை மீறி வந்த கோபத்தில் விக்ரம் வார்த்தையை விட, “அப்போ பழச எல்லாம் மறந்துட்டு உன் கூட குடும்பம் நடத்தனுமா?” என்று அவளும் ஆரம்பித்தாள்.

“நான் அப்படிக் கேட்டனா? நீ தான் கல்யாண பேச்ச ஆரம்பிச்ச”

“ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும். உன் மேல ஆசைப்பட்டு இல்லனு தெளிவா தெரியும். ஆனா அத நீ ஏன் ஒத்துக்கிட்டனு தான் எனக்குப்புரியல. உன்னை பொறுத்தவரை நான்.. அதாவது மருதநாயகம் பொண்ணு படுக்கைக்கு மட்டும் தான?”

“தாரா” என்று அதட்டியவன், வேகமாக மகனை பார்த்தான்.

எங்கே தங்களது பேச்சு அவன் காதில் விழுந்து விடுமோ என்று பதட்டம் வந்தது. ஆனால் விதார்த் பொம்மை பாடிக் கொண்டிருந்த சத்தத்தில் இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை.

“என்னை தாரானு கூப்பிடாத விக்ரம். எரிச்சலா இருக்கு. பெரிய செல்ல பேரு ஒன்னு தான் கேடு. நீ என்னை பேசுன பேச்சுக்கு உன்னை ஒரு நாள் அணுஅணுவா துடிக்க வைக்கல.. பேர மாத்திக்கிறேன்.”

சபதம் எடுத்து விட்டு வெடுக்கென திரும்பியவள், வேகமாக தேவையானதை எடுத்து வைக்கும் வேலையில் இறங்கினாள்.

விக்ரம் தலையை கோதியபடி அமர்ந்து விட்டான். எதற்கு திருமணம் என்று அவனுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ஆனால் அதை இப்போது மறுக்க அவனுக்கு வாய்ப்பில்லை. அன்று செய்த அத்தனைக்கும் இனி பதில் கிடைக்கும் என்று மனதில் எங்கோ ஒரு பட்சி கூவியது. அதை வேண்டுமென்றே அலட்சியம் செய்தான். தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற இறுமாப்பு இன்னும் மிச்சம் இருந்தது.

சித்தாரா எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, தூங்கி வழிந்த மகனை படுக்க வைத்து விட்டு தானும் அறையை பூட்டிக் கொண்டு படுத்து விட்டாள்.

விக்ரம் கைபேசியில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு படுத்தான். தூக்கம் வரவில்லை. நாளை இரவு, இங்கிருந்து கிளம்பி திருமணத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்.

அங்கு நடக்கப்போகும் பிரச்சனைகளை நினைத்தால் எரிச்சலாக இருந்தது. அதற்காக சித்தாராவை தன்னுடைய வேறு வீட்டில் தங்க வைக்க முடியாது. அவளை பொறுத்தவரை அந்த இடம் எப்படிப்பட்டது என்று சற்று முன்பு காட்டி விட்டாளே.

மனம் எங்கெங்கோ ஓட, தூக்கம் தொலைந்து படுத்துக் கிடந்தான்.

மறு நாள் மேலும் தேவையானவற்றை எல்லாம் எடுத்து அடுக்கி விட்டு மாலை கிளம்பினர்.

பொருட்களை எல்லாம் வேறு ஒருவனிடம் கொடுத்து அனுப்பி விட்டு, உடைகளோடு குடும்பம் கிளம்பியது.

காலையிலிருந்தே சித்தாரா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் பேசியதற்கும் பதில் வரவில்லை. நீ எப்படியோ இருந்து கொள் என்று விடவும் அவனால் முடியவில்லை.

காரில் பின் பக்கமாக ஏறி அமர்ந்து கொண்டவள் மகனையும் உடன் வைத்துக் கொண்டாள்.

அவன் வேடிக்கை பார்த்து ஆர்பரித்துக் கொண்டு வர, சித்தாராவிடம் பேச்சே இல்லை. விதார்த்தின் கேள்வி அத்தனைக்கும் விக்ரம் தான் பேசினான்.

ஊரை வீட்டு வெளியேறி வெகுதூரம் சென்றதும், இரவு உணவுக்கு ஒரு ஹோட்டலில் நின்றனர்.

மகனுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தவள், தனக்கு எதையும் வாங்கவில்லை. பசிக்கவும் இல்லை.

மகனுக்கு ஊட்டி விட்டு விட்டு கிளம்பி விட, விக்ரம் அவளை வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.

அடுத்ததாக ஒரு உயர்தர ஹோட்டலுக்கு சென்று சேர்ந்தனர். அங்கு ஏற்கனவே அறை பதிவு செய்திருந்தனர். விக்ரம் தூங்கிக் கொண்டிருந்த மகனை தோளில் போட்டு முன்னால் நடக்க, அறையின் சாவியோடு ஒருவன் அவர்களுக்காக காத்திருந்தான்.

உள்ளே நுழைந்ததும் வேகமாக வந்து நீட்டினான்.

“ரூம் கார்ட் சார்” என்றதும் வாங்கிக் கொண்டு விக்ரம் நடக்க, சித்தாராவிற்கு தன்னுடைய பழைய கதை தான் நினைவு வந்தது.

‘அதுல இப்படித்தான் நான் ஹோட்டலுக்கு போறதுக்கு முன்னாடியே ரூம்ஸ் செக் இன் பண்ணி கையில கொடுப்பாங்க. இந்த வெண்பனி சில விசயங்கள மட்டும் மாத்தவே இல்ல போல’ என்று நினைத்தபடி நடந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் மகனை படுக்க வைத்து விட்டு மெத்தையை பார்த்தாள்.

இரண்டு படுக்கை கொண்ட அறை அது. அவளுடைய அறையின் அட்டையை அங்கே வைத்து விட்டு, “குட் நைட்” என்றதோடு வெளியேறி விட்டான் விக்ரம்.

தொடரும்.

Leave a Reply