சித்திரமே 7
![]()
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அப்போது தான் உறங்கி இருந்த சித்தாரா, சத்தம் கேட்டதும் முதலில் மகனை பார்த்தாள். அவன் அசையாமல் படுத்திருக்க, எழுந்து வந்து கதவு ஓட்டை வழியே பார்த்தாள்.
வெளியே விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
“என்ன?” என்று கதவை திறந்து கேட்டாள். நேற்று முழுவதும் பேசாமல் இருந்து இப்போது தான் வாயைத்திறந்து இருந்தாள். அவள் கையில் ஒரு பார்சலை வைத்தான் விக்ரம்.
“உனக்கு சேரி. பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல இருக்கனும். இன்னும் ஒரு மணி நேரத்துல மேக் அப் போட வருவாங்க. நீ… ரெடியாகி இரு.” என்றதோடு திரும்பிச் செல்ல, சித்தாரா அந்த உடையோடு உள்ளே வந்தாள்.
உள்ளே பட்டுச் சேலையும் அதற்கு ஏற்ற நகைகளும் இருந்தது.
திரும்பித்தூங்க மனமில்லாமல் குளித்து சேலையை கட்டி முடித்தாள்.
நகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே, மீண்டும் கதவு தட்டப்பட்டது.
இம்முறை ரூம் சர்விஸோடு வந்து நின்றான் விக்ரம்.
“உள்ள போய் வைங்க” என்றதும் உடன் வந்த பையன், கொண்டு வந்ததை வைத்து விட்டு திரும்பிச் சென்றான்.
மூன்று டம்ளர்களில் பால், சான்ட் விச், சாலட், ஆம்லெட் என்று எல்லாமே காலையில் அங்கு கிடைக்க கூடியவை.
“விது எந்திரிக்கலயா?” என்று கேட்க கேட்டு மகனருகே சென்று பார்த்தான்.
“நேத்து ஓவரா ஆடுனதுல டயர்ட்” எங்கோ பார்த்துக் கொண்டே சொல்லி விட்டு, நகைகளை எடுத்து வரிசையாக வைத்துப்பார்த்தாள்.
“சாப்பிடு. அவங்க வந்து எல்லாம் போட்டு விடுவாங்க” என்று விக்ரம் அவள் நகையை பார்ப்பதை பார்த்து கூற, சித்தாராவும் சாப்பிட அமர்ந்தாள்.
பாலை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைத்தையும் காலி செய்து முடித்தாள்.
“பால் ஆறிடும்.” என்று கண்ணால் அதைக்காட்டிய விக்ரமும் டம்ளரை எடுத்துக் குடிக்க, “எனக்கு பால் பிடிக்காது” என்றாள்.
வாயில் வைத்த டம்ளரை எடுத்தவன், அவளை யோசனையோடு பார்த்தான்.
“பிடிக்காதா? அன்னைக்கு குடிச்சியே?”
“என்னைக்கு?”
“உனக்கு ஃபீவர் வந்து…” என்று முடிக்காமல் நிறுத்தினான்.
அடுத்தது நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் வார்த்தை தடுமாறியது.
“எப்..” என்று ஆரம்பித்தவள் உடனே கண்ணை மூடி நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்தாள்.
இதுவரை அவளால் ஊகிக்க முடியாத காட்சிகளில் ஒன்று, கண் முன்பு தோன்றியது.
அதீத காய்ச்சலில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் சித்தாரா.
“தாரா..” என்று மெல்ல அழைத்து தலையை வருடினான் விக்ரம்.
அந்த வருடலில் கண்ணைத்திறந்து பார்த்தாள். அவளை ஒரு கையால் தூக்கி தன் மீது சாய்த்துக் கொண்டவன், “காய்ச்சல் குறையுற மாதிரியே இல்ல. இந்த மாத்திரையாவது போடு” என்று செல்லமாய் கண்டித்தான்.
“வேணாம். எனக்கு பிடிக்காது”
“நோ.. இதுக்கு மேல உன் பேச்ச கேட்குறதா இல்ல. ஒன்னு டேப்ளட் போட்டு பால குடி. இல்லனா ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போயிடுவேன்” என்று மிரட்டி விட்டு மாத்திரையை எடுத்து வாயைத்திறந்து போட்டு விட்டான்.
சிணுங்கியபடி தண்ணீரை குடித்தவள் மீண்டும் படுக்கப்போக, “இத குடிச்சுட்டு படு” என்று பிடித்துக் கொண்டான்.
“வேணாம்” என்று வாயைத்திறந்தவள் வாயில், பால் டம்ளரை வைத்து புகட்ட ஆரம்பித்து விட்டான்.
அவன் கண்ணில் இருந்த கனிவும் காதலும் அவளை கட்டிப்போட, பாலை குடித்து முடித்து விட்டாள்.
விக்ரம் டம்ளரை ஓரமாக வைக்க, அவனது சட்டையைப்பிடித்து வாயைத்துடைத்தாள்.
அவன் அவளது செய்கையில் மெல்ல புன்னகைத்து விட்டு, “இப்போ தூங்கு. சரியாப்போகும்” என்றான்.
“எனக்கு தூக்கமே போச்சு உன்னால” என்று சித்தாரா சிணுங்கி, அவனை கட்டிக் கொண்டாள்.
“சித்தாரா..” என்ற அழைப்பில் சட்டென பழைய நினைவுகளில் இருந்து மீண்டு, கையை எடுத்து விட்டு கண்ணைத்திறந்தாள்.
விக்ரம் அவளை கேள்வியாக பார்க்க, “ப்ச்ச்.. அப்ப எனக்கு பைத்தியம் புடிச்சுருந்துச்சு குடிச்சேன். இப்ப தெளிஞ்சுட்டேன். பிடிக்கல” என்று கூறி வைத்தாள்.
விக்ரம் முகம் உணர்வுகளை இழக்க ஆரம்பிக்க, சித்தாரா யோசனையில் இறங்கினாள்.
‘கிட்டதட்ட இவனுக்கும் ஹீரோயினுக்கும் நடந்தது எல்லாம் ஞாபகம் வந்துச்சு. ஆனா இந்த சீன் புதுசா இருக்கே? இது ஏன் முன்னாடி ஞாபகம் வரல?’ என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
இதெல்லாம் நடந்தது அவர்களின் பிரிவுக்கு முன்பு. அந்த பிரிவை பற்றியும் அதில் இருக்கும் சில விசயங்கள் மட்டுமே இப்போது இருக்கும் சித்தாரா அறிவாள். மற்றவைகளை அவள் அறிந்து கொள்ள இன்னும் காலம் கூடி வரவில்லை.
இப்படித்தான் நம்மை படைத்த இறைவனும் சில விபரங்களை காரணத்தோடு மறைத்து வைத்திருக்கிறானோ? நேரம் காலம் வரும் வரை, எதுவும் நம் கண்ணுக்கோ கருத்துக்கோ எட்டா தூரத்தில் வைக்கப்பட்டுவிடுகிறது போலும். எல்லாம் அந்த எழுத்தாளருக்கே வெளிச்சம்.
முதல் திருமணமே இவர்களுடையது தான் என்பதால், பதிவாளர் அலுவலகத்தில் முதல் ஆளாக சென்று இறங்கினார்கள் விக்ரம், சித்தாரா மற்றும் விதார்த்.
விதார்த்த எதெதோ பேசிக் கொண்டே வர, அவனை கவனித்துக் கொண்டே இறங்கி நின்றவள், “சித்து” என்ற குரலில் வேகமாக திரும்பினாள்.
அங்கு சித்தாராவின் தாய் மகாதேவி நின்று இருந்தார். அவரை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் அவள் உறைந்து நிற்க, வேகமாக அருகே வந்தார்.
“சித்து என்ன இது?” என்று அவசரமாக மகாதேவி பேச, விக்ரம் சித்தாராவின் அருகே வந்து நின்று விட்டான்.
அவனை பார்த்ததும் மகாதேவிக்கு வார்த்தை தடை பட்டது. அந்த இடைவேளையில் சித்தாரா சுதாரித்தாள்.
“ம்மா.. நீங்க எங்க இங்க?”
“நம்ம கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட வந்துருக்காங்க” என்று விக்ரமிடமிருந்து பதில் வந்தது.
“வாட்?” என்று சித்தாரா அதிர, “சாட்சி கையெழுத்து முக்கியம் தாரா. தெரியும் தான?” என்று அசால்ட்டாக கேட்டான்.
“அதுக்கு எதுக்கு இவங்க?” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கேட்க, “சார்” என்று ஒருவன் விக்ரமை அழைத்தான்.
விக்ரம் தலையைத்திருப்ப, “ரெடியாகிடுச்சு. வாங்க” என்று அழைத்தான்.
“கல்யாணத்த முடிச்சுட்டு பேசலாமா?” என்று கேட்டு விட்டு, அவளது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான்.
“விக்ரம் அம்மாவ எதுக்குக் கூப்பிட்ட?”
சித்தாரா எரிச்சலோடு கேட்ட போதும், அவனிடமிருந்து பதில் வரவில்லை.
உள்ளே சென்று நின்றதும், மாலையும் தாலியும் தயாராக இருந்தது சித்தாராவின் கண்ணில் விழுந்தது. கூடவே இறுகி கறுத்த முகத்தோடு மருதநாயகம் நின்று இருந்தார்.
“ப்பா..” என்று சித்தாரா அவரை பார்க்க, அவர் மகளை உணர்வில்லாமல் பார்த்தார்.
“எதுக்குப்பா வந்தீங்க?” என்று மெல்லிய குரலில் விசாரிக்க, “பொண்ணு மாப்பிள்ளை யாரு?” என்று அங்கிருந்த பதிவாளர் கேட்டார்.
“நாங்க” என்ற விக்ரம், சித்தாராவின் கையை விடாமல் இழுத்துக் கொண்டு முன்னால் சென்றான்.
அதன் பின் அடுத்தடுத்த வேலைகள் நடக்க, சித்தாராவால் தந்தையிடமோ தாயிடமோ பேச முடியவில்லை. மாலையை மாற்றும் போது விக்ரம் முதலில் போட்டு விட, சித்தாரா அவனை தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவன் தலையை லேசாக குனிந்து இருக்க, கழுத்தைப் பிடித்து நெரித்து விடும் வேகம் வந்தது.
‘இருடா.. உன்னை படுத்துற பாட்டுல நான் யாருனு தெரிஞ்சுப்ப’ என்று மனதில் கறுவிக் கொண்டு, மாலையை வேண்டாவெறுப்பாக போட்டு விட்டாள்.
தங்கத்தாலியை வாங்கி அவளது கழுத்தில் போட்டு விட்டவன், கையெழுத்து போட்டு முடித்தான். சாட்சி கையெழுத்தை இறுகிய முகத்தோடு போட்ட பெற்றோர்களை பார்க்க, அவளுக்கு என்னவோ போல் இருந்தது.
‘இவங்க என் பேரண்ட்ஸ் இல்ல. ஹீரோயினோட பேரண்ட்ஸ். ஆனாலும் அவங்க அவமானப்படுறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியலயே.. இவன் என்ன பண்ணி இவங்கள வர வைச்சான்?’ என்று சித்தாராவினுள் யோசனை ஓடியது.
அங்கிருந்த வேலைகள் எல்லாம் முடிந்து விட, வேகமாக மகனை தூக்கிக் கொண்டு விக்ரம் வெளியே வந்து விட்டான்.
“என்ன ப்பா? என்ன ஆச்சு?” என்று சித்தாரா தந்தையிடம் நிற்க, “ஒன்னும் இல்லமா. நீ போ. வெயிட் பண்ணுறாங்க பாரு” என்றார் மருதநாயகம்.
“ஆமா.. நீ நல்லா இருந்தா போதும். போ மா” என்று கண்கலங்கி மகாதேவி பேச, அவளது உதடுகள் ஏளனமாக வளைந்தது.
“நல்லா இருக்கனுமா? நல்லா இருக்க என்ன இருக்கு? அந்த துரோகி கூட குடும்பம் நடத்த இந்த கல்யாணம்னு நினைச்சீங்களா? என்னை எல்லாம் பொண்டாட்டினு உலகத்துக்கு காட்ட முடியாதுனு பேசுனானே.. அதுக்காக தான் இது. அவன் வாழ்க்கைய நரகமாக்கிட்டு தான் மறுவேலை”
சித்தாராவின் விழிகளில் வழிந்த வன்மம், பெற்றோரை திகைக்க வைத்தது.
“சித்து.. என்ன இப்படி எல்லாம் பேசுற? இது உன்னோட வாழ்க்கையும் தான்” என்று மகாதேவி அதிர, “ஹா.. யாருக்கு வேணும் இந்த வாழ்க்கை? நான் சொன்னேன்ல.. என்னைக்கா இருந்தாலும் அவன் நிம்மதிய குலைப்பேன்னு.. இனி அதான் வேலை. பைத்தியம் பிடிச்சு அவன அலைய வைக்கிறேன் பாருங்க. இப்ப நீங்க கிளம்புங்க. நான் கால் பண்ணி பேசுறேன்” என்றவள், அன்னையை ஒரு முறை அணைத்து விட்டு திரும்ப, தந்தை அவள் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.
“வாழ்க்கைய கெடுத்துடாத சித்து” என்று மகாதேவி கெஞ்ச, அதை கொஞ்சமும் கேட்காமல் திரும்பி நடந்தாள்.
மகனோடு காரின் அருகே நின்றிருந்த விக்ரமை பார்க்கப் பார்க்க, சித்தாராவிற்கு வெறியேறியது.
‘வர்ரேன்டா.. உன் வாழ்க்கை இந்த நொடியில இருந்து என் கையில’ என்று நினைத்தபடி அருகே சென்றாள்.
அவளது விழி சொன்ன மொழியை விக்ரமால் சட்டென புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் புருவம் சுருக்கி பார்க்க, சித்தாரா மகனிடம் திரும்பினாள்.
“விது பசிக்குதா?” என்று கேட்க, “இல்லமா” என்றான் விதார்த்.
இப்போது அவளது பார்வையில் கனிவும் பாசமும் தான் இருந்தது.
“அப்போ பசிக்குதுனு இடையில வயிற பிடிக்க கூடாது?” என்று போலியாக மிரட்டியபடி, மாலையை கழட்டி காருக்குள் போட்டு விட்டாள்.
“சொல்ல மாட்டேனே” என்று குதித்தமகனை சிரிப்போடு கொஞ்சி விட்டு, “உள்ள ஏறு” என்று கதவை திறந்து விட்டாள்.
அவன் ஏறியதும், அவளும் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
விக்ரமை அவள் பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை. பின் பக்கமாக இருவரும் ஏறிக் கொள்ள, விக்ரம் அங்கு எல்லாம் ஏற்பாடு செய்தவனிடம் பேசி விட்டு கிளம்பி விட்டான்.
பின்னால் அமர்ந்து இருந்தவளை பார்த்தான். கண்ணை மூடி அமர்ந்து இருந்தாள்.
“ப்பா.. நான் முன்னாடி” என்று விதார்த் ஆரம்பிக்க, “நோ. இங்கயே உட்காரு” என்று சித்தாராவிடமிருந்து அதட்டல் வந்தது.
“ம்மா.. ப்ளீஸ்மா” என்று விதார்த் கெஞ்ச, “விது இந்த அடம் பிடிக்கிற பழக்கம் எங்க இருந்து வந்துச்சு?” என்று கண்ணைத்திறந்து அவள் கேட்டதும் அடங்கி விட்டான்.
‘சிறுவன் தானே.. விடேன்’ என்று சொல்ல நினைத்த விக்ரமின் வார்த்தைகள் தொண்டையில் நின்றது.
அன்னை என்றால் இப்படித்தான் அதட்டல் எல்லாம் இருக்குமோ? அதட்டலை அறியாதவனுக்கு இது புதிதாக இருந்தது. இடையில் சென்று பேச மனமில்லாமல் காரை எடுத்து விட்டான்.
வழியில் விதார்த், “பசிக்கிறது” என்று சிணுங்கவும் காரை ஒரு ஹோட்டல் பார்த்து நிறுத்தினான்.
மூவரும் அமைதியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் கிளம்பினர். இம்முறை மகனை விக்ரமுடன் விட்டு விட்டு, சித்தாரா மட்டும் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
விதார்த்தின் சலசலப்பு மட்டும் பேச்சாக இருக்க, விக்ரம் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு வந்தான்.
வீடும் வந்தது. கார் இரும்பு கேட்டை தாண்டி உள்ளே நுழைய, சித்தாராவின் பார்வை வெளியே படிந்தது. அவளது புருவமும் சுருங்கியது.
‘இது நம்ம வீடு மாதிரி இருக்கே’ என்று யோசனையோடு திரும்பிப்பார்க்க, வீடு வேறு விதமாய் இருந்தது.
‘அப்ப பாதை மட்டும் ஒன்னு. ஏன் ரைட்டரம்மாவுக்கு இந்த கார்டன் செட் அப் க்கு வேற ஐடியா கிடைக்கலயா? பழைய கதையில இருக்கதையே போட்டு வச்சுருக்கு’ என்று கிண்டலாக நினைத்துக் கொண்டாள்.
இரும்புக்கதவிலிருந்து கார் புல் தரைகளுக்கு நடுவே வழுக்கிக் கொண்டு சென்று நிற்க, சித்தாராவின் முகம் உணர்வுகளை தொலைக்க ஆரம்பித்தது.
தொடரும்.
