சித்திரமே 8

Loading

“ஹேய்.. விக்ரம் கார் தான அது?” என்று வேகமாக எழுந்தாள் ஆதிரா.

“ஆமா ஆதி..” என்ற விசாகாவின் குரலில் துள்ளல் இருந்தது.

“வா பார்க்கலாம். இன்னைக்கு வர்ரதா சொன்னானா?” என்று சந்தோசமாக கேட்டபடி முன்னால் நடந்தவள், சட்டென நின்றாள்.

“இல்லயே..” என்று சொல்லிக் கொண்டே வந்தவளும் நின்று விட்டாள்.

காரிலிருந்து இறங்கிய விக்ரம் இருந்த கோலம் தான், அவர்களை குழப்பத்தோடு நிற்க வைத்து விட்டது.

பட்டு வேட்டி சட்டையில் இருந்தான். ‘வெளிநாடு சென்று வருபவன் பட்டு வேட்டி சட்டையில் எப்படி வந்தான்?’ என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

விக்ரம் வாசலருகே நின்றிருந்த இருவரையும் கவனிக்காமல், மறுபக்க கதவை திறந்து மகனை இறக்கினான்.

சித்தாரா அமர்ந்து இருந்த பக்கத்து கதவையும் திறந்து விட, அவளும் இறங்கி நின்றாள்.

உள்ளே குனிந்து மாலை இரண்டையும் கையில் எடுத்துக் கொண்டு, கதவை அடைத்து விட்டு மகன் கையைப்பிடித்துக் கொண்டு முன்னால் வந்தான்.

ஆதிராவும் விசாகாவும் பேரதிர்ச்சியில் நின்று இருந்தனர். முதலில் விக்ரம் இருந்த கோலமே ஒரு அதிர்ச்சி என்றால், அடுத்தடுத்து இறங்கியவர்களை பார்த்து நெஞ்சம் வெடித்து விடுவது போல் ஆனது.

“சித்தாரா” என்று விசாகா முணுமுணுக்க, ஆதிரா சரேலென திரும்பி விசாகாவை பார்த்த விட்டு விக்ரமை பார்த்தாள்.

சித்தாரா சேலையை லேசாக பிடித்துக் கொண்டு படியேற, “விக்ரம்” என்று ஆதிரா அலறினாள்.

படியேறுவதை நிறுத்தாமல் இருவரும் நிமிர்ந்து பார்க்க, விதார்த் தான் பயந்து விட்டான்.

சட்டென நின்ற விக்ரம் மாலையை சித்தாராவின் கையில் திணித்து விட்டு, பயந்து போன மகனை தூக்கிக் கொண்டான்.

விறுவிறுவென முன்னால் வந்த ஆதிரா, “என்ன பண்ணி வச்சுருக்க?” என்று கத்தினாள்.

சித்தாராவின் கழுத்தில் மின்னிய தாலி அவளை வெறிகொள்ள வைத்தது.

“அண்ணா…” என்று அதிர்ச்சி விலகிய விசாகாவும் முன்னால் வந்தாள்.

“இவள எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?” என்று அவள் பங்குக்கு எகிற, “விக்ரம் வந்தாச்சா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே இருந்து மற்றொருத்தி வந்தாள்.

வேதவல்லி. மற்ற எல்லோரையும் விட வயதில் மூத்தவள். ஆனால் சட்டென பார்த்தால் சிறு பெண்‌ என்று சொல்லும் அளவு அவளது உடை நடை பாவனைகள் எல்லாம் இருக்கும்.

வெறும் காய்கறியை சாப்பிட்டு விட்டு, உடம்பை ஒல்லியாக வைத்திருக்க அவள் படும் பாடு அவளுக்கே வெளிச்சம்.

இப்போதும் சிறு பெண் போல தம்பியை பார்க்க துள்ளிக் கொண்டு வந்தவள், சடன் ப்ரேக் போட்ட காரைப்போல் நின்று விட்டாள்.

அருகே பட்டுச்சேலையில் புதுத்தாலி மின்ன திருமண கோலத்தில் இருந்த சித்தாராவை அவள் எதிர்பார்க்கவில்லை.

நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து போய் நின்றாள்.

“பாதைய மறைச்சுட்டு நிக்காம தள்ளுறீங்களா?” என்று விக்ரம் அதட்ட‌ மூவரும் அசையவில்லை.

வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தனர். வேதவல்லிக்கு அதிர்ச்சி விலகி ஆத்திரம் வந்தது.

“ஏய்.. இங்க எதுக்குடி வந்த?” என்று நேரடியாக சித்தாராவிடம் எகிற, “நீ எதுக்கு வந்தியோ அதுக்குத்தான்டி” என்று சித்தாராவிடமிருந்து சூடாக பதில் வந்தது.

“என்னது? டியா?” என்று அதிர்ந்த வேதவல்லிக்கு, இப்போதே நெஞ்சு வலி வருவது போல் இருந்தது.

“நீயும் தான என்னை டினு சொன்ன?”

“இவ பேசிட்டு நிக்கிறா.. நீ பார்த்துட்டு நிக்கிற?” என்று தம்பியிடம் எகிறியவள், “யாரக்கேட்டு இவள கல்யாணம் பண்ண?” என்று கத்தினாள்.

“எல்லாத்தையும் வாசல்ல நின்னு தான் பேசுவியா? வழிய விடு” என்று விக்ரம் கூற, “ஒரு நிமிஷம்” என்று மெல்லிய குரல் கேட்டது.

அங்கு சத்தமில்லாமல் வந்து நின்றிருந்த அல்லிக்கொடி தான் பேசினார்.

“இருங்க. உள்ள வந்துடாதீங்க” என்று அவசரமான வேண்டுதலோடு வேகமாக உள்ளே சென்றார்.

விதார்த் ஆளாளுக்கு பேசியதில் பயந்து போய் தந்தை கழுத்தைக் கட்டிக் கொண்டு, அன்னையை பார்த்து உதட்டை பிதுக்கினான்.

“ஏய்.. வெளிய போடி.. இந்த வீட்டுல உனக்கு இடமில்ல. அந்த துரோகியோட மகனு தெரிஞ்சும் கட்டிட்டு வந்து நிக்கிற?” என்று தம்பி அவன் மனைவி இருவரிடமும் எகிறினாள் வேதவல்லி.

“அப்படித்தான் வருவேன். என்னடி செய்வ?” என்று சித்தாரா எகிற, மற்ற இரு பெண்களுக்கும் பேச்சே வரவில்லை.

“என்னடி.. அன்னைக்கு அப்பாவி மாதிரி கண்ணீர் விட்டுட்டு போன? இன்னைக்கு பாம்பு மாதிரி சீறுர?”

“அன்னைக்கு நீ பார்த்தவ வேற. இன்னைக்கு வந்துருக்கவ வேற. முடிஞ்சா என்னை துரத்திப்பாரேன்” என்று சவால் விட, ஆரத்தி தட்டோடு வேலை செய்யும் பெண் வர, அவளோடு அல்லியும் வந்தார்.

“இவளுக்கு ஆரத்தி ஒன்னு தான் கேடு” என்று தட்டை தட்டி விட வேதா கையை தூக்க, அதை சித்தாரா பிடித்து விட்டாள்.

அக்காவை தடுக்க வந்த விக்ரமின் கை, அந்தரத்தில் நின்றது.

“நீங்க எடுங்க” என்ற சித்தாரா, வேதவல்லியின் கையை பிடித்து அவளை தள்ளி விட்டாள்.

அதை பார்த்தாலும், “மாலைய போட்டுக்கோங்க. நீ முன்னாடி வா” என்று ஆரத்தி எடுக்க வந்தவளை முன்னால் இழுத்து விட்டார் அல்லி.

தன் கையில் இருந்த மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொண்டு, விழப்போய் சுதாரித்த வேதாவோடு மற்ற இருவரையும் தெனாவெட்டாக பார்த்தபடி, விக்ரம் கழுத்தில் மாலையை போட்டு விட்டாள் சித்தாரா.

மூவருக்கும வயிறு பற்றி எரிய, கற்பூரத்தை ஏற்றி இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள் வேலைக்காரி.

அல்லிக்கொடிக்கு மனம் குளிர்ந்து விட்டது. அவரது கண்கள் கலங்க, திரும்பி கணவன் படத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

வேலைக்காரப்பெண் அங்கிருந்து அகன்று விட, வலது காலை எடுத்து வைத்து சித்தாரா உள்ளே நுழைய, விக்ரம் மகனது முதுகை தட்டிக கொடுத்தபடி உள்ளே வந்தான்.

“அண்ணா.. இவளப்போய் ஏன் கல்யாணம் பண்ண? உனக்காக இங்க ஆதி இருக்கா” என்று விசாகா ஆரம்பிக்க, “விசா கொஞ்சம் அமைதியா இரு. ஏற்கனவே நான் டயர்ட்டா இருக்கேன். அப்புறம் பேசலாம்” என்று நிற்காமல் பேசிக் கொண்டே நடந்தான்.

அங்கிருந்த லிஃப்டில் அவன் மகனோடு நுழைய, சித்தாராவும் வந்தாள்.

லிஃப்ட் கதவு மூடியதுமே, “இங்க வா விது” என்று கை நீட்ட, உடனே அவளிடம் தாவினான்.

“பயந்துட்டியா? அவங்க உனக்கு அத்தைங்கமா. அப்படித்தான் கோபமா பேசுவாங்க. ஆனா பயப்படத்தேவை இல்ல. சரியா?” என்று அவனுக்கு மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருக்க கதவு திறந்தது.

விக்ரம் அவளை உள்ளே எழுந்த ஆச்சரியத்தோடு பார்த்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் லிஃப்டை விட்டு வெளியே வந்தான்.

நான்காவது மாடி அது. மிக சுத்தமாக இருந்தது. இரண்டே கதவுகள் தான் இருந்தது. அதில் ஒரு கதவை திறந்தவன் “இதான் உனக்கு. ஆபோசிட் ரூம் என்னோடது” என்றான்.

சித்தாரா உள்ளே நுழைய, விதார்த் அந்த அறையை அதிசயமாக பார்த்தான். சித்தாராவிற்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.

‘அந்த கதையில இருந்தத விட இது பெரிய ரூம் தான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

“உன் ட்ரஸ்ஸ கொண்டு வந்து தருவாங்க. வேற எதுவும் வேணும்னா கேட்டுக்கோ” என்றவன் மகனை பார்த்தான்.

“விது ரூம் பிடிச்சுருக்கா?”

“சூப்பரா இருக்குப்பா” என்றவன் தாயின் கையிலிருந்து இறங்கி ஓடினான்.

“இவனுக்கு எதுவும் இப்போ வாங்கி வைக்கல. நாளைக்கு சாப்பிங் போகலாம்” என்ற போது சித்தாரா பதில் சொல்லாமல் நின்றாள்.

“என்ன?” என்று விக்ரம் அழுத்திக் கேட்க, “எதுக்காக என் அப்பா அம்மாவ அங்க வரவச்ச?” என்று கேட்டாள்.

“மக கல்யாணத்த பார்க்கனும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல?”

“மண்ணாங்கட்டி. நீ என்ன பண்ணனு கேட்டேன்”

விக்ரம் தோளை குலுக்கி விட்டு, அறையை விட்டு வெளியேறி விட்டான்.

கட்டில் மேல் ஏறி படுத்து உருண்ட விதார்த், “ம்மா.. இது பெருசா இருக்குமா.. நம்ம பெட் விட பெருசு” என்று உருண்டு காட்டினான்.

மனதில் இருந்த அத்தனை யோசனைகளும் சட்டென விலக, முகத்தில் புன்னகை வந்தது.

“அப்படியா? நாம படுத்து உருண்டு உருண்டு தூங்குவோமா?” என்று கேட்டுக் கொண்டே மகனோடு மெத்தையில் விழுந்தாள்.

“உருண்டு உருண்டு தூங்குனா சில்பா மாதிரி நாமலும் உருண்டை ஆகிடுவோம்” என்று விதார்த் கிண்டல் செய்து சிரிக்க, “அடப்பாவி.. அந்த சில்பாவ பார்க்குற அன்னைக்கு நீ சொன்னத சொல்லுறேன் இரு” என்று மகனை மிரட்டி விளையாடினாள்.

சில்பா விதார்த் பள்ளியில் படித்த சிறுமி. கொழுகொழுவென உருண்டையாக இருப்பாள். அதைத்தான் இப்படி நையாண்டி செய்தான்.

மகனை விளையாட விட்டு விட்டு சித்தாரா நகைகளை கழட்ட ஆரம்பிக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

திறந்ததும் அவர்களது உடைமைகள் எல்லாம் வாசலில் வைத்திருந்தனர்.

“உள்ள கொண்டு வந்து வைக்கட்டுமா மேடம்?” என்று பவ்யமாய் ஒருவன் கேட்க, “நோ நீட்.” என்று முடித்து விட்டாள்.

அவர்கள் வேகமாக படியை நோக்கிச் செல்ல, சித்தாரா எதிர் கதவை ஒரு நொடி பார்த்தாள்.

“விது இங்க வாடா” என்றதும் மகன் ஓடி வந்தான்.

“அந்த ரூம்ல உங்கப்பா இருக்கார். அவர கூப்பிட்டு இதெல்லாம் எடுத்து உள்ள வைக்க சொல்லு. நான் நகையெல்லாம் கழட்டுறேன்” என்று கூறி மகனை அனுப்பினாள்.

உடனே ஓடியவன் கதவை பலமாக தட்டினான்.

“ப்பா.. ப்பா” என்று தட்டிக் கொண்டே இருக்க, கதவைத்திறந்த விக்ரம் முகத்தில் பதட்டம்.

குளித்துக் கொண்டிருந்தவன், மகன் அழைக்கவும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்து விட்டான்.

“என்ன விது?” என்று கேட்டவன் பார்வை அவசரமாக எதிர் கதவில் படிந்து மீள, விதார்த், “ஹீ…” என்று பல்லைக்காட்டிக் கொண்டு அண்ணாந்து பார்த்து சிரித்தான்.

அவனது சிரிப்பில் பதட்டம் குறைய, விக்ரம் முகத்திலும் புன்னகை அரும்பியது.

குனிந்து தூக்கிக் கொண்டவன், “என்னடா?” என்று விசாரித்தான்.

“பப்பி சேம்மா இருக்கீங்க” என்று மகன் மேலும் பல்லைக்காட்ட, “குளிச்சுட்டு இருந்தவன கூப்பிட்டு பப்பி சேம்னா சொல்லுற?” என்று மிரட்டியவன் தலைமுடியை சிலுப்பி மகனை நனைத்தான்.

“ச்சீ ச்சீ.. ஆங்…” என்று விதார்த் சினுங்க, “ஆளப்பாரு” என்று கொஞ்சி முத்தமிட்டான்.

அப்போது தான் அங்கு வாசலில் இருந்த பொருட்கள் கண்ணில் விழுந்தது.

“உங்கம்மா எங்க?” என்று மகனிடம் கேட்க, “அவங்க.. ஹான்.. இத எல்லாம் நீங்க உள்ள போய் வைக்கனுமாம். அம்மா சொன்னாங்க” என்று மறந்ததை நினைவு படுத்தி கூறினான்.

“உங்கம்மா என்ன செய்யுறாங்களாம்?”

“அவங்க கழட்ட போறாங்களாம்”

“எத?” என்று ஜெர்க்காகி வினவ, “நகைப்பா” என்றான் மகன்.

“அரைகுறையா பேசுறானே” என்று முணுமுணுத்து விட்டு, “இத அப்புறம் எடுத்து வைப்போம். இப்போ வா குளிச்சுட்டு வருவோம்” என்று மகனோடு தன் அறைக்குள் நுழைந்தான்.

அந்த அறையும் பெரிதாக இருந்தது. மகனோடு குளியலறைக்குள் புகுந்தவன், தொட்டியில் தண்ணீரை நிரப்பினான்.

இருவரும் குளியல் என்ற பெயரில் தண்ணீரில் நன்றாக ஆட்டம் போட்டு விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தனர்.

தனக்கான உடையை விக்ரம் அணிந்து கொண்டு, மகனை துண்டால் சுற்றியபடி வெளியே வந்தான்.

இன்னும் அந்த பைகள் அங்கேயே இருக்க, சித்தாராவின் அறைக்குள் நுழைந்தான்.

சித்தாரா குளியல் அறையில் இருக்க, மகனை இறக்கி விட்டு வாசலில் இருந்த பொருட்களை தூக்கி வந்து உள்ளே வைத்தான்.

படுக்கை அறைக்குள் வைத்து விட்டு, மகனது உடையை தேடி‌ எடுத்து அணிவித்தான்.

குளியலறையில் இருந்து வெளியே வந்த சித்தாரா, மகனும் கணவனும் ஹாலில் இருப்பதை பார்த்தாள். உடைகளும் அங்கே இருக்க, உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

“டைம் ஆச்சு சாப்பிடப்போகலாமா?” என்று மகனுக்கும் மனைவிக்கும் பொதுவாய் கேட்டபடி எழுந்து நின்றான்.

மனைவியின் பதிலுக்காக திரும்பிப் பார்க்க, அவள் கண்ணாடியை பார்த்து முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.

லாங் டாப் லெக்கின் அணிந்து, துப்பட்டாவை ஒரு பக்கமாக போட்டிருந்தாள். கழுத்தில் காலையில் அணிவித்த தங்கத்தாலி மின்னியது. நெற்றியில் பொட்டும் அவளது சிகையலங்காரமும் அவனை பிரம்மிக்க வைத்தன.

“நீ இப்படி எல்லாம் டிரஸ் பண்ணுவியா?” என்று ஆச்சரியமாக கேட்டான்.

அவளை அதிகம் சுடிதார் மற்றும் புடவையில் பார்த்தவனுக்கு, இந்த உடையில் பார்க்க புதுமையாக இருந்தது. என்னவோ அவனுள் ஒளிந்து கிடந்த ஒன்று, வெளியே தலை நீட்டி அவளை ரசித்தது.

“என்னை விட்டா மினி ஸ்கர்ட் கூட போடுவேன். ஆனா இங்க செட் ஆகாதேனு இத போட்டுருக்கேன்”

“மினி ஸ்கர்ட்? நீ?”

“என்ன அவ்வளவு ஆச்சரியம்?”

“நம்ப முடியலயே”

“எப்படி நம்ப முடியும்? ஹீரோயின் காஸ்டியூம் அப்படி.”

“புரியல”

“புரியாது. இப்ப சாப்பிடப்போகலாமா?” என்று கேட்டு விட்டு மகனை பார்க்க, அவன் தந்தையிடம் தாவினான்.

சித்தாரா ஒன்றும் சொல்லாமல் கதவை திறந்து வெளியேறினாள்.

தொடரும்.

Leave a Reply