சித்திரமே 9
![]()
விக்ரம் லிஃப்டில் நுழைந்து கதவை அடைத்ததுமே, ஆதிராவிற்கு கண் கலங்கி விட்டது. அதுவரை இருந்த ஆத்திரமெல்லாம் இப்போது கண்ணீராய் மாற ஆரம்பிக்க, விசாகா அவளை வருத்தமாக பார்த்தாள்.
வேதவல்லிக்கு ஆத்திரமாக வந்தது. அந்த லிஃப்ட்டை ஒரு வெறுப்போடு பார்த்து விட்டு, பட்டனை அழுத்தினாள்.
“அத ஏன்கா பிச்சு போடுற? அங்க போய் நின்னாலும் அண்ணன் பதில் சொல்ல மாட்டான்”
“எவ்வளவு தைரியம் இருந்தா அவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவான்? வீட்டுல நாம எல்லாம் செத்தா போயிட்டோம்? ஒரு வார்த்தை சொல்லாம.. ஃபாரின் போனவன் கிட்ட இவ எப்படி வந்தா? ஒரு வேளை ஃபாரின்ல பார்த்துருப்பாங்களோ?” என்று தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக வேதா புலம்பினாள்.
ஆதிரா அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. விறுவிறுவென நடந்து படியை நோக்கிக் சென்றாள். முதல் தளத்தில் இருந்த அவளது அறைக்குள் புகுந்து கதவை அடைக்கும் வரை பார்த்த விசாகாவுக்கு, பாவமாக இருந்தது.
“அண்ணன் ஆதிய இப்படி ஏமாத்திருக்க வேணாம்” என்று விசாகா புலம்ப, “அது இருக்கட்டும். எங்க அந்த சித்தி?” என்று கேட்டாள்.
“அவங்க எதுக்கு?”
“அவளுக்கு ஆரத்தி எடுத்துச்சே.. சித்தி…” என்று வேதா கத்த, சமையலறையில் நின்றிருந்த அல்லிக்கு கேட்கத்தான் செய்தது. ஆனால் அவர் கொஞ்சமும் அசரவில்லை.
மாறாக அந்த சத்தத்தில் திடுக்கிட்ட வேலைக்காரர்களை அதட்ட ஆரம்பித்தார்.
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? வேலையப்பாருங்க” என்று அதட்ட, அவர்களும் தடபுடலாக விருந்தை தயாரித்தனர்.
அல்லிக்கொடிக்கு மனம் நிறைந்து இருந்தது. எங்கே மகன் திருமணம் செய்து கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்தை விட, ஆதிராவை திருமணம் செய்து விடுவானோ என்று தான் அதிகம் பயந்தார். ஆதிராவுக்கும் விசாகாவுக்கும் பெரியவித்தியாசம் இல்லை. அவள் இந்த வீட்டின் மருமகளாக வந்தால், வீடு நாசமாய் போய் விடும் என்பதில் ஐயமே இல்லை.
உள்ளே வந்ததும், சித்தாரா சரிக்கு சமமாக பேசியது, வேதாவை அதட்டியது எல்லாம் பார்க்க, சற்று திருப்தியாக இருந்தது.
என்ன தான் வேதாவின் மீதும் விசாகாவின் மீதும் அவர் பாசத்தை காட்டினாலும், அவர்களை அவரால் நன்றாக வளர்க்கவும் முடியவில்லை. நல்வழி படுத்தவும் முடியவில்லை. இப்போது வந்திருக்கும் மருமகள் நிச்சயம் செய்வாள் என்று நம்பினார்.
இரவு உணவையே விருந்தாக மாற்ற ஆரம்பித்தவர், வேதாவின் சத்தத்துக்கு எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
வேதாவும் சமையலறை பக்கம் செல்வது இல்லை. அங்கு சென்று பதார்த்தங்களை பார்த்தால் நாக்கு ருசியில் எதையாவது சாப்பிட்டு விடுவோம். பிறகு கஷ்டப்பட்டு பாதுகாக்கும் அழகு குறைந்து விடும் என்ற எண்ணம் அவளுக்கு. அதனால் உள்ளே நுழையவே மாட்டாள்.
“அவங்கள விடு. இப்ப எப்படி அந்த சித்ராவ வெளிய அனுப்புறது? கல்யாணமே முடிஞ்சது. இனி ஆதி அவ்வளவு தானா?” என்று விசாகா புலம்ப, “அது எப்படி முடியும்? அந்த சீமை சித்ராங்கிய ஓட ஓட விரட்டலனா பாரு. வரட்டும்” என்றவள் வேகமாக சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
இரண்டு மணி நேரம் கழித்து மனைவி மகனோடு வந்த விக்ரம், உணவு மேசை பக்கம் நடக்க, “நில்லுடா” என்று வேதா அதட்டினாள்.
விக்ரம் எரிச்சலாக திரும்பிப் பார்க்க, சித்தாரா நிற்கவே இல்லை. நடந்து சென்று விட்டாள். வேதா அதை கடுப்பாக பார்த்து விட்டு தம்பியிடம் வந்தாள்.
“எதுக்கு அவள கல்யாணம் பண்ண?”
“என் இஷ்டம். இதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது” என்று பட்டென பதில் வர, “அப்போ ஆதிரா நிலைமை?” என்று கேட்டாள் விசாகா.
“அவளுக்கென்ன?” என்று அலட்சியமாக விக்ரம் கேட்க, “தெரியாத மாதிரி கேட்காத. அவள தான நாங்க உனக்கு பொண்ணு பார்த்தோம்? இடையில இவ ஏன் வந்தா?” என்று எகிறினாள் அக்கா.
“ஆதிய இப்படி ஏமாத்திட்டியேணா” என்று அழுதாள் தங்கை.
நடந்து சென்ற சித்தாரா திரும்பி வந்து, “இவன கொடு. நீ பேசிட்டு வா” என்று மகனை வாங்கிக் கொண்டாள்.
அங்கிருந்த இருவரையும் மதிக்காமல் அவள் திரும்பி நடக்க, “ஏய் நில்லுடி” என்று வேதா எகிறினாள்.
“ப்ச்ச்..” என்ற சலிப்போடு சித்தாரா நிற்காமல் சென்று விட, வேதாவுக்கு அவமானமாகி விட்டது.
“இவள.. இவள இப்பவே நீ துரத்துற. என்னை மதிக்காம போறா. இவள துரத்து” என்று வேதா குதிக்க, “நோ சான்ஸ்” என்றபடி விக்ரமும் சென்று விட்டான்.
இவருவருமே இப்போது செய்வதறியாமல் திகைத்து நிற்க, மாடிப்படியில் சத்தம் கேட்டது. ஆதிரா பெட்டியோடு வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தாள். அதைப்பார்த்து அவளிடம் ஓடினர்.
இங்கே உணவு மேசையில் பலதரப்பட்ட உணவுகள் அடுக்கப்பட்டு இருக்க, சித்தாராவின் புருவம் உயர்ந்தது.
‘வெண்பனியா இப்படி சும்மா சோறு போடுற ஆளு? இல்ல வேற யாரும் பண்ணதா?’ என்று சந்தேகத்தோடு நிமிர, சமையலறையில் இருந்து அல்லி வந்து கொண்டிருந்தார்.
‘அதான.. வெண்பனியாவது ஃப்ரியா சோறு போடுறதாவது. இந்தம்மா ஏற்பாடு தானா?’ என்று பார்த்து விட்டு, “இவங்க யாரு?” என்று விக்ரமிடம் வினவினாள்.
ஒரு பார்வை நிமிர்ந்து பார்த்து விட்டு, “சித்தி” என்றான்.
அல்லி அருகே வந்து விட்டார். அவரது பார்வை முழுவதும், சமத்தாக அமர்ந்து இருந்த விதார்த்திடமே இருந்தது. அவரை சற்று ஆழமாக கவனித்தவள், “விது.. பாட்டி கிட்ட ஹாய் சொல்லு” என்றாள்.
அல்லியின் நடை அப்படியே நின்று விட்டது.
“ஹாய் பாட்டி” என்று விதார்த் உணவு நிறைந்த வாயில் சொல்லி அழகாக கையாட்ட, அல்லிக்கு கண்ணீர் சரசரவென கொட்டி விட்டது.
“ம்மா அப்ப அந்த பாட்டி இனி பாட்டி இல்லையா?” என்று விதார்த் சந்தேகம் கேட்க, அல்லியை பார்த்துக் கொண்டே, “அவங்களும் பாட்டி தான். இவங்களும் பாட்டி தான்.” என்று விளக்கமளித்தாள்.
“ஐஐ…! எனக்கு ரெண்டு பாட்டி” என்று விதார்த் சிரிக்க, “ஆமா. ரெண்டு பாட்டி தான். இந்த பாட்டியும் உனக்கு சாக்லேட் கேக் எல்லாம் வாங்கித்தருவாங்களானு கேளு” என்று மகனை பேச வைத்தாள்.
அவசரமாக கண்ணைத்துடைத்துக் கொண்டிருந்தவர் பேரனை பார்க்க, “தருவீங்களா பாட்டி?” என்று வினவினான்.
அருகே வந்து தலையை வருடியவர், “தருவேன் கண்ணு” என்றார். குரல் உணர்ச்சி வசத்தால் கரகரத்துபோனது.
“ஏஏஏஏ.. ஏஏஏஏ.. எனக்கு பாட்டி சாக்லேட் கேக் எல்லாம் தடுவாங்க” என்று சிறுவன் குதூகலித்தான்.
“ஆமா.. இப்ப நல்லா சாப்பிட்டு முடி. அப்புறமா பாட்டி கிட்ட கேளு” என்று உணவை ஊட்டி முடித்து தானும் உண்டாள்.
அத்தனையும் மௌனமாக கவனித்த விக்ரமுக்கு, ஆச்சரியமும் குழப்பமும் தான் அதிகமாக இருந்தது. ஆனால், வாயைத்திறந்து எதையும் பேசவில்லை.
அல்லிக் கொடி அங்கிருந்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நகர்ந்து விட்டார்.
அங்கு ஆதிரா வீட்டை விட்டுப்போக தயாராகி விட்டாள்.
“என்ன ஆதி நீ? இப்படி கிளம்பிட்டா எப்படி?” என்று வேதா சலிக்க, “போகாத ஆதி” என்றாள் விசாகா.
“என்னால இங்க இருக்க முடியாது. எதுக்கு இருக்கனும்? அடுத்தவன் புருஷன் மேல ஆசைப்படுற அளவு நான் ஒன்னும் தரங்கெட்டு போகல. அதுவும் கையில அவ்வளவு பெரிய புள்ளையோட வந்து நிக்கிறான். இதுக்கப்புறமும் இவன் தான் வேணும்னு மேல போய் விழனுமா? அவ்வளவு சீப்பா என்னால இறங்க முடியாது. என் தகுதியே வேற”
“எல்லாம் புரியுது.. ஆனா..”
“என்ன புரியுது? அடுத்தவ புருஷன கட்டுறதுக்கு நான் எந்த வகையில குறைஞ்சுட்டேன்? என் ஸ்டேட்டஸ்க்கு இது அசிங்கம். விக்ரம் மேல ஆசை பட்டேன் தான். ஆனா… ஃபைன். இனி இந்த வீட்டுல இருந்தா என் மானம் போகும். நான் கிளம்புறேன். நீங்களாச்சு உங்க குடும்பமாச்சு”
படபடவென பேசியவள் கலங்கிய கண்ணை உள்ளே இழுத்துக் கொண்டு, விசாகாவின் கையைதட்டி விட்டபடி நடந்தாள்.
“ஆதி..” என்று விசாகா பின்னால் போக, வேதாவும் அவளை தடுக்கப்பார்த்தாள்.
ஆதிரா யாரையும் மதிக்காமல் நேராக சென்று காரைத்திறந்து பெட்டியை வைத்தாள்.
“இப்படித்தோத்து ஓடுறியே.. உனக்கு அசிங்கமா இல்லையா?” என்று வேதா அவளை தூண்டி விடப்பார்த்தாள்.
வெடுக்கென திரும்பிய ஆதிரா அவளை முறைத்தாள்.
“நான் தோத்து தான் போறேன். ஆனா என் ரெஸ்பெக்ட்ட இழக்கல. இங்க இனி இருந்தா நிச்சயமா அத இழந்துடுவேன். குட் பை” என்று வெடுக்கென பதிலும் கொடுத்து விட்டு வேகமாக காரில் ஏறினாள்.
“ஆதி..” என்று விசாகா கலங்கிப்போய் பார்க்க, “சாரி விசி. என்னால இனி இங்க இருக்க முடியாது. ஊருக்கு போயிட்டு நானே கால் பண்ணுறேன். பை ” என்றதோடு கிளம்பி விட்டாள் ஆதிரா.
உணவு முடிந்து மூவரும் எழ, விக்ரம் மகனை தூக்கிக் கொண்டான்.
“ப்பா.. இது என்னபா?” என்று அங்கு மாட்டப்பட்டிருந்த படங்களை காட்டி விதார்த் கேள்வி எழுப்ப, அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்து தண்ணீரை குடித்த சித்தாரா, சில நொடிகள் எதையோ யோசித்தாள். பிறகு வேகமாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கு வேலை செய்பவர்கள் சமையலறையை சுத்தம் செய்து விட்டு கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் அல்லி.
சித்தாராவை பார்த்ததும், “எதுவும் வேணுமா?” என்று கேட்டார்.
மறுப்பாக தலையசைத்து அங்கே நின்று வேடிக்கை பார்த்தாள். எல்லோரும் கிளம்பியதும், “நீங்க சாப்பிடல?” என்று கேட்டாள்.
“சாப்பிடனும்மா..”
“விதுவுக்கு நைட் அரை டம்ளர் பசும் பால் கொடுப்பேன். பாக்கெட் பால் அவனுக்கு கொடுக்க மாட்டேன். இங்க வாங்கி வச்சுடுங்க”
“சரிம்மா”
“அப்புறம் ஈவ்னிங் எதாவது பயறு கொழுக்கட்டை பஜ்ஜி இப்படி ஸ்னாக்ஸும் கொடுப்பேன்.”
“நாளையில இருந்து பண்ணச் சொல்லிடுறேன்”
தலையை அசைத்தவள் அங்கிருந்து நகர, “உனக்கு எதாவது…” என்று இழுத்து நிறுத்தினார்.
“வேணாம் ஆண்ட்டி. ஆண்ட்டினு கூப்பிடலாம் இல்லயா?”
அல்லிக்கொடி வேகமாக தலையசைக்க, அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அவள் வெளியே வரவும், வேதா கத்தவும் சரியாக இருந்தது.
“நீ பண்ணுறது எதுவும் சரியில்ல விக்ரம். அந்த துரோகி பெத்த மகள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க. இதுல பிள்ளை வேற? நிஜம்மாவே இவன் உனக்கு பிறந்தவன் தானா?” என்று வேதா வார்த்தையை விட, “அக்கா.. மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று விக்ரம் எகிறினான்.
“ஏன் நிரூபிக்கனுமா?” என்று சித்தாராவின் குரல் அமைதியாக கேட்க, இருவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது.
அவள் முகத்தில் கோபமெல்லாம் இல்லை. அமைதியாக தான் நடந்து வந்தாள்.
விக்ரம் தான் அதீத கோபத்தில் இறுகிப்போய் நின்று இருந்தான். வேதாவிற்கு, சித்தாராவின் நிதானம் சுத்தமாக பிடிக்கவில்லை.
பின்னால் வந்த அல்லிக்கொடி பதட்டத்தோடு நிற்க, “இங்க வா விது” என்று அவனை தூக்கியவள், உடனே அல்லிக் கொடியிடம் நீட்டினாள்.
“பிடிங்க. கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டுங்க. சீக்கிரம் தூங்கிடுவான். நான் வந்து தூக்கிக்கிறேன்” என்று நீட்ட மற்ற எல்லாம் மறந்து, முகம் விகசிக்க விதார்த்தை வாங்கிக் கொண்டார் அல்லி.
“இங்க நான் பேசிட்டு வர்ரேன்” என்று கூறியதும், வேதா பக்கம் திரும்பாமல் விதார்த்தோடு நகர்ந்து விட்டார்.
“என்ன கேட்ட? விது யாரோட பிள்ளைனா? நிரூபிக்கிறது ரொம்ப சிம்பிள்.” என்றவள் விக்ரம் பக்கம் திரும்பினாள்.
“உன் அக்காவுக்கு வயசாகிப்போச்சு. ஒரு கண்ணாடி வாங்கிக் கொடு. அத போட்டு பார்த்தா தெரியும். விது யார் பிள்ளைனு” என்று நக்கலாக கூறினாள்.
வேதாவிற்கு தீ பிடித்தது போல இருந்தது.
விதார்த்தை விக்ரமின் மகன் தான் என்று சொன்னதால் அல்ல. வயதாகி விட்டது என்று சொல்லி விட்டாளே.. அதுவும் கண்ணாடி போடச்சொல்லி விட்டாளே..
எவ்வளவு போராடி இந்த இளமையான உடலை பாதுகாத்து வருகிறாள்? கண்ணாடி போட்டால் அவளது அழகு முகம் பாழாகிப்போகுமே. இதெல்லாம் உணராமல் ஒரே நொடியில் அவளை கிழவி ஆக்கிவிட்டாளே இந்த சித்தாரா.
“என்னடி நக்கலா?”
“ஆமாடி”
“என்னை டினு சொன்ன?”
“நீ என்னை டி போட்டா நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்”
“ஓஹோ.. அப்போ உன்னை மேடம்னு கூப்பிடவா?”
“கூப்பிடு. உன்னை நான் மேடம்னு கூப்பிடனும்னு ஆசை இருந்தா நீ என்னை மேடம்னு கூப்பிட்டுத்தான் ஆகனும்”
சித்தாராவும் வேதாவும் பதிலுக்கு பதில் பேச, “போதும்” என்று விக்ரம் அதட்டினான்.
“எது போதும்? இவள இப்ப வீட்ட விட்டு துரத்த முடியுமா? முடியாதா?”
“நான் ஏன்டி போகனும்? இந்த வீடு என் பேர்ல இருக்கு. நீ போடி வெளிய” என்று சித்தாரா குண்டை தூக்கிப் போட, வேதா அதிர்ந்து போய் பார்த்தாள்.
விக்ரமும் சேர்த்து அதிர்ந்தான். இப்போது தான் மெல்ல மெல்ல அவள் சொத்தை கேட்டதன் அர்த்தம் விளங்க ஆரம்பித்தது.
வெண்பனி எழுதி முடித்து விட்டு விரலில் சொடக்கெடுத்தபடி மணியை பார்த்தாள். மணி பத்தரை. எழுதி முடித்த அத்தியாயத்தை பிழைத்திருத்தம் செய்பவருக்கு அனுப்பி வைத்து விட்டு, கதையின் விமர்சனப்பகுதிக்குள் நுழைந்தாள்.
கலவையான விமர்சனங்கள். எதிர்மறை விமர்சனங்கள் எல்லாம் இல்லை. ஆனாலும் பிடித்தமும் குழப்பமுமாக பல வகைப்பட்ட கருத்துக்களை பொறுமையாக வாசித்து, ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடிக்கும் போது கொட்டாவி வந்தது. கைமறைவில் கொட்டாவி விட்டு விட்டு, கருத்தை மூடி விட்டு வெளியே வந்தாள்.
அப்போது கண்ணில் பட்டது அந்தக்கதை. எடுத்துப்பார்த்தாள். மேலோட்டமாகபடித்தவளுக்கு சிரிப்பு வந்தது.
நாயகி பல சட்ட திட்டங்களோடு நாயகனின் வீட்டுக்கு சென்று சேர்கிறாள். உள்ளே வந்ததும் ஆளாளுக்கு அவளை துரத்துகின்றனர். அவளுக்கு அவமானமாக இருக்கிறது. நாயகன் எவ்வளவு தான் அவளுக்கு சாதகமாக பேசி மற்றவர்களோடு சண்டை போட்டாலும், நாயகிக்கு அழுகை வந்து விடுகிறது.
அதுவும் தன் பிள்ளையின் பிறப்பை சந்தேகப்பட்டதும் இதயத்தை பிடித்துக் கொண்டு ஒரு அத்தியாயம் முழுவதும் நின்றிருந்தாள். வர்ணனைகள் ஏராளமாக இருந்தது.
சலிப்போடு தலையசைத்து விட்டு அடுத்த பகுதியை பார்த்தாள். ஊர் திட்டியதற்கு நாயகனை அந்த நாயகி பாடாய் படுத்துவது போல் இருந்தது.
“இங்க நம்ம ஆளு இருந்தா என்ன செய்வா? அடுத்த எபிசோட்க்கு இதான் கண்டென்ட். உஃப்.. ஒரு லாஜிக் இல்லாத கதைய எழுதுறது எவ்வளவு பெரிய கஷ்டம்டா சாமி. இந்த மாதிரி லாஜிக்கே இல்லாத சீன வச்சு அப்புறம் அதுக்கு லாஜிக்கோட மாத்தியோசிக்கிற ஹீரோயின எழுதி… தேடிப்பிடிச்சு இந்த கான்ஸப்ட் எடுத்தேன்ல? எனக்கு தேவை தான்” என்று சிரித்துக் கொண்டே எழுந்தாள்.
மனதில் அடுத்த அத்தியாமும், சித்தாரா அதற்கு எப்படி நடந்து கொள்வாள் என்ற யோசனையும் ஓட ஆரம்பித்தது.
தொடரும்.
