ராஜா ராணி 4
![]()
மாலை நேரம், காற்று முகத்தில் பட்டு முடியை கலைத்து விளையாடிக் கொண்டு இருக்க அதை ஒரு கையால் பின்னால் தள்ளி விட்டாள் அஸ்வினி. மீண்டும் மீண்டும் அது முகத்தில் வந்து விழ தன் துப்பட்டாவை எடுத்து தலையில் போட்டு சுற்றிக் கொண்டாள். எவ்வளவு நேரம் அங்கேயே அமர்ந்து இருப்பது என்று தோன்ற மெதுவாக தன் ஸ்கூட்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து அதை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். மாலை விடுதி செல்ல பிடிக்காமல் பீச்சில் சில மணி நேரம் அமர்ந்து இருந்துவிட்டு கிளம்புவது அஸ்வினியின் வழக்கம். மெதுவாகவே ஸ்கூட்டியில் விடுதி வந்து சேர்ந்தாள். தன் அறையில் நுழைந்தவள் தன்னுடன் அறையை பகிர்ந்து கொள்பளை காணாமல் தேடினாள். எப்போதும் அவளுக்கு முன்பே வந்து அமர்ந்து இருப்பவளை இன்று காணாமல் தேடினாள் அவ்வளவே. மத்தபடி அவளிடம் அஸ்வினி அதிகமாக பேசியது கிடையாது. அந்த பெண் தானாக வந்து பேசினாலும் சிறு புன்னகை அல்லது ஆம் இல்லை அதோடு முடித்துக் கொள்வாள். முகம் கழுவி வந்தவளின் போன் செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பியது. அதில் அவள் கேட்ட விவரங்கள் வந்து இருந்தது.
திருப்புகழின் வழக்கை நாளை மதன் என்ற காவல் அதிகாரியின் கீழ் கொண்டு செல்லபடுவதாக வந்து இருந்தது. யார் அந்த மதன் என்று சில பல ஆராய்ச்சிகளில் அவனை பற்றி அறிந்து கொண்டு போனை ஓரமாக வைத்தாள்.
கையில் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள் முன் தாரணி வந்து நின்றாள். அஸ்வினியுடன் அறையை பகிர்ந்து கொள்பவள். சிறிய டப்பாவை அஸ்வினி யின் முன் நீட்டியபடி நிற்க அஸ்வினி அவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். “உனக்கு தான் பிடி” என்று அவளின் கையில் திணித்து விட்டு மீண்டும் அறையை விட்டு வெளியேறி விட்டாள். கையில் இருந்த புத்தகங்களை ஓரமாக வைத்து விட்டு டப்பாவை திறந்து பார்த்தாள். மணக்க மணக்க வீட்டில் செய்யப்பட்ட பால்கோவா அதில் இருக்க அஸ்வினி க்கு தொண்டை அடைத்தது. அதை மூடி ஒரு ஓரம் வைத்தவள் தலையணையில் குப்புற படுத்துக் கொண்டாள். கண்ணீர் ஆறாக பெருக பழைய நினைவு படமாக மனதில் ஓடியது.
*.*.*.*
வேலை முடிந்து களைத்து வீட்டில் நூழைந்தான் ஆனந்த். “டேய் அண்ணா இங்க உட்காரேன்” என்று எங்கையோ பார்த்துக் கொண்டு கனவில் மிதக்கும் கண்களுடன் கூறினாள் அஸ்வினி. ஆனால் அவளின் கை பால்கோவாவை பிய்த்து வாயில் போடுவதை மட்டும் நிறுத்தவில்லை. “என்னாச்சு இவளுக்கு. .எங்கையோ கனவுல மிதக்குறா” என்று நினைத்தபடியே எதிரில் இருத்த சோபாவில் அமர்ந்தான். அஸ்வினியோ கனவில் மிதந்தபடி “உன்கிட்ட ஒன்னு கேக்குறேன் பதில் சொல்லு” என்று கூற “இவ என்ன கனவுலயே இருக்கா. லவ் எதுவும் வந்துருச்சா?” என்று சந்தேகம் தோன்ற “ச்சே இவ அந்த அளவு வொர்த் இல்ல” என்ற முடிவுக்கு வந்தவன் “என்னா…” என்று கேட்டான் தோரணையாக. அப்போதும் அஸ்வினி தன் கனவில் இருந்து வெளிவர வில்லை.
“கடவுள் படைப்புல மிக அற்புதமான படைப்பு எது தெரியுமா?” என்று கேட்க “இந்த பூமி அந்த வானம் பூ பறவை எல்லாம் தான்” என்று ஆனந்த் அனுபவித்து கூற “ப்ச். . தப்பு” என்று கண்ணை மூடி சொல்லி விட்டு மீண்டும் கனவில் மிதக்க “தப்பு னா நீயே சொல்லு” என்றான் . “கடவுள் படச்சதுல மிக அற்புதமான படைப்பு நான் தான் ” என்றாள். ஆனந்த கண்ணில் அனல் பறக்க ” அடியே” என்று கத்த “ப்ச் கோவத்தை குற” என்று அறிவுரை கூறிவிட்டு “இன்னொரு கேள்வி அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அஸ்வினி மீண்டும் கனவில் மிதக்க ஆனந்த் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான் . “நம்ம அம்மா வோட படைப்புல எது மிகச்சிறந்த படைப்பு தெரியுமா ?” என்று கேட்க “அதையும் நீயே சொல்லித் தொல” என்று கோபத்துடன் ஆனந்த் சொல்ல “இந்த பால்கோவா தான்” என்று கையில் இருந்த பால்கோவாவை பார்த்தபடி சொல்ல ஆனந்த் கோபத்தின் உச்சத்திற்கு சென்றான் .
தட்டில் இருந்த மொத்த பால்கோவாவையும் கையில் எடுத்தவள் “உலகத்தோட இரண்டு அற்புதங்கள ஒன்னா பார்த்து இருக்கியா. . இப்போ பாரு ” என்றவள் மொத்த பால்கோவாவையும் வாயில் அடைத்து விட்டு ஆனந்தை பார்த்து கண்ணடித்தாள். “அடிங்க ” என்று கண்ணில் கொலை வெறியோடு அஸ்வினியை அடிக்க வர அவள் எழுந்து சோபாவை சுற்றி ஓடினாள். “நீயா வந்துடு இல்ல உனக்கு தான் டேமேஜ் .களைச்சு போய் வந்தவன உட்கார வச்சு கேட்குறா பாரு கேள்வி” என்று துரத்தினான். “டேய் ஒரு ஜீ.கே பொது அறிவு சொல்லி குடுத்ததுக்கு என்ன பாராட்டாம அடிக்க வர” என்று அஸ்வின் பால்கோவாவை முழுங்கி விட்டு கேட்டுக் கொண்டே ஓட இன்னும் வேகமெடுத்தான். அவன் வேகத்தில் பயந்தவள் வேகமாக ஓடி பெற்றோரின் அறைக்குள் நுழைந்து தந்தையின் பின் ஒளிந்து கொண்டாள். அவளின் தந்தை குமரன் சிரிப்போடு இவர்களை பார்த்துக்கொண்டு இருந்தார். ஏனென்றால் இவர்கள் சற்று நேரத்திற்கு முன் பேசியது எல்லாம் அவர் காதில் நன்றாகவே விழுந்து இருந்தது.
“மரியாதையா வந்தா ஒரே அடில விட்ருவேன் இல்ல..” என்று ஆனந்த் மிரட்டிக் கொண்டு இருக்க அஸ்வினியின் கண் தந்தைக்காக தட்டில் வைக்கப்பட்டு இருந்த பால்கோவா வை வட்டமிட்டது. ஆனந்த் பேச்சை காதில் வாங்காமல் அங்கிருந்த பால்கோவை பாதி எடுத்து வாயில் போட ஆனந்த் தலையில் அடித்து கொண்டான். “ஏய் அளவா தின்னுடி. இப்பவே பூசணிக்காய் மாதிரி இருக்க. வெளியில போயிடாத எவனாவது திருஷ்டி பூசணி னு நினைச்சு தூக்கி உடச்சுட போறான் ” என்று கிண்டலடித்தான். அதற்குள் வாயில் இருந்ததை முழுங்கியவள் “பாருங்க பா….” என்று தந்தையிடம் முறையிட்டு விட்டு “உன் உடம்பெல்லாம் விசம் அதான் எவ்வளவு தின்னாலும் தேறவே மாட்டுற. அதுக்கு எதுக்கு என்ன பார்த்து கண்ணு வைக்குற ” என்று எகிறியவள் ஆனந்த பதில் பேசும் முன் தந்தையிடம் முகாரி ராகம் படித்தாள்.
இவர்கள் சண்டையை பார்த்து தலையிலடித்துக் கொண்டார் அவளின் அன்னை கௌரி. அவரை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த பால்கோவாவை எடுத்து தந்தை கொடுக்க அமர்ந்து சாப்பிட தொடங்கிவிட்டாள்..
இவையெல்லாம் கண்ணில் படமாக ஓட கண்ணீர் மேலும் பெருக்கெடுத்தது. சிறு கேவலுடன் அழுது கொண்டிருந்தவளை ஒரு கரம் அன்பாக வருடி கொடுத்தது. நிமிர்ந்து பார்க்க தாரணி தான் முதுகை வருடிக் கொண்டு இருந்தாள். தேற்றுவார் இல்லாமல் அழுது கொண்டிருந்தவளுக்கு தாரணியின் ஆறுதல் மேலும் அழுகையை கிளறி விட அவளின் கையை பிடித்துக் கொண்டு அழுது கரைந்தாள். தாரணி எதுவும் பேசவில்லை. தலையை வருடிக் கொடுத்தவாறு அமர்ந்து இருந்தாள். சிறிது நேரத்தில் அழுகை மட்டுப்பட்டு எழுந்து அமர்ந்தவளை முகம் கழுவ அழைத்து சென்றாள்.
அஸ்வினி முகம் கழுவி வந்த பின்னும் தாரணி எதுவும் கேட்கவில்லை. சாப்பிட அழைத்து சென்று வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். மீண்டும் வந்து படுக்கும் வரை எதுவும் கேட்காமல் அமைதியாகவே இருந்த தாரணியை பார்க்க அஸ்வினிக்கு ஆச்சரியமாக இருந்தது.
” ஏன் அழுதேன் னு நீ கேட்கவே இல்லையே” என்று அஸ்வினி சந்தேகமாக கேட்க “இதுல கேட்க என்ன இருக்கு.. இங்க வந்ததுல இருந்து நான் உன் வீட்டு ஆளுங்கனு சொல்லி யாரையும் பார்த்தது இல்ல. இப்ப நான் எங்க வீட்டுல இருந்து வந்த பால்கோவா வை குடுத்ததும் உன் வீட்டு நியாபகம் வந்து இருக்கும் அவ்வளவு தான்” என்று சொல்ல அஸ்வினி ஆச்சரியமாக பார்த்தாள்.
“எனக்கு யாரும் இல்ல. அப்பா அம்மா அண்ணன் எல்லாரும்….” என்று தொடங்கியவளுக்கு குரல் கமற “ச்சு… உஷ்… அழ கூடாது. தேவையான அளவு அழுது முடிச்சுட்ட. இனி தூங்கு சரியா. காலையில வேலைக்கு இப்படி அழுதபடி போன ஜட்ஜ் இந்த பொண்ணு அழுகுதே னு உனக்கு சாதகமா தீர்ப்பு எழுதிட போறார். அப்புறம் வக்கீல் எல்லாம் அழுது சாதிச்சுட போறாங்க” என்று கேலி பேசியவாறு அஸ்வினிக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.
வாங்கி குடித்தவள் சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு நிம்மதியாக உறங்கி போனாள். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு துணை கிடைத்த நிம்மதி அவள் முகத்தில். .
*.*.*.*.*.*.
அழகான விடியல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. பொழுது புலர்ந்தும் புலராத கருக்கல் நேரம். ஊட்டி ரோஜாக்கள் பனியில் குளித்து பூத்துக்குலுங்க அதை ரசித்தும் ரசிக்காமலும் ஏதோ ஒரு மன நிலையில் ராம் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தான். இன்றைய நாள் அவனுக்கு எவ்வாறு விடிந்தது என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது. எழுந்தததில் இருந்து அவனுக்கு ஏனோ யுவாராணியின் நினைவுகள் . எதனால் என்று தெரியவில்லை. இதே தோட்டத்தில் அவளுடன் சேர்ந்து பல முறை நடை பயிற்சி மேற்கொண்டு இருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொரு பூவையும் அவள் ரசிப்பதை பார்த்து இருக்கிறான்.
இத்தனை நாள் இல்லாமல் இன்று ஏன் அவளின் நியாபகங்கள்.. கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அதே மன நினையில் நடந்து கொண்டிருந்தவன் எதிரில் தந்தை தன்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு செல்வதை கவனிக்க தவறினான். சிறிது நேரத்தில் தன்னுடன் இன்னொரு ஜோடி கால்கள் நடந்து வருவது தெரிய சட்டென நின்று பார்க்க ராதா ரவி நடந்து கொண்டிருந்தார். ஏனோ மனம் ஏமாற்றமடைந்த உணர்வு. அது எதனால் என்று யோசிக்கவில்லை. யோசிக்க பிடிக்கவில்லை. அப்போது தான் தந்தையின் வித்தியாசமான பார்வையை உணர்ந்தவன் ” என்ன பா அப்படி பார்க்குறீங்க? ” என்று கேட்ட மகனை இன்னும் ஆழ்ந்து பார்த்தார் ராதா.
” உனக்கு தான் எதோ ஆயிடுச்சு. அதான் என்ன ஆச்சு னு பார்க்குறேன்” என்று ராதா கூற ” எனக்கா?” என்று கேட்டவன் ” நல்லா தான உங்க முன்னாடி நிக்குறேன்” என்று சமாளித்தான். அவனுக்கே தெரியும் தான் சரி இல்லை என்று. அதை தந்தை கண்டு பிடிக்கும் படி நடந்து கொண்டது தான் அவனுக்கு சங்கடமாக இருந்தது. “எப்பவும் மார்னிங் என்ன பார்த்தவுடனே விஸ் பண்ணுடுவ. இப்ப வர பண்ணலயே அப்புறம் எப்படி நினைக்குறது?” அவர் கேட்டு விட்டு நடையை தொடங்க ராம் தன்னைத்தானே திட்டி விட்டு அவருடன் சேர்ந்து நடந்தான். ” எதையோ யோசிச்சுட்டு இருந்தேன் பா அதான்” என்று கூறி விட்டு அத்தோடு நடையை முடித்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டான். இன்னும் இருந்தால் தந்தை கேட்கும் கேள்விக்கு பதில் அவனால் சொல்ல முடியாது. விறுவிறுவென தன் அறைக்குள் சென்றவன் தன் டீ சர்ட்டை கழட்டி எறிந்தான். பின் கழுத்தை அழுந்த தேய்த்து கொண்டவன் “இதென்ன அவ நினைப்புல எல்லாம் மறக்குறோம். சொன்னது என்ன இப்போ நடக்குறது என்ன ச்சே” என்றவன் கழட்டி போட்ட டீசர்ட்டை காலால் உதைத்து விட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
நடை பயிற்சியின் பின் செய்யும் உடற்பயிற்சியை மறந்து…. முடியை இரண்டு கையால் கோதியபடி நிற்க வெதுவெதுப்பான நீர் அவன் உடலை தழுவிபடி இறங்கி ஓடியது. வெகுநேரம் அப்படியே நின்றவன் ஒரு வழியாக குளித்து முடித்து வெளியில் வந்தான்.
வெற்று மார்புடன் வெறும் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிய படி கண்ணாடி முன் நின்று இருந்தவனுக்கு மீண்டும் யுவா வின் நினைவு. தன்னை இதே கோலத்தில் பார்த்து அவள் வெட்கப்பட்டு ஓடியது அவனுக்கு நன்றாக நியாபகம் வந்தது.
மீண்டும் மீண்டும் தோன்றும் அவள் நினைவை கட்டுக்குள் கொண்டு வர படாத பாடு பட்டான். ஒருவழியாக மனம் ஒரு நிலை பெற அலுவலகம் கிளம்பிச் சென்றான். அலுவலகத்தில் உள்ளே நுழைந்தவன் தன் இருப்பிடம் சென்று அமர “குட் மார்னிங் பாஸ்” என்றபடி வந்து நின்றான் சாஸ்வத் . ராமின் பி.ஏ .
“குட் மார்னிங்” என்று ராம் பதில் சொல்ல சாஸ்வத் அன்றைய வேலைகளை எடுத்து கூற ஆரம்பித்தான். இன்று அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் கடிதம் தேவையான கோப்புகள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கப்பட்டு இருக்க அதை ராம் பார்வையிட்ட படி கேட்டுக் கொண்டிருந்தான். தீடீரென எதோ தோன்ற மேசையின் மேல் இருந்த நாள் காட்டியை பார்க்க அவனுக்கு யுவராணியின் நியாபகத்திற்கான காரணங்கள் புரிந்து போனது.
தொடர்ந்து வேலைகளை சொல்லிக் கொண்டு இருந்த சாஸ்வத்தை கை காட்டி நிறுத்தினான். “இன்னைக்கு ஈவ்னிங் எந்த மீட்டிங் இருந்தாலும் கேன்சல் பண்ணு” என்று ராம் கூற சாஸ்வத் அதிர்ச்சியாக பார்த்தான். ஏனென்றால் இதுவரை ராம் எந்த ஒரு கூட்டத்தையும் தானாக ரத்து செய்தது இல்லை. தன்னால் மற்றவர்கள் வேலை கெடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். தவிர்க்க முடியாத காரணமாக இருந்தாலும் தனக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பி வைப்பான். ராமின் பலத்திற்க்கு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள். இருந்தும் அவன் வேலையில் சரியாக இருப்பான்.
சாஸ்வத் வேலையில் சேர்ந்து இந்த ஆறுவருடத்தில் நடக்காத ஒன்றை கூறினால் பாவம் அவனுக்கு புரியவே நேரம் பிடித்தது. அதிர்ந்து போய் அமர்ந்து இருந்தவனை பார்த்த ராம் “சாஸ்வத்” என்று அழுத்தமாக அழைக்க “எஸ் பாஸ்” என்று சட்டென சுய நினைவை அடைந்தான். “போய் வேலைய பாரு. கேன்சல் ஆன மீட்டிங் பத்தி எல்லோருக்கும் சொல்லிடு” என்றவன் தன் வேலையில் மூழ்கி போனான். இல்லை மூழ்கடித்து கொண்டான்.
ராமின் நிலைக்கு சிறிதும் குறைந்ததல்ல யுவராணியின் நிலை. படுக்கையில் இருந்து எழும் போதே சோர்வு வந்து அவளை தொற்றிக் கொண்டது. ராமை போல் காரணம் தெரியாது தவிக்க வில்லை அவள். அவளுக்கு நன்றாக தெரியும். ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் தான் ராமை முதன் முதலாக நிச்சயதார்த்த மேடையில் பார்த்தாள். எத்தனை கம்பீரமாக நின்று இருந்தார். முகமும் உடலும் செதுக்கி வைத்த சிலை போல. ஆனால் சிலைக்கு சிரிக்க தெரியுமா என்ன. ராம் புன்னகையுடன் நின்று இருந்தாரே. பெற்றோர்கள் தேர்வு என்பதையும் மீறி அப்போது தான் இவர் தனக்கு கணவனாக போகிறவர் என்ற எண்ணம் யுவா வின் மனதில் தோன்றியது. ஆனால் அடுத்த வருடம் அதே நாள் இப்படி தனித் தனியாக பிரிந்து இருப்போம் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. கணவனாக வந்தவர் பொய்த்து போக வேண்டுமா. அவர் நல்ல மகன் . அருமையான சகோதரன். ஆனால் நல்ல கணவனாக இல்லாமல் போனாரே. யுவா விற்கு வருத்தம் தான் மிஞ்சியது. இன்னும் யுவா தான் செய்த தவறை உணரவில்லை. உணரும் நாளும் உணர்த்தபடும் நாளும் வெகு விரைவில் வரும். தடுமாறிய மனதை அடக்கி அலுவலகம் கிளம்பினாள்.
உணவு மேசையில் சோர்ந்த முகத்துடன் அமர்ந்து இருக்கு மகளை எடை போட்ட படி வந்து அமர்ந்தார் சீதாராமன். அருகில் வந்த அமர்ந்தவரிடம் எதோ பொதுவாக பேசிவிட்டு சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டாள். தன் காரை நோக்கி நடந்தவள் கைபேசியின் ஒலியில அதை எடுத்து பார்க்க அதில் வந்து இருந்த செய்தி யுவா வின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
