ராஜா ராணி 5

Loading

காதை கிழிக்கும் சத்தம் ஆனால் யாரும் அந்த சத்தத்தை வெறுத்ததாக தெரியவில்லை. பெரும் எதிர்பார்ப்புடன் நின்று இருந்தனர். சென்னை மாநகரில் வந்து இறங்கிய அந்த விமானத்தை அதில் வந்து கொண்டிருப்பவர்களின் உறவினர்கள் ஆர்வமாய் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது தான் அங்கு வந்து நின்ற யுவா கார் சாவியை விரலில் சுழற்றியடி கண்களால் அவனை தேடிக்கொண்டு இருந்தாள். தன் கைகடிகாரத்தை குனிந்து பார்த்தவள் அருகில் வந்து நின்ற கால்களை பார்த்து விட்டு நிமிர்ந்தாள் . “ஹாய் அண்ணி” என்று ரகு புன்னகை முகமாக கூற “ஹாய் கொழுந்து. வெல்கம் டூ இந்தியா ” என்று அவளும் புன்னகை யுடன் வரவேற்றாள். “என்ன அண்ணி வேலைய விட்டுட்டு வந்துட்டீங்களா ?” என்று கேட்ட ரகு தன் பொருட்களை நகர்த்தியபடி தானும் நடந்தான்.

“என்ன பண்ண இந்தியா வந்ததும் என்ன தான் முதல்ல பார்க்கனும் னு ஒருத்தருக்கு ஆசையாம்.. பட்சி கூவுச்சு. சரி னு கிளம்பி வந்தேன்” என்று யுவா கூற ரகு அட்டகாசமாக சிரித்தான்.

அவன் சிரிப்பில் திரும்பி பார்த்த இளம்பெண்கள் ஒரு ஏக்க பெருமூச்சோடு நடக்க யுவா விற்கு சிரிப்பு வந்தது .

ரகு நல்ல வெண்மை நிறம். அறடிக்கும் குறைவில்லாத உயரம். உடற்பயிற்சியில் பெற்ற செதுக்கிய உடல். சிரிக்கும் போது சேர்ந்தே சிரிக்கும் கண்கள். க்ளீன் சேவ் செய்து அசரடிக்கும் அழகாக இருப்பவன்.

அவனை திரும்பி பார்க்காத பெண்கள் கிடையாது. ஆனால் அவனும் அல்லவா திரும்பி பார்க்க வேண்டும். யுவா சிரிப்பதை பார்த்தவன் “என்ன அண்ணி ? என்ன பார்த்து சிரிக்குற போல இருக்கு?” என்று கேட்டான். யுவா, “ரொம்ப சூடா இருக்குல கொழுந்து ஏர்போர்ட் ?” என்று கேட்க “ஆமா அண்ணி சுவிஸ் க்கு இங்க ஹாட் அதிகம் தான் . ஊட்டியில இருக்காது ன்னு நினைக்குறேன்” என்று ரகு பதில் கூற மீண்டும் சிரித்தாள்.

“அதில்ல கொழுந்து நேத்து வர நல்லா தான் இருந்துச்சு. இப்போ சுத்தி பாரு ….. பொண்ணுங்க உன்ன பார்த்து விட்ட மூச்சுல தான் அனல் பறக்குது ” என்றவள் வாயில் கைவைத்து சிரிக்க ரகு சிரிப்போடு ” நாலு வருசத்துக்கு முன்னாடி இங்க இருந்து தான் அண்ணி போனேன். இப்ப மட்டும் என்ன ஸ்பெஷல்?. சும்மா ஓட்டாதிங்க ” என்றவன் கார் பார்க்கிங்கில் வந்து  நின்றான்.

யுவா சிரிப்படன் தன் காரை காட்ட ” வாவ் அண்ணி வேய்ரான் …. அண்ணன் கிட்ட வாங்க சொன்னேன்… ஒரு முறை தான் முறைச்சார். அடுத்து வாய திறக்கவேயில்ல ” என்று சொன்னபடி காரை நோக்கி நடந்தான்.

“ஏன் உங்க அண்ணன் முறைச்சார்?” என்று யுவா கேட்க “உங்க அண்ணன்” என்பதை ரகு மனதில் குறித்துக்கொண்டான்.

“அது ஒன்னும் இல்ல அண்ணி. உங்க கொழுந்து கை பட்டா மட்டும் இந்த காருங்க எல்லாம் பழி வாங்கிடுதுங்க.” என்று சோகமாக கூறிய ரகுவை யுவா புரியாமல் பார்த்தாள். “எங்கையாவது போய் இடுச்சுக்குது” என்று விளக்க அடப்பாவி என்பது போல் பார்த்து வைத்தாள்.

“நான் டிரைவ் பண்ணுறேன் அண்ணி” என்று ஓட்டுனர் இருக்கையில் அமர போன யுவாவிடம் கூற அவள் , ” ஆணிய புடுங்க வேணாம். உட்கார்” என்று தலைக்கு மேல் கைகுவித்து கூறினாள். “ஒரு கார் ரேஸரை நம்பி கார தரமாட்டுறாங்க பா” என்று புலம்பியபடி அமர்ந்தான். “கொழுந்து இது உங்க ரேஸ் நடக்குற இடம் இல்ல. சிட்டி. இங்க கார பார்த்து தான் ஓட்டனும். உங்க வேகம் இங்க செல்லாது” என்ற படி காரை இயக்கினாள்.

*.*.*.*.*.*.

பலருக்கு குழப்பமாக விடிந்த காலை அஸ்வினிக்கு புத்துணர்ச்சியாக விடிந்தது. இன்று ஏதோ வாழ்க்கை தனக்கு எதுவோ வைத்து காத்திருப்பது போல் ஒரு உணர்வு. ஆனால் எதுவென்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு பின் அவள் முகத்தில் ஒரு மலர்ச்சியும் தெளிவும் இருந்தது. நேற்று இரவு துக்கத்தை தாரணியிடம் சொல்லி அழுததால் இருக்குமோ என்று யோசித்தபடி தன் வேலைக்கு கிளம்பினாள். தன் தோள் பையை மாட்டிக்கொண்டு வெளியில் வந்தவளை தடுத்து நிறுத்திய தாரணி “இந்தா பிடி” என்று மதிய உணவை கையில் திணித்தவள் அதனுடன் ஒரு சின்னடப்பாவை கொடுத்தாள்.

“அம்மா குடுத்துட்டு போன பக்கோடா.. நான் இருக்க சைஸ்க்கு இதெல்லாம் வேணாம் னு சொன்ன கேட்காம கொடுத்துட்டு போறாங்க. வேஸ்ட் ஆகிடாம சாப்பிட்டுடு. வேஸ்ட் ஆக கூடாது னு தான் கொடுக்குறேன் சரியா” என்றவள் அஸ்வினியின் பதிலுக்கு நிற்காமல் கிளம்பிவிட்டாள்.

ஐ.டி ஃபீல்ட்டில் சிறந்து விளங்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்பவள் தாரணி. அன்பானவள். இவ்வளவு மட்டும் தான் தாரணியை பற்றி அஸ்வினிக்கு தெரியும். சிறு புன்னகையுடன் கையில் இருந்த உணவுகளை தோள் பைக்குள் அடைத்தவள் தன் ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள்.

அஸ்வினி நேராக சென்று நின்ற இடம் கமிஷனர் அலுவலகம். உள்ளோ சென்றவள் “ஏ.சி.பி. மதன் எங்க இருப்பாங்க ?” என்று விசாரிக்க மதன் வர தாமதமாகும் என்று தகவல் கூறியவர் அஸ்வினியை காத்திருக்க சொன்னார். அங்கிருந்த மர பெஞ்சில் அமர போனவளை பார்த்த ஒரு காவல் அதிகாரி “நீங்க கே.பி.பி சாரோட ஜூனியர் அஸ்வினி தானே” என்று கேட்க “எஸ் ” என்ற படி அமர போனவள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள். “மதன் சார் உங்கள உள்ள வெயிட் பண்ண சொன்னார். வாங்க” என்று அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தவன்.. “இன்னும் பத்து நிமிசத்தில வந்துடுவாங்க” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். அஸ்வினி நாற்காலியில் அமர்ந்து அந்த அறையை கண்களால் அலசிக் கொண்டிருந்தாள். சரியாக பத்து நிமிடம் கடந்த வேளையில் மதன் தன் அறையில் நுழைந்தான். “ஹாலோ மிஸ். அஸ்வினி ” என்று மதன் கூற “ஹலோ சார்” என்று அஸ்வினியும் எழுந்து நின்றாள்.

“உட்காருங்க மேடம்” என்றவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். மதன் உள்ளே நுழையும் போதே அஸ்வினி அவளை எடை போட்டு விட்டாள். அளவான உயரம் கம்பீரமான உடல் காவல் துறைக்கு மட்டுமே உண்டான பிரத்தியேகமான அளவில் முடியை வெட்டி இருந்தான். புன்னகை ஒட்டி இருக்கும் முகம் கண்களில் கூர்மை என அக்மார்க் காவல் அதிகாரி.

“சொல்லுங்க மேடம் . எதுக்கு என்ன பார்க்கனும் னு கேட்டு இருந்தீங்க” என்று மதன் விசயத்தை ஆரம்பிக்க “திருக்குமறன் மர்டர் கேஸ் உங்க கஸ்டடிக்கு வரதா கேள்வி பட்டேன். அதான் உங்கள பார்த்து சில உதவிகள் கேட்டுட்டு போகலாம் னு வந்தேன்” என்று கம்பீரமாக ஒலிக்கும் அஸ்வினி குரல் மதனுக்கு பிடித்து இருந்தது. “நீங்க ஏன் அந்த கேஸ பத்தி தெரிஞ்சுக்கனும்” என்று மதன் கேட்க “நான் அந்த கேஸ்ல ஆஜராகுறேன் ஏ.சி.பி சார்” என்று புன்னகையுடன் அஸ்வினி கூறினாள்.

மதன் அதிர்ச்சி அடைந்தான். “திருப்புகழ் பக்கமா ?” என்று கேட்டு மீண்டும் உறுதிபடுத்திக் கொண்டவனுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது. அவனுக்கு தான் தெரியுமே கே.பி.பி ஒரு வழக்கை எடுக்கிறார் என்றால் அதில் உண்மை மட்டுமே இருக்கும். வெற்றியும் உறுதி என்று.

“இந்த கேஸ கே.பி.பி சார்…” என்றவனை இடைமறித்து “இல்ல ஏ.சி.பி சார் இதுல நான் மட்டும் தான் ஆஜர் ஆகுறேன். அண்ட் இதுல முழுக்க முழுக்க நான் மட்டும் தான் இருப்பேன்.” என்று சொல்ல இப்போதும் அவனுக்கு ஆச்சரியம் குறையவில்லை.

அஸ்வினியை பற்றியும் அவனுக்கு தெரியும். இது அவளின் நான்காவது வழக்கு. முதல் மூன்றுமே வெற்றி தான். இம்முறையும் வெற்றியடைவாள் என்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை. ஆனால் அவன் கடந்த ஒரு வார விசாரிப்பில் திருப்புகழ் தான் கொலை செய்தான் என்பதற்கு பல ஆதாரங்கள் இருந்தன. அதை அஸ்வினி நம்பாமல் கேசை கையில் எடுத்து இருக்கிறாள் என்றால் எதோ தான் விட்டு விட்டது போல உணர்ந்தான்.

“தப்பா எடுத்துக்கலனா இந்த கேசை நீங்க எந்த அடிப்படையில எடுத்தீங்க னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க “அதெல்லாம் உங்க போலிஸ் மூளைக்கு புரியாது ஏ.சி.பி சார். விட்டுடுங்க” என்று புன்னகை மாறாமல் கூறினாள்.

“ஓ.. போலிஸ்க்கு புரியாதது எல்லாம் வக்கீலுக்கு புரியும் னா பேசாம போலிஸ் ஸ்டேஷன இழுத்து மூடிட்டு போயிடலாம் போலயே” என்று வேறு வக்கீலாக இருந்திருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பான். அஸ்வினியிடம் அப்படி கேட்க தோன்றவில்லை. அவளின் திறமை தான் அதற்கு காரணம். எந்த இடத்தில் விட்டோம் என்றே யோசித்துக் கொண்டிருந்தான்.

உண்மையின் அடிப்படையிலும் பாசத்தின் அடிப்படையிலும் இந்த வழக்கை எடுத்தேன் என்று சொன்னால் நிச்சயமாக ஒரு நக்கலான பார்வை தான் மதன் புறம் இருந்து வரும் . அதனால் அவள் அதை சொல்லவில்லை.

“சரி என்ன ஹெல்ப் க்கு என்ன பார்க்க வந்திங்க?” என்று மதன் கேட்க “கொலை நடந்த இடத்தை நான் ஒரு தடவை பார்க்கனும். அதுக்கு தான் ” என்று கூற மதன் ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு ” வாங்க பார்த்துடலாம் ” என்று கூற அஸ்வினியும் எழுந்தாள்.

மதன் தன் காவல்துறை வாகனத்தில் வர அஸ்வினி தன் ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தாள். திருக்குமறன் வீட்டின் முன் வந்து நின்றனர். அங்கு காவலுக்கு இரண்டு பேர் நின்று இருக்க மதன் வீட்டை திறக்க சொன்னான். சாவியை பெற்று வீட்டை திறந்து விட்டவர் மீண்டும் காவலுக்கு நிற்க மதனும் அஸ்வினியும் மட்டுமே உள்ளே நுழைந்தனர்.

அந்த வீட்டை கண்களால் அலசியபடி “நீங்க நேரடியா இந்த இடத்தை சோதனை போட்டீங்களா ஏசிபி சார்?” என்று அஸ்வினி கேட்க “இல்ல மேடம் இப்போ தான் வரேன்” என்று சொன்ன படி அவனும் மூலை முடுக்குகளை விடாமல் ஆராய்ந்தாள். திருக்குமறன் உடல் கிடந்த இடத்தில் இருவரும் நின்றனர். அஸ்வினி அந்த இடத்தில் அமர்ந்து எதையோ உற்று பார்த்துக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த சோபாவின் அடியில் குனிந்தவள் “ஒரு குச்சி கிடைக்குமா சார் . இதுக்கு அடியில போகுற மாதிரி” என்று கேட்க மதன் வெளியில் இருந்த காவலர்களை அழைத்தான். அவன் திரும்பிய ஒரு நொடியை பயன்படுத்தி கொண்டவள் எதையோ எடுத்து பத்திரபடுத்திக் கொண்டாள். பிறகு பழையபடி குனிந்து இருக்க ஒரு சிறு குச்சியை அவளிடம் மதன் கொடுக்க அதை வாங்கிக் கொண்டாள். மதனும் அஸ்வினிக்கு எதிராக அமர்ந்து குனிந்து பார்க்க குச்சியால் சோபா அடியில் இருந்து எதையோ தள்ளி விட்டாள். சின்ன காகிதம் ஒன்று கசங்கி கிடந்தது. வெயிலில் உருண்டு வந்த காகிதத்தை கையில் எடுத்தவள் எழுந்து நின்றாள். அதை பிரித்து பார்த்தனர். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு . “இத எப்படி சார் உங்க டிப்பார்ட்மண்ட் மிஸ் பண்ணுச்சு.” என்று கேட்டு திருப்பி திருப்பி பார்த்தவள் “இது எனக்கு கிடைச்சு இருக்கு சோ இத நானே கேசுக்காக வச்சுக்குறதா? இல்ல உங்களுக்கு கொடுக்குறாதா?” என்று மதனை பார்த்து கேட்க “கொலை நடந்த இடத்துல இருந்து எது கிடைச்சாலும் போலிஸ் கிட்ட ஒப்படைக்கனும் மேடம்” என்று மதன் புன்னகையுடன் கூறினான்.

“கண்டிப்பா… இத கொடுத்துடுறேன் அதுக்கு முன்னாடி எனக்கு இன்னொரு ஹெல்ப் வேணுமே” என்று கேட்க “என்ன” என்பது போல் மதன் தன் ஒற்றை புருவத்தை மேலேற்றினான். “திருக்குமறன் இறப்புல சம்மந்தப்பட்ட எதுவும் அவர் லாப்டப் ல கிடைச்சா நீங்க எனக்கு இன்ஃபார்ம் பண்ணனும் ” என்று புன்னகையுடன் கேட்க மதன் புன்னகை நன்றாக விரிந்தது. “அதெல்லாம் போலிஸ் ரகசியம் னு தெரிஞ்சும் கேட்குறீங்களே” என்று மதன் கேட்க “ஹோ.. கமான் ஏசிபி சார் . இங்க இது கிடைக்கும் னு தெரியாது. ஆனா கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கனும் சார். அந்த லாப்டப் ல எதுவும் இருந்தா மட்டும் சொல்லுங்க போதும். அப்படி எதுவும் இல்லனா ஓகே விட்ருங்க. டீல்? ” என்று அஸ்வினி கேட்டாள்.

“சரி ஓகே இருந்தது னா இருக்கு னு உங்களுக்கு நான் சொல்லுறேன்” என்று வார்த்தைகளை நிதானமாக கோர்த்து சொல்ல அதில் இருக்கும் அர்த்தம் தெளிவாக அஸ்வினிக்கு புரிந்தது. இருந்தாலும் புன்னகை மாறாமல் அந்த பயண சீட்டை அவனிடம் ஒப்படைத்தாள்.

இருவரும் சேர்ந்து அந்த வீட்டை மேலும் அலசி விட்டு வெளியேறினர். “ஓகே ஏசிபி சார்.  இனி கோர்ட் ல பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அஸ்வினி தன் ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டாள்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.

காதல் …… கிடைத்தவர்களையும் புலம்ப வைத்து விடும் . கிடைக்காதவர்களையும் புலம்ப வைத்து விடும். கிடைத்தும் கிடைக்காமலும் இருக்கும் ஒரு தலை காதல் எல்லாம் பாடாய் படுத்திவிடும். மனதிற்கு பிடித்தவரை கண்டுபிடித்த பின் அவர்கள் மனதிலும் நாம் இருக்கிறோமா இல்லையா என்று அறியாது தவிக்கும் தருணங்கள் இளமையில் கொடுமையானது. வரதனின் நிலையும் அப்படி தான். பெற்றோர்கள் கவனிப்பு இல்லை என்றாலும் நல்ல குணங்களை பெற்றே வளர்ந்தான். அவன் அறிந்த பெண்கள் அவன் அன்னை ரூபா யுவராணி மற்றும் யுவராணி யின் அன்னை சரண்யா.

சிறுவயது முதல் இவர்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் முதன் முதலாக இன்னொரு பெண்ணிடம் மனதை பறி கொடுத்தான். “அனிதா “யுவராணி யின் பி.ஏ. அமைதியாக வலம் வரும் அவளை பார்க்க பார்க்க வரதனின் மனம் காதலில் விழுந்தது. ஒரே உறவான தந்தை இறந்த போதும் அதை தாங்கி கொண்டு அவள் வலம் வருவது வரதன் மனதை அசைத்து பார்த்தது. வரதனுக்கு தன் அன்னையை விட சரண்யாவின் மீது தான் அதிக பாசம். அவரின் அமைதியும் ஆர்பாட்டமில்லாத கம்பீரமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

தனக்கு வர போகும் மனைவி சரண்யா வை போல தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். யுவராணி யும் ரூபா வும் வேறு ரகம். ஆளுமை நிறைந்த குணம் கொண்டவர்கள். சரண்யா அப்படி இல்லை. அதனாலேயே சரண்யாவின் பின்னால் வால் பிடித்துக் கொண்டே அலைந்து கொண்டிருப்பான்.

அவரை போலவே அனிதாவை பார்க்கவும் மனதை பறி கொடுத்து விட்டான். ஆனால் அனிதா இது வரை ஒரு பார்வை கூட அவனை பார்த்தது இல்லை. எதுவும் பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிடையாது. அதனால் வரதனின் காதல் ஆரம்பித்த இடத்திலேயே நின்று நகராமல் அடம் பிடித்து கொண்டு இருந்தது. அனிதாவை நினைத்தவாரே அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தவனுக்கு யுவராணியிடம் இருந்து அழைப்பு வந்தது.

*.*.*.*.*.*.

அனிதா விற்கு ஒரு வேலையும் உருப்படியாக ஓடவில்லை. வரதன் வந்து யுவராணியின் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டான். யுவா தான் வர நேரமாகும் என்று சொல்லிவிட்டு உன் வேலைகளை முடித்து விட்டு தன் அலுவலகம் வந்தால் போதும் என்று காலையில் கூறிவிட்டாள். ஆனால் வரதன் வேறு எந்த வேலையையும் பார்க்காமல் யுவாவின் அலுவலகம் வந்து அமர்ந்து கொண்டான். எல்லாம் அனிதாவை பார்க்கும் ஆர்வத்தில் தான். அவன் ஒன்றும் அனிதா விடம் பேச முயற்சிக்கவில்லை. ஆனால் அவன் இருப்பதே அனிதா விற்கு அசௌகரியமாக இருந்தது. யுவாவும் இல்லாமல் தனியாக சிக்கிக்கொண்டது போல இருந்தது.

எப்போதடா யுவா வருவாள் என்று எதிர் பார்த்து அமர்ந்து இருந்தாள். அனிதாவின் சங்கடங்களையும் தவிப்பையும் உணர்ந்தாலும் வரதன் காட்டிக்கொள்ளவில்லை. “மிஸ் அனிதா” என்று அவன் அழைக்க அனிதாவின் உடல் தூக்கிவாரி போட்டது. உடனடியாக சரி செய்து கொண்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவள் “எஸ் சார்” என்று நிமிர்ந்து வரதன் முகம் பார்த்து கேட்டாள்.

முதன் முதலாக தனது முகத்தை பார்த்து பேசியவளை பார்க்க வரதன் மனம் சந்தோச கூத்தாடியது. அது அவன் முகத்திலும் நன்கு பிரதிபலித்தது. அதை கண்ட அனிதாவிற்கு தான் என்னவோ போல் ஆனது. ஆனால் அப்பொழுதும் தன் முகத்தில் அவள் எதையும் காட்டவில்லை.

அனிதாவின் உணர்ச்சி இல்லாத முகத்தை பார்த்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்த வரதன் “எனக்கு இந்த ஃபைல் வேணும்” என்று சில கோப்புகளை பற்றி கூறியவன் “உன் யுவா மேடம் கிட்ட கேட்டுட்டு எடுத்து குடு” என்று சொல்ல “ஓகே சார்..” என்றவள் இடத்தை விட்டு நகர்ந்தாள். “நான் உனக்கு சாரா?” என்று வரதனின் மனம் சினுங்கியது. உடனே அவன் மனசாட்சி “அடேய் இப்ப தான் உன் முகத்தையே பார்த்து இருக்கா. அதுக்குள்ள உன்ன கொஞ்சி கூப்பிடனுமா? அடங்கு” என்று ஒரு அதட்டல் போட்டது.

Leave a Reply