வரம் 12

Loading

அரசேந்திரன் வீட்டின் கதவை தட்டி விட்டு நின்றான்.

கதவை திறந்த அமுதவல்லி மகனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்க்க, “யாரு ஆண்ட்டி?” என்று கேட்டபடி வைசாலி வந்து சேர்ந்தாள்?

“என் மகன் தான்.” என்று அமுதவல்லி கிண்டலாகக் கூற, “புதுசா பார்க்குற மாதிரி பார்க்கிறீங்க?” என்று வைசாலி சிரித்தாள்.

“அவனோட ஞாபகசக்திய மனசுல மெச்சிட்டு இருக்கேன். பாரு.. வீட்ட கரெக்ட்டா கண்டு பிடிச்சு வந்துட்டான்”

வைசாலி வாயில் கைவைத்து கேலியாக சிரிக்க, அவளை முறைத்த அரசன், “வந்தவன உள்ள வானு கூப்பிடுறீங்களா? உங்களுக்கு என் மேல பாசமே இல்ல” என்று அமுதாவிடம் சண்டைக்கு நின்றான்.

“உள்ள வரலனா போலீஸ்காரன் அடி வாங்குறத ஊரே பார்க்கும். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல”

படக்கென உள்ளே வந்து கதவை வேகமாக பூட்டி விட்டான் அரசன். அவனது பாவனையில் வைசாலி வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“உனக்கு சிரிப்பா இருக்கு? உன்னை அப்புறம் கவனிக்கிறேன்” என்று மிரட்டி விட்டு அமுதாவிடம் சென்றான்.

“வரலனா ஏன் வரலனு பேசாம சண்டை போடுறீங்க. வந்தா வாசல்லயே வச்சு அடிப்பேன்னு மிரட்டுறீங்க. என்னமா பண்ணட்டும்?” என்று அப்பாவியாக அன்னையின் கையைப்பிடித்துக் கொண்டு கேட்டு வைத்தான்.

“அப்படியே என் கோபத்துக்கு பயந்துட்டு தான் மறு வேலை பார்ப்பான். விடுடா கைய. வேலை இருக்கு” என்று வேகமாக சமையலறைக்குள் சென்று விட்டார்.

வைசாலி சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அரசனை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள். அவளை பத்திரம் காட்டி விட்டு, அன்னையின் பின்னால் ஓடி விட்டான்.

வைசாலி சிரிப்போடு அவன் கொண்டு வந்திருந்த பையை தூக்கிக் கொண்டு வந்து, வீட்டு வரவேற்பு பகுதியில் இருந்த சோபாவில் வைத்தாள்.

சமையலறைக்குள் பின்னால் வந்த மகனை பார்த்து, அமுதா கிண்டலாக சிரித்தார்.

“வைசாலி அங்க இருக்கா தம்பி.. போய் அங்க பேசு..”

“ம்மா.. நான் உங்கள தான்மா பார்க்க வந்தேன்”

“இந்த பொய்யெல்லாம் என் கிட்ட சொல்லாத.. முகத்த பார்த்தாலே தெரியாது. போ போய் வந்த வேலையைப் பாரு”

“ம்மா..”

“போடா..”

“மாட்டேன்”

“போகலனா நீயே சமைச்சு வை. நான் போய் தூங்குறேன்”

“ஏன்மா கோச்சுக்கிறீங்க?”

“பின்ன? அம்மாவ பார்க்க வாடானு எவ்வளவு கூப்பிட்டேன். அப்ப எல்லாம் வேலை இருக்குனு ஓடிட்டு, வைசாலி வந்ததும் பின்னாடியே வந்து நிக்கிற.. பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டா இப்படித்தான் போல. நான் தான் மனச தேத்திக்கனும்.. ஆமா.. வைசாலி கிட்ட சொல்லிட்ட?”

“என்னத்த?”

“நான் என்ன கேட்குறேன்னு உனக்கு தெரியாது?”

“ம்ஹூம்”

“இருக்கட்டும்டா.. புகைய ரொம்ப நேரம் மூடி வைக்க முடியாது மகனே. என் கிட்ட வந்து தான் ஆகனும். பார்த்துடுறேன்”

“நான் போய் ஃப்ரஸ் ஆகுறேன்” என்று வேகமாக அன்னைக்கு பதில் சொல்ல முடியாது ஓடி விட, அமுதவல்லி சிரித்துக் கொண்டார்.

சோபாவில் அமர்ந்து வறுத்த கடலையை ஒவ்வொன்றாக சாப்பிட்டபடி, அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தாள் வைசாலி.

“ஆண்ட்டி அங்கிள் எங்க?” என்று கேட்டுக் கொண்டே அரசன் அவளருகே வந்து அமர்ந்தான்.

“மதுரை பக்கம் கிளம்பி போயிருக்காங்க.”

“நீ போகல?”

“இல்ல. நான் ரெஸ்ட்”

அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எழுந்தவன், “ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன்” என்று தன் பையோடு அறைப்பக்கம் சென்று விட்டான்.

குட்டிக்குளியல் போட்டு உடை மாற்றி கண்ணாடி முன்னால் நின்றவன், தன் முகத்தை ஆராய்ந்தான். என்றுமில்லாமல் பள்ளிச்சென மின்னியது முகம். உள்ளே இருந்த சந்தோசம் அவனது முகத்தை அவ்வளவு அழகாக காட்டியது.

“சொந்த ஊருக்கு வந்தா பளிச்சுனு ஆகிடுவாங்களோ?” என்று அவனுக்கு அவனே சப்பை கட்டு கட்டிக் கொண்டு, தலையை சீவிக் கொண்டான்.

கூடவே வைசாலியின் நினைவில் புன்னகையும் வந்தது.

மாதவன் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் கடந்து இருந்த நேரம். வைசாலியை அழைத்தான்.

“எப்படி இருக்க லாலி?”

“கடுப்புல இருக்கேன்”

“ஏன் உன் முறுக்க மத்தவங்க சாப்பிட்டுட்டாங்களா?”

“இல்ல.. அதெல்லாம் நான் பக்காவா ஒளிச்சு வச்சுட்டேன். இது வேற கடுப்பு” என்றவள் விசயத்தை விளக்கினாள்.

மாதவன் கைதாகி திருமணம் நின்றதிலிருந்து, பக்கத்து வீட்டினரின் படையெடுப்பு வைசாலியை எரிச்சல் படுத்திக் கொண்டு தான் இருந்தது.

மகள் திருமணம் நின்று போனதில், சித்ராவிற்கு முன்பே நிறைய வருத்தம் இருந்தது. அதில் தினமும் எண்ணெய் ஊற்றி எரிய வைத்துக் கொண்டே இருந்தனர் அக்கம் பக்கத்தினர்.

என்னவோ மாதவன் குற்றம் செய்வதற்கு முன்பு, இவர்களிடம் எல்லாம் சொல்லி விட்டு செய்தது போல் கேள்வியை அடுக்கினர்.

அவர்களது வேலையில், சித்ராவின் இரத்த அழுத்தம் தாறுமாறாக மாற ஆரம்பித்து விட்டது. அதை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வைசாலி தான் போராட வேண்டியிருந்தது.

அன்று வந்தவரை திட்டி துரத்தி விட்டு, சித்ராவிடம் இனி யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டளை போட்டு விட்டு அமர்ந்தாள். அந்நேரம் அரசன் பேச, மொத்தத்தையும் கொட்டி விட்டாள்.

“மனுசங்களா இவங்க? மாதவனுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து, அந்த ஏழு கோடியும் நாங்களே கொடுத்த மாதிரி பேசுதுங்க. எரிச்சலா வருது கிங். ஏன் தான் இப்படி பண்ணுறாங்களோ.. வீட்டுக்கதவ கூட பூட்டி வச்சுட்டேன். கதவ தட்டி வந்து பேசுதுங்க”

வைசாலியின் கோபம் புரிய, “நம்ம ஆளுங்கள பத்தி தெரியாதா? செஞ்சவன விட்டுட்டு மத்தவன டார்ச்சர் பண்ணுறது தான் இவங்க பழக்கமே. நீ ஆண்ட்டிய யாரு கிட்டயும் பேச விடாம பார்த்துக்க” என்று சமாதானம் செய்தான்.

“எவ்வளவு தான் தடுக்க? ஒன்னு வீட்டுக்கே வர்ராங்க.. இல்லனா போன் பண்ணி பேசுறாங்க. இதுல பெரிய கூத்து என்னனா? ஜட்ஜ் என்ன தீர்ப்பு சொல்லுவார்னு எல்லாம் கேட்குறாங்க. அது எப்படி எங்களுக்குத்தெரியும்னு கேட்டா, மறைக்கிறோமாம். எல்லாத்தையும் சொன்னா யாருக்கும் சொல்ல மாட்டாங்களாம்”

வைசாலி பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல, அரசனுக்கும் இதைக்கேட்டு எரிச்சல் வந்தது.

“எதுக்கு இப்படி மூக்க நுழைக்கிறாங்க? வேற வேலை வெட்டி இல்லையா?”

“இத தான் நானும் கேட்டேன். முகத்த திருப்பிட்டு போறாங்க. போங்கயானு துரத்திட்டு உட்கார்ந்துருக்கேன்”

“கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் அடங்கிருவாங்க விடு”

“அது வரை எங்கயாவது போகலாமானு தோனுது. இங்கயே இருந்தா அம்மாவ ஹாஸ்பிடல் அனுப்பாம ஓயமாட்டாங்க.”

அரசன் ஒரு நொடி யோசித்து விட்டு, “இதுவும் நல்ல முடிவு தான். அங்கயே இருந்து பிபி ஏத்திக்கிறதுக்கு வேற இடத்துக்கு போனா ரிலாக்ஸா தான் இருக்கும்” என்றான்.

“ம்ம்..”

“நீங்க வேணா எங்க ஊருக்கு வாங்களேன். ஒரு வாரம் தங்கிட்டு போகலாம்”

“உங்க ஊருக்கா?” என்று வைசாலி அதிர்ச்சியும் குழப்பமுமாக கேட்க, “ஆமா..” என்றான் அழுத்தமாக.

“உங்க ஊருக்கு வந்து? அங்க யாரையுமே தெரியாதே?”

“எக்ஸாட்லி.. உங்களுக்கும் அங்க யாரையும் தெரியாது. அவங்களுக்கும் உங்கள தெரியாது. இந்த பிரச்சனைய மறந்துட்டு நிம்மதியா இருக்கலாம்.”

“குட் ஐடியா தான். நான் அப்பா அம்மா கிட்ட கேட்குறேன்”

“கேட்டுட்டு கால் பண்ணு.”

“ஓகே.” என்று அழைப்பைத் துண்டித்தவள், உடனே அன்னையிடம் சென்று இருந்தாள்.

அவர் இரத்த அழுத்ததை குறைக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு படுத்திருந்தார்.

“முன்னாடி.. எப்பவாது பிபி ஏறும். இப்ப தினமும் ஏறுது. வந்தா இதெல்லாம் பேச முடியாது கிளம்புங்கனு சொல்லுறது இல்ல. உட்கார வச்சு பேசுறத எல்லாம் கேட்டுட்டு, இப்படி பிபி இழுத்து வச்சுக்கோங்க”

சித்ராவை வைசாலி திட்ட, அவர் அப்பாவியாக கணவனை பார்த்தார்.

“பாப்பா சொல்லுறதுல என்ன தப்பு? போங்கனு சொல்லாம உட்கார்ந்து கேட்டுட்டு இருக்க?” என்று ஜோதிலிங்கமும் முறைத்தார்.

“வந்தவங்கள வராதீங்கனு துரத்த எனக்குத்தெரியாது. போங்க” என்று சித்ரா முகத்தை தூக்கிக் கொண்டார்.

“எங்க கிட்ட மட்டும் கோச்சுக்கோங்க..” என்று அன்னையை முறைத்து விட்டு, “கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வரலாமாபா? இங்கயே இருந்தா இதையே பேசிட்டு இருப்போம்” என்று கேட்டாள்.

“இவ இப்படி இருக்கதுக்கு ட்ராவல் சரியா வருமாமா?”

“இங்க இருந்தா இன்னும் மோசம் தான்பா ஆகும். இங்க இருந்து போறது தான் இப்போ நல்லது”

“அப்போ எங்கயாவது கோவிலுக்கு போகலாமா?” என்று சித்ரா கேட்க, “எதுக்கு? அங்க போய் பூஜை வேண்டுதல்னு எதையாவது பண்ணிட்டு இன்னும் பிபி ஏத்திக்கிறதுக்கா?” என்று நக்கலாக கேட்டாள்.

சித்ரா மகள் முன்னால் அசடு வழிய, “எந்த கோவிலுக்கும் போறதா இல்ல. கடவுள் நம்ம கூடவே இருப்பாரு. நாம வேற இடத்துக்கு போகலாம்” என்றாள்.

“எங்க?”

“அரசனோட ஊருக்கு”

“அங்கயா?” என்று பெரியவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் குழப்பமாக கேட்டனர்.

“அங்க நமக்கு யாரையும் தெரியாதேடா.. அங்க போய் என்ன செய்ய?” சித்ரா.

“அதுக்கு தான் அங்க போகலாம்னு சொல்லுறேன். நம்ம சொந்தக்காரவங்க யாரு வீட்டுக்குப்போனாலும், இந்த பேச்சு ஓயாது. நம்மல தெரியாத இடத்துக்கு தான் போகனும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும்”

“சரி.. அங்க போய்? எங்க தங்குறது?”

“அரசன் வீட்டுல தான்”

“அவங்க வீட்டுல?” என்று பெரியவர்கள் யோசித்தனர்.

“எப்படி பாப்பா? அவங்க பழக்கமா இருந்தாலும் இப்படிப்போய் தங்க முடியுமா?” என்று ஜோதிலிங்கம் இழுக்க, “கூப்பிட்டதே அரசன் தான். அமைதியா கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம்” என்றாள்.

அங்கு சென்று தங்குவதன் சாதக பாதகங்களை பேசிக் கொண்டிருக்க, அரசன் அழைத்து விட்டான்.

“சொல்லுங்க கிங்”

“அம்மா அங்கிள் ஆண்டிகிட்ட பேசனுமாம் லாலி. கான்ஃபர்ண்ஸ்ல இருக்காங்க”

“இங்க பக்கத்துல தான் இருக்காங்க” என்று ஸ்பீக்கரில் போட்டாள்.

அதன் பிறகு, அமுதவல்லியின் பேச்சு அவர்களை சுலபமாக சம்மதிக்க வைத்தது. இரண்டு நாட்கள் கழித்து அரசேந்திரனின் சொந்த ஊர் வந்து சேர்ந்து விட்டனர்.

அவர்களை அமுதவல்லி அன்பாக வரவேற்று உபசரித்தார். பக்கத்து வீட்டினர் வந்து யாரென்று விசாரித்தனர்.

“இந்த பொண்ணு வைசாலி. டாக்டர். நம்ம அஞ்சுவோட ஸ்கூல்ல ஒன்னா படிச்ச புள்ள. அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியல. கொஞ்ச நாள் எங்கயாவது போய் மனச சந்தோசமா வச்சுக்கோங்கனு டாக்டர் சொல்லி இருக்காங்க. நான் தான்.. எங்க ஊருக்கு வாங்க. எங்க ஊருக்குள்ள நுழைஞ்சாலே சந்தோசம் வந்துடும்னு வர சொன்னேன்” என்று அமுதவல்லி கூற, மூவருமே அதை மறுத்துப் பேசவில்லை.

“அதுவும் சரி தான்.. எங்க ஊரு காத்தே உங்கள சரி பண்ணிடும் பாருங்க. அஞ்சனா கூட படிச்ச புள்ளையா நீ? பார்க்க சின்ன புள்ளையாட்டம் இருக்கியே?” என்று வைசாலியை விசாரிக்க, “அஞ்சனா அக்காவ விட எனக்கு வயசு கம்மி தான். ஒரே ஸ்கூல்ல படிச்சதால அவங்களும் நானும் ஃப்ரண்டாகிட்டோம்” என்று புன்னகைத்தாள்.

“அப்படியா? சரி சரி” என்று கேட்டுக் கொண்டனர்.

அதே விசயம் தான் ஊர் முழுவதும் பரவியது. அவளை எதற்காக அஞ்சனாவின் தோழியாக அமுதவல்லி அறிமுகம் செய்தார் என்று, வைசாலியோ மற்றவர்களோ கேட்கவே இல்லை.

வீட்டில் காலியாக இருந்த அறையை பெரியவர்களுக்கு காட்டி விட்டு, “அது அஞ்சு ரூம்மா.. இங்க தங்கிப்ப தான?” என்று வைசாலியை கேட்டார்.

“எந்த அப்ஜெக்ஷனும் இல்லையானு நீங்க அஞ்சனா அக்காவ தான் கேட்கனும். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல”

“அஞ்சு ஒன்னும் சொல்ல மாட்டா. நீ குளிச்சுட்டு வா. கார ஓட்டிட்டு வந்ததுக்கு நல்லா சாப்பிட்டு தூங்கி எந்திரிங்க”

“ஓகே ஆண்ட்டி.”

அவள் குளித்து வர, சித்ராவும் அமுதாவும் ஊரில் இருக்கும் கோவில்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆரம்பிச்சாச்சா? உங்களுக்கு ஊர் சுத்தனும்னா கோவில் மட்டும் தான் ஞாபகம் வருமாமா?” என்று சித்ராவிடம் கேட்க, “ஆமா. எனக்கு கோவில் தான் தெரியும்.” என்றார்.

“பாவம் சாமி. நாட்டுல கோடிப்பேர கவனிக்கிறவர எந்த நேரம் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க வேண்டியது. பேசாம சாப்பிட்டு படுங்க. கோவில் எல்லாம் நாளைக்கு பார்க்கலாம்”

“இவ இப்படித்தான் எல்லாத்துக்கும் வாய் பேசிட்டு குறை சொல்லிட்டு இருப்பா. நீ சொல்லு அமுதா. கோவிலுக்கு எப்ப பேகலாம்?”

ஆர்வமாக கேட்ட, சித்ராவை வைசாலி சலிப்போடு பார்த்து வைத்தாள்.

அமுதவல்லி சமைத்த உணவை எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இன்பமாய் கழிந்தது. சித்ராவிற்கு இரத்த அழுத்தம் உயரவே இல்லை. அமுதவல்லி திருமணம் நின்ற விசயத்தைப்பற்றிப்பேசவே இல்லை. எப்படியும் அரசன் சொல்லி இருப்பான். ஒரு ஆர்வத்தில் கூட என்ன நடந்தது என்று அவர் விசாரிக்கவில்லை. அந்த பண்பில் வைசாலிக்கு அமுதாவை ரொம்பவே பிடித்து விட்டது.

நாட்கள் மிக அமைதியாக சந்தோசமாக கடந்து, நாளை மீண்டும் தங்களது ஊருக்குச் செல்ல முடிவு செய்திருந்தனர். அது தெரிந்து தான் இன்று வேலையை போட்டு விட்டு அரசன் ஓடி வந்தான்.

அரசன் உடை மாற்றி வெளியே வந்து பார்க்க, வைசாலி அதே இடத்தில் அமர்ந்து இருந்தாள். அமுதவல்லி சமைத்து முடித்து விட்டார்.

“பசிச்சா சாப்பாடு போட்டு சாப்பிடுங்க ரெண்டு பேரும். நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” அமுதவல்லி.

“சாப்பிட்டு படுங்க ஆண்ட்டி”

“இல்லமா.. தலையெல்லாம் வலிக்குதுனு டீ போட்டு குடிச்சேன். பசிக்கல. தூங்கி எந்திரிக்கனும்”

“சாப்பிடுற நேரத்துல என்ன டீ?” என்று அரசன் முறைத்து வைத்தான்.

“சரி படுங்க. ஒரு மணி நேரத்துல எழுப்புறேன். சாப்பிடனும்” என்று வைசாலி கண்டிப்போடு கூற, அமுதவல்லி தலையசைத்து விட்டு அறைக்குள் சென்றார்.

அரசன் வைசாலியின் அருகே வந்து அமர்ந்தான்.

“தனியா உட்கார்ந்து கடலை போட்டுட்டு இருக்க?” என்று அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தை பிடுங்கி அரசன் சாப்பிட, “சாப்பிடுற நேரத்துல என்ன கடலை?” என்று அவனைப்போலவே சொல்லி விட்டு பிடுங்கி மூடி வைத்தாள்.

“கிண்டலு?” என்று அவள் தலையில் தட்டியவன், “மதுரைக்கு ஏன் போயிருக்காங்க அவங்க?” என்று விசாரித்தான்.

“ஒரு பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். இங்க வந்ததோட பார்த்துட்டுப்போயிடலாம்னு கிளம்பிட்டாங்க. ஈவ்னிங் வந்துடுவாங்க”

“நாளைக்கு கிளம்புறீங்க இல்ல?”

“ம்ம்..”

“ஊரெல்லாம் சுத்தி பார்த்தாச்சா?”

“பார்த்தேனே… இருக்க எல்லா கோவிலும் பார்த்தாச்சு. உங்க முறுக்கு கம்பெனிய பார்த்தாச்சு. பக்கத்து ஊர கூட சுத்தி பார்த்தாச்சு”

“தோப்பு?”

“இல்லையே.. எங்க இருக்கு?”

“சாப்பிட்டு போகலாம்” என்றவன் வேறு பேச, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரம் கடந்து விட, அமுதவல்லியோடு ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.

“ம்மா.. நானும் லாலியும் தோப்பு வரை ஒரு வாக் போயிட்டு வர்ரோம். நீங்க கதவ பூட்டிக்கோங்க”

“சீக்கிரம் வந்துடுங்க. வெயில்ல ரொம்ப அலையாதீங்க” என்றதோடு அவர்களை அனுப்பி கதவை பூட்டிக் கொண்டார்.

அரசனும் வைசாலியும் நடக்க ஆரம்பித்தனர்.

4 Comments

  1. அடுத்த எபிசோடு எப்ப போடுவீங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்

Leave a Reply