வரம் 14

Loading

“கொடுத்த மருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்களா?” என்று அந்த சிறுமியிடம் வைசாலி கேட்க, அவள் வேகமாக தலையாட்டினாள்.

“குட் கேர்ள்” என்று கன்னத்தில் தட்டியவள், “இத கண்டினியூ பண்ணுங்க. சீக்கிரம் சரியாகிடும். அதே மருந்த எழுதி தர்ரேன் வாங்கிக்கோங்க” என்று எழுதிக் கொடுத்தாள்.

அவர்கள் நன்றி சொல்லி கிளம்ப, அடுத்த குடும்பம் வந்தது. அந்த சிறுவனை அமர வைத்து என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

அவர்களுக்கு மருந்து எழுதும் போது, கைபேசி மௌனமாக அதிர ஆரம்பித்தது. எட்டிப்பார்த்து விட்டு தன் வேலையை முடித்தாள்.

அமர்ந்திருந்தவர்களை அனுப்பி விட்டு, கைபேசியை எடுத்து சித்ராவை அழைத்தாள்.

“என்னமா?”

“சாலி.. எப்பமா வருவ?”

“இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடுவேன். ஏன்?”

“இங்க உன் சின்ன பாட்டியோட மக வீட்டுல வந்து உட்கார்ந்து இருக்காங்க”

“என்ன விசயம்?”

“பொண்ணு கேட்டு”

“ஓஓ.. சரி நான் வந்து பேசிக்கிறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டாள்.

வேலையெல்லாம் முடிந்து அரைமணி நேரத்தில் கிளம்பி இருந்தாள்.

அது ஒரு தனியார் மருத்துவமனை. மிகவும் சிறிய மருத்துவமனை. அவளோடு சேர்த்து வெறும் நான்கு மருத்துவர்கள் தான் அங்கு வேலை செய்கின்றனர். அவளோடு ஒன்றாக படித்த ஒருவனுடைய தந்தையின் மருத்துவமனை. இங்கு வேலையில் சேர்ந்து ஏழு மாதங்கள் ஆகி விட்டது.

வீட்டுக்கு வந்து இருந்தவர்களிடம், இரண்டு நிமிடம் பேசி விட்டு குளித்து விட்டு வந்து சேர்ந்தாள்.

“இங்க வாமா. உட்காரு” என்று அவளது அத்தை அழைக்க, தலையசைத்தவள் சில நொடிகளுக்குப்பிறகு தந்தையின் அருகே சென்று அமர்ந்து விட்டாள்.

“அத்த சாரி. என்னால இந்த கல்யாண பேச்ச ஏத்துக்க முடியாது” என்று பட்டென கூற, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஏன்மா? முன்னாடி கல்யாணம் நின்னதுல இன்னும் வருத்தம் போகலயா?”

“அப்படி இல்ல. அந்த கல்யாணத்த பத்தின பேச்சு இப்போ வேணாம். நான் வேணாம்னு சொல்லுறதுக்கு காரணம் வேற”

“ஏன்மா? என்ன விசயம்?” என்று வினவ ஒரு நொடி யோசித்து விட்டு, “வேற ஒருத்தர விரும்புறேன் அத்த” என்று விட்டாள்.

மொத்தமாய் அதிர்ந்து போனார்கள். இது வைசாலியின் பெற்றோர்களுக்கும் புதிய செய்தி தான்.

“அப்படியா? யாரு?”

வைசாலி அதற்கு பதில் சொல்லாமல், “சாரி.” என்று கூறி விட்டு எழுந்து விட்டாள்.

“நீங்க பேசிட்டு இருங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று உள்ளே சென்று விட்டாள்.

பிறகு அவர்களிடம் பேசி வழியனுப்பி வைத்த அவளது பெற்றோர்கள், வைசாலியை பிடித்து அமர வைத்தனர்.

ஜோதிலிங்கம் மகளை யோசனையாக பார்க்க, சித்ரா, “யாரு அது?” என்று ஆர்வமாக கேட்டார்.

இருவரின் பார்வையையும் பார்த்த வைசாலி சிரிப்போடு, “யாரும் இல்ல” என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, மகளை சலிப்பாக பார்த்தனர்.

“என்ன?” என்று வைசாலி சந்தேகமாக பார்க்க, “நான் கூட என் பொண்ணு வளர்ந்துட்டானு நினைச்சேன். இன்னும் பாப்பாவாவே இருக்க போ” என்று சித்ரா சலித்துக் கொண்டார்.

“ம்மா..”

“என்ன ம்மா? உங்கப்பா பாப்பா பாப்பானு கொஞ்சி நீ வளரவே இல்ல. இந்த காலத்துல லவ் பண்ணாத புள்ளைங்கள பார்க்க முடியுதா? நீ என்னடானா..”

“இப்ப நான் லவ் பண்ணாதது தான் தப்பா?”

“ஆமாங்குறேன். ஏன் லவ் பண்ணல நீ?”

வைசாலி சித்ராவின் கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டாள்.

“அடிச்சுக்காம பதில் சொல்லு.”

“அப்படி லவ் பண்ணுற அளவுக்கு எவனும் என் கண்ணுல மாட்டலனு அர்த்தம்” எனும் போதே, அரசன் நினைவு வந்து போக, வைசாலிக்கு சந்தோசத்திற்கு பதில் கோபம் தான் வந்தது.

விறுவிறுவென அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

“வர்ர வரன வேணாம்னு சொல்லுறதுக்கு உங்க மக கண்டுபிடிச்சுருக்கா பாரு காரணத்த.. கொடுமை” என்று சித்ரா சலித்துக் கொள்ள, “பாப்பா பொய் சொல்லலனு தோனுது” என்றார் ஜோதிலிங்கம்.

அவர் முகம் முழுவதும் பல யோசனைகள்.

வைசாலி மெத்தையில் படுத்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இன்றோடு அரசனின் ஊருக்கு சென்று வந்து ஒருவருடம் கடந்து விட்டது. அரசன் திருமணம் பற்றி பேசியதும் குழம்பி இருந்தாள் வைசாலி. அதே குழப்பத்துடனே வீட்டுக்கு வந்ததும், அரசனிடம் தன் மறுப்பை தெரிவித்து விட்டாள்.

அரசன் கூட பெரிதாக அதிரவில்லை.

“இது தான் சொல்லுவனு எனக்குத் தெரியுமே” என்று சிரிக்கத்தான் செய்தான்.

“இதுனால நீங்க கோவப்பட்டு என் ஃப்ரண்ட்ஸிப் கூட வேணாம்னு போயிட மாட்டீங்களே?”

“நோ.. அப்படிலாம் நடக்காது. ஏற்கனவே நான் சொல்லுற ஐடியால இல்ல. அன்னைக்கு ஃப்ளோல… சரி விடு. இனி இதை பேச வேண்டாம்” என்று முடித்து விட்டான்.

அப்போது வைசாலிக்கு நிம்மதியாக இருந்தது. அரசனின் நட்பை இழக்கப்போவது இல்லை என்ற நிம்மதி. ஆனால் எல்லாம் ஒரு மாதத்திற்கு தான். அதன் பிறகு இன்று வரை அரசன் வைசாலியிடம் பேசவில்லை. எந்த அழைப்புக்கும் பதில் இல்லை.

வைசாலிக்கு கோபம் கோபமாக வந்தது. இருவருக்கும் இடையில் இருந்த நட்பு மாறாது என்று கூறி விட்டு, இப்போது அவளை விட்டு மொத்தமாக விலகி இருக்கிறான்.

பனிரெண்டாம் வகுப்பு முடிந்து அரசன் சென்ற பிறகு, அவனை பார்க்க முடியாமல் வைசாலி பல மாதங்கள் சோகமாக சுற்றிக் கொண்டிருந்தாள். எதற்கெடுத்தாலும் அரசனின் நினைவு தான் வந்து போகும்.

அதே நிலைமை மீண்டும் வர, அவளுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. நேரடியாக அவன் வீட்டுக்கே சென்று கேட்டு விடலாமா? என்று பல முறை யோசித்து விட்டாள்.

அமுதவல்லியிடம் பேசும் போது, அவரிடமும் அரசன் சரியாக பேசுவது இல்லை என்ற செய்தி தான் கிடைத்தது.

அதன்பிறகு அரசனை தொடர்பு கொள்ளவே கூடாது என்ற முடிவோடு இருக்க, இன்று அரசனின் நினைவு வந்து போனதில் கோபமாகவே இருந்தாள்.

“பெரிய இவன்.. கல்யாணம் பண்ணிக்கலனா பேசக்கூட மாட்டானோ? திரும்ப கண்ணுல படட்டும். முறுக்கு உடைக்கிற மாதிரி கை கால உடைக்கிறேன்”

மெல்ல மெல்ல நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது. அரசனை அன்று மருத்துவமனையில் மீண்டும் சந்தித்த நாள், அவள் மனதளவில் எவ்வளவு சந்தோசப்பட்டாள் என்று அவளுக்குத்தான் தெரியும்.

ஆனால், சட்டென பார்த்ததும் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்தான். அன்று அவனாக அவளை அடையாளம் காணவில்லை என்றால், இவளுக்கு தெரிந்திருக்காது.

அதன் பிறகு மீண்டும் மாதவனோடு நடந்த நிச்சயதார்த்தத்தில் எதிர்பாராத சந்திப்பு. அப்போது ஏனோ இருவருமே இலகுவாக பேசவில்லை. எதோ ஒரு விலகல் வந்திருந்தது.

அவள் அந்த விலகலை சுட்டிக் காட்டி கோபம் கொண்டபோது, நேராக வந்து சமாதானம் செய்தவனை நினைத்து இப்போது புன்னகை வந்தது.

அடுத்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்று. மாதவனின் மறு பக்கத்தை அறிந்த நாள். அன்று அரசன் பேசிய வார்த்தைகள், கேட்ட கேள்விகள் எல்லாம் அவளை பல யோசனைக்குள் தள்ளியிருந்தது.

அன்று திருமணத்தை நிறுத்துவதாக வைசாலி சொன்னதும், அரசன் அவளை யோசனையோடு பார்த்தான்.

“உனக்கு மாதவன பிடிச்சு தான கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” என்று அரசன் கேட்கும் போது, வைசாலி புரியாமல் பார்த்தாள்.

“பிடிச்சு சம்மதிச்சு இருந்தா? அதுக்குனு இவ்வளவு பெரிய தப்ப மன்னிக்க முடியுமா?” என்று வைசாலியிடமிருந்து பதில் வந்தது.

“நான் கேட்குறத நீ சரியா புரிஞ்சுக்கல. உனக்கு மாதவன பிடிச்சுருந்துச்சா? அவனோட வாழ்க்கைய சேர் பண்ணுற அளவு? கல்யாணம் வரை வந்துருக்கு. நீ சட்டுனு கல்யாணத்தையே நிறுத்துவேன்னு சொல்லுற.”

“யூ மீன்?”

“ஒருவேளை.. நாங்க லேட் ஆகி.. எங்களுக்கு விசயம் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுருந்தா? அப்பவும் மாதவன அரெஸ்ட் பண்ணி இருப்போம். அப்ப என்ன செஞ்சுருப்ப?”

வைசாலி யோசித்தாள். ஒருவேளை அப்படி நடந்திருந்தால்? நினைக்கவே பிடிக்கவில்லை.

“அப்படி நடந்திருந்தா என்ன செய்வேன்னு எனக்குத் தெரியல. ஆனா இப்ப நல்ல வேளை நடக்கலனு நிம்மதியா இருக்கு”

“ஏன்? மாதவன் தான் உன்னை பொண்ணு கேட்டு வந்தான். ஆனா இத்தனை நாள்ல நீங்க பேசி பழகி இருப்பீங்க. உன் மனசுல மாதவன் கணவனா பதியலையா?”

“நீங்க எத வச்சு இப்படி கேட்குறீங்க கிங்? என்ன சொல்ல வர்ரீங்க?”

“ஓகே.. உனக்கு விளங்குற மாதிரி கேட்குறேன். ஒருத்தர் மேல அன்பு வச்சுட்டா அவங்க செய்யுற தப்ப மனசு மன்னிச்சுடும்”

“ஆனா..”

“பொறுமா.. அந்த அன்பு ஆழமா இருந்தா, மனசு நிச்சயமா மன்னிச்சுடும். நம்ம நியாயபுத்தி தான், அவங்க தண்டனைய அனுபவிக்கட்டும்னு சொல்லும். உனக்கு மாதவன் மேல நேசம் அன்பு இருந்திருந்தா.. நீ மாதவன் தண்டனைய அனுபவிச்சுட்டு வர்ர வரை, வெயிட் பண்ணுறேன்னு சொல்லி இருக்கலாம். இல்ல ஓவர் கோபத்துல உரிமையில, நேராவே மாதவன் கிட்ட சண்டை போட்ருக்கலாம். நீ ஏன் எதையும் பண்ணல?”

வைசாலி அவனை இமைக்காமல் பார்த்தாள். அவன் பேச்சில் நியாயம் இருப்பது போல் தான் தோன்றியது.

“உரிமையும் இல்ல அன்பும் இல்ல. எந்த அடிப்படியில கல்யாணம் வரை வந்த? கல்யாணத்துக்கு அப்புறமா நடந்து இருந்தா? உன்னை மன்னிக்க மாட்டேன்னு கல்யாணத்த முறிச்சுருப்பியா? இல்ல கடனேனு வாழ்ந்துருப்பியா?”

வைசாலியிடம் பதில் இல்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் காப்பாற்றி விட்ட கடவுளுக்கு மனம் நன்றி தெரிவித்தது.

“இதுக்கு தான் கேட்டேன். பிடிச்சு சம்மதிச்சியா? இல்ல எதோ கல்யாணம் பண்ணி ஆகனுமேனு சம்மதிச்சியா?”

“ரெண்டும் இல்லனு நினைக்கிறேன்”

“இனிமே தெளிவா முடிவு பண்ணு.”

“ம்ம்”

“சரி வீட்டுக்கு ஒழுங்கா போயிடுவியா? இல்ல நான் ட்ராப் பண்ணவா?”

“நீங்க வந்தா எல்லாருக்கும் பதில் சொல்லனும். நான் போய்க்கிறேன். அம்மா வேற சட்டுனு சாக் ஆகி பிபிய ஏத்திடுவாங்க. எப்படி சொல்லுறதுனு தெரியல”

“ஆண்ட்டி ஹெல்த் கண்டீஷன்க்காகவும் தான் இத முன்னாடியே உன் கிட்ட வந்து சொல்லுறேன். கவனம்”

“பார்த்துக்கிறேன். ஆனா இது தப்பு இல்ல?”

“தப்பு தான்” என்றவன் முகத்தில் புன்னகை வர, “உங்கள பொறுப்பான போலீஸ்னு ஊர் நம்புது. இப்படி பண்ணிட்டு இருக்கீங்களே” என்று வைசாலியும் புன்னகைத்தாள்.

“ஊர் சொல்லுறதுக்கு எல்லாம் வாழ முடியுமா? நான் பொறுப்பான போலீஸ்னு யாரு சொன்னா? பல சஸ்பென்ஸன வாங்கிட்டு சுத்திட்டு இருக்கேன்”

“இப்பவுமா?”

“இப்போதைக்கு இல்ல. இந்த முரளிதரன் என் கையில சிக்குனா நடக்க வாய்ப்பு இருக்கு”

“நீங்க எல்லாம் சட்டத்தின் காவலாளி.. வெரி பேட்யா” என்று சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு பல நாள் அரசனின் கேள்வி தலையை குடைந்தது. தன்னால் மாதவனை மன்னிக்கவே முடியவில்லையே. ஏன்? என்ற கேள்வி அடிக்கடி தோன்றியது.

முதல் காரணம் மாதவன் அவளை நம்பவே இல்லை. மிருதுளா கல்லூரியில் படிப்பதாக சொன்ன பொய். மிருதுளாவை பற்றி அவளிடமும் அவளது குடும்பத்திடமும் மொத்தமாக மறைத்து இருந்தான் மாதவன்.

ஒரு மருத்துவராக நோயாளியின் ரகசியம் காப்பாள் என்ற நம்பிக்கை கூட வைசாலியின் மீது வைக்காமல், மாதவன் மிருதுளா விசயத்தில் பொய் மட்டும் தான் கூறியிருந்தான்.

“இதை மறைத்தவன் வேறு எதையெல்லாம் மறைத்தானோ?” என்று ஜோதிலிங்கம் கேட்டபோது, வைசாலியும் அதையே நினைத்தாள்.

ஒரு உறவின் அடிப்படையே நம்பிக்கை அல்லவா? அதுவே இங்கு இல்லாத போது, நிச்சயம் இந்த திருமணம் ஒரு தவறான முடிவாகத்தான் இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

அன்று அவ்வளவு தெளிவாக பேசி அவளை தெளிவு படுத்திய அரசன், இப்போது சுத்தமாய் பேசாமல் அவளை ஒதுக்கி வைத்ததை, அவளால் ஏற்றுக் கொள்ளலே முடியவில்லை.

கோபத்தை விட வருத்தம் அதிகமாக இருந்தது.

மறுநாள் மருத்துவமனை விடுமுறை விடப்பட்டு இருக்க, வீட்டில் இருந்தாள் வைசாலி.

வேலை எதுவும் ஓடாமல் இருக்க, கைபேசியில் சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருந்தாள்.

திடீரென அரசனின் அழைப்பு வர, ஒரு நொடி அதிர்ந்தவள் பிறகு முறைப்போடு துணடித்து விட்டாள். மீண்டும் வந்தது. மீண்டும் துண்டிக்க, அடுத்து வீடியோ கால் போட்டு விட்டான்.

அதை சில நொடிகள் முறைத்துப்பார்த்து விட்டு, அழைப்பை ஏற்றாள்.

திரையில் தெரிந்த கோபமுகத்தை பார்த்தவன், “ஹாய்” என்று அமைதியா ஆரம்பித்தான்.

வைசாலி முறைப்பை விடாமல் இருக்க, “ஹலோ..” என்றான்.

“இத்தனை மாசமா ஏன் பேசல?”

“ஒரு முக்கியமான விசயமா அவுட் ஆஃப் ஸ்டேஷன்ல இருந்தேன். அதான் பேச முடியல”

“நம்ப மாட்டேன்”

“நிஜம்மாமா. இப்ப தான் திரும்பி வந்தேன்”

“பொய். நம்ப மாட்டேன்”

“அட கடவுளே.. சத்தியமா அவுட் ஆஃப் ஸ்டேஷன் தான்”

“நான் அத சொல்லல.”

“பின்ன?”

“உங்க முக்கியமான வேலையில பேச முடியலனு சொன்னீங்களே அது.”

“அது பொய்யா?”

“அந்த முக்கியமான வேலையில, உங்க வீட்டுல இருக்கவங்க கிட்ட நீங்க பேசவே இல்லயா?”

அரசன் இதற்கு பதில் சொல்லமுடியாமல் மாட்டிக் கொண்டதில் புன்னகைத்தான். அதை பார்த்ததும் சட்டென வைசாலிக்கு கண் கலங்க பார்க்க, அழைப்பை துண்டித்து போட்டு விட்டாள்.

எதற்கு இப்படி அவன் ஒதுக்குவது வலியை கொடுக்கிறது என்று புரியவில்லை. ஆனாலும் கண் கலங்கிப்போனது.

அரசன் மீண்டும் அழைக்க துண்டித்தாள்.

“கோபமா வைசாலி?” என்று செய்தி வந்து விழ, “வைசாலி?” என்று பல்லைக்கடித்தாள்.

“இங்க வைசாலினு யாரும் இல்ல. ராங் நம்பர்” என்று செய்தி அனுப்பி விட்டு, அவன் எண்ணை ப்ளாக் செய்து விட்டாள்.

அடுத்து அவன் அனுப்பிய செய்திகள் பார்க்கப்படாமல் போக, அரசன் நொந்து விட்டான்.

“செம்ம கடுப்புல இருக்கா போலயே” என்று மீண்டும் அழைக்க, இப்போது அழைப்பு முழுமையாக சென்று நின்றது.

“கிழிஞ்சது.. சைலண்ட்ல போட்டு ப்ளாக் பண்ணிட்டா.” என்று தலையை தேய்த்தவன், “ம்மா” என்று அமுதவல்லியை அழைத்தான்.

“கூப்பிட்டியா?” என்று வேகமாக வந்தார் அமுதவல்லி.

“உங்க ஃபோன கொடுங்க” என்றதும் எடுத்து வந்து கொடுத்தார்.

அதை வாங்கி உடனே சித்ராவை அழைத்தான்.

“யாருக்கு போன் பண்ணுற?”

“சித்ரா ஆண்டிக்கு”

“ஏன்? வைசாலி கிட்ட தான பேச போறேன்னு சொன்ன?”

“ப்ளாக் பண்ணிட்டா” என்றதுமே, அமுதவல்லி சிரித்து விட்டார்.

அரசன் அன்னையை முறைக்க, “இப்ப நீ கெஞ்ச போற? சூப்பர்.. போலீஸ்காரன் கெஞ்சுறத வேடிக்கை பார்க்கனுமே” என்று அமர்ந்து விட்டார்.

“ம்மா..”

“உன் கிட்ட எத்தனை ஆக்யூஸ்ட் கெஞ்சி இருப்பாங்க? இப்ப நீயே கெஞ்ச போற. இதெல்லாம் அடிக்கடி கிடைக்காதுடா”

“உஸ்ஸ்” என்றவன் அந்த பக்கம் அழைப்பை எடுத்தவரிடம் பேசினான்.

“சொல்லு அமுதா.. நல்லா இருக்கியா?” என்று சித்ரா பேச, “ஆண்ட்டி.. நான் அரசன் பேசுறேன்” என்றான்.

“அரசனா? நல்லா இருக்கியாபா?”

“நல்லா இருக்கேன் ஆண்டி நீங்க?” என்று நலம் விசாரித்தவன், “வைசாலி கிட்ட ஃபோன கொடுங்க ஆண்ட்டி” என்றான்.

அதில் அமுதவல்லி சிரிப்பை அடக்க, அரசன் முறைத்துக் கொண்டிருந்தான் அவரை.

“இந்தா ஒரு நிமிஷம் இருபா” என்ற சித்ரா, “சாலி.. சாலி” என்று சத்தம் கொடுத்தார்.

“என்னமா? இப்ப தான தூங்கப்போறேன்னு சொன்னேன்?”

“ப்ச்ச்.. அரசன் போன் பண்ணி இருக்கு. பேசு. நான் அடுப்ப பார்க்குறேன்” என்று அவள் கையில் திணித்து விட்டு சென்று விட்டார்.

இதை வைசாலி எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடு காதில் வைத்தாள்.

அரசனுக்கு எல்லாம் கேட்டாலும் பேசாமல் அமர்ந்து இருந்தான். வைசாலியும் காதில் வைத்ததோடு சரி பேசவில்லை.

அமுதவல்லி மகனை குறுகுறுவென பார்த்து விட்டு, “பேசு” என்றார் சைகையில்.

அவனோ வாசலை கண்ணால் காட்டி, அவரை வெளியே போகச் சொன்னான். அமுதவல்லி, “மாட்டேன்” என்பது போல் அமர்ந்திருந்தார்.

அரசன் வேகமாக எழ, பிடித்து அமர வைத்தவர் சிரிப்போடு சென்று விட்டார். அதுவரையுலும் வைசாலி பேசவில்லை.

“கால் அட்டன் பண்ணு லாலி” என்றவன், அழைப்பை உடனே துண்டித்து விட்டான்.

Leave a Reply