வரம் 17

Loading

அரசேந்திரன் கையில் இருந்த கட்டை பிரித்து விட்டு, மருத்துவர் சோதித்து பார்த்தார்.

“நல்லா இருக்கு. கொஞ்ச நாள் வெயிட் எதுவும் தூக்காதீங்க. மத்தபடி நார்மலா இருக்கலாம்” என்று கூறி முடிக்க, “அடிக்கலாமா டாக்டர்?” என்று கேட்டு வைத்தாள் அஞ்சனா.

அவளது கேள்வியில் டாக்டர் அதிர, அரசன் அவளை கிள்ளி வைத்தான். அதை எல்லாம் அஞ்சனா கண்டு கொள்ளவில்லை.

“அடிக்கலாமாவா?” என்று அந்த மருத்துவர் உறுதி படுத்திக் கொள்ள கேட்க, “ஆமா டாக்டர்.” என்று தீவிரமாக கேட்டாள்.

“இவர நீங்க அடிக்க போறீங்களா?”

“இல்ல இல்ல. இவன் தான் மத்தவங்கள அடிப்பான். அதான் இந்த கையால அடிச்சு வைச்சா பிரச்சனை வராதே?”

“அஞ்சு..” என்று அரசன் அதட்ட, அஞ்சனா சற்றும் அசரவில்லை.

அந்த மருத்துவர் அரசனை சந்தேகமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.

“போலீஸ்காரன் சார். எஸ்.பி. அக்யூஸ்ட்ட அடிப்பான்” என்று அஞ்சனா அந்த பார்வையை கண்டு சிரித்தபடி விளக்கம் கொடுக்க, அப்போது தான் மருத்துவரின் பார்வை மாறியது.

“ஓ.. நீங்க போலீஸா? தெரியல சார்”

“இருக்கட்டும் டாக்டர். என் அக்கா சும்மா விளையாட்டுக்கு கேட்குறா..”

“பட் நீங்க அடிக்க கூடாது. அடிச்சா வலி திரும்பி வந்துட்டா கட்டு போட வேண்டி வந்துரும். கொஞ்ச நாள் அந்த கைய பத்திரமாவே பார்த்துக்கோங்க” என்று கூறி அனுப்பி வைத்தார்.

காரை எடுத்த அஞ்சனாவை அரசன் முறைத்து வைத்தான்.

“லூசு பக்கி.. அவர் கிட்ட போய் அடிக்கலாமானு கேட்டு வைக்கிற?”

“நீ தானடா இதே கையால அவனுங்கள அடிப்பேன்னு சொன்ன? அதான் அடிக்குற அளவு கை சரியாச்சானு கேட்டேன்”

“உன்னை எல்லாம்… வாண்டட்டா வந்து என்னை டேமேஜ் பண்ணுற” என்று வலிக்காமல் அவள் தலையில் கொட்டு வைத்தான்.

தலையை தேய்த்தவள், “கைய வச்சுட்டு சும்மா இருடா. வண்டி ஓட்டும் போது இம்சை பண்ணிட்டு” என்று அதட்டி விட்டு சாலையை கவனித்தாள்.

அமுதவல்லி ஊருக்கு சென்றிருக்க, அஞ்சனா வந்திருந்தாள். இன்னும் மூன்று நாட்களில் அஞ்சனாவிற்கும் பார்த்தசாரதிக்கும் பத்தாவது திருமண நாள் வருகிறது.

அதை தங்களது ஊரில் கொண்டாட வேண்டும் என்று அஞ்சனா முடிவு செய்ய, பார்த்தசாரதியும் சம்மதித்து இருந்தான்.

பார்த்தசாரதிக்கும் மணிகர்ணிகாவிற்கு விடுமுறை இல்லை.

அதனால் அவளையும் பார்த்தசாரதியையும் விட்டு விட்டு தான் மட்டும் கிளம்பி வந்திருந்தாள். அரசனுக்கு கட்டு பிரித்ததும், அவனையும் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் சென்று இறங்கினாள்.

வந்ததிலிருந்து, ஆளாளுக்கு அரசனை நலம் விசாரிக்க வந்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தவன், கைபேசியையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“யாரு கிட்ட சேட் பண்ணிட்டு இருக்க?” என்று அஞ்சனா கேட்டுக் கொண்டே வந்து அருகே அமர்ந்தாள்.

“யாரும் இல்ல”

“இப்படி வெட்டியா இருக்கதுக்கு அந்த இன்ஸ்பெக்டர் நம்பர் தர்ரேன். பேசி பார்க்கலாம்ல?”

“உன்னை கொல்ல போறேன் அஞ்சு”

“ஏன்டா? இன்ஸ்பெக்டர் வேணாமா? காண்ஸ்டபிள் பொண்ணு ஓகேவா?”

“அம்மா.. உங்க மக என் கையால அடிவாங்க போறா பாருங்க”

அங்கு நின்று சிரித்துக் கொண்டிருந்த அமுதாவிடம் கூற, “அவனுக்கு இன்ஸ்பெக்டர் காண்ஸ்டபிள் எல்லாம் வேணாமாம். இந்த ஏசிபி டிசிபில பொண்ணு இருந்தா பாரேன்” என்றார் அமுதா.

“அவ்வளவு தான? அவர் வரட்டும்.. பேச்சுலரா இருக்க அத்தனை போலீஸ் பொண்ணுங்க ஃபோட்டோவயும் வாங்கிடுறேன்”

அரசன் ஓய்ந்து போய் சலிப்போடு தலையாட்டி விட்டு அமைதியாகி விட, அஞ்சனா அமுதாவை பார்த்தாள். அவர் கையை விரித்தார்.

“ம்மா.. வைசாலிய பங்சன்க்கு கூப்பிட்டா என்ன?”

“வைசாலியவா? அனுப்புறது கஷ்டம் அஞ்சு”

“அப்போ ஃபேமிலிய இன்வைட் பண்ணுவோம்.”

“எப்படி அஞ்சு? நம்ம வீட்டு பங்சன் இது. சம்பந்தம் பேசி இருந்தாலும் உரிமையா கூப்பிடலாம். இப்ப கூப்பிட்டா வருவாங்களோ என்னவோ?”

“நீங்க வைசாலி கிட்டயும் அவ அம்மா கிட்டயும் பேசுங்க. எப்படியாவது சம்மதிக்க வைங்க. உங்களுக்கா பேசத்தெரியாது? அவங்க இங்க வந்தா மொத்தமா பிடிச்சு வச்சு இந்த கல்யாண விசயத்த பேசிடலாம்”

அஞ்சனா சொல்வது அமுதாவிற்கும் புரியத்தான் செய்தது. ஒருவருடமாக மகனை விட்டு விட்டார். இனிமேலும் விடுவதாக இல்லை. வைசாலிக்கு விருப்பமில்லாதது போல் அவருக்குத் தோன்றவில்லை. பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வருவோமே என்று நினைத்தவர், வேகமாக சித்ராவை அழைத்தார்.

அவரிடம் நலம் விசாரித்து விட்டு, விழாவைப்பற்றிக்கூறி அழைப்பு விடுத்தார். வைசாலிக்கு விடுமுறை இருக்காதோ என்று தயங்கினர்.

உடனே அமுதவல்லி வைசாலியை அழைத்து விட்டார்.

“சொல்லுங்க ஆண்ட்டி”

“எப்படிமா இருக்க? ஊருக்கு வந்து போனதுல இருந்து பேசவே இல்ல நீ”

“ஃபைன் ஆண்ட்டி. வொர்க் ஓவர். அதான் நேரமே கிடைக்கல”

“அப்போ ஒரு ரெண்டு நாள் லீவ் போடு”

“லீவ்வா?”

“ஆமா. லீவ் போட்டு எங்க ஊருக்கு கிளம்பி வா”

“வரலாமே. வந்து ஜாலியா நீங்க செய்யுற சாப்பாட சாப்பிட்டுட்டு தூங்க எனக்கும் ஆசை தான்”

“நாளைக்கே லீவ் அப்ளை பண்ணுறியா?”

“என்ன இவ்வளவு அவசரம்?”

“ரெண்டு நாள்ல அஞ்சனாவுக்கு பத்தாவது கல்யாணநாள். குடும்பம் மட்டும் செலிப்ரேட் பண்ணுறதா இருக்கோம். அதுனால நீ அப்பா அம்மாவ கூப்பிட்டுட்டு கிளம்பி வர்ர”

“அவங்க கல்யாண நாள்ல நான் வந்து என்ன செய்யுறதாம்?”

“உனக்கு தான் இந்த ஊரு பிடிச்சுருக்குதே.. இங்க ஒரு பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் வா”

“இது நல்ல ஆஃபரா இருக்கே.. ஆனா கண்டிப்பா நல்ல பையனா இருக்கனும் ஆண்ட்டி”

“நல்ல பையன்னா?”

“உங்க பையன் மாதிரி இருக்க கூடாது”

“அடிக் கழுதை.. வா வந்து நீயே இத அவன் கிட்ட சொல்லு பார்க்கலாம்.”

“உங்க புள்ள என் தலையில கொட்டி பள்ளம் தோண்டுறதுக்கா? நான் மாட்டேன்”

“இந்த பயத்த நான் நம்பனும்? சரி நாளைக்கு லீவ் போடுறியா இல்லையா?”

“நல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னப்புறம் என்ன யோசனை? இப்பவே மெயில் போடுறேன்”

“வெரி குட். நாளைக்கு ஈவ்னிங் இங்க நீ இருக்கனும்.”

“கண்டிப்பா” என்று புன்னகைத்து விட்டு உடனே விடுமுறைக்கு சொல்லி விட்டாள்.

அன்றைய வேலை முடிந்து தாமதமாக வீடு வந்து சேர, அவள் வரும் வரை பெற்றவர்கள் இருவரும் அவளுக்காக காத்திருந்தனர்.

“ரெண்டு பேரும் தூங்கலயா? இன்னேரத்துல முழிச்சு உட்கார்ந்து இருக்கீங்க?”

“நீ போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. அப்புறம் பேசலாம்” என்று அனுப்பி வைத்தனர்.

குளியலை முடித்து வைசாலி வந்து அமர, “அமுதா போன் பண்ணுச்சு” என்று ஆரம்பித்து எல்லாம் சொன்னார்கள்.

“உங்களுக்கு ஓகேனா போகலாம்மா. லீவ் கிடைக்கும் எனக்கு”

“அப்படியா சொல்லுற?”

“ஆமா. முன்னாடி நாளே வர சொல்லி என் கிட்ட சொன்னாங்க. போயிட்டு வரலாம்”

“முன்னாடி நாள் வேணாம். பங்சன் அப்போ மட்டும் போகலாம்” என்று சித்ரா கூற, “ஏன்?” என்று வைசாலி கேட்டாள்.

“முன்னாடி நாள் போனா தங்கனும்ல?”

“ஒரு நாள் தங்குறதுல என்ன இருக்கு?”

“அதெல்லாம் தப்பு.. கல்யாணத்துக்கு முன்னாடி போய் அங்க தங்குறது நல்லது இல்ல”

சித்ரா வேகமாக பேசிவிட, வைசாலி முதலில் ஆச்சரியப்பட்டு பிறகு கிண்டலாக பார்த்து வைத்தாள்.

“என்ன கல்யாணம்? யாருக்கு கல்யாணம்?” என்று வைசாலி கிண்டலாக கேட்க, சித்ரா அப்போது தான் உளறி விட்டதை உணர்ந்தார்.

“கல்யாண நாள்ல.. அவங்க சம்பந்தி வீடு எல்லாம் வந்துருக்கும்னு…” என்று சித்ரா சமாளிக்க பார்க்க, “இல்ல.. நீங்க கல்யாணத்த பத்தி பேசுனீங்க.. யாருக்கு கல்யாணம்?” என்று வைசாலி விடாமல் கேட்டாள்.

சித்ரா கணவரை பார்வையால் துணைக்கு அழைக்க, அவர் சிரித்து வைத்தார்.

“பாப்பா.. முன்னாடி நாளே கிளம்பி போவோம். நீ லீவ் போடு”

“என்ன பேசுறீங்க நீங்க?” என்று சித்ரா முறைக்க, “அப்ப நீ பேசு” என்று மாட்டி விட்டார்.

வைசாலி தாயை வேடிக்கை பார்க்க, “சாலி.. அதெல்லாம் வேணாம். நாம பங்சன் அப்போ போவோம்” என்றார்.

திருமணத்திற்கு முன்பு குடும்பமாக சென்று தங்குவது சித்ராவிற்கு விருப்பமில்லை. அவர் வைசாலிக்கும் அரசனுக்கும் திருமணம் நடந்துவிடும் என்பதில் உறுதியாகி விட்டார். அதனால் இப்போதே எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

“அப்போ காலையில அமுதா ஆண்ட்டிக்கு போன் பண்ணி, நீங்க சொல்லுறத சொல்லிடுறேன். அவங்க கிட்ட பேசிக்கோங்க”

“அமுதா கிட்ட ஏன் சொல்லுற நீ? லீவ் கிடைக்கல பங்சன் அப்போ வர்ரோம்னு சொல்லேன்”

“மாட்டேன். நீங்க என்னென்னவோ நினைச்சுட்டு பேசிட்டு இருக்கீங்க. அத சொல்ல மாட்டீங்க. நான் மட்டும் பொய் சொல்லனுமா?”

சித்ரா தலையில் கை வைக்க, “அரசன உனக்கு மாப்பிள்ளைனு உங்கம்மா முடிவே பண்ணிட்டா பாப்பா.. அதான் இப்படி பேசிட்டு இருக்கா” என்று ஜோதிலிங்கம் மனைவிக்கு பரிந்து வந்தார்.

“ஏன்மா? அவர் கேட்டார். நான் பதில் கூட சொல்லல. அதுக்குள்ள முடிவு பண்ணிட்டீங்களா? இப்ப நாம ஒன்னும் மாப்பிள்ளை வீட்டு விசேசத்துக்கு போகல. நாம போறது.. நம்ம கூட பல வருசம் பழகுன ஃப்ரண்டோட வீட்டுக்கு. அவங்க நம்ம மேல வச்சுருக்க அன்புக்கு கூப்பிட்டுருக்காங்க. நமக்கு ஒரு பிரச்சனைனு அங்க போய் தங்குனப்போ, எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஒரு நிமிஷம் மனசு நோகுற மாதிரி பேசிருப்பாங்களா? அவங்க இன்வைட் பண்ணா முதல்நாளே போறதுல என்ன தப்பு? சும்மா எதையாவது யோசிக்காதீங்க. நான் நாளைக்கு பாதி நாள் ஹாஸ்பிடல் போயிட்டு வருவேன். வந்து ஈவ்னிங் கிளம்பலாம். இப்ப தூக்கம் வருது. குட் நைட் “

வைசாலி விளக்கமாக பேசி விட்டு, அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.

அடுத்த நாள் வேலை முடிந்து, மாலையே அரசனின் ஊரை நோக்கி கிளம்பி விட்டனர்.

இங்கோ.. வைசாலி குடும்பத்தை அழைத்ததை, அரசனிடம் அஞ்சனாவும் அமுதவல்லியும் சொல்லவில்லை. அமுதா சொல்ல நினைக்க, அஞ்சனா மறுத்து விட்டாள்.

“அவன் மட்டும் வாயத்திறந்து எதையாவது சொல்லுறானா? அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிட்டானு இவன் ஊர விட்டே போயிட்டான். வேலை தான்.. இருந்தாலும் இப்படி தள்ளி தள்ளி போயிட்டே இருந்தா எப்ப தான் கல்யாணம் பண்ணுவானாம்? நம்ம கிட்ட சொல்லல.. நாமலும் சொல்லல. நாம அவனுக்கு பொண்ணா பார்த்து கூப்பிட்டுருக்கோம்? நம்ம ஃபேமிலி ஃப்ரண்ட்ட தான் கூப்பிட்டுருக்கோம். பேசாம இருங்க. வந்ததும் தெரிஞ்சுக்கட்டும்”

அஞ்சனா மறுத்ததில் அமுதவல்லியும் மகனிடம் எதையும் சொல்லாமல் விட்டார்.

மாலை அரசன் ஹாலில் அமர்ந்து கைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, ‘அத்தான் வந்தாச்சா?’ என்று வேகமாக எழுந்தவன், வாசலில் நின்ற வைசாலியை அதிர்ந்து போய் பார்த்தான்.

அவளும் ஒரு நொடி அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

“ஆண்ட்டி..” என்று குரல் கொடுத்தபடி அவனை தாண்டி உள்ளே செல்ல, அரசன் அவளை இமைசிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘இவ எங்க இங்க?’ என்று யோசிக்க அந்த பக்கம், “ஹலோ.. ஹலோ சார் இருக்கீங்களா?” என்று குரல் வந்தது.

“இருக்கேன்.. ஒரு நிமிஷம்” என்றவன் உள்ளே நுழைந்த வைசாலியின் பெற்றோர்களிடம் தலையசைத்து விட்டு, “வாங்க.. உட்காருங்க. நான் பேசிட்டு வர்ரேன்” என்று வெளியேறி விட்டான்.

வைசாலியின் குரல் கேட்டு அமுதவல்லி வந்தார்.

“வந்துட்டீங்களா? வாங்க வாங்க.. இந்த தடவ வீட தேடாம சீக்கிரமா வந்துட்டீங்க போல”

“வாங்க வாங்க” என்று அமுதா பேசிக் கொண்டிருக்கும் போதே அஞ்சனா வர, எல்லோரின் பார்வையும் அவள் பக்கம் திரும்பியது.

இங்கு வந்ததிலிருந்து, அஞ்சனாவை வைசாலியின் குடும்பம் சந்திக்கவில்லை. தொலைபேசியில் பேசியதோடு சரி.

மற்றவர்களிடம் பேசி முடித்து விட்டு, அஞ்சனாவின் பார்வை வைசாலியிடம் வந்தது. சிறு வயதில் பார்த்த அதே பெண். வளர்ந்து இருக்கிறாள் அவ்வளவு தான்.

“ஹாய்.. ஃபைவ் அக்கா” என்று வைசாலி இழுக்க, “ஹாய் லாலி பாப்” என்று அஞ்சனா சிரித்தாள்.

இருவருமே சிரித்து விட்டு, “மறந்துருப்பீங்கனு நினைச்சேன்.” என்று வைசாலி கூற, “மறக்க கூடிய ஆளா நீ? அதுவும் நீ கேட்ட கேள்வி மறக்க கூடியதா?” என்று அஞ்சனா அவள் தோளில் கைபோட்டுக் கொண்டாள்.

“இப்பவும் நீங்க பதில் சொல்லல.. அஞ்சுக்கு அக்கானா உங்க பேரு ஆறா?”

“கொழுப்ப பார்த்தியா? இன்னுமா உனக்கு சந்தேகம் தீரல.. நான் அஞ்சுக்கு அக்கா இல்ல.. அரசனுக்கு தான் அக்கா”

“அப்போ எல்லாரும் அஞ்சு அக்கா அஞ்சு அக்கானு ஏன் கூப்பிடுறாங்க?”

“லாலி பாப்னு பேரு வச்சுட்டு நீயெல்லாம் என் பேர கிண்டல் பண்ணுற?”

சிறு வயதில் அஞ்சனாவை முதன்முதலில் சந்திக்கும் போது, வைசாலி கேட்ட கேள்வி இது. அதற்கு அஞ்சனா கொடுத்த பதிலும் இப்படித்தான் இருந்தது.

வெளியே பார்த்தசாரதி மகள் மற்றும் பெற்றோருடன் வந்து இறங்கினான்.

கைபேசியை அணைத்து போட்டு விட்டு, அரசன் அவர்களை வரவேற்றான்.

“மாமா” என்று காரை விட்டு இறங்கியதும் மணிகர்ணிகா குதிக்க, உடனே தூக்கிக் கொண்டான்.

“மாமா.. சாக்லேட்..” என்று பாக்கெட்டில் தேட ஆரம்பிக்க, “உன் அப்பா முறைக்கிறாரு பாரு” என்று மணியை பார்த்தசாரதி பக்கம் திருப்பினான்.

“மணி.. வரும்போது தான சாப்பிட்ட?” என்று பார்த்தசாரதி அதட்ட, “ஒன்னே ஒன்னுபா” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.

“உள்ள போங்க அத்த மாமா.. நாங்க எடுத்துட்டு வர்ரோம்” என்று அரசன் கூற, பெட்டியை எடுக்க வந்த பார்த்தசாரதியின் பெற்றோர்கள் வீட்டிற்குள் சென்று விட்டனர்.

மணிகர்ணிகா பார்த்தசாரதியிடம் கெஞ்ச, “வயிறு வலிக்கு பல்லு வலிக்குனு அழுவ” என்று அதட்டினான்.

“மாட்டேன் மாட்டேன்” என்று மணிகர்ணிகா வேகமாக தலையாட்டி விட்டு, அரசனிடமிருந்த சாக்லேட்டை தேடி எடுத்து விட்டாள்.

“அப்பா கிட்ட கேட்டுட்டு சாப்பிடு” என்று அரசன் கூற, “வாங்கி வச்சுட்டு நல்லவன் மாதிரி பேசு..” என்று அரசன் தோளில் அடித்தான்.

“உங்க மகள என் பாக்கெட்ல சாக்லேட் தேடக்கூடாதுனு சொல்லி வைங்க. பச்ச பிள்ளைய ஏமாத்தவா முடியும்?”

“ஆளாளுக்கு செல்லம் கொடுங்க. உங்கக்கா கடைசில என்னை தான் பிடிச்சு ஆட்டுவா”

“ஹாஹா.. ஊருக்கே கலெக்டரா இருந்தாலும் ஹோம் மினிஸ்டர் கிட்ட மாட்டிட்டு முழிச்சே ஆகனும் அத்தான்.”

பார்த்தசாரதி சோகம் போல் காட்டி சிரித்து விட்டு, “மணி இதோட லாஸ்ட் இன்னைக்கு. வேற சாக்லேட் சாப்பிட்டா அம்மா கிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்” என்று கூறி விட்டு பெட்டிகளை எடுத்து கீழே வைத்தான்.

“இது யாரோட கார்?”

முன்னால் நின்றிருந்த காரை பார்த்து விட்டு பார்த்தசாரதி கேட்க, “வைசாலியோடது” என்றான் அரசன். பெட்டியில் ஒன்றை கையில் தூக்கியபடி.

பார்த்தசாரதி ஆச்சரியமாக பார்த்து விட்டு, “சொல்லவே இல்லையே.. எப்போ ஓகே ஆச்சு?” என்று விசாரித்தான்.

“எனக்கே தெரியாது அத்தான். நானும் சாக் ஆகி தான் நிக்கிறேன். உள்ள போனா தான் தெரியும் வாங்க” என்றவன் மணிகர்ணிகாவோடு பெட்டியையும் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

One Comment

Leave a Reply