வரம் 2

Loading

காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்க அரசேந்திரனும் மணிகர்ணிகாவும் ஒன்றாக கண் விழித்தனர். இரவு அடிக்கடி எழுந்து அவளது காய்ச்சல் சரியாகி விட்டதா என்று பார்த்துக் கொண்டே இருந்தான். நன்றாக குறைந்த பிறகே அவனும் தூங்கினான்.

கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தவன் மணிகர்ணிகாவை தொட்டுப்பார்த்தான். காய்ச்சல் சுத்தமாக காணாமல் போயிருந்தது.

தன் கைபேசி இசைக்க, எடுத்துப்பார்த்தான். அஞ்சனாவின் பெயர்.

“என்ன அஞ்சு?”

“டோர் ஓபன் பண்ணு அரசு”

“இரு வர்ரேன்” என்று எழுந்து சென்று கதவை திறந்தான்.

உடனே உள்ளே ஓடி வந்தவள், மகளை தொட்டுப்பார்த்தாள்.

“ஃபீவர் இல்ல” என்றவளுக்கு அப்போது தான் மூச்சே சீராக வந்தது.

“ம்ம்.. நைட்டே சரியாகிட்டா”

மணிகர்ணிகா அன்னையின் ஸ்பரிசத்தில் அசைந்து எழுந்து விட்டாள்.

“ம்மா” என்று வேகமாக அஞ்சனாவிடம் பாய, அள்ளி எடுத்துக் கொண்டாள் மகளை.

“என்னடா இது? ஏன் செல்லத்துக்கு காய்ச்சல் வந்துச்சு?” என்று கொஞ்ச, மணியும் கொஞ்ச ஆரம்பித்தாள்.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, “அத்தான் தான்” என்றாள் அஞ்சனா.

உடனே சென்று அவருக்குக் கதவைத் திறந்து விட்டான் அரசன்.

“குட் மார்னிங் அரசு”

“குட் மார்னிங் அத்தான்.”

“அப்பா” என்று மணி அவனிடம் தாவ, “அப்பா இன்னும் குளிக்கலடா. குளிச்சுட்டு வர்ரேன்” என்றாலும் கண்ணால் மகளை ஆராய்ந்து விட்டு திருப்தி பட்டுக் கொண்டான்.

“ஓகே பா”

“டாக்டர் என்ன சொன்னாங்க? என்ன மருந்து கொடுத்தாங்க?” என்று அஞ்சனா கேள்வியை அடுக்க, அரசன் மருந்தை கை காட்டி விட்டு குளியலறை பக்கம் சென்று விட்டான்.

அதை எல்லாம் ஆராய்ந்து கொண்டே, அஞ்சனா மகள் சொல்லும் கதையை உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

“ஊசி வலிக்கு மா” என்று இன்றும் தேய்க, “நல்லா வலிக்கட்டும். வாய் ஓவரா போச்சு. ஐஸ்க்ரீம் வேணும்னு அடம்பிடிச்சு சாப்பிட்டா அத்தான். என்னனு கேளுங்க உங்க மகள” என்று பார்த்தசாரதியிடம் கோர்த்து விட்டான்.

“மணி.. ஐஸ் சாப்பிட்டியா?”

“ஒன்னே ஒன்னு தான்பா” என்று மணி அப்பாவியாக முகத்தை சுருக்க, “அவ்வா..! பொய் அத்தான். ரெண்டு சாப்பிட்டா” என்றான் அரசன்.

பார்த்தசாரதி முறைக்க, “மாமா தான் நான் ஒன்னு கேட்டப்போ ரெண்டு வாங்குனாங்க” என்று மணிகர்ணிகா போட்டுக் கொடுத்தாள்.

“ஒன்னு எனக்கு வாங்குனேன். அதுல பாதிய புடுங்கி சாப்பிட்டது நீ”

“அது மேங்கோ ஃப்ளேவர். நல்லா இருந்துதா பார்த்தேன்”

இருவரும் பச்சைக்குழந்தை போல் சண்டை போட்டுக் கொண்டிருக்க, “அடடா.. போதும்பா. மணி இனிமே நிறைய ஐஸ் சாப்பிடக்கூடாது. நீயும் இனி இவ கேட்டா வாங்கித்தராத” என்று அஞ்சனா தான் நடுவே வந்து பிரச்சனையை முடித்தாள்.

அரசனின் கைபேசி மீண்டும் இசைக்க ஆரம்பிக்க, அதை எடுத்துக் கொண்டு அறையில் இருந்த பால்கனிக்கு சென்று விட்டான்.

பெற்றவர்கள் இருவரும் பிள்ளையை கவனித்து விட்டு, சாப்பிடக் கிளம்பினர்.

“அரசு?” என்று அவனை அழைக்க அவன், “நீங்க போங்க” என்று கையாட்டி விட்டு பேச்சைத்தொடர்ந்தான்.

அந்த ஹோட்டலில் இருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அரசன் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு உணவை ஆர்டர் கொடுத்து வைத்திருக்க, “தாங்க்ஸ் அத்தான். அவசரமா கிளம்பனும்” என்று வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

“எங்க?”

“இராமநாதபுரம்”

“ஓஓ” என்ற பார்த்தசாரதி மகளுக்கு ஊட்டும் வேலையைத்தொடர்ந்தான்.

“அஞ்சு நான் அவசரமா போகனும். நீ என் லக்கேஜ கொண்டு போயிடு”

“சரிடா”

“அப்படியே அம்மா கிட்டயும் சொல்லிடு”

“எதே?” என்று அதிர்ந்து போய் பார்த்தாள்.

அதுவரை அவளுமே இதை மறந்து போய் விட்டாள்.

“என்ன விளையாடுறியா?”

“சொல்லிடு. அவ்வளவு தான்”

“என்னால முடியாது. நீ போன போட்டு அம்மா கிட்ட சொல்லிட்டுப் போ”

“நானா?” என்று மெல்லிய குரலில் அலறியவன், “இல்ல இல்ல நீயே சொல்லு. நான் கால் பண்ணா வசம்மா மாட்டுவேன்” என்று பொறுப்பை அக்காவின் தலையில் தள்ளினான்.

“ஹி ஹி.. மாமா பாட்டிக்கு பயப்படுறாங்க” என்று மணிகர்ணிகா சிரிக்க, பார்த்தசாரதிக்கும் சிரிப்பு வந்தது.

“நீ உன் அம்மாக்கு பயப்பட மாட்டியா?” என்று அரசன் முறைக்க, “என் அம்மா ஸ்வீட். பயப்பட மாட்டேன்” என்றாள்.

பார்த்தசாரதி வாய்விட்டு சிரித்து விட்டான்.

“அத்தான்.. யூ டூ புரூட்டஸ்?”

“நீ தான் தைரியமான ஆளாச்சே.. அத்தைக்கு கால் பண்ணி நீ ஊருக்கு வரலனு சொல்லு. சொல்லித்தான் பாரு”

“நான் எங்கயா அப்படிச்சொன்னேன்? உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்கிடாதீங்க. நீ அம்மா கிட்ட சொல்லுற. அவ்வளவு தான். நான் போய் செக் அவுட் வேலைய பார்க்குறேன்” என்று கூறி விட்டு தண்ணீரை குடித்தபடி எழுந்து ஓடி விட்டான்.

அஞ்சனா தலையில் கைவைத்தாள்.

“போச்சு. ஏன் கூட்டிட்டு வரலனு என்னை நல்லா வாங்க போறாங்க”

“நீங்க என்ன ஐஸ்கிரீமா ம்மா? உங்கள வாங்க?” என்று மணிகர்ணிகா கேட்டு வைக்க, மகளை முறைக்க முடியாமல், சிரித்துக் கொண்டிருந்த கணவனை தான் முறைத்தாள்.

“என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு? சாப்பிடுங்க சீக்கிரம்” என்று மிரட்டி வைக்க, தந்தை மகள் இருவரும் பம்மியபடி சாப்பிட்டு முடித்தனர்.

அவர்கள் வரும் போதே அரசன் தயாராகி இருந்தான். அவனது உடைமைகளில் பாதியை அஞ்சனாவின் அறையில் வைத்து விட்டு தேவையானதை எடுத்துக் கொண்டான்.

“பை அத்தான். பை மணி. அஞ்சு பீ ஃசேப்டா. பை” என்று கூறி விட்டு வேகமாகக் கிளம்பி விட்டான்.

••••

“சாலி.. இங்க வாடா” என்று அன்னை கூப்பிட்டதும், வைசாலி வேகமாக அருகே சென்று நின்றாள்.

“இந்தா இதை எல்லாம் பீரோல வச்சுடு” என்று சேலை வகைகளை கொடுக்க, “எதுக்குமா இவ்வளவு?” என்று சலித்துக் கொண்டாள்.

“கல்யாணத்துக்கு அப்புறமும் சேலை கட்டாம இருப்பியா நீ?”

“அதுக்காக இவ்வளவு ரொம்ப ஓவர்”

சலித்துக் கொண்டே சேலைகளை அடுக்கி வைத்தாள் வைசாலி.

“சித்ரா” என்று கணவனின் குரல் கேட்க, “வந்துட்டேங்க” என்று வேகமாக சென்றார்.

“இந்தா.. பணத்த எடுத்துட்டு வந்துட்டேன். நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் தாலி செய்ய கொடுக்கும் போது, பாப்பாவுக்கு கொலுசு, ரெண்டு ஜோடி தோடு வாங்கனும்னு சொன்னல? போய் சேர்த்து வாங்கிட்டு வந்துடுவோம். பணத்த உள்ள வை”

“ப்பா..” என்று வைசாலி தண்ணீர் கொண்டு வந்தாள்.

“கொடுமா கொடு” என்று வேகமாக வாங்கிக் குடிக்க ஆரம்பிக்க, சித்ரா பணத்தோடு உள்ளே சென்று விட்டார்.

“இங்க வாடா” என்று மகளை அருகே அமர வைத்தார் ஜோதிலிங்கம்.

அவரருகே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்து கொண்டு, அவரை கேள்வியாக பார்த்தாள்.

“வேற எதாவது வேணுமா பாப்பா?”

“எதுபா?”

“கல்யாணத்துக்கு தான். எதுவும் வேணும்னா சொல்லு. அப்பா வாங்கிட்டு வர்ரேன்”

வைசாலி தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“ஏன்பா இப்படி அநியாயம் பண்ணுறீங்க? நான் ஒன்னும் குட்டி பாப்பா இல்லபா. நானே நிறைய சம்பாதிக்கிறேன். இருக்கதெல்லாம் எனக்கே போட்டு அனுப்பிடுவீங்க போல? அப்புறம் உங்களுக்கு எதுவும் மிஞ்சாதுபா”

“எங்களுக்கு எதுக்குடா? நீ நல்லா இருந்தா போதாதா?”

வைசாலி அவரை சலிப்பாக பார்த்தாள். ஜோதிலிங்கம் தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். அவரது வாழ்நாள் வருமானம் முழுவதுமே, மகளுக்காக செலவு செய்து கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கென சில சொத்துக்கள் இருந்தது. ஊரில் மரியாதையான குடும்பம் தான். ஆனால் வைசாலி ஒரே மகள். முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து, ஐந்து வயதில் இறந்து விட்டது.

அதன்பிறகு தவமிருந்து வைசாலியை பெற்றார் சித்ரா. பாப்பா, சாலி தவிர அவளை வேறு மாதிரி அழைத்ததே இல்லை. அவ்வளவு பாசம் அவள் மேல் வைத்திருந்தனர். சித்ராவிற்கு, வைசாலி பிறந்த சில வருடங்களில் இதயம் பலவீனபட்டு விட்டது. இன்று வரை, மாத்திரை மருந்துகளால் அவரது உயிரை பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வைசாலிக்கு உடனே திருமணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் பெற்றோர்களின் ஆசை என்பதால் ஒப்புக் கொண்டாள்.

மாதவன். அவனும் ஒரு மருத்துவன். வைசாலியை பார்த்துப் பிடித்துப்போய், அவன் குடும்பத்திடம் சொல்லி பெண் கேட்க அனுப்பி இருந்தான். கண்ணுக்கு லட்சணமாக மருத்துவனான மாதவனை மறுக்க இவர்களிடம் காரணமே இல்லாமல் போனது.

உடனே சம்மதித்து விட்டனர். இரண்டு மாதங்களுக்குப்பிறகு நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று கூற, வைசாலியின் வீட்டிலும் உடனே சம்மதம் சொல்லி விட்டனர்.

அவர்களுக்கும் மாதவனை பற்றி விசாரிக்க வேண்டியிருந்தது. விசாரித்தார்கள். அவன் மீது குறை என்று அவர்கள் காதில் எதுவுமே விழவில்லை.

மூவருக்கும் திருப்தியாகி விட, சொந்தபந்தகளும் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.

இதோ இரண்டு மாதங்களும் கடந்து, நாளை வைசாலிக்கும் மாதவனுக்கும் நிச்சயதார்த்தம்.

மாதவனின் குடும்பமே இராமநாதபுரத்தில் மகிழ்ச்சியாக வந்து இறங்க, வைசாலியின் சொந்தபந்தங்கள் அவர்களை வரவேற்றனர்.

மாதவன் காரை விட்டு இறங்கியதுமே, “மாப்பிள்ளை வந்தாச்சு” என்று ஆளாளுக்கு குரல் எழுப்பி, அவனை ராஜ உபச்சாரத்தோடு உள்ளே அழைத்துச் செல்ல, அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“ம்மா.. என்னமா இது?” என்று அவன் கூச்சத்தோடு மெதுவாக கேட்க, “பாசமா பண்ணுறாங்க. புதுமாப்பிள்ளைனா அப்படித்தான்டா.. கவனிப்பெல்லாம பலம்மா இருக்கும்” என்றார் அன்னை அருந்ததி.

“ஆமா அண்ணா.. ராஜ மரியாதை தான் என்ஜாய்” என்று சிரித்தாள் தங்கை மிருதுளா.

“எனக்கு ஷையா இருக்கு மிருது” என்று சிரித்துக் கொண்டாலும், மற்றவர்களின் கவனிப்பை புறக்கணிக்கவில்லை.

எல்லோரும் ஒரு பெரிய ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து நேராக நிச்சயம் நடக்கும் மண்டபத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தனர்.

மாதவனின் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். அவனுடைய தங்கை இருபது வயதுப்பெண்.

அவர்கள் பக்கம் நெருங்கிய சொந்தங்கள் வந்திருக்க, எல்லோருக்கும் தேவையானதை ஜோதிலிங்கமும் மாதவனின் தந்தை பிரபாகரனும் பார்த்துக் கொண்டனர்.

மாதவன் தனக்கென ஒதுக்கிய அறைக்குள் நுழைந்ததுமே, கைபேசியை எடுத்து வைசாலிக்கு அழைத்தான்.

“சொல்லுங்கபா”

“உன் ஊருக்கு வந்துட்டேன் வைசாலி”

“வெல்கம் வெல்கம்”

“நீ ஏன் உன் அம்மா அப்பா கூட வரல?”

“ஆசை தான். பிச்சுபுடுவாங்க”

“ஏன்டா?”

“கல்யாண பொண்ண கூட்டிட்டு அலைவாங்களா?”

“சரி போ. நீ கல்யாணத்துக்கு திருச்சி வந்து தான ஆகனும்? அப்ப பார்த்துக்கிறேன்”

“பார்க்கலாம் பார்க்கலாம். என்ன பண்ணுறீங்க? அத்த மாமா மிருது எல்லாரும் என்ன பண்ணுறாங்க?”

“அவங்க அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. ஃப்ரஸ் ஆகிட்டு சாப்பிட போகனும். நீ சாப்பிட்டியா?”

“ம்ம்.. இப்ப தான்.”

“நான் சாப்பிட்டு கால் பண்ணுறேன்”

“ஓகே”

கைபேசியை தூக்கிப்போட்டு விட்டு உடையை எடுத்துக் கொண்டு மாற்றச் சென்றனர். அரைமணி நேரத்தில், மிருதுளாவை தவிர மற்ற சொந்தபந்கங்களை அழைத்துக் கொண்டு சாப்பிடக்கிளம்பினான்.

அதுவரையும் ஜோதிலிங்கமும் சித்ராவும் உடன் இருந்தனர். அறை வாடகையோடு உணவிற்கான பணமும் கொடுத்து விடுவதால், அவரவருக்கு பிடித்ததை வாங்கிக் கொள்ள சொல்லி விட்டு பெற்றோருடன், மாதவன் வந்து தனியாக அமர்ந்தான்.

“பஃபே இருக்குமா. எதாவது உங்களுக்கு எடுத்துட்டு வரட்டா?” என்று கேட்க அருந்ததி தலையாட்டினார்.

பிரியாணி பன்னீர்மசாலாவை எடுத்துக் கொண்டிருந்தவன், அருகே நின்றிருந்தவனை பார்த்தான். அவன் மாதவனை கவனிக்கவில்லை.

மாதவன் வைத்து விட்ட கரண்டியை எடுத்து, தன் தட்டில் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு நகர, “நீங்க.. அரசன் தானே?” என்றான்.

அடுத்து எதை எடுக்கலாம் பார்வையால் தேடிக் கொண்டிருந்த அரசேந்திரன், மாதவனின் பக்கம் திரும்பினான்.

“நீங்க?”

“மாதவன்” என்றதுமே அரசேந்திரன் புருவம் உயர்த்தினான்.

“மாதவன்.. அந்த ஆக்ஸிடென்ட்ல பார்த்தோமே? கண்ணாடி போட்டுருக்கீங்களா.. அதான் அடையாளம் தெரியல. இப்போ கால் ஓகேவா?”

“ஐம் ஃபைன். அன்னைக்கு பேசவே முடியல. வாங்களேன் என் ஃபேமிலிய இன்ட்ரோ கொடுக்குறேன்” என்று கூற, “இங்க இருக்காங்களா?” என்று கேட்டான்.

“ஆமா வாங்க..” என்றவன், “ஓ.. சாப்பாடு எடுக்கனும்ல? எடுங்க வெயிட் பண்ணுறேன்” என்று நின்று கொண்டான்.

“பசிக்குது” என்று சிரித்த அரசேந்திரன், உணவை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டான்.

மாதவன் அவனை அழைத்துக் கொண்டு தன் குடும்பத்தினரிடம் வந்தான்.

“உட்காருங்க.. ம்மா.. இவர் அரசு. அன்னைக்கு ஆக்ஸிடென்ட்ல நம்மல ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போனவரு” என்று கூறவும், அருந்ததி அரசேந்திரனிடம் பேச ஆரம்பித்தார்.

“அன்னைக்கு உங்கள தேடுனோம்பா. நீங்க எந்த டீடைலும் கொடுக்காம போயிட்டீங்க. ரொம்ப நன்றிபா”

“இருக்கட்டும்ங்க”

“அப்பவே நிறைய நன்றி சொல்லனும்னு இருந்தோம்பா. உன்னை எங்கயும் பிடிக்க முடியல. நீ சென்னை இல்லையா?” பிரபாகரன்.

“இல்ல சார். அங்க ஒரு வேலை விசயமா வந்தேன். உடனே கிளம்ப வேண்டியதாகிடுச்சு”

“பட் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். அன்னைக்கு உங்க ஹெல்ப் கிடைக்கலனா ரோட்டுலயே இருந்துருப்போம்” மாதவன்.

“இருக்கட்டும் டாக்டர். இது பெரிய விசயமில்ல. திரும்ப திரும்ப தாங்க்ஸ் சொல்லிட்டு இருக்கீங்க”

அரசேந்திரன் புன்னகைக்கவும், மூவரும் சகஜமாக பேசினர். அவனை பற்றி விசாரித்து விட்டு தங்களை பற்றியும் கூறினர்.

“எனக்கு நாளைக்கு என்கேஜ்மெண்ட். நீங்க கண்டிப்பா வரனும்”

“வாவ்! வாழ்த்துக்கள் டாக்டர்” என்று கையை தூக்கியவன், “எச்சிக்கை” என்று சிரித்தான்.

“ரொம்ப தாங்க்ஸ். ஆனா நீங்க கண்டிப்பா வரனும். வேற வேலை இல்லையே? இங்க எதாவது வேலைக்காக வந்தீங்களா?”

“ஆமா.. வேலை தான்”

“நாளைக்கு ஈவ்னிங் ஜஸ்ட் டூ ஹர்ஸ் என்கேஜ்மெண்ட்டுக்கு வந்துட்டு போங்களேன்”

“ஆமா தம்பி வாங்களேன்.” என்று மாதவனின் பெற்றோரும் வற்புறுத்த, “ஓகே டைம் இடம் சொல்லுங்க. நான் நேரா அங்க வந்துடுறேன். பட் லேட்டா வந்தா கோச்சுக்கக்கூடாது” என்று கூறி விட்டு, முகவரியை வாங்கிக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும் அரசேந்திரன் கிளம்பி விட, மாதவன் தன் சொந்தபந்தங்களை கவனித்தான்.

•••

இரவு, மருதாணி வைத்துக் கொண்டு தூக்கம் வராமல் தொலைகாட்சியில் கண்ணாக இருந்தாள் வைசாலி.

“சாலி தூங்கு” என்று அவளது அத்தை அதட்டியபடி வந்து அமர, “தூக்கம் வரல அத்த” என்றாள்.

“அப்படித்தான் சந்தோசத்துல தூக்கம் வராது. அதுக்காக முழிச்சுட்டே இருப்பியா? கண்ண மூடி படு” என்று அவளுக்கு அக்கா முறை பெண் வந்தாள்.

“இந்த மருதாணி கொஞ்சம் காயட்டும். இப்படியே படுத்தா பெட்ல பட்டுரும்”

“இதுக்கு தான் கோன் வைக்க சொன்னேன். சட்டுனு காஞ்சுருக்கும்”

“அது எனக்கு பிடிக்கலையே”

“இப்படியே வாய் பேசிட்டு இருக்காம படுங்க” என்று அத்தை அதட்டியதும், இருவரும் படுத்துக் கொண்டனர்.

சில நிமிடங்களில் வைசாலியின் கைபேசி அதிர, எட்டிப் பார்த்தாள். மாதவனின் பெயர் மின்னி மறைந்தது.

எப்படி எடுப்பது என்று தெரியாமல் வைசாலி தடுமாற, அலளுடைய அக்கா எடுத்து காதருகே வைத்தாள்.

“வைசு.. என்ன பண்ணுற?”

“சாப்பிட்டு மருதாணி வச்சு படுத்துட்டேன். நீங்க?”

“நான் உன் கிட்ட பேச ரூம்க்கு வந்தேன்”

“ஹி ஹி. அக்கா ஃபோன என் காதுல வச்சு பிடிச்சுட்டு உட்கார்ந்து இருக்கா”

“என்னது?” என்று புரியாமல் குழம்பியவன், “ஓஓ.. பேச முடியாதா?” என்று கேட்டான்.

“ம்ம்”

“சரி விடு. நாளைக்கு ஈவ்னிங் பேசலாம்” என்று சற்று உள்ளே போன குரலில் சொல்லி விட்டு, வைத்து விட்டான்.

வைசாலி அக்காவை பார்த்து சிரிக்க, “போதும் போதும். படு.” என்று சிரித்துக் கொண்டே படுத்து விட்டனர்.

அடுத்த நாள் மாலை, எல்லோரும் பரபரப்பாக நிச்சயதார்த்த வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட, வரவேற்க சென்றனர். வைசாலி தன் சேலையை பார்த்தாள்.

நன்றாகவே கட்டி இருந்தாலும், என்னவோ சரியாக கட்டாதது போல் எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

“இது லூசா இருக்கு. இங்க அன்கம்ஃபர்டபில் ஃபீல்” என்று கூறி, பல தடவை மாற்ற வைத்தாள்.

அவளுக்கு புடவை கட்டி விட்டவர்கள் தான் நொந்து விட்டனர்.

“மாப்பிள்ளை வீடே வந்துட்டாங்க. நீ இன்னும். சேலைய பார்த்துட்டே இரு” என்று அவளது அத்தை தலையில் கொட்டி விட்டு, பூவை வைத்து விட்டார்.

“சபையில போகும் போது சேலை பங்கமா இருந்துட கூடாது அத்தை. அப்புறம் என் இமேஜ் டேமேஜ் ஆகிடும்”

“ஆகிட்டாலும்” என்று வைசாலியின் நண்பி ஒருத்தி நொடித்துக் கொண்டு, கண் மை தீட்டி முடித்தாள்.

சில நொடிகளில் அந்த மண்டபம் விழாக்கோலம் பூண்டது.

பெரியவர்கள் எல்லோரும் நிச்சயபத்திரிக்கை எழுதும் வேலையில் இருக்க, மாதவன் மட்டும் கைபேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றான்.

“அப்படியே லெஃப்ட் வாங்க. நான் வெளிய தான் நிக்கிறேன்” என்று கூறியவன், தூரமாக வந்து கொண்டிருந்த அரசேந்திரனை பார்த்து கையசைத்தான்.

“எஸ் பார்த்துட்டேன்” என்ற அரசன் மாதவனிடம் வந்து சேர்ந்தான்.

“வாங்க வாங்க. லேட் ஆகும்னு நினைச்சேன். சீக்கிரம் வந்துட்டீங்க”

“ஆனா சீக்கிரம் கிளம்பிடுவேன்.” அரசேந்திரன் சிரிப்போடு கூறினான்.

“முதல்ல உள்ள வாங்க”

அரசனை உள்ளே அழைத்துச் செல்ல, வைசாலி மாதவனின் குடும்பத்தோடு பேசிக் கொண்டிருந்தாள்.

“அதோ பொண்ணு” என்று அரசனுக்கு காட்ட, அவன் அதிர்ந்து நின்று விட்டான்.

பக்கவாட்டில் பார்த்த போதே அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

‘லாலி மாதிரி இருக்கே இந்த பொண்ணு’ என்று யோசித்துக் கொண்டே வந்தவன், அவள் திரும்பியதுமே அதிர்ச்சி அடைந்தான்.

‘லாலியே தான்’ என்று அதிர்ச்சியோடு நின்றவனை, மாதவன் கேள்வியாக பார்த்தான்.

“அரசன்?”

“ம்ம்.. வைசாலி என் ஸ்கூல் ஃப்ரண்ட்”

மொட்டையாக சொல்லி விட, இப்போது மாதவன் ஆச்சரியமாக பார்த்தான்.

வைசாலி மாதவனை தேடி கண்களை சுழட்ட, அரசனோடு நின்றிருந்தவன் கண்ணில் விழுந்தான்.

வைசாலிக்கு அதிர்ச்சி அல்ல ஆனந்த அதிர்ச்சி.

‘உலகம் ரொம்ப ரொம்ப சுருங்கிடுச்சு போல’ என்று குதூகலமாக நினைக்க, மாதவன் கையசைத்து அவளை அருகே அழைத்தான்.

வைசாலியின் தோழிகள் உறவுப்பெண்கள் எல்லோரும் இதைக்கண்டு சிரிக்க, “உஸ்” என்று அடக்கி விட்டு மாதவனை நோக்கிச் சென்றாள்.

“ஹாய். எங்க போயிருந்தீங்க? ஆமா யாரு இது?”

சிரிப்பை அடக்க முயன்று முடியாத குரலில், அரசனை பார்த்துக் கேட்டாள். அது வரை அதிர்ச்சியில் இருந்த அரசன் கூட வைசாலியின் பேச்சில், மெல்ல புன்னகைத்தான்.

“இவரா? என்னோட ஃப்ரண்ட்”

“ஃப்ரண்டா?” என்று வைசாலி சந்தேகமாக கேட்க, “ஆமா.” என்றான்.

“உங்க பெரென்னங்க?” என்று வைசாலி அப்பாவியாக கேட்க, மாதவனுக்கு கூட சிரிப்பு வந்தது.

அவளது இந்த குறும்புத்தனம் விளையாட்டுத்தனம் தான் எப்போதும் அவனை கவர்ந்து இழுப்பது. அதை ரசித்து தான் திருமணம் வரை வந்திருக்கிறான்.

“அரசன்”

“ஓஓ.. அரசன் சோப்பு கம்பெனி உங்களோடதா?”

வைசாலி கிண்டலாக கேட்க, அரசேந்திரனுக்கு ஒரு நொடி அந்த பேருந்துக்கு சென்று விட்டது போல் இருந்தது. இடையில் இத்தனை வருடம் எதுவுமே மாறாதது போல் ஒரு தோற்றம். மனம் உணர்ச்சிவசப்படத் தயாராக, அதை தலையில் தட்டி விட்டான்.

“இல்லங்க. நாங்க சோப்பு கம்பெனி எதுவும் வைக்கல. உங்க பெரென்னங்க?”

அரசன் அமைதியாக கேட்க, “வைசாலி” என்றாள் முன்னெச்சரிக்கையோடு.

“ஓஓ.. நான் கூட முட்டக்கண்ணினு வச்சுருப்பாங்களோனு நினைச்சுட்டேன்”

அரசன் கிண்டலாக கூற, வைசாலி இடுப்பில் கைவைத்து முறைக்க, மாதவன் சிரித்து விட்டான்.

“போதும்பா உங்க விளையாட்டு”

“இவங்க என் ஸ்கூல் சீனியர். ஃப்ரண்ட்” என்று வைசாலி கூற, “வந்ததுமே சொல்லிட்டாரு” என்றான் மாதவன்.

வைசாலி அரசனிடம் பேசும் முன்பு, “சாலி இங்க வா” என்று சித்ரா அழைக்க, “மாதவா” என்று பிரபாகரன் அழைத்தார்.

“வாங்க அரசன் உங்கள முன்னாடி உட்கார வைக்கிறேன்”

“அச்சோ வேணாம். நீங்க போங்க. நான் இங்கயே உட்கார்ந்துக்குறேன்” என்று கூறி விட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

‘லாலிக்கு மேரேஜ்!’ என்று ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் நினைத்தபடி அவர்களை வேடிக்கை பார்த்தான்.

Leave a Reply