வரம் 24

Loading

வைசாலி க்ளினிக்கில் அமர்ந்து இருந்தாள். பெரிதாக ஆட்கள் வராததால், தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க, நர்ஸ் வந்து நின்றாள்.

“மேடம்.. உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க”

“யாரு?” என்று வேலையை விடாமல் கேட்டவள், “நான்” என்ற குரலில் வேகமாக நிமிர்ந்தாள்.

நர்ஸ்க்கு பின்னால் மாதவன் நின்றிருந்தான்.

‘இவன் எங்க இங்க?’ என்று அதிர்ந்தாலும், “உள்ள வாங்க மாதவன். நீங்க போங்க” என்று நர்ஸை அனுப்பி வைத்தாள்.

மாதவன் உள்ளே வந்ததும், “உட்காருங்க” என்று நாற்காலியை காட்டினாள்.

அவளது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான். வைசாலியும் அவனை ஆராய்ந்தாளே தவிர, கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாத பார்வை பார்த்து வைத்தாள்.

மருத்துவன் என்ற மிடுக்கோடு ஜொலிக்கும் மாதவன் காணாமல் போய், உடல் இளைத்து முகம் கருத்து அமர்ந்து இருந்தான்.

அவனது பார்வை வைசாலியை ஆராய்ந்து கொண்டிருக்க, “சொல்லுங்க” என்று கேட்டவள் குரலில் விலகல் வெளிப்படையாக தெரிந்தது.

“எப்படி இருக்க வைசு?”

“ஃபைன்.”

“இங்க எப்போ சேர்ந்த?”

“எயிட் மன்த்ஸ் இருக்கும்”

வந்த விசயத்தை அவளே கேட்பாள் என்று மாதவன் எதிர் பார்த்தான். இல்லை. கேட்கவில்லை. சாதாரணமாக அமர்ந்து இருந்தாள்.

“கல்யாணமா வைசு?” என்று அவனே கேட்டான்.

வைசாலி தலையை மட்டும் அசைத்தாள்.

“யாரு கூட?”

தெரிந்திருந்தாலும் கேட்டான். அவளது உணர்வுகளை ஆராய்ந்து கொண்டே.

“அரசேந்திரன்” என்றவள் முகத்தில், குற்ற உணர்ச்சியை எதிர்பார்த்து ஏமாந்து போனான் அவன்.

பார்வை வைசாலியை வெறிக்க, வைசாலிக்கு உள்ளம் எச்சரித்தது.

‘சரியில்லயே’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அந்த துரோகிய கல்யாணம் பண்ண போறியா வைசு?”

“துரோகியா? யாரு?”

“அவன் தான். பச்ச துரோகி. நமக்கு துரோகம் பண்ணவன கல்யாணம் பண்ண போற?”

“அரசன் எனக்கு துரோகம் பண்ணது இல்ல மாதவன்”

“நல்லவன் மாதிரி நடிச்சு நம்ம கல்யாணத்த நிறுத்தி, இப்ப உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணுறான். இது துரோகம் இல்லையா?”

“அவர் நடிக்க வேண்டிய அவசியம் இல்ல. அவரால கல்யாணமும் நிக்கல”

“அவனால தான் நின்னுச்சு. கூட இருந்தே குழி பறிச்சுட்டான் பாவி”

“தப்பு மாதவன். ரொம்ப தப்பா பேசுறீங்க. உங்க தப்ப அரசன் மேல தூக்கி போடாதீங்க. நீங்க தப்பு பண்ணி ஜெயிலுக்கு போனதுக்கு அரசன துரோகினு சொல்லுறீங்க?”

மாதவன் முகம், சட்டென அறை வாங்கியது போல் கறுத்து விட்டது. ஆனால் சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டான்.

“ஆமா வைசு.. நான் தப்பு பண்ணேன் தான். ஆனா அத வேணும்னே நம்ம கல்யாணத்தப்போ இழுத்து, நம்மல பிரிச்சு விட்டுட்டான்”

வைசாலிக்கு எரிச்சலாக இருந்தது. இவன் செய்த தவறை விட்டு விட்டு, அரசன் செய்ததை குற்றமாக பேசுகிறான்.

“இங்க பாருங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு. இப்ப எதுக்கு இங்க வந்து இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?”

“இந்த கல்யாணம் நடக்க கூடாது வைசு. நிறுத்திடு” என்று அழுத்தமாக சொன்னவனை, அதிர்ந்து பார்த்தாள்.

“நிறுத்திட்டு?”

“நிறுத்திட்டு எனக்காக வெயிட் பண்ணு வைசு. வெறும் நாலு வருசம் தான். சீக்கிரம் போயிடும்” என்று தவிப்பாக கூறினான்.

இந்த பதிலை எதிர் பார்க்காமல், வைசாலி அசந்து போனாள்.

‘வெயிட் பண்ணுறதா!’ என்று ஆச்சரியமாக நினைத்தவள், உடனே கோபமாக அவனை பார்த்தாள்.

“நான் ஏன் வெயிட் பண்ணனும்?”

பல்லைக்கடித்தபடி வைசாலி கேட்க, மாதவன் இப்போது அதிர்ந்தான்.

“வைசு..”

“வைசாலி.. டாக்டர் வைசாலி.. இந்த உரிமையா கூப்பிடுறத இதோட நிறுத்திடுங்க மிஸ்டர். எந்த தைரியத்துல வந்து இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க? அதுவும் நான் வெயிட் பண்ணனுமாமே? எதுக்கு?”

“வைசு.. நாம கல்யாணம்..”

“பண்ண போனோம். அதான? ஆனா நடக்கல. ஏன் நடக்கல? நீங்க ஒரு பெரிய தப்ப பண்ணி, அதை மறைச்சுட்டு வாழ்ந்துருக்கீங்க. அதுக்காக போலீஸ் உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டுருச்சு. அதுனால கல்யாணம் நடக்கல. அதோட முடிஞ்சு போச்சு எல்லாம். இப்ப வந்து வெயிட் பண்ணு.. கல்யாணத்த நிறுத்துனு எந்த அடிப்படியில பேசுறீங்க?”

“வைசு.. ஏன் இப்படி பேசுற? அந்த துரோகி நம்மல பிரிக்க பார்க்குறான். அதான் கல்யாணத்த நிறுத்திட்டான்.”

“அவர துரோகினு சொல்லாதீங்க. துரோகம் பண்ணது நீங்க.” என்று பட்டென கூறியவள் அவனை அழுத்தமாக பார்த்தபடி, “உங்க தங்கச்சி சென்னையில காலேஜ்ல படிச்சுட்டு இருக்கா இல்ல?” என்று நக்கலாக கேட்டாள்.

மாதவன் முகம் மீண்டும் அவமானத்தில் கறுத்தது.

“அது.. வைசு”

“ஸ்டாப் இட் மேன். வைசாலி. ரிமம்பர் இட். அதை கூட ஒரு வகையில மன்னிச்சுடுவேன். ஏன்னா அது மிருதுளாவோட பர்ஸ்னல். உங்க குடும்ப பர்ஸ்னல். ஆனா ரெண்டு உயிர அசால்ட்ட கொன்னுட்டு, நல்லவன் மாதிரி இருந்தீங்க பாரு?”

“வைசு… லிசன்.. எனக்கு அந்த பொண்ணோட சாவ பத்தி அப்போ தெரியாது”

“அதுக்கப்புறம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல தான? கோடி கோடியா பணத்த தூக்கி கொடுக்கும் போதே, அங்க ஒரு தப்பு இருக்கும்னு யோசிக்க தெரியாத அளவு குழந்தையா நீங்க? ரப்பிஷ்.”

உள்ளே இருந்த வெறுப்பை மொத்தமாக காட்டியவள், உடனே தணிந்தாள்.

“இப்ப கிளம்புங்க. எனக்கு வேலை இருக்கு” என்று அவள் திரும்பிக் கொள்ள, மாதவனுக்கு கோபம் வந்து விட்டது.

“இப்ப கல்யாணத்த நிறுத்த முடியுமா முடியாதா?”

“ப்ச்ச்.. ஏன் நிறுத்தனும்?”

“இந்த கல்யாணம் நடக்க கூடாது”

“ஏன்னு கேட்டேன்”

“அந்த துரோகிய நீ கல்யாணம் பண்ண கூடாது”

“அது என் விருப்பம். யார கல்யாணம் பண்ணனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். நீங்க அதுல தலையிட முடியாது.”

“ஏய்.. சொல்லிட்டே இருக்கேன்” என்று மேசையை ஓங்கி தட்ட, வைசாலி திடுக்கிட்டாள்.

ஆனால், அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

“நானும் சொல்லிட்டு தான் இருக்கேன். வெளிய போங்க”

“வைசு.. கடைசியா சொல்லுறேன். இந்த கல்யாணத்த நிறுத்தப்போறியா இல்லையா?”

“லூசா நீங்க? என் கல்யாணத்த நிறுத்த சொல்லுறதுக்கு நீங்க யாரு? அரசன எனக்கு பிடிச்சு இருக்கு. அவருக்கு என்னை பிடிச்சு இருக்கு. நாங்க கல்யாணம் பண்ண தான் செய்வோம்”

வைசாலி வேகமாக சொல்லிய வார்த்தைகளில், மாதவனின் கோபம் உட்சத்தை தொட்டு விட்டது.

“ஏய்” என்று வேகமாக எழ, அவன் அமர்ந்து இருந்த நாற்காலி கீழே விழுந்தது.

அவன் எழுந்த வேகத்தில் வைசாலி பயந்து விட்டாள்.

“அவன பிடிச்சுருக்கா உனக்கு? எப்படி எப்படி? எப்படி ஏமாத்துனான் உன்னை? சொல்லு.. அவன எப்படி பிடிச்சது உனக்கு?”

மாதவன் கத்த, வைசாலி பயத்தை உதறி வெறுப்பாக பார்த்தாள்.

“அவுட்” என்று வாசலை காட்டியவளும் எழுந்து விட்டாள்.

இவனிடம் இனி பேசுவது ஆபத்து என்று மூளை எச்சரிக்க, அவனை வெளியே துரத்த முனைந்தாள். மேசை மீது மின்னி மறைந்து கொண்டிருந்த கைபேசியை அவள் கவனிக்கவில்லை.

“மாட்டேன். சொல்லு.. எப்படி பிடிக்கும்? வெறும் ஃப்ரண்ட்டுனு சொல்லிட்டு, என்னை ஏமாத்தி உள்ள தள்ளிட்டு, உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணுறானா? விடமாட்டேன். விடவே மாட்டேன்” என்று ஆக்ரோசமாக பேசியவன், மேசை மிதிருந்த மொத்த பொருட்களையும் கீழே தள்ளி விட்டான்.

அதில் பயந்து போய் வைசாலி அலறி விட, நர்ஸ் வேகமாக உள்ளே ஓடி வந்தாள்.

“என்ன நடக்குது? சார்.. வெளிய போங்க..” என்று நர்ஸ் கத்த, வைசாலி பயந்து போய் அந்த மேசையை பார்த்தாள்.

பொருட்கள் எல்லாம் கண்டபடி சிதறிக் கிடந்தது.

“நீ கல்யாணத்த நிறுத்தல.. நான் நிறுத்துவேன். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு பார்த்துடுறேன்.” என்று விரல் நீட்டி எச்சரிக்க, வைசாலிக்கு பேச்சே வரவில்லை.

“சார்.. போறீங்களா? வாட்ச்மேன கூப்பிடவா?” என்று அதட்டிக் கொண்டிருந்தாள் நர்ஸ்.

மருத்துவமனையில் இவர்களை தவிர யாரும் இல்லை.

“என்னை ஏமாத்துற யாரையும் நான் சும்மா விட மாட்டேன். அது நீயா இருந்தாலும் சரி. சொல்லி வை அந்த துரோகி கிட்ட.”

“என்ன சொல்லனும்?” என்று கடுமையாக கேட்ட குரலில், மாதவனின் உடல் விறைத்தது.

அரசன் உள்ளே வந்து நின்றான். அவனை பார்த்ததும் தான் வைசாலிக்கு மூச்சே வந்தது.

“என்ன சொல்லனும் மாதவன்? நேராவே சொல்லுங்க” என்று கேட்டவன், அந்த அறையை நன்றாக பார்த்தான்.

“நீங்க போங்க சிஸ்டர். நாங்க பார்த்துக்கிறோம்” என்று நர்ஸை அனுப்ப அவள் மாதவனை பார்த்தாள்.

“சார்..”

“போங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்று அனுப்பி வைத்து விட்டு, நேராக வைசாலியின் அருகே வந்தான்.

தரையில் சிதறிக் கிடந்த பொருட்களை பார்த்து, அதில் விழுந்து கிடந்த வைசாலியின் கைபேசியை எடுத்துக் கொண்டான்.

“துரோகி..” என்று மாதவன் வெறுப்பாக கூற, அரசனிடம் எந்த மாற்றமும் வரவில்லை.

“இப்ப எதுக்காக இதெல்லாம்?” என்று சிதறிய பொருட்களை காட்டி கேட்க, “கல்யாணம் வச்சுருக்கியாமே.. எப்படி நடக்குதுனு பார்த்துடுறேன்” என்றான்.

வைசாலியை திரும்பிப் பார்த்த அரசன், உடனே மேசையை திறந்து தேட ஆரம்பித்தான். பத்திரிக்கைகள் மொத்தமாக கிடைக்க, அதை மொத்தமாக எடுத்தவன், சிதறிக் கிடந்த பொருளில் இருந்து பேனாவை எடுத்தான்.

பத்திரிக்கையின் முன்னால் மாதவன் பெயரை எழுதிவிட்டு, வைசாலியின் கையைப்பிடித்துக் கொண்டான்.

“ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் பத்திரிக்கை வைக்கிறதுக்கு தான் வந்தேன் மாதவன். இந்தாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம். வந்து எப்படி நடக்குதுனு பாருங்க” என்று நீட்ட, மாதவன் அந்த பத்திரிக்கையை வெறித்துப் பார்த்தான்.

கூடவே வைசாலி அரசனின் இணைந்த கைகளை பார்த்தான்.

“வேணாம் அரசன். என்னை வெறியேத்தாத” என்று மாதவன் சத்தமிட பத்திரிக்கையை அவன் முன்னால் மேசையில் வைத்தவன், “நான் எதுவும் பண்ணல மாதவன். நடந்த தப்புக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்ல. நீங்க என்னோட ஃப்ரண்ட். அந்த நினைப்புல இன்வைட் பண்ணுறேன். அவ்வளவு தான்.” என்று அமைதியாக பேசினான்.

“ஃப்ரண்டா? யாருடா ஃப்ரண்ட்? நீ ஃப்ரண்ட்டா? பச்ச துரோகி” என்றவன் அந்த பத்திரிக்கையை கீழே தள்ளி விட்டான்.

“நான் துரோகம் எதுவும் பண்ணல மாதவன். என் கடமைய தான் செஞ்சேன் “

“பொல்லாத கடமை” என்றவன், காலுக்கடியில் கிடந்த பத்திரிக்கையை மிதித்தான்.

“உங்க கல்யாணம் நடக்காது.. நடக்க விட மாட்டேன். பார்த்துட்டே இருங்க” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.

வைசாலி, “அம்மா..” என்று பெருமூச்சோடு அரசனின் தோளில் சாய்ந்து விட்டாள்.

“பயந்தே போயிட்டேன்”

“ஏன் பயம்?” என்று அரசன் புன்னகையோடு தலையை பிடித்து ஆட்ட, “எல்லாத்தையும் தள்ளி விட்டதுல தான்” என்றாள்.

“இத சரி பண்ணவோம் வா” என்றவன், குனிந்து ஒவ்வொன்றாய் எடுக்க வைசாலியும் எடுத்து வைத்தாள்.

“இவர் எப்போ வெளிய வந்தாரு?”

“அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம். அதுக்காக பெயில்ல வந்து இருக்காரு”

“ஓஓ..”

“இடையில நம்ம கல்யாண விசயம் தெரிஞ்சுடுச்சு போல”

“ஆமா.. நீ என்ன லூசா? அவனே கல்யாணத்த நிறுத்துறேன்னு சொல்லிட்டு நிக்கிறான். அவன் கிட்ட பத்திரிக்கைய நீட்டி வந்து நிறுத்துங்குற?”

வைசாலி முறைக்க, அரசன் சிரித்து விட்டான்.

“நான் நிறுத்த சொல்லல. எப்படி நடக்குதுனு வந்து பாருனு தான் கூப்பிட்டேன்”

“ரொம்ப முக்கியம். எதுக்கு கொடுத்த?”

“ஒரு காலத்துல ஃப்ரண்டா இருந்தவர் தானே?”

“அதுக்கு? துரோகினு சொல்லிட்டு போறான். நீ ஃப்ரண்ட்டுனு சொல்லி வெறுப்பேத்திட்டு இருக்க”

“விடு லாலி. பார்த்துக்கலாம்” என்றவன் பொருட்களை எடுத்து மேசையில் வைத்தான்.

“எனக்கு ஒரு டவுட்டு” என்று திடீரென கேட்டு குறும்பாக வைசாலி புன்னகைக்க, அரசன் புருவம் உயர்த்தினான்.

“யூஸ்வல்லா போலீஸ்னா கடைசில தான வருவாங்க. நீங்க எப்படி கரெக்ட்டா வந்தீங்க?”

கேட்டு விட்டு வைசாலி சிரிப்பை அடக்க, அரசன் பக்கென சிரித்து விட்டான்.

“அதெல்லாம் அறிவாளிங்களுக்கு தான் புரியும் லாலி. உனக்கு புரியாது” என்று அரசனும் வம்பிழுக்க, “அறிவில்லாம தான் டாக்டரா உட்கார்ந்து இருக்கனா?” என்று முறைத்தாள்.

“அதுல எனக்கு இன்னும் டவுட் இருக்கு. நீ பிட் அடிக்கும் போது ஒருத்தர் கூடவா கண்டு பிடிக்கல?”

உடனே கோபம் வந்தாலும் உதட்டை சுழித்துக் கொண்டு, “நீங்க எக்ஸாம் எழுதும் போது வந்த அதே எக்ஸ்டர்னல் தான் நான் எழுதும் போதும் வந்தார். அதான் ரெண்டு பேருமே தப்பிச்சுட்டோம்” என்று அவனையும் உள்ளே இழுத்தாள்.

அரசன் அடக்க மாட்டாமல் சிரிக்க “பேச்ச மாத்தாதீங்க. நீங்க லாஸ்ட்ல தான வந்துருக்கனும்? இப்படி கரெக்ட்டா வந்தா போலீஸ் மானம் என்னாகுறது?” என்று வம்பிழுத்தாள்.

“அதான்.. அறிவாளிங்களுக்கு மட்டும் தான் புரியும்னு சொல்லுறேன்ல? இருந்தாலும் உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன். போலீஸ் லாஸ்ட்ல வர்ரது கிடையாது. போலீஸ் வந்துட்டா அந்த பிரச்சனை முடிஞ்சுடும். மொத்தமும் அவங்க கண்ட்ரோல்க்கு வந்துடும். போலீஸ் வரலனா இன்னும் பிரச்சனை நடந்துட்டே தான் இருக்கும். ஆனா உன்னை மாதிரி அரை வேக்காடு எல்லாம், போலீஸ் லாஸ்ட்ல வருதுனு நினைச்சுக்கிறீங்க. அது போலீஸ் தப்பு இல்லமா”

“நான் அரை வேக்காடா?”

“இல்லனு சொல்ல தான் ஆசை”

“போயா” என்று அவன் தோளில் ஒரு அடி வைத்தாள்.

அன்று, நண்பர்களுக்கு உடன் பணிபுரிபவர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுக்கும் முடிவில் இருந்தாள் வைசாலி. அதற்காக தான் அரசனும் கிளம்பி வந்திருந்தான்.

வாசலில் நின்று வைசாலியை அழைக்க, அவள் ஏற்கவில்லை. மாதவன் தட்டி விட்டதில் ஏதோ அழுத்தி அழைப்பு ஏற்கப்பட்டு விட, வைசாலியின் கத்தல் தான் முதலில் கேட்டது.

மாதவனின் பேச்சும் நர்ஸின் பேச்சும் கேட்க, வேகமாக உள்ளே ஓடி வந்து விட்டான்.

இருவரும் உடன் பணிபுரிபவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்தனர்.

Leave a Reply