வரம் 26 (final)

Loading

ஆறு வருடங்களுக்கு பிறகு…

வைசாலி அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்க, “அரசன் போன் பண்ணானா சாலி?” என்று வந்து நின்றாள் அஞ்சனா.

அவள் கையில் நான்கு வயதே ஆன அஷ்வினி இருந்தாள்.

“இல்ல.. ஆனா மெஸேஜ் பார்த்துட்டாரு.. கிளம்பிருப்பாருனு நினைக்கிறேன்”

“சரி.. நீ சீக்கிரம் கிளம்பு. உன் மக அழ ஆரம்பிக்குறதுக்குள்ள”

“வந்துட்டேன் வந்துட்டேன்” என்று வேகமாக பூவை தலையில் வைத்துக் கொண்டே, மகளை பார்த்தாள்.

அவள் எப்போதடா அத்தையிடமிருந்து அன்னையிடம் தாவுவோம் என்று பார்த்துக் கொண்டாள்.

“இருங்கடா தங்கம்.. அம்மா பூ மட்டும் வச்சுக்கிறேன்” என்று கூறி விட்டு வேலையை முடித்து, கண்ணாடியில் பார்த்தாள்.

அலங்காரம் திருப்தியாய் இருந்ததும், மகளை வாங்கிக் கொண்டாள்.

“உன் மக ஏன் உன்னை மாதிரி இல்ல குச்சி மிட்டாய்? அரசன மாதிரி அடம்பிடிக்கிற பிள்ளைய பெத்து வச்சுருக்க. அடுத்து வர்ர புள்ளைய உன்னை மாதிரி வளர்த்து விடு சொல்லிட்டேன்”

அஞ்சனா கேலியாய் வம்பிழுக்க, ஒரு கையால் தன் நான்கு மாத வயிறை தடவிக் கொண்டவள், “பேசாம அவங்க அத்தை மாதிரி வளர்த்துடவா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

“டபுள் ஓகே. எனக்கு வந்த ரெண்டயும் பாரு.. அப்பாவ உரிச்சு வச்சு பிறந்துடுச்சுங்க. என்னை மாதிரி ஒன்னு கூட இல்ல. அதுனால என்னை மாதிரி வளர்த்து கொடு என் மருமகன.”

“உங்க ஒருத்தரையே அண்ணாவால சமாளிக்க முடியாது. இன்னொன்னா?”

“என்ன என் பேர் அடி படுது?” என்று பார்த்தசாரதி வர, அவனது இரண்டு கையையும் பிடித்துக் கொண்டு இரண்டு பிள்ளைகள் வந்தனர்.

ஒரு பக்கம் மணிகர்ணிக்கா. பதிமூன்று வயதில் பூப்பெய்திய பூரிப்பில் புதுப்பூவாக இருந்தாள். அவளோடு ஐந்து வயது நிரம்பிய மித்ரா. இருவரும் அப்பா செல்லம்.

“ரெண்டும் சாப்பிட்டுச்சுங்களா இல்லையா?” என்று அஞ்சனா கேட்க, “எல்லாம் ஆச்சு. உன்னை அத்த தேடுனாங்க. கூப்பிட தான் வந்தோம். நாங்க காருக்கு போறோம்” என்றான்.

அஞ்சனா அமுதவல்லியை தேடிச் சென்று விட, “அஷ்வினி.. மாமா கூட கார்ல போலாம் வர்ரீங்களா?” என்று கை நீட்ட, அவள் சற்றும் அசையவில்லை.

“அஷு பாப்பா.. என் கிட்ட வாங்க பார்க்கலாம்” என்று மணிகர்ணிக்கா அழைக்க அதற்கும் அஷ்வினி அசையவில்லை.

“அசருறாளா பாரேன்?” என்று மகளை முறைத்து வைத்தாள் வைசாலி.

“உங்க கூடவே வளர்ந்து வேற யாரு கிட்டயும் போக மாட்டேங்குறா பாப்பா..”

“இன்னைக்கு காத குத்துனப்புறம் என்ன பண்ண போறாளோ தெரியல” என்று வைசாலி சலிக்க, “பார்த்துக்கலாம். எல்லாரும் சேர்ந்து சமாளிச்சுடலாம்” என்ற பார்த்தசாரதி, எப்படியோ பேசி அஷ்வினியை அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்று விட்டான்.

ஊரில் கோவில் திருவிழா. இன்று வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றும் நாள். இன்று தான் அரசனின் மகள் அஷ்வினிக்கு, காது குத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

பிள்ளையின் தந்தையை தவிர, மொத்த குடும்பமும் தயாராகி இருக்க, அவசரமாக வந்து இறங்கினான் அரசன்.

“சாரி சாரி.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். குளிச்சுட்டு வர்ரேன்” என்று அவன் உள்ளே செல்ல, “இவனுக்கு எப்பவும் வேலை தான் முதல் பொண்டாட்டி.. எப்ப திருவிழானு வந்தாலும் வேலைய தான் கட்டிட்டு அழுவான்” என்று அஞ்சனா சலித்துக் கொண்டாள்.

“எதே? பொண்டாட்டியா? பொண்டாட்டி கிட்ட நேரத்த செலவு பண்ணிட்டாலும்.. வேணும்னா வேலை தான் மூத்த மகனு சொல்லலாம். எல்லா நேரமும் வேலைய பார்க்குறது. வீட்டுக்கு வந்தா மகள பார்க்குறது” என்று வைசாலி நொடித்துக் கொள்ள, அரசன் காதில் விழத்தான் செய்தது.

அவன் குளித்து கிளம்ப, எல்லோருமே கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். கொஞ்சம் கொஞ்சமாய் எல்லா சடங்குகளும் நடந்தேறி, அஷ்வினிக்கு பார்த்தசாரதியின் மடியில் வைத்து காதும் குத்தி விட்டனர்.

அப்போது வீறிட்டு அழ ஆரம்பித்தவள் தான், அரசனின் கையை விட்டு இறங்காமல் அழுது கொண்டே இருந்தாள்.

“நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு வேலை இருக்கு” என்று வைசாலி கிளம்பி விட்டாள்.

“மாமா.. நானும் இருக்கேன்” என்று மணிகர்ணிக்கா அரசனோடு அமர்ந்து விட, மித்ராவை தூக்கிக் கொண்டு அஞ்சனா வைசாலியோடு சென்று விட்டாள்.

நேற்று காலை தான் ஊருக்கு வந்திருந்தனர். அதனால் திருவிழாக்கடைகளை பார்க்க நேரமில்லை. இப்போது அஞ்சனா, வைசாலி, மித்ரா மூவரும் கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “அண்ணி” என்று ஒரு குரல் கேட்டது.

அஞ்சனா திரும்பிப் பார்க்க, மீனாட்சி வந்தாள்.

இப்போது அவள் கழுத்தில் புதுத்தாலி மின்னியது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

“எப்படி இருக்க மீனாட்சி? கல்யாணத்தப்போ பார்த்தது.. எங்க உன் வீட்டுக்காரு?”

“நல்லா இருக்கேன் அணணி. அவர் அங்க அப்பா கூட நிக்கிறாரு. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம்டா”

“ஆறு.. மித்ராக்கு இந்த பலூன் தான் வேணுமாம். சில்லரை வச்சுருக்கீங்களா?” என்று கேட்டபடி அருகே வந்த வைசாலி, மீனாட்சியை அப்போது தான் பார்த்தாள்.

“ஹாய்.. புதுப்பொண்ணு..”

“ஹாய்.. நல்லா இருக்கீங்களா?”

மீனாட்சி தயக்கமாகவே பேச, “நல்லா இருக்கோமே.. நீ என்ன தனியா இருக்க? வீட்டு ஆளுங்க எங்க?” என்று வைசாலி இயல்பாய் பேசினாள்.

“அங்க நிக்கிறாங்க. அண்ணிய பார்த்ததும் பேசலாம்னு வந்தேன்”

“பலூனு.. அத்த.. பலூனு” என்று மித்ரா வைசாலியிடம் சினுங்க, “இருமா.. சில்லரை வாங்கிட்டு போவோம்” என்று கூறினாள்.

“ம்மா.. காசு.. “

“புடிங்க.. வீட்டுக்குப்போனதும் கையிருக்காம அதை உடைக்க தான் போற.. அதுக்கு இவ்வளவு அடம்” என்று மகளை திட்டிக் கொண்டே பணத்தைக் கொடுத்து அனுப்பினாள்.

“வா வா.. அது விக்குறதுக்குள்ள வாங்கலாம்” என்று வைசாலி சென்று விட, “அத்த நல்லா இருக்காங்களா அண்ணி?” என்று விசாரித்தாள் மீனாட்சி.

சில நிமிடங்கள் குடும்பக்கதை பேசி விட்டு, மீனாட்சி தன் குடும்பம் இருக்கும் பக்கம் சென்றாள்.

மீனாட்சியின் கணவன் கதிரவன். அவளைப்போலவே காலில் சிறு குறைபாடு கொண்டவன். அவனை திருமணம் செய்ய மீனாட்சி சம்மதித்தற்கு, இதுவும் ஒரு காரணம். அவளது வலிகளை புரிந்து கொள்பவனாக இருப்பான். எப்போதும் எதோ ஒரு நிலையில் சொல்லிக்காட்டி விட மாட்டான் அல்லவா? அதே போல் அவளும் புரிந்து நடக்க முடியும்.

மீனாட்சி தான் படித்த கல்லூரியில் அக்கௌண்டென்ட் வேலையில் சேர்ந்திருந்தாள். வேலை விசயமாக அலையும் போது, எங்கோ அவளை பார்த்து கதிரவனுக்கு பிடித்து விட்டது.

சம்பந்தம் மகாலட்சுமி மூலமாக வர, மீனாட்சி மறுக்காமல் தலையாட்டி விட, இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. நிறைவான வாழ்க்கையை மீனாட்சி வாழ ஆரம்பித்தாள். அகிலாவிடம் இப்போதும் மீனாட்சி அதிகம் பேசுவது இல்லை. கேட்டதற்கு பதில் சொல்லும் அளவு மட்டுமே மாறியிருந்தாள். அவர்களாக சீராக வேண்டும் என்று விட்டு விட்டனர் குடும்பத்தினர்.

கணவனிடம் வந்து சேர்ந்தவளை, “எங்க தனியா போன நீ?” என்று கையைப்பிடித்துக் கொண்டான்.

“சொந்தக்காரங்கள பார்த்தேன் அதான்”

“அதுக்காக என்னை தனியா விட்டுட்டுப்போவியா? உங்க ஊர் திருவிழாவ சுத்திக்காட்டுறேன்னு சொல்லிட்டு விட்டுட்டுப்போனா எப்படி? வா சுத்துவோம்” என்றவன் கையைப்பிடித்துக் கொண்டு அவளோடு நடக்க ஆரம்பித்தான்.

“கைய விடுங்க மாமா.. எல்லாரும் என்ன நினைப்பாங்க”

“என் பொண்டாட்டி மேல எனக்கு ஓவர் ஆசைனு நினைப்பாங்க.” என்று கதிரவன் குறும்பாய் சிரிக்க, மீனாட்சி வெட்கத்தோடு அவனை முறைத்தாள். ஆனால் கதிரவன் அவளை ரசித்துப் பார்த்தான்.

அழுது ஓய்ந்து நன்றாக தூங்கியிருந்தாள் அஷ்வினி. அவளை தோளில் போட்டுக் கொண்டு அரசன் வீட்டின் நடுவே அமர்ந்து இருக்க, எல்லோரும் கோவிலில் இருந்து அப்போது தான் வந்து சேர்ந்தனர்.

“தூங்கிட்டாளா? சாப்பிட எதாவது கொடுத்தீங்களா?” என்று வைசாலி கேட்க, “இல்ல.. எழுப்பினா திரும்ப அழ ஆரம்பிப்பா. வேணாம்” என்றான்.

“அவ்வளவு அழுதுருக்கா. பசிக்கும். நான் எடுத்துட்டு வர்ரேன்” என்று செல்ல, “நீ ட்ரஸ்ஸ மாத்திட்டு வா. அது வரை தூங்கட்டும்” என்றான்.

வைசாலியும் உடையை மாற்றிக் கொண்டு உணவோடு வந்து அமர்ந்தாள். தூங்கிக் கொண்டிருந்த அஷ்வினி சாப்பாடு ஊட்டியதும் எழுந்து விட, மீண்டும் அழத்தான் செய்தாள்.

அவளை சமாதானம் செய்தபடி வேலையை தொடர்ந்தாள் வைசாலி.

“இன்னைக்கு மீனாட்சிய பார்த்தேன்மா. திருவிழாவுக்கு வந்துருக்கு போல” என்று அஞ்சனா கூற, “நான் பார்க்கலயே.. எப்படி இருக்கா?” என்று விசாரித்தார் அமுதா.

“நல்லா இருக்கா. வீட்டுக்காரோட வந்துருக்கா போல. எல்லாரையும் விசாரிச்சுட்டு கிளம்பிடுட்டா”

அமுதவல்லியும் அஞ்சனாவும் மீனாட்சியின் திருமணத்திற்கு சென்று இருந்தனர். அகிலாவிடம் கோபமிருந்தாலும், மீனாட்சியை அவர்களால் விட முடியாது.

நேரம் நிற்காமல் ஓட, மாலை வந்து சேர்ந்தது. இன்னும் அஷ்வினி வலியில் சினுங்கிக் கொண்டே இருக்க, அவளை தூக்கிக் கொண்டு அரசன் தோப்புக்குக் கிளம்பி விட்டான். இந்த விசயத்தில் வைசாலியும் அஷ்வினியும் ஒன்று தான். தோப்பிற்குள் நுழைந்து விட்டால், மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

தென்னைமரத்தில் இருந்த பூ ஒன்றை எடுத்து மகள் கையில் கொடுத்து விட, அழுகையை மறந்து விட்டாள். திருவிழா என்பதால் தோப்பு வெறுமையாய் இருந்தது. மகளோடு நடந்து கொண்டிருந்தவன், கொலுசு சத்தம் கேட்டதும் நின்று விட்டான்.

பின்னால் வந்து, பயமுறுத்துவது போல் கத்த போனாள் வைசாலி. அவள் கத்தும் முன் அரசன் வேகமாக திரும்பி விட, வைசாலி தான் பயந்து விட்டாள்.

“அம்மா..” என்று தடுமாறியவளை, ஒரு கையில் அணைத்து தாங்கினான்.

“இப்படியா திரும்புவீங்க? பயந்துட்டேன்” என்று நெஞ்சில் கை வைத்தபடி முறைத்துப் பார்த்தாள்.

“இங்க என்ன பண்ணுற நீ? தூங்க தான போன?”

“அப்பாவும் மகளும் என்னை விட்டுட்டு இங்க வந்துருக்கீங்கனு தெரிஞ்சது அதான் வந்துட்டேன்” என்றவள், அழாமல் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மகளை பார்த்து சிரித்தாள்.

“இவ்வளவு நேரம் அழுது எல்லாரையும் ஒரு வழி ஆக்கிட்டு இங்க சிரிக்கிறா” என்று அவளை கொஞ்சியவள், கணவன் மீது சாய்ந்தபடி நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு கையில் மகளையும் மறு கையில் மனைவியையும் அணைத்தபடி நடந்த அரசனுக்கு மனம் நிறைவாய் இருந்தது.

“லாலி..”

“ம்ம்..”

“ஐ லவ் யூ” என்று அவளது நெற்றியில் முட்டினான்.

“சாரி.. உங்க மேல எனக்கு எவ்வளவு யோசிச்சாலும் இன்ட்ரெஸ்ட் வரல. நாம ஃப்ரண்டாவே இருப்போமே?” என்று கண்சிமிட்டியவள் சிரிப்பை அடக்க, அரசன் அவள் கழுத்தில் கைபோட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

அவள் அன்று பேசிய வார்த்தைகள். எப்போது அவன் காதலை சொன்னாலும் மறக்காமல் இதை மட்டும் சொல்லி விடுகிறாள்.

“எப்ப தான் நீ சரினு சொல்லுவ?”

“நம்ம பையன் பிறந்ததும்… அப்பவும் யோசிக்கிறேன். சரினு சொல்லுவேன்னு எதிர்பார்க்காதீங்க”

“இந்த ஆறு வருசமா இதையே தான் சொல்லிட்டு இருக்க. சாமி கிட்ட வரம் கேட்டா கூட எப்பவோ வந்து கொடுத்துருக்கும். நீ தர மாட்ட”

“அப்ப சாமி கிட்டயே கேட்குறது?”

“கேட்டேனே”

“கொடுத்தாரா?”

“ம்ம்..”

“என்ன வரம்”

“நீ தான்..” என்று ஆரம்பித்தவன், “அப்படினு சொல்லுவேன்னு நினைக்காத. நான் கேட்டது அஷ்வினிய” என்றான் சிரிப்போடு.

“யோவ்” என்று வைசாலி முறைக்க, “நீயே சொன்னியே.. என் மக தான் எல்லாம்னு” என்றான்.

“நானா? எப்போ?”

“காலையில அஞ்சு கிட்ட என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“வேலை எனக்கு மூத்த மகளா?”

“பின்ன இல்லையா? எப்ப பாரு வேலை தான். வேலை இல்லனா மகள தூக்கி கொஞ்சுறது. இப்ப கூட என்னை விட்டுட்டு இவ கூடத்தான இங்க வந்துருக்கீங்க?”

“எனக்கு வேலை மூத்த மகள்னா, உனக்கு வேலை மூத்த மகன். எவ்வளவு தூரம் சொன்னேன்? க்ளினிக் ஆரம்பிச்சா நீ ரெஸ்ட் எடுக்க முடியாது யோசிச்சுக்கோனு. கனவு லட்சியம்னு பேசி என் வாய அடைச்சுட்டு, நாள் முழுக்க க்ளினிக்ல இருக்கது நீ. ஆனா நான் வேலைய கட்டிட்டு அழுறேன் இல்ல?”

“சரி சரி.. விடுங்கபா.. தோப்புக்குள்ள வந்தா காதல் வந்துடுதோ இல்லையோ, கூடவே சண்டையும் சேர்ந்து வந்துடுது.” என்று வைசாலி சிரித்து வைத்தாள்.

சொந்தமாக சிறிய க்ளினிக் ஆரம்பித்து இருக்கிறாள். அரசனின் உதவியோடு தான். அது அவளது நேரத்தை மொத்தமாய் இழுத்துக் கொள்ள, அரசன் அடிக்கடி குறை பட்டுக் கொள்வான். ஆனால் மகள் பொறுப்பை மொத்தமாய் அவனே எடுத்துக் கொண்டு, மனைவியை வேலைக்கு அனுப்பி விடுவான்.

“ம்மா.. தம்பி எப்பமா வருவான்?” என்று அஷ்வினி திடீரென கேட்க, “நேத்து வருவான்” என்றாள்.

“ஐஐஐ. நேத்து வருவானா?”

அவள் நாளையை நேற்று என்று பழகி இருந்தாள்.

“ம்ம்.. ஆமா.. தம்பி வந்தா நீ தம்பிக்கு என்ன கொடுப்ப?” என்று கேட்க, மகள் யோசித்து ஒவ்வொன்றாய் கூற, அரசனோடு கை கோர்த்தபடி மகளோடு பேசிக் கொண்டே நடந்தாள் அரசனின் லாலி. அரசனும் தான் வேண்டி பெற்ற வரங்களோடு நிறைவாய் நடந்தான்.

நிறைவு.

2 Comments

  1. Good story.
    Madhavan character is unbelievable, especially towards Vaishali.

    Romance is very subtle and modest.

    Will you post a new story since this has ended? Please update on that.

    I’m a fan of your writing and the characterization of your heroines.

Leave a Reply