வரம் 3
![]()
“அடிப்பாவி மகளே! என்னை உசுரோட கொழுத்திப்புடுடி.. இப்படி பண்ணுறதுக்காக உன்னை பெத்தேன்?” என்று வயிற்றிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்தபடி அகிலாண்டேஸ்வரி கத்தி அழுதார்.
“ஏன்டி பெத்த வயித்துல நெருப்பள்ளி கொட்டுற? நீயும் போயிட்டா நான் என்னடி செய்வேன்?”
“இந்தா.. இப்ப எதுக்கு ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க? வாய மூடு” என்று அதட்டினார் ராமலிங்கம்.
அவருக்கும் மகள் செய்யப்போன காரியத்தில், உள்ளம் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது. ஆனால் ஆண்வர்கம் ஆயிற்றே. பதட்டத்தையோ சோகத்தையோ வெளிவிட முடியவில்லை.
“உங்களுக்கு என்ன? என்ன நடந்தாலும் தோள்ல துண்ட போட்டு நடைய கட்டிருவீக. நான் இனி இவள எப்படி கவனிக்கப்போறேன்? அடியே.. குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கியே.. பேசுடி. உன்னை பெத்ததுக்கு இன்னும் என்னலாம் அனுபவிக்கப்போறேனோ?”
கணவன் மீதும் மகளின் மீதும் பாய்ந்த அகிலாண்டேஸ்வரிக்கு, கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
“அகிலா” என்று அழைத்தபடி உள்ளே வந்தார் மகாலட்சுமி.
“யக்கா.. இந்த கொடுமைய கேளுக்கா.. இந்த பாதகத்தி எங்கள விட்டு போகப்பார்த்தாளேக்கா”
அகிலாண்டேஸ்வரி மேலும் கண்ணீர் விட, சிறு அதிர்ச்சியோடு மகாலட்சுமி அங்கு தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை பார்த்தார்.
கண்கலங்கி இருந்தது. ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல், இழுப்பிடித்து அழுத்தமாக அமர்ந்து இருந்தாள்.
“இப்படி அழுது ஊரக்கூட்டுறத முதல்ல நிறுத்து. நல்லவேளை எல்லாரும் கோவில் காப்பு கட்ட போயிட்டாங்க. இல்லனா ஊரே கூடி இருக்கும். அமைதியா இரு முதல்ல. இந்தா.. கொழுந்தனாரே கோவிலுக்கு கிளம்புங்க. அங்கன உங்கள காணலனு தான் தேடி வந்தேன்.”
பெருமூச்சோடு எழுந்து சென்று விட்டார் ராமலிங்கம்.
“அகிலா தண்ணி கொண்டா” என்று அகிலாண்டேஸ்வரியை அனுப்பி விட்டவர், இதுவரை தலை நிமிராமல் இருந்தவள் அருகே சென்று அமர்ந்தார்.
தண்ணீரை குடித்ததும், “என்ன பண்ண புள்ள?” என்று விசாரிக்க, அகிலாண்டேஸ்வரி தான் பேசினார்.
“கோவிலுக்கு கிளம்பிட்டு, ஃபோன மறந்துப்புட்டேன்னு வந்தேன்கா. இவ கதவ உள்ள பூட்டிக்கிட்டு அரளிக்காய அரைச்சுட்டு கிடக்கா”
அகிலாண்டேஸ்வரி அழுகையை அடக்க முடியாமல் பேச, மகாலட்சிமியின் முகத்தில் அதிர்ச்சியோடு வேதனை.
“இந்தா மீனா.. என்ன காரியம் இது? ஏன் இப்படி பண்ண?”
மகாலட்சுமி அதட்டிய போதும், மீனா என்ற தங்கமீனாட்சி அசையவே இல்லை.
“பாருக்கா.. வந்து நாங்க பார்க்கலனா என்ன ஆகி இருக்கும்?”
“ப்ச்ச்.. அகிலா நீ முதல்ல கண்ண கசக்குறத நிறுத்து. பொறுமையா பேசுவோம்”
“மீனா இங்க பாரு” என்று முகத்தை பிடித்து திருப்பியவர், “எதுக்கு இப்படிப் பண்ண?” என்று அதட்டலாக வினவினார்.
“நான் பாரமா இருக்கேன்ல? இந்த பூமிக்கு, என்னை பெத்தவங்களுக்கு, எல்லாருக்கும் பாரமா இருக்கேன்ல? அதான் பாரத்த குறைக்கிறேன்”
கண்கள் கலங்கி இருந்த போதும், குரலில் இருந்த திடம் மற்ற இருவரையுமே அதிர வைத்தது.
“என்ன பேச்சு இது? நீ பாரம்னு எப்ப சொன்னோம்?”
மகாலட்சுமியின் கையை வெடுக்கென தட்டி விட்டவள், தாயை முறைத்து விட்டு, தன் கைதடி குச்சியை எடுத்துக் கொண்டு, அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
“பாருக்கா இவ பேச்ச.. எனக்கு வயறு கவ்வுது.. இதுக்கா பெத்து வளர்த்தேன்?”
மகாலட்சுமிக்கு பேசவே முடியவில்லை. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என்று தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், அதில் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லையே.
அகிலாண்டேஸ்வரியை சமாதானம் செய்தபடி, அங்கேயே இருந்தார். காப்பு கட்டு முடிந்து எல்லோரும் வந்து சேர்வதற்குள், அகிலாண்டேஸ்வரியின் வாயை அடக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் ஊருக்கே விசயம் தெரிந்து விடும்.
ராமலிங்கம் சீக்கிரமே வந்து சேர, அவரிடம் பேசிவிட்டு கிளம்பிய மகாலட்சுமி, நேராக தன் அண்ணன் வீட்டை நோக்கி நடந்தார்.
•••
வேலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மாதவனின் அழைப்புக்காக நிச்சயதார்த்தத்திற்கு வந்த அரசேந்திரன், உடனே கிளம்பி விடத்தான் நினைத்து இருந்தான்.
ஆனால், வைசாலியை பார்த்த பின்பு உடனே கிளம்ப மனமில்லை. அவள் அவனுக்கு மிகவும் முக்கியமானவள். நிச்சயம் முடியும் வரை இருக்க தீர்மானித்து அமர்ந்து கொண்டான்.
வைசாலி சித்ராவிடம் பேசி விட்டு, அங்கிருந்தே அரசேந்திரனை பார்த்தாள். அவனும் அவளை பார்க்க, அருகே வருமாறு சைகை காட்டினாள்.
“அரசு தானபா? எப்படி இருக்க? பார்த்து ரொம்ப வருசம் ஆச்சுல?” என்று சித்ரா சந்தோசமாக நலம் விசாரிக்க, அவனும் நலம் விசாரித்தான்.
நின்று பேச முடியாமல் அவரை யாரோ அழைக்க, “இருந்து பங்சன் முடிஞ்சு தான் போகனும். சாலி உட்கார வைடா” என்று விட்டு நகர்ந்தார்.
“அப்புறம் மிஸ்டர் கிங்? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சோப்பு கம்பெனி வைக்க சொன்ன என்னை ஏமாத்திட்டீங்க. வேற என்ன கம்பெனி வச்சுருக்கீங்க?”
“முறுக்கு சுடுற கம்பெனி வச்சுருக்கேன்”
“ஐ! அப்போ எனக்கு நிறைய வேணும். அதுவும் ஃப்ரியா”
“நெக்ஸ்ட் டைம் பார்க்கும் போது கொண்டு வர்ரேன்”
“சீரியஸ்லி? நான் விளையாட்டுக்கு சொல்லுறதா நினைச்சேன். நிஜம்மாவா?”
“நிஜம்மாடா”
“நம்புற மாதிரி இல்லயே”
வைசாலி சந்தேகமாக கேட்க, அரசேந்திரன் புன்னகைத்தான்.
“முறுக்கு சுடுறது மெயின் பிஸ்னஸ். மத்தபடி போலீஸ் வேலைய சைட் பிஸ்னஸா வச்சுருக்கேன்”
“ஹேய்.!” என்று ஒரு விரல் நீட்டி பத்திரம் காட்டியவள், “அப்படியே அடுத்தவங்க காதுல பூ சுத்துறதும் சைட் பிஸ்னஸா? பிச்சு பிச்சு” என்று மிரட்டினாள்.
“இனிமே அதையும் பண்ணிடுறேன் விடு”
“கிண்டலா? மாதவன எப்படித்தெரியும்?”
“மூணு வருசம் முன்னாடி ஒரு ஆக்ஸிடென்ட்ல இவர பார்த்தேன்”
“ஆக்ஸிடென்ட்டா? உங்களுக்கா? என்னாச்சு?”
“எனக்கில்ல. மாதவன் டாக்டருக்கு. அவரோட கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போனேன்”
“ஓஓ.. அவர் சொல்லல. எனக்கு நாலு மாசமா தான் அவர தெரியும்.”
“அரேன்ஜ்ட் மேரேஜ்ஜா? லவ் மேரேஜ்ஜா?”
“அரேன்ஜ்ட் தான். நீங்க கல்யாணம் பண்ணிக்கலயா?”
“பண்ணலாம். என்ன அவசரம்?” என்று கேட்டவன் முகத்தில், புன்னகை குறைந்தது போல் இருந்தது.
“உங்க அக்கா பொண்ணு எப்படி இருக்கா? உடம்பு சரியாகிடுச்சா?” என்று கேட்கும் போதே, மாதவன் வந்து சேர்ந்தான்.
“சரியாகிடுச்சு அப்பவே”
“கேட்கனும்னு நினைச்சேன். நம்பர் கொடுங்க” என்றவள் தன் கைபேசி தன்னிடமில்லாததை உணர்ந்து, “போன் அக்கா கிட்ட இருக்கே” என்றாள்.
“ஓகே உன் நம்பர் சொல்லு. நான் கால் பண்ணுறேன்.” என்று வாங்கிக் கொண்டான்.
“மிஸ்கால் பண்ணிருக்கேன். சேவ் பண்ணிக்கோ”
அதன் பிறகு அரசேந்திரன் மீண்டும் வந்து அமர, நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பமானது. சடங்குகள் ஒவ்வொன்றிலும் வைசாலியும் மாதவனும் சந்தோசமாக கலந்து கொள்ள, இன்னும் இருபது நாட்களில் திருமணத்தேதி முடிவு செய்யப்பட்டது.
அரசேந்திரன் மாதவனிடம் வாழ்த்தை சொல்லி விட்டு பரிசை நீட்ட, “எனக்கு இல்ல?” என்று வைசாலி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
“நீ கூப்பிட்டியா?” என்று அரசன் முறைக்க, வைசாலி அசடு வழியக்கூடாது என்று, கண்ணை மூடிக் கொண்டு நிதானித்தாள்.
“ஓகே கல்யாணத்துக்கு கூப்பிடுவேன். கூடை கூடையா முறுக்கோட வந்துடனும். ஓகே?”
“நான் வர்ரத விட முறுக்கு தான் முக்கியம் இல்ல?”
“ஆமா ஆனா இல்ல”
அவளது தலையில் கொட்டு வைக்கச் சொல்லி அரசன் கை பரபரத்தது. ஆனால் அடக்கிக் கொண்டான்.
அவள் அவனது தோழி அல்ல. அடுத்தவனுக்கு மனைவியாகப்போகிறவள்.
“எல்லாம் கொழுப்பு.” என்றவன் மீண்டும் வாழ்த்தை கூறி விட்டு, சிரிப்பு மாறாமலே கீழே வந்தான்.
அந்நேரம் கைபேசி இசைக்க, எடுத்துப்பார்த்தவன் முகத்தில் சிரிப்பு மறைந்திருந்தது. அதைக்காதில் வைத்தபடி வேகமாக வெளியேறினான்.
•••
இரவு ஒன்பது மணி.
மருத்துவமனையில் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தான் அரசேந்திரன். அரசேந்திரன். உதவி காவல் கண்காணிப்பாளர். சுருக்கமாக ஏ.எஸ்.பி.
முகம் முழுவதும் அடக்க நினைத்தும் முடியாத கோபம். ஒருவகை இயலாமையில் அமர்ந்திருக்க, மருத்துவர் வந்தார்.
“உள்ள போய் பாருங்க” என்றதோடு, அகன்று விட்டார்.
கண்ணை அழுந்த மூடித்திறந்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அறைக்குள் நுழைந்தான்.
சூனியத்தை வெறித்தபடி படுத்துக் கிடந்தான், அரசேந்திரனின் நண்பனின் தம்பி, ஆதிகேசவன்.
“ஆதி” என்றதும் பார்வையை திருப்பியவன், மீண்டும் வெறிக்க ஆரம்பித்து விட்டான்.
“ஆதி.. இங்க என்னை பாரு”
பதில் வரவில்லை. ஆனால், ஆதியின் முகம் கலங்க ஆரம்பித்து விட்டது.
அரசனுக்கு அவனது தோற்றம் மனதை பிசைந்தது.
“ஆதி” என்று அமைதியாக மீண்டும் அழைக்க, ஆதிகேசவனின் கண்ணில் இருந்து சட்டென ஒரு துளி கண்ணீர் காதை தொட்டு கீழே இறங்கியது.
“எ..எனக்கு வாழவே பிடிக்கலணா.. சா.. சாரி” என்றவனுக்கு குரல் அடைத்து நெஞ்சம் விம்மியது.
“நீ செத்துட்டா என்ன நடக்கும்னு நினைக்கிற?”
“நிம்..நிம்மதியா இருப்பேன். என் பட்டு கூட நிம்மதியா…”
வார்த்தையை முடிக்க முடியாமல் குரல் தடுமாறியது. அரசனுக்குத்தான் எரிச்சலாகவும் வேதனையாகவும் இருந்தது.
‘என்ன கண்ட்ராவி காதல்டா ச்சை. வாழவும் விடாம சாகவும் விடாம பண்ணுது’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், ஆதிகேசவன் இப்படி துடிப்பது காதலிக்காக அல்ல. காதல் மனைவிக்காக. அந்த நினைவு கோபத்தைக் குறைத்தது.
“ஆதி.. மனோகரியோட முடிவுக்கு காரணமானவங்கள தேடுறத விட்டுட்டு… ப்ச்ச்.. நீ மனோகரி பின்னாலயே போய்ட்டா, செத்ததுக்கு நீதி கிடைச்சுடுமா?”
“அந்த நீதி என் பட்டுமாவ திரும்ப கூட்டிட்டு வருமாணா?”
ஆதிகேசவன் அதிலேயே சுழன்று கொண்டிருக்க, அரசனுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. ஆதிகேசவனின் அண்ணன் நந்தகோபாலன் வந்து அரசனை தான் கேள்வி கேட்பான். அரசனின் பொறுப்பில் தான் விட்டுச் சென்று இருக்கிறான்.
ஆனால், இப்படி அடிக்கடி தற்கொலை முயற்சி செய்பவனை என்னவென்று பார்த்துக் கொள்வது? கோபமும் ஆற்றாமையும் ஒன்றாக எழுந்தது.
“எனக்கு பட்டு கிட்ட போகனும்ணா. அவ இல்லனு நினைக்கிற ஒவ்வொரு நொடியும்.. வலிக்குதுணா.. ரொம்ப” என்றவன் சிறுபிள்ளையாய் கண்ணீர் வடிக்க, அரசன் அவன் தோளில் தட்டிக் கொடுத்தான்.
“உன் அம்மா உன் அண்ணன் அண்ணி எல்லாம் உனக்கு முக்கியமில்லையா ஆதி? அவங்கள விட்டுட்டுப்போக பார்க்குறியே?”
“எனக்கு.. எனக்கு எதுவுமே தோணல அண்ணா.. நான் என்ன பண்ண?”
அரசனிடமே கேட்டவனை, என்ன செய்வதென்று அவனுக்குமே புரியவில்லை.
காரை தாறுமாறாக ஓட்டி தற்கொலை செய்யப்போனவனை காப்பாற்றி, கவுன்செலிங் கொடுத்துக் கொண்டிருக்க, கவுன்செலிங் ஒரு மாதம் கூட செல்லாத நிலையில், மருத்துவனையில் மீண்டும் தற்கொலை முயற்சி செய்து வைத்தான் ஆதி.
“உனக்கு கவுன்செலிங் கொடுத்துக்கூட பார்த்தாச்சு. இன்னும் என்ன செய்யனு எனக்கே தெரியலடா. நீயே சொல்லேன். என்ன நடந்தா நீ சாகுறத விட்டுட்டு வாழ நினைப்ப?”
“என் பட்டு வந்தா வாழுறேன்ணா” என்றவன் குரலில், அது நடக்காது என்ற உறுதியும் வலியும் சமமாக இருந்தது.
“சரி.. உன் பட்டுவ காட்டுறேன்”
“ண்ணா!” என்று ஆதி அதிர்ந்து பார்க்க, “ஆமா. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல? நான் உன் பட்டுவ உயிரோட காட்டுறேன். நீ இப்போ செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னு தான். இனி ஒரு தடவ சூசைட் அட்டன் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று அழுத்தமாக கேட்டான்.
ஆதி பார்வையை திருப்பிக் கொள்ள, “பண்ணு ஆதி” என்று அதட்டினான்.
விரக்தியாக சிரித்தவன், “எங்க போய் கூட்டிட்டு வருவீங்க பட்டுவ? எமன் கிட்ட இருந்தா? போங்கணா” என்றான்.
“அது என் பிரச்சனை. நான் கூட்டிட்டு வர்ரேன்னு சொல்லிட்டேன். சப்போஸ் என்னால முடியலனா.. நானே சொல்லுறேன். என்னால முடியல ஆதினு. அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி இருந்துக்கோ. ஆனா, நான் சொல்லுற வரை நீ திரும்ப கிறுக்குத்தனம் பண்ணக்கூடாது. சத்தியம் பண்ணு”
ஆதி அசையாமல் இருக்க, “இது வரை நீ இப்படி பண்ணது உன் அம்மாவுக்குத் தெரியாது ஆதி. நானும் நந்துவும் சொல்லல. அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? உன் அப்பா ஆர்மில இருந்து நாட்டுக்காக உயிர கொடுத்தவர்டா. அப்படி ஒரு மனுசனோட பிள்ளை, இப்படி கோழைத்தனமா தற்கொலை பண்ண பார்க்குறது எவ்வளவு பெரிய கேவலம்? உன் அம்மா இதைக்கேட்டு துடிச்சுப்போயிடுவாங்க ஆதி” என்றான் அரசன்.
ஆதி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக இருக்க, அரசனுக்கு இனி என்ன பேசுவதென்று புரியவில்லை. அவனும் அமைதியாக அமர்ந்து இருக்க, அவனுடைய கைபேசி அதிர ஆரம்பித்தது.
ஆதி கண்ணை திறக்காமல் இருக்க, கைபேசியோடு வெளியே வந்தான்.
லாலி என்ற பெயர் மின்னிக் கொண்டிருக்க, அழைப்பை ஏற்றான்.
“ஹலோ எஸ்.பி சார்.”
“ம்ம்.. சொல்லுங்க கல்யாண பொண்ணு. பங்சன் முடிஞ்சதா?”
“ஓஓ.. முடிஞ்சதே. ஆனா, நீங்க ஏன் டல்லா பேசுறீங்க?”
“அதெல்லாம் இல்லயே”
“இல்ல.. மண்டபம் விட்டுப் போகும் போதே முகம் மாறிடுச்சே. எதுவும் பிரச்சனையா?”
வைசாலி கேட்டதும் உடனே பதில் சொல்ல முடியவில்லை. அத்தனை கூட்டத்தில் அவன் கிளம்பும் போது முகத்தை கவனித்து இருக்கிறாள்.
“ம்ம்” என்றவனுக்குள் காரணமில்லாமல் ஆறுதல் படர்ந்தது.
“ஓகே ஓகே. எல்லா பிரச்சனையும் சோப்பு போட்டு துவைச்சுடுங்க அரசன் சோப்பு. பளிச்சுனு போயிடும். அதுக்குப்போய் மூஞ்சிய அப்படி வச்சுட்டுப் போகனுமா என்ன?”
“துவைக்கிறேன் மேடம். முதல்ல உன் மூளைய கழட்டிக் கொடு துவைச்சு மாட்டி விடுறேன். ஆமா நீ எப்படி டாக்டர் ஆன? இப்ப வரை எனக்கு டவுட்டாவே இருக்கு.”
“டவுட்டா?”
“படிச்சு பாஸானியா? இல்ல பிட்டடிச்சு பாஸானியா? நீ ஹோம் வொர்க்கே தப்பு தப்பா பண்ணுற ஆளாச்சே”
“கிங் வேலைய ஆரம்பிச்சாச்சா? போங்க போலீஸ் ஆபிசர். உருப்படியா வேலை எதாவது இருந்தா பாருங்க. அச்சோ.. எதுக்கு கால் பண்ணேன்னு மறந்து போச்சு. உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க”
“எதுக்கு?”
“கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க தான்”
“சென்ட் பண்ணுறேன். நீயும் வீட்டு அட்ரஸ் அனுப்பு.”
“ஓகே.. நாம அப்புறம் பேசலாம்”
“செகண்ட் காலா? யாரு உன் ஆளா?”
“ஆமா ஆளே தான். பை பை” என்று வேகமாக அழைப்பைத்துண்டித்து விட, அரசன் முகத்தில் புன்னகை மிச்சமிருந்தது.
அவளுக்கு முகவரியை அனுப்பி வைத்து விட்டு மீண்டும் அறைக்குள் செல்ல, ஆதிகேசவன் எழுந்து அமர்ந்து இருந்தான்.
“ஆதி…”
“நான் சாக மாட்டேன் அண்ணா.”
பட்டென பதில் வர, அரசன் அவனை நம்பாமல் பார்த்தான். இப்படி உடனே சரியாகி விடுவானா? எந்த அறிவுரைக்கும் அடங்காமல் இருந்தானே? ஒரு வேளை இப்படிச் சொல்லி தன் பிடியிலிருந்து செல்லப் பார்க்கிறானோ?
“சாக மாட்டனா?”
அரசனை திரும்பிப் பார்த்தவன், “நீங்க பட்டுவ கூட்டிட்டு வந்து காட்டுங்க. அது வரை நான் சாக முயற்சி பண்ண மாட்டேன். சத்தியமா” என்றவன் இடைவெளி விட்டு, “என் பட்டு மேல சத்தியமா சூசைட் பண்ணிக்க மாட்டேன்” என்று கூறினான்.
அரசன் ஆச்சரியப்பட்டுப்போனான். சற்று முன்பு வரை இருந்த நிலை என்ன? இப்போது பேசுவது என்ன?
“என்ன திடீர்னு?”
அவனை திரும்பிப் பார்த்து சோபையாக சிரிப்பை உதிர்த்தவன், “வாஸ் ரூம் போகனும்” என்றான்.
அவனை அழைத்துச் சென்று விட்டவனுக்கு, இந்த மாற்றத்தை நம்புவதா? வேண்டாமா? என்று சந்தேகமாக இருந்தது.
ஆதி மருந்துகளை சாப்பிட்டு விட்டு உறங்கி விட, அரசன் ஹோட்டலுக்குக் கிளம்பினான்.
போகும் வழி எல்லாம் ஆதிகேசவனின் நினைவு தான். மூன்று மாதங்களுக்கு முன்பு, குடித்து விட்டு வாகனத்தில் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள பார்த்தான்.
அவனுடைய அண்ணன் நந்தகோபாலன், இப்போது டெல்லியில் குடும்பத்துடன் இருக்கிறான். அவனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், அவனது தாயாரும் சென்று விட்டார். மனைவியைப் பறி கொடுத்து அலைந்து கொண்டிருந்த ஆதிகேசவனை, எவ்வளவோ அழைத்தும் அவன் அசையவில்ல.
இங்கு யாருமில்லா நேரம் ஆதிகேசவன் தற்கொலைக்கு முயன்றான்.அவனுக்கு விபத்து என்று கேள்வி பட்டதும், நந்தகோபாலனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அரசனிடம் தான் உதவி கேட்டான்.
நான்கைந்து நாட்கள் கோமாவில் இருந்து, ஒரு வழியாக ஆதிகேசவன் உயிர் பிழைத்தான். நந்தகோபால் மனைவியை விட்டு விட்டு ஓடி வந்தாலும், அவனது வேலை அவனைப் பிடித்து இழுத்தது. அன்னைக்கு விசயம் தெரிந்தால் தாங்க மாட்டார் என்று சொல்லவில்லை.
நந்தகோபாலை வேலையைப்பார்க்க அனுப்பி விட்டு, மருத்துவர்களின் உதவியோடு ஆதிகேசவனை காப்பாற்றி, அவனுக்கு சிகிச்சை அளித்து மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான் அரசன்.
‘ஆதிகேசவனின் திடீர் மாற்றம் அண்ணனுக்காக இருக்குமா? இல்லை அன்னைக்காகவா?’
ஒன்றும் புரியவில்லை என்றாலும், மருத்துவரிடம் அவன் மீது வைத்திருக்கும் கண்கானிப்பை குறைக்காமல் இருக்கச் சொல்லி விட்டு, கிளம்பி விட்டான்.
ஹோட்டல் அறைக்குள் நுழையும் போது, அவனுடைய தாயிடமிருந்து அழைப்பு வந்தது.
ஊருக்கு வராததால் கோபத்தில் இருப்பார். அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டார் என்று நினைத்தவனும், அவரை தொடர்புகொள்ளவில்லை. ‘இப்போது, அதுவும் இரவு நேரம் எதற்காக இந்த அழைப்பு?’ என்ற யோசனையுடன் காதில் வைத்தான்.
“ம்மா..”
“தங்கமீனாட்சி தற்கொலை பண்ணிக்க போயிருக்கா”
எடுத்த எடுப்பில் பட்டென விசயத்தை உடைத்தார்.
“என்ன?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவனுக்குக் கோபமும் வந்தது.
‘இவங்களுக்கெல்லாம் உயிர் அவ்வளவு அலட்சியமா போச்சா? ஆளாளுக்கு சூசைட் அட்டன் பண்ணுதுங்க’ என்று எரிச்சல் வந்தது.
“ம்ம். நீ ஊருக்கு வராத.”
“ம்மா”
“வராத அரசு. நான் பார்த்துக்கிறேன்”
“நான் வரலனு கோபமா தான இருந்தீங்க?” என்று சிரிப்போடு கேட்க, “ஆமா.. இன்னும் கோபமா தான் இருக்கேன். அது வேற கணக்கு. இத சொல்ல தான் கால் பண்ணேன். வச்சுடுறேன்” என்றார் கோபமாக.
“ம்மா.. சாப்பிட்டீங்களா? காப்பு கட்டியாச்சா? என்ன பண்ணீங்க? அஞ்சு வந்தாளா? மணி என்ன பண்ணுறா?”
“அட மூச்சு விடுடா. கேள்வியா கேட்டுட்டு இருக்க. போலீஸ்காரன் அக்யூஸ்ட்ட கேட்ட மாதிரி”
“ம்மா.. நான் போலீஸ்காரன் தான்மா”
“தெரியுது. அதுக்காக என் கிட்டயே கேட்காத. உன் அக்காவுக்கு ஃபோன போட்டு கேளு. நான் சாப்பிட்டேன். நீ சாப்பிட்டுத் தூங்கு”
அதோடு பேச்சு முடிந்து போக, சிரிப்போடு அஞ்சனாவின் எண்ணை எடுத்தான். அதை அழைக்கும் முன், வைசாலியிடமிருந்து செய்தி வந்து விழுந்தது. அவளது வீட்டு முகவரியைத் தாங்கி.
