வரம் 4

Loading

அஞ்சனாவை அழைக்கப்போனவன், வைசாலியின் குறுஞ்செய்தியை பார்த்து விட்டு, வேறு யாருக்கோ அழைத்து பேசி விட்டு, அதன் பின்பே அஞ்சனாவை அழைத்தான்.

“என்ன அரசு அம்மா கிட்டப் பேசியாச்சா?”

“இப்ப தான் பேசுனாங்க. அங்க காப்பு கட்டுறது எல்லாம் நல்லா முடிஞ்சதா?”

“ரொம்ப நல்லா போச்சு. இங்க நடந்த கூத்த கேட்டியா?”

“கேட்டேன் கேட்டேன். இதெல்லாம் என்ன அஞ்சு? எரிச்சலா இருக்கு”

“அந்த புள்ள பாவம்டா”

“பாவம் புண்ணியம்னு என் கிட்ட பேசாத காண்டாகிடுவேன்”

“சரி சரி விடு.”

“மணி எங்க?”

“இந்நேரம் வரை முழிச்சுருப்பாளா உன் மருமக? எப்பவோ ஆட்டம் போட்டு சாப்பிட்டுட்டு தூங்கிட்டா”

“நீ தூங்கலயா?”

“சொந்தக்காரவங்க எல்லாம் வந்து கிளம்ப நேரமாச்சா.. அதான் சாப்பிடவும் லேட் ஆகிடுச்சு.”

“வாய் பேசிட்டு இருக்கத பார்த்து அத்தான் ஒன்னும் சொல்லல?”

“அவரு வேலை இருக்குனு அப்பவே ஓடிட்டாரு. ஆனா அரசு, வந்தவங்க எல்லாரும் அம்மா கிட்ட உன்னை தான் கேட்டாங்க. இந்த திருவிழாவுக்காச்சும் உங்க புள்ள வருவானானு.. ச்சு ச்சு”

“ஏய்.. ஏன் இப்படி மாட்டி விடப் பார்க்குற?”

“என்னை கோர்த்து விட்டல? நான் தான் வாங்கி கட்டுனேன். அதான்.. நீ வர்ர வரை போட்டுக் கொடுத்து ஏத்தி விடுறேன் வா”

“அஞ்சு… அக்கானு பார்க்க மாட்டேன் அப்புறம்”

“நானும் தம்பினு பார்க்க மாட்டேன். வாடா.. வா.. வந்து நீ வசவு வாங்குறது நான் பார்த்தே தீருவேன். இதுக்காகவே திருவிழா முடியுற வரை இங்க தான் இருப்பேன்னு உன் அத்தான் கிட்ட சொல்லிட்டேன்.”

“எனக்குனு தேடி பிடிச்சு அக்கானு உன்னை பெத்தாங்க பாரு அம்மா.. அய்யோ அற்புதம் போ”

அரசன் தலையில் கைவைத்துக் கொள்ள, அஞ்சனாவிற்கு சிரிப்பாக இருந்தது.

“சரி விடு. நீ எப்ப வர்ர?”

“நாளைக்கு காலையில கிளம்பிடுவேன். அப்புறம் அஞ்சு நான் லாலி என்கேஜ்மெண்ட்டுக்கு போயிட்டு வந்தேன்”

“வாட்? வாட் சொன்னாய்?”

“கோழி சொன்னேன். லாலிக்கும் டாக்டர் மாதவனுக்கும் என்கேஜ்மெண்ட். மாதவன் எனக்குத் தெரிஞ்சவர். இன்வைட் பண்ணாருனு போனா அங்க லாலி நிக்கிறா. வாட் அ சர்ப்ரைஸ் மூமண்ட்”

“பேசுனியா? எப்படி இருக்கா?”

“நல்லா இருக்கா.”

“அந்த டாக்டர் எப்படி? நல்ல பையனா?”

“ம்ம் நல்லவர் தான்”

“திரும்ப பேசுனா வைசாலிய கேட்டதா சொல்லு”

அரசன் அதற்கு சம்மதித்து விட, சில நிமிடங்கள் ஊர்கதை பேசினர். இரண்டு முறை அஞ்சனா கொட்டாவி விடுவதை கண்டு, “போய் தூங்கு போ. லேட் ஆகிடுச்சு.” என்று அனுப்பி வைத்தான்.

நேரம் பனிரெண்டைத்தொட ஓடிக் கொண்டிருக்க, அரசனுக்கு தூக்கம் எட்டிப்பார்க்கவில்லை. என்னவோ உற்சாகமாக இருந்தது.

உடனே தன்னோடு வேலை செய்யும் ஒரு அதிகாரியை அழைத்து பேச ஆரம்பித்தான்.

தானாக தூக்கம் வந்த பிறகே, பேச்சை முடித்து படுத்து உறங்கினான்.

அடுத்த நாள் காலையிலேயே, அறையை காலி செய்து கொண்டு, மருத்துவமனை சென்றான்.

ஆதி மெத்தையில் அமர்ந்து பாலை குடித்துக் கொண்டிருக்க, அரசனின் கண்கள் அவனை ஆராய்ந்தது.

“ஆதி.. இப்ப ஓகே தானே?”

“ம்ம்.. உங்க கிட்ட தான் சாரி சொல்லனும். எனக்காக அலைஞ்சுட்டு இருக்கீங்க”

“நந்து கிட்ட பேசுறியா? நேத்து நீ எடுத்த முடிவ நான் இன்னும் சொல்லவே இல்ல”

“இல்லணா. நீங்களே பேசுங்க” என்றவன் முகத்தில் குற்ற உணர்வு.

“பாவம் நந்து. அண்ணிய அங்க விட்டுட்டு, எனக்காக எல்லாம் பார்த்துருக்கான். பச்ச்.. இனிமே இந்த மாதிரி நடக்காதுனு நீங்களே சொல்லிடுங்க. நான் சரியானா தான் அவன் கிட்டப் பேசுவேன்”

அரசன் பதில் சொல்லாமல் பார்க்க, “என்னணா?” என்றான்.

“உன் மாற்றம் சடன்னா இருக்கா. அதான் எப்படி நம்புறதுனு புரியல”

“அண்ணா.. நான் மனோகரி மேல சத்தியம் பண்ணிட்டேன். கண்டிப்பா மீற மாட்டேன் நம்புங்க”

“ஓகே. உன் வார்த்தைய நம்பி விட்டுட்டுப்போறேன். திரும்ப நான் வரும் போது கால் சரியாகி நடக்கனும். ஓகே?”

“ம்ம்”

மருத்துவரிடம் பேசி விட்டு கிளம்பி விட்டான்.

•••

மாலை…

கதிரவன் பூமியின் தொடாத பாகங்களை தேடி ஓட ஆரம்பிக்க, அவனில்லா இடங்கள் ஒளியிழக்க ஆரம்பித்தது.

வாசலில் நின்று மேற்கே மறைந்து கொண்டிருந்த சூரியனை பார்த்தபடி, அரசேந்திரன் தீவிரமான முகத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க அவங்க கால் ஹிஸ்ட்ரி, பேங்க் அக்கவுண்ட் எல்லாத்தையும் செக் பண்ணுங்க. இங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க பார்த்து வைங்க. நான் கிளம்பி வர்ரப்போ சொல்லுறேன்”

முடித்து விட்டு வேலையை பார்க்க, அவனது தனிப்பட்ட கைபேசி அதிர ஆரம்பித்தது.

அது சொந்தபந்தங்களுக்கானது. அதில் அவனுடைய குடும்பம் தவிர, வேறு யாரும் அழைப்பது இல்லை. இப்போது லாலியின் பெயர் ஒளிர்ந்தது. ஆம்! வைசாலிக்கு மட்டும் அந்த எண்ணை கொடுத்து இருந்தான்.

கைபேசியை எடுக்க, பாதியில் அழைப்பு நின்று விட்டது. உடனே ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது.

“கிங் ஃப்ரியா?”

முகத்தில் புன்னகை மலர, வைசாலியை அழைத்தான்.

“நான் டிஸ்டர்ப் பண்ணலயே..? நைட் நேரம் யோசிக்காம கால் பண்ணிட்டு அப்புறம் யோசிக்கிறேன்”

எடுத்த எடுப்பில் வைசாலி கேட்க, அரசனின் புன்னகை விரிந்தது.

“இல்ல இல்ல. என்ன விசயம்? இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க?”

“இப்ப தான் நேரம் கிடைச்சது. எங்க இருக்கீங்க?”

“மதுரைல.”

“அதுக்குள்ள போயாச்சா? ஈவ்னிங் கால் பண்ணேன். ஃபோன் ஆஃப்ல இருந்தது.”

“என்ன விசயம்? எதாவது முக்கியமான விசயமா?” என்று குழப்பமாக கேட்க, “இல்ல நீங்க போலீஸ் தான உங்க கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்கனும்” என்றாள்.

அவளது இலகுவான குரலை கேட்டப்பின்பு, அரசன் ஒன்றும் அதிரவில்லை.

“அப்படியா மேடம். யார் மேல கம்ப்ளைண்ட் பண்ணனும்?”

“யாரோ எங்க வீட்டுக்கு பார்ஸல் பர்ஸலா அணுகுண்டு வெடி, சீனி வெடி, முறுக்கு வெடி எல்லாம் அனுப்பி வச்சுருக்காங்க கிங். அந்த அணுகுண்டு கால்ல விழுந்து, கால் ஒரே வலி தெரியுமா? அவங்க மேல தான் கேஸ் போடனும்.”

சட்டென அரசனுக்கு விசயம் விளங்கி விட, “யாராவது உன் கிட்ட ட்ரீட்மெண்ட் பார்த்த பிள்ளைங்களா இருக்கும். யார என்ன கொடுமை படுத்துனியோ?” என்று வாரி விட்டான்.

“உங்கள பேசி ஜெயிக்க முடியாதே. தாங்க்ஸ். முறுக்கு எல்லாம் செம்ம டேஸ்ட். சாப்பிட்டுட்டே இருந்தேன். இப்ப கூட பாதிய பிஜிக்கு அள்ளிட்டு வந்துட்டேன். விட்டுட்டுக் கிளம்பவே மனசு இல்ல”

“பிஜிலயா இருக்க?”

“இன்னும் பத்து நாள் டியூட்டி இருக்கு. முடிச்சுட்டு தான் வேலைய விட்டு நிக்கனும்.”

“நீ சென்னை போயிடுவியோ?”

“இல்ல திருச்சி”

“திருச்சியா?”

“ஆமா.. மாதவன் சொந்த ஊரு திருச்சி. அவர் வேலை பார்க்குற ஹாஸ்பிடல் தான் சென்னையில இருக்கு”

“ஓகே ஓகே. முறுக்கு எல்லாம் பிடிச்சுருந்துச்சா?”

“ரொம்ப. அதுவும் அந்த தேங்காய் பால் முறுக்கும் பட்டர் முறுக்கும்.. மொத்தமா காலி பண்ணி, சாப்பாடு சாப்பிட வயித்துல இடம் இல்லனா பாருங்க”

“அட முட்டக்கண்ணி.. இப்படியா ஒரே நாள்ல சாப்பிடுவ? உனக்குத் தான அனுப்புனேன். பொறுமையா சாப்பிடு. இல்லனா கல்யாணத்தப்போ உருண்டு போற நிலைமை வந்துடப் போகுது”

“அதெல்லாம் வராது. அப்படியே போனாலும் அது முறுக்க டேஸ்ட்டா சுட்டவங்க தப்பு.. கூடை கூடையா அனுப்புன உங்க தப்பு” என்று அவன் மீது பழியை போட்டு விட்டு, “ஆமா இந்த முறுக்கு பிஸ்னெஸ் யாரோடது? உங்கப்பா பேங்க்ல தான வேலை பார்த்தார். நீங்க போலீஸ். முறுக்கு எப்படி?” என்று கேட்டாள்.

“எங்க சொந்த ஊருல, லேடீஸ்க்கு ஹெல்ப்பா இருக்கட்டும்னு தாத்தா குடிசை தொழிலா ஆரம்பிச்சுக் கொடுத்தார். இப்போ அத அம்மாவும் நானும் பார்த்துக்குறோம்.”

“உங்க தாத்தா வாழ்க”

“அரசியல் கட்சில சேர போறியா?”

“எதே? எதுக்கு?”

“இல்ல வாழ்க்கை முடிஞ்சு கடவுளோட போய்ட்டவர வாழச்சொல்லுறியே அதான். இல்லாதவங்களுக்கு வாழ்க கோசம் போடுற அரசியல்வாதி ஆகிட்டியோனு நினைச்சேன்”

“உங்க தாத்தா இல்லையா?”

“ம்ஹூம். தாத்தா பாட்டி அப்புறம் அப்பா. எல்லாரும் கடவுள தேடி போயாச்சு”

“ஓஓ.. சாரி..”

“விடு விடு”

“நீங்க வேலை பார்க்கலயா?”

“நான் ஒன்னு சொல்லட்டா?”

“ஓரயிரம் கூட சொல்லுங்க”

“நீ போங்க வாங்கனு பேசுறது யாரோ ஒருத்தர் கூடப் பேசுற மாதிரி இருக்கு”

பட்டென சொல்லி விட்டான். அவளை மண்பத்தில் பார்த்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவர்கள் சந்தித்து பல வருடங்கள் ஆகி விட்டது. இருவருக்கும் இருந்த நெருங்கிய நட்பு இப்போது தள்ளி நின்றது. எல்லாம் புத்திக்கு உரைத்ததால் அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டான். ஆனால் இப்போது பேசும் போது, அந்த தூரம் என்னவோ அவனை அசௌகரியமாக உணர வைத்தது. அது என்ன உணர்வு என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவள் பழையபடி நீ வா போ என்று பேசினால் நன்றாக இருக்குமோ? என்ற எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டே இருக்க, இப்போது உடைத்து விட்டான்.

இதைக்கேட்ட நொடி, வைசாலி சிரித்து விட்டாள்.

“தோணுதுல? எனக்கும் தோணுச்சு. ஆனா பேச வரல. என்னவோ நீங்க பெரிய பொஸிஷன்ல இருக்கீங்க. உங்க வயசுக்கும் பதவிக்கும் மரியாதை கொடுக்கனும்னு தோணுது. என் கூட ஒரே பஸ்ல வந்த கிங் நீங்க தான்னு உடனே ஒத்துக்க முடியல. கொஞ்ச நாள் போனா மாறுமோ?”

“நான் போலீஸ்னா நீயும் தான் டாக்டர். நான் நார்மலா பேசல?”

“இது நார்மலா?” என்று தொண்டை வரை வந்து விட்ட கேள்வியை, வைசாலி கப்பென உள்ளே தள்ளி பூட்டினாள்.

அவன் விலகலை உணர்வது போல், அவளும் உணர்கிறாள். உடைத்து விட்டுப்பேசத்தான் முடியவில்லை.

“போகப்போக வந்துடும். விடுங்க கிங்”

அவள் சமாளிப்பது புரிய, மணியை பார்த்தான்.

“டைம் ஆச்சு. ரெஸ்ட் எடு.”

“ஓகே பை”

அரசன் உடனே துண்டித்து விட்டான்.

கைபேசியை சில நொடிகள் அமைதியாக பார்த்த வைசாலி, பெருமூச்சோடு ஓரமாக வைத்து விட்டு படுக்கையில் விழுந்தாள்.

அரசனும் சில நிமிடங்கள் அசையாமல் அமர்ந்து இருந்தான். பிறகு கையிலிருந்ததை தூக்கிப்போட்டு விட்டு, அறையை விட்டு வெளியே வந்தான்.

அவனுடைய வாகன ஓட்டி நிமிர்ந்து பார்க்க, “வாங்க ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாம்” என்று முன்னால் நடந்தான்.

அவர் சாவியை எடுத்துக் கொண்டு வர, “கொடுங்க நான் ட்ரைவ் பண்ணுறேன்” என்று கையை நீட்டினான்.

இதைக்கேட்டதும் அவர் பயந்து விட்டார். அரசன் ஓட்டுவான் தான். ஆனால் வேகத்தை நினைத்து தான் பயமாக இருந்தது. சொந்த காரை சரியாக ஓட்டுபவன், காவல்துறை வாகனத்தை மட்டும் படு பயங்கரமாக ஓட்டி, உடன் வருபவர்களை கதி கலங்க வைத்து விடுவான். சிறு பயத்தோடு சாவியைக் கொடுக்க, அரசன் வாகனத்தில் தாவி ஏறி அமர்ந்தான்.

என்னவோ அரசனுக்கு உடலெல்லாம் பரபரப்பாக இருந்தது. நேற்று அனுபவித்த அதே பரபரப்பு. காரணத்தை ஆராய்ந்து கொண்டிருக்காமல், அந்த பரபரப்பை வாகனத்தில் காட்ட, அது சீறிப்பாய்ந்தது.

•••

காலை பத்து மணி..

அரசன் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தான். மிகச்சிறிய வீடு.

உடையை மாற்றிக் கொண்டு வந்தவன், சமையலறை பக்கம் சென்றான்.

கோதுமை மாவு எடுத்து சாப்பாத்தி செய்ய ஆரம்பிக்க, கைபேசி அழைத்தது.

அஞ்சனா அழைத்து இருக்க, எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.

“சொல்லு அஞ்சு”

“எங்க இருக்க?”

“வீட்டுல”

“இங்க வரலாம்ல?”

“எனக்கு வேலை இருக்கு.”

“அத்தானும் மச்சானும் சரியான வேலை பைத்தியம்.”

“இப்ப எதுக்கு கூப்பிட்ட அதைச் சொல்லு. நான் சாப்பிடவே இல்ல இன்னும்.”

“ஏன்? போய் சாப்பிடு போ. மணி பத்து”

“இப்ப தான் சப்பாத்தி மாவு பிசையுறேன். செஞ்சு சாப்பிட வேண்டியது தான்”

“கடையில சாப்பிட்டுருக்கலாம்ல?”

“அத விடு. நீ ஏன் இப்ப கூப்பிட்ட?”

“அத்த வந்துச்சு காலையிலயே. எப்படியாவது அரச வர வைச்சு இந்த பிரச்சனைய முடிச்சு விடுனு சொல்லிட்டுப் போகுது. என் பக்கத்துல யாருமே இல்ல. அவங்க உன்னால வர முடியுமானு கேட்க சொல்லவே இல்லை. அதனால நான் கேட்கவே இல்ல. ஆனா நீ எப்ப வருவ?”

அஞ்சனா பேசியதின் அர்த்தம் விளங்க, அரசன் யோசித்தான்.

“என்னை பத்தி கேட்காதவங்களுக்கும் சேர்த்து பதில் சொல்லிடு. என்னால இப்போ வர முடியாது. ஆனா திருவிழா அன்னைக்கு அங்க இருப்பேன். அப்போ பேசிக்கலாம்”

திருவிழாவை பார்க்கப் போவதில்லை என்று தெரியாமல், வருவதாக கூறி வைத்தான்.

“என் பக்கத்துல இருக்க.. இல்ல இல்ல.. இல்லாதவங்களுக்கு கேட்டுருச்சாம். திருவிழாவுக்கு வா. பேசி ஒரேடியா முடிச்சு விட்டுருவோம்”

“இப்ப கட் பண்ணு. வேற கால் பேசனும்”

கைபேசியை அனைத்து போட்டு விட்டு, மற்றதை எடுத்து வேறு ஒருவருக்கு அழைத்தான்.

“என்னாச்சு சார்? எதாவது கிடைச்சதா?”

“அவங்க பேங்க் டீடைல் ரொம்ப க்ளியரா இருக்கு சார். எனக்கு என்னமோ நீங்க வீணா சந்தேகப்படுறீங்கனு தோனுது. பேஷண்ட் மெடிக்கல் ரிப்போர்ட் தான் டீடைலா இருக்கே சார்?”

“இல்ல சார். என்னவோ எங்கயோ தப்பா எனக்குத் தோணுது. ஒருவேளை எனக்கு இப்படித் தோணுறது தப்பா இருக்கலாம். பட் ஒரு க்ளாரிஃபை இல்லாம விட முடியல”

“என்ன சார் பண்ணலாம்?”

“அந்த டாக்டர் பர்ஸ்னல் லேப்டாப் இல்ல கம்ப்யூட்டர் எதையாவது ஹேக் பண்ண முடியுமானு பார்க்கலாம்”

“ட்ரை பண்ணலாம் சார்”

உடனே ஒத்துக் கொண்டு வைத்து விட்டார்.

சப்பாத்தியை சுட்டு எடுத்தவனுக்குள் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. எதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத முடிச்சு இருப்பது போன்ற எண்ணம், தலையை சுற்றி வட்டமிட்டது.

திடீரென எதோ தோன்ற, கைபேசியை எடுத்து வேறு ஒருவனை அழைத்தான்.

“ஹலோ எஸ்.பி சார். எப்படி இருக்கீங்க?”

“சதீஷ் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா?”

“சொல்லுங்க சார். பண்ணிடலாம்”

“ஒரு கம்ப்யூட்டர ஹேக் பண்ணனும். ஒரு டாக்டரோடது. ஹாஸ்பிடல்ல வச்சு பண்ணனும்”

Leave a Reply