வரம் 8

Loading

அடுத்த நாள் காலை..

அரசன் பிரகாசத்தை வைத்திருக்கும் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். அவனை வெளியே அமர வைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் உள்ளே சென்றான்.

பிரகாசம், முகம் வெளிறி, பயத்தில் உறைந்து போய் அமர்ந்து இருந்தார். இரவு ஒரு நொடி கூட கண்ணை மூடவில்லை. மூட முடியல்லை.

இரவெல்லாம், குற்றவாளிகள் அடி வாங்கி அலறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு திருடனை பிரகாசத்தின் கண் முன்னால் அந்த அடி அடித்து உதைத்தனர். அதை பார்க்கப் பார்க்க பிரகாசத்திற்கு வியர்த்து கொட்டி விட்டது.

தைரியம் சற்று ஆட்டம் காண ஆரம்பித்து இருந்தது. அடி வாங்கியவன் உடல் வலியில் அனத்திக் கொண்டே இருந்தான். இந்த பயம் சற்று தெளியும் முன், வேறு ஒருவனை இழுத்து வந்து வெளுக்க ஆரம்பித்தனர்.

அதுவும் மூன்று காவலர்கள் சேர்ந்து அடித்து மிதித்து, குற்றியிராக்கி விட்டனர்.

“பிடிக்கப்போகும் போது தப்பிச்சு ஓடி, வண்டி முன்னாடி விழுந்துட்டான்னு கேஸ் ஃபைல் பண்ணிட்டு, தூக்கி ஹாஸ்பிடல்ல போடுங்க” என்று இரக்கமே இல்லாமல் சொன்னான் இன்ஸ்பெக்டர்.

இரத்தம் ஒழுக தூக்கிக் கொண்டு சென்றதை பார்த்து, பயந்தே விட்டார் பிரகாசம். ஒரு மருத்துவராக அவனது காயத்தின் அளவுகள் பார்க்கும் போதே தெரிந்தது.

இன்னும் சற்று நேரம் அடித்திருந்தால், அவனது உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இத்தனையும் கண் முன்னால் நடக்க எங்கிருந்து தூங்குவது?

அவரை வைத்திருந்த அறையில் வெளிச்சத்திற்கு வழியே இல்லை. விடிந்ததா? இல்லையா? என்றும் தெரியவில்லை. மரணபயத்தில் அமர்ந்திருந்தவர் முன்னால் சென்று, அமர்ந்தான் இன்ஸ்பெக்டர்.

பிரகாசம் கண்ணில் இன்னும் மிச்சம் இருந்த தைரியம், அவனுக்குப் பிடிக்கவில்லை. அதை விரட்டியே ஆக வேண்டும்.

“என்ன டாக்டர் வியர்த்து வழியுது? விசாரனைக்கு முன்னாடி ஹர்ட் அட்டாக் எதுவும் வந்து செத்துடாத” என்று நக்கலாக கூறி விட்டு இலகுவாக அமர்ந்தான்.

“சொல்லு”

“சார்.. எனக்கு வக்கீல பார்க்கனும். இப்படி ட்ரீட் பண்ணுற அளவு நான் சாதாரண ஆள் இல்ல. என்…”

“அய்யய்ய.. யோவ் இத தானயா நேத்தும் சொன்ன? எனக்கு வேற பதில் வேணும்”

“சார் மரியாதையா பேசுங்க. என் வயசு பொஷிஷன்…”

“ஓ.. சாருக்கு மரியாதை வேணுமா? கொடுக்கலாமே” என்றவன் யாரையோ அழைத்து, அவன் கையிலிருந்த லத்தியை வாங்கிக் கொண்டான்.

அந்த லத்தியை மேசையில் தட்டியபடி, “சொல்லுங்க டாக்…டரு… இப்ப நீ பண்ண அத்தனை தில்லு முல்லையும் ஒன்னு விடாம ஒப்பிக்கிற.. நான் எல்லாத்தையும் கேட்டுப்பேனாம். எங்க சொல்லு பார்ப்போம்” என்று நக்கலடித்தான்.

“தில்லுமுல்லா? சார் நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல”

“உன்னை பத்தின உன் ஆஸ்பத்திரி பத்தின வண்டவாளத்த எல்லாம் தெரிஞ்சுட்டு தான் தூக்கி இருக்கோம்.” என்று பிரகாசத்தை அதிர வைத்தான்.

“சரி நீ எனக்கு விசயம் சொல்லுறதுக்கு முன்னாடி, நான் உனக்கு ஒரு விசயம் சொல்லவா? உன் மேல எஃப்ஐஆர் எதுவும் ஃபைல் பண்ணல”

“அப்புறம் ஏன்.. ஏன் அடைச்சு வச்சுருக்கீங்க?”

“காரணமா தான். நாங்க கொடுக்குற ட்ரீட்மெண்ட் தாங்காம நீ செத்துப்போயிட்டா, நான் இல்ல விசாரணை கமிஷன கட்டிட்டு அழனும். அதான் ஃபைல் பண்ணல. நீ செத்துட்டா… உன் பாடி எங்கயோ கிடச்சது. குற்றவாளிய தேடுறோம்னு சொல்லிட்டு ஈசியா போயிடலாம் பாரு?”

லத்தியை கையில் சுழற்றியபடி பேசியவனின் பேச்சு, பிரகாசத்தை கொன்றே தீருவேன் என்ற ரீதியில் இருந்தது.

அடிவாங்கி அலறியவன் அலறல் எல்லாம் காதில் ஒலிக்க, வியர்வை ஆறாக ஓட ஆரம்பித்தது. அதில் பாதியை கூட தாங்க மாட்டார் பிரகாசம்.

“சார் என்ன மிரட்டுறீங்களா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.”

பிரகாசம் கண்ணில் பயமிருந்த போதும், அவன் எதிர்பார்த்த அளவு வராததில் யோசனையானான்.

‘இன்னும் எதுல வருது தைரியம்?’ என்று யோசிக்கும் போது, முரளிதரன் நினைவு வந்தது.

முரளிதரனும் பிரகாசமும் க்ரைம் பார்ட்னர். அதோடு அவர்கள் சேர்ந்து தான் மருத்துவமனையும் கட்டி வைத்திருந்தனர். முரளிதரனுக்கு அரசியல் செல்வாக்கு வேறு இருந்தது. எப்படியும் பிரகாசத்தை வெளியே கொண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கை தான் அவரிடம் மிச்சமிருந்தது.

தன் குடும்பத்தை விட, பிரகாசத்திற்கு முரளிதரனின் மீது நம்பிக்கை இருந்தது. அது அந்த காவலனுக்கும் புரிந்தது.

“நான் மிரட்டுறேன்னு தெரிஞ்சுடுச்சா..? நீ அறிவாளியா.. சரி.. சுடச்சுட இன்னொரு ஹாட் நியூஸ் சொல்லவா? உன் க்ரைம் பார்ட்னர் டாக்..டரு முரளிதரன் தமிழ்நாடு போலீஸாரால் சற்று முன் கைது செய்யப்பட்டார்”

பிரகாசம் அதிர்ந்து பார்க்க, “கண்ணுல பீதி வருதே.. ஆனா எனக்கு பத்தவே இல்ல தெரியுமா?” என்று உதட்டை பிதுக்கினான்.

“சரி இதுக்கெல்லாம் நீ பயப்பட வேணாம்” என்றவன் எழுந்து கொண்டான்.

வாசலில் நின்று இருந்த ஒருவனுக்குக் கைகாட்ட, உடனே வந்தான். அவன் கையில் லத்தியை கொடுத்து விட்டு, பிரகாசத்தை நோக்கி கண்ணை காட்டினான்.

லத்தியை வாங்கிக் கொண்டவனின் பார்வை, பிரகாசத்தின் மீது கொலை வெறியோடு படிந்தது.

“இது வரை வெறும் நாலே பேர தான் விசாரிக்கிறேன்னு இவர் அடிச்சு முடிச்சுருக்காரு. அஞ்சாவது ஆள் நீ தான். என்ஜாய்” என்றவன் வாசலை நோக்கி நடந்தான்.

“சார் சார்.. இது தப்பு.. சார் போகாதீங்க.. சார் என்னை விட்டுருங்க” என்று பிரகாசம் கத்திக் கொண்டிருக்கும் போதே, மேலும் இருவர் லத்தியோடு உள்ளே நுழைந்தனர்.

நேற்று இரண்டு குற்றவாளிகளை பிரகாசம் முன்னால் வைத்து அடித்து உதைத்தவர்கள். அவர்களை பார்த்ததும் பிரகாசத்தின் இதயம் தொண்டைக்கு வந்து விட்டது.

“கேமரா ஆஃப் பண்ணதும் ஆரம்பிங்க” என்று ஒருவன் தோளில் தட்டி விட்டு, இன்ஸ்பெக்டர் வெளியேறினான்.

“சார் போகாதீங்க.. நீங்க என்ன கேட்டாலும் சொல்லுறேன். அடிக்க சொல்லாதீங்க.. சார்.. சார்..”

கத்தலை காதிலேயே வாங்காமல் கதவை பூட்டி விட, பிரகாசத்திற்கு இதயமே நின்று விட்டது. மாட்டை அடிப்பது போன்ற அடி தன் மீது விழுந்தால்?

வேகமாக எழுந்து அங்கு இருந்த கேமராவிடம் ஓடினார்.

“சார் நீங்க கேட்குறத எல்லாம் சொல்லுறேன். என்னை.. என்னை அடிக்க வேணாம். என்னை விடுங்க.. நீங்க கேட்குறத…”

கேமராவில் எரிந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கு அணைந்து போனது.

மூவரில் ஒருவன் வந்து பிரகாசத்தை பிடித்து இழுக்க, “நோ.. என்னை அடிக்கா…தீங்க.. நோ..” என்று மூச்சு விடத்திணறினார்.

இரத்த அழுத்தம் உட்சத்தை தொட்டிருந்தது. அப்படி ஒரு உயிர் பயத்தை காட்டியிருந்தனர். மனதளவில் கொடுத்த டார்ச்சரில், பிரகாசம் மயங்கும் நிலைக்கு வந்து விட்டார்.

ஒருவன் அடிக்க லத்தியை தூக்க, கதவு படாரென திறக்கப்பட்டது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு உள்ளே வந்த இன்ஸ்பெக்டரிடம் ஓடினார்.

“நீங்க கேட்குறத சொல்லிடுறேன். அவங்கள அவங்கள அடிக்க வேணாம்னு சொல்லுங்க”

மூச்சு வாங்க பிரகாசம் பேச, அவன் முகத்தில் பூரண திருப்தி. அவன் எதிர்பார்த்த பயம் வந்திருந்தது.

மூவரையும் விலகி நிற்க சொல்லி விட்டு, “இப்ப சொல்லு.. நீ பண்ண பித்தலாட்டத்த எல்லாம் டான் டான்னு சொல்லு பார்ப்போம்” என்றான்.

“சார்..” என்று பிரகாசம் எச்சிலை விழுங்க, “ஓஓ.. பல க்ரைம் பண்ணதுல நான் எதை கேட்குறேன்னு தெரியலல?” என்று நக்கலடித்தான்.

பிறகு, ஒவ்வொன்றாக கேட்டான். இரண்டு குற்றத்தை விசாரித்து விட்டு, கடைசியாக மனோகரியிடம் வந்தான்.

“அப்புறம் ஒரு போலீஸ்காரரோட தம்பி பொண்டாட்டிய கொன்னியே.. அது எதுக்கு பண்ண? யார் சொல்லி பண்ண?”

“போலீஸா?” என்று பிரகாசம் விழிக்க, “அதான்.. அந்த பொண்ணு பேரு கூட…” என்று தெரியாதது போல் இழுத்தான்.

தன் கைபேசி எடுத்துப்பார்த்து விட்டு, “ம்ம்.. மனோகரி.. ஆக்ஸிடென்ட்னு வந்தப்போ, அந்த பொண்ணு ப்ரக்னெண்ட்னு தெரிஞ்சும் அதை மறைச்சு முடிச்சீங்களே.. அதுக்கு எவ்வளவு பணம் வந்துச்சு?” என்று கேட்டான்.

பிரகாசத்திற்கு விழி பிதுங்கியது. குற்றங்கள் ஒவ்வொன்றும் தன் வாயால் வெளிவருவது தெரிந்தது. ஆனால், அடி வாங்கி உயிரை விட முடியாது. எச்சிலை விழுங்க, “என்ன சொல்ல மாட்டியா? சரி விடு. என் டீம் கிட்ட விட்டா ரெண்டு நிமிசத்துல பதில் வாங்கிடுவாங்க” என்றான்.

“இல்ல இல்ல.. சொல்லுறேன். அது.. அந்த பொண்ணு போலீஸ் குடும்பம்னு எனக்குத் தெரியாது”

“பார்ரா.. இந்த கதைய நான் நம்பனும். சரி எவ்வளவு பணம் வாங்குன? அதை சொல்லு முதல்ல”

“நாலு.. நாலு கோடி”

“சாதாரண பொண்ணுக்கு நாலு கோடி பேரம்.. இது வரைக்கும் நீ சொன்னத கூட்டிக் கழிச்சு பார்த்தா.. யோவ்… நீ உலக பணக்காரன் லிஸ்ட்லயே வரலாம் போல..?” என்று நக்கலடித்து விட்டு, “சரி சொல்லு.. நாலு கோடி கொடுத்தவன் எவன்?” என்று கேள்வியை கேட்டான்.

பிரகாசம் எச்சிலைக்கூட்டி விழுங்கினார்.

“சொல்லு..” என்று இன்ஸ்பெக்டர் அதட்ட, “மாதவன்.. டாக்டர் மாதவன்” என்றான்.

“அடடே.. இது வர அரசியல்கட்சி ஆளுங்களுக்கு, பெரிய புள்ளிக்கு தான் ஃப்ராடு வேலை பண்ணிட்டு இருந்தீங்க.. இப்ப என்னடானா உங்களுக்குள்ளயே வேணுங்குறத பண்ணிப்பீங்க போல? அவனும் ஒரு டாக்டர் தான? அவன் ஏன் உன் கிட்ட பணம் கொடுக்கனும்? அவனே செஞ்சுருக்கலாம்ல?”

பிரகாசம் எச்சிலை விழுங்கியபடி விவரங்களை கொடுத்தார். கூடவே மாதவனை பற்றிய விவரங்களை வாங்கிக் கொண்டு, “நீ சொன்னதுல எதாவது பொய் இருந்ததுனு வையேன்…” என்று விரலை நீட்டி எச்சரித்தான்.

பிறகு எழுந்து வெளியே சென்று விட, லத்தியோடு நின்ற மூவருமே அசையவில்லை. பிரகாசத்தை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் வெளியே வரும் போது, அரசேந்திரன் சிலையாக அமர்ந்து இருந்தான். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இருந்தது அவனுக்கு. முதலில் மாதவன் என்று கேட்டதுமே பெரிதாக எதுவும் அவன் யோசிக்கவில்லை. விவரங்களை முழுதாகக்கேட்டப்பின்பு அதிர்ந்து போனான்.

அவன் மாதவனை நினைத்து அதிர்ந்ததை விட, வைசாலியை நினைத்து தான் அதிகம் கவலைப்பட்டான்.

“சார்” என்று இன்ஸ்பெக்டர் அழைத்ததும், தன்னிலை மீண்டு திரும்பிப்பார்த்தான்.

“அந்த டாக்டர அரெஸ்ட் பண்ணினா விசயம் எவ்வளவு உண்மைனு தெரியும் சார். மத்தவங்களையும் இதுல இப்ப சேர்க்கனும். கொஞ்சம் லேட் ஆகும்னு நினைக்கிறேன்”

“நாளைக்குள்ள மாதவன் அரெஸ்ட் பண்ணிடுங்க சார். இங்க தான் திருச்சில தான் இருப்பான். மத்தவங்க மாதிரி அவன் பெரிய புள்ளி இல்ல. உங்களுக்கு வேற பிரச்சனை வராது”

“அந்த மாதவன உங்களுக்குத் தெரியும் போலயே?”

“ம்ம்.. நீங்க வேலைய முடிச்சுட்டு சொல்லுங்க”

இன்ஸ்பெக்டர் சம்மதித்ததும், அரசன் அங்கிருந்து கிளம்பி நேராக அறைக்கு வந்து விட்டான். அவனால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. இதை எல்லாம் வைசாலி கேட்டால்?

அவள் என்ன முடிவெடுப்பாள் என்று அரசனால் கணிக்க முடியவில்லை. நிச்சயம் ஒரு மருத்துவராக அவளுக்கு இதைக்கேட்டால் கோபம் வரும். ஆனால?

வைசாலி உடைந்து போவாளோ? இல்லை மாதவனுக்கு ஆதரவாக நிற்பாளா? இரண்டுமே பொருந்தாத ஒன்றாகவே அரசனுக்குத் தோன்றியது.

எப்படியும் மாலைக்குள் மாதவனை கைது செய்து விடுவார்கள். விசயம் தெரிந்தால் வைசாலி அதிர்ந்து போவாள். முன்பே சொல்லி விட்டால் என்ன?

யோசனை தோன்றியதுமே கைபேசியை எடுத்து விட்டான். ஆனால், அழைக்கத்தோன்றவில்லை.

‘நோ.. இது போன்ல பேச முடியாது. நேர்ல போயிடலாம்.’ என்ற முடிவுக்கு வந்து அறையை உடனே காலி செய்து கொண்டு, வேகமாக இராமநாதபுரம் நோக்கிப்பறந்தான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு, தான் செய்வது தவறு என்று புரிந்தது. இவ்வளவு நாளும் ரகசியமாக வைத்திருந்த வழக்கை, இன்று அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணிடம் சொல்லப்போகிறான்.

ஒரு வேளை வைசாலி மூலமாக மாதவனுக்கு தெரிந்தால், அவன் தப்பித்து விடக்கூட வாய்ப்பு அதிகம். ஆதிகேசவனின் இழப்புக்கு பதில் சொல்ல முடியாது போகும். இத்தனை தடைகள் இருந்த போதும், அரசனின் மனம் வைசாலியிடம் சொல்ல முடிவெடுத்தது. அவனது கடமை ஒரு பக்கம் இழுக்க வைசாலியின் மீது கொண்ட பாசம் ஒரு பக்கம் இழுத்தது. இரண்டுக்கும் நடுவே யோசித்து குழம்பியபடி இருந்தாலும் கார் நிற்காமல் சென்றது. அவள் மாதவனுக்கு ஆதரவாக இருக்க மாட்டாள் என்று அறிவு கூறிக் கொண்டே இருக்க, கார் இராமநாதபுரத்தை தொட்டது.

உள்ளே செல்லும் முன் காரை ஓரமாக நிறுத்திவிட்டான். வீட்டுக்குச் செல்ல மனமில்லை. இதை வீட்டில் வைத்துப்பேசவும் முடியாது. திருமண வீடு. ஆட்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

அதனால் வெளியே எங்காவது.. அதுவும் யாரும் இல்லாத இடம் வேண்டும். வைசாலியை அழைத்தான்.

•••

மதிய உணவு நேரம்…

வைசாலியின் நெருங்கிய சொந்தங்கள் எல்லோரும் இருந்தனர். வைசாலிக்கு எத்தனை சேலை எடுக்க வேண்டும் என்று கணக்குப்போட்டு வைத்துக் கொண்டிருக்க, அவளின் கைபேசி மெல்ல பாட ஆரம்பித்தது.

“சாலி உன் போன் அடிக்குது”

“வந்துட்டேன்” என்று ஓடி வந்து எடுத்துக் காதில் வைத்தாள்.

“ஹலோ கிங்.. எ..”

“லாலி நான் உன்னை மீட் பண்ணனும். தனியா”

“என்ன?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்து நின்றாள்.

“உன்னை உடனே பார்க்கனும் லாலி. யாருமே இல்லாத இடமா. ரொம்ப சீரியஸ். வேற யாருக்கும் சொல்லாத”

“என்னாச்சு? எங்க இருக்கீங்க? அத முதல்ல சொல்லுங்க”

இருக்கும் இடத்தை அரசன் சொன்னதும், வைசாலி ஒரு இடத்தை கூறி விட்டு தானும் கிளம்பினாள்.

கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர, “சாலி எங்க கிளம்பிட்ட?” என்று அவளுடைய அக்கா நிறுத்தினாள்.

“ஃப்ரணட்ட பார்க்க. சீக்கிரம் வந்துடுறேன்”

“சாப்பிட்டுப்போ”

“வந்து சாப்பிடுறேன். அம்மா கிட்ட சொல்லுடு” என்று வேகமாக ஓடி விட்டாள்.

சில நிமிடங்களில் அரசேந்திரனை வரச்சொன்ன இடத்திற்கு வந்து விட்டாள். அது ஒரு கைவிடப்பட்ட பேருந்து நிறுத்தம். இப்போது மதியநேரமென்பதால் ஆட்கள் நடமாட்டமும் இல்லை.

காரை விட்டு இறங்கவும், அரசன் அவளை நன்றாக பார்த்தான். அவளிடம் பெரிதாக பதட்டம் எதுவும் இல்லை. அது வரை இதுவா? அதுவா? என்று இருந்த குழப்பங்கள் எல்லாம், அவளை பார்த்ததும் மறைந்து விட்டது.

“என்ன கிங்? எதுக்கு இப்படி அவசரமா வந்துருங்கீங்க? வீட்டுக்கு வர வேண்டியது தான?”

“ஒரு முக்கியமான விசயம் பேசனும் லாலி. வீடு சரி வராது”

“என்ன விசயம்?”

“மாதவன பத்தி”

“அவருக்கென்ன?”

“அவருக்கு ஒன்னும் இல்ல. நான் ரெண்டு நாள் முன்ன இங்க வந்துட்டு போனேன்ல. ஏன் தெரியுமா?” என்று கேட்டவன் ஆதிகேசவனை பற்றிக் கூறினான்.

கேட்க கேட்க வைசாலிக்குக் கோபமாக வந்தது.

“இவனும் ஒரு டாக்டர்? ஒரு உயிர.. அதுவும் ப்ரெக்ணன்ட் லேடிய.. தூக்கி உள்ள வச்சு உரிச்சு உப்புக்கண்டம் போட வேண்டியது தான?”

“அரெஸ்ட் பண்ணியாச்சு. ஆனா அவன் அத யாருக்காக செஞ்சான் தெரியுமா?”

அரசன் நிறுத்த ஒரு நொடி புருவம் சுருக்கியவள், புரிந்ததும் அதிர்ந்து பார்த்தாள்.

“மாதவனா? மாதவனா கொல்ல சொன்னது? ஏன்?”

“உங்க கல்யாண பேச்ச ரெண்டு மாசம் தள்ளி போட்டுருந்தானே ஏன்னு தெரியுமா?”

நான்கு மாதங்களுக்கு முன்பே பெண் பார்த்துச் சென்றவர்கள், இரண்டு மாதம் காத்திருக்கச் சொன்னதன் காரணம் அவளுக்குத் தெரியாது. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் மனோகரி தான் இறந்திருக்கிறாள். இதற்கு என்ன பொருள்?

வைசாலி புரியாமல் அரசனை பார்த்தாள்.

“கிங் சத்தியமா முடியல. எல்லாத்தையும் மொத்தமா சொல்லுங்க”

அரசன் தன் யூகத்தை சொல்லி முடிக்க, வைசாலிக்கு தலை சுற்றியது. இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்து, மாதவனால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது?

ஆத்திரம் தலைக்கு ஏற, “மாதவனயும் தூக்கி உள்ள போட வேண்டியது தான? ஏன் ஃப்ரண்டுக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளனு சாஃப்ட் கார்னர் எதுவும் வந்துடுச்சா?” என்று பொங்கினாள்.

“அடிங்க” என்று மிரட்டிய அரசனுக்குக் கூட புன்னகை வந்தது.

“அவன் மேல ஒரு மண்ணும் வரல. அவன அரெஸ்ட் பண்ண சொல்லிட்டுத்தான் வந்தேன். நீ விசயம் தெரிஞ்சு சாக் ஆகி பயந்துடுவியோனு தோனுச்சு”

“இப்ப பயந்தா போனேன்?”

வைசாலி நக்கலாக கேட்க, அரசன் பெருமூச்சு விட்டான்.

“உனக்கு மாதவன அரெஸ்ட் பண்ணுறதுல பிரச்சனை எதுவும் இல்லையே?”

“பிரச்சனைனு சொன்னா விட்டுருவீங்களா?” என்று வைசாலி பல்லைக் கடிக்க, மறுப்பாக தலையைசைத்தான்.

“விட மாட்டேன் தான். ஆனா.. உனக்கு… உனக்கு நிச்சயமான பையன். கல்யாணம் நின்னுடும்னு வருத்தமா இருக்கும்ல? இதுல எத்தனை வருசம் தண்டனை கிடைக்கும்னு இப்போதைக்கு சொல்ல முடியாது. நீ அவன கல்யாணம் பண்ணிக்கனும்னா வெயிட் பண்ணனும்”

“அரசன் சோப்பு.. என்னை பார்த்தா இப்படி ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற லூசு மாதிரியா தெரியுது?” என்று வைசாலி எகிற, அரசன் முகத்தில் ஒரு நிம்மதி வந்து அமர்ந்தது.

ஆனால் வைசாலியின் முகத்தில் கோபம் பல மடங்கு உயர்ந்து இருந்தது.

“பிச்சுடுவேன். இனி அவன கல்யாணம் பண்ணிக்கிறத பத்திப்பேசுனா.. அவன அரெஸ்ட் பண்ணலனா கூட இந்த கல்யாணம் இனி நடக்காது. இப்பவே போய் நிறுத்துறேன்”

வேகமாக காரை நோக்கி நடந்தவளை பிடித்து நிறுத்தினான்.

“அவசரப்படாத.. விசயம் வெளிய தெரிஞ்சு மாதவன் தப்பிச்சுடக்கூடாது” என்று அதட்டினான்.

வைசாலி கோபத்தை மூச்சுக்காற்றில் வெளியேற்றிய படி, திரும்பிக் கொண்டாள்.

“உச்சி வெயில்ல சூடா இருக்க. உள்ள உட்கார்ந்து பேசுவோம்” என்று தன் கார் கதவை திறக்க, அவனை முறைத்துக் கொண்டே காரில் அமர்ந்து கொண்டாள்.

அரசனும் மறு பக்கம் ஏறிக் கொண்டு ஏசியை போட்டு விட்டான்.

“சரி போதும் கூல் ஆகு. இத நீ வீட்டுல வேற சொல்லனும். ஆண்ட்டிக்கு சாக் கொடுக்காம பக்குவமா சொல்லு. எப்படியும் மாதவன அரெஸ்ட் பண்ணதும் கல்யாணம் தன்னால நின்னுடும். நீ முன்னாடியே எதையும் சொல்லி வைக்காத”

“ம்ம்”

சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவன், “உனக்கு மாதவன பிடிச்சு தான கல்யாணத்துக்கு சம்மதிச்ச?” என்ற கேள்வியை முன் வைத்தான்.

One Comment

Leave a Reply