அத்தியாயம் 1

Loading

மாலை மங்கிய நேரம். சாலைகளில் வாகனங்களின் பேரிரைச்சல்கள் நிறைந்திருக்க, அதில் காரை ஓட்டுவதற்குள் கடுப்பாகி விட்டான் சமர்.

ஹாரனை விடாமல் அழுத்தி, தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தான்.

“பொறு சமர்.. முன்னாடி இருக்கவங்க போனா தானா நகலுவாங்க? எதுக்கு போட்டு ஹாரனை அடிச்சுட்டே இருக்க?” என்று கேட்டார் சங்கரி.

“ப்ச்ச்.. நேரத்துக்கு போய் சேர வேணாமா? சீக்கிரமா கிளம்புங்கனு சொன்னாலும் கிளம்புறது இல்ல” என்று எரிச்சலை கொட்டியவன், கண்ணாடி வழியாக பின்னால் இருந்த அத்தனை பேரையும் முறைத்தான்.

காரின் பின்னால் சமரின் அன்னை சங்கரி, அவனது மனைவி வேதாஸ்ரீயும் அருகே மகள் சஷிகாவும் இருந்தாள்.

மூவரையும் அவன் முறைத்து தள்ள, “சமர்.. மூவ் ஆகுது பாரு” என்று அவன் தோளில் தட்டினான் தம்பி மிதுனன்.

காரும் நகர்ந்தது. சமரின் பொறுமையை அளவுக்கதிகமாகவே சோதித்து முடித்து, ஒரு வழியாய் மண்டபம் வந்து சேர்ந்தனர்.

பெண் வீட்டார்கள் ஏற்பாடு செய்திருந்த விழா. மிதுனனுக்கு இன்று நிச்சயதார்த்தம். மணப்பெண் ஜோவிதா.

காரை விட்டு இறங்கியதுமே, ஜோவிதாவின் பெற்றோர்கள் காசியும் சாவித்ரியும் வந்து வரவேற்றனர்.

உள்ளே சென்றதும் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமானது. மேடையில் மணமக்கள் அமர, அவர்களை சுற்றி குடும்பங்கள் அமர்ந்தனர்.

நிச்சய பத்திரிக்கை படித்து, தாம்புலம் மாற்றி, மோதிரம் அணிவித்தனர்.

மிதுனன் வருங்கால மனைவியை ஓரப்பார்வையில் ரசிக்க, அதையே தான் அவளும் செய்தாள்.

புகைப்படம் எடுத்துக் கொண்டு, சொந்தபந்தங்கள் கிளம்ப ஆரம்பித்தனர்.

நண்பர்களின் கேலி கூச்சலோடு மணமக்கள் சந்தோசமாய் சிரித்துக் கொண்டிருக்க, வேதா ஜோவிதாவின் சாவித்ரியோடு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

சங்கரியிடம் சஷிகா இருக்க, அவள் பாட்டியின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு மண்டபத்தை சுற்றி வந்தாள்.

அங்காங்கே நின்று, உறவினர்களிடம் பேசி நலம் விசாரிப்பது என்று அவர்கள் பொழுதை கடத்தினர்.

இப்போது தனியாக அமர்ந்திருந்தது என்னவோ சமர் தான். முகத்தில் எரிச்சலை காட்ட முடியாமல் தத்தளித்தபடி அமர்ந்திருந்தான்.

இந்த திருமண நிச்சயதார்த்தம் ரொம்பவும் அவசியமா? நேராக திருமணத்தை முடித்துக் கொண்டால் போதாதா? அவனுக்கும் தான் திருமணம் நடந்தது. நிச்சயதார்த்தம் சம்பிரதாயம் என்று நேரத்தை வீணடித்துக் கொண்டா இருந்தான்?

நேராக திருமண நாளை குறித்தார்கள். திருமணமும் நடந்தது. சொந்தங்களின் வாழ்த்தும் கிடைத்தது. அதோடு அன்றைய நாள் முடிந்தும் போனது.

அப்படி நேரடியாக திருமணம் செய்யாமல், எதற்கு இந்த வீண் செலவும்? ஆடம்பரமும்?

இதை தான் மிதுனனிடம் கூட சொன்னான்.

“நேரா கல்யாணத்த வைக்கலாம். ஒரு மோதிரம் போடுறதுக்கு அவ்வளவு செலவு பண்ணனுமா? சரி செலவு கூட பிரச்சனை இல்ல. நேரமும் போகுமே? கல்யாணம்னா தாலி கட்டுறது தான? நேரா தாலி கட்டுனா ஆகாதா? நான் அப்படித்தான கட்டுனேன்?” என்று கேட்டவனை மிதுனன் இமைக்காமல் பார்த்தான்.

சமருக்கு நேரெதிராக பிறந்தவன் மிதுனன். இவனிடமில்லாத பொறுமை அவனிடம் நிறைய உண்டு. ஆனால் எப்போதாவது அண்ணனுக்கு தம்பி என்று காட்டி விடுவான். அப்படித்தான் அன்றும் காட்டினான்.

“இது உன் கல்யாணம் இல்ல சமர். என் கல்யாணம். அத எப்படி நடத்தனும்னு நான் பார்த்துக்கிறேன்” என்று பட்டென சொல்லி விட்டான்.

இதைக்கேட்டு சமருக்கு கோபம் வந்திருந்தால், அது வேறு வகை. ஆனால் சமர் தோளை குலுக்கினான்.

“நீயே போய் நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிற.” என்றதோடு விட்டு விட்டான்.

அவ்வளவு தான் அவனுக்கு தம்பியின் விசயத்தில் இருந்த அக்கறை. அதற்கு மேல் அவன் எதிலும் தலையிடுவதில்லை.

மிதுனன் சொன்னது போலவே, இது அவனது திருமணம் தான். ஆனால் அவனுக்கு அண்ணனாக பிறந்த பாவத்திற்கு, சமரும் அல்லவா வந்து அமர்ந்திருக்கிறான்.

சொந்தபந்தங்கள் வேறு பார்த்து விட்டு வந்து பேச, முகத்தை திருப்ப முடியாமல் பதில் சொல்ல வேண்டியிருந்தது.

‘இவளாவது பக்கத்துல இருந்தா அவள பேச சொல்லிட்டு நாம சும்மா இருக்கலாம். எங்க போய் தொலைஞ்சா?’ என்று மனதில் தாளித்தபடி மனைவியை தேடினான்.

வேதாவோ, முகம் முழுவதும் சிரிப்புடன் சாவித்ரியிடம் எதோ பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு அடுத்தவங்கள பார்த்தா தான் சிரிப்பு வரும். வீட்டுக்குள்ள இவ சொத்த புடுங்கிட்ட மாதிரி உம்முனு இருப்பா’ என்று அதற்கும் அவளை தாளித்தான்.

வேதாவை கூப்பிட நினைத்து பார்க்க, அதற்குள் வேறு யாரோ வந்து அவளிடம் எதோ பேச, அங்கிருந்து சென்று விட்டாள்.

‘வெளிய வந்தா புருஷன மறந்துட வேண்டியது’ என்று மீண்டும் கடுகடுத்தான்.

ஆனால் வந்ததும் கொடுத்த குளிர்பானங்களை வாங்கி, கணவனுக்கும் பிள்ளைக்கும் கொடுத்து விட்டு, சங்கரிக்கு டீ யும் வாங்கி கொடுத்து விட்டுத் தான் சென்றாள் வேதா.

இடையில் மாப்பிள்ளை வீட்டினர் என்பதால், யாராவது வந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தனர். ஆனாலும் அதில் எல்லாம் சமர் திருப்தி அடைவதாக இல்லை.

அவன் நினைத்தால், தம்பிக்கு துணையாக அண்ணனாக மேடையில் நின்று எல்லோருடனும் கலகலப்பாக பேசலாம். செய்யவில்லை.

சங்கரியிடம் இருக்கும் மகளை வாங்கிக் கொண்டு, மண்டபத்தை சுற்றி வரலாம். செய்யவில்லை.

சங்கரியோடு பேசும் உறவினர்களோடு ஒன்றிரண்டு வார்த்தை பேசலாம். செய்யவில்லை.

இது எதையும் செய்யாமல் அமர்ந்து கொண்டு, மொத்த குடும்பமும் அவனை தனியாக விட்டு விட்டதாக கோபப்பட்டுக் கொண்டிருந்தான்.

விழா முடிந்து எல்லோரும் கிளம்பி விட, இரண்டு குடும்பத்திற்கும் ஹோட்டலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு குடும்பம் என்றால், ஜோவிதாவின் பெற்றோரும் மிதுனின் அன்னை மற்றும் அண்ணன் குடும்பமும் மட்டும் தான்.

வேறு யாருக்குமே அங்கு அனுமதி இல்லை.

எல்லோரையும் அனுப்பி விட்டு, மிச்ச வேலைகளையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினர்.

மணப்பெண் குடும்பத்தோடு மிதுனனும் கிளம்ப, சமர் காரில் மற்றவர்கள் மட்டும் ஏறினர்.

“அவன் எங்க?”

“பொண்ணு வீட்டோட வர்ரானாம்”

“நீங்க எதுக்கு விட்டீங்க? இதென்ன பழக்கம்? கல்யாணம் கூட ஆகல. அதுக்குள்ள பொண்ணு கூட போயிட்டு இருக்கான்?”

“அவங்க கூப்பிட்டாங்க. போனான்.”

“இதெல்லாம் நல்லது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் என்ன வேணா செய்யட்டும். இப்பவே என்ன அவங்களோட இவ்வளவு க்ளோஸ் ஆகுறது?”

சமர் அவன் போக்கில் பேசிக் கொண்டு காரை ஓட்ட ‘பின்ன எல்லாரும் உன்னை மாதிரி மாமனார் வீட்ட விரோதியாவா பார்ப்பாங்க?’ என்று எரிச்சலாக நினைத்துக் கொண்டார் சங்கரி.

ஹோட்டலுக்கு செல்ல ஏசி அறை புக் செய்திருந்தனர். எல்லோருமே அமர்ந்து விட, கடைசியாக வந்த சமருக்கு தம்பியின் அருகே தான் இடம் கிடைத்தது.

வேதா கணவனின் தட்டில் சாப்பாடு இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டாலும், மகளுக்கு உணவை ஊட்டி தானும் சாப்பிடுவதில் குறியாக இருந்தாள்.

மிதுனனும் ஜோவிதாவும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி சாப்பிட்டனர். மற்றவர்களை பற்றிய கவலையே அவர்களிடத்தில் இல்லை. சங்கரியும் கூட சம்பந்திகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் தனித்து விடப்பட்டது என்னவோ சமர் தான்.

ஆனால் அதை பற்றிய கோபத்தை காட்டாமல், சாப்பிட்டு முடித்தான். வேண்டியதை எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தனர்.

கிளம்பும் நேரம் சஷிகாவிற்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கிக் கொடுத்து விட்டு, ஜோவிதா சென்று விட்டாள்.

“இன்னேரத்துல சாப்பிடாதடா.. வீட்டுல வச்சு நாளைக்கு காலையில சாப்பிடு” என்று தன் மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வேதா.

“ப்ளீஸ்மா” என்று அவளும் கெஞ்ச, “அம்மா சொன்னா கேளுடா.. அப்ப தான் சித்தப்பா உன்னை பைக் ரைட் கூட்டிட்டு போவேன்” என்றான் மிதுனன்.

உதட்டை பிதுக்கினாலும், சாப்பிடாமல் வைத்து விட்டாள் சஷி.

சமர் காரை எடுத்து வந்து விட, எல்லோரும் கிளம்பினர்.

காரில் ஏறியதுமே, “எதுக்கு அவங்களோட போன நீ?” என்று கோபமாக கேட்டான் சமர்.

“அதுல உனக்கென்ன பிரச்சனை?”

“இன்னும் கல்யாணம் கூட ஆகல.. அவங்களோட ஒன்னா போற. அத்தனை பேரு இருக்கோம். உட்கார்ந்து பேசிட்டே இருக்க. கொஞ்சம் கூட டீசன்சி தெரியாதா உனக்கு?”

“என் டீசன்சி வச்சு சார் ஊறுகாய் போடப்போறீங்களா?”

“டேய்..” என்று சங்கரி அதட்ட, “நான் ஜோ கிட்ட பேசுனது இவனுக்கு பிடிக்கலமா.. ஏன்னு கேளுங்களேன்?” என்று எடுத்துக் கொடுத்தான்.

“கொஞ்சம் நேரம் அமைதியா வாங்க ரெண்டு பேரும்” என்று அதட்டி விட்டு சங்கரி வேதாவை பார்க்க, அவளோ சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மருமகளை நினைத்து பெருமூச்சு விட்டார் சங்கரி.

வீடு வந்ததும் மிதுனன் நேராக அறைக்குள் சென்று விட்டான்.

காரில் இருந்த பழங்கள் தாம்புலம் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தாள் வேதா.

“சமர்..” என்று இறங்கி வீட்டுக்குள் செல்ல போனவனை தடுத்து நிறுத்தினார் சங்கரி.

“இந்த பைய எல்லாம் உள்ள எடுத்துட்டு வா.” என்றவர் பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

பையை எடுத்த சமர் மனைவியை பார்த்தான். அவள் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. சற்று முன்பு மிதுனனின் மாமியார் வீட்டினரிடம் பேசும் போதும், அவளது பெற்றோரிடமும் பேசும் போதும் இருந்த மலர்ச்சி சுத்தமாய் காணவில்லை.

“உன் அப்பா அம்மா வந்தாங்க போல?”

வேண்டுமென்றே ஆரம்பித்தான். அவனிடம் வந்து பேசியதே அவள் சொல்லித்தான். ஆனால் ஒன்றும் தெரியாதது போல், தலையை மட்டும் ஆட்டினாள்.

“யாரு கூப்பிட்டா? நீயா?”

“அத்த”

“என் கிட்ட சொல்லலயே? மருமகனா நானும் தான போய் அவங்கள கூப்பிட்டுருக்கனும்?”

வேதா பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள். இப்படித்தான் எதையாவது அவன் குதர்கமாக கேட்டால், நிற்கவே மாட்டாள்.

திருமணமான இந்த நான்கு வருடங்களும் இப்படித்தான் இருக்கிறாள்.

பதில் சொல்லாமல் சென்ற மனைவியை முறைத்துக் கொண்டு பின்னால் சென்றான்.

சஷிகாவின் உடையை மாற்றி விட்டு, படுக்க வைத்திருந்தார் சங்கரி.

“தூங்கிட்டாளா அத்த?”

“கண்ணை தேய்ச்சுட்டே இருந்தா பாப்பா. அதான் படுக்க வச்சுட்டேன். நீயும் போய் இந்த சேலைய மாத்திட்டு தூங்கு. இருக்க வேலைய காலையில பார்க்கலாம்” என்றவர் அறைக்குள் சென்று விட, வேதா வாசல் கதவை அடைத்து பூட்டி விட்டு தங்களது அறைக்குள் சென்றாள்.

அவளுக்கு பின்னால் வந்த சமர் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைய, சேலையை கழட்டப்போனவள் அப்படியே விட்டு விட்டாள்.

தலையலங்காரத்தை கலைத்து பின்னலை தளர்த்தியவள், இரவுக்கென ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டாள்.

சமருக்கு சேலை கட்டினால் தான் பிடிக்கும். சொல்லவும் செய்தான்.

“எனக்கு சுடிதார் தான் பிடிக்கும்” என்று அமைதியாக சொன்னவள், சேலையை தொடர்ந்து அணிவதை விட்டாள்.

அவனுக்காக அவனுக்கு பிடிக்கும் என்று ஒரு காலத்தில் வாழ்ந்தாள் தான். இப்போது அதை எல்லாம் குறைத்துக் கொண்டாள்.

கல்லுக்கு நான்கு நாட்கள் கற்பூரம் காட்டினால், சாமி கூட மனமிறங்கி அந்த கல்லில் வந்து விடும். ஆனால் சமர் எப்போதும் மாற மாட்டான். அவனுக்கு கற்பூரம் காட்டுபவர்கள் தான் பைத்தியகாரர்கள் என்று புரிந்து கொண்டாள். அதனால் தனக்கு பிடித்ததை செய்ய பழகி விட்டாள்.

சமர் குளித்து விட்டு வர, வேதா உள்ளே சென்று விட்டாள்.

அவள் கையில் சுடிதாரை பார்த்த சமருக்கு சலிப்பாய் இருந்தது. சொன்னாலும் கேட்க மாட்டாள் என்பதால் விட்டு விட்டான்.

குளித்து சுடிதாரில் வெளியே வந்தவள், பொட்டை வைத்து விட்டு திரும்பிப் பார்க்க, சமர் கீழே விரிக்கும் மெத்தையை எடுத்துக் கொண்டிருந்தான்.

‘ரைட்டு..’ என்று நினைத்தவள், “எனக்கு டயர்டா இருக்கு” என்றாள்.

அதை மதிக்க மாட்டான் என்று தெரிந்தாலும், சொல்லி பார்த்தாள். அவன் இப்போதும் மதிக்கவில்லை. மெத்தையை விரித்து விட்டவன் “எனக்கும் தான். கார் ஓட்டுன டயர்ட்” என்றான்.

வேதாவிற்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. கையை கட்டுப் படுத்தி அவள் நிற்க, சமர் விளக்கை அணைத்து விட்டு அவளையும் அணைத்தான்.

தொடரும்.

Leave a Reply