அத்தியாயம் 10
![]()
சங்கரியும் வேதாவும் மருத்துவமனையில் இருந்தனர். சஷியை வீட்டில் ஜோவிதாவிடம் விட்டு விட்டு வந்திருந்தனர்.
மருத்துவரை சந்தித்ததும், அவர் பரிசோதனை செய்ய அனுப்பினார். அது முடிந்து ரிபோர்ட் வரும் வரை வெளியே அமர்ந்திருந்தனர்.
சங்கரி மருமகளின் முகத்தை பார்த்தார். அவள் முகத்தில் பூரிப்போ சந்தோசமோ எதுவும் இல்லை.
“வேதா..”
“ம்ம்?”
“ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“ஒன்னும் இல்லயே”
“இல்லையே.. சந்தோசம் கூட உன் முகத்துல இல்லையே.. ஒரு வேளை பிள்ளை நிக்கும்னு நினைக்கலயா?”
“அதெல்லாம் இல்ல அத்தை”
“பின்ன ஏன் இப்படி இருக்க?”
“சொன்னா மட்டும் என்ன ஆக போகுது?”
“சமர் எதுவும் சொல்லிட்டானா?”
“உங்க புள்ளை ஓராயிரம் விசயம் சொல்லுவாரு. அதுல எத கேட்குறீங்க?”
அவள் சலிப்பாய் கேட்க, “புள்ள தங்குனதுக்கு?” என்று கேட்டார்.
“இல்ல அத்த.. நாங்களே அடுத்த பிள்ளை வேணும்னு தான் நினைச்சோம். அடுத்த வருஷம் சஷி ஸ்கூலுக்கு போவா. அதுக்கு அப்புறம் பெத்துக்குறத விட, இப்பவே பெத்துக்கிறது பெட்டர்ல?”
“அப்ப என்ன தான் பிரச்சனை?”
“உங்க புள்ளை தான்”
“என்ன பண்ணான்?”
“அவருக்கு நான் நேத்து வெளிய போனது பிடிக்கல.. ரொம்ப பேசுறாரு அத்த. ஹோட்டல்ல சாப்பிடாத.. காச செலவு பண்ணாத. அப்படி இப்படினு.. என்னமோ கோடிகோடியா எடுத்துட்டு வேர்ல்ட் டூர் போயிட்டு வந்த மாதிரி பண்ணுறாரு. தினமும் ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரி அதுக்கு ஒரு லெக்சர். நான் சொன்னாலும் புரிஞ்சுக்கிறது இல்ல. என்னவோ போங்க”
“அவனுக்கு பிடிக்கலனு தான் நீ வெளிய எங்கயும் வரலனு தெரியும். நேத்து வரும் போதே நினைச்சேன். எதாவது பிரச்சனை பண்ணுவான்னு. ஆனா நீ சமாளிப்பனு நினைச்சேனே?”
“சமாளிச்சுட்டாலும்.. தலை சுத்துதுனா, அதுக்கும் ஹோட்டல்ல கண்டத சாப்பிட்டதுனு திட்ட ஆரம்பிக்கிறாரு. என்னால முடியல போங்க”
“அதுக்காக இப்படி மூஞ்சிய தூக்கி வச்சுட்டு இருப்பியா? பேசுனா பதிலுக்கு பேசு. அவன கண்டா பயந்து நடுங்குனு எல்லாம் நான் சொல்ல மாட்டேன். அவன் அப்படித்தான். அதிகப்பிரசங்கி தனமா பேசுவான். அதை கேட்டுட்டு சும்மா போகனும்னு இல்ல. உனக்கு தோனுறத நீயும் பேசு. புரிய வை”
“முதல்ல, நான் பேசுறத கேட்குற அளவுக்கு அவருக்கு பொறுமையே இல்லயே. நான் எதையாச்சும் சொல்ல வந்தாலே, அதுல ஒரு தப்ப தேடிப்பிடிச்சு சண்டைக்கு நிப்பாரு. எனக்கு தான் சண்டை போடுறதுக்கு சும்மா இருக்கலாம்னு தோணிடும்”
“வேதா..” என்று நர்ஸ் அழைக்க, “இத அப்புறம் பேசுவோம். உள்ள வா” என்று அழைத்துச் சென்று விட்டார்.
குழந்தை உருவாகி இருப்பது உறுதியாகி விட, மருந்து மாத்திரைகளோடு வேண்டிய அறிவுரையும் வாங்கிக் கொண்டு, இருவரும் கிளம்பினர்.
வேதா அப்போதும் அமைதியாக தான் வந்தாள்.
“வீட்டுக்கு போய் நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். நீ அமைதியா இரு. என்ன?”
வேதா பதட்டமாக பார்த்தாள்.
“எதையாச்சும் சொல்லிடாதீங்க அத்த. அதான் சாக்குனு என் கிட்ட குதிப்பாரு. எனக்கு பேச தெம்பில்ல. கேட்கவும் தெம்பில்ல”
“அதெல்லாம் சண்டை போட மாட்டான். இதுக்கு ஒரு வழி பண்ணுறேன் வா” என்றவர், என்னவென்று அவளிடம் சொல்லாமலே வீடு சென்று விட்டார்.
“அவனா ஃபோன் பண்ணி கேட்டா மட்டும் விசயத்த சொல்லு. இல்லனா ஹாஸ்பிடல் போயிட்டு வந்தத பத்தி எதுவும் சொல்லாத” என்று சங்கரி கறாராக சொல்லி விட, வேதாவும் அமைதியாய் இருந்து விட்டாள்.
அவளுடைய பெற்றோர்களுக்கு மட்டும் அழைத்து விசயத்தை சொன்னாள்.
உடனே பார்க்க வரவா? என்று கேட்க, “ம்ம்.. சாயந்தரமா வாங்க” என்று விட்டாள்.
மாலை சமர் வந்து சேர்ந்தான். அவன் வரும் நேரம் வேதா சமையலறையில் இருக்க, உள்ளே ஜோவிதாவின் பேச்சுக்குரல் கேட்டது. அதனால் உள்ளே செல்லாமல் அறைக்கு சென்று விட்டான்.
மீண்டும் கீழே வரும் போது சங்கரி அமர்ந்திருக்க, வேதா எதையோ துடைத்துக் கொண்டிருந்தாள்.
“டாக்டர் என்னமா சொன்னாங்க?” என்று மனைவியை விட்டு விட்டு அம்மாவிடம் கேட்டான்.
மனைவி முகத்தை பார்த்தால் தானே? அதனால் அவள் முன்பே கேட்டு வைத்தான்.
“என்னது? வேதாவ கேட்குறியா? அவ ரொம்ப வீக்கா இருக்காளாம்” என்று ஒரு பொய்யை சத்தமில்லாமல் போட்டு வைத்தார் சங்கரி.
வேதாவே ஒரு நொடி அதிர்ந்து விட்டு, உடனே அதை மறைத்துக் கொண்டாள். சமரை பார்க்காமல் சமையலறைக்குள் சென்று விட்டாள்.
“வீக்கா இருக்காளா?”
“ஆமா. ரொம்ப வீக்னு டாக்டர் சொன்னாங்க. நல்லா ரெஸ்ட் எடுக்கனுமாம்”
சட்டென சுதாரித்தான் சமர். ஓய்வு தேவை என்று அவளை மீண்டும் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடப் போகிறாரா? நடக்கக்கூடாதே?
“அதுக்கு?” என்று கேட்டவன் குரலில் கோபம் வெளிப்பட்டது.
“இப்ப ஏன்டா கோபமா கேட்குற? என்னமோ நான் உன் பொண்டாட்டிய வேலை வாங்கி டயர்ட் ஆக்குற மாதிரி பேசுற?” என்று சங்கரி முறைக்க, சட்டென தணிந்தான்.
“அதுக்கு என்ன பண்ணலாம்னு கேட்க வந்தேன்? டாக்டர் டானிக் கொடுத்துருப்பாங்க தான? நல்ல சாத்தானதா சாப்பிட்டாலே சரியாகிடுவா. கண்டத சாப்பிடாம” என்று அங்கேயும் அவனது கருத்தை வைத்தான்.
சங்கரிக்கு அவன் எதைச் சொல்கிறான் என்று புரிந்த போதும், புரியாதது போல காட்டிக் கொண்டார்.
“நீ சொல்லுறதும் சரி தான். சத்தா சாப்பிட்டு நல்லா தூங்குனா தான் சரி வரும். அதுக்காக தான் ஒன்னு பண்ணலாம்னு இருக்கேன்”
“என்ன? அவள மறுபடியும் அம்மா வீட்டுக்கு அனுப்பப் போறீங்களா? அதெல்லாம் வேணாம்”
“அட இது கூட நல்ல யோசனை தான். பேசாம அங்கயே அனுப்பி விட்டுரலாம்.” என்று சங்கரி கூற, சமர் ஜெர்கானான்.
அவனாகவே மாட்டிக் கொண்டானே. உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த வேதாவிற்கு சிரிப்பு வந்து விட்டது. உதட்டை கடித்து அடக்கிக் கொண்டாள்.
“ஏம்மா.. வேதா இங்க வா. நீ உங்க அம்மா வீட்டுல போய் கொஞ்ச நாள் இருக்கியா? இங்க இருந்தா வேலை பார்த்துட்டே இருப்ப”
“வேணாம். அவ இல்லாம சஷி எப்படி இருப்பா?” என்று சமர் இடையே புகுந்து பேச, “சஷியையும் தான் அனுப்பனும்” என்றார் சங்கரி.
“எதுவும் வேணாம். இங்க இருந்தே ரெஸ்ட் எடுக்கட்டும்”
“ரெஸ்ட் மட்டுமில்ல சமர். நல்லபடியா பார்த்துக்கனும். இங்க யார் பார்ப்பா?”
“நீங்க பார்க்க மாட்டீங்களா?”
“எனக்கு தெரியாதே” என்று கையை விரித்தார்.
“உங்க ரெண்டு பேரையும் பெத்தப்போவே, உங்க பாட்டி தான் பார்த்தாங்க. நான் சொன்னத எல்லாம் செஞ்சேன். அம்புட்டு தான். இப்ப ஒன்னும் ஞாபகம் இல்ல. அவங்கம்மா சஷிக்கு பார்த்துருக்காங்க. அதுனால அங்கயே விடலாம்”
“அந்த வீட்டுக்கு அவ போறது எனக்குப் பிடிக்கல. வேணாம்னு சொல்லுறேன்ல?”
“அப்ப யாரு பார்ப்பா? நீ பார்ப்பியா?”
சரியாக அந்த நேரம் வாசலில் வந்து இறங்கினர் வேதாவின் பெற்றோர். திரும்பிப் பார்த்த சமர் அதிர்ந்து போனான். கையோடு அழைத்துச் செல்ல வந்திருப்பதாக நினைத்து விட்டான்.
“நானே பார்த்துக்கிறேன். அனுப்பாதீங்க” என்று அவசரமாக சொல்லி விட்டான்.
சங்கரி தனக்குள் சிரித்துக் கொண்டு, சம்பந்தியை வரவேற்க எழுந்து சென்றார்.
வேதாவின் பெற்றோர் வந்து வேதாவிடம் பேசி முடித்து கிளம்பும் வரை, சமரால் அமைதியாக இருக்க முடியவில்லை. மனைவியும் மகளும் செல்ல கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்.
பெற்றோரை வழியனுப்பி விட்டு எல்லோரும் அமர்ந்திருக்க, ஜோவிதா வேதாவிடம் தன் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“பாப்பா பிறக்கும் போது ரொம்ப வலிக்குமாக்கா?”
“அதெல்லாம் பார்த்தா எப்படி புள்ளைய உலகத்துக்கு கொண்டு வர்ரது?” என்று கேட்டு புன்னகைத்தாள் வேதா.
அங்கு சற்று தள்ளி தான் சமர் அமர்ந்திருந்தான். எல்லாம் காதில் விழுந்தாலும், தொலைகாட்சியை பார்ப்பது போன்ற பாவனை.
“ஆனாலும் வலிக்கும்ல? பேசாம ஆப்ரேஷன் பண்ணிடலாம்ல? ஈசியா போயிடும்.”
“ஆப்ரேஷன் ஈசியா?”
“இல்லையா?”
“அத விட பெரிய கஷ்டம் எதுவும் இல்ல. ஆப்ரேஷன் பண்ணுறதுக்கு முன்னாடி, நடு முதுகுல ஒரு ஊசி போடுவாங்க. சாகுற வரை அந்த ஊசி வலிக்கும் தெரியுமா?”
ஜோவிதா பயந்து போனாள் இதை கேட்டு.
“உண்மையாவா சொல்லுறீங்க?”
“அது மட்டுமில்ல.. நம்ம வயித்துல எத்தனை தோல் இருக்கு? அத்தனை தோலையும் தாண்டி தான் பிள்ளைய எடுப்பாங்க. அத்தனை தோலுக்கும் தையல் போடுவாங்க. வெளியில இருக்க தோல் தையல் சீக்கிரம் ஆறிடும். உள்ள இருக்கது காலத்துக்கும் குத்திட்டே தான் இருக்கும். கொஞ்சம் அதிகமா வெயிட் தூக்கிட்டா கூட, உள்ள இருக்க தையல் வலி எடுக்கும். மீறி பிரிஞ்சுடுச்சுனா வினையே வேணாம்.”
“என்ன கா இப்படி பயமுறுத்துறீங்க?”
“இதான் உண்மை ஜோவிதா. எல்லாரும் நார்மல் டெலிவரி தான் நடக்கனும்னு இதுக்கு தான் வேண்டிக்கிறதே. காலம் முழுக்க வலிய சுமக்குறது ஈசியா? இல்ல அந்த நேரம் வலிச்சு பிள்ளைய பெக்குறது ஈசியா?”
“நார்மல் தான் சாமி நல்லது.”
“அதுனால தான் அதுக்கு பேரே நார்மல் டெலிவரி. எல்லாமே நார்மலா முடிஞ்சு போகும். ஆப்ரேஷன்னு கைய வச்சா, உடம்புல பல பிரச்சனைகளை இழுத்துக்க வேண்டியது தான். நார்மல் டெலிவரினா மூணு நாள்ல நாம நல்லாகிடலாம். சிசேரியன்க்கு பத்து நாள் வரை படுக்கையில தான் இருக்கனும். காரம் சாப்பிடக்கூடாது. சூடா சாப்பிட கூடாதுனு ஏகப்பட்ட கண்டீஷன்ஸ். இதையும் விட ஒன்னு இருக்கு”
“என்னது?”
“நாம பெத்த புள்ளை.. அந்த பச்சை மண்ண யாரு பார்ப்பா? பெத்து போட்டு நாம பத்து நாள் பெட்ல இருந்தா, பச்சை புள்ளைய வேற யாராச்சும் தான் பார்க்கனும். நம்மலையே குழந்தை மாதிரி பார்த்து, பிறந்த குழந்தையையும் பார்த்து… நினைச்சு பாரு.. சுத்தி இருக்கவங்களுக்கும் கஷ்டம். நமக்கும் காலம் முழுக்க கஷ்டம் தான் மிஞ்சும்”
வேதா சாதாரணமாக எல்லா விசயத்தையும் அடுக்கிக் கொண்டே போக, ஜோவிதா தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
சமருக்கு தான் அதிர்ச்சியில் மூச்சு கூட வரவில்லை. அவன் தானே சொன்னான்.
“வலிச்சா ஆப்ரேஷன் பண்ணி பெத்துக்கலாம்” என்று.
அதன் பின், இத்தனை வலிகள் வேதனைகள் நிறைந்து இருக்கும் என்று அவனுக்கு தெரியாதே. அன்று வேதா பார்த்த பார்வைக்கு இப்போது அர்த்தம் புரிந்தது. அவ்வளவு சாதாரணமாக அவன் சொன்னதை நினைத்து, ஏளனமாக மனதில் சிரித்திருப்பாள்.
ஆனால் அவனும் தெரியாமல் தான் சொன்னான். தெரிந்திருந்தால்?
‘அப்படினா மட்டும் உனக்கு புள்ளை வேணாம்னு சொல்லிருப்பியா?’ என்று கேட்டது மனசாட்சி.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமானான்.
வேதா இரவு வேலையை முடித்து மாடியேற போக, “வேதா.. இங்கவா” என்றார் சங்கரி.
“எங்க உன் புருஷன்?”
“மேல இருக்காரு”
“கூப்பிடு”
“என்ன அத்தை செய்ய போறீங்க?”
“கூப்பிடுங்குறேன்”
உடனே அவனுக்கு குரல் கொடுத்தாள்.
அவன் எட்டிப்பார்க்க, “அத்த கூப்பிடுறாங்க. கீழ வாங்க” என்றதும் இறங்கி வந்தான்.
“என்னமா?”
“வேதா ஏற்கனவே டயர்டா இருக்கா. சும்மா மாடியேறி இறங்க வேணாம். பிள்ளை பிறக்குற வரை என் கூட தூங்கட்டும்”
சங்கரி சத்தமில்லாமல் குண்டை தூக்கி போட்டு விட்டு மருமகளை பார்த்தார். அவள் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தபடி பார்த்து வைத்தாள்.
“உன் மருந்தெல்லாம் எடுத்து கீழ வச்சுக்க. நாளைக்கு டிரஸ்ஸையும் எடுத்து கீழ கொண்டு வந்துடலாம்.”
“ம்மா.. படியேறுறது கூடவா கூடாது?” என்று கேட்ட சமருக்கு கோபமெல்லாம் இல்லை.
சிசேரியன் பற்றி வேதா பேசிய போதே, பிள்ளை பேற்றை பற்றி அவனுக்கு நிறைய தெரியாது என்பதை புரிந்து கொண்டான்.
“ஆமாடா.. இத்தனை படி ஏறி இறங்குறது நல்லது இல்ல. நீ கவனிக்குறதுனா கீழயே கவனி”
“இங்க இவள வச்சுட்டு நான்…”
“நீ தான நான் பார்த்துப்பேன்னு பெருசா சொன்னேன்? இல்லனா அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். அங்க படியோ மாடியோ இல்ல. அவ பாட்டு இருந்துருப்பா..”
“இப்ப என்ன செய்யனும்னு சொல்லுங்க. சும்மா முடிஞ்சத பேசிட்டு” என்று எரிச்சலாக கேட்டான்.
வேதாவிற்கு சங்கரியின் பேச்சிலும் செய்கையில் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கணவனின் முகம் போன போக்கை பார்த்து, சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
சமர் ஒரு பக்கம், மனைவி கீழே இருந்து விடுவாள் என்பதில் கடுப்பாகி விட்டான். அவனுக்கு வேண்டியதை எல்லாம் அவள் தான் செய்வாள். அறையை சுத்தம் செய்வது. அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொடுப்பது. வேண்டியது கேட்காமலே கிடைக்கும்.
அவள் அறையில் இல்லை என்றால், அவன் தான் அல்லாட வேண்டும். அதுவே எரிச்சல் தான். ஆனால் கீழே இருக்கும் மனைவியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
அதுவும் பொறுக்காமல் அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டால்? அவன் என்ன செய்வது? அதனால் இறங்கிப்போனான்.
“அவளுக்கு நேர நேரத்துக்கு மாத்திரை டானிக் எல்லாம் கொடுக்கனும். எதை எப்ப கொடுக்கனும்னு கரெக்ட்டா கேட்டுக்க. செக் அப்க்கு கரெக்ட்டா கூட்டிட்டுப் போகனும். அதையும் தெரிஞ்சுக்க.. அப்புறம்.. நீயே சொன்ன மாதிரி அவளுக்கு சத்தா சமைச்சு போடனும். அதை விட அவளுக்கு பிடிச்சதா செய்யனும். எதையாவது ஆசையா கேட்டா மறக்காம வாங்கிட்டு வர்ர.. மறந்துட்டு வேலை இருக்குனு இருந்தனா பிச்சுடுவேன். நாளைக்கு வீட்டுக்கு வரும் போது, ஒரு கிலோ மாதுளம் பழமும்.. ஆப்பிளும் வாங்கிட்டு வா. ஆப்பிள் இல்லனா கூட மாதுளம் பழம் வாங்கிட்டு வா. உன் பொண்டாட்டிக்கு ரொம்ப பிடிக்கும்”
சங்கரி பெரிய பட்டியலை அடுக்கி விட்டார். எல்லாம் கேட்டு மலைத்து நின்ற சமரை பார்த்து, வேதாவுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவள் தடுக்கவில்லை.
‘பிள்ளை வேணும்னு கேட்க தெரிஞ்சதுல? செய்யட்டும்’ என்று பேசாமல் நின்று கொண்டாள்.
“இத்தனையும் பண்ணா என் வேலைய யாரு பார்க்குறது?”
சற்று சலிப்புடன் தான் கேட்டான் சமர்.
“மில்லுல நீ மட்டுமா வேலை பார்க்குற? நூறுக்கு மேல ஆள் இருக்காங்கள்ள? அவங்கள வச்சு செய். நீ பார்த்துக்கிறனு சொன்னதால தான் அவள இங்க இருக்கவே விட்டுருக்கேன். பிள்ளை பெத்து எடுக்குறதுனா சும்மாவா? சஷி வந்தப்போ உங்கப்பா போனாருனு துக்கத்துல எதையுமே பார்க்க முடியல. சஷி வெறும் ரெண்டரை கிலோல பிறந்தா. வேதாவும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. இப்பயாச்சும் ஒழுங்கா பார்த்து, புள்ளைய நல்லா பெத்து எடுக்கனும். எனக்கு வீட்டு வேலை இருக்கும். சமைக்கனும், வீட்ட பார்க்கனும். மார்கெட் போகனும்னு ஏகப்பட்ட வேலை. அது போதாதுனு புள்ளைதாச்சிய எப்படி பார்க்குறதாம்? எனக்கும் வயசாகி போச்சு”
கடைசி வார்த்தையை பெருமூச்சு விட்டு அவர் சொன்ன போது, வேதாவிற்கு வாயில் கைவைத்து நிற்க தோன்றியது.
அப்படி ஒரு நடிப்பு.
‘நீங்க பேசாம நாடகத்துல நடிக்கலாம் அத்த..’ என்று சிரிப்போடு நினைத்துக் கொண்டாள்.
தொடரும்.

சங்கரி அத்தை செம்ம.