அத்தியாயம் 13

Loading

வேதா அறையில் சஷிக்கு உடையை மாற்றிக் கொண்டிருந்தாள். அந்நேரம் உள்ளே வந்த சமர், “சஷி.. உன்னை பாட்டி கூப்பிடுறாங்க. கீழ போ” என்றான்.

உடனே சஷி துள்ளி குதித்து ஓடி விட, அவள் பின்னால் செல்லப்போனாள் வேதா. அவளது கையை பிடித்து நிறுத்தியவன், கதவை அடைத்து தாளிட்டான்.

வேதா உணர்ச்சியே காட்டாமல் நின்றாள்.

“உன் கிட்ட பேசனும்”

பதில் இல்லை.

“இப்ப எதுக்கு என்னை பார்த்து ஓடுற?”

அமைதியாக தான் நின்றாள்.

“உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். என்னை நிமிர்ந்து பாரு”

வேதாவின் பார்வை உயர்ந்தது.

“என்ன உன் பிரச்சனை? நானும் பார்த்துட்டே இருக்கேன். என்னை பார்த்தாலே எதிரிய பார்த்த மாதிரி ஓடுற?”

“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்”

கடைசியாக வாயைத்திறந்து விட்டாள்.

“என்ன? நான் எப்ப இப்படி எதிரிய பார்த்த மாதிரி ஓடுனேன்?”

“என் அம்மா அப்பாவ பார்த்தா, எதிரிய பார்த்த மாதிரி நீங்க ஓடலயா? அதான் அதையே நானும் பண்ணுறேன்”

சமர் இப்படி ஒன்றை எதிர்பார்க்காமல் அதிர, வேதா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எதுக்கு எங்க முடிச்சு போடுற நீ? நான் நீ ஏன் இப்படி பண்ணுறனு கேட்டேன்”

“அதான் சொன்னேனே.. உங்கள பார்த்து கத்துக்கிட்டேன்னு”

“விதண்டாவாதம் பண்ணாம விசயத்த சொல்ல போறியா இல்லையா? சும்மா மூஞ்சிய தூக்கி வச்சுட்டு அலையுற”

“சும்மாவா? அப்ப நான் ஏன் பேசலனு கூட உங்களுக்குத் தெரியல அப்படித்தான?”

சமர் உடனே தன்னை சமாளித்தான். தெரியாமல் இல்லை. அன்று இரவு கத்திய பிறகு தான் வேதா தன்னிடம் கோபமாக இருக்கிறாள் என்று தெரியும். ஆனால் அதை இப்போது நியாயப்படுத்த வேண்டும்.

“அன்னைக்கு நான் பேசுனதுக்கு தான இப்படி இருக்க? அப்போ வேலை டென்சன். அதுல எதோ வாய்க்கு வந்தத பேசிட்டேன். அதுக்காக மூஞ்சிய தூக்கி வச்சுட்டு பேசாம போவியா?”

“வேற என்ன பண்ணனும்?”

அவனையே திருப்பி கேட்டு மலைக்க வைத்தாள்.

அவன் என்ன சொல்வான்?

“பேசாம போறத விட்டுட்டு வேற என்ன செய்யனும்? நீங்களே சொல்லுங்க. செய்யுறேன்”

“அது கோபத்துல எதோ பேசுனேன்னு விட்டு தள்ள வேண்டியது தான?”

அவனே இறங்கி வந்து அமைதியாக தான் பேசினான்.

ஆனால் வேதாவிற்கு இது போதாது. அவள் மலை இறங்க தயாராக இல்லை.

“எப்படி?”

“இதுக்கு முன்னாடி நான் கோபத்துல பேசுனப்போ நீ விட்டது இல்லையா? அப்படி இதையும் விடேன்”

“அது தப்புனு தான் இவ்வளவு நாள்ல புரிஞ்சுக்கிட்டேன்”

சமர் மீண்டும் அதிர்ந்து அவளை முறைக்க ஆரம்பித்தான்.

“எல்லாத்துக்கும் இப்படி பேசிட்டு இருக்காத”

“இப்ப என்னங்க உங்க பிரச்சனை? பேசாம போனா ஏன் பேசலனு கேட்குறீங்க? பேசுனா இப்படி பேசாதங்குறீங்க. இப்ப என்ன பண்ணட்டும்? மொத்தமா எங்கயாச்சும் தொலைஞ்சுடட்டுமா? நிம்மதியா இருப்பீங்களா?”

கோபமாக கேட்க நினைத்த நேரம், சம்பந்தமில்லாமல் கண்ணீர் வேறு வந்து சேர, அதை துடைக்கவும் தோன்றாமல் கேட்டு முடித்தாள்.

சமருக்கு அவளது திடீர் கோபத்தை எப்படி சரி செய்வதென்று புரியவில்லை. ஒரு நொடி திகைத்து நின்றான். அவள் கண்ணீர் வேறு விடவும், அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“இப்ப ஏன் அழுற நீ? நான் என்ன..”

“நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் சாமி. உங்க கிட்ட பேசுனாலும் குத்தம். பேசாம இருந்தாலும் குத்தம். நான் என்ன பண்ணாலும் ஏன் எதுக்குனு நீங்க புரிஞ்சுக்கவும் மாட்டீங்க. நான் பேசலனா, நீங்க மாசகணக்கா கண்டுக்கவும் மாட்டீங்க. அத்த வந்து சொல்லனும். போய் பொண்டாட்டி கிட்ட பேசுனு. அப்ப தான் பொண்டாட்டி நினைப்பே உங்களுக்கு வரும். இனி அத்தை கிட்ட சொல்லிடுறேன். என் வாழ்க்கையில எதையும் பண்ண நினைக்காதீங்க. என்னை இப்படியே விட்டுருங்கனு. போதுமா? போங்க சந்தோசமா இருங்க” என்றவள், அவனை தாண்டிச் சென்று கதவை திறந்து வெளியேறினாள்.

சமர் அவளை தடுக்க நினைத்து முடியாமல், அப்படியே நின்று விட்டான். அம்மா வந்து பேசச்சொன்னது இவளுக்கு எப்படித் தெரிந்தது? என்ற யோசனையில் நின்றான்.

அழுது கொண்டே சென்றவளுக்கு கீழே செல்ல பிடிக்கவில்லை. நேராக மொட்டை மாடிக்கு சென்று, நிழலில் அமர்ந்து கொண்டாள்.

எதற்கு அழுகிறோம் என்றே தெரியாமல், எதை எதையோ நினைத்து அழ ஆரம்பித்தாள்.

சமர் சில நிமிடங்கள் யோசித்து விட்டு, கீழே வந்தான். வேதா சங்கரியின் அறையில் இல்லை என்று தெரிந்ததும், பதட்டத்துடன் மாடி ஏறிச் சென்றான்.

மொட்டை மாடியில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தவளை பார்த்து, சமருக்கு திக்கென்றது. உடனே அவளருகே சென்றான்.

“வேதா..”

வெடுக்கென முகத்தை திருப்பினாள்.

“என் மேல கோபம்னா சண்டை போடு. இப்படி தனியா உட்கார்ந்து அழாத. எந்திரி”

அவள் அசையவில்லை.

“உன் கிட்ட தான் சொல்லுறேன். எந்திரி” என்று அவள் கையை பிடிக்க, வெடுக்கென தட்டி விட்டு கண்ணை துடைத்துக் கொண்டாள்.

“வேதா.. நான் ஒன்னுமே கேட்கல போதுமா? நீ எவ்வளவு வேணா கோபப்பட்டுக்கோ. திட்டிக்கோ. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். இப்ப எந்திரி. வெயில் இன்னும் இருக்கு. மயக்கம் வந்துடும்.”

பொறுமையாக பேசி அவளை பிடித்து எழுப்பினான்.

“கண்ணை துடை. கீழ போகலாம் வா”

அவனிடமிருந்த கையை உருவிக் கொண்டவள், கண்ணை துடைத்துக் கொண்டு அவனுக்கு முதல் கீழே இறங்கி விட்டாள்.

சமரும் பின்னால் வந்தான். ஆனால் அவள் நிற்காமல் சென்று விட, பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

ஒன்று பேச மறுக்கிறாள். இல்லை என்றால் அழுகிறாள். அவனுக்கு முன்னே பின்னே யாரையும் சமாதானம் செய்து பழக்கமே இல்லை. மனைவியை கையாள தெரியாமல் நொந்து போனான்.

இரண்டு நாட்கள் கடந்து போயிருக்க, பிறந்த வீட்டிலிருந்து ஜோவிதாவிற்கு அழைப்பு வந்தது.

ஜோவிதாவின் அன்னை சாவித்ரிக்கு, கருப்பையில் எதோ பிரச்சனையாம். அதை எடுத்து விட வேண்டும் என்று மருத்துவர் கூறி விட்டாராம்.

கேட்டதுமே ஜோவிதாவிற்கு கண்ணீர் வந்து விட்டது.

“என்னமா இது?” என்று அழுது விட்டாள்.

அவளை சமாதானம் செய்தார் சாவித்ரி.

சங்கரியிடம் ஜோவிதா விசயத்தை சொல்ல, “அச்சச்சோ.. சரி போய் பார்த்துட்டு வரலாம். கிளம்பு” என்று மருமகளோடு கிளம்பி விட்டார்.

சாவித்ரி அறுவை சிகிச்சை தயாராக, ஜோவிதாவிற்கு அன்னையை விட்டு நகர மனமில்லை. அவளை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டார் சங்கரி.

“இப்ப எப்படி இருக்காங்க அத்த?” என்று வேதா விசாரித்துக் கொண்டாள்.

இரண்டு நாட்களில் அவருக்கு அறுவை சிகிச்சை இருப்பதால், ஜோவிதா அவருடனே தங்கி விட்டாள். மிதுனனும் பார்த்து வந்தான்.

நாட்கள் கடந்து போக, சாவித்ரிக்கு சிகிச்சை முடிந்தது. ஜோவிதாவும் மிதுனனும் அவரை பார்த்துக் கொண்டனர்.

மனைவியின் துவண்ட நிலை காசியையும் வருத்தியிருக்க, அவரும் துவண்டு போனார்.

“நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் அங்கயே இருங்க” என்றார் சங்கரி.

சமர் இதை எல்லாம் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தானே தவிர, வாயைத்திறந்து எதுவும் சொல்லவில்லை.

ஆனால் மிதுனனும் அங்கேயே இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“அவங்க மக இருந்தா போதாதா? இவனும் ஏன்?” என்று கேட்டு வைத்தான்.

“அவனால பொண்டாட்டிய பிரிஞ்சு இருக்க முடியலயாம். உன்னை மாதிரி மாசகணக்கா அவனால மூஞ்சிய திருப்பிட்டு சுத்த முடியாது. அதான்.”

சங்கரி வெடுக்கென சொல்லி விட்டுச் சென்றார். அவர் சொல்லியும் மகனும் மருமகளும் பேசாத கோபம் அவருக்கு.

வேதா மேல் அவரால் கோபப்படவும் முடியவில்லை. இரவெல்லாம் எதையோ நினைத்து, தூக்கமில்லாமல் அவள் உழல்வதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.

இருவருக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டு நடுவில் சென்று பேச முடியாது. அவர்களாக சரி செய்யவும் சொல்லியாயிற்று. இதற்கு மேல் என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை.

அந்த கோபம் மகன் மீது வந்திருக்க, அவனை தான் முறைத்து வைத்தார்.

சமருக்கு வேதா தனியாக மாடியில் அமர்ந்து அழுததே மனதில் நின்றது. மிகவும் மெலிந்து கொண்டே போகிறாள். மீண்டும் எதாவது கேட்டு மறுபடியும் அழுவாளோ? அவளது உடல் நிலையை பாதிக்குமோ? என்ற எண்ணம் அவனது வாயை கட்டிப்போட்டது.

அவனுக்கு அன்பாய் பேசி அனுசரணையாக நடக்க தெரியாது. வாயை திறந்தால் கோபமாக கேள்வி கேட்கத்தான் வரும். அதை கேட்டு வேதா அழுவாள். அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

எல்லாவற்றுக்கும் சேர்த்து அவன் அமைதியாய் இருந்து விட, அதுவும் வேதாவை பாதிக்கத்தான் செய்தது. அவனாக வந்து அவளிடம் பேசவில்லை. அவளுக்கு பேச விருப்பமில்லை என்ற போது, சண்டை போடவில்லை.

எப்போதும் போல் கத்தி விட்டு போயிருந்தால் கூட, மனம் அமைதியாகி இருக்கும். ஆனால் அவன் கண்டு கொள்ளாமலே விட்டு விட்டானே.

சங்கரி கூப்பிட்டு அதட்டிய பிறகு தான் தன்னிடம் பேச வேண்டும் என்ற எண்ணமே வருகிறதே?

இது எல்லாம் பெரிய காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்போது அவள் மனதுக்கு அது தான் பெரிய காரணமாக இருந்தது. அவளால் அவனது உதாசினத்தையும் ஏற்க முடியவில்லை. கோபத்தையும் தாங்க முடியவில்லை. மௌனமாய் தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.

அடுத்த செக் அப் நாள் வந்தது. சங்கரி சஷியோடு வீட்டில் இருந்து கொண்டார்.

“பார்த்துக்கிறேன்னு சொன்னவன் கூட்டிட்டு போ. அங்க போயிட்டு அப்படியோ ஜோவிதா வீட்டுக்கு கூட்டிட்டு போ. அவங்கம்மாவ வேதா பார்க்கனும்னு சொல்லிட்டு இருந்தா.”

“அங்கல்லாம் போனா நேரமாகும்” என்று சமர் மறுக்க, “அங்க அவள விட்டுரு. மிது சாயந்தரமா கூட்டிட்டு வந்துடுவான். நீ உன் வேலைய போய் பாரு” என்று முடித்து விட்டார்.

இதற்கு மேல் மறுக்காமல், வேதாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

காரில் அவனருகே அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தாள் வேதா. அவனை பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை.

சமரும் அமைதியாகவே சென்றான். மருத்துவமனை சென்று அவளின் பெயரை கொடுத்து விட்டு காத்திருந்தனர்.

அழைப்பு வந்ததும் வேதா மட்டும் உள்ளே சென்றாள். பரிசோதனை முடிந்ததும் மருத்துவரிடம் வந்தனர்.

“பேபி ஹெல்த் நல்லா இருக்கு. ஆனா உங்களுக்கு தான் பிரஸ்ஸர் கூடி இருக்கு. கண்ட்ரோல் பண்ணுங்க. டெலிவரி டைம்ல இவ்வளவு பிரஸ்ஸர் இருக்க கூடாது. டெலிவரிக்கு நாள் நிறைய இருக்கு தான். ஆனா இப்ப இருந்தே கன்ட்ரோல் பண்ணுறது நல்லது” என்று அறிவுரையை வழங்கி விட்டு, அவளுக்கு வழக்கமாக கொடுக்கும் மருந்துகளை கொடுத்து, மேலும் சில அறிவுரைகளோடு அனுப்பி வைத்தார்.

காரில் ஏறியதும் மனைவியை பார்த்தான். அவள் அப்போதும் அவனை பார்க்காமல் இருந்தாள்.

“எதுக்கு இப்படி பிரஸ்ஸர் கூடுது?”

பதில் இல்லை.

“உடம்ப பார்த்துக்க வேதா. மெலிஞ்சுட்ட போற”

அப்போதும் அமைதியாக இருந்தாள். சமரிடம் பெருமூச்சு தான் வந்தது.

காரை எடுத்தவன், ஜோவிதாவின் பிறந்த வீட்டை நோக்கி செலுத்தினான்.

“ஃப்ரூட்ஸ் எதாவது வாங்கனுமா?”

வேதா அமைதியாக இருக்க, “எனக்கு என்ன வாங்கனும்னு தெரியாது. நீயும் வா. வாங்கிக்கலாம்” என்றவன், காரை கொண்டு சென்று நிறுத்தினான்.

வேதா இறங்கி அவனோடு சென்றாள். அவளே பழங்கள் எவ்வளவு வேண்டும் என்று கேட்க, அதை எல்லாம் கொடுத்தான் கடைக்காரன்.

“உனக்கும் என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்க, வேதா பதில் சொல்லாமல் விருட்டென திரும்பி விட்டாள்.

சமர் பெருமூச்சு விட்டு விட்டு, “ஒரு கிலோ மாதுளம் பழம் போடுங்க” என்று தனியாக வாங்கிக் கொண்டான்.

இருவரும் ஜோவிதாவின் அன்னையை பார்க்க செல்ல, அங்கு வேறு ஒன்று காத்திருந்தது.

தொடரும்.

Leave a Reply