அத்தியாயம் 14
![]()
சமரும் வேதாவும் பழங்களை வாங்கிக் கொண்டு ஜோவிதாவின் வீட்டுக்குச் சென்றனர்.
வாசலில் சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு சமர் பழங்களோடு வர, வேதா உடன் வந்தாள்.
இரும்புக்கதவு ஏற்கனவே பாதி திறந்திருந்ததால், உள்ளே நுழைந்தனர். கதவின் அருகே சென்று கூப்பிட நினைத்து வாயைத்திறந்த வேதா, உள்ளே இருந்து கேட்ட பேச்சுக்குரலில் அப்படியே நின்று விட்டாள்.
சாவித்ரியும் ஜோவிதாவும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன இருந்தாலும் மாப்பிள்ளை சொந்த பிஸ்னஸ விட்டுருக்க கூடாது தான?” என்று சாவித்ரி கேட்க, “அட போங்கமா.. நானே இப்ப தான் நிம்மதியா இருக்கேன்” என்றாள்.
“ஏன்டி?”
“அவரும் எங்க சமர் மாமா மாதிரி ஆகிடுவாரோனு பயம் தான்”
“சமர் நல்ல பையன் தான?”
“நல்லவரு தான். ஆனா அக்கா பாவம்மா.. எந்த நேரமும் வேலை வேலைனு மாமா போயிடுவாரு. அக்காவும் வீட்டுல வேலை தான் பார்ப்பாங்க. நீங்களே சொல்லுங்க. ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரமும் சமைக்கிறது, வீட்ட பார்த்துக்கிறதுனு மட்டுமே இருந்தா எப்படி இருக்கும்? எனக்கெல்லாம் பைத்தியமே பிடிச்சுடும்”
“வீடுனா வேலை பார்க்க தான் செய்யனும்”
“அதுக்காக அக்கா பார்க்குறது ரொம்ப ஓவர். ஆனா அத விட என் கவலை என்னனா.. சமர் மாமா அவங்கள கொஞ்சம் கூட கண்டுக்காம இருக்கது தான். அக்கா காலையில இருந்து சாயந்தரம் வரை வேலை பார்ப்பாங்க. எங்கயும் வெளிய போக மாட்டாங்க. டிவில சீரியல் கூட பார்க்க பிடிக்காது அவங்களுக்கு. இப்படி எப்படிமா இருக்கது?”
“சமர் கூட்டிட்டுப் போக மாட்டானா?”
“நீங்க வேற? அவருக்கு பிடிக்கலனு தான் அக்கா தனியா கூட எங்கயும் போக மாட்டாங்க. அவரு கூட்டிட்டுப் போயிட்டாலும்.. சமர் மாமாவுக்கு அவரு வேலைய தவிர எதுவும் தெரியாது. வேதா அக்காவும் அப்படித்தான். என் பிறந்தநாள் அன்னைக்கு கூட, நான் தான் அக்காவ மிரட்டி வெளிய கூட்டிட்டுப் போனேன். அப்ப அக்கா எவ்வளவு என்ஜாய் பண்ணாங்க
தெரியுமா?
அவங்களும் சாதாரண மனுசி தான? எல்லாத்தையும் சுத்தி பார்க்கனும், நாலு விசயம் தெரிஞ்சுக்கனும்னு ஆசை இருக்காதா? ஆனா எங்க? பிறந்த வீட்டுக்குக் கூடப் போக மாட்டாங்க. கேட்டா எதோ பிரச்சனை வந்துடுச்சாம். சமர் மாமாவுக்கு பிடிக்கலயாம். அதுனால அம்மா வீட்டுக்கு கூடப் போகக்கூடாதுனு சொல்லிட்டாராம். இப்படி எல்லாம் என் புருஷன் சொல்லி இருந்தா, நேரா டைவர்ஸ் பண்ணிருப்பேன். அக்காவுக்கு கோவில் தான் கட்டனும். அம்புட்டு பொறுமை”
“அந்த பையனுக்கேத்த மாதிரி அவ மாறுறதுல தப்பில்லையே?”
“இத தான் நானும் நினைச்சுட்டு அக்கா கிட்ட கேட்டேன். நீங்க மாமாவுக்கு பிடிக்காத எதையும் செய்யுறது இல்ல? மாமாவும் உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டாரானு. பாவத்த கண்ணு கலங்கி எந்திரிச்சு போயிட்டாங்க. எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா? நாம மட்டும் அப்படியே இருப்போம். மத்தவங்க நமக்காக மாறட்டும்னு இருக்காரு மாமா. அதான் எனக்கு கோபமே”
“ஒரு வேளை அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நமக்கு தெரியாமலும் இருக்கும். நீ சமர குறை சொல்லாத”
“நான் எங்க அவர குறை சொன்னேன்? நான் அக்காவ தான் குறை சொல்லுவேன். இப்படி எல்லாத்தையும் ஏன்கா தியாகம் பண்ணுறீங்கனு கோபமா கேட்பேன். அக்கா பதில் சொல்லவே மாட்டாங்க. காலையில மாமா போனா ராத்திரி தான் வருவாரு. சரி வந்தப்புறமாச்சும் பொண்டாட்டி பிள்ளைனு பேசுவாரா? ம்ஹூம். அக்கா கீழ தான் இருப்பாங்க எதையாவது சமைச்சுட்டு. மாமா மேல உட்கார்ந்து மிச்ச வேலைய பார்ப்பாரு. இவங்களால எப்படி தான் இப்படி இருக்க முடியுதோ? என் கிட்டலாம் உங்க மருமகன் ஒரு மணி நேரமாச்சும் உட்கார்ந்து பேசுவாரு. வெளிய கூட்டிட்டுப்போகனும். எதையாவது வாங்கிக் கொடுக்கனும்னு இல்ல. ஒரு மணி நேரம் உட்கார்ந்து எதையாவது பேசி சிரிச்சுட்டு இருப்போம். அப்படி கூட அவங்கள நான் பார்த்தது இல்ல.”
“ரெண்டு பிள்ளைய பெக்க போறாங்க. பேசாமலே இருந்துடுவாங்களா? அதெல்லாம் பேசுவாங்க. உனக்கு தெரியாம இருக்கும்.”
“பிள்ளை பெத்துட்டா போதுமா? போமா நீயும் லூசு மாதிரி பேசிட்டு. ஒன்னா வாழுறது பெருசில்ல.. அன்போட வாழுறது தான் பெருசு. எனக்கு தெரிஞ்சு அக்காவுக்கு அந்த அன்பு கிடைச்ச மாதிரியே தெரியல. ரொம்ப பாவம் அக்கா.”
அடுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே இரும்பு கேட்டின் சத்தம் கேட்டது. உடனே ஜோவிதா பூனை போல் சென்று, சன்னல் திரை சீலையை விலக்கிப்பார்த்தாள்.
வேதா கண்ணை துடைத்துக் கொண்டு விறுவிறுவென நடக்க, அவள் பின்னால் சமர் சென்று கொண்டிருந்தான்.
“என்ன போயிட்டாங்களா?”
“போறாங்க” என்றவள், மீண்டும் வந்து சாவித்ரியின் அருகே அமர்ந்து கொண்டாள்.
“நம்மல எதாவது நினைக்க போறாங்க ஜோவி”
“நினைச்சா நினைக்கட்டும். ஆனா இப்பவாச்சும் மாமாவுக்கு அவர் பண்ணுற தப்பு புரியுதா பார்ப்போம்”
ஜோவிதா சலிப்பாக சொல்லி விட்டு, தன் கைபேசியை எடுத்தாள்.
“சம்பந்திக்கு போன் பண்ணி சொல்லனுமா?”
“ஆமா.. நான் சொல்லி அனுப்பி வச்சாங்கள்ள.. இன்ஃபார்ம் பண்ணிடுறேன்”
இது ஜோவிதாவின் திட்டம். மகனும் மருமகளும் திசைக்கு ஒரு பக்கமாக இருப்பது, சங்கரிக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. இருவரிடமும் பேசி பயனில்லை என்றான பின்பு, மனம் கேட்காமல் ஜோவிதாவிடம் புலம்பி விட்டார்.
அவர் கவனிப்பதை ஒரே வீட்டில் இருக்கும் ஜோவிதா மட்டும் கவனிக்காமலா இருப்பாள்? அவள் கண்ணிலும் விழுந்தது தான். ஆனால் சங்கரி வயதில் பெரியவர். இருவருக்கும் இடையே பேசி விட்டார். ஜோவிதாவால் அது முடியாதே? அதனால் அமைதியாக இருந்தாள்.
சங்கரி வருத்தப்படவும், ஜோவிதாவும் இவர்களை சேர்த்து வைத்தால் என்ன? என்று தான் யோசித்தாள்.
முதலில் இருவரையும் எங்காவது வெளியே அனுப்பலாமா? என்ற யோசனை தான் வந்தது. மனம் விட்டு பேசினால், சரியாகி விடுவார்கள் என்ற எண்ணம்.
ஆனால் சமர் எங்கும் செல்ல மாட்டானே? திட்டம் குலைந்து விட வேறு யோசித்தாள்.
ஒருவர் மனதில் இருப்பதை மற்றவருக்கு புரிய வைத்தால் போதும்.
அதற்கு இருவரையும் கூப்பிட்டு அமர வைத்து பேசுவது சரி வராது. அதை விட அவர்கள் காதில் விழும்படி பேசுவது நல்லது.
அதை எப்படி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான், சாவித்ரிக்கு உடல் நலக்குறைபாடு வந்தது. ஜோவிதாவும் இங்கேயே வந்து விட்டாள்.
பிரச்சனைகள் சரியானதும் மீண்டும் வேதாவை பற்றிய சிந்தனை வர, சங்கரியிடம் சமரையும் வேதாவையும் ஒன்றாக அனுப்பி வைக்க சொன்னாள்.
அதே போல் இருவரும் வர, அவர்களை பார்த்து விட்டுத்தான் இவ்வளவு பேச்சும். என்ன தான் சாவித்ரியிடம் சமரை திட்ட சொல்லி ஜோவிதா சொன்னாலும், அவரால் அது முடியவில்லை. நல்லபடியாக தான் பேசினார். ஆனால் ஜோவிதா மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட்டாள்.
இனிமேல் அவர்கள் பாடு என்று முடிவுக்கு வந்து, சங்கரியிடம் விசயத்தை சொல்லி விட்டாள்.
“ஊர்ல இப்படி ஒரு கூட்டனிய நான் பார்த்ததே இல்ல. நல்ல மாமியார். நல்ல மருமக” என்று சாவித்ரி சிரிக்க, “உங்களுக்கு பொறாமை” என்றாள் ஜோவிதா.
“இப்ப போனவங்க வருவாங்களா?”
“வர மாட்டாங்கனு தான் தோனுது. நாம ஜாலியா டிவி பார்ப்போம்”
ஜோவிதா தொலைகாட்சியை உயிர்ப்பிக்க, சாவித்ரி நாடகத்தை வைக்க சொன்னார்.
“ம்மா அது போர்மா.. நாம படம் பார்க்கலாம்”
“எனக்கு நாடகம் தான் வேணும்”
“எனக்கு படம் தான் வேணும்” என்று இருவரும் சண்டை போட ஆரம்பித்தனர்.
வேதா கண்ணீரோடு காரில் ஏறி அமர்ந்தாள். முதலில் ஜோவிதாவும் சாவித்ரியும் அவளை பற்றிப்பேசும் போது அதிர்ச்சி தான். ஆனால் அவள் மனதில் இருக்கும் கோபத்தை தானே, ஜோவிதா சொல்லிக் கொண்டிருந்தாள்.
நின்று கேட்கவும் பிடிக்கவில்லை. உடனே உள்ளே செல்லவும் பிடிக்கவில்லை. மனம் இறுக அவள் நிற்க, ஜோவிதா அவளை பாவம் என்றாள். அதைக்கேட்டதுமே சட்டென கண்ணீர் வழிந்தது.
அதற்கு மேல் நிற்க பிடிக்காமல், விறுவிறுவென வெளியேறி விட்டாள்.
சமரும் அதிர்ச்சியுடன் அவள் பின்னால் வந்து காரில் அமர்ந்தான்.
இப்படித்தான் அவர்களை மற்றவர்கள் பார்க்கிறார்களா? என்ற அதிர்ச்சி அவனுக்கு.
வேதாவிற்கு அழுகை பீறிட்டு வர, முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
சமருக்கு என்னவோ போல் இருக்க, அவள் கையைப் பிடித்தான். உடனே தட்டி விட்டாள்.
“இப்ப சந்தோசமா? எல்லாரும் என்னை அய்யோ பாவம்னு நினைக்கிற மாதிரி ஆக்கிட்டீங்கள்ள?” என்று வெடிக்க ஆரம்பித்தாள்.
“ஹேய்.. அவங்க எதோ பேசுறாங்க..”
“எதோ இல்ல. உண்மைய பேசுறாங்க. அவங்களுக்கெல்லாம் என்னை பார்த்தா பாவமா இருக்காம். இப்படி ஒரு புருஷன் அமைஞ்சதுக்கு பொறாமை பட்டா பரவாயில்ல. பாவமாயிருக்குனு சொன்னா என்ன அர்த்தம்னாச்சும் புரியுதா?”
வேதா கத்த, சமருக்கு பதில் சொல்ல முடியவில்லை.
ஆனால் வேதா வேகமாக தன் கண்ணை துடைத்துக் கொண்டு, அவன் பக்கம் திரும்பினாள்.
“இப்ப எனக்கு பதில் சொல்லுங்க. என் அம்மா அப்பா என்ன தப்பு பண்ணாங்க?” என்று கேட்க, சமர் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான்.
“சொல்லுங்க.. எங்கப்பா மேல என்ன தப்பு?”
“என்னைக்கோ நடந்தத பத்தி இப்ப ஏன் பேசுற?”
“நான் இப்ப தான் பேசுவேன். சொந்த பந்தம், தெரிஞ்சவங்க முன்னாடி இவ்வளவு நகை போடுறேன்னு என் அப்பா சொல்லிட்டாரு. அத அவரால போட முடியல. சொன்ன வாக்க காப்பாத்த முடியாத குற்ற உணர்ச்சில, அப்படி பேசிட்டாரு. அது உங்களுக்கு தப்பா தெரியுதா? என்னமோ அந்த குதி குதிக்கிறீங்க.. நீங்க வரதட்சணை கேட்டீங்கனு எங்கப்பா சொன்னாரா? உங்களுக்கு பிடிக்கலனா.. உங்க மகளாச்சு நீங்களாச்சு. நகைய பத்தி அவ கிட்ட பேசுங்கனு ஒதுங்கிருந்தா குறைஞ்சா போயிடுவீங்க?”
நடுவில் நிறுத்தி, கண்ணை அழுத்தமாக துடைத்துக் கொண்டாள்.
“அவங்களும், வயச மறந்து உங்க கிட்ட எத்தனை தடவ மன்னிப்பு கேட்டாங்க. பெரிய மகாராஜா மாதிரி அவங்கள கேவலமா பார்க்குறீங்க? அவங்கள பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? உங்க வீட்டு அடிமை மாதிரியா? எதிரிய பார்த்த மாதிரி மூஞ்சி திருப்புறது. நல்ல நாள்னு கூட பார்க்காம மனம் நோக பேசுறது. அப்படி எல்லாம் அவங்கள பேச உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தா? சொல்லுங்க”
தன்னை மறந்து குரலை உயர்த்தி அதட்டிக் கேட்டாள். சமர் இமைக்கவும் மறந்து போனான்.
“எல்லாம் என் தப்பு தான். உங்களுக்கு பிடிக்கல உங்களுக்கு விருப்பமில்லனு எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு வாழ்ந்த என் தப்பு தான். உங்களுக்கு பிடிக்கலங்குறதுக்காக, நான் என்னை பெத்தவங்கள கூட விடனுமா? அப்படி விடனும்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இந்த தாலி கட்டிட்டா நான் உங்க வீட்டு நாய்க்குட்டியா? உங்க பேச்ச கேட்டு ஆடனுமா? அப்படி என்ன சட்டம் வேண்டி இருக்கு? உங்க அம்மாவ பார்க்காம பேசாம ஒதுக்கி வைனு நான் சொன்னா, நீங்க இருந்துடுவீங்களா? நான் மட்டும் ஏன் பண்ணனும்?”
தொண்டை வரண்டு போன போதும் நிறுத்தாமல் பேசினாள். ஆனால் உடனே கண்கலங்க ஆரம்பித்தது.
“நான் ஏன் அவங்கள பார்க்காம இருக்கனும்? உங்களுக்கு என்னை வெறும் அஞ்சு வருசமா தான் தெரியும். ஆனா அவங்க என்னை பெத்து வளர்த்தவங்க. உங்கள மாதிரி, நான் எக்கேடு கெட்டா எனக்கென்னனு இருக்க மாட்டாங்க. தலை வலிச்சாலும் காய்ச்சல் வந்தாலும், கைகுள்ள வச்சு பார்த்தவங்க. இப்ப வரை எனக்காக மட்டுமே வாழுறாங்க. அவங்கள பார்க்காம இருக்கது எவ்வளவு வலிக்குது தெரியுமா?”
கண்ணீரோ பேசிக் கொண்டே வந்தவள், மீண்டும் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
“உங்களுக்கும் ஒரு மக இருக்காள்ள? அவள நாளைக்கு கல்யாணம் பண்ணுறவன், உன் அப்பாவ எனக்கு பிடிக்கல. அவர் கிட்ட பேசாதனு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனா அது கூட உங்களுக்கு புரியாது. நீங்க சஷி அழுதா வாய மூடச்சொல்லுனு சொல்லிட்டு போவீங்க. என் அப்பா அப்படிக்கிடையாது. என் மேல உயிரயே வச்சுருக்காரு. அவர பார்க்காம பேசாம இருனு சொல்லுறீங்க. நானும் மடச்சி மாதிரி இருக்கேன். எல்லாமே பெரிய தப்பு. நான் கல்யாணம் பண்ணதே தப்பு. வாழ்க்கையில இந்த அஞ்சு வருசம் நான் இழந்ததெல்லாம் என் சந்தோசமும், என் குடும்பத்தையும் தான். இப்படி ஒரு வாழ்க்கை எதிரிக்கு கூட வர கூடாது.. ச்சே”
வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசியவள், கடைசியாக, “ச்சே” என்று கோபமாக முடித்தாள்.
இதற்கு மேல் அங்கு அமர்ந்து பேசவும் பிடிக்கவில்லை.
உடனே தன்னுடைய பர்ஸை எடுத்தவள், கதவை திறந்து இறங்கினாள். சமர் பதட்டத்தோடு அவள் கையை பிடிக்க, தட்டி விட்டு இறங்கி விட்டாள்.
நிற்காமல் விறுவிறுவென நடந்தவள், அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
சமர் பதறி விட்டான். கூப்பிட கூப்பிட திரும்பாமல் சென்று அவள் ஆட்டோவில் ஏற, சமர் உடனே காரை எடுத்து அவளை பின் தொடர்ந்தான்.
அவனது கார் பின்னால் வருவது தெரிந்தும், வேதா அசரவில்லை. ஆட்டோ நிற்காமல் போக, சமரும் வந்தான்.
நேராக சென்று வேதா இறங்கிய இடம் அவளது பிறந்த வீடு. இறங்கி ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு, உள்ளே சென்று விட்டாள்.
தொடரும்.
