அத்தியாயம் 16

Loading

சங்கரியிடம் வேதா விசயத்தை சொல்ல, “இருந்துட்டு வா” என்று விட்டார்.

“என் மாத்திரை எல்லாம் போடனும். மிது கிட்ட போட்டோ எடுத்து அனுப்ப சொல்லுங்க”

“இதையே கொடுத்து விடவா?”

“வேணாம். நாலு நாளைக்கு இங்க வாங்கிக்கலாம்”

சம்மதித்தவர், படமெடுத்து அனுப்பி வைத்தார்.

அதை வாங்கி இரவு போட்டுக் கொண்டு படுத்தவளுக்கு, மகளின் நினைவு. என்ன செய்கிறாள்? என்று தெரியவில்லை.

சங்கரியை அழைத்து கேட்க, தூங்கி விட்டதாக சொன்னார். சமர் இன்னும் வீட்டுக்கு வரவில்லையாம்.

“மில்லுல இருப்பாரு”

“அங்க தான் இருக்கானாம்”

“வரும் போது வரட்டும். நீங்க படுத்து தூங்குங்க” என்று விட்டு வைத்து விட்டாள்.

இரவு மல்லியின் அருகே படுத்தவள், எதெதோ கதை பேசியபடி தூங்கி விட்டாள்.

சமர் வீட்டுக்கு தாமதமாக தான் வந்தான். வந்ததும் அறைக்குள் சென்று விட்டான். உடலும் மனமும் சோர்ந்து கிடந்தது. வேலையை எல்லாம் இழுத்துப்போட்டு செய்து விட்டு வந்தவனுக்கு, மனைவி இல்லாத வெற்று அறை எரிச்சலை தான் கொடுத்தது.

நிறைய பேச மாட்டாள் என்றாலும், என்ன வேண்டும் என்று கேட்டு செய்வாள். அதே போல் அவன் அவளிடம் கேட்டதே இல்லை என்பதை, இரக்கமே இல்லாமல் மனசாட்சி குத்திக்காட்டியது.

தவறு தான். அவளுக்கும் அவளை பெற்றவர்களை பிடிக்கும் என்பதை மறந்தே விட்டான். அவளை இத்தனை வருடம் வளர்த்தவர்கள் அவர்கள் என்பதை மறந்து விட்டான்.

கணவன் தாலியை கட்டி விட்டால், இரத்த பந்தம் அறுந்து போகுமா?

கோபமாக அவள் பேசியதை எல்லாம் ஜீரணித்துக் கொண்டிருந்தான். அவளில்லாத தனிமை மனதை வாட்டியது. கண்ணெதிரில் இருந்து பேசாமல் தண்டித்தாள். இப்போது தூரமாக சென்று அமர்ந்து கொண்டாள்.

என்னென்னவோ யோசனைகள்.. பழைய சண்டைகள், சமாதானங்கள், இருவருக்கும் உண்டான தனிப்பட்ட வாழ்வு, எல்லாம் நினைவுக்கு வந்தது. எல்லாவற்றையும் பழங்கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், எங்குமே வேதா அவனுக்காக சகித்துக் கொண்டதை அவள் காட்டவே இல்லை. மனதில் பாரமேற, தூக்கம் கண்களை விட்டு தூரமாகிப் போனது.

அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு அழைப்பு மணி அடிக்க, மல்லி தான் வந்து திறந்தார். வாசலில் சமரை பார்த்ததும், அவருக்கு கையும் காலும் ஓடவில்லை.

“உள்ள வாங்க மாப்பிள்ளை” என்று அவசரமாக வரவேற்க, “வேதா?” என்றான்.

“ரூம்ல தூங்கிட்டு இருக்கா. உள்ள போங்க”

‘இவ்வளவு நேரமா தூக்கம்? அங்க இப்படி தூங்க மாட்டாளே?’ என்ற கேள்வியோடு, பல வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் நுழைந்தான்.

அறையில் எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் வேதா.

“நீங்க இருங்க.. அவங்கப்பா பால் வாங்கிட்டு வர போயிருக்காரு. டீ போட்டு எடுத்துட்டு வர்ரேன்” என்று விட்டு மல்லி நழுவினார்.

‘இவ இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே.. உடம்பு சரி இல்லையா?’ என்று நெற்றியை தொட்டுப்பார்த்தான்.

சூடு எதுவும் தெரியவில்லை. ஆனால் அவனது தொடுகையில், கண்ணை சுருக்கியபடி தூக்கம் கலைந்தாள் வேதா.

இமை தட்டி அவனை பார்க்க, “ரொம்ப நேரம் தூங்குறியேனு பார்த்தேன். எதுவும் பண்ணுதா?” என்று கேட்டான்.

கையை ஊன்றி எழுந்தவள், அறையை ஒரு நொடி பார்த்து விட்டு, “நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டாள்.

“உன் கிட்ட பேசனும். கிளம்பு வெளிய போகலாம்.”

“எனக்கு பேச இஷ்டம் இல்ல.” என்றவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“வேதா.. மணி எட்டு”

“சோ வாட்?”

“இவ்வளவு நேரம் தூங்க மாட்டல நீ?”

“அப்படினு யார் சொன்னா?”

“வாட்?”

“இங்க இருக்க வரை, நான் பனிரெண்டு மணிக்கு எழுந்தா கூட என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க.”

“அதுனால?”

“எனக்கு எந்திரிக்க பிடிக்கல”

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. இங்க உட்கார்ந்து நாம பேச ஆரம்பிச்சா, எல்லாம் உன் அம்மா காதுல விழும். சரினா இங்கயே பேசிக்கலாம்”

வேதா கண்ணை திறந்து, அவனை முறைத்து வைத்தாள்.

“என்னை எங்கயுமே நிம்மதியா விட கூடாதுனு வேண்டுதல் வச்சுருக்கீங்களா?” என்று எரிச்சலோடு கேட்டு விட்டு, எழுந்து சென்றாள்.

அவள் தயாராகி வரும் முன்பே முருகன் பாலோடு வந்து விட, மல்லி தேநீர் வார்க்க ஆரம்பித்தார்.

வேதா தயாராகி வர, அவளது கையைப்பிடித்து வெளியே இழுத்து வந்தான். அவளுக்கு வெளியே செல்ல துளியும் விருப்பமில்லை. ஆனால் இங்கு பேசினால் எல்லாமே பெற்றவர்கள் காதில் விழும். அதனால் தான் அவன் இழுப்புக்கு நடந்தாள்.

“மாப்பிள்ளை டீ குடிச்சுட்டு போகலாம். இருங்க” என்று முருகன் தடுக்க, “இல்ல வெளிய போறோம்.” என்றான் பட்டும் படாமல்.

“வெளிய போறோம் மாமானு சேர்த்து சொன்னா குறைஞ்சுடுவீங்களா?” என்று வேதா பல்லைக்கடித்தபடி கேட்க, சமருக்கு சட்டென வரவில்லை.

பல வருடங்களாக ஒதுக்கி வைத்து விட்டானே.

“இவங்க யாரோவா? என் அம்மா அப்பா” என்று வேதா மீண்டும் குதிக்க தயாராக, “போயிட்டு வர்ரோம் மாமா” என்று அவசரமாக சொல்லி விட்டு, அவளை இழுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

மல்லியும் வந்து பார்த்து விட்டு, என்ன செய்வதென புரியாமல் நின்று விட்டார்.

வேதாவை காரில் ஏற்றி, அவசரமாக கிளம்பினான் சமர். வேதா முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

நான்கு தெருக்கள் தள்ளி ஒரு மரத்தடியில் காரை நிறுத்தி விட்டான். வேதா திரும்பாமல் இருக்க, “இப்படி உட்கார்ந்தா எப்படி பேசுறது?” என்று கேட்டான்.

“பேசுறத கேட்க காது போதும். பேசுங்க”

“என்னை பாரு முதல்ல”

“நீங்க பேசும் போது என்னை பார்த்துருக்கீங்களா? இல்ல அக்கறை பட்டுருக்கீங்களா? நான் மட்டும் எல்லாம் பண்ணனும். நீங்க என்னை மனுசியா கூட நடத்த மாட்டீங்க. அப்படித்தான?”

“வேதா.. அமைதியா பேசு. ஒத்துக்கிறேன். நான் என்னோட அவமானத்த மட்டும் நினைச்சுட்டு, உன்னை பத்தி யோசிக்கல”

“மறுபடியும் அத அவமானம்னு தான் நினைக்கிறீங்களா?”

“அன்னைக்கு நடந்தத பத்தி பேசாத விடேன்”

“நோ சான்ஸ். முதல்ல இது முடிஞ்சா தான் எனக்கு மனசு ஆறும். ஏங்க.. நான் ஒன்னு கேட்குறேன். அதுக்கு நியாயமா பதில் சொல்லுங்க. உங்க மில்லுல பத்தாம் தேதி இவ்வளவு லோட் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லுறீங்க. மிசன் கோளாறாகி உங்களால பாதி தான் அனுப்ப முடியுது. அப்ப உங்க கஸ்டமர கூப்பிட்டு, இப்படி நடந்து போச்சு. அதுனால கோச்சுக்காதீங்க. மிச்சத்த பின்னாடி அனுப்புறோம்னு சொல்ல மாட்டீங்களா? அது கஸ்டமர அவமான படுத்துறதா?”

இவ்வளவு நேரத்தில் உரைக்காதது இப்போது உரைத்தது அவனுக்கு. வார்த்தை வராமல் அமர்ந்து விட்டான்.

“சொல்லுங்க. செய்ய மாட்டீங்களா? உங்களுக்கு உங்க தொழில வச்சு பேசுனா தான புரியும். அதான் பேசுறேன். கொடுத்த வாக்க நிறைவேத்த முடியலனு நீங்க மன்னிப்பு கேட்டா, அது அடுத்தவங்களுக்கு அவமான போயிடுமா? என்ன லாஜிக் இது? உங்களுக்கே இது அபத்தமா தெரியல? அவ்வளவு சொல்லுறேன். அப்புறமும் எங்கப்பா உங்கள அவமான படுத்திட்டாருனு பேசுறீங்க. உங்கள எல்லாம்.. போங்க.. திருத்தவே முடியாது”

எரிச்சலோடு முடித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சமருக்கு எல்லாம் இப்போது தெளிவாக விளங்க, “ஓகே என் தப்பு தான்” என்று இறங்கி வந்தான்.

வேதா அசராமல் இருந்தாள்.

“நான் உன்னையும் அவங்களையும் சரியா புரிஞ்சுக்காம விட்டேன்”

“அடேங்கப்பா நல்ல ஞானோதயம் தான்”

வேதா கிண்டலடித்தாள்.

“என் தப்பு தான்னு ஒத்துக்கிட்டேன்ல? இன்னும் என்ன?”

“ஓஓ இதுக்காக உங்களுக்கு சிலை வச்சுடுவோமா?”

“நக்கலா இருக்கா உனக்கு?”

“பின்ன? ஆனா ஒன்னு. இனிமே நான் இங்க வருவேன் போவேன். நீங்க கூட வந்தாலும் சரி வரலனாலும் சரி. நான் வர தான் செய்வேன். இன்னொரு தடவ தடுக்க நினைக்காதீங்க. அப்புறம் சண்டை தான் வரும்”

“சரிமா.. நான் ஒன்னும் கேட்கல. போதுமா? இப்ப டிரஸ் கூட எடுக்காம வந்துட்ட.. அடுத்த தடவ எடுத்துட்டு வா. இப்ப வீட்டுக்கு போகலாம்”

வேதா அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

“என்ன?”

“எங்க வீட்டுல.. எங்கம்மா எங்கப்பா.. எனக்காக நிறையவே வாங்கி வச்சுருக்காங்க. இந்த அக்கறை படுற மாதிரி கூட்டிட்டு போற நினைப்பெல்லாம் வேணாம்”

பட்டென சொல்ல, சமருக்கு புஸ்ஸென ஆனது. இதைச்சொல்லி அவளை அழைத்துச் செல்ல தான், காலையிலேயே கிளம்பி வந்தான்.

“ஆனா..”

“ஆனாவும் இல்ல. ஆவன்னாவும் இல்ல. நான் நாலு நாள் இங்க தான் இருப்பேன்.”

“நாலு நாளா?”

“நாலு மாசமா சொன்னேன்? நாலு நாள் தான். இப்ப வயித்துல இருக்கானே.. அவன் பிறக்கும் போது வந்து தான், அஞ்சு மாசம் இருக்கனும். இப்ப நாலு நாள் போதும்”

அடுத்தடுத்து சமரின் தலையில் இடியை இறக்கினாள்.

“இதெல்லாம் ஓவரா இல்ல? நாலு நாள் இங்க இருப்பியா?”

“அஞ்சு வருசமா வரல. நாலு நாள் இருக்க கூடாதா?”

வேதா குரலை உயர்த்த, “அம்மா தாயே கத்தாத. நாலு நாள் தான இருந்துட்டே வா” என்று முடித்தான்.

வேதா அப்போதும் அவனை முறைத்து விட்டு திரும்பினாள்.

“சரி வெளிய எங்கயாவது போய் சாப்பிடலாமா? காலையில சாப்பிடாம வந்துட்டோமே?”

வேதா இப்போது நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள்.

“வெளிய சாப்பிடுறது தான் உங்களுக்கு பிடிக்காதே”

“நிறுத்து.. மறுபடியும் இன்னொரு பஞ்சாயத்த இழுக்காத. எப்பவாவது ஒரு நாள் சாப்பிடுறது வேற. தொடர்ந்து சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்குறது வேற”

“ஆமா என் புருஷன் ஹோட்டல் வச்சுருக்காரு. அதுனால தினமும் ஹோட்டல் சாப்பாடா நான் சாப்பிடுறேன். வந்து பார்த்தீங்க நான் தினமும் சாப்பிடுறத?”

“தினமும் இல்லனாலும், அன்னைக்கு சஷிக்கு சேராம போனது அதுனால தான? சோ நல்லது இல்லனா நல்லது இல்ல தான்”

“ஆமா அதுனால இப்ப நான் ஹோட்டலுக்கு எல்லாம் வரல. எங்கம்மா செஞ்ச உப்புமாவே எனக்கு போதும். நீங்களும் போய் அத்தை செஞ்சத சாப்பிடுங்க”

இறங்கி வரமால் அடம் பிடித்தாள். சமருக்கு இதற்கு மேல் என்ன செய்வதென்று புரியவில்லை.

“கார எடுங்க.”

“எங்க?”

“பேக்கரி போங்க”

“எதுக்கு?”

“எனக்கு கேக் வேணும். அத வீட்டுல செய்ய முடியாது தான? இல்ல நீங்க வேணா செஞ்சு தர்ரீங்களா?”

வேதா கேட்ட கேள்வியில், வாயை மூடிக் கொண்டு காரை எடுத்தான். இருவரும் பேக்கரி சென்றனர். வேதா விதவிதமான கேக்குகளை எல்லாம் வாங்கிக் குவித்தாள்.

“இவ்வளவும் சாப்பிடுவியா? வயித்துல பிள்ளை இருக்கான் வேதா”

“எல்லாம் எங்களுக்கு தெரியும்” என்றவள், எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டாள்.

தனியாக ஒரு பையை பிரித்தவள், “இத மிது கிட்ட கொண்டு போய் கொடுங்க. அவனுக்கு, அத்தைக்கு, ஜோவிதாக்கு பிடிச்சதெல்லாம் இருக்கு” என்று தனியாக வைத்தாள்.

சமருக்கு வேதாவை நினைத்து ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதை அடக்கிக் கொண்டான்.

“அப்ப எனக்கு சஷிக்கு?” என்று கேட்டு வைத்தான்.

“உங்களுக்கு தான் வெளிய சாப்பிட்டா பிடிக்காதே. அதுனால வேணாம்” என்று நக்கலடித்து வைத்தாள்.

“சஷிக்கு இதுல இருக்கு. அவள டிரஸ்ஸ எல்லாம் எடுத்து கொண்டு வந்து, இங்க விட சொல்லி அத்தை கிட்ட சொல்லிட்டேன். அவளும் என் கூட இங்க தான் இருக்க போறா.”

“சஷியுமா?” என்று சமர் அதிர, அதை பற்றி வேதா கவலை கொள்ளவில்லை.

“என் புள்ளை என்னைய விட்டு நாலு நாள் எப்படி இருப்பா? அவளும் பாட்டி வீடு தாத்தா வீடுனு பார்க்கனும். பழகனும்”

“அது சரி”

“இப்ப என்னை எங்க வீட்டுல இறக்கி விட்டுட்டுப் போங்க. நான் காலையில நேரத்துக்கு சாப்பிடனும்”

சமர் பதில் பேசாமல் காரை எடுத்தான்.

தொடரும்.

One Comment

Leave a Reply