அத்தியாயம் 17
![]()
சஷியை கொண்டு வந்து விட்டு விட்டு, பேசி விட்டுச் சென்றார் சங்கரி. மல்லிக்கு அவரிடம் பேசிய பிறகு தான் மனம் அமைதியானது.
மகள் மருமகனிடம் கோபித்துக் கொண்டு, அழுதபடி வீட்டில் வந்து நின்றால் பெற்ற அன்னையின் மனம் பதறத்தானே செய்யும்?
மறுநாளே மருமகன் வந்து நின்ற போது, அவர் முகத்தில் கோபமிருக்கிறதா? என்று தான் மல்லிக்கு கவலை.
ஆனால் சாதாரணமாக வேதாவை அழைத்துச் சென்று, மீண்டும் வந்து விட்டு விட்டான். அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது.
சஷியும் வந்து விட, மல்லிக்கும் முருகனுக்கும் சந்தோசம் நெஞ்சை நிறைத்தது.
பிள்ளை பிறந்த போது இருந்தது. அதன் பின் ஒரு நாளும் வந்து தங்கியது இல்லை. பேத்தி மேல் உள்ள பாசத்தில், அவர்கள் தான் சென்று பார்த்து விட்டு வருவார்கள்.
இப்போது மகளையும் பேத்தியையும் சீராட்ட வாய்ப்பு கிடைக்க, அதை பயன்படுத்திக் கொண்டனர்.
வாங்கி வந்திருந்த கேக்குகளை மகளுக்கு கொடுத்து தானும் உண்ட வேதாவிற்கு, எதையோ சாதித்த உணர்வு தான்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது அல்ப சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அவளது பல வருட வலிக்கு இன்று மருந்து கிடைத்து விட்டது. அதனால் நிம்மதியாக மூச்சு விட்டாள்.
வேலைகள் பெரிதாக இருக்கவில்லை. நான்கு பேரும் பிடித்ததை செய்து சாப்பிட்டு விட்டு, சந்தோசமாய் இருந்தனர். இந்த சந்தோசத்தில் கலந்து கொள்ள சமருக்கு தான் விருப்பமில்லை.
நான்கு நாட்களும் காற்றில் பறந்த இறகாய் காணாமலே போய் விட்டது. அன்று கிளம்ப, மல்லிக்கு அனுப்ப மனமில்லை.
“மாப்பிள்ளைய ரெண்டு நாள் இங்க வந்து தங்க சொல்லலாம்ல?” என்று கேட்டு வைத்தார்.
“ஒரேடியா பிடிச்சு இழுத்தா, மறுபடியும் எதாச்சும் பிரச்சனைய தான் இழுப்பாரு. பேசாம இருங்க. கொஞ்ச நாள் போகட்டும்” என்று விட்டாள்.
கிளம்பி முடித்து சமரை அழைத்தாள்.
“நாங்க கிளம்பி இருக்கோம். வந்து கூட்டிட்டுப் போங்க”
“போகும் போது மட்டும் நீயா தான போன? வரும் போது நான் வரனுமா?”
“அப்ப நான் வர வேணாம்னு சொல்லுறீங்க. சரி உங்க இஷ்டம். இன்னும் ஒரு வாரம் கூட இருக்கேன்”
“இருந்துக்க. என் மகள மட்டும் அனுப்பிட்டு இரு”
“நான் இல்லாம உங்க மக வானத்துல இருந்து குதிச்சாளா? நான் இருக்க இடத்துல தான் அவளும் இருப்பா. வந்தா வாங்க. இல்லனா போங்க”
“இப்பலாம் ரொம்ப பேசுற நீ”
“பேசலனா எனக்கு அறிவில்ல, உணர்ச்சியில்ல, அக்கறை இல்ல. எல்லாமே உங்களுக்கு தான் இருக்குனு நினைக்கிறீங்களே. சாயந்தரமா வாங்க. நாங்க கிளம்பி இருக்கோம்” என்று விட்டு வைத்து விட்டாள்.
சமர் வருவான் என்று மல்லியிடம் கூறினாள்.
“மதியம் சாப்பாட்டுக்கு கூப்பிடலாம்ல?” என்று அவர் பங்குக்கு கேட்டு வைத்தார்.
அவனை வீட்டுக்குள் அழைப்பதே பெரிய காரியம். சாப்பிட வேறு வருவானா? வாய்ப்பே இல்லை.
“அதெல்லாம் அவருக்கு அப்ப வேலை இருக்கும்மா. கூப்பிட முடியாது” என்று விட்டாள்.
மாலை வந்தான் சமர். உள்ளே வரவில்லை. வாசலில் காரிலேயே அமர்ந்து கொண்டான். கார் சத்தம் கேட்டதும், சஷி துள்ளி குதித்துக் கொண்டு தந்தையை தேடி ஓடி விட்டாள்.
மகளது உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வேதாவும் கிளம்பி விட்டாள்.
“உள்ள வந்து காபி சாப்பிட்டு போகலாம்ல மாப்பிள்ளை” என்று முருகனும் மல்லியும் கூப்பிட, அவனோ வேதாவை பார்த்தான்.
‘இவரு திருந்த மாட்டாரு’ என்று சலிப்பாக நினைத்தவள், “அவருக்கு வேலை இருக்குபா. என்னை விட்டுட்டு கிளம்பிடுவாரு.” என்றவள், தானும் காரில் ஏறிக் கொண்டாள்.
மூவரும் கிளம்பியதும், மல்லிக்கும் முருகனுக்கும் சந்தோசம் தான் மிஞ்சியது.
மகள் மருமகனோடு வீட்டுக்கு வந்து செல்வதை விட, வேறு என்ன அவர்களது ஆசையாய் இருந்து விடப்போகிறது.
வீடு சென்றதும் எல்லாம் பழையபடி மாறி விட்டது. ஆனால் வேதா சங்கரியோடு கீழே தான் இருந்தாள். அவள் அதிகம் படியேற வேண்டாம் என்று மருத்துவரும் சொல்லி விட்டார்.
நாட்கள் மெல்ல கடந்து போனது. சிறு பூசல்கள் இருந்தாலும், சமர் முன்பு போல் தொட்டதெற்கெல்லாம் மனைவியை முறைக்கவில்லை.
அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஒரு காரணம். அடுத்தது மீண்டும் அழுது, சண்டை போட்டு கிளம்பி விடுவாளோ? என்ற எண்ணமும் ஒரு காரணம்.
என்ன தான் அவள் மீது அவனுக்கு அக்கறை இல்லை என்றாலும், அவனுக்காக பார்த்து பார்த்து செய்யும் மனைவி இல்லாமல், அவனால் ஒரு நாளையும் தள்ள முடியாது.
வேதாவும் பழையதை பிடித்துக் கொண்டு தொங்கவில்லை. இயல்பாய் இருக்க ஆரம்பித்தாள். இதை எல்லாம் பார்த்து விட்டு, ஜீவிதாவும் சங்கரியும் சந்தோசத்தை ரகசியமாக கொண்டாடிக் கொண்டனர்.
ஜோவிதா பேசியதை கேட்டதை பற்றி வேதா மூச்சு விடாமல் இருந்து விட, அது அப்படியே ரகசியமாகிப்போனது.
வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. வேதா நன்றாக தேறி இருந்தாள். அவளை தேற்றியிருந்தனர் எல்லாரும்.
அன்றைய செக் அப் முடிந்த போது, மருத்துவர் பாராட்டினார். இப்படியே இருந்தால் சுகப்பிரசவம் தான் என்று கூட சொல்லி, மனதை குளிர வைத்து அனுப்பினார்.
இரவு, ஜோவிதா வேதாவிடம் தன் கேள்விகளை எல்லாம் வழக்கம் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
வேதாவும் பிள்ளை பெறுவதை பற்றி பேசிக் கொண்டிருக்க, சஷி வந்து வேதாவின் மடியில் படுத்துக் கொண்டாள்.
“ம்மா.. கதை சொல்லுங்கமா” என்று கேட்க, “தூக்கம் வரலயா உனக்கு?” என்று கேட்டாள்.
“வரல.. கதை சொல்லுங்க” என்றவள் வேதாவின் மடியில் படுத்துக் கொண்டு, உப்பிய வயிற்றில் முகத்தை தேய்த்துக் கொண்டாள்.
“பாப்பா எப்பமா வரும்?”
“கொஞ்ச நாளாகும்”
“ரொம்ப நாளாகுதுமா”
“சீக்கிரம் வரும். அது வரை நீ நல்லா பிள்ளையா இரு. இப்ப என்ன கதை வேணும் உனக்கு?”
“சின்டரெல்லா”
“இவளுக்கு இதெல்லாம் தெரியுமா என்ன?” என்று ஜோவிதா விழிவிரித்து கேட்க, “தெரியா தனமா போன்ல அந்த கதைய பார்த்துட்டா. அதுல இருந்து சின்டரெல்லா கதை பைத்தியமாகிட்டா” என்றாள்.
“அதையே சொல்லுங்க..” என்று சஷி சினுங்கினாள்.
“அதுல ஒரு லாஜிக்கும் இருக்காது. அதுவா உனக்கு வேணும்?” என்று கேட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான் மிதுனன்.
“அந்த கதையில லாஜிக்குக்கு என்ன குறைச்சல்?” என்று ஜோவிதா பாய்ந்தாள்.
“அதுல எதுவுமே லாஜிக்கோட இருக்காது ஜோ.”
“நான் லாஜிக்கோட சொல்லிட்டா என்ன செய்வ?” என்று வேதா கேட்க, “சூப்பர்கா.. என்ன செய்வீங்க? இப்ப சொல்லுங்க” என்று எதிர்கச்சிக்கு பாய்ந்தாள் ஜோவிதா.
திருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிக் கொண்டிருக்க, இன்னும் பிள்ளை பெற மிதுனன் சம்மதிக்காத கோபம் அவளுக்கு. அவ்வப்போது அவன் காலை வாரி விட்டு வேடிக்கை பார்ப்பாள்.
“அதுல எங்க அண்ணி லாஜிக் இருக்கு?”
“சொல்லிட்டா என்ன செய்வீங்கனு தான் கேட்குறாங்க” என்று ஜோவிதா இடையில் வந்தாள்.
“அப்படி சொல்லிட்டா நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன்.”
“இது பேச்சு. அக்கா இப்ப கதை சொல்லுங்க” என்று ஜோவிதா பரபரப்பாக கேட்டாள்.
“நான் தோக்குறதுல உனக்கு தான் நிறைய ஆர்வம் போல?”
“ஆமா.. அக்கா நீங்க சொல்லுங்க”
“ம்மா..” என்று சஷி சினுங்க, “ஓகே கேளுங்க” என்று ஆரம்பித்தாள் வேதா.
(முழுசா சின்டரெல்லா கதை தான் வரும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க)
“ஒரு அழகான ஊர். அங்க ஒரு பொண்ணு இருந்தாளாம். அவ பேரு எல்லா.. அவளோட அம்மா, அவ சின்ன பொண்ணா இருக்கும் போது இறந்து போயிட்டாங்களாம். அவளோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.”
கேட்டுக் கொண்டே சமரும் அங்கு வந்து சேர, சங்கரியும் வந்து அமர்ந்து கொண்டார்.
“அந்த சித்திக்கு ரெண்டு பொண்ணுங்களாம். எல்லாவோட அப்பா இறந்து போனதும், இவங்க மூணு பேரு மட்டும் தான் அந்த வீட்டுல இருந்துருக்காங்க”
மிதுனன் லாஜிக்கான கேள்விகளை கேட்க தயாரானான்.
“அந்த பொண்ண சித்திக்கு பிடிக்காதாம். அந்த பொண்ணுக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல. சம்பந்தமே இல்லாத சித்தி தான் அவளுக்கு சோறு போடனும். வீட்டுல வச்சு வளர்க்கனும்னா அந்த சித்திக்கு கோபம் வரத்தான செய்யும்? எல்லாரும் அன்னை தெரசா கிடையாது. எப்பவும் நம்ம பெத்த பிள்ளைங்களுக்கு போக தான் அடுத்த பிள்ளைக்கு பார்ப்பாங்க. எல்லா கூட அவங்களுக்கு எந்த உறவும் இல்லாதப்ப, அவங்க பாசமா பார்த்துக்கனும்னு எதிர்பார்க்க முடியாது. ஊருல நாலு நல்லவங்க இருந்தா, மிச்ச அத்தனை பேரும் சுயநலத்தோட தான் வாழுவாங்க. அதுனால அவங்களுக்கு எல்லாவ பிடிக்காமலே போயிடுச்சு”
சங்கரியை தவிர மற்ற மூவரும் இப்படி ஒரு கோணத்தை பார்க்காமல் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வேதா நிறுத்தவில்லை.
“அந்த எல்லாவ வீட்டு வேலை செய்ய வச்சு, அவள போனா போகுதுனு கூடவே வச்சுருக்காங்க. எல்லா சமைக்கும் போது, அவ மேல கரி பூசிக்கும். அழுக்காவே இருப்பா. அத பார்த்த சித்தி பொண்ணுங்க, அவள சின்டர் பூசுன எல்லானு கிண்டல் பண்ணுறாங்க. அது தான் அவ பேரு சிண்டரெல்லானு ஆகிடுச்சு.”
“ஓஓஓ…” என்று ஜோவிதா இழுத்தாள். இது அவளுக்கு தெரியாது.
“இப்படி அவங்க வாழ்ந்துட்டு இருக்கப்ப, அவங்களோட நாட்ட ஆளுற அரசரோட பிள்ளைக்கு கல்யாண வயசு வந்துடுச்சு. அந்த இளவரசன் சார்மிங் க்கு பொண்ணு தேடுறாங்க”
“இங்க இங்க தான்.. சொல்லுங்க சொல்லுங்க” என்று மிதுனன் பரபரப்பானான்.
“ஊர்ல இருக்க எல்லா இளம்பெண்களும் பார்ட்டிக்கு வரனும். அதுல ஒருத்தர இளவரசர் தேர்வு செஞ்சு, அந்த பொண்ணு கூட ஆடுவார்னு மட்டும் சொல்லி அனுப்பிருக்காங்க. அந்த செய்தி சின்டரெல்லா சித்தி கிட்டயும் வருது. உடனே தன்னோட இரண்டு பொண்ணுங்களையும் அந்த பார்டிக்கு கூட்டிட்டுப் போக ஆசைப் படுறாங்க. அதுக்கான அழகான டிரஸ்ஸ சின்டரெல்லா விட்டே தைக்க விடுறாங்க. சின்டரெல்லா தானும் கிளம்பி போகனும்னு ஆசைப்படுறா. ஆனா சித்தி விட மாட்டேங்குறாங்க.”
“ஏன்?” – மிதுனன்.
“சின்டரெல்லா நல்ல அழகான பொண்ணு. அவள இன்னும் அலங்கரிச்சு கூட்டிட்டு போய் அங்க நிறுத்துனா, நம்ம மக மேல இளவரசர் கண்ணு படாம போயிடுச்சுனானு சித்திக்கு தோணிருக்கலாம். எந்த அம்மாவும் தான் பெத்த மக தான் ராணி ஆகனும்னு ஆசைப்படுவாங்க. அதனால போட்டில எக்ஸ்ட்ராவா ஒருத்திய ஆட் பண்ணிக்க வேணாம்னு நினைச்சுருக்கலாம்”
“அப்படி சொல்லுங்க கா. வந்துட்டாரு லாஜிக் கேட்க..” – ஜோவிதா
“சோ சின்டரெல்லாவ விட்டுட்டு மத்த மூணு பேரும் கிளம்பி போறாங்க. அவளுக்கு வருத்தம். நாம மட்டும் தனியா இருக்கோம். மொத்த நாடும் பார்டிக்கு போயிடுச்சேனு. மனசுல வருத்த படுறா. அவளும் போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறா. அப்ப தான் அவ முன்னாடி ஒரு மேஜிக் நடந்து ஒரு அம்மா வர்ராங்க”
“இது லாஜிக்கா? நாம எதையாவது நினைச்சா உடனே மேஜிக் வருமா என்ன?” என்று மிதுனன் கிண்டலாக கேட்டான்.
“வராது தான். ஆனா சின்டரெல்லா விதிப்படி, அவ அந்த பார்டில கலந்து அந்த இளவரசன கல்யாணம் பண்ணியே ஆகனும். ஒரு வேளை சித்தி கூட்டிட்டு போயிருந்தா, நார்மலா நடந்துருக்கும். கூட்டிட்டு போகாததால, விதி எதோ ஒரு ரூபத்துல வந்து நடத்திக்கிச்சு”
வேதா சொல்லவும், ஜோவிதா மிதுனனை கிண்டலாக பார்த்தான்.
“இதுக்கு இப்படி ஒரு அர்த்தத்த நான் கேள்விப்பட்டதே இல்ல”
“மிச்சத்தையும் கேளு. அந்த மேஜிக் மதர் தன்னை அந்த பொண்ணோட காட் மதர்னு சொல்லிட்டு, அவளோட ஆசைய நிறைவேத்துறாங்க. அவ மேல இருக்க தூசி எல்லாம் எடுத்து, அழகா அலங்கரிச்சு, அவ போறதுக்கு வண்டியும் கொடுக்குறாங்க. அதோட, எல்லா மேஜிக்கும் பனிரெண்டு மணிக்கு கலைஞ்சு போயிடும். அதுக்குள்ள திரும்பி வந்துடுனு சொல்லுறாங்க”
“இப்ப உங்க பாயிண்ட் படி பார்த்தா, விதி அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குதுனா, எதுக்காக மேஜிக்க பாதில கலைக்குது?”
“இதுக்கு பதில் அப்புறமா சொல்லுறேன். சின்டரெல்லா சந்தோசமா பார்ட்டிக்கு போறா. நினைச்ச மாதிரி இளவரசர் சார்மிங் பார்வையும் அவ மேல விழுது. ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுறாங்க. இது எல்லார் கண்ணுலயும் பட்டாலும், அவ யாருனு சரியா தெரியாம ஒதுங்கி இருக்காங்க. நேரமும் பனிரெண்ட தொடுது. அந்த மேஜிக் கலைஞ்சுடும்ங்குற பயத்துல, டான்ஸ பாதில விட்டுட்டு அவ ஓடுறா. அப்ப அவளோட செப்பல் கழண்டு விழுது. நடுவுல பேசாத. நானே நீ கேட்க வர்ரத சொல்லுவேன். வெயிட். அந்த செப்பல சார்மிங் எடுத்து வச்சுக்கிறாரு. சின்டரெல்லா வீட்டுக்கு ஓடி வந்து, பழையபடி ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துடுறா. சார்மிங் அந்த செப்பல வச்சு, இத போட்ட பொண்ணு தான் எனக்கு வேணும்னு அரசர் கிட்ட சொல்லிடுறாரு.
அரசரும் தேடுறாரு. ஊர்ல எல்லா பொண்ணுங்களுக்கும் அந்த செருப்ப மாட்டுறாங்க. ஆனா அது யாருக்கும் பொருந்தல. அந்த மேஜிக் செப்பல், சின்ன கால பார்த்தா பெருசாகுது. பெரிய கால பார்த்தா சின்னதா மாறிடுது. சின்டரெல்லா கால தவிர, யாரு காலும் எனக்கு வேணாம்னு தள்ளி விடுது. அந்த மேஜிக் சின்டரெல்லாவ சார்மிங் கிட்ட சேர்த்தே ஆகனும்னு முடிவு பண்ணதால, யார பார்த்தாலும் இஷ்டத்துக்கு மாறிட்டு இருக்கு. கடைசியா சின்டரெல்லா வீட்டுக்கு வர்ராங்க. அங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் செட் ஆகலனு திரும்புறப்போ, சின்டரெல்லா சத்தம் கேட்டு அந்த பொண்ண கூப்பிடுறாங்க.
வழக்கம் போல தூசி படிஞ்சு வந்து நிக்கிறவ கால்ல செருப்ப போடுறாங்க. நம்ம சேர வேண்டிய ஆள் கிட்ட சேர்ந்துட்டோம்னு தெரிஞ்சு, மேஜிக் கரெக்ட்டா அவ கால்ல செருப்ப பொறுத்தது. அதுக்கப்புறம் அவள கூட்டிட்டு போய் சார்மிங் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு”
ஜோவிதா கை தட்ட, மிதுனனுக்கு சிரிப்பு வந்தது.
“சரி அந்த செருப்பு சின்டரெல்லா கால்ல தான் கரெக்ட்டா இருக்கும்னா, எதுக்காக கழண்டு விழனும்?”
“செருப்புனா, தப்பா ஓடும் போது கழண்டு விழுறது இயற்கை. அரக்கபறக்க ஓடுறவங்க செருப்பை விட்டுட்டு ஓடுனத நீ பார்த்ததே இல்லையா? பட் இங்க அது மேஜிக் செப்பல். என்னதா அந்த விதி மேஜிக் ரூபத்துல வந்து, சின்டரெல்லாவ சார்மிங் கூட சேர்த்து வைக்க அங்க அனுப்புனாலும், மேஜிக் வச்சே அவங்கள வாழ வைக்க முடியாது. இளவரசர் அவள பத்தி நல்லா தெரிஞ்சு கல்யாணம் பண்ணனும். அது தான் உண்மையாவும் இருக்கும். மேஜிக்க நடுராத்திரி அழிச்சவங்க, செருப்ப மட்டும் விட்டுருப்பாங்க. ஏன்னா அந்த செருப்பு தான் அவங்க ரெண்டு பேரையும் இணைக்க போகுது. அதுக்காக வேணும்னே கூட அவ கால்ல இருந்து கழட்டி விட்டு, இளவரசர தேடி வர வச்சு, அவள மீட்கவும் வச்சுருக்கலாம். மேஜிக் ஆர் விதி, ரெண்டும் நினைச்சா நினைச்சத எப்படி நடத்திக்கும்னு தெரியாது. ஆனா கண்கட்டி வித்தை மாதிரி நடத்தி முடிச்சுடும்”
வேதா முடிக்கும் போது, சஷி தூங்கியிருந்தாள்.
“இப்ப கேளுங்க. இன்னும் என்ன கேட்கனும்?” என்று ஜோவிதா சீண்ட, “நல்லா சொல்லுறீங்கபா.. இந்த கதைய எழுதுனவன் கூட இவ்வளவு லாஜிக்கோட யோசிச்சு இருக்க மாட்டான். ஒத்துக்கிறேன். நீங்க தான் ஜெயிச்சீங்க” என்று சரணடைந்தான்.
“அது.. யாரு கிட்ட..! அக்கா.. நீங்க கேளுங்க. இவர் செய்வாரு”
“நிஜம்மாவே இப்படி எழுதனவங்க கூட நினைச்சுருக்க மாட்டாங்க தான்” என்றான் சமர்.
வேதா அவனை பார்த்து விட்டு, மகளை தட்டிக் கொடுத்தபடி மனதில் இருப்பதை சொல்லி சமரை அதிர வைத்தாள்.
தொடரும்.
