அத்தியாயம் 19 (final)
![]()
வேதாவிற்கு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்து, ஒரு வாரமாகி இருந்தது. அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்ப சங்கரி முடிவு செய்தார்.
கேட்டதும், சமர் வழக்கம் போல் குதித்தான்.
“எதுக்கு அனுப்புறீங்க? யூஸ்வலா மூத்த பிள்ளை தான பிறந்த வீட்டுல பிறக்கும்?” என்று கோபமாக கேட்க, “ரெண்டாவது பிள்ளைய அங்க பெத்துக்க கூடாதுனு எந்த சட்டமும் சொல்லல. நான் கூட உன்னையும் மிதுவையும் எங்கம்மா வீட்டுல தான் பெத்தேன்.” என்றார் அன்னை.
சமர் சங்கரியிடம் பேசி தோற்று விட்டு, வேதாவிடம் வந்தான்.
“அவசியமா போயே ஆகனுமா?”
“என்ன புதுசா கேட்குறீங்க?”
“முதல் பிள்ளை தான வளைகாப்பு எல்லாம் வச்சு போவாங்க? இப்ப எதுக்கு அங்க?”
“அத்தை தான் சொன்னாங்களே. அவங்க ரெண்டு பிள்ளையும் அப்படித்தான் பெத்தாங்கனு”
“அதுக்காக நீயும் போயே ஆகனுமா? உனக்கு என்னை விட்டு போறதுல அவ்வளவு ஆர்வம்”
அவன் பல்லைக்கடிக்க, “அதான முறை” என்றாள் பட்டும் படாமல்.
“வர வர உன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் பண்ணிட்டு இருக்க. என்னவோ பண்ணு” என்று கத்தி விட்டுச் சென்று விட்டான்.
அவனது குமுறல்களை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, வேதா கிளம்ப ஆரம்பித்தாள்.
துணிகளை எல்லாம் அவள் பெட்டியில் அடுக்க, அதை கடுப்போடு பார்த்தாலும் முகத்தை திருப்பிக் கொண்டு, கைபேசியை பார்த்தபடி அமர்ந்து விட்டான் சமர்.
வேதா எல்லாவற்றையும் அடுக்கி முடித்து விட்டாள்.
“இத தூக்கிட்டு வந்து கீழ வைங்க. சாப்பிட்டு அப்படியே கிளம்பிக்கலாம். நான் கீழ போறேன்”
“இது எதுக்கு? அதான் உங்க அம்மா, உங்க அப்பா உனக்கு நிறைய டிரஸ் வாங்கி வச்சுருக்கதா பெருமையா சொன்னியே?”
ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து அவன் கடுப்பாக பேச, “ஆனா இப்ப இதெல்லாம் எனக்கு வேணும்.” என்று மட்டுமே சொல்லி விட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டாள்.
“அப்படி அங்க போய் என்ன தான் பண்ண போற நீ? இங்க விட கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ராவா தூங்குவ? அதான?”
வெடுக்கென அவன் பக்கம் திரும்பி, இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“அந்த தூக்கத்தை இங்கயே தூங்குனு சொல்லுறேன்”
“இங்க எப்படி தூங்குறதாம்? அங்க தான் தூங்க முடியும். அங்க யாரும் வந்து, வேதா அதெங்க இதெங்கனு எழுப்பி கேட்க மாட்டாங்க. இத செய் அத செய்யுனு சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கே ஒன்னு சமைச்சா, அது எனக்கு பிடிக்கல வேற சமைச்சு கொடுனு கேட்க மாட்டாங்க.”
“நேரடியா சொல்லேன். என் தொல்லை இருக்காதுனு”
பல்லைக்கடித்து அவன் சொன்னபோது, வேதாவிற்கு சிரிப்பு வர பார்த்தது. சிரித்தால் இருக்கும் கோபத்தில் சாமியாடிவிடுவான் என்பதால், அடக்கிக் கொண்டான்.
“என்னவோ.. எனக்கு எங்கம்மா கூட இருக்கப் பிடிக்கும். நான் அங்க போய் தங்கிட்டு தான் வருவேன்” என்று கூறி விட்டு திரும்பினாள்.
“அப்ப உனக்கு என் அம்மா கூட இருக்கது பிடிக்கல அப்படித்தான?”
சமர் கிண்டலாக கேட்க, “ஆஹா.. இப்படி சொன்னா அத்தைக்கும் எனக்கும் சண்டை வரும்னு நினைப்பா? நோ சான்ஸ். பெட்டிய தூக்கிட்டு வாங்க” என்று பேசிக் கொண்டே நடந்தவள், கதவை திறந்து வெளியேறி விட்டாள்.
இவர்கள் இந்த பக்கம் பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருக்க, எதிர் அறையில் யோசனையுடன் அமர்ந்து இருந்தாள் ஜோவிதா.
மிதுனன் அப்போது தான் அலுவலகம் கிளம்பி வந்தான்.
“என்ன இங்கயே உட்கார்ந்துருக்க? கீழ போகலயா?”
உடனே வந்து அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் ஜோவிதா.
“என்ன காலையில பாசம் பொங்குது?”
“அது வந்து..”
“ம்ம்?”
“நான் ப்ரக்ணன்ட்னு நினைக்கிறேன்”
விழிகள் விரிய, மனைவியின் முகத்தை பார்த்தான்.
“நிஜம்மாவா?”
“ம்ம்.. செக் பண்ணேன்” என்றவள் அந்த ஸ்டிக்கை காட்டினாள்.
“வாவ்..!! இது எவ்வளவு ஹாப்பியான விசயம். அத ஏன் இவ்வளவு சோகமா சொல்லுற?”
“இல்ல அக்கா மாதிரி என்னையும் அத்தை கீழ இருக்க சொல்லிட்டா, உங்கள மிஸ் பண்ணுவேன்ல.. அதுக்கு தான்”
“அட மக்கு.. அண்ணி வீக்கா இருந்தாங்க. அதுனால கீழ இருந்தாங்க. நீ நல்லா சாப்பிட்டு புஷ்டியா தான இருக்க?”
“அப்ப நான் குண்டா?” என்று கேட்டு, உடனே அவனை விட்டு விலகி இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“அப்படி பளிச்சுனு சொல்ல முடியாது.. குத்துமதிப்பா சொல்லலாம்”
ஓங்கி ஒரு அடி வைத்தாள் அவனுக்கு. வாங்கிக் கொண்டு சிரித்தான் அவன்.
“சரி சரி.. ஹாஸ்பிடல் போகலாம் கிளம்பு. நான் ஆஃபிஸ்க்கு கால் பண்ணி பர்மிஷன் போடுறேன்” என்றதும், உடனே இருவரும் கிளம்பி விட்டனர்.
கீழே சமர் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு சாப்பிட அமர, வேதாவும் சங்கரியும் எல்லோருக்கும் சமைத்து முடித்தனர்.
ஜோவிதாவும் மிதுனனும் வந்து விசயத்தை சொன்னதும், வேதா ஜோவிதாவை அணைத்துக் கொண்டாள்.
“வாழ்த்துக்கள் ஜோவி.. வாழ்த்துக்கள் மிது” என்று இருவரையும் வாழ்த்தினாள்.
சஷி எல்லோரையும் புரியாமல் பார்க்க, “சஷி குட்டி.. உனக்கு இன்னொரு தம்பி பாப்பா வர போறான்” என்றான் மிதுனன்.
“ரெண்டு தம்பியா?”
“ஆமா”
“ஐஐ! ஜாலி” என்று மேசையில் எழுந்து நின்று குதிக்க ஆரம்பித்தாள்.
“நாங்க முதல்ல ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடுறோம்” என்று மிதுனன் கூற, “சாப்பிட்டே போகலாம்” என்றார் சங்கரி.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், ஆளுக்கொரு திசைக்கு கிளம்பி விட்டனர்.
மிதுனனும் ஜோவிதாவும் மருத்துவமனை சென்று சேர்ந்தனர். சோதனையை முடித்து விட்டு, மருத்துவரின் பதிலுக்காக காத்திருந்தனர். அவர் விசயத்தை உறுதி செய்து விட, சந்தோசத்தில் ஜோவிதாவிற்கு கண்கலங்கி விட்டது.
‘முருகா.. உனக்கு கோடி நன்றி’ என்று நன்றியை தெரிவித்துக் கொண்டாள்.
மருத்துவர் சொன்னதை எல்லாம் பொறுப்பாய் கேட்டு விட்டு, கிளம்பி வீட்டுக்கு வந்தனர். சங்கரியிடம் விசயத்தை சொல்லி விட்டு, மிதுனன் வேலைக்கு கிளம்பி விட, ஜோவிதா தன் பெற்றோர்களுக்கு விசயத்தைச் சொன்னாள். அவர்கள் உடனே மகளை பார்க்கக் கிளம்பி விட்டனர்.
வேதாவை பிறந்த வீட்டில் விட கிளம்பிய சமருக்கு, முகம் மட்டும் சுருங்கியே தான் இருந்தது.
“இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி வச்சுருக்கீங்க?”
“என் மூஞ்சியே அப்படித்தான். பேசாம வர்ரியா?”
“சிடுமூஞ்சியா?”
“பேசாம இரு வேதா. சஷிக்காக பார்க்குறேன்”
“இல்லனா மட்டும் உங்களுக்கு பிள்ளை முன்னாடி கத்தவே தெரியாது பாரு” என்று அவள் நொடிக்க, அவன் முறைத்து வைத்தான்.
“இப்ப என்னவாம்? அடுத்த வாரம் டேட் சொல்லிருக்காங்க. மிஞ்சி மிஞ்சி போனா அஞ்சு மாசம் இருப்பேன். அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துடுவேன். அதுக்கு ஏன் இப்படி கோபப்படுறீங்க?”
“நான் ஒன்னும் கோபமே படல. நீ என்ன வேணா செய்”
“அப்ப கோபமே இல்லையா?”
“இல்ல”
“அப்ப நாங்க அஞ்சு மாசம் இருக்கலாமா? நான் வேற மூணு மாசத்துல வந்துடுறேன்னு அத்தை கிட்ட தெரியாமே சொல்லிட்டேனே. சரி என் புருஷன் ஆசைய ஏன் கெடுப்பான்? அஞ்சு மாசமே ஓகே”
சமர் சாலையை ஒரு பார்வையை பார்த்தபடி, மனைவியையும் முறைத்தான்.
“வர வர உனக்கு கொழுப்பு கூடிருச்சு”
“ஆமா.. எல்லாம் என் புருஷன் வாங்கிக் கொடுத்த சாப்பாட்டுல சேர்ந்த கொழுப்பு தான்”
“பேசாம வர்ரியா?”
“அப்ப நீங்க ஒத்துக்கோங்க. நான் இல்லாம உங்களால இருக்க முடியலனு ஒத்துக்கோங்க.”
“முடியாது”
“உங்களுக்கு ஈகோ”
“ஆமா அதுக்கென்னங்குற?”
“அப்பா.. ஏன் கத்துறீங்க?” என்று சஷி கேட்க, சட்டென தன் கோபத்தை மறைத்து மனைவியை முறைத்தவன், “ஒன்னும் இல்லடா..” என்றான்.
வேதாவிற்கு சிரிப்பாக இருந்தது.
சண்டை போட்டபடியே மனைவியை கொண்டு சென்று வீட்டில் இறக்கி விட்டவன், மகளையும் இரண்டு நாட்களுக்கு அங்கேயே விட்டு விட்டு, மாமனார் மாமியாரிடம் பட்டும் படாமல் பேசி விட்டு உடனே கிளம்பி விட்டான்.
“ஹலோ மிஸ் பண்ணா ஃபோன் பண்ணுங்க”
“போடி” என்று விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
“சாப்பிட்டு போகலாம்ல?” என்று மல்லி குறைபட, “அங்கயே சாப்பிட்டு தான் வந்தோம். அவருக்கு வேலை இருக்கு. நீங்க வாங்க.” என்று அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
மருத்துவர் சொன்ன தேதியில் பேற்று வலி வர, சுகப்பிரசமாகவே பிறந்தான் சமரின் மகன் சுசிந்தரன்.
மூன்று நாட்களில் வேதா மருத்துவமனையில் இருந்து கிளம்பி விட, சமருக்கு வீட்டில் இருப்பது பெரும் கொடுமையாக இருந்தது.
‘அவ சண்டையே போட்டாலும் இங்க இருந்தா தான் நல்லா இருக்கு. இவனுங்க மட்டும், பொண்டாட்டி ஊருக்கு போயிட்டானு ரொம்ப சந்தோசமா சொல்லுறானுங்களே’ என்று ஆன்லைன் மீம்களை பார்த்து கடுப்பாகிக் கொண்டான்.
அவனால் இரண்டு நாள் கூட மகன் மகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. வேதாவையும் சேர்த்து சொல்ல ஈகோ விடவில்லை. சஷியும் தம்பியை பார்த்த பின்பு, எங்கும் அசைய மறுத்தாள்.
அதன் விளைவு தலையில் இருந்த கிரீடத்தை கழட்டி விட்டு, சமர் தான் அடிக்கடி வந்து மனைவி மக்களை பார்த்துச் செல்ல வேண்டியிருந்தது.
மருமகனின் தொடர் வருகை, வேதாவின் பெற்றோருக்கு எவ்வளவோ ஆறுதல் அளித்தது. என்ன தான் தங்கவும் சாப்பிடவும் அவன் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், அவன் வந்து போவதே பெரிய விசயமாக இருந்தது.
சஷி பிறந்த போது, ஒரு முறை கூட வராமல் இருந்து விட்டானே. அந்த நிலைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை தான்.
*.*.*.*.*.*.*.*.*.*.*.*.
இரண்டு வருடங்களுக்கு பிறகு…
சஷி உதட்டை பிதுக்கி அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு முடியெடுத்து காது குத்தியிருந்தனர். சுசிந்தரனுக்கும் ஜோவிதாவின் மகன் மகேந்திரனுக்கும் கூட மொட்டை தான்.
ஜோவிதாவின் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு, சஷிக்கு காதும் குத்தி விட்டனர்.
காது வலியில் அழுது கொண்டிருந்தவளை, தூக்கி வைத்துக் கொண்டு சுற்றினாள் ஜோவிதா. சுந்திரனும் மகேந்திரனும் கிட்டத்தட்ட இரட்டைகளை போல உடையணிந்து, சமரிடம் இருந்தனர்.
சாமி தரிசனம் முடிந்து மலை இறங்கியவர்கள், ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தங்கியிருந்த அறைக்குச் சென்றனர்.
சஷி இன்னும் அழுது கொண்டிருந்தாள்.
“இன்னும் வலிக்குதா?” என்று மிதுனனே பாவமாக கேட்க, “இப்ப பாருங்க எப்படி மாறுறானு” என்றாள் ஜோவிதா.
“சஷி.. ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?”
சஷி உடனே தலையாட்ட, “வா ஹோட்டல்ல இருக்கத எல்லாம் வாங்கி சாப்பிடுவோம்” என்று தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
மிதுனன் பின்னால் சென்று விட்டான்.
சமரிடம் இருந்த சிறுவர்களை வேதா வாங்கி, உடல் கழுவி உடை மாற்ற ஆரம்பித்தாள்.
“ரெண்டு பேருக்கும் வித்தியாசமே இல்லாம இருக்குல? வெறும் ஒன்பது மாசத்துல பிறந்துட்டாங்க” என்று சமர் சொல்ல, “அதான் நல்லாவும் இருக்கு. ஒரே வயசு புள்ளைங்க இருக்கது ரொம்ப நல்லது. அண்ணன் தம்பி இல்லாம தனியாவே வளர்ந்த எனக்கு தான் தெரியும் கூட பிறந்தவங்க அருமை” என்றாள் வேதா.
“இப்ப ஏன் இப்படி குத்தி காட்டுற?”
“நான் பொதுவா தான் சொன்னேன். உங்களுக்கு குத்துதா என்ன?”
சமர் மனைவியை முறைத்து விட்டு, இரு பிள்ளைகளையும் பார்க்க ஆரம்பித்தான்.
வழக்கம் போல் மிதுனனுக்கும் சமருக்கும் வாக்குவாதம். எல்லார் தரப்பும் நியாயம் இருக்க, யாருக்கும் ஆதரவு தராமல் வேதாவும் ஜோவிதாவும் ஒதுங்கி விட, சங்கரி தான் மாட்டிக் கொண்டார்.
அந்த பிரச்சனை ஓயும் முன்பே இந்த பயணம் ஆரம்பித்து விட, அவ்வப்போது எதையாவது சொல்லி வைப்பாள்.
ஆனால் இது தான் சமர். அவனை மொத்தமாக மாற்றி, தனக்கேற்ற போல் செய்து கொள்ள அவளாலும் முடியாது. அவனை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ பழகி விட்டாள். ஆனாலும் அவனது தவறு என்றால், சத்தமில்லாமல் இப்படி சொல்லி விடவும் தவறுவது இல்லை.
சமர் பால்கனி பக்கம் சென்று இரண்டு பிள்ளைகளுக்கும் விளையாட்டு காட்ட, வேதாவும் அவனோடு இணைந்து கொண்டாள்.
சஷிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்த ஜோவிதாவும், இதை பற்றித்தான் மிதுனனிடம் பேசினாள்.
“நாங்க அப்படித்தான் ஜோ. அப்ப அப்ப மோதிப்போம். அம்மா இருக்க வரை பெருசா சண்டை போட்டுக்க மாட்டோம். ரெண்டு நாள்ல மறந்துட்டு அவன் எதாவது பேசுவான். நானும் எதாவது பேசுவேன். அப்படியே போயிடும்”
“இதுக்கு தான் எனக்கு கூட பிறந்த யாரும் இல்லையேனு வருத்தபடுறேன். சண்டை போடவும் பேசிக்கவும் யாருமே இல்லாம, எங்கம்மா என்னை தனியா வளர்த்துட்டாங்க”
“இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. மாமா கிட்ட வேணா சொல்லுறேன். எனக்கொரு மச்சான் வேணும்னு”
சொல்லி விட்டு சிரித்தவனை கிள்ளி விட்டு அவளும் சிரித்தாள்.
“கொழுப்பா? கொண்ணுடுவேன்”
“சீரியஸா சொல்லுறேன் ஜோ”
“ஆணிய…”
“புடுங்க வேணாம்” என்று சஷி முடிக்க, இருவருமே சிரித்து விட்டனர்.
ஹோட்டல் மாடியில் பால்கனியில் சமர் வேதாவோடும் பிள்ளைகளோடும் இருக்க, அதற்கு கீழே மேசையில் ஜோவிதாவும் மிதுனனும் சஷியோடு அமர்ந்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், விட்டு விடாத சொந்தங்கள் கிடைத்து விட்டால் போதும். குடும்ப அமைப்பு உடையாமல் பாதுகாத்து விடலாம். இவர்களும் நிறைவாய் வாழட்டும்.
நிறைவு.

How to contact u mam. Because I have paid for subscribe. But I can’t read ur premium stories
Last payment oda screenshot a enakku mail pannunga. ha********@***il.com
Hello are you there?