அத்தியாயம் 2

Loading

அடுத்த நாள் காலை…

வேதா தன் மகளை எழுப்பி பாலை காய்ச்சி கொடுத்தாள். சஷிகாவிற்கு இரண்டு வயது தான். ஆனால் மழலை மொழிகள் இருந்தாலும் தெளிவாக பேசுவாள்.

“சமரும் இப்படித்தான்.. ரெண்டு வயசுலயே நல்லா பேசுவான். அப்பலாம் நல்லா தான் இருக்கும். இப்ப தான் வாய திறந்தா ஏன்டா பேசுறான்னு இருக்கு” என்று கடுப்பாக சொல்லி வைத்தார் சங்கரி.

ஆனாலும் தெளிவாய் பேசும் மகளை, பேச விட்டு அழகு பார்ப்பாள் வேதா.

இன்றும் அவள் நேற்று நடந்த விழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க, அதை காதில் வாங்கியபடி காலை உணவு வேலையை ஆரம்பித்தாள்.

சங்கரி எழுந்து வர, அவருக்கு காபியும் போட்டுக் கொடுத்தாள்.

“என்னமா செய்யுற?”

“உப்புமா அத்தை.. மிது போன வாரம் கேட்டது.”

“உன் புருஷனுக்கு புடிக்காதே”

“அவருக்கு தோசை மாவு இருக்கு”

எல்லோருக்கும் உப்புமாவை கிண்டி வைத்து விட்டு, கணவனுக்காக தோசை சுட ஆரம்பித்தாள் வேதா.

சமர் அலுவலகத்திற்கு தயாராகி வந்தான். சணல் தயாரிக்கும் தொழில் அவர்களுடையது. பல ஊருக்கு ஏற்றுமதியும் செய்கின்றனர்.

மிக மிகச்சிறியதாக அவனுடைய பாட்டி செய்தது. அவர் கஷ்டப்பட்டு மகனை வளர்க்க, மகனுக்கு தாயை தனியாக கஷ்டப்பட விட மனமில்லை. தாயும் மகனுமாக அதே தொழிலில் நிலையாய் நின்று வளர்ந்திருக்க, சங்கரி வந்தார்.

அவருக்கும் வரவு செலவு கணக்கு அத்துப்படி. இரண்டு பிள்ளைகளை பெத்து வளர்த்து விட்டாலும், தொழிலை கட்டிக் காப்பாத்திக் கொண்டு தான் இருந்தனர்.

உழைத்து இப்போது இருக்கும் வீட்டை கட்டி முடித்தனர். பிள்ளையின் குடும்பம் சிறப்பாய் வாழ்வதை பார்த்த சந்தோசத்தில், பாட்டி இறைவனடி சேர்ந்தார்.

தந்தையும் தாயும் பார்த்துக் கொண்டிருந்த தொழில், படித்து முடித்ததும் சமரிடம் வந்தது. சமர் சுயநலம் பிடித்தவன் தான். ஆனால் அறிவாளி.

அவனால் தொழில் முன்னேறவே செய்தது. ஓடி ஓடி உழைத்து உடல்நலம் குறைந்து ஓய்வில் இருந்த தந்தைக்கு, மகனுக்கு திருமணம் செய்யும் ஆசையும் வந்தது.

சமரை கேட்டால் மறுக்கவில்லை. உடனே பெண் பார்த்தனர். அவர்களது தேடலில் கிடைத்த பொக்கிஷம் வேதாஸ்ரீ. திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

ஆசை நிறைவேறிய பிறகு சமரின் தந்தை இறந்து போக, சங்கரி ஓய்ந்து போனார்.

தொழிலை இரண்டு மகன்கள் கைகளில் கொடுத்து விட்டு, ஒதுங்கி விட்டார்.

அவ்வப்போது மகன்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பதோடு சரி. உள்ளே நுழைவது இல்லை.

இப்போது இரண்டாவது மகனுக்கு திருமணம் கூடி வந்திருந்தது.

வேதாவை போலவே ஜோவிதா வீட்டுக்கு ஒரே பெண். மிகவும் அழகாகவும் இருந்தாள். மிதுனனுக்கு பிடித்து விட்டதால், திருமணம் பேசி முடித்தனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம்.

சமர் சாப்பிட்டுக் கொண்டிருக்க, மிதுனன் வந்து சேர்ந்தான்.

உணவு மேசையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள் சஷிகா.

“சஷி குட்டி..” என்று மிதுனன் தூக்க, அவள் வாயெல்லாம் பல்லாக சிரித்து வைத்தாள்.

“சித்தப்பா.. பைக்ல போகலாமா?”

“இந்த நேரத்துலயா? உங்க பாட்டி என்னை திட்டுவாங்க. சாயந்தரமா போவோம்”

சஷி தலையாட்டி வைக்க, வேதா அவனுக்கான உப்புமாவை எடுத்து கொடுத்தாள்.

“ஹை.. உப்புமா..! தாங்க்ஸ் அண்ணி. சஷி சாப்பிட்டாளா?”

“இப்ப தான் பாலே குடிச்சா” என்று சங்கரி சொல்ல, “அப்ப சரி. நான் சாப்பிட்டு கிளம்புறேன்” என்றான்.

இத்தனையும் சமரின் முன்னால் தான் நடந்தது. ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை.

மகளை தூக்கி கொஞ்சவும் இல்லை. கொஞ்சுவதும் இல்லை. அவளாக பேசினால் இரண்டு வார்த்தை பேசுவான்.

சாப்பிட்டு விட்டு அவன் கிளம்பி விட, மிதுனனும் கிளம்ப தயாரானான்.

“மிது.. சம்பந்தி வீட்டுல பத்திரிக்கை அடிக்கிற பத்தி நேத்தே பேசுனேன். எதோ அவங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க இருக்காங்களாம். அங்கயே போகலாம். வேலை இல்லாம இருந்தா வா”

“போகலாம்மா.. என் ஃப்ரண்ட்ஸ் ஜோ ஃப்ரண்ட்ஸுக்கும் கொடுக்கனும்.”

“ரெண்டே வாரத்துல முகூர்த்தமா போச்சு.. எத்தனை வேலை இருக்கு? எப்படி பார்க்குறது? தள்ளி வச்சுருக்கலாம்”

“ம்மா..” என்று மிது அலற, வேதா புன்னகைத்தாள்.

“சரி சரி.. உன் ஆசையில ஏன் கட்டைய போடனும். சீக்கிரமே நடக்கட்டும். ஆனா நானே தனியா எல்லா வேலையும் பார்க்க முடியாது. ஒழுங்கா நீ வீட்டுல இருக்கனும். சொல்லிட்டேன்”

“ஒரு மணி நேரம் மட்டும் வெயிட் பண்ணுங்க. வேலை இருக்கு. அத முடிச்சுட்டு ஓடி வந்துடுறேன்” என்று சொல்லி கிளம்பிச் சென்றான்.

ஊருக்குள் அவர்களது சணலுக்கு என தனி மதிப்பு இருந்தது. அதனால் தொழில் நன்றாகவே நடந்தது. பக்கத்து மாநிலம் வரை போவோமா? என்ற பேச்சு வார்த்தை இப்போது தான் நடந்து கொண்டிருந்தது. சில பல ஏற்றுமதிகள் நடந்தாலும், பெரிய அளவில் செய்ய யோசித்துக் கொண்டிருந்தனர்.

நேராக மில்லுக்கு சென்ற மிதுனன், அன்று வர வேண்டிய மூலப்பொருட்களை எல்லாம் சரிபார்த்து முடித்து விட்டு, வீடு திரும்பி விட்டான்.

வந்ததும் அவனை அமர வைத்த சங்கரி, முதலில் பத்தரிக்கை எழுத வைத்தார்.

“வேதா.. உங்க பத்திரிக்கைய எடுத்துட்டு வா” என்றதும், அவள் எடுத்து வந்து கொடுத்து விட்டு மகளுக்கு உணவை ஊட்ட ஆரம்பித்து விட்டாள்.

அதை மாதிரியாக, வைத்து தங்களது பத்திரிக்கையை எழுதி முடித்தான் மிதுனன்.

“வாவ்.. அண்ணி.. மிது வெட்ஸ் ஜோ னு போட்டா நல்லா இருக்கும்ல?” என்று அவளை துணைக்கு அழைக்க, “அப்படி எல்லாம் போடக்கூடாது” என்று தடுத்தார் சங்கரி.

“போங்கமா.. இந்த திருச்செல்வன் மிதுனன் திருச்செல்வி ஜோவிதானு பார்க்க ரொம்ப பழைசா இருக்கு”

“நீங்க வேணும்னா உங்க ஃப்ரண்ட்ஸ்க்கு அடிக்கிற கார்ட்ல அப்படி அடிங்க. சொந்தகாரவங்களுக்கு வேணாம்” என்று வேதா அமைதியாக சொல்ல, “கரெக்ட்… அத தான் பண்ணனும். ஜோ கிட்ட பேசிக்கிறேன்” என்றான் அவன்.

“நாளைக்கு நாள் நல்லா இருக்காம். நாளைக்கே போய் முகூர்த்தபுடவை எடுக்கலாம்னு சம்பந்தி சொல்லிட்டாங்க. அப்ப தான சட்டை எல்லாம் தைச்சு போட சரியா இருக்கும்? நாளைக்கு நாமலும் போகனும்”

“ஓகே மா.”

“உன் புருஷன் வர மாட்டான். நாமலே வாங்கிட்டு வருவோம்” என்றதும், முகம் மாறாமல் காத்தபடி தலையாட்டினாள் வேதா.

“அப்புறம் மண்டபம் ஏற்கனவே பேசியாச்சு. அட்வான்ஸ் கொடுக்கனும். இப்ப கிளம்பலாமா? அப்படியே மாலையும் சொல்லனும். அப்புறம்..” என்று ஆரம்பித்தவர் வரிசையாய் அடுக்க, அனைத்தையும் எழுதி வைத்துக் கொண்டான் மிதுனன்.

“இத ஏன் எழுதிட்டு இருக்க?”

“செக் லிஸ்ட்.. நீங்க சொல்லுங்க. பின்னாடி இத வச்சு எல்லாம் முடிஞ்சதானு பார்க்கலாம்”

சங்கரி சிரித்து விட்டு, அடுத்ததை சொல்ல ஆரம்பித்தார்.

எல்லாம் எழுதி முடித்தவன், “சரி இப்ப நேரா போய் பணத்த எடுத்து மண்டபத்துக்கு கொடுத்துட்டு, அப்படியே பத்தரிக்கையும் அடிக்க கொடுத்துட்டு வரலாம். இடையில சின்ன சின்ன வேலைய முடிச்சுக்கலாம்” என்று கூறி எழுந்தான்.

“பாட்டி நானு.. சித்தப்பா நானு” என்று ஓடி வந்தாள் சஷி.

“வேணாம்.. இப்ப தான சாப்பிட்ட..” என்று வேதா தடுக்க, “வரட்டும் அண்ணி. ஜாலியா போயிட்டு வர்ரோம்” என்றான் மிது.

தடுக்காமல் தலையாட்டியவள், அவர்களை அனுப்பி வைத்தாள்.

இனி வேலை குறைவு தான். மதிய உணவு என்றால், சமருக்கு தான் சமைக்க வேண்டும். அவன் காலையிலேயே வெளியே சாப்பிட போவதாகச் சொல்லி விட்டான். இந்த மூவரும் நிச்சயமாய் ஊரை சுற்றி விட்டு, வெளியே சாப்பிட்டு, அவளுக்கும் வாங்கி வந்து விடுவார்கள்.

அதனால் சமைக்கும் வேலையை விட்டு விட்டு, வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

அவள் திருமணம் செய்து வரும் போது, வெறும் மூன்றே அறை கொண்ட வீடாக தான் கட்டியிருந்தனர். அவர்களது திருமணத்தின் போது வந்த சொந்தபந்தங்கள் செய்த அலும்பில், சமர் கடுப்பாகி விட்டான்.

அதனால் மொட்டை மாடியை மீண்டும் வீடாக மாற்றினான். அதில் இரண்டு பெரிய அறைகள் கட்டபட்டது. அதில் சமரும் மிதுனனும் தங்கிக் கொள்ள, படியேற முடியாது என்று சங்கரி கீழேயே இருந்து விட்டார்.

மிதுனன் அறையை மட்டும் விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றையும் சுத்தம் செய்தாள் வேதா.

தொலைகாட்சியில் பாடல் ஒன்றை ஒலிக்க விட்டிருந்தாள். மிதுனன் வாங்கி வைத்த ஸ்பீக்கரில், பாடல் வீடு முழுவதும் எதிரொலிக்க, அவளுக்கு அதை கேட்ட படி வேலை செய்வது பிடிக்கும்.

வீட்டில் யாருமே இல்லை என்றால் மட்டுமே இதை செய்வாள். இன்றும் பாடலை சேர்ந்து பாடியபடி வீட்டை சுத்தம் செய்து முடித்து, மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு அமர, அவளின் தாயிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்கமா”

“என்னமா பண்ணுற? சாப்பிட்டியா?”

“இல்லமா.. எல்லாரும் வெளிய போயிருக்காங்க. சமைக்கல. அத்தை எனக்கும் வாங்கிட்டு வருவாங்க”

“நீ மட்டும் வீட்டுலயே இருக்கியாமா?”

சட்டென ஒரு நொடி அமைதியானவள், “அப்பா என்னமா பண்ணுறாரு? நேத்து இருமிட்டே இருந்தாரே?” என்று என்று பேச்சை மாற்றினாள்.

மகளை பற்றித்தெரிந்த தாயும், அவள் போக்கிலேயே பேச ஆரம்பித்தார். வேலைகள் முடிந்து விட்டதால், சாவகாசமாக அமர்ந்து தாய் சொல்லும் கதையை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நேரம் பறந்து போயிருக்க, வெளியே சென்றவர்கள் வந்து விட்டனர்.

“இந்தாங்க அண்ணி..” என்று வந்ததுமே உணவு பார்சலை அவள் கையில் கொடுத்தான் மிதுனன்.

“உங்களுக்கு பிடிச்ச புரோட்டா வாங்கலாம்னு பார்த்தா, அம்மா விடல. மஸ்ரூம் பிரியாணி தான் வாங்கிட்டு வந்தேன்” என்றவன் கையில் இருந்த சஷியை காட்டி, “மேடம் அங்க ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டாச்சு” என்று போட்டுக் கொடுத்தான்.

“சித்தப்பா..” என்று சஷி கத்த, “இங்க இருக்கத சாப்பிட ப்ளான் போடுறா. கொடுக்காதீங்க.” என்று விட்டு அவளையும் இறக்கி விட்டு சென்றான்.

“அப்ப இங்க இருக்க ஐஸ்கிரீம் நாளைக்கு தான்” என்று முடித்து விட்டு, உணவை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள் வேதா.

சஷி முகத்தை தூக்கி வைத்திருக்க, அவளுக்கும் ஊட்டி விட ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் மறந்து, சஷிகா பைக்கில் சுற்றிய கதையை பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கு மிதுனனுக்கு முன்னால் பைக்கில் அமர்ந்து செல்வதென்றால் அவ்வளவு இஷ்டம். அதனால் அடிக்கடி அழைத்துச் செல்வான்.

மகளோடு பொழுதை கழித்து அவளை தூங்க வைத்து விட்டு, மாமியாரிடம் வந்தாள்.

அவர் பத்திரிக்கை அடிக்க கொடுத்தது, மண்டபத்திற்கு பணம் கொடுத்தது எல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.

இருவருமாய் சேர்ந்து மிதுனனின் திருமணத்தை திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு சொந்தமான மணவாளனோ, அறையில் அமர்ந்து கைபேசியில் மணப்பெண்ணுடன் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

“அப்படியா? அப்ப நாம நாளைக்கு சேரி எடுத்துட்டு, ஃப்ரண்ட்ஸ்க்கு இன்விடேஷன் அடிக்க கொடுக்கலாம்” என்று ஜோவிதா சொல்ல, “அப்படியே ஒரு டேட்டிங்?” என்று இழுத்தான் மிதுனன்.

“ஏன்? ரெண்டு வாரம் கழிச்சு கல்யாணம் பண்ணிட்டா எப்பவும் கூட தான இருக்க போறேன்? அப்ப வெளிய போயிக்கலாமே?”

“அடியே.. அதுவும் இதுவும் ஒன்னா?”

“இல்லையா?”

“உன் கூட ஒரு ரொமான்ஸ் பண்ண முடியல. கல்யாணம் முடியட்டும் பேசிக்கிறேன்.”

“இதையே தான இப்ப நானும் சொன்னேன்?” என்று அவள் அப்பாவியாக கேட்க, மிதுனன் தலையில் அடிக்க, ஜோவிதா சிரித்து விட்டாள்.

தொடரும்.

Leave a Reply