அத்தியாயம் 3

Loading

சஷிகாவை தூங்க வைத்து விட்டு, தானும் அருகே படுத்துக் கொண்டாள் வேதா.

அடுத்த குழந்தைக்கு அவசரம் இல்லாததால், பல கணக்குகள். அதன் விளைவாக சமரும் மறுபக்கம் படுத்து உறங்கி இருந்தான்.

வேதா வேலை அலுப்பில் படுத்திருந்தாலும், உறக்கம் வரவில்லை. மிதுனனின் திருமண வேலைகள் பற்றிய சிந்தனை ஓடியது. கூடவே அவளுக்கு நடந்த திருமணம் பற்றிய எண்ணங்களும் வந்தது.

வேதாஸ்ரீயின் குடும்பம், அவ்வளவு பணவசதி படைத்தவர்கள் அல்ல. அவளின் தந்தை முருகன், ஒரு அலுவலகத்தில் குமாஸ்தா வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தார். தாய் மல்லி வீட்டில் இருப்பவர். ஆனால் ஒரே பெண் என்பதால், அவர்களது செலவு மிகவும் குறைவு தான்.

மகளுக்கென சேர்த்தும் வைத்திருந்தனர். அந்த தைரியத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். சமரை பிடித்துப்போக, பெண் பார்க்க சம்மதித்தனர்.

அப்போதே, நிச்சயதார்த்தம் எதுவும் வேண்டாம். நேரடியாக‌ திருமணம் செய்யலாம் என்ற சமரின் முடிவில், எல்லோருக்கும் சம்மதமாக இருந்தது.

சமரின் தந்தையின் உடல்நிலையும் ஒரு காரணம். அதனால் நேரடியாக திருமண வேலைகள் ஆரம்பித்தது.

என்ன தான் இழுத்து பிடித்து செலவு செய்தாலும், திருமண செலவுகள் திட்டங்களை தாண்டியது.

கடனும் வாங்க வேண்டி வந்தது. சபையில் மகளுக்கு போடுவதாக சொன்ன நகை குறையவும் செய்தது. அதை உடனே சம்பந்தியிடம் சொல்லி விட்டார்கள்.

“இதுல என்ன இருக்கு? உங்க மகளுக்கு போடுறது தான? அது உங்க இஷ்டம். போடலனாலும் போட்டாலும் நாங்க அத பெருசா எடுத்துக்க மாட்டோம். கல்யாண வேலைய பாருங்க” என்று முடித்து விட்டார் சங்கரி.

பெற்றவர்களுக்கு சற்று நிம்மதி வந்தாலும், சொன்னதை செய்யாதது அவர்களை உறுத்த தான் செய்தது.

ஆனாலும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மறுவீடு வந்து சென்றனர் மணமக்கள்.

வேதாவும் சமரும் வாழவும் ஆரம்பித்து இருந்தார்கள். சமர் அதிகம் பேசவில்லை என்றாலும், வேதாவிடம் அவன் கோபப்பட்டோ முகத்தை காட்டியோ காயப்படுத்தவுமில்லை.

புதுமணத்தம்பதிக்குண்டான நெருக்கம் தவிர, அதீத கொஞ்சல்கள் இல்லாமல் நாட்கள் நகர்ந்தது.

சங்கரியும் மருமகளை நன்றாகவே கவனித்தார். திருமண வாழ்க்கைக்கு பழகிக் கொண்டிருந்தாள் வேதா.

அவர்களது திருமணம் முடிந்து இரண்டு வாரம் கடந்திருக்க, அன்று முருகன் மல்லியின் திருமண நாள் வந்தது.

அதற்காக அங்கு போக ஆசைப்பட்டாள் வேதா. விசயத்தை சங்கரியிடம் சொல்ல, “போயிட்டு வாங்க. நல்ல நாள்ல ஆசிர்வாதம் வாங்குறது நல்லது தான்” என்றார்.

“எனக்கு வேலை இருக்கு. நீ மட்டும் போயிட்டு வா” என்று சமர் சொல்லி விட, வேதாவின் முகம் சுருங்கி விட்டது.

அதை பார்த்த சங்கரிக்கு பொறுக்கவில்லை.

“என்னடா நினைச்சுட்டு இருக்க? கல்யாணம் முடிஞ்சு முதல் தடவ பிறந்த வீட்டுக்கு போறா. தனியா போக சொல்லுற? உன் வேலைய மிது கிட்ட கொடுத்துட்டு, ஒழுங்கா அவள கூட்டிட்டு போ” என்று அதட்டியிருந்தார்.

கோபம் வந்தாலும், சமரால் தாயை மறுக்க முடியவில்லை.

காரணமில்லாமல் சங்கரி அதட்டவும் மாட்டார்.

“எனக்கு வேலை இருக்குமா.. வேணும்னா இவ முன்னாடி போகட்டும். நான் கொஞ்ச நேரம் கழிச்சு போறேன்.”

சொல்லி விட்டு கிளம்பி விட்டவனை பார்த்து, சங்கரி தலையில் அடித்துக் கொண்டார்.

“ஏன் தான் இப்படி வந்து பிறந்துருக்கானோ?” என்று சலிக்க, வேதாவின் முகம் அமைதியாக இருந்தது.

“என் மாமியார் இப்படித்தான் வேதா. பெருசா யாரையும் மதிக்க மாட்டாங்க. ரொம்ப டெரர்ரா மூஞ்சிய வச்சுட்டு இருப்பாங்க. ஆனா அப்ப அவங்க பட்ட கஷ்டம் அப்படி. புருஷன் இல்லாம புள்ளையோட நின்னப்போ, யாருமே உதவிக்கு வரல. அவங்களா அவங்கள பார்த்துட்டு அவ்வளவு போராடி வாழ்ந்துருக்காங்க. அதுனால் இயல்பாவே இறுகிப்போய் தான் இருப்பாங்க. இவனுக்கு தான் என்ன வந்துச்சோ? அவங்க குணம் அப்படியே வந்து சேர்ந்துடுச்சு.”

சங்கரி புலம்பி தள்ளி விட்டு, மருமகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

வேதாவை தனியாக பிறந்த வீட்டுக்கு அனுப்ப அவருக்கு விருப்பமில்லை. பெண்ணை பெறவில்லை என்றாலும், அவரும் பெண் தானே.

திருமணமான இரண்டு வாரத்தில், மகள் தனியாய் வந்து நின்றால் பெற்றவர்களின் மனம் எப்படி இருக்கும்? அதுவும் திருமண நாள் வேறு.

மருமகளை தனியாய் அனுப்பி அவர்களை கலவர படுத்த பிடிக்காமல், தானும் கிளம்பி விட்டார்.

அங்கு சென்றதும், மருமகன் வராதது பயத்தை கொடுத்தாலும், மாமியார் கூடவே வந்தது சற்று ஆறுதலை கொடுத்தது வேதாவின் பெற்றோருக்கு.

“அவனுக்கு வேலை. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்” என்று கூறி சமாளித்து விட்டார்.

உணவுக்கு மருமகன் வருவான் என்றதும், உடனே தடபுடலாக விருந்து தயாரானது. வேதாவும் சந்தோசமாக தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

சொன்ன சொல் மாறாமல் சமரும் வந்து சேர்ந்தான். நல விசாரிப்பு, பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்து, மதிய உணவும் முடிந்தது.

திருப்தியாய் சாப்பிட்டு விட்டு சமரும் முருகனும் வெளியே இருக்க, மல்லி மகளுக்கு பலகாரங்களை எடுத்து வைத்தார்.

உடனே கிளம்ப வேண்டும் என்று துடித்த சமரை பிடித்து வைத்து விட்டு, அவசரமாக பலகாரங்களை அடிக்கிக் கொண்டிருந்தனர்.

வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முருகன், அவசரப்பட்டு உளறி இருந்தார்.

மகளுக்கு போட வேண்டிய பாக்கி நகைகளை இன்னும் இரண்டு மாதத்தில் போட்டு விடுவதாகவும், அதற்கு மருமகன் தவறாய் நினைக்க வேண்டாம் என்றும் கேட்டு வைத்தார்.

சமர் அதற்கே கோபத்தை அடக்கிக் கொண்டிருக்க, இதை மனதில் வைத்து மகளை எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னதும், வெகுண்டு விட்டான் மருமகன்.

“என்னை பார்த்தா எப்படித்தெரியுது உங்களுக்கு?” என்று எழுந்து நின்று அவன் போட்ட சத்தத்தில், மூன்று பெண்களும் அடித்துப்பிடித்து ஓடி வந்தனர்.

“உங்க மக நகைய வச்சு தான் நான் வாழுறனா? இல்ல இந்த நகைக்காக தான் உங்க மகள நான் கட்டுனனா? என்னை பார்த்தா வரதட்சணை கேட்டு பொண்டாட்டிய கொடுமை படுத்துறவன் மாதிரியா தெரியுது?”

சமர் போக்கில் கத்த, “டேய்.. அமைதியா பேசு.. இப்ப ஏன் கத்துற?” என்று சங்கரி தான் அதட்டினார்.

“இவரு என்ன பேச்சு பேசுறாரு பாருங்கமா.. இவரு நகை போடலனா, நான் இவரோட மகள கொடுமை படுத்துவேங்குற மாதிரி பேசுறாரு. அப்படி பயமா இருந்தா, உங்க மகள நீங்களே வச்சுக்கோங்க” என்று வார்த்தையை விட்டான்.

அது வரை கணவனின் திடீர் கோபத்தில் பயந்து நின்றிருந்த வேதாவிற்கு, சட்டென கண்கலங்கி கண்ணீர் வந்துவிட்டது.

அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன பேச்சு இது? வாய்க்கு வந்தத பேசாத. முதல்ல கிளம்பு நீ”

“நீங்க சொன்னீங்கனு வந்தேன்ல? எனக்கு தேவை தான்” என்றவன் வேகமாக வெளியேற, மருமகள் பக்கம் திரும்பினார்.

“நீ என்ன நின்னுட்டு இருக்க? கிளம்பிட்டான்ல? போ” என்று மகனோடு அனுப்பி வைத்தார்.

பெற்றவர்களை பார்த்து விட்டு தலையசைப்போடு கிளம்பியவள், கண்ணீரை துடைத்துக் கொண்டு காரில் ஏறி விட்டாள்.

சமர் உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அழுத மல்லியை சமாதானம் செய்தார் சங்கரி.

“அவன் அப்படித்தான். தொட்டதுக்கெல்லாம் கோபம் மூக்கு மேல வந்துடும். நீங்க வருத்தப்படாதீங்க”

“இப்படி சொல்லிட்டாரே” என்று இருவரும் கலங்கி நின்றனர்.

“அதுக்காக விட்டுட்டு போனானா? கூட்டிட்டு போயிட்டான்ல? அப்படி எல்லாம் எங்க வீட்டு மருமகள விட்டுர மாட்டோம். நான் இருக்கேன். கவலை படாதீங்க. நீங்க பலகாரம் வச்சீங்களே..‌ எடுத்து கொடுங்க. நான் கொண்டு போறேன்” என்று கூறி, அவர்களையும் தேற்றி விட்டு தான் சங்கரி கிளம்பியிருந்தார்.

காரில் சென்ற போது, சமர் அந்த திட்டு திட்டியிருந்தான். அத்தனைக்கும் வாயை மூடிக் கொண்டு, அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் இருந்தாள் வேதா.

வீடு வந்து சேர்ந்ததும், சங்கரியிடமும் சொல்லி விட்டான்.

“இனிமே அந்த வீட்டுக்கு என்னை போகச்சொல்லாதீங்க. அந்த வீட்டுல இருந்து சீரு நகைனு எதுவும் இங்க வரக்கூடாது. அப்படி வந்துச்சு…” என்றவன் அதன் பிறகு மூன்று நாட்களாக முறைத்துக் கொண்டு தான் சுற்றினான்.

வேதாவும், கணவனோடு வந்த முதல் பிணக்கில் பயந்து தான் போயிருந்தாள். நிறைய விட்டுக்கொடுத்து, அவனை மலையிறக்க வேண்டியிருந்தது.

ஆனால் அந்த வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக நின்று விட்டான். இத்தனைக்கும் வேதாவின் பெற்றோர்களும் வந்து மன்னிப்பு கேட்டு விட்டனர். அவன் மட்டும் மலையிறங்கவில்லை.

அதே போல் பொங்கல் தீபாவளி என்று சீர் கொண்டு வந்தாலும், முகத்துக்கு நேராக மறுத்தான்.

என்ன சொல்லியும் அவன் இறங்காமல் போக, சங்கரியும் விட்டுப்பிடிக்க சொல்லி விட்டார்.

கணவன் வராமல் தானும் செல்லாமல், உள்ளூரில் இருந்த பிறந்த வீடே வேதாவுக்கு அன்னியமானது.

சமர் வெளியே சுற்றும் பழக்கமில்லாதவன். அதனால் மனைவியை அழைத்துக் கொண்டு எங்கும் சென்றதில்லை. குடும்பமாக வெளியே சென்றால் தவிர, வேதா எங்கும் செல்வதில்லை.

முதலில் கணவனுக்கு பிடித்தது எல்லாம் பார்த்து பார்த்து செய்தாள். அதற்கு கொஞ்சமும் பயன் கிடைக்காமல் போக சோர்ந்தாள்.

‘நாம என்ன செஞ்சாலும் அவருக்கு நம்மல பத்தி கலையும் இல்ல. அக்கறையும் இல்ல’ என்று ஒரு நாள் மனம் தெளிவாக புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து மெனக்கெடுவதை குறைத்தாள். கடவுள் இறங்கி வருவாரா? இல்லையா? என்று தெரியாமல், பூஜை செய்து காலத்தை ஓட்டிய பெண்கள் போன்றவள் அல்ல வேதா.

பலனில்லை என்று தெரிந்ததும், நிறுத்தி விட்டாள். தனக்கு பிடித்ததை, அவனுக்காக தியாகம் செய்வதை குறைத்தாள்.

இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டாலும், சலிப்பு தான் வந்தது. சங்கரி அவளை பார்த்துக் கொள்வதால், சற்று நிம்மதியாக தான் இருந்தது.

மாமனார் இறந்து போக, அதில் சங்கரி ஓய்ந்து போனார். அந்நேரம் வேதா கருவுற்றாள். வீட்டு வேலைகளை தனியாய் பார்த்து அவள் ஓய்ந்து போவதை, தாமதமாகத்தான் கவனித்தார் சங்கரி.

கணவனை இழந்த சங்கரிக்கும், முன் போல எல்லாம் செய்ய முடிவது இல்லை. அதனால் மருமகளை தாய் வீட்டுக்கு அனுப்ப நினைத்தார்.

சமர் வானுக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக பேசினான்.

“அங்கலாம் போக கூடாது.”

“அப்ப நீ அவள பார்க்குறியா?”

சங்கரி கடுப்பாக கேட்க, சமர் முறைத்தான்.

“இவளுக்கு இப்ப என்ன பிரச்சனை? நல்லா தான இருக்கா?” என்று கேட்டவனை பார்த்து, சங்கரிக்கே வெறுப்பாகி விட்டது.

“அப்படியா? காலையில சாப்பிட முடியாம வாந்தி எடுத்தா. நீ அவளுக்கு சுடு தண்ணி வச்சு ஜூஸ் போட்டு கொடுப்பியா? மதியம் எதையாவது சாப்பிட்டா, அப்படியே தூங்காம கொஞ்ச நேரம் நடக்கனும். கூட்டிட்டு போவியா? வாய்க்கு ருசியா பக்குவமா சமைச்சு கொடுப்பியா? நேர நேரத்துக்கு மாத்திரை போடனும். எடுத்து கொடுப்பியா? இப்பவே அஞ்சு மாசம் ஆச்சு. புள்ளையோட அவளால ராத்திரி ஒழுங்கா தூங்கவும் முடியாது. நீ முழிச்சுருந்து அவளுக்கு என்ன செய்யுதுனு கேட்பியா? அவ சொன்னாலும் அதுக்கு உன்னால மருந்து சொல்ல முடியுமா?”

சங்கரி அடுக்கிக் கொண்டே போக, கேட்டிருந்த வேதாவிற்கு கண்கலங்கி விட்டது. ஆனாலும் அடக்கியபடி நின்றிருந்தாள். மனநிலை வேறு நொடிக்கொரு முறை மாறுவதால், அவளால் எதுவும் பேச முடிவதில்லை.

இத்தனையும் கேட்ட சமருக்கு, பதில் பேச முடியவில்லை. ஆனால் மனைவியை முறைத்தான்.

அவள் போக மாட்டேன் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளது கஷ்டங்களை விட, அவனது வைராக்கியமும் கௌரவமும் அவனுக்கு பெரிதாய் இருந்தது.

ஆனால் வேதா சும்மாவே நின்று விட, கோபம் அவள் மீது திரும்பியது.

தாயிடம் பதில் பேச முடியாமல் சென்றவன், தனிமையில் வேதாவிடம் தான் பாய்ந்தான்.

“அப்ப உனக்கும் போகனும்ல? என்னை மதிக்காத இடத்துக்கு நீ போகனும்ல?” என்று கேட்டவனை, என்ன செய்யவென்று வேதாவிற்கு புரியவில்லை.

எதோ வெளி ஆட்கள் அவனை அவமானப் படுத்தியும், அவள் அவர்களோடு உறவு கொண்டாட நினைப்பது போல் பேசிக் கொண்டிருந்தான்.

அவர்கள் அவளை பெற்றவர்கள். போற்றி வளர்த்தவர்கள். அவள் மீது உயிரையே வைத்திருப்பவர்கள். அவளுக்காக தான் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

தன் ஒரு வார்த்தைக்காக, அவள் அவர்களை ஒதுக்கி வைத்தே தீர வேண்டும் என்று எதிர்பார்க்கும் கணவனை என்ன சொல்வது?

அசையாமல் நின்றாள்.

அவளது அமைதியில் கோபம் இன்னும் ஏறியது சமருக்கு. திருமணமாகி விட்டால், அவள் அவனுக்கு முழு சொந்தம் போல் நினைத்துக் கொண்டான். அவனுக்கு பிடிக்காதது அவளுக்கும் பிடிக்கக் கூடாது. பெற்ற உறவையும் விட வேண்டும் என்று, சாதாரண மனிதனை தாண்டி நடந்து கொண்டான்.

ஆனால், இப்போது விட்டால் எப்போதுமே தனக்கு பிறந்த வீடு இல்லாமல் போகும் என்பதால், வேதா மௌனம் சாதித்தாள்.

“சரி போ.. ஆனா அங்க இருந்துட்டு என் கூட பேசாத” என்று விட்டுச் சென்றான்.

வேதா விரக்தியாய் சிரித்தாள்.

‘இங்க இருக்கும் போது மட்டும் அப்படியே பேசி தள்ளிடுவாரு பாரு’ என்று தான் நினைத்தாள்.

ஒரு வாரம் பிறந்த வீடு சென்றவள், மறந்து கூட கணவனுக்கு அழைத்து பேச வில்லை. சங்கரியிடம் பேசுவதோடு நிறுத்திக் கொண்டாள். பேசினால் நிச்சயம் மனம் நோக வைப்பான். நோகும் மனம் அங்கு போனதும் நோகட்டும். இங்கே இருக்கும் வரை நிம்மதியை சேமித்துக் கொள்வோம் என்று சேமித்து வைத்தாள்.

ஒரு வாரம் கழித்து வந்த மனைவியின் மீது, சமர் கடுங்கோபத்தில் இருந்தான். அவளில்லாமல் அத்தனை வேலைகளில் அவன் திணறியதும் ஒரு காரணம். பேசாதே என்ற உடன், பேசாமலே இருந்து விட்டது அடுத்த காரணம். தான் சொன்னதையும் மீறி, தன் கோபத்தையும் கடந்து சென்று தங்கியவள் மீது, கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.

ஆனால் அதைக் காட்டி என்ன செய்வது? வேதா தான் வாயை திறக்க மாட்டாளே.

பதிலுக்கு பதில் சண்டை போட்டால் தானே பேச முடியும்? சுவற்றிடம் பேசுவது போல், அவன் தனியாக தான் கத்த வேண்டும்.

ஒரு வழியாய் அவனாக எல்லாம் மறந்து சரியாக, சங்கரி அடுத்த வேலையை ஆரம்பித்தார்.

தொடரும்.

Leave a Reply