அத்தியாயம் 4
![]()
ஏழாம் மாதம் வளைகாப்பு.
நேரமில்லை, வேண்டாம், தேவையில்லை, வீண் செலவு என்று சமர் அடுக்கிய காரணங்கள் எல்லாம் சங்கரியிடம் செல்லுபடியாகவில்லை.
“சில விசயங்கள் இப்படினா இப்படித்தான். பண்ணனும்னா பண்ணி தான் ஆகனும். கல்யாணம்னு வந்தா தாலினு ஒன்னு கட்டுறது எவ்வளவு முக்கியமோ, அப்படித்தான் ஏழாம் மாசம் வளைகாப்பும். புருஷனா லட்சணமா வந்து நின்னா நில்லு. இல்ல ஊரே உன்னை திட்டுறதுக்கு வழி கொடுத்துட்டு, வேலை பின்னாடி ஓடு. அத பத்தி எனக்கு கவலை இல்ல. வளைகாப்பு வச்சே தீருவேன்” என்று தீவிரமாக மகனின் எதிர்ப்பை எதிர்த்தார் சங்கரி.
மீண்டும் அவன் மனைவியிடம் தான் பாய்ந்தான். அவளும் சுவர் போல் நின்று வைத்தாள்.
அவனது கோபத்தை மதிக்காமல், வளைகாப்பை நடத்தி மருமகளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டே ஓய்ந்தார் சங்கரி.
மீண்டும் மூன்று மாதங்கள். மனைவியை பார்க்காமல் இருந்தான். இம்முறை வேதா அவனிடம் பேச முயற்சித்தாள். எல்லாவற்றிற்கும் கோபத்தை காட்டினான். அவளும் பொறுத்துப் போனாள்.
எப்போதாவது நல்ல மனநிலையில் இருந்தால் மட்டும் தான், அவளது நலனை விசாரிப்பான். ஆனால், விசாரித்து விட்டானே.. நம் மீது பாசம் வந்து விட்டது என்று நம்பி ஏமாறும் அளவு, வேதா முட்டாள் அல்ல.
அவனது அக்கறையை கூட பார்த்து பயம் தான் வந்தது.
‘இப்படி பேசிட்டு திரும்ப எல்லாத்துக்கும் சேர்த்து சண்டை போடுவாரு.’ என்று உசாராகவே தான் இருந்தாள்.
சமரும், என்ன தான் மனைவி இல்லாமல் வேலை ஸ்தம்பித்தாலும், பிடிவாதமாக அவளை சென்று பார்க்கவே இல்லை.
வேதாவின் பெற்றோருக்கு தான் கவலை அதிகரித்தது.
“பொண்டாட்டிய வந்து பார்க்கலனாலும் பிள்ளைகாகவாது வரலாம்ல?” என்று கேட்டு நொந்தனர்.
‘வந்தா திரும்ப எதையாச்சும் இழுத்து, என்னை கூட்டிட்டு போயிடுவாரு. வராமலே இருக்கட்டும்’ என்று நினைத்த வேதா, வாயைத்திறக்கவில்லை.
அங்கு சங்கரியும், மகனை அனுப்பி வைக்க நிறைய முயற்சித்தார். மருமகளை காரணம் காட்டினார். பிறக்க போகும் பிள்ளையை காரணம் காட்டினார். எதற்கும் அசையவில்லை அவன்.
“அப்படி நான் தான் போகனுமா? என் மேல அக்கறை இருந்தா, அவளே இங்க வர வேண்டியது தான?” என்று கேட்டு வைப்பான்.
“டேய் அவ புள்ளைதாச்சிடா.. அவள பார்க்க நாம தான் போகனும். அவளை அலைய சொல்லுறியா?”
“அலையவே வேணாம். மொத்தமா இங்க வந்து தங்க தான் சொல்லுறேன். கூட்டிட்டு வந்துடுங்க”
சங்கரி சமரை முறைக்க, “ம்மா.. இவன் ஒரு லூசுமா.. இவன் நினைச்சது தான் நடக்கனும்னு ஹெட் வெயிட்டோட சுத்துவான். அண்ணி இப்ப அவங்க அம்மா சமைச்சத சாப்பிட்டு, நல்லா தூங்கி, நிம்மதியா இருப்பாங்க. அது இவனுக்கு பொறுக்கல.” என்றான் மிதுனன்.
“உன் வேலைய மட்டும் பாரு” என்று சமர் அவனை கடிய, “பார்ரா..! உண்மைய சொன்னா கோபம் வருதா?” என்று நக்கலடித்தான்.
“நீயும் ஏன்டா?” என்று சங்கரி சலிக்க, “ம்மா.. நான் உண்மைய தான் சொல்லுறேன். இவன் அண்ணிய மிஸ் பண்ணிருந்தா, உடனே கிளம்பி போயிருப்பான். இப்படி நாம சொல்லுற அளவுக்கு இருந்துருக்காது. அங்க அவங்க நிம்மதியா இருக்கது பொறுக்காம, சான்ஸ் கிடைச்சதுனு கூட்டிட்டு வர சொல்லுறான். அப்படி எதுவும் பண்ணாதீங்க.” என்று முடித்தான்.
சமர் அவனையும் சங்கரியையும் முறைத்து விட்டு, வேகமாக சென்று விட்டான்.
நாட்கள் பறந்திருக்க, வேதா பேற்று வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
சங்கரி இரண்டு மகன்களுக்கும் விசயத்தை சொல்லி விட்டு, மருத்துவமனைக்கு ஓடினார்.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரலாம் என்று கணவனின் கையெழுத்து கேட்க, சமர் தாமதமாக வந்து சேர்ந்தான்.
கையெழுத்து போட்டவன் காதில், மனைவி வலியில் துடிக்கும் சத்தம் கேட்டது.
ஒரு நொடி பயந்தே போனான். அவளது குரலே சத்தமாக கேட்காது. ஆனால் இப்போது கத்துகிறாளே?
முதல் முறையாக அப்போது தான் பயந்தான் அவன். ஆனால் சற்று நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல், குழந்தை பிறந்து விட்டது.
சஷிகா பிறந்ததும் எல்லாம் சுமூகமானது. மீண்டும் வேதாவை அவளது பெற்றோர்கள் அவர்கள் வீட்டுக்கே அழைத்துச் செல்லும் வரை.
பிள்ளையோடு இனி தங்களது வீட்டுக்கு தான் வருவாள் என்று சமர் நினைக்க, வேதா பிறந்த வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தை தேடிக் கொண்டு சென்றது.
மகளையும் மனைவியையும் பிரித்து விட்டதாக கோபம் தான் வந்தது. சங்கரி அப்போதும் விடவில்லை.
மூன்று மாதங்களுக்கு பதிலாக, ஐந்து மாதம் மருமகளை அங்கேயே இருக்க விட்டார்.
வேதாவின் பெற்றோருக்கு தான் பதட்டம்.
“இப்படியே இருந்தா, மாப்பிள்ளை கோச்சுக்க போறாரு சம்பந்தி” என்று மல்லி பதறினார்.
“அவன் கோச்சுக்குவான்னா? அவனா பச்ச புள்ளைய பார்ப்பான்?”
“ஏற்கனவே உங்க மகள நீங்களே வச்சுக்கோங்கனு எல்லாம் சொல்லி.. எதுக்கும் ஒரு வார்த்தை கேளுங்க”
“அவனே கேட்கட்டும்” என்று விட்டார் சங்கரி.
கடைசியாக சமர் தான் மலையிறங்க வேண்டியிருந்தது.
மனைவியும் மகளும் வேண்டும் என்றதும், ஒரு வழியாக தாயிடம் அவளை அழைத்து வருவதை பற்றி விசாரித்தான்.
“அஞ்சாம் மாசம் இப்ப தான ஆரம்பிச்சுருக்கு? கூப்பிடலாம்” என்றார் அவர் பட்டும் படாமல்.
“இன்னும் எவ்வளவு நாள் தான் அங்கயே இருப்பா? ஒழுங்கா கூட்டிட்டு வாங்க”
“கூப்பிட நீயும் தான் வரனும்”
“நான் வர மாட்டேன். ஆனா அவள கூட்டிட்டு வர்ரீங்க” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டான்.
சங்கரி அமைதியாக இருக்க, நச்சரிக்க ஆரம்பித்தான்.
வேறு வழி இல்லாமல், சங்கரியே நல்ல நாளாக பார்த்து மருமகளை அழைத்து வந்தார்.
அதன் பின் மனைவியின் மீது கோபமும், மகளின் மீது பாசமுமாக நேரம் நன்றாக தான் சென்றது சமருக்கு.
இரவு சஷிகா தூங்காமல் விழித்துக் கிடந்தால், வேதாவும் அவளோடு அமர்ந்திருப்பாள். சமர் நன்றாக தூங்கி விடுவான்.
காலையில் மனைவியிடம், அவனது வேலைகளை வாங்கிக் கொள்வான். அவள் சோர்ந்திருப்பது அவன் கண்ணுக்கு தெரியவே தெரியாது.
மகளையும் சமாளித்து, கணவனுக்கும் தேவையானதை செய்து ஓய்ந்து போவாள்.
சமையல் வேலைகளை சங்கரி பார்த்துக் கொள்வதால், ஓரளவு சமாளிக்க முடிந்தது.
காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இப்போது தான் சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் கூட சமருக்கு வேதாவின் பெற்றோர் என்றால் ஆகாது தான்.
அவர்களை மொத்தமாய் ஒதுக்கி விட துடித்தான். அப்படி ஒன்றும் அவர்கள் பெரிய தவறு எதுவும் செய்யாததால், வேதாவுக்கு இந்த விசயத்தில் கடுப்பு தான்.
வெளியே சொல்லி சண்டை போட்டாலும், அவன் மதிக்கப்போவதில்லை என்பதால் வாயை மூடி இருந்து விட்டாள்.
*.*.*.*.*.*.*.*.*.
அடுத்த நாள் குடும்பமாக திருமணத்திற்கான உடைகளை எடுக்க கிளம்பினர். சமர் மட்டும் இல்லை.
மிதுனன் காரை ஓட்ட, அவனருகே சஷிகா அமர்ந்து கொண்டாள்.
ஜவுளிக்கடையில் நுழைந்து முதலில் முகூர்த்த புடவையை தேடினார்கள். ஜோவிதாவும் மிதுனனும் அதை பார்க்க, சங்கரியும் சாவித்ரியும் மற்ற புடவைகளை பார்த்தனர்.
வேதா தன் மகளுக்கு உடை எடுக்க சென்று விட்டாள்.
ஆளுக்கொரு திசையில் பிரிந்து வேண்டியதை எடுத்து முடித்த போது, நேரம் பறந்திருந்தது.
மதிய உணவை எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டு விட்டு, அவரவர் வாங்கியதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.
சமருக்கு வாங்கியதை காட்ட, அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
திருமண வேலைகள் அதன் பிறகு நிற்காமல் சென்றது. மிதுனனும் தன் வேலைகளை ஒதுக்கி விட்டு, சங்கரிக்கு உதவியாக இருந்தான்.
சமர் தான் வழக்கம் போல் எதிலும் ஒட்டவில்லை.
வேலைகள் முடிந்து திருமண நாளும் வந்தது.
காலையில் எழுந்து, குடும்ப சகிதமாக வேதா, சஷிகா, சமர் மூவரும் கிளம்பியிருந்தனர்.
திருமணம் முடியும் வரை, வேதாவுக்கு வேலை ஓய்வதாக இல்லை. ஆனால் அவ்வப்போது மணமக்களுக்கு வேண்டியதை கவனித்தாள்.
அவர்களது திருமணத்தில் அவளை கவனிக்க தான் யாரும் இல்லை. அந்த குறையை ஏன் இவர்களுக்கு வைக்க வேண்டும்?
அதனால் நன்றாகவே கவனித்துக் கொண்டாள்.
அவளது பெற்றோர்களும், இயல்பாய் தங்களை அந்த திருமணத்திற்குள் பொருத்திக் கொண்டனர்.
புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்ட சமர், பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டான்.
வீட்டினரை தான் அவன் பெரிதாய் மதிப்பதில்லை. வெளி ஆட்களை கவனிக்கும் முறை அவனுக்கு நன்றாகவே வரும்.
இல்லாவிட்டால் தொழிலை எப்படி நடத்துவான்?
பந்தியை அவன் கவனித்த கவனிப்பில், அவனை போன்ற நல்லவன் இல்லை என்று ஊரே மெச்சிக் கொள்ளும். உண்மை தெரிந்தவர்களை தவிர.
திருமணம் முடிந்து முதலில் ஜோவிதாவின் வீட்டுக்கு செல்ல, வேதா அங்கு செல்லவில்லை.
“நம்ம வீட்டுல வேலை இருக்கு அத்தை. அத முடிச்சு வைக்கிறேன். அப்ப தான் வந்தாங்கனா எல்லாம் பண்ண சரியா இருக்கும்” என்று விட்டு, மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்ப, சமர் வந்து விட்டான்.
“நானும் வர்ரேன்” என்றவன், காரை எடுத்துக் கொண்டு வந்தான்.
காருக்குள் பெருத்த அமைதி.
பூரண அலங்காரத்தில் இருந்தாள் வேதா. அதுவே அவளுக்கு அசதியை கொடுத்தது. வேலை செய்த களைப்பில் அவள் கண்ணை மூடி சாய்ந்து அமர்ந்திருக்க, “உனக்கு ஃப்ரண்ட்ஸ் யாரும் இல்லையா?” என்று கேட்டான் சமர்.
திடீரென வந்த கேள்வியில் கண்ணை திறந்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பதில காணோம்?”
“என் ஃப்ரண்ட்ஸா? எதுக்கு?”
“நம்ம கல்யாணத்துல யாரும் வரலயே. அதான் கேட்டேன்”
‘அடேங்கப்பா.. நாலு வருசம் கழிச்சு ஞாபகம் வருதாக்கும்?’ என்று மனதில் நொடித்தவள், திரும்பிக் கொண்டாள்.
“இன்னும் பதில் வரல”
“இருந்தா வந்துருப்பாங்க. இல்ல வரல”
பட்டென வந்தது பதில். ஆனால் அதையும் கூட அமைதியாக அவள் சொன்ன பாங்கு, சமருக்கு கோபத்தை தூண்டக்கூட பயன்படவில்லை.
“ஏன்?”
வேதா புரியாமல் பார்க்க, “காலேஜ் படிச்ச தான? அங்க ஒருத்தர் கூடவா இல்ல?” என்று கேட்டான்.
“ஒருத்தி இருந்தா. அவ இப்ப தமிழ்நாட்டுல இல்ல. கல்யாணமாகிடுச்சு.”
பேச்சு முடிய வீடு வந்திருந்தது.
காரை நிறுத்தியதும் உடனே இறங்கியவள், உள்ளே சென்று விட்டாள்.
வீடு கலைந்து கிடைந்தது. சொந்த பந்தங்கள் செய்த வேலை. அதை சுத்தம் செய்வதை விட்டு, நேராக சாமி அறை பக்கம் சென்றாள்.
விளக்கை காலையிலேயே துடைத்து வைத்து விட்டாள். அதை இப்போது எடுத்து வைத்து எண்ணெய் ஊற்றி, ஜோவிதா ஏற்றுவதற்கு தயார் படுத்தி விட்டு, சமையலறைக்குள் சென்றாள்.
ஆரத்தி, பால் பழம் எல்லாம் தயாரித்து முடித்து விட்டுத் தான் ஹாலுக்கு வந்தாள்.
சமரை காணவில்லை. அறைக்குள் சென்றிருப்பான். வீடு கலைந்து கிடக்க, அதை சுத்தம் செய்ய கூட இல்லை. ஏன் உதவும் எண்ணம் கூட அவனுக்கு வரவில்லை.
பெருமூச்சு தான் வந்தது அவளுக்கு.
அவளாகவே சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கலைத்துப்போன உடல், ஓய்வு கேட்க ஆரம்பித்தது. அதையும் மீறி சுத்தம் செய்து முடித்தவளுக்கு, எதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது.
சமையலறையில் நுழைந்து, ஃப்ரிட்ஜில் இருந்த குளிர்பானத்தை குடித்துக் கொண்டிருக்க, சமர் வந்தான்.
“அவங்க வந்துட்டு இருக்காங்களாம்” என்றவன், அவள் கையிலிருந்ததை வாங்கி தானும் குடித்து விட்டு, கைபேசியை பார்த்தபடி ஓரமாக அமர்ந்து விட்டான்.
‘இப்படி ஒருத்தன பெத்ததுக்கு அத்தை சும்மா இருந்துருக்கலாம்’ என்று தன்னை மீறி நினைத்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
மணமக்கள் வந்து சேர, ஆரத்தி எடுத்து விளக்கேற்ற வைத்து என்று சடங்குகள் நீண்டது.
இரவு உணவிற்கு மிதுனன் வெளியே ஆர்டர் கொடுத்திருந்தான்.
சொந்த பந்தங்கள் எல்லாம் பாதிக்கும் மேல் கலைந்து போக, மற்றவர்கள் ஹாலில் படுக்கையை தயார் செய்து விட, முதலிரவு அறைக்குள் ஜோவிதாவை அனுப்பி வைத்த வேதா, தங்களது அறைக்குள் நுழைந்தாள்.
தொடரும்.
