அத்தியாயம் 5

Loading

வேதா அறைக்குள் வர, அங்கு கடுப்போடு அமர்ந்திருந்தான் சமர்.

ஏனென்றால் மெத்தையில் அவன் மகள் சஷிகா உறங்க, அவளுக்கடுத்ததாக இரண்டு குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

எல்லாரும் சொந்தகாரர்களின் பிள்ளைகள் தான். வேதா தான், சாப்பிட்டதும் உறங்கிய பிள்ளைகளை தூக்கி வந்து அறையில் படுக்க வைத்திருந்தாள்.

அந்த கடுப்பில் உள்ளே வந்த மனைவியை முறைத்தான். அவள் அவன் முகத்தை பார்த்தால் தானே?

“இந்த பிள்ளைங்க ஏன் இங்க தூங்குறாங்க?”

பொறுக்க மாட்டாமல் சமர் கேட்டு விட, “மூணு பேரும் விளையாடிட்டே தூங்கிட்டாங்க” என்றாள் வேதா.

“அம்மா ரூம்ல படுக்க வைக்க வேண்டியது தான?”

“அங்க இடமில்ல. உங்க பெரியம்மா, பாட்டி எல்லாரும் அங்க தான் தூங்குறாங்க”

“அப்ப நான் எங்க தூங்குறது?”

“கீழ பெட்ட விரிச்சு தூங்குங்க. நான் இவங்களோட கட்டில்ல படுத்துருக்கேன்” என்றவள், உடனே உடையோடு குளியறையில் புகுந்து விட்டாள்.

நின்றால் பேசி பேசி அவளை ஒரு வழி செய்து விடுவான்.

சேலையை களைந்து குளித்து முடித்து சுடிதாருக்கு மாறியதும் தான், வேதாவிற்கு மூச்சே சீராக வந்தது. அவ்வளவு அழுத்துப்போயிருந்தாள்.

இன்றைய நாள் கணக்கில் வராது. சோர்வை சொன்னாலும் சமர் மதிக்கவும் மாட்டான். அதனால் தான் பிள்ளைகளை தூக்கி வந்து போட்டு விட்டாள்.

நீண்ட நேரம் குளித்து முடித்து வெளியே வந்த போது, சமர் கீழே படுத்து கையால் முகத்தை மறைத்திருந்தான்.

வேதா சத்தமில்லாமல் சென்று, பிள்ளைகளோடு படுத்துக் கொண்டாள்.

சில நொடிகளில் தான் செய்த வேலையை நினைத்து சிரிப்பு வந்தாலும், சமர் பக்கம் திரும்பாமல் படுத்து உடனே தூங்கியும் விட்டாள்.

*.*.*.*.*.*.*.*.

முதலிரவு அறைக்குள் வந்த ஜோவிதாவை, அள்ளி மடியில் வைத்துக் கொண்டான் மிதுனன்.

“இந்த நாளுக்காக எவ்வளவு காத்திருப்பு?” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட, ஜோவிதாவிற்கு வெட்கம் தான் வந்தது.

அதை மறைத்துக் கொண்டு, “உங்க அண்ணி இந்த பால குடிச்சுட சொன்னாங்க” என்றாள்.

“எனக்கு வேணாம். நான் பால் குடிக்க மாட்டேன். நீ குடி”

“அதையும் சேர்த்து தான் சொன்னாங்க. குடிச்சே ஆகனுமாம். ஒழுங்கா குடிங்க”

“அண்ணி அப்படிலாம் சொல்லுற ஆள் இல்லையே?”

“சொன்னாங்க” என்று ஜோவிதா அழுத்திச் சொல்ல, மிதுனன் சந்தேகமாக பார்த்தான்.

ஜோவிதா பார்வையை திருப்பிக் கொள்ள, அவளது காதை கடித்திருந்தான்.

வலியில் அவள் அலற, “பொய்யா சொல்லுற? அண்ணி யாரையும் ஃபோர்ஸ் பண்ணுற ஆள் கிடையாது. பிடிக்கலனா ஒதுக்கிடுவாங்க” என்றான் அவன்.

“சரி சரி ஒத்துக்கிறேன். வேதா அக்கா ரொம்ப சாஃப்ட் தான். உங்க அண்ணன் தான் டெரர் போல?”

“உன்னை எதுவும் சொன்னனா?”

“என் கிட்ட பேசவே இல்லையே.. நான் கூட தம்பி பொண்டாட்டினு சங்கடப்பட்டுட்டு பேசல போலனு நினைச்சேன். ஆனா யாரு கிட்டயும் பேச மாட்டாங்க போல?”

“அவன் பேச ஆரம்பிச்சா நம்மலால கேட்க முடியாது. இங்க தான இருப்ப.. போகப்போக தெரிஞ்சுப்ப..”

“ரொம்ப டெரர்ரா?”

“அவன பத்தி இப்ப என்ன பேச்சு? நீ பால குடி.”

“உங்களுக்கு வேணாமா?”

“நீ குடி முதல்ல”

அவன் மடியில் அமர்ந்தபடி மொத்தமாய் குடித்திருந்தாள் ஜோவிதா.

டம்ளரை வைத்து விட்டு வாயைத் துடைக்கப்போக, மிதுனன் அவளது கையைப்பற்றினான்.

“நோ நோ.. சம்பிரதாயம் சாஸ்திரம் எல்லாம் கண்டிப்பா ஃபாலோவ் பண்ணனும்”

“வாட்?”

அவள் புரியாமல் பார்க்க, “நாம பால சேர் பண்ணனும்ல? அத சொன்னேன்” என்றான்.

“அதான் குடிச்சுட்டேனே?”

“இங்க இருக்கே” என்றவன் அவளது உதட்டில் மிச்சமாய் ஒட்டியிருந்த பாலை சுவைக்க, ஜோவிதா கண்களை மூடிக் கொண்டாள்.

*.*.*.*.*.*.

அடுத்த நாள் விடிந்தது. வேதா சொந்தங்களை கவனித்து எல்லோரையும் வழி அனுப்பி வைக்க ஆரம்பித்தாள்.

சமர் காலையில் சாப்பிட்டு விட்டு, உடனே வேலைக்கு சென்றிருந்தான்.

மிதுனனும் ஜோவிதாவும் தங்களது உலகத்தில் மிதக்க தான் நினைத்தனர். சுற்றியிருந்தவர்கள் விட்டால் தானே? இடையே புகுந்து, கேலி என்ற பெயரில் இடைஞ்சலாக அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவராய் கிளம்பி இடத்தை காலி செய்த பின், சங்கரி கூட ஓய்ந்து விட்டார்.

“போறவரை பாடா படுத்துறாங்க. ச்சை.. விசேச வீட்டுல வந்துட்டு இப்படியா?” என்று ஒரு மூச்சு புலம்பி தள்ளி விட்டார்.

அடுத்த நாள் வரை அதே பேச்சு ஓடினாலும், வேலைகள் குறைந்து போனது.

காலையில் வழக்கம் போல் வேதா சமைக்க ஆரம்பிக்க, ஜோவிதா வந்தாள்.

“ஹாய்டா தங்கம்” என்று அங்கு அமர்ந்திருந்த சஷிகாவின் தலையை வருடி விட்டு, வேதாவை பார்த்தாள்.

“என்னகா சமைக்கிறீங்க?”

“பொங்கல். உனக்கு பிடிக்குமா?”

“பிடிக்குமே. நல்லா இருக்கும்.”

“அப்ப சரி”

“நல்லா சமைப்பீங்களாக்கா? எனக்கு தான் சுத்தமா தெரியாது”

“பழகனும்னா சொல்லு. நான் சொல்லித் தர்ரேன்”

“டபுள் டன். உங்களுக்கு பீட்சா செய்ய தெரியுமா?”

“நேரடியா பீட்சா தான் வேணுமா? இந்த தோசை இட்லி எல்லாம் பழக மாட்டீங்களா?”

“அத எல்லாரும் தான செய்யுறாங்க”

“ஆனா உனக்கு தெரியாதே?”

ஜோவிதா ஒரு நொடி ஆச்சரியமாக பார்த்து விட்டு, “செம்மயா லாக் பண்ணுறீங்க. ஓகே இட்லி தோசையிலயே ஆரம்பிக்கலாம்” என்றாள்.

இருவரும் பேசியபடி அங்கேயே இருக்க, சமர் கிளம்பி வந்து விட்டான்.

அவனது உணர்ச்சியற்ற முகத்தை கேள்வியாக பார்த்த ஜோவிதா, “குட் மார்னிங் மாமா” என்றாள்.

முகத்தை உர்ரென வைத்திருந்தாலும், பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

“குட் மார்னிங்” என்றவன் சாப்பிட அமர்ந்தான்.

வேதா அவனுக்கு சாப்பாடை வைக்க, ஜோவிதா சோபாவில் சென்று அமர்ந்து விட்டாள்.

கீழே வந்த மிதுனனும் அவளருகே சென்று அமர்ந்து கொண்டான். சில நொடிகளில் அவர்களுக்கிடையே சிரிப்பு சத்தம் கேட்டது. மிதுனன் எதோ சொல்ல, வெட்கபட்ட ஜோவிதா அவனை அடிக்க ஆரம்பித்தான்.

அவன் சிரித்தபடி அடியை வாங்கிக் கொண்டு, அவளை மேலும் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.

இருவரும் தங்களது உலகில் மூழ்கி போயிருக்க, வேதா அதை கவனிக்காமல் சமையலை பார்த்தாள். ஆனால் சமருக்கு எரிச்சலாக வந்தது.

ஜோவிதா சத்தம் போட்டு சிரிப்பதும், கூட சேர்ந்து மிதுனன் சிரித்ததும் சமரின் எரிச்சலை அதிகப்படுத்தியது.

அந்த வீட்டில் இப்படி எல்லாம் சத்தம் வந்து அவன் கேட்டதே இல்லை. யாரும் பேசிக் கொள்ளவும் மாட்டார்கள். அதாவது அவனிடம் பேச மாட்டார்கள். அவன் இருக்கும் வரை, வீடு அமைதியாக தான் இருக்கும்.

மகளின் அழுகுரல் மட்டும் தான் அவ்வப்போது கேட்கும். அதுவே அவனுக்கு பிடிக்காது தான். இப்போது என்னவென்றால், நடு வீட்டில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.

‘இந்த பொண்ணு வேதா மாதிரி இல்ல போல இருக்கே.. அமைதியா இருக்காதா? அவன போட்டு அடிக்க வேற செய்யுது. இவனும் வாங்கிட்டு இருக்கான்’ என்று கடுப்போடு நினைத்தவன், மனைவியை பார்த்தான்.

அவள் உணர்ச்சியே இல்லாத முகத்தோடு வேலை செய்து கொண்டிருந்தாள்.

“வேதா..”

திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா எங்க?”

“உடம்பு வலினு தூங்குறாங்க”

“ப்ச்ச்”

சலித்துக் கொண்டான். அவரிருந்தால், இதை அதட்டி வைக்க சொல்லலாம் என்ற யோசனை தான். மற்றபடி அன்னைக்கு என்ன என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.

சாப்பிட்டு முடித்து எழுந்ததும், நேராக தம்பியிடம் சென்றான்

“வேலைக்கு கிளம்புற நினைப்பு இல்லையா?” என்று முறைத்துக் கொண்டே கேட்டான்.

சட்டென தடை பட்ட இனிமையான பொழுது, மிதுனனை கூட எரிச்சல் படுத்தி இருந்தது.

“உனக்கு வேலைனா நீ போ. என்னை ஏன் கேட்டுட்டு இருக்க நீ?”

“கிண்டலா? நான் உன் வேலைய தான் சொன்னேன்”

“நான் வரலனாலும் வேலை சரியா முடிஞ்சுடும். நீ கிளம்பு”

பட்டென பதில் சொல்ல, சமருக்கு சுர்ரென ஏறியது.

“நீ வராம? எப்படி மந்திரம் போடுவியா?”

“அப்படியே வச்சுக்க. என் வேலையில குறை கண்டா மட்டும் பேசு. சும்மா குதிக்காத. கல்யாணமான ரெண்டாவது நாளே வேலைக்கு போய் நின்னா, என்னை பார்த்து ஊரே சிரிக்கும். உன்னை மாதிரி என்னையும் நினைக்காத.”

பேச்சு சூடு பரக்க ஆரம்பிக்க, “மிது..” என்று வேதா அழைத்தாள்.

சட்டென திரும்பிப் பார்த்தான்.

“பொங்கல் சூடா இருக்கு. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க” என்று கூற, அண்ணனை முறைத்து விட்டு உடனே எழுந்தான்.

“அம்மா எங்க அண்ணி? இன்னுமா தூங்குறாங்க?”

“உடம்பெல்லாம் வலினு டீ குடிச்சுட்டு திரும்ப படுத்துட்டாங்க”

“ஏன்? என்னாச்சு?”

“கல்யாண வேலை அலைச்சல். தூங்கி எந்திரிக்கட்டும்.”

“அத்தைய சாப்பிட சொல்லலாம்ல?” என்று ஜோவிதா கேட்க, “வேணாம். பசிச்சா எந்திரிச்சு வருவாங்க” என்று தடுத்து விட்டாள் வேதா.

மூவரும் பேசிக் கொள்ள, அங்கு நின்றிருந்த சமருக்கு கோபம் தான் வந்தது.

அவனை ஒதுக்கி விட்டார்களே? கோபத்தோடு விருட்டென கிளம்பி விட்டான்.

‘வேலை மட்டும் எதாவது நடக்காம இருக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்’ என்ற வன்மத்துடனே தான் சென்றான்.

மில்லில் மூலப்பொருட்கள் வந்து சேர்ந்திருந்தது. தயாரித்த சணல்கள் சரியான அளவில் லோட் எற்றப்பட்டது. கணக்கு வழக்குகளை அங்கிருந்த சூப்பிரவைசர் பார்த்துக் கொண்டிருந்தார்.

சமர் வந்ததும் அவனிடமும் காட்டினார்.

“இது மிது வேலை தான?” என்று கேட்க, “ஆமா.. ஆனா புதுசா கல்யாணம் ஆனவங்க. ஒரு வாரமாச்சும் வேணும்ல சார்?” என்று கேட்டார் அவர்.

‘புதுசா கல்யாணம் ஆனா? வேலை பார்க்கக் கூடாதா?’ என்று நினைத்தவன், அங்கிருந்த வேலையை பார்த்து விட்டு கிளம்பினான்.

உண்மையில் மிதுனன் இல்லாமலே வேலை நன்றாக தான் நடந்தது.

அவர்களது சிறிய அலுவலகம் சென்ற சமர், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

வீட்டில் மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருக்க, விருந்துக்கு அழைத்தனர் சொந்தங்கள்.

இருபக்க வீட்டின் விருந்தும் இனி தான் ஆரம்பம்.

“இதுக்கு போனா நான் ஹனி மூன் எப்படி போறது?” என்று மிதுனன் இழுக்க, வேதாவிற்கு சிரிப்பு வந்தது.

ஜோவிதா வெட்கம் வந்து அவனை கிள்ளி வைத்து விட்டாள்.

“விருந்து ரொம்ப முக்கியம். ஒழுங்கா போ. உங்க அண்ணன மாதிரி சுத்தாத சொல்லிட்டேன்” என்றார் சங்கரி.

மிதுனன் அப்போதும் முகத்தை சுருக்கிக் கொண்டு பார்க்க, “அடுத்த மாசம் போவோம் போதுமா?” என்று அவனை சமாதானம் செய்தாள் ஜோவிதா.

ஒரு வாரம் கழித்து தான் மிதுனன் வேலைக்கு வந்தான். அவன் வந்த போது, அன்றாட வேலைகள் நடந்து கொண்டு தான் இருந்தது. சமரின் வாயில் விழும் வாய்ப்பு மிதுனனுக்கு கிடைத்தது இல்லை.

மிதுனனுக்கு வேலை செய்வதை விட, வேலை வாங்குவது கை வந்த கலை. இணக்கமாய் பேசி தட்டிக் கொடுத்தே வேலை செய்ய வைத்து விடுவான். சமருக்கு அது கஷ்டம் தான்.

சின்னதாய் ஒன்று கிடைத்தாலும் அவன் எகிறி விடுவதில், அவனிடம் வேலை செய்பவர்கள் கடமையை மட்டும் தான் செய்வார்கள்.

மிதுனன் ஜோவிதா திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது.

விருந்தெல்லாம் விரைவாய் முடிந்து விட, தேன்நிலவுக்கு தயாரானான் மிதுனன்.

அறையில் மெத்தையை சரி செய்து கொண்டிருந்த வேதாவிடம், எரிச்சலை கொட்டினான் சமர்.

“என்ன பெரிய ஹனி மூன்? இதெல்லாம் ஒரு பழக்கம்னு பண்ணிட்டு.. எவனோ போனானாம். இவனும் போறானாம். இங்க ஏகப்பட்ட வேலை கிடைக்கு. காச செலவழிச்சு போய் ஊர சுத்திட்டு வர்ரதுல என்ன தான் கிடைக்குதோ? நீயாவது சொல்ல மாட்டியா?” என்று அவளை கேட்டு வைத்தான்.

வேதாவிற்கு, தலையை கொண்டு போய் முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எல்லோருமே இவனை போலவே இருந்து விடுவார்களா என்ன?

“உன் கிட்ட தான் கேட்குறேன்”

பதில் சொல்லாமல் நின்றவளிடம் அவன் எரிந்து விழ, பெருமூச்சு விட்டாள்.

“அவங்க என் கிட்ட கேட்டுட்டு போகல” என்றாள் கிண்டல் குரலை உள்ளே விழுங்கி சாதாரணமாக.

ஆனாலும் அவனுக்கு புரிந்து விட, முறைத்தான்.

“என்ன நக்கலா? உன் கிட்ட கேட்டுட்டு போகலனா? என்ன அர்த்தம்?”

“அவங்க புருஷன் பொண்டாட்டி. அவங்க வாழ்க்கை. அவங்க முடிவு. எப்படி வாழனும்னு அவங்க தான் முடிவு பண்ணனும். நான் என்ன போய் சொல்லுறது?” என்று கேட்டவள், மெத்தையில் படுத்துக் கொண்டாள்.

சமருக்கு அவள் தன்னை குத்திக் காட்டுகிறாளோ? என்று சந்தேகம் வந்தது.

பிள்ளை பிறந்து சமர் சென்று பார்க்காமல் இருந்த போது, மிதுனன் கோபத்தில் திட்டியிருந்தான்.

அதை கேட்டு சமர் சொன்ன வார்த்தை இது.

“அவ என் பொண்டாட்டி. என் புள்ளை. என்ன செய்யனும்னு எனக்கு தெரியும். நீ வந்து சொல்லாத” என்று சொல்லியிருந்தான்.

அதையே தான் மாற்றி சொல்லி விட்டு படுத்திருக்கிறாள். கடுப்பாக வந்தது அவனுக்கு.

அதை காட்டலாம் என்றால், வேதா கண்ணை மூடி படுத்து விட்டாள். இனி என்ன பேசினாலும் எழவும் மாட்டாள்.

விழுங்க முடியாத கோபத்தை, துப்பவும் வழியில்லாமல் அல்லாடி போனான் சமர்.

தொடரும்.

Leave a Reply