அத்தியாயம் 8

Loading

வேதாவிற்கு சலிப்பாக தான் இருந்தது. தினமும் அவர்கள் ஹோட்டல் உணவை சாப்பிடுவது இல்லை. என்றோ ஒரு நாள் வெளியே சென்று வந்தால், மிதுனன் வாங்கி வந்து கொடுப்பான். வீட்டில் சமைக்கும் வேலை குறைந்தால், வேதாவும் சிறிது நேரம் தூங்கி எழுவாள்.

ஆனால் வீட்டினரை பற்றிய அக்கறையோ, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற எண்ணமோ இல்லாத சமர், இன்று திடீரென கேள்வி கேட்கவும் வேதாவிற்கு எரிச்சலாக வந்தது.

அதனால் தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லி வைத்தாள். அப்போதும் விடாமல் அவளை குற்றம் சொல்பவனை பார்த்து கோபம் வந்து விட்டது.

“உடம்புக்கு நல்லது இல்ல” என்றவனை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று அவளுக்கு தெரியவில்லை.

அவளுக்கு அலுப்பாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவளுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தன் வேலை தன் தேவை மட்டுமே கவனிப்பவனுக்கு, புதிதாய் வந்த அக்கறை அவளை ஒன்றும் குளிர வைத்து விடவில்லை.

“என் உடம்ப பத்தி என்ன புதுசா அக்கறை?” என்று கேட்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.

மனதில் கோபம் வர தான் செய்தது. அதை முடிந்த அளவு குரலில் காட்டவில்லை.

இருவரும் கோபத்தில் கத்தினால், பிரச்சனை தான் வரும். அதனாலேயே அவள் பொறுமையை கடை பிடித்தாள்.

ஆனால் அவள் கேட்ட கேள்வி அவனது கோபத்தை தூண்டியது. அவளை போல மறைப்பவன் அல்ல அவன்.

“புதுசாவா? எனக்கு உனக்கு மேல அக்கறையே இல்லங்குறியா?”

“இது வரைக்கும் அப்படி எதுவும் நீங்க காமிச்சது இல்லயே? இன்னைக்கு என்னனு கேட்குறேன்?”

ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், “எனக்கு பையன் வேணும்” என்று விட்டான்.

வேதாவிற்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது. அடுத்த நொடி ‘ச்சே’ என்றானது மனம்.

ஆக மொத்தம் அவனுக்கு அடுத்த குழந்தை வேண்டும். அதை பெற்றுப்போடும் முன், ஹோட்டல் உணவுகளை சாப்பிட்டு வேதா உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது.

அக்கறை அவளுக்காக இல்லை. அவள் மூலம் பெறப்போகும் வாரிசுக்காக. வேதாவிற்குள் இருந்த எதோ ஒன்று உடைந்து போனது.

அதன் விளைவாக கண்கலங்க, இமைதட்டி அதை நிறுத்த பார்த்தாள். பேச வாயைத்திறந்தவளுக்கு வார்த்தை வரவில்லை.

அங்கிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவள், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவனை பார்த்தாள்.

“உங்களுக்கு அடுத்த பிள்ளை வேணும் அவ்வளவு தான?”

“அதுக்கு ஏன் இப்ப அழுற?” என்று அவளையே கவனித்தவன் கேட்டு வைக்க, வேதாவிற்கு குட்டிச்சுவராய் பார்த்து முட்ட வேண்டும் போல் இருந்தது.

அதையும் செய்ய விடாமல், அடுத்து ஒரு கேள்வி கேட்டு அவளை வெறுத்துப்போக வைத்தான்.

“பிரசவ வலிய நினைச்சு அழுறியா? அது வேணாம்னா ஆப்ரேஷன் பண்ணி கூட குழந்தை பெத்துக்கலாம்ல?”

‘டேய்..’ என்று நினைத்தவள், தொண்டை வரை வந்ததை விழுங்கிக் கொண்டாள்.

“லாஸ்ட் டைம் கூட ஆப்ரேஷன் பண்ணுறதா தான சொன்னாங்க? ஆனா பண்ணலல? ஏன் பண்ணல? பண்ணிருந்தா வலிச்சுருக்காதுல?”

அசால்டாக கேட்டவனை பார்த்தவனை பார்த்து, வேதாவிற்கு விரக்தியாய் சிரிப்பு வந்தது.

“எப்ப பிள்ளை நிக்கும்னு எனக்கு தெரியும். அப்ப சொல்லுறேன். இப்ப எனக்கு தூக்கம் வருது” என்றவள், விறுவிறுவென சென்று படுத்து கண்ணை மூடிக் கொண்டாள்.

சமர் கீழே போட்டிருந்த மெத்தை, அவனை பார்த்து ஏளனமாக சிரித்து வைத்தது.

அதை அப்படியே சுருட்டி விட்டு, மகளுக்கு மறுபக்கம் படுத்துக் கொண்டான்.

வேதா அதீத கோபத்திலும், அதை வெளிபடுத்த முடியாத சோகத்திலும் தூங்காமலே படுத்திருந்தாள்.

அடுத்த நாள் காலையில், மிதுனன் அலுவலகம் கிளம்ப, ஜோவிதா, “பேசாம நானும் வேலைக்கு போகட்டுமா?” என்று கேட்டாள்.

“வீட்டுல இருந்து அண்ணி அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு, ஜாலியா தூங்கி எந்திரிக்க பிடிக்கலயா?”

“ம்க்கும்.. ஹெல்ப் பண்ணிட்டு தான் மறுவேலை. அவங்க எல்லா வேலையும் நல்லா செய்யுறாங்க. நான் ஜஸ்ட் குறுக்க நெடுக்க நடந்துட்டு இருக்கேன். ஒரே போர்”

“சஷி கூட விளையாடு”

“அவளும் தூங்கிடுவா இடையில. பேசாம எதாச்சும் குக்கிங் கிளாஸ் போகட்டுமா? ஜாலியா இருக்கும்”

“சமையலே தெரியாம அங்க போய் என்ன செய்வ?”

“தெரிஞ்சுக்க தான் போறேன்”

“அங்க இருக்கவங்க சமையல்ல ஆர்வத்தோட வர்ரவங்களுக்கு தான் சொல்லித்தருவாங்க. ஒரு டீ ஒழுங்கா போடத்தெரியாத உன்னை வச்சு என்ன செய்வாங்க?”

“அப்ப டீ போட சொல்லி தர மாட்டாங்களா?” என்று கேட்டவளை பார்த்து, மிதுனனுக்கு சிரிப்பு வந்தது.

“உன்னோட.. முடியல போ.. டீ தான் வேணும்னா.. அத நீ அம்மா இல்லனா அண்ணி கிட்டயே கத்துக்கலாம்” என்றவன் அவளோடு கீழே வந்தான்.

“அண்ணி இவளுக்கு வீட்டுல இருக்க போரடிக்குதுனு குக்கிங் பழகிக்கனுமாம். நீங்க சொல்லிக்கொடுங்களேன்”

“நான் சொல்லிக் கொடுக்குறேன். ஆனா ஜோவிதாவுக்கு பீட்சா தான் செஞ்சு பழகனுமாம். இந்த சோறு, சாம்பார், ரசம் எல்லாம் வேணாமாம்”

வேதா சிரித்துக் கொண்டே சொல்ல, ஜோவிதாவும் அத்தனை பல்லையும் காட்டி வைத்தாள்.

“நேரா பப்ளிக் எக்ஸாம் தான் எழுதுவீங்களா மேடம்? ஒன்னு ரெண்டெல்லாம் படிக்க மாட்டீங்களா?”

“அது போர்” என்று முகத்தை சுருக்கியவளை பார்த்து மிதுனன் சலிப்பாய் தலையசைக்க, வேதா சிரித்துவிட்டாள்.

“பேசிக் போராமா? இந்த லட்சணத்துல மேடம் குக்கிங் கிளாஸ் போவாங்களாம். அங்க முதல்ல அடுப்ப பத்த வைக்க சொல்லுவாங்க. அதுவாது தெரியுமா உனக்கு?”

“ஹேய் என்ன இவ்வளவு டேமேஜ் பண்ணுற? அதெல்லாம் நான் பத்த வைச்சுடுவேன். எங்கப்பாவுக்கு நான் சமைச்சு கொடுத்துருக்கேன் தெரியுமா?”

“ஓஹோ.. இப்ப தான் தெரியுது.. மாமா ஏன் வயிற்று புண்ணு சொல்லி மாத்திரை போடுறாருனு”

“எதே? யூ…” என்ற ஜோவிதா கணவனை போட்டு உலுக்கினாள்.

அவர்களது விளையாட்டில் வேதா வாய் விட்டு சிரிக்க, சஷியும் ஒன்றும் புரியாமல் சிரித்து வைத்தாள்.

அந்த சிரிப்பை கேட்டபடி உள்ளே வந்தான் சமர்.

அவனை திரும்பிப் பார்த்ததும், சட்டென வேதாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து போனது.

மற்ற மூவரும் சமரை கவனிக்காததால், சிரித்துக் கொண்டே இருந்தனர்.

சமர் வேதாவின் முகத்தை பார்த்து விட்டு, விறுவிறுவென மேலே சென்று விட்டான். காலையில் எதோ அவசர வேலையாக சென்றவன், இப்போது வந்து நிற்கிறான்.

மிதுனன் சாப்பிட்டு கிளம்ப, சமர் சாப்பிட வந்தான்.

ஜோவிதா கணவனை அனுப்பி விட்டு, அறைக்கு சென்று விட்டாள். சஷி சாப்பிட்டு முடித்ததும், பொம்மைகளோடு விளையாட ஆரம்பித்து விட்டாள்.

வேதா கணவனுக்கு உணவை வைத்து விட்டு, உடனே சமையலறைக்குள் சென்று விட்டாள்.

மிதுனன் சாப்பிடும் போது, எல்லோருமே அமர்ந்திருந்தனர். சமர் சாப்பிடும் போது யாருமே இல்லை.

‘என் பக்கத்துல உட்கார்ந்தா இவ குறைஞ்சு போயிடுவாளா?’ என்று சமருக்கு கோபம் வந்தது.

தினமும் இது தான் நடக்கிறது. ஆனால் இன்று தான் கவனித்து வைத்தான்.

சாப்பிட்டு முடித்ததும், வேதாவை தேடிச்சென்றான்.

“நீ சாப்பிடலயா?” என்று புதிதாய் கேட்ட குரலில், ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தாள் வேதா.

“என்ன பார்க்குற?”

“நீங்க என்ன கேட்டீங்க?”

“சாப்பிடலயானு கேட்டேன்”

“ஏன்?”

“வீட்டுல இருக்கத சாப்பிடாம, ஹோட்டல்ல எதுவும் வாங்கி சாப்பிடாத. நல்லது இல்ல அவ்வளவு தான்”

ஆச்சரியம் உடனே வடிந்து விட கோபம் வந்தது.

“நல்லது” என்று விட்டு திரும்பிக் கொண்டாள்.

“நான் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். அவன் கிட்டயும் சொல்லி வை. இப்படிலாம் வாங்கி சாப்பிடக்கூடாதுனு. இருக்க காச இப்படி வீணா செலவு பண்ணனுமா என்ன?”

வேதா எந்த பதிலும் சொல்லாமல் நின்றாள்.

“அவன் வேலைக்கு போற நினைப்புல இருக்கானா இல்லையா? இல்ல ஊர் சுத்துறது கண்டத சாப்பிடுறதுனு இருக்கானா?”

வேதா பொங்கி வந்த கோபத்தை விழுங்கி விட்டு திரும்ப, “அவரு வேலைக்கு தான் போறாரு மாமா” என்றாள் ஜோவிதா.

இருவரும் அவளை திரும்பிப் பார்த்தனர்.

“இன்னைக்கு வேலைக்கு தான் கிளம்பி போறாரு. வேலையும் சம்பளமும் எவ்வளவுனு உங்களுக்கு தெரியனுமா?”

சற்று கோபம் கலந்த குரலில் கேட்க, “தேவையில்ல” என்று விட்டு சமர் விருட்டென வெளியேறினான்.

அவனை முறைக்க தோன்றிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, ஜோவிதா வேதாவிடம் சென்றாள்.

“சாப்பிடலாமாகா? அத்தை வர்ராங்க. வாங்க” என்றவள், அவள் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டு சென்றாள்.

வேதாவிற்கு ஒரு நொடி ஒன்றும் ஓடவில்லை. மிதுனன் தம்பியாக மட்டும் இருக்கும் வரை, அவனை சமர் பேசினால் மிதுனனே பதில் கொடுப்பான்.

இப்போது அவனுக்கென மனைவி இருக்கிறாள். சமர் பேசினால், மனைவியும் பதில் கொடுப்பாள்.

சாதாரண குடும்பமாக இருந்தால், இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல.

தம்பியின் மீது அக்கறை வைத்திருக்கும் அண்ணன், அவன் வேலையை பற்றி விசாரிப்பதில் தவறே இல்லை. ஆனால் சமர் அக்கறை பட்டு கேட்கவில்லை.

மிதுனன் மீது இருந்த கோபத்தில் ஏளனமாக கேட்டு வைத்து, ஜோவிதாவிடம் பதிலை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறான்.

இன்னேரம் சமர் உச்சாணிக் கொம்பில் ஏறி இருப்பான். அவனிடம் சென்று மாட்டி விடக்கூடாது என்று நினைத்தவள், ஜோவிதாவோடு சாப்பிட அமர்ந்து விட்டாள்.

சமர் கிளம்பி வெளியேறும் வரை, தட்டை விட்டு எழவில்லை.

ஜோவிதாவும் நடந்ததை பற்றி எதுவும் பேசாமல் இருந்து விட, நாள் சுமூகமாக சென்றது.

நாட்கள் காற்றை விட வேகமாக ஓடி மறைய, மிதுனன் ஜோவிதா திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது.

நாளை ஜோவிதாவிற்கு பிறந்த நாள். முதல் நாளே விசயத்தை சொல்லி விட்டாள்.

“அட பிறந்த நாளாமா? கோவில்ல அர்ச்சனைக்கு சொல்லலாம். எல்லாருக்கும் மறக்காம பண்ணுவோம்.”  என்றார் சங்கரி.

“தான்க்யூ அத்த..” என்று சிரித்தவள், வேதாவை பார்த்து விட்டு எதோ முடிவுக்கு வந்தாள்.

“நீங்க என்ன அக்கா கொடுப்பீங்க?”

“உனக்கு என்ன வேணும்?”

யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

“நாளைக்கு இவரு லீவ் போட்டுருவாரு. நாம எல்லாம் வெளிய போகலாமா? நீங்க, நான், அத்தை, சஷி, மாமா.. எல்லாரும்”

வேதா பதில் சொல்ல முடியாமல் அதிர, மிதுனனும் அதிர்ந்தான். ஆனால் உடனே மறைத்துக் கொண்டான்.

“நீங்க போயிட்டு…”

“அக்கா.. பிறந்தநாள் பொண்ணு கேட்குறேன். நோ சொல்லக்கூடாது” என்று கறாராக கூற, வேதாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

திடீரென கேட்டால், எதையாவது காரணம் சொல்லலாம். முதல் நாளே சொல்பவளிடம் என்ன சொல்வது? நாளை தலை வலி வரும் என்றா சொல்ல முடியும்?

அவள் தடுமாறி அமர்ந்திருக்க, சமர் வந்து விட்டான்.

“மாமா” என்று அழைத்து அவனை நிறுத்தினாள் ஜோவிதா.

“நாளைக்கு எல்லாரும் சேர்ந்து வெளிய போகலாம்னு இருக்கோம். நீங்களும் வாங்க”

சமர் மனைவியை பார்த்து விட்டு, “நீங்க போங்க” என்றான்.

“நீங்களும் வாங்க. ஜாலியா இருக்கும்”

“எனக்கு வேலை இருக்கு “

“வேலை எல்லா நாளும் தான் இருக்கும். ஒரு நாள் லீவ் எடுத்துக்கிறதுல என்ன தப்பு? உங்க கிட்ட வேலை பார்க்குற எல்லாரும், வாரத்துல ஒரு நாள் லீவ் எடுக்குறாங்க தான? நீங்க வருசத்துல ஒரு நாள் லீவ் எடுக்க மாட்டீங்களா?”

‘நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி?’ என்று மனதில் கவுண்டர் கொடுத்தான் மிதுனன்.

“என் வேலையில லீவ் எல்லாம் எடுக்க முடியாது. நீங்க போயிட்டு வாங்க” என்றவன் மனைவியை பார்த்தான்.

அவள் இன்று வீம்புக்கென்று அமைதியாய் இருந்தாள். அப்படி என்ன தான் செய்கிறான் பார்க்கலாம் என்ற வீம்பு.

ஆனால் இரவு அறையில் வைத்து ஆரம்பித்து விட்டான் பஞ்சாயத்தை.

“மறுபடியும் ஊர் சுத்துறாங்களாமா? நீயும் போறியோ?”

அவன் கேட்ட தொணியில் எரிச்சல் வர, “ஆமா” என்று விட்டாள்.

தொடரும்.

Leave a Reply