அத்தியாயம் 9

Loading

ஜோவிதா கேட்கும் போது, வேதாவிற்கு மனமில்லை தான். எங்கும் சுற்றக்கூடாது என்பதில் தீர்மானமாக தான் இருந்தாள். காரணமும் இருந்தது.

சமரிடம் ஒரு முறை வெளியே செல்ல நினைத்து கேட்ட போது, “எனக்கு வேற வேலை இல்லையா? ஊர் சுத்துறது தான் வேலையா? இதுக்கு தான் கல்யாணம் பண்ணாம இருந்தேன். அங்க நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வருவேன். நீ ஊர சுத்தி செலவு பண்ணுவ அதான?” என்று கேட்டு, அவளை அழவே வைத்திருந்தான்.

அதனால் தான் அவள் எங்கும் எதற்கும் செல்வதில்லை. இன்று சமர் கேட்டதும் கோபமாக வந்தது.

“நீயும் போறியா?” என்று கேட்டதும், “ஆமா” என்று விட்டாள்.

சமருக்கும் கோபம் அவளுக்கும் கோபம்.

“நேரத்தையும் பணத்தையும் இப்படி வீணா செலவு பண்ணுறதுல என்ன தான் கிடைக்குது உங்களுக்கு?”

“அப்படி வெளிய போகாம வீட்டுல இருந்து மட்டும் என்ன பெரிய சாதனை பண்ணிட்டேன்னு நினைக்கிறீங்க?”

பட்டென கேட்டிருந்தாள். இப்போது கோபத்தை அடக்க முயற்சிக்கவும் இல்லை.

“வீட்டுல இருந்தா வீட்டு வேலை பார்க்கலாம்ல?”

“எது? சமைக்கிறது, சாப்பிடுறது, பாத்திரம் கழுவுறது இதான? இத வெளிய போயிட்டு வந்தா செய்ய கூட தேவையில்லையே?”

“என்ன நீ இன்னைக்கு ஓவரா பேசுற?”

“நியாயமான விசயத்தை சொல்லுறது ஓவரா பேசுறதா? இதுக்கு தான் நான் அமைதியாவே இருக்கது. உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது. விடுங்க”

கடுப்பாக சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் சமர் கிளம்பும் போது, வேதாவும் கிளம்பி விட்டாள். சமர் முறைத்தானே தவிர, எதுவும் பேசவில்லை. கோவிலுக்குச் சென்று விட்டு வெளியே செல்வதால், புடவையே கட்டி தயாரானாள் வேதா.

மகளையும் கிளப்பி கீழே அழைத்து வந்தாள். சங்கரியே சமருக்கு சாப்பாடு வைக்க, ஜோவிதா பிறந்த நாளுக்கென பிரத்தியேக அலங்காரத்தில் வந்தாள்.

“ஹாப்பி பர்த்டே ஜோவிதா”

வேதா சந்தோசமாக சொல்ல, வாழ்த்தை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தவள், அன்றைய நிகழ்ச்சிகளை பட்டியலிட ஆரம்பித்து விட்டாள்.

சமர் சாப்பிட்டதுமே, வீட்டை பூட்டி விட்டு எல்லோரும் கிளம்பினர்.

“பிரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு மால்க்கு போகலாம்” என்ற ஜோவிதாவின் பேச்சை கேட்டு எல்லோரும் காரில் ஏறி விட, சமர் அவர்கள் செல்லும் திசையை வேடிக்கை தான் பார்த்தான்.

வாசலில் நிற்பவனை பார்த்தாலும் வேதா ஒன்றும் சொல்லாமல் போக, சஷி மட்டும் அவனுக்கு கையாட்டி வைத்தாள்.

நேராக கோவிலுக்கு சென்று அர்ச்சனையை முடித்து விட்டு, சாப்பிடச் சென்றனர். எந்த கட்டுப்பாடும் இல்லாமல், சிரித்து ருசித்து உணவை உண்டு விட்டு மால் சென்றனர்.

சஷி கேட்ட பொம்மைகளை வாங்கிக் கொடுத்து விட்டு சுற்றி முடிக்க, மதிய உணவு நேரமே வந்திருந்தது.

சாப்பிட்டதும் சங்கரி வீட்டுக்குக் கிளம்பி விட்டார். மற்றவர்கள் அப்போது வெளி வந்த ஒரு படத்துக்கு சென்றனர்.

படம் முடிந்து அதை பற்றி பேசிக் கொண்டே வெளிய வர, சஷி தூங்கியிருந்தாள்.

“வீட்டுக்கு போகலாமா? பாப்பா தூங்கிட்டாளே?” என்று ஜோவிதா கேட்க, “நீங்க சுத்திட்டு வாங்க. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்” என்றாள் வேதா.

ஜோவிதாவிற்கு அவளை தனியாக அனுப்ப மனமில்லை. ஆனால் வேதா அவளை சமாளித்து விட்டு, ஆட்டோ பிடித்து வீடு சென்று சேர்ந்தாள். அவள் வீட்டுக்கு செல்லும் வரை, ஜோவிதா அவளை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருந்தாள்.

“வீட்டுக்கு வந்துட்டோம்” என்று வேதா சொன்ன பின்பே, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“இருந்தாலும் ரொம்ப பயப்படுற நீ” – மிதுனன்

“முதல் தடவ எனக்காக வெளிய வந்துருக்காங்க. பத்திரமா போக வேணாமா?”

“அதுவும் சரி தான். அண்ணி வருவாங்கனு நானும் எதிர் பார்க்கவே இல்ல”

“உங்க அண்ணன் நிப்பாட்டிருவாருனு நினைச்சேன்”

“உனக்கு சமர் மேல கோபம் தான?”

“இல்லனு எல்லாம் சொல்ல மாட்டேன். வந்துருந்தா அவரும் நல்லா என்ஜாய் பண்ணிருக்கலாம். ரொம்ப தான் பண்ணுறாரு”

“அவன் அப்படியே வளர்ந்துட்டான். ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது கூட வெளிய போக மாட்டான். என்னவோ அவனுக்கு பிடிக்குறது இல்ல”

“எது? காசு செலவு பண்ணுறது தான?”

ஜோவிதா கிண்டலாக கேட்க, மிதுனன் சிரித்து விட்டான்.

“உனக்கு அவன பிடிக்கலயா? ஆக்ட்சுவலி அவன் நல்லவன் தான். கொஞ்சம் கோவக்காரன்”

“உங்க அண்ணன் கெட்டவர்னு நான் எப்ப சொன்னேன்? உலகத்துல எத்தனையோ பேர் உங்கண்ணன விட மோசமா இருக்காங்க. எதாவது பழக்கத்துக்கு அடிமையாகி, குடும்பத்தை டார்ச்சர் பண்ணுவாங்க. இல்லனா, சந்தேக பேர்வழியா இருப்பாங்க. அதுவும் இல்லனா, சைக்கோ மாதிரி எல்லாரையும் ஹர்ட் பண்ணுவாங்க. அவங்க தான் கெட்டவங்க. உங்க அண்ணன் நல்லவர் தான். என்ன ரொம்ப செல்ஃபிஷ்”

“ம்ம்.. அவன் நினைக்கிறது மட்டுமே நடக்கனும்னு நினைக்கிற அளவு செல்ஃபிஷ்”

“அக்காவாச்சும் அவங்களுக்கு புரிய வைக்கலாம். ஆனா அக்கா அமைதியோ அமைதினு இருக்காங்க. எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க தான?”

“தெரியல. ஒன்னு புரிஞ்சுக்கலாம். இல்லனா பெருசா சண்டையும் போடலாம். அவன் என்ன செய்வான்னு கெஸ் பண்ணவே முடியாது”

“அக்கா தான் அவங்கள சமாளிக்கனும்” என்று கூறியதோடு, இருவரும் வேறு இடத்தை பார்க்கக் கிளம்பி விட்டனர்.

வீடு வந்த வேதா, மகளது உடையை மாற்றி படுக்க வைத்து விட்டு, தானும் சுடிதாருக்கு மாறி படுத்தாள்.

அலைச்சல் தான். ஆனால் பல நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடில்லாமல் சுற்றியது அவளை சந்தோசபடுத்தியிருந்தது.

எதாவது ஒரு வேலைக்காக குடும்பமாக சென்று விட்டு, அது முடிந்ததும் உடனே வீடு திரும்புவார்கள். அப்படி இல்லாமல், இலக்கற்று கால் நோகும் வரை நடந்து, வாய் வலிக்கும் வரை பேசி, வயிறு வலிக்கும் வரை சிரித்தது நிறைவாக இருந்தது.

அந்த நினைவுகளுடனே நன்றாக தூங்கி விட்டாள். மாலை வெகு நேரம் கழித்து அவள் எழுந்த போது, சமர் வந்திருந்தான்.

அவளை எழுப்பாமல் தன் மடிக்கணினியை திறந்து வைத்துக் கொண்டு, வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சஷி கூட எழுந்து கீழே சென்றிருந்தாள்.

மணியை பார்த்தாள். நேரம் ரொம்பவே கடந்திருந்தது. நல்ல தூக்கத்திலும் மனநிறைவிலும், உடல் காற்றில் பறப்பது போன்ற உணர்வு தான் வந்தது.

முகம் கழுவிக் கொண்டு கீழே சென்றாள். சங்கரி மட்டும் தான் இருந்தார். அவரோடு அமர்ந்து சஷியும் தொலைகாட்சியில் கண்ணை பதித்து இருந்தாள்.

“எந்திரிச்சுட்டியா? நல்ல அசதில? டீ போட்டு வச்சுருக்கேன். சூடு பண்ணி குடி” என்றார் சங்கரி.

இப்படி ஒரு மாமியார் யாருக்கு கிடைக்கும்? இவ்வளவு நேரம் தூக்கமா? வீட்டு வேலைகளை பார்க்கவில்லை என்று திட்டவில்லை.

நீ எழுந்து வந்து தான் எனக்கும் டீ காபி போட வேண்டும் என்று அதிகாரம் செய்யவில்லை. அவருக்கு போடும் போது, அவளுக்கும் சேர்த்து போட்டு வைத்து விட்டு தான் இலகுவாக அமர்ந்திருந்தார். வேதா மென்மையாய் புன்னகைத்துக் கொண்டாள்.

அவர் வைத்திருந்த தேநீரை எடுத்துக் கொண்டு வந்து, அவரருகே அமர்ந்து கொண்டாள். இன்று பார்த்தவைகளை பற்றிய பேச்சு ஓடிக் கொண்டே இருந்தது.

“நமக்கு எதுவும் வாங்க வேணாம்னு சொல்லிடுங்க அத்தை. இங்க இட்லி மாவு இருக்கு. அத சாப்பிடுவோம். அவங்க மட்டும் சாப்பிட்டு வரட்டும்” என்று வேதா கூற, அதை ஆமோதித்து மிதுனனுக்கு சொல்லி விட்டார் சங்கரி.

இரவு உணவு நேரம் வர, மிதுனன் ஜோவிதா தவிர மற்ற நால்வரும் அங்கிருந்தனர்.

சஷி புதிதாய் வாங்கிய விளையாட்டு பொருளை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தாள். சமரிடம் இன்று பார்த்த கதைகளை கூட சொன்னாள். அவனும் அமைதியாய் கேட்டுக் கொண்டான்.

மனைவியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேசப் பிடிக்கவில்லை. கோபமாம். அவனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் ஒரு காரியத்தை செய்திருக்கிறாளே என்ற கோபம்.

சங்கரி அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. அவர் அவனது தொழிலை பற்றித்தான் விசாரித்துக் கொண்டிருந்தார்.

பலவருட அனுபவம் அவருக்கு இருப்பதால், சமர் கேட்ட கேள்விக்கு மறுக்காமல் பதில் சொல்லி விடுவான்.

இரவு தாமதமாக வந்த மிதுனன் ஜோடி நேராக அறைக்குள் சென்று விட, எந்த வித பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக முடிந்தது அந்த நாள்.

காலையில் எழுந்து குளித்து விட்டு வெளியே வந்த வேதாவிற்கு, ஒரு நொடி தலை சுற்ற, சுவற்றைப் பிடித்து அப்படியே நின்று விட்டாள்.

அவள் தள்ளாடி நிற்பதை பார்த்து, சமர் கூட பயந்து விட்டான்.

“என்ன? ஏன் இப்படி நிக்கிற?” என்று கையை பிடிக்க, அவளால் பதில் பேச முடியவில்லை.

சுவற்றில் சாய்ந்து நின்றவள், தன்னை தானே சுதாரித்துக் கொண்டாள்.

மூளை வெகுவாக கணக்கு போட்டு விட, நாட்காட்டியின் பக்கம் சென்றது பார்வை. மனம் உறுதி செய்ததும் சந்தோசப்படுவதா? வேண்டாமா? என்று தெரியாமல் நின்றாள்.

“என்னனு கேட்குறேன்ல?” என்று சமர் அதட்ட, “தலை சுத்துது” என்றாள்.

“தலை சுத்துதா? இப்படி வந்து உட்காரு” என்று அழைத்து வந்து அமர வைத்தான்.

“ஏன் தலை சுத்துது? இரு அம்மாவ கூப்பிடுறேன்” என்றவன், உடனே வெளியே சென்றான்.

சங்கரி ஹாலில் இருக்க, மேலே இருந்தபடி விசயத்தை கூறினான். சங்கரி பதட்டத்துடன் மேலே வந்தார்.

“என்ன வேதா? என்ன செய்யுது?” என்று கேட்டவர், அவளருகே அமர்ந்து கையை பிடித்துக் கொண்டார்.

“எதையாவது சேரமா சாப்பிட்டியா? இதுக்கு தான் படிச்சு படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டா தானா?” என்று சமர் பொரிய ஆரம்பித்தான்.

வேதா அவனை கண்டு கொள்ளாமல், “மாசமா இருக்கேன்னு நினைக்கிறேன் அத்த” என்றாள்.

சட்டென சங்கரியின் முகம் மலர்ந்து விட்டது.

“உண்மையாவா சொல்லுற? எங்க இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போடுவீங்களோனு நினைச்சேன். ரொம்ப நல்லது.. செக் பண்ணியா?”

“இல்ல”

“அப்ப கொஞ்ச நேரம் படு. சாப்பிட்டு ஹாஸ்பிடல் போவோம்”

“இப்ப பரவாயில்ல.. நான் தலை சீவிட்டு வர்ரேன்.”

“சரி சரி.. இரு ஜோவிதா கிட்ட ஜூஸ் போட்டு கொடுத்து விடுறேன். குடிச்சுட்டு இரு.” என்றவர், உடனே சென்று மிதுனன் அறையை தட்டினார்.

ஜோவிதாவிடம் விசயத்தை சொன்னதும், ஓடி வந்து வேதாவை வாழ்த்தி விட்டுத் தான் சென்றாள்.

சமர் தான் ஆச்சரியமாக நின்றிருந்தான்.

சஷிக்கு எல்லாம் அவன் வேலையில் இருக்கும் போது தான் செய்தி வந்தது. இப்போது நேரடியாக பார்க்கிறான்.

ஜோவிதா பழச்சாறு கொண்டு வர, குடித்து விட்டு வேதா மருத்துவமனை கிளம்ப தயாரானாள்.

சமர் மனைவியின் அருகே வந்தான்.

“நிஜம்மாவே அப்படித்தானா?”

“ம்ம்”

“அப்போ இனிமே ஹோட்டல்…”

“உங்களுக்கு வேலைக்கு நேரமாகலயா? போய் குளிங்க”

“நான் பேசி முடிச்சுக்கிறேன்”

“அப்புறமா பேசுங்க. இப்ப நானும் கிளம்பனும்” என்றவள், அவனை பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்.

சமரும் உடனே கிளம்ப ஆரம்பித்தான்.

சமர் அலுவலகம் கிளம்ப, சங்கரி மருமகளோடு மருத்துவமனை கிளம்ப, ஜோவிதா தான் கணவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“ஆஃபிஸ் போகும் போது இப்படி கோபமா அனுப்புனா எப்படி ஜோ?” என்று மிதுனன் கொஞ்ச, கையை தட்டி விட்டாள்.

“அக்காவுக்கு அடுத்த பாப்பாவே வர போகுது. நீங்க என்னனா இன்னும் ஒரு வருசம் பிள்ளை வேணாங்குறீங்க. உங்க கூட டூ. பிள்ளைக்கு சரினு சொன்னா தான் இனி பேசுவேன். போங்க” என்று அவனை பிடித்து வெளியே தள்ளி, கதவை பூட்டி விட்டாள்.

தொடரும்.

Leave a Reply