லாவண்டர் 10

Loading

அன்றைய நாள் யாருக்கு எப்படி விடிந்ததோ, சிலருக்கு மட்டும் பல விதமான உணர்வுகளோடு விடிந்தது.

ஜானகிக்கு வலியோடு விடிந்தது. இன்று அவளது மனதுக்கு கடைசி நாள். இதோடு ஆசையை எல்லாம் அழித்து மனதுக்கு சமாதி கட்டிவிட வேண்டும்.

அசையாத உடலை கஷ்டப்பட்டு ஜெகனின் வற்புறுத்தலினால் அசைத்து கிளம்பினாள்.

“கிஃப்ட் வாங்கனும்லடா?”

“மொய் வச்சுக்கலாம்கா” என்றவன், தாயின் அறைக்கதவை பார்த்தான்.

இன்னும் அவர் எழவில்லை. அதிகாலை முகூர்த்தத்திற்கு கிளம்பியிருந்தனர். மேனகா எழாமல் இருப்பதே நலம்.

காரை எடுத்தவன், கைபேசியில் மதுசூதனனின் செய்தியை படித்தான்.

“நான் வெளிய வெயிட் பண்ணுறேன்” என்று இருக்க, கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு கிளம்பினான்.

அந்த மண்டபத்தில் இரண்டு குடும்பத்தாரரும் வந்திருந்தனர். கோவிலுக்கு சொந்தமான மண்டபம். பெரிய அலங்காரங்கள் செய்யாமல் சாதாரணமாக செய்திருந்தனர்.

காலையிலேயே குளித்து திருமணப் புடவையை கட்டிக் கொண்டு வந்து இறங்கி விட்டாள் பவானி. அவளோடு மொத்த குடும்பமும் இருந்தது.

அவளுடைய அத்தை மாலாவின் மகள்கள் இருவரும் கணவனோடு வந்திருந்தனர்.

இருவருக்கும் தாம் தூமென திருமணம் நடந்தது. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த திருமணம் மிக மிக சாதாரணம்.

‘இதையும் கூட ஏன் பண்ணனும்? கோவில்ல வச்சு தாலிய கட்டினா போதாதா?’ என்று பவானிக்கு எரிச்சலாக வந்தது.

பிடிக்காத கல்யாணம் எப்படி நடந்தால் என்ன? கந்தசாமியின் முகம் வேறு அடிக்கடி நினைவு வந்து, அவனை ஏமாற்றுகிறோமே என்ற கவலையை உண்டாக்கியது.

ஆனால், ஊர் உலகில் யாரையோ காதலித்து வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு எல்லாரும் வாழவில்லையா? அது போல பழகி விடும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

எல்லாம் நேற்று வரை தான். இன்று மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. வியர்த்துக் கொட்டியது. முகத்தை பதட்டமில்லாமல் வைக்க போராட வேண்டியிருந்தது.

இரவெல்லாம் தூங்காமல் மது சொன்ன விசயத்தை நினைத்து நினைத்து பயந்து கொண்டிருந்தாள்.

அவளால் நிம்மதியாக மூச்சு கூட விட முடியவில்லை.

வெளி சொந்தங்கள் வர இன்னும் நேரமிருந்தது. குடும்பத்தினர் மட்டும் தான் முதலில் வந்து சேர்ந்திருந்தனர்.

அந்த கோவில் கந்தசாமி குடும்பத்துக்கு நன்றாக தெரிந்த கோவில். அதனால் மண்டப செலவு அவர்களுடையது தான்.

உள்ளே சென்றதும் கந்தசாமிக்கு சித்தி ஒருவர் வந்து வரவேற்று, மணமகள் அறைக்கு அழைத்துச் சென்று விட்டார்.

மணமகன் குடும்பத்திலும் சிலர் வந்திருந்தனர். வெளியூரிலிருந்து சிலர் வருவதாக சொல்லியிருந்தனர்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் பவானி மதுவை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் காரை ஓரமாக நிறுத்திய ஜெகன், “க்கா.. நீ உள்ள போ.. நான் பார்க்கிங் எதாவது இருந்தா தள்ளி நிப்பாட்டிட்டு வர்ரேன்” என்று அவளை முதலில் இறக்கி விட்டான்.

ஆழமாய் மூச்செடுத்துக் கொண்டு அந்த மண்டபத்தில் அவள் நுழைய, முதலில் பார்த்தது தெய்வநாயகி தான்.

“அட! வாமா.. வா வா” என்று ஆச்சரியத்தோடு வரவேற்றார்.

மகன் அழைத்ததாக சொன்னான். வருவாள் என்று சொல்லவில்லை. அதனால் தான் இந்த ஆச்சரியம்.

“நல்லா இருக்கீங்களா?” என்று உதட்டை இழுத்த புன்னகையுடன் ஜானகி நலம் விசாரித்தாள்.

“நல்லா இருக்கோம்மா.. வா.. உள்ள போய் உட்காரு..” என்றவர் உடனே மாற்றி, “பொண்ண பார்க்குறியாமா?” என்று கேட்டார்.

“இல்ல.. எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு…”

“அப்படி நினைக்காதமா.. இப்ப தான் பொண்ணு வீட்டுல இருந்து வந்தாங்க. முகூர்த்த்துக்கு இன்னும் நிறைய நேரமிருக்கு. வா.. போய் பார்க்கலாம்” என்று கையோடு அழைத்துச் சென்றார்.

பலியாடு போல் சென்றாள் அவள்.

கதவை திறந்தவர், அங்கு அமைதியாய் அமர்ந்திருந்த பவானியிடம் வந்து நின்றார்.

“பவானி.. இவங்க ஜானகி. இவங்க அப்பா கிட்ட தான் கந்தசாமி வேலை பார்த்தான். இப்ப இவங்க அந்த வேலைய எடுத்து செய்யுறாங்க” என்றதும் பவானி எழுந்து நின்றாள்.

“வாங்க..” என்று மரியாதையோடு அவள் வரவேற்க, ஜானகிக்கு அங்கிருந்து ஓடி விடத்தோன்றியது.

பவானி மணப்பெண் கோலத்தில் அழகாக இருந்தாள்.

“வாழ்த்துக்கள்” என்றவளின் மனதிலிருந்து அந்த வார்த்தை வந்தது.

திடீரென பொறாமை வரவில்லை. பெருந்தன்மை தான் வந்தது. நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

பவானி பதிலளிக்காமல் புன்னகைத்து வைத்தாள்.

“ஹலோ மேடம்.. என்னை தெரியுதுங்களா?” என்று பவானியின் மாமா வந்து விட்டார்.

ஜானகி சட்டென திரும்பி அவரை பார்த்து புருவம் சுருக்கினாள். பிறகு நினைவு வந்து விட, “ஹான்.. ஞாபகம் இருக்கு” என்றாள்.

“பவானி என் தங்கச்சி பொண்ணு தான்..” என்று ஆரம்பித்தவரிடம் சில நிமிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது வெளியில் ஒரு பிரளயமே உருவாகிக் கொண்டிருந்தது.

கந்தசாமி தன் காதுகளை நம்ப முடியாமல் மதுசூதனனை அதிர்ந்து பார்த்தான்.

“எனக்கு அவ வேணும் சார். அவ்வளவு தான்” என்று அவன் அடம் பிடிக்க, “சார்.. இவர் பேசுறதுல எனக்கு கூட நம்பிக்கை இல்ல. எதுக்கும் பொண்ணு கிட்டயே விசாரிச்சுடுவோமே?” என்று ஜெகன் நடுவில் புகுநதான்.

கந்தசாமி யோசிக்க, “இவர் உண்மைய சொன்னா மேல பேசலாம். பொய் சொன்னா வெளிய துரத்திடலாம். ஆனா உண்மையா பொய்யானு பொண்ணு கிட்ட தான கேட்க முடியும்?” என்று ஜெகன் விடாமல் பேசினான்.

“அவ கிட்டயே கேளுங்க. நான் பொய் சொல்லல”

“இன்னும் சொந்தக்காரவங்க வரல. ஐயர் கூட வரல. இப்பவே பேசிடலாம். எல்லாம் வந்துட்டா தேவையில்லாத பிரச்சனை” என்று ஜெகன் அவசரப்படுத்தினான்.

கந்தசாமி குழப்பத்தோடு சம்மதித்தான்.

“உள்ள வந்து கலாட்டா பண்ண கூடாது. சத்தமில்லாம பேசனும்” என்று எச்சரித்து விட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

மணமகள் அறையில், தெய்வநாயகி, ஜானகி, பவானி, இந்து, மாலா, அவரது கணவர் மட்டுமே இருந்தனர்.

மாலாவின் மகள்கள், அறைக்குள் இருந்தால் பவானிக்கு வேலை செய்ய வேண்டும் என்று வெளியே நாற்காலியில் குடும்பத்தோடு அமர்ந்து கொண்டனர்.

அறையும் மிகமிக சிறிய அறை. அதனால் வேறு யாரும் உள்ளே இல்லை.

ஜானகி பேசிக் கொண்டிருக்கும் போது, கந்தசாமியும் ஜெகனும் மதுவோடு உள்ளே வந்து விட்டனர்.

மதுவை பார்த்ததும் இந்துவும் பவானியும் அதிர்ந்து போக, மற்றவர்கள் கந்தசாமியை மட்டுமே கவனித்தனர்.

“வாங்க மாப்பிள்ளை…” என்று குதூகலமாக வரவேற்க, ஜானகி வேட்டி சட்டையில் இருந்தவனை ஒரு நொடி பார்த்து விட்டு தம்பியின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ஜெகன் சத்தமில்லாமல் கதவை அடைத்து பூட்டி விட்டான்.

எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாக நிற்க, கந்தசாமி ஜானகியின் பக்கம் பார்வையை திருப்பாமல் பவானியை பார்த்தான். அவளது முகத்தில் இருந்த பதட்டம் பாதி விடையை சொல்லி விட்டது.

“பவானி.. இது யார்னு தெரியுமா?”

பவானிக்கு தொண்டை அடைத்தது. வார்த்தை வர மறுத்தது.

“மாப்பிள்ளை.. இது யாரு?” என்று மாலா சந்தேகமாக கேட்டார்.

“இவரும் உங்க வீட்டுப்பொண்ணும் நாலு வருசமா லவ் பண்ணிட்டு இருந்துருக்காங்க” என்று ஜெகன் பட்டென உடைத்தான்.

எல்லோரும் அதிர, “அய்யோ.. எல்லாம் பொய் மாப்பிள்ளை.. நம்பாதீங்க.. என் மகளுக்கு இவன் யாருனே தெரியாது” என்று இந்து நடுவில் புகுந்தார்.

“நீங்க பேசாதீங்க. எல்லாமே உங்களால தான். உங்களுக்கு நாங்க லவ் பண்ணுறது தெரியும். தெரிஞ்சே அவள மிரட்டி இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்க” என்று மது கோபமாக பேச, “ஏய்.. யார் நீ? எதுக்கு வந்து நின்னு இப்படி என் மக மேல பழி போட்டுட்டு இருக்க? மாப்பிள்ளை.. இவன நம்பாதீங்க. அடிச்சு துரத்துங்க” என்று கெஞ்சினார் இந்து.

அவருக்கு அண்ணனின் முகம் மாறிய விதம் பிடிக்கவில்லை. மாலாவும் கூட இருவரையும் எரித்து விடுவது போல் பார்த்து வைத்தார்.

அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களை பகைக்க கூடாது என்று தான் மகளை மிரட்டி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். இப்போது எல்லாம் கெட்டு விடும் போலிருக்கிறதே.

“பவானி நீ சொல்லு.. இவன தெரியுமா? இவன் சொல்லுறது உண்மையா?”

மதுசூதனன் அவளை இமைக்காமல் பார்க்க, “நாங்க பிரிஞ்சுட்டோம்” என்றாள் தரையை பார்த்தபடி.

மதுசூதனன் இதயத்தில் ஈட்டி இறங்கியது. இதை அவன் எதிர்பார்த்திருந்தாலும் வலித்தது.

“இப்ப என்ன சொல்லுற? சும்மா கலாட்டா பண்ண வந்தியா? அதான் அவ பிரிஞ்சுட்டோம்னு சொல்லுறால?” என்று மாலா கேட்க, “ஆமா.. சொல்லிட்டாள்ள? வெளிய போடா” என்று பாவானியின் மாமா பிடித்து தள்ளி விட்டார்.

நேராக சென்று அவன் சுவற்றில் மோத, பவானிக்கு பதறியது. அவசரமாக தடுக்க வாயைத்திறந்தவளின் கையை, இந்து கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அவளது கண்கள் கலங்கி விட்டது. ஆனால் அசையாமல் நின்றாள்.

“வந்துட்டான்.. ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்கனும்னா எங்க இருந்துடா வருவீங்க?” என்று கேட்டவர் அவனது சட்டையை பிடித்து கதவு பக்கம் தள்ள, ஜெகன் நடுவில் வந்தான்.

“சார்.. இப்படி ஒருத்தர அடிக்கிறது தப்பு.. என்ன இப்படி பண்ணுறீங்க? என்ன கந்தசாமி இப்படி காட்டுமிராண்டி தனமா நடந்துக்கிறாங்க?” என்று அவன் கோபமாக பேச, கந்தசாமி அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தான்.

“சார்.. நிறுத்துங்க..” என்று கந்தசாமியும் வந்து தடுத்தான்.

“இல்ல மாப்பிள்ளை.. இவன் பேசுறத பார்த்தீங்களா? எங்க பொண்ணு வேணாம்னு சொல்லியும், கலாட்டா பண்ணுறதுக்குனே வந்துருக்கான். டேய்.. போடா வெளிய.. நீயா போறியா? இல்ல அடிச்சு தூக்கி போடவா?”

“சார்.. பொறுங்க..” என்று கந்தசாமி பேசிக் கொண்டிருக்க, பவானியின் கண்ணீர் கண்ணை விட்டு இறங்கி விட்டது.

அவளது சுயநலத்தால் மதுசூதனன் இப்படி அடி வாங்கி நிற்பதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.

“ஒருத்தர் பேச வந்தா பேசி அனுப்பனும். சும்மா அடிப்பேங்குறீங்க? இப்படி பட்ட குடும்பத்துலயா பொண்ணெடுக்க போறீங்க?” என்று ஜெகன் பேச, “நீயாருடா பொடிப்பையன்? நீ தான் இவன கூட்டிட்டு வந்தியா? முதல்ல உன்னை அடிக்கனும்டா” என்று கை ஓங்கிக் கொண்டு மாலா வந்தார்.

கந்தசாமி சட்டென ஜெகன் முன்னால் வந்து நின்று, அவரை தீயாக முறைத்தான்.

“அவன் மேல கை வச்சீங்க.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்றவனின் குரலில் இருந்த எச்சரிக்கை மாலாவை அதிர வைத்தது.

“ஜெகன் நீ அமைதியா இரு. நான் பேசுறேன்” என்றவன் பவானியை பார்த்தான்.

அவள் கண்ணீரோடு மதுவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளது மனம் வலித்தது. அவன் கண்கலங்கி நின்றதை பார்க்க முடியவில்லை. எதுவும் வேண்டாம் என்று உதறி விட்டு போக நினைத்தாள். ஆனால் இந்து அவளது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

“பவானி.. இங்க வா” என்று கந்தசாமி அழைக்க, இந்து கையை விடவில்லை.

“மாப்பிள்ளை.. அவன் கிட்ட என்ன மாப்பிள்ளை பேச்சு.. எதோ உளறிட்டு இருக்கான்.. நல்ல நேரம் வேற ஆரம்பிச்சுடுச்சு.. ஐயர் வந்துருப்பாரு”

“அவர் வரட்டும். இங்க ஒரு பிரச்சனை நடக்கும் போது அத முடிக்காம போகக்கூடாது.. பவானி.. நீ சொல்லு என்ன பண்ணலாம்?” என்று கந்தசாமி அவளிடம் தான் பேச நினைத்தான்.

அவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வார்த்தை எதுவுமே வரவில்லை.

ஜானகி அவ்வளவு நேரம் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, முதலில் அவளுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. இப்போது பவானியின் இடத்தில் அவளை நிறுத்திப் பார்த்தாள்.

அவளுக்கும் இப்படி தானே பிரச்சனை இருக்கிறது. பிடித்தவனோடு சேர முடியாமல் கட்டுப்பாட்டில் இருக்கிறாள்.

பவானியின் கையை கெட்டியாக பிடித்திருந்த இந்துவை பார்த்தவள், இரண்டெட்டில் நெருங்கி அவரது கையிலிருந்து பவானியின் கையை பிரித்து எடுத்தாள்.

இந்து அதிர, மற்றவர்கள் யாரும் ஜானகியை ஒன்றும் சொல்ல முடியாமல் பார்த்தனர்.

அவளது பதவி கொடுத்த மரியாதை, எல்லோரையும் எதுவும் பேச விடாமல் செய்தது.

பவானியை பிடித்து முடிந்த வரை அந்த சிறிய அறையில் தள்ளிச் சென்று நிறுத்தினாள்.

“அழாம பேசு பவானி. இது உனக்கு கிடைச்சுருக்க கடைசி வாய்ப்பு. உன்னோட மனசுல என்ன இருக்கு?”

பவானி கண்ணீரோடு தரையை பார்த்தாள்.

“அவ தான் சொல்லிட்டாளே.. பிரிஞ்சுட்டோம்னு.. மறுபடியும்…” என்று மாலா ஆரம்பிக்க, ஜானகி திரும்பி முறைத்தாள்.

“உங்க பேரு பவானியா? இல்லல.. பவானி கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க அமைதியா இருங்க போதும்” என்று எச்சரித்தவள் மீண்டும் பவானியை பார்த்தாள்.

அவளுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியவில்லை. அவளுக்கு பிடித்த வாழ்க்கை கண் முன்னால் இருக்கிறது. பிடிக்காத வாழ்வில் தள்ளி விட எல்லோரும் தயாராகவும் இருக்கின்றனர்.

எந்த பக்கத்தை தேர்வு செய்வது என்று புரியாமல் அழுது கொண்டு நின்றாள்.

“அவ சொல்ல மாட்டா..” என்று மதுசூதனன் பேசினான்.

அவனது கண்களும் கலங்கி இருக்க குரல் உடைந்தது.

“அவளுக்கு நான் செத்து போனா கூட கவலை இல்ல. அவ அம்மா பேச்சு தான் முக்கியம்னு நினைக்கிறா. ஆனா…”

சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவன், நிமிர்ந்து நின்றான்.

ஜெகனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “அவ வயித்துல வளருர பிள்ளைய மட்டும் என் கிட்ட கொடுத்துட சொல்லுங்க. நான் போயிடுறேன்” என்றான்.

அது வரை வீசியது எல்லாம் வெடியே இல்லை என்பது போல், கடைசியாக இடியை இறக்கினான்.

பவானி கூட அதிர்ந்து போனாள்.

“என் புள்ளை எனக்கு வேணும். கொடுக்க சொல்லுங்க. போதும். அவ யார வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும்” என்றதும் மாலாவுக்கு கோபம் உட்சத்திற்கு சென்றது.

விருட்டென ஜானகியை தள்ளி விட்டு, பவானியை ஓங்கி அறைந்தார்.

“பாவி.. பாதகி.. உனக்கு சோறு போட்டு வளர்த்தா.. நாயி மாதிரி எங்கயோ போய் வாய வச்சுட்டு வந்துருக்கியா?” என்று கேட்டு மேலும் இரண்டு அடி வைத்து தலை முடியை கொத்தாக பற்றி விட, இந்துவுக்கு பதறி விட்டது.

பாய்ந்து வந்து மகளை மாலாவிடமிருந்து பிரித்தார்.

“என் புள்ளைய அடிக்கிற வேலை எல்லாம் வேணாம் அண்ணி..”

“அப்ப உன்னை தான் அடிக்கனும். என்னடி பிள்ளை வளர்த்து வச்சுருக்க? இவளெல்லாம் கொன்னா தான் ஆத்திரம் அடங்கும்” என்று எகிறினார்.

“அவ அடிச்சா அப்புறம் பொம்பளனு பார்க்க மாட்டேன்” என்று மதுசூதனன் வந்து நின்றான்.

“என்னடா பெரிய இவன் மாதிரி பேசுற..? போடா அந்த பக்கம்.. வயித்துல புள்ளையாடி வச்சுருக்க.. கல்யாணம் பண்ணிட்டு போன என் மகளுங்க கூட இன்னும் பிள்ளை பெக்கல. உனக்கென்னடி அவசரம்.. அந்த பிள்ளைய அழிச்சுடுறேன் இரு. உன்னை கொன்னா தாண்டி என் அத்திரம் அடங்கும்” என்றவர் அவளை இழுத்து வயிற்றில் அடிக்கப்போக ஜானகி பட்டென கையை பிடித்தாள்.

இந்து மகளை மொத்தமாக அணைத்து காப்பாற்றினார்.

“இந்த மாதிரி ஈன செயலெல்லாம் இங்க செய்யாதீங்க” என்ற ஜானகி அவரது கையை பிடித்து தள்ளி விட, மாலாவுக்கு வயிறு எரிந்தது.

“என் மகள கொல்ல உனக்கு யாரு உரிமை கொடுத்தா?” என்று இந்து கத்த, “என் விட்டு சோத்த தின்னுட்டு என்னையவே பேசுவியா?” என்று மாலா எகிறினார்.

“சாப்பிட்டதுக்கு வீட்டுல நான் மாடா உழைச்சேன். ஓசில போட்ட மாதிரி சொல்லாத. என் மக மேல கை பட்டுச்சு மனுசியா இருக்க மாட்டேன்” என்று இந்துவும் பாய்ந்தார்.

“பெரிய உலகத்துல இல்லாத மகள பெத்த மாதிரி பேசுற.. எவன் கூடயோ போய் வயித்துல வாங்கிட்டு வந்து நிக்கிறா.. இவள வச்சு என்னென்ன செய்யலாம்னு நினைச்சேன். எல்லாம் போச்சு..” என்று கோபத்தில் உளறினார்.

“எல்லாம் எனக்கும் தெரியும். என் மகள இவருக்கு கட்டிக் கொடுத்து, அவங்க கிட்ட இருக்க தொழில்ல உங்களுக்கு தேவையானத திருட தான திட்டம் போட்டீங்க? எல்லாம் தெரியும். தெரிஞ்சும் அமைதியா இருந்தேன். ஏன்னா என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதேனு. உங்க ஆசையில மண்ணு விழுந்தா, என் மகள கொல்ல பார்ப்பீங்களோ? அதுக்கு முன்னாடி நான் கொலைகாரியாகிடுவேன் சொல்லிட்டேன்.”

“போதும்…” என்று கந்தசாமி கத்தினான்.

அடுத்த நொடி எல்லோரும் அமைதியாகி விட, பவானியின் அழுகை சத்தம் மட்டும் கேட்டது.

தாய்க்கு பின்னால் சுவற்றில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.

ஜானகிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. இந்துவை தாண்டி அவளருகே சென்றவள், கையை பிடித்தாள்.

“அழாத பவானி. தைரியமா இரு” என்றவள், மதுவை பார்த்து விட்டு கந்தசாமியை பார்த்தாள்.

“கேள்” என்பது போல் சைகை செய்ய, “சார்.. நீங்க சொன்னது உண்மையா?” என்று கேட்டான் கந்தசாமி. குரலில் அடக்கட்டப்பட்ட கோபம் தெளிவாக தெரிந்தது.

மது இடவலமாக தலையாட்டினான்.

“பொய் சொன்னேன். நாங்க அப்படி பழகல” என்றதும் பவானியின் அழுகை கூடியது.

“அப்புறம் எதுக்கு இப்படி…”

“இப்ப ஒன்னு நடந்துச்சே அதுக்காக தான். இவங்கள இந்த குடும்பம் ரொம்ப நாளா சம்பளமில்லாத வேலைக்காரங்களா யூஸ் பண்ணிட்டு இருக்கு. அப்படிப்பட்ட வேலைக்கார பவானிக்கு திடீர்னு கல்யாணம் பண்ணி வைக்கிற ஐடியா இவங்களுக்கு எப்படி வந்துச்சுனு சந்தேகமா இருந்துச்சு. காரணம் எனக்கும் தெரியல. ஆனா இவ.. என்னை விட்டுட்டு கல்யாணம் பண்ண ரெடியாகிட்டா. அவங்கம்மா எதோ மிரட்டிருக்காங்க. நானும் இவ கிட்ட எவ்வளவோ சொல்லி பார்த்தேன். உன் அம்மாவையும் கூட்டிட்டு என் கூட வந்துடு. சந்தோசமா இருக்கலாம்னு. கேட்காம போயிட்டா. லவ் பண்ணி தொலைச்சுட்டேனே. விடவும் மனசு இல்ல.”

குரல் உடைய பேசினான்.

எல்லோருக்கும் ஓரளவு விசயம் புரிந்தது.

“உங்க மகளா இருந்தும் இப்படி அடுத்தவங்க சுயநலத்துக்கு யூஸ் பண்ணிக்க விடுறீங்களே.. தப்பா தெரியலயா?” என்று எங்கோ கேட்க நினைத்ததை, இங்கே கேட்டாள் ஜானகி.

இந்து அழுத மகளை அணைத்துக் கொண்டார்.

“ம்மா.. என்னால முடியலமா.. மதுவ மறக்க முடியலமா..” என்று தேம்பியபடி நின்றாள் பவானி.

“வேணாம்டா.. இந்த குடும்பத்துக்கு நாம உழைச்சது எல்லாம் போதும். இனி உனக்கு பிடிச்ச மாதிரி வாழு.. அந்த தம்பி கூட போ. போயிட்டு வா.”

“நீயும் வாமா”

“நான் வேணாம்.. நீ போ”

“ரெண்டு பேரும் வாங்களேன் ப்ளீஸ்..” என்று மது கெஞ்சினான்.

அவர் யோசிக்க, “இப்படியே போகாதீங்க. நேரா போய் மேடையில உட்கார்ந்து தாலிய கட்டி கூட்டிட்டு போங்க. உங்க சொந்தக்காரவங்க எல்லாம் வெளிய இருக்காங்க. கல்யாணம் பண்ணா தான் தப்பா பேச மாட்டாங்க” என்று ஜெகன் மீண்டும் பேசினான்.

மதுசூதனன் இந்துவை பார்த்தான். அவர் சம்மதம் சொன்னால் தானே செய்ய முடியும்?

சற்று முன்பு மாலா நடந்து கொண்டது அவரது மனதை மாற்றியிருந்தது. மாலாவின் இரண்டு மகள்களுக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அதை மனதில் வைத்து, பவானியை கொல்ல வந்தது இந்துவை காயப்படுத்தி இருந்தது.

“தாலி வாங்கிட்டு வாங்க மாப்பிள்ளை..” என்று இந்து அனுமதி கொடுக்க, பவானியின் முகத்தில் புன்னகை வந்தது.

“என் கிட்ட இருக்கு அத்த.. ஆனா இங்க கல்யாணம் ஏற்பாடு பண்ணது அவங்க” என்று கந்தசாமியை பார்த்தான்.

“பரவாயில்லபா.. நீ வா.. நீயும் வாமா” என்று முதல் முறையாக தெய்வநாயகி வாயைத்திறந்தார்.

பவானியை அழைத்துச் சென்று மணமேடையில் அவரே அமர வைத்தார். அருகில் கந்தசாமிக்கு பதில் மதுசூதனன் அமர, எல்லோரும் குழப்பமாக பார்த்தனர்.

அதைப்பற்றி கவலைப்படாமல், “ஐயரே மந்திரம் சொல்லுங்க. தாலிய கொடுபா” என்றதும் மது தாலியை கொடுத்தான்.

ஐயர் வேலையை முடித்ததும், மது தாலி கட்டி விட்டான்.

பவானி கண்ணீரோடு தாயை பார்க்க, அவரும் கண்ணீரோடு மகளின் மீது அட்சதை தூவினார்.

Leave a Reply