லாவண்டர் 11

Loading

தாலி கட்டி முடித்ததும் மதுசூதனன் பவானியின் கையை பிடித்துக் கொண்டான்.

“நாங்க கிளம்புறோம்மா” என்று தெய்வநாயகியிடம் சொல்லி விட்டு, மேடையை விட்டு இறங்கினான்.

இந்து தயங்கினார்.

“நம்ம பொருள் எல்லாம் அங்க இருக்கேடி” என்று அவர் தயங்க, “அத்த.. நாமலா போனா நல்லா இருக்காது. போலீஸோட போய் அத வாங்கிக்கலாம். இப்ப வாங்க” என்று மதுசூதனன் பதில் சொன்னான்.

இந்து அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பவானி சட்டென நின்று, தன் காதில் இருந்த தோடுகளை கழட்டினாள்.

“இது அவங்க போட்டது” என்றதும், அதை வாங்கி ஓரமாக நின்றிருந்த ஜெகன் கையில் கொடுத்தான்.

“அவங்க கிட்ட கொடுத்துடு ஜெகன்” என்றவன், அதற்கு மேல் தயங்கவில்லை.

அவர்கள் வெளியேறியதும், கோபத்தோடு மாலாவின் மொத்த குடும்பமும் சொந்தபந்தமும் வெளியேறி விட்டது.

ஜெகன் கையிலிருந்த காதணிகளை ஒருவர் கையில் கொடுத்து விட்டு, இல்லாத தூசியை தட்டிக் கொண்டான்.

இப்போது மிஞ்சி இருந்த கந்தசாமியின் சொந்தங்கள் அவர்களை வளைக்க, ஜெகன் நழுவி ஜானகியிடம் வந்தான்.

அவள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “க்கா.. நான் ஒன்னு சொன்னா செய்வியா?” என்று கேட்டான்.

“என்னது?”

“கந்தசாமிய கல்யாணம் பண்ணிக்க”

இதயம் திடீரென வெளியே குதித்து விடுவது போல் அதிர்ந்தது.

“என்னடா உளறுர?” என்று கேட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்?

“க்கா.. பண்ணிக்கிறியா? இல்லையா? அத மட்டும் சொல்லு”

“லூசு மாதிரி பேசாதடா.. கிளம்பலாம் வா” என்று கையை பிடித்தாள்.

அவன் அசையாமல் நின்று அவளை முறைத்தான்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு முதல்ல”

அவன் அதட்ட, ஜானகிக்கு தலை வலி வந்துவிடும் போல் இருந்தது. சற்று முன் நடந்த பிரச்சனையே போதுமான அளவு இருக்க, இவன் இன்னொரு பிரச்சனையை கிளப்ப பார்க்கிறானே?

“சொல்லுகா”

“இது என்ன நான் மட்டும் எடுக்குற முடிவா?” என்று அவள் முறைத்தபடி கேட்க நினைத்தாலும், வேதனை தான் வந்தது.

“அப்ப கந்தசாமி வந்து கல்யாணத்துக்கு கேட்டா சம்மதிப்பியா?” என்று கேட்டு வைத்தான்.

ஜானகிக்கு திடீரென தம்பிக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? என்று தோன்றியது.

ஆனால் அதை பற்றி யோசிக்கும் முன், “நீ இரு.. கந்தசாமி வந்து கேட்பாரு. கேட்கும் போது நீ பதில் சொல்லுற” என்றவன், அவளை அங்கேயே விட்டு விட்டு கந்தசாமியிடம் சென்றான்.

‘அய்யய்யோ!’ என்று பதறி விட்டாள்.

பின்னால் போக முடியாமல் கூட்டத்தில் அவன் புகுந்து விட, அவளுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது.

அவன் நேராக கந்தசாமியிடம் போகாமல், தெய்வநாயகியிடம் சென்றான்.

ஒருவர் அவரை குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, “கொஞ்ச நேரம் விடுங்களேன். எல்லாம் உங்க முன்னாடி தான நடந்துச்சு? இப்படி கேள்வி கேட்டு என்ன செய்ய போறீங்க? நியூஸ்ல எதுவும் வாசிக்க போறீங்களா?” என்று ஜெகன் கத்தினான்.

எல்லோரும் அவனை கோபமாக பார்க்க, “இந்த பையனோட அப்பா கிட்ட தான் கந்தசாமி வேலை பார்த்தான்.” என்று அவசரமாக சொன்னார் தெய்வநாயகி.

யாரும் கோபத்தில் அவனை எதுவும் சொல்லி விடக்கூடாதே என்ற பதட்டம்.

முதலாளி வீட்டுப்பிள்ளை என்றதும், எல்லோரின் வாயும் கப்பென மூடிக் கொண்டது.

“நீங்க இங்க வாங்க..” என்று தெய்வநாயகியை கூட்டத்திலிருந்து இழுத்துச் சென்று விட்டான்.

யாருமில்லாத இடத்துக்கு வந்ததும் நின்றான்.

“ம்மா.. இல்ல.. ஆண்ட்டி.. நான் ஒன்னு கேட்கட்டுமா?”

“என்னபா? சொல்லு”

“என் அக்காவ நீங்க மருமகளா ஏத்துக்கிறீங்களா?”

அதிர்ந்து பார்த்தவர், யாரின் காதிலும் விழவில்லையே என்று ஒரு முறை பார்த்துக் கொண்டார்.

எல்லோரையும் விட்டு தள்ளி அழைத்து வந்து விட்டான்.

“என்னபா சொல்லுற? இது சாதாரண விசயம் இல்ல”

“இப்ப இது தான் முக்கியமான விசயம். என் அக்காவுக்கு உங்க பையன ரொம்ப பிடிக்கும். மனசுக்குள்ள வச்சுட்டு தவிக்கிறா. இந்த கல்யாணம் நிச்சயமானதுல இருந்து அழுதுட்டே இருக்கா. எங்கம்மா வேற, ஒரு வயசானவனுக்கு ரெண்டாந்தாரமா எங்கக்காவ கட்டி வைக்க நினைக்கிறாங்க. எனக்கு இத விட்டா வேற வழி தெரியல. இப்பவே அவ கல்யாணம் உங்க புள்ளையோட நடந்தா தான் உண்டு. இல்லனா.. என் அக்காவ அந்த கிழவனுக்கு கட்டி வைக்கிறத விட, நானே கொன்னுட்டு செத்து போயிடுவேன்”

கடைசி வார்த்தையில் அவனையும் மீறி கண்கள் கலங்கி விட்டது.

“அச்சோ.. என்னபா நீ பெரிய வார்த்தை எல்லாம் பேசுற?” என்றவருக்கு, அவன் கலங்கி நிற்பதை தாங்க முடியவில்லை.

“நீங்க தான் இப்ப எப்படியாவது என் அக்காவ காப்பாத்தனும். ப்ளீஸ்” என்று கெஞ்சினான்.

அவன் கெஞ்சுவது அவருக்கு பிடிக்கவில்லை. உடனே சம்மதிக்க தான் ஆசை. ஆனால் மகனை கேட்க வேண்டும்.

இவர்கள் வேறு பெரிய குடும்பம். பின்னால் பிரச்சனை வந்து விட்டால்?

“உங்கம்மா.. அவங்க எதாவது செஞ்சா?” என்று தயங்கினார்.

“எங்கம்மா எதுவும் செய்ய முடியாது. அக்காவுக்கு பிடிச்சவரோட அவ கல்யாணம் நடந்துருச்சுனா, யாரு வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். அத பத்தி கவலைப்படாதீங்க. நீங்க உங்க மகன் கிட்ட மட்டும் பேசுங்களேன்”

தெய்வநாயகி கண்கலங்கி தூரமாக நின்றிருந்த ஜானகியை ஒரு முறை பார்த்தார். அவள் இவர்களை பார்ப்பதும், கந்தசாமி இருக்கும் இடத்தை பார்ப்பதுமாக பதட்டத்தோடு நின்றிருந்தாள்.

“உண்மையாவே.. உன் அக்காவுக்கு…”

“சத்தியமா அவர தான் பிடிக்கும். நீங்க கேட்டா அவ மறுக்க மாட்டா. கேட்டு பாருங்களேன்”

தெய்வநாயகி ஆழ மூச்செடுத்தார். கடவுள் எப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. யாரையோ மருமகளாக்க வந்தவர். வேறு ஒரு பெண்ணை மருமளாக்கிக் கொள்ள போகிறார்.

கந்தசாமி என்ன சொல்வான்? என்ற சந்தேகம் வந்தாலும், பேசிப்பார்த்து விடலாம் என்று மகனை அருகே அழைத்தார்.

கந்தசாமி வரும் முன் அழுது கொண்டு பாவமாக பார்த்த அக்காவிடம் ஜெகன் ஓடியிருந்தான்.

தம்பி அருகே வந்ததும், “ப்ளீஸ்டா.. நாம இங்க இருந்து போயிடலாம்” என்று கெஞ்சினாள்.

“க்கா.. நான் சொன்னா சொன்னது தான். நில்லு..”

“இல்லடா.. இதெல்லாம் தப்பு.. இங்க ஏற்கனவே ஒரு பிரச்சனை நடந்துருக்கு. நீ வேற புதுசா ஒன்ன ஆரம்பிக்காதடா.. வா” என்று அவனை இழுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“க்கா.. நில்லுகா..” என்று அவளை தடுக்கப்பார்த்தான் ஜெகன்.

அங்கே கந்தசாமியை ஒரு நொடி பார்த்த தெய்வநாயகி, ஒரு முடிவோடு பேச்சை ஆரம்பித்தார்.

“என்னமா?”

“பவானி போயிட்டா. அடுத்து என்ன பண்ணுறதா இருக்க?”

“மண்டபத்த காலி பண்ணிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான்”

“இந்த கல்யாணம் நின்னதுல உனக்கு வருத்தம் இல்லையா?”

“இல்லையே.. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழப்போயிட்டா.. நான் ஏன் வருத்தப்படனும்?”

“அப்ப உனக்கு பவானி மேல எந்த நினைப்பும் இல்ல அப்படித்தான?”

தலையாட்டி வைத்தவன் அதிகம் யோசிக்கவில்லை.

“அப்ப நான் கை காட்டுற ஒரு பொண்ண, எந்த கேள்வியும் கேட்காம கல்யாணம் பண்ணுவியா?”

“ம்மா” என்று அதிர்ந்தான்.

“பண்ணுவியா?”

“ம்மா என்ன பேசுறீங்க?”

“பண்ணுவியா என்ன பண்ணுற”

“என்னமா நீங்க…”

“போய் ஜானகிய கூட்டிட்டு வா. நான் ஐயர் கிட்ட பேசி வைக்கிறேன். மத்தவங்களையும் உட்கார வைக்கிறேன். சீக்கிரம். நல்ல நேரம் இன்னும் முடியல” என்றவர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

கந்தசாமி சிலையானான். ஜானகி? ஜானகி! ஜானகியா?

அவனுக்கு விசயம் புரிந்தாலும் நம்பமுடியவில்லை.

‘ஜானகிய கூட்டிட்டு வரனுமா?’ என்றவன், அவசரமாக ஜானகி இருந்த இடத்தை தேடினான்.

ஜானகி தம்பியோடு போராடிக் கொண்டிருந்தாள். அவனும் வராமல் அவளை தனியாக கிளம்பவும் விடாமல், கையைப்பிடித்துக் கொண்டு நின்றான் ஜெகன்.

அவர்களது பேச்செல்லாம் காதில் விழவில்லை. வாசல் அருகே நின்றிருந்தனர். எல்லோரும் உள்ளே இருக்க அவர்கள் தனியாக நின்றனர்.

திரும்பி தெய்வநாயகியை பார்த்தான்.அவர் தூரமாக நின்று, “போ” என்று கை காட்டினார்.

கந்தசாமிக்கு திடீரென ஒரு சந்தோசம் வந்தது. அது அழியும் முன்பே ஜானகியிடம் வந்து நின்று விட்டான்.

அவனை பார்த்து ஜானகி அதிர்ந்து நிற்க, ஜெகனை ஒரு பார்வை பார்த்து விட்டு, “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ஜானகி?” என்று கேட்டு வைத்தான்.

அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முடியாது. அவளது சம்மதம் அவனுக்கு வேண்டும். அதனால் அவன் கேட்டு நிற்க, ஜெகனுக்கு உள்ளம் துள்ளியது.

ஜானகி அதிர்ச்சியில் பேச்சற்று நிற்க, “பேசுகா” என்று பிடித்து உலுக்கினான்.

“அ… அது.. இவன் எதாவது சொன்னானா? அத மறந்துடுங்க.. நா…”

“ஜெகன் எதுவும் சொல்லல.. நான் தான் கேட்குறேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?”

“பார்த்தியா? கந்தசாமியே வந்து கேட்டா சரினு சொல்லுவேன்னு சொன்னியே.. இப்ப சொல்லுகா…” என்று ஜெகன் அவசரப்படுத்தினான்.

ஜானகிக்கு தலை சுற்றியது. இருவரையும் மாறி மாறி பார்த்தவள், கடைசியாக சம்மதமாக தலையாட்டினாள்.

“தலையாட்டாத.. வாயத்திறந்து சொல்லு” என்று ஜெகன் மேலும் உசுப்ப, “பண்ணிக்கிறேன்” என்று விட்டாள்.

“ஹப்பா…” என்று நெஞ்சில் கைவைத்து மூச்சு விட்டவன், “நல்ல நேரம் முடியல.. மாமா.. தாலி ரெடி தான? நான் அக்கா நகை எல்லாம் கார்ல வச்சுருக்கேன். எடுத்து வர்ரேன். நீங்க இவள உங்க அம்மா கிட்ட கொண்டு போய் விடுங்க” என்று  விட்டு உடனே வெளியே ஓடினான்.

அவன் போன அவசரத்தை பார்த்து விட்டு ஜானகி அதிர்ச்சியோடு நிற்க, கந்தசாமி கை நீட்டினான்.

“போகலாமா?” என்று கேட்க, அந்த கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

அந்த காட்சியை எஞ்சி இருந்த அத்தனை சொந்தங்களும் பார்த்து விட்டு, திறந்த வாய் மூடாமல் நின்றனர்.

ஜானகி கையை ஒரு நொடி பார்த்தாள்.

‘விதியே உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துருக்கு விட்டுராத ஜானகி’ என்று மனம் சொல்ல, உடனே அந்த கையை பற்றிக் கொண்டாள்.

கந்தசாமிக்கு உலகை வென்ற சந்தோசம். அவனாக எதுவும் செய்யவில்லை. ஆனால் அவனுக்கானது அவன் கைக்கு வந்து விட்டது.

அவளை அழைத்துச் செல்ல, உடனே தெய்வநாயகி இருவரையும் பார்த்து விட்டு நெருங்கி வந்தார்.

“மாலையிருக்கு. எடுத்து வந்து கழுத்துல போடு.. எங்க தம்பி?”

“கார்ல இருந்து நகைய எடுக்க போயிருக்கான்”

“சரி ரெண்டு பேரும் வாங்க” என்று அழைத்துச் சென்றார்.

ஐயரிடம் அவர் பேசி விட, மாலையை கொடுத்தார். அதை அணியும் முன்பு நகைகளோடு ஜெகன் வந்து விட்டான்.

அவன் வந்த வேகத்தை பார்த்து இருவருக்கும் புன்னகை வந்தது.

‘ஏற்கனவே ப்ளான் பண்ணிருக்கான்’ என்று தெளிவாக புரிந்தது.

நகைகளை உடனே அணிவித்து, மாலையும் அணிந்து மணப்பெண்ணாக மேடையில் அமர்ந்தாள் ஜானகி.

கனவில் கூட நடக்காது என்று நினைத்த ஒன்று இப்போது நடப்பதை நம்ப முடியவில்லை. எல்லாம் கனவாக போய்விடுமோ என்று பயம் கூட வந்தது.

கந்தசாமிக்கும் அதை எண்ணம் தான். அதனால் மிகவும் அமைதியாக இருந்தான். மீண்டும் மந்திரங்களை ஓதி ஐயர் கந்தசாமி வாங்கி வைத்திருந்த தாலியை கொடுக்க, கையில் வாங்கி விட்டு ஜானகியை பார்த்தான்.

கண்கலங்கி அமர்ந்திருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கந்தசாமி எதுவும் பேசாமல் தாலி கட்டி முடிக்க, அட்சதை தலையில் விழுந்தது.

ஜானகியின் கண்ணீர் பட்டென கைகளில் பட்டு தெறித்தது. முடிச்சிட்டு பொட்டும் வைத்த பிறகு, கண்ணை துடைத்துக் கொண்டாள்.

கந்தசாமி அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

Leave a Reply