லாவண்டர் 12

Loading

திருமணம் முடிந்ததும், ஜெகனின் மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது. இனி எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமும் வந்தது.

முதலில் திருமணம் செய்த ஜோடி உடனே கிளம்பி விட, இந்த ஜோடியை சாப்பிட வைத்து அனுப்ப நினைத்தனர். வந்தவர்கள் எல்லாரும் இன்று நடந்ததை பேசியபடி உணவை உண்டு விட்டுக் கிளம்பினர்.

மணமக்களையும் அமர வைத்து சாப்பிடச் சொன்னார் தெய்வநாயகி.

ஜானகிக்கு இது வரை இல்லாத கவலை இப்போது வந்தது. மேனகாவிற்கு விசயம் தெரியாதே? தெரிந்தால் என்ன செய்வார் ?

“க்கா.. எதையாவது யோசிக்காம சாப்பிடு” என்று ஜெகன் அதட்ட, கந்தசாமி அவளை பார்த்து விட்டு அமைதியாக இருந்தான்.

உணவு வேளை முடிந்ததும், ஜானகி கந்தசாமியிடம் கவலையை சொன்னாள்.

“அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப கோபப்படுவாங்க” என்று அவள் கவலையாக சொல்ல, “பேசிக்கலாம். நான் பேசுறேன்” என்றான் அவன்.

“நீங்க பேச வேணாம். அவங்க கேட்க மாட்டாங்க. நாம இப்ப அங்க போகலாமா?”

“ம்ம் போகலாம்” என்று ஒப்புக் கொண்டு தெய்வநாயகியிடம் சொல்ல, ஜெகன் அவசரமாக மறுத்தான்.

“அங்க போனா எங்கம்மா திட்ட தான் செய்வாங்க. நேரா உங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறமா அங்க போகலாம்” என்று தடுத்தான்.

“இல்ல ஜெகன். அவங்களுக்கு தெரியாம கல்யாணம் நடந்துடுச்சு. முதல்ல அவங்க கிட்ட சொல்லுறது தான் சரி” என்று கந்தசாமி சொல்ல, தெய்வநாயகி ஜெகனின் பக்கம் நின்றார்.

அவருக்கு ஜானகியை ஒரு கிழவனுக்கு கட்டி வைக்க நினைத்த மேனகாவை பிடிக்கவில்லை. அது மட்டுமா? அதைச் சொல்லி ஜெகன் அழுதானே? அங்கே சென்று சாபத்தை வாங்கும் முன், நல்லதை பார்த்து விடுவது நல்லது என்று நினைத்தார்.

“நம்ம வீட்டுக்கு போகலாம்பா.. அங்க போயிட்டு சொந்தங்கள அனுப்பிட்டு, அப்புறமா ஜெகன் வீட்டுக்கு போவோம். அங்க நம்ம சொந்தங்களோட போய் நின்னா, தேவையில்லாத மனஸ்தாபம் தான் வரும்” என்று அமைதியாக சொன்னார்.

தாயை மறுக்க முடியாமல் கந்தசாமி ஒப்புக் கொள்ள, அவர்களது காரிலேயே மணமக்களை அழைத்துச் சென்றான் ஜெகன்.

வீடு சிறிய வீடு தான். ஆனால் அதை பார்த்து விட்டு ஜெகனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. இனி அக்கா பாதுகாப்பாக இருப்பாள் என்ற நம்பிக்கை மட்டும், அவனுக்கு போதுமானதாக இருந்தது.

ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்று, சடங்குகளை செய்ய வைத்து முடித்ததும், சொந்தங்கள் விடை பெற்றுக் கொண்டனர்.

மதிய உணவையும் அங்கேயே சாப்பிட்டு விட்டு, மேனகாவை பார்க்க கிளம்பினர்.

கழுத்தில் தாலியோடு சென்று நிற்கும் போது என்ன பேசுவாரோ? என்று ஜானகிக்கு பயமாக இருந்தது.

மேனகா எவ்வளவு தவறுகளை செய்தாலும், தாய் என்ற பயம் போகவில்லை.

வீட்டில் காரை நிறுத்தியதும், “க்கா.. அம்மா எதாவது சொன்னா காதுல வாங்காத. எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பிடு.. மாமா.. அக்கா உங்க பொறுப்பு. நான் அம்மாவ பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு காரை விட்டு இறங்கினான்.

வீட்டை நெருங்கியதும், ஜானகிக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

கந்தசாமி அவளது கையைப்பிடித்து தட்டிக் கொடுத்தான்.

“பயப்படாத.. தைரியமா இரு” என்று சொல்லும் போதே, ஜெகன் முதலில் உள்ளே சென்றான்.

“எங்கடா போய் தொலைஞ்சீங்க ரெண்டு பேரும்? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறீங்க? ஃபேக்டரிக்கும் போகலயாம்?” என்று மேனகா மகனை பார்த்ததுமே பொறிந்தார்.

“நேத்தே சொன்னோம்ல? கல்யாணத்துக்கு போறோம்னு?”

“அது காலையில முடிஞ்சுடும்.‌ இவ்வளவு நேரம் எங்க சுத்துனீங்க?”

“மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டு வர்ரோம்”

“அங்க ஏன்டா நீங்….”

கேட்டுக் கொண்டே திரும்பியவர் கண்ணில், தாலியோடு கந்தசாமியின் கையைப்பிடித்துக் கொண்டு நின்ற ஜானகி விழுந்தாள்.

பதறியடித்து எழுந்தவர், அந்த தாலியை நம்ப முடியாமல் பார்த்தார்.

“அ.. ஜானகி… என்னடி இது கோலம்?” என்று அவர் பதற, “அக்காவுக்கு அவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.” என்று மிடுக்காக சொன்னான் ஜெகன்.

“இ.. இது…” என்று பதட்டத்தோடு அருகே சென்றவர், வேகமாக மகளை மறுபக்கம் பிடித்து இழுத்தார்.

அவளது கோலம் அவரை வெறியேற்ற, ஓங்கி அறைந்தார்.

“என்ன காரியம்டி பண்ணிட்டு வந்து நிக்கிற? யார கேட்டுடி கல்யாணம் பண்ண?” என்று அவளை பிடித்து உலுக்க, கந்தசாமி நடுவே புகுந்து இருவரையும் பிரித்தான்.

“ம்மா” என்று அலறிய ஜெகனும் தாயை பிரித்து தள்ளி நிறுத்தினான்.

“இதுக்கு நீயும் உடைந்தையாடா? பாவி” என்று மகனையும் அடித்தார்.

ஜெகன் அடியை பற்றி கவலையில்லாமல் நிற்க, ஜானகியும் கந்தசாமியும் தான் பதறினர்.

“அவன விடுங்கமா” என்று ஜானகி தடுக்க பார்க்க, “ஏய்.. அம்மானு கூப்பிடாதடி.. துரோகி.. பெத்தவள மதிக்காம கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிற? நீயெல்லாம் உருப்புடுவியாடி? இந்த தாலி நிலைக்குமா?” என்று கேட்டு அவள் தாலியை தொட வர, பதறி பின்னால் சென்றாள் ஜானகி.

“இதோட நிறுத்துங்க.. இதுக்கு மேல கை வச்சா என்ன செய்வேன்னு தெரியாது” – கந்தசாமி.

“எங்க கிட்ட வேலை பார்க்குற நாயி.. நீ என்னை மிரட்டுறியா? தள்ளுடா.. இன்னைக்கு என் கையால அவள கொன்னுடுறேன்”

மேனகா பாய, ஜெகன் அவரை பிடித்து இழுத்தான்.

“அக்காவ எதுவும் சொல்லாதமா.. நீ மட்டும் நல்ல அம்மாவா இருந்துருந்தா, அக்கா கல்யாணம் இத விட நல்லா நடந்துருக்கும். அவசர அவசரமா இவர் அவளுக்கு தாலி கட்டாம, கால நேரம் பார்த்தே ரெண்டு பேருக்கும் கட்டி வச்சுருக்கலாம்.”

“நான் நல்ல அம்மா இல்லையா? உங்கள பெத்து வளர்த்ததுக்கு இதெல்லாம் தேவை தான்டா எனக்கு?”

“பெத்த மக வாழ்க்கைக்கு குழி பறிக்குற யாரும் அம்மா கிடையாது. க்கா.. நீ உள்ள போய் எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்பு..”

“ஏய்.. வீட்டுக்குள்ள போன கால வெட்டிருவேன்”

“அவளுக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கு. க்கா நீ உள்ள போ” என்றவன் கந்தசாமிக்கு கண்ணை காட்டினான்.

அவன் ஜானகியை உள்ளே இழுத்துச் செல்ல, மேனகா மகனை விட்டு அமைதியாக நின்றிருந்த தெய்வநாயகியை முறைத்தார்.

“உன் புள்ளைய வச்சு பணக்கார பொண்ண மடக்கி போட்டுட்ட இல்ல? நீயெல்லாம் நல்லா இருப்பியா?”

“ஆமா பெரிய பணக்கார பொண்ணு.. நம்ம குடும்ப விவரம் வெளிய தெரியாதுனு ரொம்ப பேசாதமா..” என்று ஜெகன் தான் அடக்கினான்.

“ஏய் நீ பேசாதடா.. இந்தாடி.. நீயெல்லாம் நல்லா இருக்க மாட்ட.. நாசமா தான் போவ. உன் புள்ளை நல்லா இருக்க மாட்டான். அவள கட்டுன என் வயித்துல பிறந்தது அழுதுட்டு என் கால்ல வந்து விழும்டி.. விழல என் பேர மாத்திக்கிறேன்”

மேனகா வாய் மூடாமல் திட்டிக் கொண்டிருக்க, ஜானகி எல்லாம் கேட்டபடி அவளது உடைகளை அவசரமாக எடுத்து வைத்தாள். கந்தசாமியும் உதவினான்.

இருவரும் வேலையை முடித்து வெளியே வரும் போது, மேனகா கண்ணீரோடு அங்கே அமர்ந்திருந்தார்.

ஜெகன், “கிளம்பு” என்பது போல் சைகை காட்ட, ஜானகி தாயிடம் இனி பேச முடியாது என்று வாசலுக்கு நடந்தாள்.

“போடி போ.. பெத்தவ வயித்தெரிச்சல கொட்டிட்டு போற.. அந்த வாழ்க்கை விளங்காம தான் போகும்” என்று சபித்தார்.

தெய்வநாயகி அழுத ஜானகியை தட்டிக் கொடுத்தார்.

“வருத்தப்படாதமா..” என்றவர், ஆட்டோவை அழைத்து அதில் ஏறி குடும்பத்தோடு கிளம்பி விட்டார்.

ஜெகன் தாயை சமாளிக்க அங்கேயே இருக்க, காரை எடுத்துச் செல்ல முடியாது.

தாயின் சாபத்தில் மனம் வலிக்க கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு, கந்தசாமியின் வீட்டுக்குச் சென்றாள் ஜானகி.

•••

திருமணம் முடிந்து அங்கிருந்து கிளம்பியப்பின், இந்து புலம்பிக் கொண்டே இருந்தார்.

அவரது அத்தனை விசுவாசத்திற்கும், கடைசியாக கிடைத்த பதில் அவரை உடைய வைத்தது.

அவரது மகளை காக்க வேண்டும் என்று தான், அவர்கள் குடும்பத்தில் வேலைக்காரியாக இருந்தார். பெண்பிள்ளையோடு தனியாக வாழும் அளவு அவருக்கு தைரியம் இல்லை.

அவளை பள்ளி படிப்புக்கு மேல் படிக்க வைக்க மாட்டேன் என்ற போது கூட, அவர் கோபப்படவில்லை. குடும்ப அமைப்போடு பாதுகாப்பாக இருந்தால் போதும் என்று ஒப்புக் கொண்டார்.

பவானி ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தாள். நிறைய பணம் இல்லாவிட்டாலும், அவளது தேவைகளை கவனிக்கும் அளவு பணம் வந்தது.

அந்த பணத்தையும் எதாவது சொல்லி மாலா பறித்துக் கொள்வார். சாதாரணமாக, இதற்கு பணம் கொடு, அதற்கு பணத்தை கட்டு என்று அவளது சம்பளம் காலியாகும் வரை விட மாட்டார். அதையும் பொறுத்துக் கொண்டு தான் வாழ்ந்தனர்.

திருமண விசயம் வரும் போது, தான் ஒருவனை காதலிப்பதாக பவானி சொன்னாள். நல்ல சம்பந்தம் கெட்டுப்போகக்கூடாது என்ற எண்ணத்துடன், பாவினியை மிரட்டி உருட்டி பட்டினி கிடந்து சம்மதிக்க வைத்தார் இந்து.

தாயும் மகளும் ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்க, தாயின் பேச்சுக்கு பவானி படிந்தாள்.

திருமணம் முடிந்தால் போதும் மகள் நன்றாக வாழ்வாள் என்று இந்து காத்திருக்க, இப்படி ஒரு திருப்பமா?

அவளை கொல்லவே துணிந்தார்களே. மகளில்லாமல் அவர் எப்படி வாழ்வார்? மாலாவை போல திட்டம் போட்டு காரியம் சாதிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. இருந்திருந்தால் அந்த வீட்டில் இத்தனை காலம் அடிமையாக வாழ்ந்தும் இருக்க மாட்டார்.

புலம்பியவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தான் மது. வீட்டுக்கதவை திறந்து உள்ளே நுழைந்ததும், இந்து புரியாமல் பார்த்தார்.

“உங்க வீட்டுல யாருமே இல்லையா?”

“எனக்குனு யாரும் இல்ல அத்த. உங்க மகள தவிர. அம்மா அப்பா போயிட்டாங்க. எனக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் என் கூட இருக்க முடியாதுனு, ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டான். நான் மட்டும் தான்”

அதைக்கேட்டு வருத்தமாக இருந்தாலும், “இனி நாங்க இருக்கோம் மாப்பிள்ளை” என்று ஆறுதல் சொன்னார்.

அவன் ஒருவன் மட்டுமே பயன்படுத்துவதால், வீட்டில் நிறைய பொருட்கள் இல்லை. ஒற்றை அறை கொண்ட வீடு. அதுவும் மிக மிக சிறிய வீடு.

“வேற வீடு பார்த்துட்டு இருக்கேன். கிடைச்சுட்டா அங்க மாறிடலாம்” என்று சொன்னவன், இருவரையும் அமர வைத்தான்.

“இப்ப அவசரமில்ல. ஆனா சீக்கிரமா பாருங்க..” என்றவருக்கு இந்த வீட்டில் புதிதாக திருமணமானவர்களோடு அவரும் தங்குவது சரியென்று தோன்றவில்லை.

ஆனால் இப்போது வேறு வழியும் இல்லை.

“எங்க டிரஸ் எல்லாம் அங்க இருக்கு மது. அவங்க கோபத்துல தூக்கி எறிஞ்சுட்டா என்ன செய்யுறது?” என்று பவானி கவலைப்பட, “நாம போலீஸோட போகலாம். நீ இந்த சேலைய மாத்திக்க. இரு” என்றவன், ஒரு பையை எடுத்துக் கொடுத்தான்.

“சுடிதார் இருக்கு. மாத்திட்டு கூப்பிடு. நாம மூணு பேரும் போகலாம்” என்று வெளியே சென்றான்.

பவானி மாற்றியதும், மூவரும் கிளம்பி காவல்நிலையம் சென்றனர். அங்கு மது விசயத்தை சொன்னான். அவர்கள் பவானியை கொலை செய்ய வந்ததை சொன்ன பிறகு, ஒரு கான்ஸ்டபிளை உடன் அனுப்பி வைத்தனர்.

அவரோடு வீட்டுக்குச் செல்ல, அங்கு மாலா ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார்.

கோபத்தோடு பாவானி இருந்த அறையை திறந்து, எல்லாவற்றையும் எடுத்து வீசிக் கொண்டிருக்க, மூவரும் வந்து விட்டனர்.

“இந்தாங்கமா.. இவங்க அவங்க பொருள எடுக்குற வரை யாரும் எதுவும் பேசக்கூடாது. மீறி பேசுனா புடிச்சு உள்ள போட்டுருவேன்” என்று காக்கி உடையில் ஒருவன் அரட்டும் போது, பட்டென வாயை மூடிக் கொண்டு நகர்ந்தனர்.

பவானியும் இந்துவும் அவசர அவசரமாக எல்லாவற்றையும் எடுத்தனர். பவானி தன் வங்கி சம்பந்தமான பொருட்களை எடுத்து பத்திரப்படுத்தினாள்.

அவளது சேமிப்பு பணம் முழுவதும் அதில் தான் இருக்கிறது. அது நல்ல வேளையாக மாலாவின் கண்ணில் படவில்லை.

குண்டூசியும் விடாமல் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டனர். மாலா அவர்களை தீப்பார்வை பார்த்தாலும், திட்டக் கூட முடியாமல் அமர்ந்திருந்தார். காரணம் காக்கி உடையில் இருந்தவன் பார்த்த பார்வை.

பவானி அந்த வீட்டை விட்டு வெளியேறி தாயோடு ஆட்டோவில் அமர்ந்த பிறகு தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

Leave a Reply