லாவண்டர் 13
![]()
இரவு மெத்தையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள் ஜானகி.
நேற்றிலிருந்தது நடந்ததை எல்லாம் பொறுமையாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
நேற்று முழுவதுமே அவளுக்கு மன வேதனை தான். கந்தசாமியின் திருமணத்தை பற்றி நினைத்து, வருந்திக் கொண்டே நேரத்தை ஓட்டினாள்.
நேற்றிரவு ஜெகன் அவளை வற்புறுத்திய போது, அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. அவனது வற்புறுத்தலுக்கு காரணம் அப்போது தெரியாது.
ஆனால் அவன் சொன்னது போல், கந்தசாமியும் அவளும் ஒன்றாக வேலை செய்கின்றனர். அவளை மட்டும் திருமணத்திற்கு அழைக்கவும் செய்தான்.
போகாமல் விட்டால் மரியாதையாக இருக்காது என்று மனதை தேற்றிக் கொண்டாள். ஆயிரம் காரணங்களை அடுக்கி விட்டு காலையில் எழுந்து கிளம்பினாள்.
இதற்கிடையில், எந்த நேரத்தில் ஜெகன் நகைகளை எடுத்து காரில் வைத்தான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் அணிந்திருக்கும் அனைத்தும் அவளது நகைகள். அவளிடம் பத்திரமாக இருந்தது. சாவியிருக்கும் இடம் ஜெகனுக்கு தெரிந்ததால் எடுத்து வைத்திருக்கிறான்.
இது வரை புரிந்தது. ஆனால் பவானி விசயம்? அந்த மதுசூதனன் எப்படி வந்தான்?
அது தான் அவளை குழப்பியது. அதைப்பற்றி ஜெகனிடம் கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று விசாரிக்க வேண்டும்.
இப்போது தாயிடம் தனியாக என்ன பாடுபடுகிறானோ? என்று கவலையாக இருந்தது.
அந்நேரம் கந்தசாமி உள்ளே வந்தான். ஜானகி நிமிர்ந்து பார்க்க, கதவை அடைக்காமல் விட்டு அருகே சென்று அமர்ந்தான்.
ஜானகி அவனையே பார்க்க, “என்னாச்சு?” என்று புருவம் உயர்த்தினான்.
“ஜெகன் கிட்ட பேசனும்.”
“பேசு”
“நாம ரெண்டு பேரும் பேசனும்”
“ஏன்?”
“அவன் அங்க கஷ்டப்பட்டுட்டு இருப்பான். நாம ரெண்டு பேருமா பேசுனா நல்லா இருக்கும்”
கந்தசாமி தலையாட்ட, உடனே ஜெகனை அழைத்தாள்.
“க்கா.. சாப்பிட்டியா?” என்று ஜெகன் ஆரம்பிக்க, ஜானகி அவனது முகத்தை ஆராய்ந்தாள்.
கன்னம் சிவந்து போயிருந்தது.
“அடிச்சாங்களாடா?” என்று கவலையாக கேட்க, “சின்ன வயசுல எவ்வளவு வாங்கிருக்கேன். பரவாயில்ல விடுகா” என்றான் சாதாரணமாக.
“அவங்கள அடிக்க விடாத ஜெகன். இப்படி சிவந்து போயிருக்கு” என்று கந்தசாமி பேச, “அவங்க அம்மா மாமா. அவங்கள தடுக்க சக்தி எல்லாம் இல்ல. ரெண்டு அடி தான. கோபம் போற வரை அடிச்சுட்டு போகட்டும்” என்றான்.
“சாப்பிட்டியா?”
“அம்மா எதுவுமே செய்யல. கோபமா ரூம்ல போய் உட்கார்ந்துட்டாங்க. வெளிய ஆர்டர் போட்டேன். இப்ப வந்தா சாப்பிடனும். நீங்க?”
“நாங்க சாப்பிட்டோம்”
“அப்போ சரி. நான் சாப்பிட்டு, காலேஜ் வொர்க் இருக்கு. அத பார்க்குறேன். நாளைக்கு ஃபேக்டரில பார்க்கலாம்..”
“ம்ம்”
“அப்புறம் அம்மா அந்த ஃபேக்டரிய அக்கா கிட்ட இருந்து புடுங்குவேன்னு குதிச்சாங்க. நான் இப்படியே விட்டாலாச்சும் அக்கா காசு கொடுக்கும். நீங்க குதிச்சா அக்கா அதுவும் கொடுக்காதுனு சொன்னேன். ஆனா அத உனக்கும் மாமாவுக்கும் கொடுக்கவே கூடாதுனு சண்டை போட்டாங்க. நீங்க போய் நின்னு, ஜாக்ஷி வந்து என் ஃபேக்டரிய எனக்கே கொடுனு வாங்கிட்டு போயிட்டா, என்ன செய்வீங்கனு கேட்டேன் அமைதியாகிட்டாங்க. அங்க தப்பி தவறி வந்தா பார்த்துக்கோங்க மாமா”
“பார்த்துக்கலாம் ஜெகன். நீ மட்டும் பத்திரமா இரு. அடி வாங்காத”
“சரி.. குட் நைட்..” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
ஜானகி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
கேட்க நினைத்ததை உடனே கேட்க முடியவில்லை. நாளை நேரில் சந்திக்கும் போது தான் கேட்க வேண்டும்.
“ஜானகி..”
திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இது வரை கந்தசாமி அவளை பெயர் சொல்லி அழைத்தது இல்லை.
“என்ன இவ்வளவு சாக்?”
“புதுசா பேர் சொல்லி கூப்பிடுறீங்களே.. அதான்”
“பொண்டாட்டிய மேடம்னு கூப்பிட்டா அசிங்கமா இருக்காது?”
“அசிங்கமா?”
“ஆமா.. யாரையோ மேடம்னு கூப்பிடலாம். பொண்டாட்டிய கூப்பிட்டா நல்லா இருக்காது.”
“அப்ப நானும் பேர் சொல்லி கூப்பிடலாமா? வேற யாரையோ சார்னு கூப்பிடலாம். புருஷன கூப்பிட கூடாதுல?”
“கூப்பிடேன். கந்தசாமினு கூப்பிட்டாலும் சரி. டேய் இங்க வாடானு கூப்பிட்டாலும் சரி. கூப்பிட்டா மட்டும் போதும்” என்றதும் ஜானகிக்கு திடீரென வெட்கம் வந்து விட்டது.
உடனே வேறு பக்கம் பார்த்தவள், “உங்கள அத்த சாமினு கூப்பிடுவாங்களோ?” என்று கேட்டாள்.
“ஆமா.. சாமி தம்பி எல்லாம் சொல்லுவாங்க”
“அப்ப நான் கந்தானு கூப்பிடுறேன்”
“எங்க?”
“ஹான்?”
“கூப்பிடுறியே.. எங்க?”
“ம்ம்..ஃபேக்டரிக்கு வேலை பார்க்க தான்” என்று நக்கலாக சொன்னாள்.
“வேலையா? பொண்டாட்டி முதலாளியா இருந்தா ரொம்ப கஷ்டமாச்சே.. சமாளிப்போம்” என்று அவன் பெருமூச்சு விட அவள் சிரித்தாள்.
“இன்னைக்கு நடந்தது எல்லாம் யோசிச்சு பார்த்தேன் ஜானகி.. எல்லாமே சர்ப்ரைஸ் தான். ஆனா ஒன்னு மட்டும் புரியல”
“என்னது?”
“நீ ஏன் கல்யாணத்துக்கு சம்மதிச்ச?”
அதிர்வோடு உதட்டை கடித்து திரும்பிக் கொண்டாள்.
“என்னால இதுக்கு மட்டும் பதில் கண்டு பிடிக்க முடியல. எதுக்கு சம்மதிச்ச?”
“நீ எதுக்கு கேட்ட? கல்யாண மண்டபத்துல நூறு பொண்ணு இருந்தாங்க. திடீர்னு வந்து என் கிட்ட நின்னு கல்யாணம் பண்ணிக்கலாமானு ஏன் கேட்க?”
இப்போது அவன் வாயை மூடிக் கொண்டான். உடனே பதில் சொல்ல முடியவில்லை. சொல்வது சரியா என்றும் புரியவில்லை.
“பதில காணோம்”
“முதல்ல கேள்வி கேட்ட எனக்கே இன்னும் பதில் வரலயே?”
“இந்த பதில் தான் அந்த பதிலாம்” என்று சமாளித்தாள்.
“என்னோடதும் உன் பதிலும் எப்படி ஒன்னாகும்?”
“ஆகும்.. யோசிச்சா ஆகும்”
“அது தான் எப்படி?”
“பதில் சொல்லு. ஆகுதா இல்லையானு பார்க்கலாம்”
“எங்கம்மா தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
“என் தம்பி தான் கல்யாணம் பண்ணிக்கோனு என் கிட்ட சொன்னான்”
ஜானகி புருவம் உயர்த்த கந்தசாமிக்கு சிரிப்பு வந்தது.
“அம்மா எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா?”
“எதுக்கு?”
“உன் அம்மா எதோ ஒரு கிழவனுக்கு உன்னை கட்டி வைக்க ப்ளான் பண்ணதா ஜெகன் சொன்னான். அந்த கிழவன் கிட்ட இருந்து காப்பாத்தனும்னு அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்களாம்.”
“அதே தான் ஜெகனும் என் கிட்ட சொன்னான். இன்னும் கொஞ்ச நாள் விட்டா, அம்மா என்னை அவனுக்கு கட்டி வச்சுருவாங்க. நீ கந்தசாமிய கட்டிக்கோனு”
உண்மையில் எத்தனையோ முறை ஜானகி அறிவாளித்தனத்தை காட்டியிருக்கிறாள். அவளது வேலையில் அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக அவன் ஆச்சரியப்பட்டது இல்லை.
அவளை விட திறமையான எத்தனையோ பேரை பார்த்திருந்தவனுக்கு அவளது திறமை சாதாரணமாக தான் இருந்தது. அவள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். சிற்றம்பலத்தின் மகள் என காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறான்.
ஆனால் இன்று.. அவனது பதிலை அவனுக்கு திருப்பி தரும் இந்த புத்திசாலித்தனம் ஆச்சரியத்தை கொடுத்தது.
இது மட்டுமே காரணமா? கேட்கலாம். அப்போதும் அவள் உன்னுடைய பதிலை சொல்லு என்று கேட்டு அதையே பதிலாக சொல்வாள்.
அவளிடம் இருக்கும் விசயத்தை சொல்ல மாட்டாள். அதனால் அதோடு கேள்வியை நிறுத்திக் கொண்டான்.
“என்ன முடிஞ்சதா?” என்று ஜானகி சிரிப்போடு கேட்க, “இத நாம இன்னொரு நாள் பேசுவோம். இப்ப தூங்கலாம். நீ சேலைய மாத்தனுமா?” என்று கேட்டான்.
“பரவாயில்ல. நான் இப்படியே தூங்கிடுறேன்”
“ஓகே” என்றவன் கதவை பூட்டி விட்டு, மெத்தையின் ஓரம் படுத்துக் கொண்டான்.
சுவற்றோரமாக ஜானகி படுத்து போர்வையை போர்த்திக் கொண்டாள்.
சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை.
“நல்லா தூங்கு ஜானகி. நாளைக்கு வேலை இருக்கு” என்றவன், திரும்பிப் படுத்து உறங்க ஆரம்பித்தான்.
ஜானகி பதில் சொல்லாமல் மறுபக்கம் திரும்பி கண்ணை மூடிக் கொண்டான். புது இடம் என்றெல்லாம் தோன்றவில்லை. நேற்று தத்தளித்த மனம் இன்று நிம்மதியாக உறங்கி விட்டது.
காலையில் சீக்கிரமே எழ வேண்டும் என்று அலாரம் வைத்திருக்க, அது அடித்த அடுத்த நொடி எழுந்து விட்டாள்.
கந்தசாமி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, அவனை தொந்தரவை செய்யாமல் இறங்கி தன் பெட்டியை எடுத்தாள்.
உள்ளே இருந்த உடையை எடுத்தவள், அறைக்கு வெளியே சென்றாள்.
தெய்வநாயகி ஹாலில் தான் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்யாமல் கழிவறைக்குள் புகுந்து கொண்டாள்.
நிம்மதியாக குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வரும் போது, தெய்வநாயகி விழித்து விட்டார்.
“எந்திரிச்சுட்டியாமா? காபி? டீ? எதுமா குடிப்ப?”
“காபி.. நானே போட்டுக்கிறேன் அத்த.. உங்களுக்கும் போடவா?”
தெய்வநாயகி சந்தோசமாக தலையாட்டினார்.
பெரிய வீட்டுப்பெண் எப்படி பழக்கமோ? என்று அவருக்கு இருந்த கவலை மெல்ல குறைந்தது.
அவர் வாசல் பெருக்கி கோலம் போட்டு விட்டு வரும் போது, காபியை கொடுத்தாள்.
“நல்லா இருக்குமா” என்று பாராட்டி விட்டு குடித்தார்.
“நான் நிறைய சமைக்க மாட்டேன் அத்தை. ஆனா நானா சமைச்சுப்பேன். எனக்கு நீங்க செய்ய வேணாம். ஓகே?”
“சரிடாமா”
“உங்க பையனுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுனு எனக்கு தெரியாது. தெரிஞ்சுட்டு நான் கத்துக்கிற வரை என்னை திட்டாம இருக்கனும்”
குழந்தை போல் கேட்டவளை பார்த்து கோபமே வரவில்லை. உடனே சிரிப்போடு தலையாட்டினார்.
“நேத்து ஜெகன் உங்க கிட்ட என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.
“ஏன்மா?”
“தெரிஞ்சுக்கலாம்னு தான்”
“உன்னை கந்தசாமிக்கு கட்டி வைக்கனும்னு கேட்டான்.”
“காரணம் சொன்னானா?”
“ஆமா.. உன் அம்மா எதோ வயசானவனுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்க பார்த்தாங்களாமே. அத சொன்னான். அக்காவ காப்பாத்தனும்னு கேட்டான். நல்ல அருமையான புள்ள. உனக்காக என்னவும் செய்ய தயாரா இருக்கான்”
“ஆமா.. என் அம்மா தான் என்னை பத்தி நினைக்கல. என் தம்பி என்னை தவிர எதையும் நினைக்க மாட்டேங்குறான்”
“கடவுள் ஒரு கதவ மூடுனா இன்னொரு கதவ திறப்பாருனு சும்மா சொல்லல.. நல்ல தம்பிய உனக்கு கொடுத்துருக்கான். அவன பத்திரமா பார்த்துக்கனும்”
ஜானகி தலையாட்ட ,”அந்த புள்ள அழும் போது எனக்கே மனசு கேட்கல. உங்க ரெண்டு பேரையும் பத்தி உன் புருஷன் நிறைய சொல்லிருக்கான். அப்பா போனப்புறம் நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு பொறுப்பா நடந்துக்குறீங்கனு அடிக்கடி சொல்லுவான். அதனால தான் நல்ல புள்ளைங்க நம்ம முன்னாடி கண்கலங்க கூடாதுனு உடனே சம்மதம் சொல்லிட்டேன்” என்றார்.
ஜானகிக்கு சந்தோசத்தில் கண்கள் கலங்கியது. தாயின் ரூபத்தில் தண்டித்த கடவுள், மற்ற உறவுகளின் மூலம் ஜானகியை ஆசிர்வதித்து விட்டார் போதும்.
“என்னை பத்தி முழுசா தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே.. நான் உங்கள மருமக கொடுமை பண்ணா என்ன செய்வீங்க?” என்று கேட்டு குறும்பாக சிரித்தாள்.
“நீ மருமகளா? நான் மகள்னுல நினைச்சேன்? மக கொடுமை பண்ண மாட்டா தெரியுமா?” என்று அவர் சிரிக்க, ஜானகியும் சிரித்து விட்டாள்.
அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு கந்தசாமி துக்கம் கலைந்து எழுந்தான்.
எதற்காக சிரிக்கிறார்கள் என்று தெரியாத போதும், அவனது முகத்திலும் புன்னகை வந்தது. எழுந்து வெளியே வந்து பார்க்க, தரையில் அமர்ந்து இருவரும் ஆளுக்கொரு காபி டம்ளரோடு கதை பேசிக் கொண்டிருந்தனர்.
பல நாட்களுக்கு பிறகு வீட்டில் ஒருவர் அதிகமாக இருப்பது, அதுவும் அவனுக்கு பிடித்தவள் இருப்பது கந்தசாமிக்கு நிறைவை கொடுத்தது.
‘இவள விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ண நினைச்சியே.. உனக்கெல்லாம் தைரியம் தான்டா..’ என்று நினைத்துக் கொண்டவன், “காலையிலேயே என்னை விட்டுட்டு நீங்க மட்டும் பேசி சிரிக்கலாமா?” என்று கேட்டான்.
“அதுக்காக தூங்குறவங்கள எழுப்பி இந்த ஜோக் கேட்டு நீங்க சிரிச்சுட்டு அப்புறமா தூங்குங்கனு சொல்லுவோமா? போய் குளிக்கிற வேலைய பாருங்க” என்று ஜானகி கிண்டலடிக்க, தெய்வநாயகிக்கு சிரிப்பு வந்தது.
“இப்படி தான்மா.. ஃபேக்டரிலயும் என்னை விரட்டிட்டே இருப்பா உங்க மருமக. சொல்லி வைங்க”
“அங்கயும் இங்கயும் ஜானகி தான உனக்கு முதலாளி. விரட்டுனா என்ன தப்பு?” என்று கேட்டவர் எழுந்து சமையலறைக்குள் செல்ல ஜானகி, “கேட்டுச்சா?” என்பது போல் பார்த்து வைத்தாள்.
“வேலை செய்யும்போதும் வீட்டுல இருக்கும் போதும் நான் தான் உன் முதலாளி. சோ அதுக்கேத்த மாதிரி பணிவா நடந்துக்கோ” என்று விட்டு அறைக்குள் சென்றாள்.
கந்தசாமி சிரித்து விட்டு குளிக்கச் சென்றான்.
