லாவண்டர் 15
![]()
பவானி மீண்டும் வேலைக்கு செல்ல, மதுசூதனனும் வேலைக்கு கிளம்பினான்.
இருவரும் அருகருகே வேலை செய்வதால், ஒன்றாக தான் கிளம்பினர்.
மது அமைதியாக வர, பவானி அவனை திரும்பி பார்த்தாள்.
“என் கிட்ட பேச மாட்டியா?” என்று கேட்க, யோசனையிலிருந்து வெளியே வந்து அவளை கேள்வியாக பார்த்தான்.
“என் மேல கோபமா? நான் உன்னை விட்டுட்டு கல்யாணம் பண்ண போனதுனால?”
“கோபம் இருந்துச்சு தான்.”
“சாரி”
“விடு.. இப்ப எல்லாம் சரியாகிடுச்சுல?”
“அப்புறம் ஏன் அமைதியா வர்ர?”
“நான் வேற யோசிச்சுட்டு வந்தேன்”
“என்னது?”
“வேற வீடு மாறனும். அத்த தூங்க கஷ்டப்படுறாங்க. நமக்கு இடையில அவங்க இருக்கது அவங்களுக்கே கம்ஃபர்டபுளா இல்ல. அதான்..”
“வேற வீடு பார்த்தா வாடகை நிறைய வரும்ல?”
“ஆமா.. ஏன் நீ எனக்கு கொடுக்க மாட்டியா?”
“கண்டிப்பா.. நான் நிறைய வச்சுருக்கேன்னு சொல்லிருக்கேன்ல.. எல்லாத்தையும் எடுத்துக்கோ.”
“வேணாம்.. சேவிங்ஸ் அப்படியே இருக்கட்டும். ஆகுற செலவ இப்ப இருக்கதுல பார்த்துக்கலாம்”
“கேட்கனும்னு நினைச்சேன்.. எப்படி அங்க மண்டபத்துக்கு வந்த? நீ அன்னைக்கு எதோ செய்யப்போறனு பயந்துட்டே தான் இருந்தேன். ஆனா இப்படியா பிரெக்னென்ட்னு சொல்லுவனு நினைக்கல. ஒரு நிமிஷம் உயிர் போயிடுச்சு எனக்கு”
“அது என் ஐடியா இல்ல. ஜெகனோடது”
“ஜெகனா?”
“அங்க இருந்தானே.. ஜானகி மேடமோட தம்பி”
“அவன எப்படி உனக்கு தெரியும்?”
“அவன என்னைக்கு பார்த்தேன் தெரியுமா? நீ என்னை கடைசியா பார்க்காதனு சொல்லிட்டு போனல.. அதுக்கு அடுத்த நாள். அன்னைக்கு நாம பேசுறத அவன் கேட்டுருக்கான்”
“அப்புறம்?”
“அவனுக்கு நீ யாருனு தெரிஞ்சுருக்கு. அதுனால நேரா வந்து பேசுனான். அவனோட அக்கா.. அதான் ஜானகி.. அவங்க வாழ்க்கைய காப்பாத்தனும்னு சொன்னான்.”
“புரியல..”
“கந்தசாமிக்கு ஜானகிய கட்டி வைக்கனும். அதுனால பவானிய நீங்க கட்டிக்கோங்கனு சொன்னான். நீ தான் என்னை மொத்தமா விட்டுட்டு போயிட்டியே. அதுனால அவனே ஒரு ப்ளான் போட்டான். கல்யாணத்தப்போ வந்து பேசனும்னு. பேசும் போதே நீ கிளம்பி என் கூட வந்துட்டா ஓகே. அப்படி வரலனா பிரெக்னென்ட்னு பொய் சொல்லுங்க. அங்க எல்லாரும் சாக் ஆவாங்க. உன்னை எதுக்கோ யூஸ் பண்ணிக்க பார்க்குறவங்களுக்கு இதுனால கோபம் வரும். அவங்க கோபத்துல தப்பு பண்ணா, அத யூஸ் பண்ணிக்கலாம்னு ப்ளான் போட்டோம்”
“அடப்பாவிங்களா! மத்த யாராவது கேட்டுருந்தா என்னாகி இருக்கும்?”
“எனக்கு யார பத்தியும் கவலை இல்ல. நீயும் அத்தையும் என் கூட வரனும். அவ்வளவு தான். அதுக்காக நம்ம புள்ளைங்க ஸ்கூல்ல படிக்குதுனு கூட பொய் சொல்லுவேன்”
பவானி அவனை முறைக்க, அவன் சந்தோசமாக சிரித்தான்.
“ஆனா ஒரு நாள் நம்ம புள்ளைங்க ஸ்கூலுக்கு போகும் போது நடந்த கதையெல்லாம் சொன்னா நல்லா இருக்கும்ல?”
“ரொம்ப பறக்காத. நீ சொன்ன விசயத்தே கேட்டு, அப்படி இல்லவே இல்லனு நான் அடிச்சு சொல்லிருந்தா தெரிஞ்சுருக்கும்”
“யூஸ்வலா இந்த விசயத்துல பொண்ணுங்க பேச்ச யாருமே நம்ப மாட்டாங்க. பழி போடுறவங்கள தான் நம்புவாங்க. ஆனாலும் நீ பேசிடக்கூடாதேனு தான் அன்னைக்கு மெஸேஜ் பண்ணேன்”
“உண்மைய சொல்லனும்னா, அந்த மெஸேஜ்காக தான் நான் அன்னைக்கு வாய மூடிட்டு நின்னேன். இல்லனா நீ யார்னே தெரியாது வெளிய போடானு துரத்திருப்பேன்”
“அப்படி செஞ்சா, நடிக்குறதுக்கு ரெண்டு குட்டி பசங்கள கூட்டிட்டு வந்து, எல்லாரு முன்னாடியும் உன்னை அம்மானு சொல்ல வச்சுருப்பேன்.”
பவானி அதிர்ந்து பார்க்க, மது தோளை குலுக்கினான்.
“என்னால நீ இல்லாம வாழவே முடியாது. ஜெகன் வர்ரதுக்கு முன்னாடி பேசாம செத்துடலாம்னு தான் நினைச்சேன். ஜெகன் பேசுனப்புறம் தான் மாறுனேன்”
“ஏன் இப்படி சொல்லுற? நீ எதோ மிரட்ட சொல்லுறனு நினைச்சேன்..”
“மிரட்டவா? நீ மிரண்டுட்டாலும்… சொன்னியே.. சாகும் போது கூட என்னை நினைக்காம சாவுனு.. அதுக்கு ஒரு நாள்இருக்கு”
நடந்தே இருவரும் வேலை செய்யும் பகுதியை அடைந்தனர்.
“நீ போ.. நானும் உள்ள போறேன்” என்று விட்டு அவளை கடைக்கு அனுப்பி விட்டு, அவன் ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
இப்படி தீவிரமாக காதலிப்பவனை இழக்க நினைத்த மடத்தனத்தை நொந்து கொண்டு பவானி சென்றாள்.
•••
கல்லூரியில்..
கவிதா கைக்கடிகாரத்தை பார்த்தாள். இன்னும் அடுத்த வகுப்புக்கு நேரமிருக்கிறது. அதனால் சாவகாசமாக மரத்தின் அடியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தாள்.
அவன் முன்பு வந்து நின்றான் ஜெகன். நிமிர்ந்து பார்த்தவள் பளிச்சென புன்னகைத்து வைத்தாள்.
“ஹாய்..”
“ஹாய் சீனியர். என்ன இந்த பக்கம்? வழி மாறிட்டீங்களா?”
“ஆமா.. கூகுள் மேப் போட்டு வந்தேன். இருக்க நாலஞ்சு பில்டிங்ல வழி வேற மாறுவாங்களாக்கும்?”
“கரெக்ட் தான். ஆனா எங்க டிப்பார்ட்மண்ட் பக்கம் வந்துருக்கீங்களே..”
“உன்னை பார்க்க தான்.. இந்தா”
ஒரு பையை நீட்டினான். அவள் புருவம் சுருங்க வாங்கி திறந்து பார்த்தாள்.
உள்ளே அழகான காகிதத்தில் சுற்றி ஒரு பரிசுப்பொருள் இருந்தது.
“யாருக்கு?”
“உனக்கு தான்”
“எனக்கா? எதுக்கு?”
“நீ பிரிச்சு பாரு.. அப்புறம் சொல்லுறேன்”
வேறு யாராவதாக இருந்தால் அப்படியே திருப்பிக் கொடுத்திருப்பாள். ஆனால் ஜெகனிடம் அப்படி செய்ய தோன்றவில்லை. சந்தேகத்துடனே வெளியே எடுத்து பிரித்தாள்.
உள்ளே இரண்டு புத்தகங்கள் இருந்தது. பார்த்ததும் கண்கள் வெளியே விழுந்து விடும் அளவு விரிந்தது. அவள் வாங்க நினைத்த புத்தகங்கள் அது. இரண்டும் விலை அதிகமானது. வேடிக்கை பார்த்து விட்டு வாங்காமலே வந்திருக்கிறாள்.
“சீனியர்…. வாவ்!” என்று துள்ளி எழுந்தாள்.
“உன்னோட சப்ஜெக்ட்டு யூஸாகும்னு கேள்வி பட்டேன்”
“யூஸாகுமா? இது புதையல்… ஆனா.. இது காஸ்ட்லியாச்சே”
“அவ்வளவு ஒன்னும் இல்ல..”
“எதே? ரெண்டும் எவ்வளவு காஸ்ட்லினு எனக்கு தெரியும். எதுக்கு இந்த கிஃப்ட்?”
“உன்னோட லக்கி சார்ம் கிட்ட எதாவது கேட்டா அது நடக்கும்னு சொன்னல? நான் ஒன்னு கேட்டேன் அது நடந்து முடிஞ்சுடுச்சு”
“வாவ்! என் லக்கி சார்ம் எப்பவும் ஏமாத்தாது”
“ம்ம்.. அதான் லக்கி சார்ம் கொடுத்த உனக்கு எதாவது வாங்கலாம்னு பார்த்தேன். இந்த புக் உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு கேள்வி பட்டு வாங்கிட்டேன். பிடிச்சுருக்கா?”
“ரொம்ப” என்று அந்த புத்தகத்தை கட்டிக் கொண்டாள்.
“அப்ப ஓகே”
“எல்லாரும் எதெதோ கிஃப்ட் வாங்குவாங்க. நீங்க தான் கரெக்ட்டா எனக்கு வேண்டியத வாங்கிருக்கீங்க. இத வச்சு படிச்சு நான் கோல்ட் மெடல் வாங்குனா என் சுயசரிதைல ஓரமா உங்க பேரையும் போடுறேன். ஓகே?”
அவளது பெருமையான பேச்சில் சிரிப்பு வர, “முதல்ல படிமா.. அப்புறமா சுயசரிதை எழுதலாம். நான் கிளம்புறேன். புக்க பத்திரமா வச்சுக்க” என்றவன் கையாட்டி விட்டு கிளம்பி விட்டான்.
கவிதா சந்தோசமாக அந்த புத்தகத்தை புரட்டி விட்டு, யார் கண்ணிலும் படாமல் அவசரமாக உள்ளே வைத்துக் கொண்டாள். தன் பொருட்களை எடுத்துக் கொண்டு அவள் கிளம்ப, அவளது வகுப்பில் படிக்கும் பெண் அவளை பார்த்தாள்.
“என்ன சீனியர் கூட தனியா நின்னு பேசிட்டு இருந்த போல? கையில கிஃப்ட் எல்லாம் இருந்துச்சு?” என்று அவள் சந்தேகமாக கேட்க, கவிதாவிற்கு எரிச்சல் வந்தது.
இருவர் நின்று பேசினால் அதை இப்படி சந்தேகப்பட்டே ஆக வேண்டுமா?
“அத பத்தி நீ ஏன் கேட்குற?”
“சீனியருக்கும் உனக்கும் எதோ இருக்கு தான?”
“இருந்தாலும் இல்லனாலும் அத பத்தி கேட்க உனக்கு உரிமை கிடையாது” என்று பட்டென சொல்லி விட்டு கோபமாக சென்று அமர்ந்து விட்டாள்.
•••
மாலை ஜானகி ஜெகனுக்காக காத்திருந்தாள்.
அவன் வந்ததும், எல்லாம் கேட்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. அவள் வாசலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க, ஜெகன் வந்து விட்டான்.
கந்தசாமி லோட் ஏற்றிக் கொண்டிருக்க, ஜெகன் நேராக அக்காவிடம் சென்றான்.
“க்கா..”
பல நாட்கள் பார்க்கதது போல் இருவருக்கும் கண்கள் கலங்கியது. ஜெகன் உடனே சமாளித்துக் கொண்டு அமர்ந்தான்.
“அம்மா ரொம்ப அடிச்சாங்களாடா?”
“அதெல்லாம் சரியாகிடுச்சுகா. நீ ஏன் ஃபீல் பண்ணுற? இப்ப நீ சந்தோசமா இருக்கியா? அதான் முக்கியம். அதுக்கு தான் இவ்வளவும்”
“இத தான் கேட்கனும்னு நினைச்சேன்.. கல்யாணத்தப்போ என்னடா ப்ளான் பண்ண? நகை எப்படி காருக்கு வந்துச்சு?”
“அத நான் மாமா முன்னாடியே சொல்லுறேன். இப்ப எனக்கு பதில் சொல்லு.. நீ மாமாவ ஒன் சைடா லவ் பண்ண தான?”
அதிர்ந்து போனவள், அவசரமாக கதவை பார்த்தாள்.
“நினைச்சேன்.. இன்னும் மாமா கிட்ட சொல்லிருக்க மாட்டனு.. எப்படி பதறிட்டு பார்க்குற?”
“டேய்.. இத யாருடா உனக்கு சொன்னது?”
“நீ யாரு கிட்ட சொன்ன?”
“நான் யாரு கிட்டயும் சொல்லலயே..”
“எனக்கும் யாரும் சொல்லல.. மாமாவ அந்த பொண்ணு கூட பார்த்துட்டு அழுதுட்டு இருந்தியே.. அப்ப நானா கண்டு பிடிச்சேன்.”
ஜானகி அமைதியாக, “ரொம்ப லேட் பண்ணாதகா.. மாமா கிட்ட எல்லாம் சொல்லிட்டு சந்தோசமா வாழுற வழிய பாரு” என்றான்.
திடீரென பெரிய மனிதன் போல் பேசும் தம்பியை பார்த்து சிரிப்பு வந்தது.
“சரிங்க சார்.. எவ்வளவு பெரிய மனுசன் நீங்க சொல்லி கேட்காமலா?”
ஜெகன் சிரிக்க, கதவை தட்டி விட்டு கந்தசாமி வந்தான்.
“லோட் போயிடுச்சு.. கால் பண்ணி சொல்லுடு..” என்று ஜானகிக்கு சொல்லி விட்டு, அவர்கள் முன்பு காபியும் கேன்டினில் கிடைத்த உணவுகளையும் வைத்தான்.
“சாப்பிடு ஜெகன்.. காலேஜ் முடிஞ்சதா?”
“முடிஞ்சது மாமா.. நீங்களும் உட்காருங்க”
“எல்லாரும் கிளம்பிட்டாங்களானு பார்த்துட்டு வந்துடுறேன்” என்று விட்டு வெளியேறினான்.
ஜானகி பேசும் வரை ஜெகன் அமைதியாக சாப்பிட்டான். அவனுக்கு இருந்த பசியை உணர்ந்து கந்தசாமி வாங்கி வந்தது, அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
முன்பு வரும் போது இப்படி வாங்கிக் கொடுக்காவிட்டாலும், சாப்பிட்டாயா? என்று கேட்பான்.
இன்று உறவான பிறகு, உரிமையாக வாங்கி வந்து விட்டான்.
ஜானகி பேசி முடிக்க கந்தசாமியும் வந்து விட்டான்.
“உங்கம்மா உன்னை ரொம்ப படுத்துறாங்களா?” என்று கேட்டுக் கொண்டே, ஜெகன் அருகே அமர்ந்தான்.
“பின்ன? அவங்க ஆசையில பெரிய பாராங்கல்ல தூக்கி போட்டுருக்கேன். சும்மா விடுவாங்களா? பேசி பேசி என் காதுல ரத்தமே வர வச்சுட்டாங்க”
“அவங்க பண்ணதும் தப்பு தான்”
“அத சொல்லி தான் ரெண்டு அடி வாங்குனேன். ஆனாலும் அவங்க விடல.. பட் இதுக்கு மேல என்ன பண்ணிட முடியும்? அக்கா கல்யாணமே முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல அந்த விக்னேஷனுக்கு கட்டியா வைக்க முடியும்?”
“விக்னேஷனா?”
இது வரை யாரென தெரியாத கந்தசாமி இந்த பெயரைக்கேட்டு ஆச்சரியப்பட்டான்.
“ஆமா.. அவன் தான்.. அக்கா சொல்லலயா?” என்றவன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
“இந்த கொடுமைய பார்த்துட்டு சும்மா இருந்தா நான் ஒரு தம்பியா? அதான் வேற ப்ளான் போட்டேன்”
“நீ எப்படி அந்த மதுசூதனன பார்த்த?” என்று கேட்டதும், காபியை உறிஞ்சியபடி ஒன்று விடாமல் ஒப்பித்தான்.
“அந்த அக்கா அவர அவ்வளவு லவ் பண்ணுது. அவர விட்டுட்டு உங்கள கட்டுனா, உங்க வாழ்க்கையும் போயிடும். அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்காது. அதான் அவரு கிட்ட பேசி, வந்து அந்த அக்காவ கூட்டிட்டு போக சொன்னேன்”
“இதுல எப்படி ஜானகி நகை வந்துச்சு?”
கந்தசாமி புருவம் உயர்த்தி கேட்க, ஜானகிக்கு உள்ளே பதறியது. எங்கே தம்பி உளறி விடுவானோ? என்று பயந்து விட்டாள்.
ஆனால் ஜெகன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, வேறு கதை சொன்னான்.
“யாரோ ஒரு அக்கா வாழ்க்கைய காப்பாத்துற நான், என் அக்கா வாழ்க்கைய எப்படி காப்பாத்துறதுனு யோசிச்சேன். அப்ப தான் கந்தசாமி ரொம்ப நல்லவரு.. அவரோட அம்மா அத விட நல்லவங்க.. லக் அடிச்சா அங்கயே வச்சு அக்காவுக்கு கல்யாணத்த முடிச்சுடனும். எனக்கு செலவு மிச்சம்னு நினைச்சேன். நடந்துடுச்சு. எப்படி பைசா செலவில்லாம, அக்கா கல்யாணத்த ரெடிமேடா கிடைச்ச மாப்பிள்ளை வச்சு முடிச்சேன் பார்த்தீங்களா? இதுக்கெல்லாம் நீங்க எனக்கு மாலை போட்டு மரியாதை பண்ணனும். மாமாவாச்சேனு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”
தோளை குலுக்கி பெருந்தன்மையாக அவன் சொல்ல, கந்தசாமிக்கு சிரிப்பு வந்தது. ஜானகிக்கும் தம்பி சமாளிப்பில் புன்னகை மீண்டது.

ஜெகன் பையன் செம.
இப்படிப்பட்ட தம்பி உடையாள் எதற்கும் அஞ்சாள்.
இப்படியே இவங்க ரெண்டு பேரும் இருக்கட்டும்
அதானே.. ஜெகனும் ஒரு ஹீரோ தான்
அருமையான தம்பி. என்னவொன்னு கந்தசாமி & ஜானகி ரெண்டு பேருமே ஜாடிக்கேத்த மூடி.
CRVS (or) CRVS 2797
😀😀😀