லாவண்டர் 16

Loading

நாட்கள் மிகவும் இனிமையாக சென்றது. திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. ஜானகியை தெய்வநாயகி நன்றாக கவனித்துக் கொண்டார். அவளை எதற்கும் அவர் வற்புறுத்தவில்லை.

அவளது வேலையை பற்றி தெரிந்ததால், அவளுக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே எல்லாம் சொல்லிக் கொடுத்தார். தாயிடம் இழந்த பாசத்தை தெய்வநாயகியிடம் மீண்டும் அனுபவித்தாள் ஜானகி.

கந்தசாமிக்கும் அவளுக்கும் இடையில் மட்டும் பெரிதாக எதுவும் மாறவில்லை. இருவரும் எவ்வளவு நேரம் ஒன்றாக இருந்தாலும், வேலையை பற்றி மட்டும் தான் பேசினர்.

வேலை பற்றிய பேச்சு முடிந்தால், தெய்வநாயகியிடம் சென்று விடுவாள். அவனிடம் மனதை திறந்து பேச இன்னும் கூட தைரியம் வரவில்லை. கந்தசாமியும், பொறுமையாக அவளது மனதில் இடம் பிடித்து விட்டு விசயத்தை சொல்லலாம் என்று காத்திருந்தான்.

அன்று காலையே மளிகை வாங்கச் சென்ற கந்தசாமி திரும்பி வந்த போது, அவனது கையில் கட்டு இருந்தது.

“என்ன கட்டு?” என்று முதலில் பார்த்தது ஜானகி தான்.

அவளது பதட்டமான குரலை கேட்டு தெய்வநாயகியும் வந்தார்.

“வரும் போது இடிச்சுக்கிட்டேன்.” என்றவன் பையை கீழே வைத்தான்.

“இங்க காட்டுங்க..” என்று அவனது கையைப்பிடித்து கட்டை அவிழ்த்துப் பார்த்தாள்.

அவனாகவே கைக்குட்டையால் கட்டி இருந்தான்.

“கீறி இருக்கே.. தையல் போடனுமா? ஹாஸ்பிடல் போகலாமா?”

“வேணாம்.. சின்ன காயம் தான்”

“இங்க காட்டு” என்று தெய்வநாயகி பார்த்தார்.

“சின்னது தான் ஜானகி. தையல் வேணாம். ஆனா நீ பார்த்து போயிட்டு வர மாட்டியாடா?” என்று மகனை முறைத்தார்.

“நான் பார்த்து தான்மா போனேன். தெரியாம இடிச்சுடுச்சு..”

“காரணம் சொல்லு.. நீ போய் மருந்த எடுத்துட்டு வாமா” என்று ஜானகியை அனுப்பி வைத்தார்.

காயத்தை சுத்தப்படுத்தி புதிதாக கட்டு போட்டு விட்டார்.

“கைய வச்சுட்டு சும்மா இரு. ஆறிடும்” என்று மகனை கடிந்தவர், “இவன் இப்படி தான்மா.. சின்ன பிள்ளையில இருந்தே எங்கயாவது போய் இடிச்சுட்டு வந்து நிப்பான். கல்யாணமே ஆகிடுச்சு இன்னும் திருந்தல” என்று ஜானகியிடம் குறையை சொல்லி விட்டுச் சென்றார்.

ஜானகி அவனது கட்டை பாவமாக பார்த்தாள்.

“என்ன சீரியல் ஹீரோயின் மாதிரி இந்த கட்டுக்கு அழ போறியா?” என்று கந்தசாமி கிண்டலாக கேட்க, “நான் ஏன் அழனும்? அடி பட்ட நீ தான் அழனும். கண்ண என்ன பொடனிலயா வச்சு நடக்குற? இல்ல சின்ன புள்ளையா? அழுறாங்களாம்.” என்று உதட்டை சுளித்தாள்.

அவள் பொறிந்து தள்ள, அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அம்மா கூட சேர்ந்து அம்மா மாதிரியே பேசுற”

“ஆமா.. அவங்க தான சோறு போடுறாங்க. அந்த பழக்கம் தொத்திக்கிச்சு” என்று சிரித்தாள்.

“நீ கேட்டத எல்லாம் வாங்கிட்டேன். அத பாரு. நான் தூங்குறேன். லீவ் நாள்ல கூட தூங்க விடாம காலையிலயே கடைக்கு எழுப்பி போக வச்சுட்டு.. இப்ப கைய இடிச்சதுக்கும் என்னை தான் திட்டுறீங்க. ரெண்டு பேரும் பேசாதீங்க” என்றவன் அறைக்குள் சென்று படுத்து விட்டான்.

ஜானகி பையை தூக்கிச் சென்று தெய்வநாயகியிடம் கொடுத்து விட்டு திரும்ப, கைபேசி கண்ணில் பட்டது. அதில் எதோ செய்தி வந்திருக்க எடுத்துப் படித்தாள்.

“நான்‌ உனக்கு பொருத்தமில்ல.. ஆனா…” என்று தெரியாத எண்ணிலிருந்து செய்தி வந்திருந்தது.

புரியாமல் பார்த்தவள், ‘எவனாவது நம்பர மாத்தி அனுப்பிட்டானா?’ என்று யோசித்து, அதை அழித்து விட்டு அடுத்த வேலையை பார்த்தாள்.

அன்று விடுமுறை நாள் என்பதால், விதவிதமாக சமைத்து பழகினாள் ஜானகி. அவளே அதிசயிக்கும் விதமாக எல்லாம் நன்றாக இருந்தது.

மாலை கந்தசாமியோடு வெளியே போய் வரச்சென்னார் தெய்வநாயகி.

“எப்பவும் வேலை. வேலை இல்லனா வீடா? கொஞ்ச நேரம் நடந்துட்டு வாங்க. அப்ப தான் உடம்பு நல்லா இருக்கும்” என்று இருவரையும் துரத்தி விட்டார்.

கந்தசாமியும் மனைவியோடு சந்தோசமாக கிளம்பினான். அங்கிருந்து நடந்தே சென்று அருகே இருந்த இடங்களை காட்டினான்.

அவள் இந்த பகுதிக்கு வந்தது இல்லை. எது எங்கே இருக்கிறது? எது கிடைக்கும்? என்று எல்லாம் காட்ட, ஜானகியும் குதூகலமாக உடன் வந்தாள்.

அவளோடு சென்று காதல் புரிய அவனுக்கு ஆசை தான். ஆனால் அதை அவள் ஏற்பாளா? என்று தெரியவில்லை. இந்த இணக்கம் நீடித்தால் போதும் என்று நினைத்து இதைச் செய்ய, அவளுக்கும் திருப்தியாக இருந்தது.

அந்த பகுதியை சுற்றி வந்து நிறைய இடங்களை காட்டி விட்டு வீடு திரும்ப, ஒரு பைக் வேகமாக வந்தது. வந்த வேகத்தில் இருவரும் ஒதுங்கும் முன்பே கந்தசாமியின் காலில் இடித்து விட்டுச் சென்று விட்டது.

அவன் அவசரமாக ஒதுங்கி விட்டததால், பெரிதாக பிரச்சனை எதுவும் வரவில்லை.

“அடி பட்டுருச்சா?” என்று ஜானகி பதட்டமாக கேட்க, “இல்ல.. நகர்ந்துட்டோமே” என்றான் யோசனையோடு.

“காலையில தான் அத்தை அவ்வளவு திட்டுனாங்க. இப்பவும் ரோட்டுல இப்படி நடக்குற? ஒழுங்கா என் கைய பிடிச்சுட்டு வா” என்று அவனது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தாள்.

எதோ சொல்ல வாயைத்திறந்தவன், அவள் கையைப்பிடித்து நடப்பது பிடித்திருக்க, புன்னகையுடன் அவள் பின்னால் சென்றான்.

வீட்டுக்கு வந்ததும் தெய்வநாயகியிடம் அனைத்தையும் ஒப்பித்து, அவர் மூலம் அவனுக்கு திட்டு வாங்கிக் கொடுத்த பிறகு, ஜானகி அமைதியாகி விட்டாள்.

ஆனால் தெய்வநாயகி இருவருக்கும் திருஷ்டி கழித்து விட்டே உறங்க விட்டார்.

கந்தசாமி நாளை வேலைக்கு தேவையானதை பார்த்துக் கொண்டிருக்க, ஜானகி கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அதே எண்ணிலிருந்து மீண்டும் செய்தி வந்தது.

“உன்னை எனக்கு பொருத்தமாக்கிட்டா?” என்று வந்திருக்க ஜானகிக்கு, ‘எவன்டா லூசு?’ என்று தோன்றியது.

காலையில் படித்த செய்தி மறந்து போயிருக்க, இதையும் அழித்து விட்டு அடுத்ததை பார்த்தாள்.

இரண்டு முறை செய்தி வந்தும் அது என்னவென்று ஆராயாமல் விட்டதன் பலனாக, அடுத்த நாள் ஒன்று நடந்தது.

இருவரும் தொழிற்சாலையிலிருந்து ஒருவரை சந்திக்கச் சென்று விட்டு வெளியே வந்தனர். கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடந்து வர, ஒருவன் வந்து கந்தசாமியை இடித்து தள்ளி விட்டு ஒடினான்.

அருகில் கிடந்த கல்லுக்குள் விழாமல் கந்தசாமி தப்பிக்க, சற்று தள்ளி வந்து கொண்டிருந்த ஜானகி இதை பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்தாள்.

“என்ன இது? இப்படி இடிச்சுட்டு போறான்” என்று ஜானகி கோபப்பட, ஓடிவனை துரத்துவது போல் இரண்டு பைக் வந்தது.

அது வந்த வேகத்தை பார்த்து விட்டு கந்தசாமி ஜானகியை மறுபக்கம் திருப்ப, கையிலிருந்த கத்தியால் கந்தசாமியின் தோளில் ஒரு கீறலை போட்டு விட்டு சென்று விட்டான் பைக்கில் இருந்த ஒருவன்.

ஜானகி பைக்கை முறைத்து விட்டு, “ரோட்டுல எப்படி போறானுங்க” என்று கோபமாக திட்டி விட்டு திரும்ப, கந்தசாமியின் தோளில் இருந்து வந்த இரத்தம் அவளை அதிர வைத்தது.

“ஹேய்.. இது என்ன?”

“முதல்ல காருக்கு போகலாம் வா” என்று கந்தசாமி அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

காரில் ஏறியதும் ஜானகி அவனது தோளை பார்த்தாள். இரத்தம் அப்போது தான் மெல்ல சொட்டிக் கொண்டிருந்தது.

“இது என்ன உனக்கு தினமும் அடிபடுது” என்று கவலையாக கேட்டவள், அப்போதைக்கு இரத்தத்தை துடைத்து விட்டு பேன்டேஜ் போட்டு விட்டாள்.

அதோடு இருவரும் கிளம்பினர். ஜானகி அவனை பற்றிய கவலையோடு வர, கந்தசாமி எதோ யோசனையுடன் வந்தான்.

இருவரும் வேலை முடியும் வரை வேறு எதுவும் பேசவில்லை. ஜெகன் வந்த போதும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

வீட்டுக்கு வரும் போது கைபேசியை ஆராய, அதில் ஏற்கனவே ஒரு செய்தி வந்திருந்தது. அதே தெரியாத எண்.

“ஆக்கி காட்டுறேன்” என்று சிரிப்பு ஸ்மைலியோடு.

இப்போது அந்த செய்தியை சாதாரணமாக விட முடியவில்லை. மூன்று முறை ஒருவன் தவறாக அனுப்ப மாட்டான்.

மனம் திக் திக் என அடித்துக் கொள்ள, அந்த எண்ணுக்கு அழைத்து பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

கந்தசாமியிடம் விசாரித்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

இரவு நேரம் கந்தசாமி அறைக்கு வெளியே இருக்க, ஜானகி உடனே அந்த எண்ணை அழைத்து காதில் வைத்தாள்.

அவளது பெயரை பார்த்து விட்டு விக்னேஷன் சிரித்தான். அழைப்பு நிற்கும் தருவாயில் ஏற்று காதில் வைத்தான்.

“ஹலோ.. யாரு இது?” என்று ஜானகி கோபமாக கேட்டாள்.

பதில் வரவில்லை.

“ஹலோ.. கேட்குறேன்ல?” என்று அதட்ட, அந்த பக்கம் விக்னேஷன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஹலோ..ஜானகி” என்றான்.

ஒரு நொடி அந்த குரலை அவளால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

“யார் நீ?”

“என்னை தெரியலயா ஜான்?”

இப்போது குரல் சட்டென பிடிபடட்டது. உடனே உள்ளம் பதறியது. இதயம் பயத்தில் வேகமாக துடித்தது.

“விக்னேஷன்.. நீயா?”

உறுதி படுத்திக் கொள்ள கேட்க, அந்த பக்கம் வாய் விட்டு சிரித்தான்.

“பரவாயில்ல.. என் குரல நீ மறக்கல” என்க அவளுக்கு பயத்தில் மூச்சு நின்றது.

“என்ன மெஸேஜ் அனுப்பிட்டு இருக்க? அறிவில்லையா உனக்கு?” என்று பயத்தை மறைத்து திட்டினாள்.

“ஜானகி.. உன்னை அறிவாளினு நினைச்சேனே.. இன்னமும் புரியலயா? சரி புரிஞ்சதும் கால் பண்ணு..” என்று விட்டு வைத்து விட்டான்.

ஜானகிக்கு தலை சுற்றியது. அவளுக்கு புரியாமல் இல்லை. கந்தசாமியை காயப்படுத்தப் பார்க்கிறான்.

அவன் அனுப்பிய செய்தி மறந்து போய் விட்டது.

‘முதல்ல என்ன அனுப்புனான்?’ என்று தீவிரமாக யோசித்தாள்.

எதுவும் நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது முறை உன்னை என்னை போல் மாற்றுவேன் என்று எதோ இருந்ததாக நினைவு வந்தது. கடைசியாக வந்த செய்தியை மீண்டும் படித்தாள்.

‘என்ன சொல்ல வர்ரான்? யார அவன மாதிரி மாத்துவான்? என்னையவா?’ என்று யோசித்தவளுக்கு மெல்ல விசயம் விளங்க, அதிர்ந்து வாயை மூடிக் கொண்டாள்.

அவன் கந்தசாமியை கொன்று ஜானகியையும் அவனைப்போல மாற்றுவானா?

கண்கள் கலங்கி விட பயத்தில் உடல் வியர்த்தது. இதிலிருந்து கந்தசாமியை எப்படிக் காப்பாற்றுவது?

“ஹலோ.. மேடம்” என்று அவள் கண் முன்னால் கையை ஆட்டினான் கந்தசாமி.

“என்ன கனவுல இருக்க? அம்மா கூப்பிட்டுட்டே இருக்காங்களே…” என்றவன், அவளது கண்ணீரை பார்த்து விட்டான்.

“ஏய்.. என்னாச்சு?” என்று அவன் பதட்டமாக கேட்க உடனே எழுந்தவள், “அப்புறம் பேசலாம்” என்று கண்ணை துடைத்துக் கொண்டு தெய்வநாயகியிடம் சென்று விட்டாள்.

அவன் தான் அவளை புரியாமல் பார்த்து நின்றான்.

சாப்பிடும் போதும் ஜானகி எதையோ யோசித்தபடி இருக்க, கந்தசாமி அவளை கவலையோடு பார்த்தான்.

அறைக்குள் வந்ததுமே கதவை அடைத்து விட்டு, முதல் வேலையாக என்னவென்று விசாரித்தான்.

ஜானகி அவனிடம் தன் கைபேசியை காட்டினாள்.

“விக்னேஷன் இத அனுப்பிருக்கான். உன்னை எதாவது பண்ணி…”

“புரியல.. என்ன இது?”

நடந்ததை ஒப்பித்தாள்.

“எனக்கு பயமா இருக்கு. அவன் உன்னை எதாவது பண்ணிட்டா?”

கந்தசாமி உடனே பதில் சொல்லவில்லை.

One Comment

Leave a Reply