லாவண்டர் 17
![]()
ஜானகி கவலையாக சொல்ல, கந்தசாமி அமைதியாக இருந்தான்.
“என்ன? அமைதியா இருந்தா எப்படி?”
“ஓரளவு இத கெஸ் பண்ணேன் தான். இவன் செய்யுறான்னு எதிர்பார்க்கல..”
“இப்ப என்ன பண்ணலாம்? போலீஸ் கிட்ட போகலாமா? அவன் இப்படி பண்ணுறான்னு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்”
கந்தசாமி மறுப்பாக தலையசைத்தான்.
“விக்னேஷன் ரொம்ப பெரிய ஆளு. அவன பத்தி கம்ப்ளைண்ட் பண்ண போனா, கேஸ நம்ம பக்கம் திருப்பி விட்டுருவான்”
“அதுக்காக? இப்படி அவன் எதாவது பண்ணிட்டே இருப்பான்.. நாம சும்மாவே இருக்கனுமா?”
“இருக்க வேணாம். அவன எதுலயாவது மாட்டி விட்டா நாம தப்பிக்கலாம்”
“ஹான்? அது எப்படி முடியும்?”
“யோசிக்கனும். அவனோட பலவீனத்துல அடிச்சா தான் திரும்பி வர மாட்டான். ஆனா அது என்னனு எனக்கு தெரியாது.”
“அவன பத்தி உனக்கு எவ்வளவு தெரியும்?”
“நிறைய இல்ல.. ஓரளவு தெரியும். உங்கப்பா இருந்தப்போ அவன நேர்ல பார்த்துருக்கேன். அப்போ அவன் வொய்ஃப் கூட உயிரோட தான் இருந்தா”
“அவ செத்துட்டானு என் பின்னாடி அலையுறான்”
“அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சு”
“அய்யய்யோ! ஏன்?”
“காரணம் தெரியல. ஆனா எதோ கஷ்டம் போல.. சில ரூமர்ஸ் கூட இருக்கு”
“என்னது?”
“இவன் குழந்தையே பெத்துக்க கூடாதுனு சொல்லி, ரெண்டு மூணு தடவ அந்த பொண்ண அபார்ட் பண்ண வச்சானாம். அந்த டிப்ரஸன்ல தான் செத்துட்டதா சொன்னாங்க. வேற எதுவும் தெரியல”
“அப்ப இந்த கிழவனே அவள கொன்னுட்டு அடுத்த பொண்டாட்டிய தேடி அலையுறானா?”
“அவனுக்கு அவனோட அழகு மேல திமிர் ஜாஸ்தி. அந்த அழகு கெடாம இருக்க ரொம்ப மெனக்கெடுவான். நார்மலா எல்லாரும் பண்ணுறத விட அவன் மெனக்கெடுறது டூ மச். அதுக்கேத்த மாதிரி ஆள பார்த்தா நாப்பது வயசுனே தெரியாது. இன்னும் காலேஜ் ஸ்டூடெண்ட் மாதிரி தான் பிகேவ் பண்ணுவான்”
“நான் பார்த்துருக்கேன் . அவன் எவ்வளவு மறைச்சாலும் அவன் வயசானவன் தான்னு கண்ணு சுருக்கம் காட்டி கொடுத்துடும்”
“ம்ம்.. அவனோட ஸ்ட்ராங் பாயிண்ட் இதெல்லாம். வீக் பத்தி தெரியல. விசாரிப்போம்.”
“யார் கிட்ட? எங்க போய் விசாரிப்ப?”
“அவன் கம்பெனியில எனக்குத் தெரிஞ்சவன் ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட பேசி பார்க்கலாம்”
“சரி வருங்குற?”
“ட்ரை பண்ணுவோம்”
“அது வரை கவனமா இரு”
கந்தசாமி தலையாட்ட அப்போதைக்கு சமாதானம் ஆனாள். ஆனால் கந்தசாமிக்கு விக்னேஷனை சாதாரணமாக நினைக்க முடியவில்லை.
அவன் ஒரு சைக்கோ. அவன் விரும்பிய பெண்ணை இவன் திருமணம் செய்ததற்காக என்னவும் செய்வான். இதற்கு என்ன பதில் தேடுவது? என்று அவனுக்கும் புரியவில்லை.
அவனை எதாவது ஒரு இடத்தில் சிக்க வைத்தால், தங்களை பற்றி யோசிக்க நேரமில்லாமல் போகலாம். ஆனால் எப்படி?
காவல்துறையை அணுகி பாதுகாப்பை தேடவும் முடியாது. அவனுக்கு பயந்து வீட்டிலேயே இருக்கவும் முடியாது.
யோசித்து யோசித்து தூக்கம் மறந்தான்.
அடுத்த சில நாட்கள் கூடுதல் கவனமாக இருந்தான். வெளியே செல்லும் போது சுற்றுப்புறத்தை அதிகமாக கவனித்தான்.
அந்த கவனிப்பின் காரணமாக, இரண்டு முறை காயம் படாமலே தப்பி விட்டான். காயம் படாததால் ஜானகியிடம் விசயத்தை சொல்லவில்லை. அவள் ஏற்கனவே பயந்திருக்கிறாள். அவனை பைக்கில் செல்ல விடாமல் காரில் தான் செல்ல வேண்டும் என்று கட்டளை போட்டு விட்டாள்.
அவனும் சில காலம் இது தான் சரி வரும் என்று அவளது பேச்சை கேட்டுக் கொண்டான். இருவரும் தங்களது பாதுகாப்பை கை விடாமல் இருக்க, விக்னேஷனுக்கு கோபம் வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக கந்தசாமியை காயப்படுத்தி, ஜானகியை துடிக்க வைத்து அவனுக்காக அவளை கெஞ்ச விட நினைத்தவன், அது நடக்காமல் போனதும் வேறு முடிவுக்கு வந்தான்.
கந்தசாமியை மொத்தமாக கடத்த வேண்டும். அல்லது அவனை அவனுடய இடத்துக்கு கொண்டு வர வேண்டும்.
கடத்துவது சுலபமாக இல்லை. கந்தசாமியும் ஜானகியும் எப்போதும் ஒன்றாக இருந்தனர். அது மட்டுமல்ல தேவையில்லாமல் இருவரும் எங்கேயும் வெளியே சுற்றுவது இல்லை.
அவ்வப்போது வெளியே வந்தாலும், அவர்களது பகுதியிலேயே நடந்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று அடைந்து விடுகின்றனர்.
வீடு புகுந்து தூக்கலாம் தான். ஆனால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பணக்கார வீடுகள் இருக்கும் பகுதியை போல சத்தமில்லாமல் இருந்தால், வீட்டுக்குள் புகுந்து கடத்துவது சுலபம்.
இங்கே சாலையில் ஆட்கள் தென்பட்ட வண்ணம் இருந்தனர். அது மட்டுமா? ஒரு வீட்டில் நடப்பது அந்த தெருவுக்கே தெரிந்து விடுகிறது.
கடத்தச் சென்றால் மாட்டிக் கொள்வது உறுதி. அதனால் வேறு முடிவுக்கு வந்தான்.
அதன் பலனாக, அன்று மதிய நேரம் வேலையில் மூழ்கி இருந்த ஜானகி, வெளியே சத்தம் கேட்டு வந்தாள்.
காவல்துறையினரின் வாகனம் வந்து நிற்க, வேலை செய்வதை விட்டு விட்டு எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்ன நடக்குது இங்க?” என்று ஜானகி வர, “மேடம் போலீஸ் வந்துருக்கு” என்றான் ஒருவன் பயத்தோடு.
“அவங்க போலீஸ்.. கோமாளி இல்ல இப்படி நின்னு வேடிக்கை பார்க்க.. போய் வேலைய பாருங்க” என்று துரத்தி விட்டவள் வாசலுக்கு வந்தாள்.
காவல்துறையினர் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.
ஜானகியை பார்த்ததும் இன்ஸ்பெக்டர் புருவம் சுளித்தான். அவன் தேடி வந்தவன் இன்னும் வரவில்லையே.
“ஹலோ சார்..” என்று ஜானகி வந்து பேச, “ம்ம் ம்ம்” என்றான்.
“தீடீர்னு வந்துருக்கீங்க? என்ன விசயம்?”
“உங்க ஃபேக்டரில சட்டத்துக்கு புறம்பான முறையில வேலை நடக்குறதா கேள்வி பட்டோம். விசாரிக்க வந்துருக்கோம்”
“யார் கம்ப்ளைண்ட் கொடுத்தது?”
“அத சொன்னா தான் உள்ள விடுவீங்களோ? முதல்ல கேட்ட திறக்க சொல்லுங்க”
“சார்.. எதுக்கு இப்படி கோபமா பேசுறீங்க? யாரு கம்ப்ளைண்ட் கொடுத்ததுனு தான கேட்குறேன்”
“அத சொல்ல முடியாது. கதவ திறக்க சொல்லுங்க. ஜீப்பை உள்ள வர விடாம கதவ பூட்டி வச்சுருக்கீங்க?”
“வேலை நடக்கும் போது கேட்ட திறக்க மாட்டோம். நீங்க இந்த பாதை வழியா உள்ள வாங்க”
“ஏன்? நீங்க இல்லீகலா பண்ணுற வேலை வெளிய தெரிஞ்சுட கூடாதுனா? கதவ திறயா” என்று வாட்ச்மேனை மிரட்டியபடி அந்த கேட்டை தட்ட, ஜானகிக்கு பொறுமை போய் விடும் போல் இருந்தது.
“சார் நீங்க உள்ள வாங்க.. அவர் கதவ திறப்பாரு..” என்று விட்டு அவள் வழி விட, அதற்கு மேல் வாசலில் நிற்காமல் உள்ளே சென்றனர்.
அதே நேரம் வந்து சேர்ந்தான் ஜெகன். வாசலில் போலீஸ் ஜீப்பை பார்த்து விட்டு, ஆச்சரியமாக வாட்ச்மேன் அருகே வந்தான்.
“என்ன தாத்தா போலீஸ் வண்டி?”
எப்போதும் மரியாதையாக பேசும் முதலாளியின் தம்பியை பார்த்ததும், உடனே அவர் விசயத்தை சொன்னார்.
“யாரு கம்ப்ளைண்டு பண்ணானே சொல்லலைங்க தம்பி.. இப்ப தான் உள்ள போயிருக்காங்க. நீங்களும் போங்க.. சார் வேற இல்லை. காலையில போனவர்.. வேலை முடிஞ்சு வரல”
“மாமா இல்லையா?” என்றவன், உடனே கைபேசியை எடுத்து கந்தசாமியை அழைத்தான்.
“என்ன ஜெகன்? இந்த நேரத்துல கூப்பிடுற?”
“நான் ஃபேக்டரில இருக்கேன் மாமா”
“காலேஜ் இல்லையா?”
“அத விடுங்க.. இங்க போலீஸ் வந்துருக்கு”
“எதுக்கு?”
“எவனோ கம்ப்ளைண்ட் பண்ணானாம். எதோ இல்லீகல் வேலை பார்க்குறோம்னு விசாரிக்க வந்துருக்காங்க. யாரு சொன்னானு கேட்டா பதில் சொல்லலயாம். நீங்க எப்ப வருவீங்க?”
கந்தசாமி ஒரு நொடி அமைதியாகி விட்டு, “நீ அந்த போலீஸோட பேர ஃபோட்டோ எடுத்து எனக்கு அனுப்பு. நான் வந்துட்டே இருக்கேன்” என்றான்.
ஜெகன் உடனே உள்ளே எட்டிப் பார்த்து, அங்கிருந்த மூவரையும் படம் பிடித்து கந்தசாமிக்கு அனுப்பினான்.
கந்தசாமிக்கு புரிந்தது. சில நாட்களாக அவனை தாக்க யாரும் வருவது இல்லை. விக்னேஷன் இதை விட்டு வேறு திட்டத்திற்கு தாவியிருக்க வேண்டும் என்று நினைத்தான். இப்போது புரிந்தது என்ன திட்டமென.
இதை சமாளிக்கக் கூடிய ஒரே ஆள் இப்போது ஜாக்ஷி தான். யோசிக்காமல் அவளை அழைத்தான்.
அப்போது தான் ஜாக்ஷி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். கைபேசியை பார்த்து விட்டு அழைப்பை ஏற்றாள்.
“மேடம்..”
“ம்ம்?”
“ஒரு பிரச்சனை”
ஜாக்ஷி புருவம் சுருக்கினாள்.
“என்ன?”
“ஃபேக்டரிக்கு போலீஸ் வந்துருக்காங்க. எதோ இல்லீகல் வொர்க் நடக்குதுனு கம்ப்ளைண்ட் போயிருக்காம்.”
“வாட்? யார் கம்ப்ளைண்ட் பண்ணது?”
“டீடைலா நான் அப்புறம் சொல்லுறேன். இப்ப அவங்கள வெளிய துரத்த முடியுமா?”
“வந்தவன் யாரு? பேரென்ன?”
“போட்டோ அனுப்புறேன்”
“ம்ம்.. வை” என்று அழைப்பை துண்டித்தவள், படத்தை பார்த்து விட்டு உடனே கமிஷ்னரை அழைத்தாள்.
கைபேசி ஸ்பீக்கரில் அருகே கிடக்க, சாப்பிடுவதை அவள் நிறுத்தவில்லை.
அந்த பக்கம் உடனே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ சார்.. நான் ஜாக்ஷி”
“தெரியும் மேடம் சொல்லுங்க”
“என்ன சார்.. என் ஃபேக்டரில எதாவது கம்ப்ளைண்ட் வந்தா, என் கிட்ட சொல்லிருக்கலாமே.. நானே நேர்ல வந்து சால்வ் பண்ணிருப்பேன். இப்படி ஆள அனுப்பி தேட விடனுமா?”
“வாட்? மேடம் அப்படி எந்த கம்ப்ளைண்டும் வரலயே?”
“இல்லையா? வாரண்ட் எதுவும் இஸ்யூ ஆகியிருந்தா சொல்லுங்க நான் நேர்ல வர்ரேன்.”
“அப்படி எதுவும் தெரியலயே”
“அப்போ.. என்னோட ஃபேக்டரில சர்ச் போயிட்டு இருக்கே” என்றவள் அந்த தொழிற்சாலை இருக்கும் இடத்தையும், வந்த இன்ஸ்பெக்டர் பெயரையும் சொன்னாள்.
“எனக்கு தெரியலயே மேடம். எதாவது இருக்கானு நான் பார்க்குறேன்.”
“இருந்ததுனா எனக்கு கால் பண்ணுங்க. நான் பார்த்துக்கிறேன்”
“ஓகே மேடம்”
“தாங்க்யூ சார்” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள், தண்ணீரை குடித்து விட்டு சாப்பிட்டு முடித்தாள்.
கந்தசாமிக்கு, “டன்” என்று செய்தி அனுப்பி விட்டு அடுத்த வேலையை பார்த்தாள்.
கந்தசாமி தொழிற்சாலை வந்து சேர, இந்த செய்தி வந்தது. பார்த்து விட்டு திருப்தியானான். ஜெகன் உள்ளே சென்று ஜானகியின் அருகே நின்றிருந்தான். அக்காவை தனியாக விட முடியாது.
அந்த இன்ஸ்பெக்டர் வேறு அதை காட்டு இதைக் காட்டு என்று, இருக்கும் எல்லோரின் வேலையையும் கெடுத்துக் கொண்டு நின்றிருந்தான்.
கந்தசாமி உள்ளே வர, இன்ஸ்பெக்டருக்கு சந்தோசமானது.
“நீ யாருயா?” என்று கோபமாக கேட்க, “நான் இங்க தான் வேலை பார்க்குறேன். இவங்க ஹஸ்பண்ட்” என்றான் அமைதியாக.
“பேரு?”
“கந்தசாமி”
“நீ தான் இந்த வேலை எல்லாம் பார்க்குறியா? உன்னை தான் முதல்ல விசாரிக்கனும். வண்டியில ஏறி ஸ்டேஷனுக்கு வா” என்று அதட்ட, ஜானகியும் ஜெகனும் அதிர்ந்தனர்.
கந்தசாமி அவனை கிண்டலாக பார்த்து விட்டு, “முடியாது” என்றான்.
இன்ஸ்பெக்டரின் கைபேசி சரியாக அந்நேரம் ஒலிக்க, உடனே எடுத்தான். கமிஷ்னரின் எண்ணை பார்த்து பதறி விட்டான்.
“சார்..”
“எங்க இருக்க?”
“ஒரு கேஸ் விசயமா வந்துருக்கேன் சார்.. என்ன சார் விசயம்?”
“எந்த கேஸ்?”
“ஒரு ஃபேக்டரில தப்பான வேலை நடக்குறதா வந்த நியூஸ விசாரிச்சுட்டு இருக்கேன்”
“கிழிச்ச.. நீ விசாரிக்க போனது ஜகதீஸ்வரி குரூப்ஸ்ல ஒரு ஃபேக்டரி. முதல்ல யாரு கம்ப்ளைண்ட் கொடுத்தது? யார கேட்டு நீ அங்க போன?”
“சார்..”
“இழுக்காம கிளம்புயா முதல்ல.. நாளைக்கு என்னை வந்து பாரு.. அப்புறம் பேசிக்கிறேன் உன்னை. கிளம்பித்தொலை” என்று விட்டு வைத்து விட்டார்.
அவனுக்கு பயத்தில் காய்ச்சலே வந்து விடும் போல் இருந்தது.
“என்ன சார்? என்னை கூட்டிட்டு போயே ஆகனுமா?”
“நக்கலா? உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்” என்றவன், உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“நீங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க? சீக்கிரம் வேலைய முடிக்குற நினைப்பில்லையா?” என்று அதட்ட, உடனே எல்லோரும் கலைந்தனர்.
ஜானகி நடந்ததை புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “க்கா.. நான் போய் டீ வாங்கிட்டு வர்ரேன்” என்று விட்டு ஜெகன் சென்று விட்டான்.
“வா” என்று அவளை கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் கந்தசாமி.

கந்தசாமியாவது புத்திசாலியா ஜாஷியை அழைச்சானே, இந்த ஜானகி எதுக்கும் லாயக்கு இல்லை.
அது சரி, அத்தியாயம்-16 காணோமே. 17 தான் இருக்கு
CRVS (or) CRVS 2797
😀😀😀
16 இருக்கு. செக் பண்ணி பாருங்க.