லாவண்டர் 19

Loading

கல்லூரிக்கு வெளியே வேலை இருக்க, அதை முடித்து விட்டு வந்து கொண்டிருந்தான் ஜெகன். நண்பனின் பைக்கில் வந்தவன், சாலையோரம் இருந்த கூட்டத்தை கவனித்தான்.

“என்னடா கூட்டமா இருக்கு?” என்று நண்பன் பைக்கை நிறுத்த, “ஏன்டா நிறுத்துற? காலேஜ்க்கு போகனும்டா” என்று ஜெகன் தடுத்தான்.

“அங்க போய் அந்தாளு ஒப்பாரி பாடுறத தான கேட்க போறோம்? லேட்டா போனா ஒன்னும் தப்பில்ல.. இருடா.. என்னனு பார்ப்போம்” என்று விட்டு பைக்கை நிறுத்தி விட்டு இறங்கினான்.

அவனோடு ஜெகனும் இறங்க, இரண்டு காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்த கூட்டத்தை விரட்டிக் கொண்டிருந்தனர்.

அது பொது சாலைப்பகுதி அல்ல. சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதி. அங்கே ஒரு கார் நொறுங்கிக் கிடந்தது.

பார்த்ததும் இருவருக்குமே வருத்தமானது. ஜெகன் அந்த காரை சற்று உற்றுப்பார்த்தான். அது ஜானகியின் காரைப்போன்று இருக்க, உடனே ஓடிச்சென்று எண்ணை பார்த்தான்.

அடுத்த நிமிடம் பயத்தில் இதயம் நின்று துடித்தது.

“என்னடா இப்படி நிக்கிற?” என்று நண்பன் கேட்க, “இது அக்கா காருடா…” என்றான் பதட்டமாக.

“அய்யய்யோ… உள்ள இருந்தாங்களா? வாடா போலீஸ் கிட்ட கேட்போம்” என்று இழுத்துச் சென்றான் நண்பன்.

ஜெகனுக்கு கண்கள் கலங்கி விட்டது. ஜானகிக்கோ மற்ற யாருக்கோ எதுவும் ஆகியிருக்குமோ? என்ற பயத்தில் வியர்த்து விட்டது.

“சார்.. சார்…”

“யாருபா நீங்க? கிளம்புங்க..”

“சார்.. இந்த கார்ல இருந்தவங்க எங்க சார்? இது இவனோட அக்காவோட கார் சார்..”

இருவரையும் பார்த்த காக்கி உடை, ஜெகன் கண்ணீரோடு நிற்பதை கவனித்தது.

“கார்ல இருந்தவங்க பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு தான் போயிருக்காங்க. அங்க போய் கேளுங்க. வேற எதுவும் எனக்கு தெரியாது” என்று விட்டு கூட்டத்தை கலைத்தார்.

ஜெகனுக்கு மருத்துவமனையின் பெயரைக்கேட்டதும் தலை சுற்றியது. என்னென்னவோ வேண்டாத கற்பனைகள் தலைக்குள் வந்தது. பயத்தில் நா உலர்ந்தது.

“வாடா..” என்று அவனது நண்பன் அவனை இழுத்து வந்து பைக்கில் ஏற்றினான்.

“டேய்.. அக்காவுக்கு ஃபோன் பண்ணு.. என்ன ஏதுனு கேளு” என்று அவன் சொன்னதும், ஜெகன் அவசரமாக கண்ணை துடைத்து விட்டு கைபேசியை எடுத்தான்.

ஜானகியின் எண்ணை அழுத்தியவனுக்கு, நொடிக்கு நொடி பயம் கூடியது.

ஜானகி கைபேசியை அறையில் வைத்து விட்டு வெளியே இருந்தாள். சத்தம் கேட்டு வந்து எடுத்தவள், “என்னடா?” என்று கேட்டாள்.

அவள் குரலை கேட்டதும் தான் ஜெகனுக்கு உயிர் வந்தது.

“க்கா.. எங்க இருக்க?”

“வீட்டுல தான். ஏன்?”

“அப்ப கார்ல யாரு போனது?”

“கார்லயா? உன் மாமா தான் கிளம்பிப்போனாரு.. ஏன்டா?”

“க்கா…” என்று தயங்கியவனுக்கு மீண்டும் பயம் உட்சத்துக்கு சென்றது.

“கார் ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கு கா…” என்றவன் பார்வை சாலையில் தெரிந்த இரத்தத்தில் பதிந்தது.

ஜானகி அதிர்ச்சி தாங்காமல் பொத்தென தரையில் அமர்ந்து விட்டாள்.

“க்கா.. க்கா..” என்று ஜெகன் கத்த, பதிலே வரவில்லை.

அவளை பார்த்து விட்டு தெய்வநாயகி பதறி அடித்து ஓடி வந்தார்.

“என்னமா? என்ன இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று பதற, ஜானகியின் கண்கள் கலங்கி கண்ணீரை சிந்தியது.

“அத்த.. அவர.. அவருக்கு.. ஆக்ஸிடென்ட்டாம்” என்றவளுக்கு மூச்சு திணறியது.

“கடவுளே..” என்று நெஞ்சில் கை வைத்தவர், “யார் சொன்னா?” என்று கேட்டவர் பயத்தோடு அவளது கையிலிருந்த கைபேசியை வாங்கி பேசினார்.

“அத்த.. நான் ஜெகன் பேசுறேன். நான் ஹாஸ்பிடல் போறேன். நீங்களும் வாங்க. அக்கா எங்க?”

“அழுதுட்டு இருக்காபா.. நாங்க வர்ரோம்”

“அக்காவ பார்த்துக்கோங்க” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.

இருவரும் வேகமாக மருத்துவமனையை நோக்கிச் சென்றனர்.

“ஜானகி.. எந்திரி.. ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்ற தெய்வநாயகிக்கும், மகனை நினைத்து உள்ளம் பதறியது. குரல் கலங்கினாலும் உள்ளம் கலங்க கூடாது என்று கட்டுப்படுத்தி, கடவுளிடம் மகனுடன் இருக்கும் படி வேண்டிக் கொண்டார்.

ஜானகிக்கு கந்தசாமிக்கு என்னவானதோ என்று பயமாக இருந்தது. அதையும் மீறி எழுந்து, கண்ணீரை துடைத்தவள் உடனே கிளம்பினாள்.

வீட்டை பூட்டி விட்டு பெண்கள் இருவரும் மருத்துவமனை நோக்கிச் சென்றனர்.

அங்கு செல்லும் முன்பே, ஜெகன் மீண்டும் அழைத்தான்.

“க்கா… மாமா நல்லா இருக்காரு” என்று உடனே சொல்ல, அவள் பிடித்து வைத்திருந்த மூச்சை அப்போது தான் விட்டாள்.

“நீ பார்த்தியாடா?”

“ஆமா கா.. நல்லா தான் இருக்காரு.. நீ எங்க இருக்க?”

“வந்துட்டு இருக்கோம்..”

“சரி வா”

“அவரெங்க?”

“உள்ள எதோ கூப்பிட்டாங்கனு போயிருக்காரு”

ஜானகி கண்ணீரோடு தெய்வநாயகியிடம் விசயத்தை சொல்ல, அவர் அத்தனை கடவுளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

சில நிமிடங்களில் இருவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர். வாசலிலேயே ஜெகன் நின்றிருந்தான். மருத்துவமனை மிகவும் அமைதியாக இருக்க, “மாமா எங்கடா?” என்று கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல” என்றதும் உடனே சென்றாள்.

கந்தசாமி அங்கே ஒரு நர்ஸோடு பேசிக் கொண்டு நின்றிருந்தான். பார்த்ததும் அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரையை உடைத்தது.

விறுவிறுவென அவள் அருகே செல்ல, கந்தசாமியும் பார்த்து விட்டான்.

“டெஸ்ட் ரிப்போர்ட் சாயங்காலம் வந்துடும்” என்று விட்டு நர்ஸ் செல்ல, கந்தசாமி தலையாட்டி விட்டு மனைவியை பார்த்தான்.

ஜானகி அவனது கையைக்கட்டிக் கொண்டு, புஜத்தில் முகத்தை புதைத்தாள்.

கந்தசாமி அவளது தலையை தட்டினான்.

“எனக்கு ஒன்னும் இல்ல..” என்றான் ஆறுதல் சொல்லும் குரலில்.

ஜானகி கண்ணீரோடு தலையாட்டினாள்.

“அம்மா வர்ராங்க” என்றதும், உடனே கையை விட்டு விட்டு நிமிர்ந்து நின்றாள். தெய்வநாயகியும் வந்து பேச, இருவருக்கும் சமாதானம் சொன்னான்.

“டிரைவர் தான் பாவம் கீழ விழுந்து கால்ல அடிபட்டுருச்சு. அவர தான் அட்மிட் பண்ண வந்தேன்”

“என்ன நடந்துச்சு?” என்று கேட்க, கந்தசாமியும் சொன்னான்.

வேலைக்கென கிளம்பி இருக்க, திடீரென காரில் எதோ கோளாறு ஏற்பட்டது.

நடுசாலையில் வண்டியை நிறுத்தாமல், சட்டென வேறு பாதைக்கு கொண்டு வந்து காரை நிறுத்தினார் டிரைவர். அங்கேயே அவர் காரில் என்ன நடந்தது என்று சோதிக்க, கந்தசாமி காரை விட்டு இறங்கி சற்று தூரமாக சென்று கைபேசியில் பேசினான்.

காரை சரி பண்ணி வர தாமதமாகும் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த பாதைக்குள் திடீரென ஒரு பெரிய வாகனம் வந்து அவர்களது காரை பலமாக மோதியது.

டிரைவர் கார் முன்னால் நிற்க, இடித்த வேகத்தில் காரும் முன்னால் நகர, அவர் அடிபட்டு கீழே விழுந்தார். வண்டி வந்த வேகத்தில் திரும்பிச் சென்று விட்டது.

கந்தசாமி வெளியே இருந்ததையோ, அவன் ஓடி வந்து டிரைவரை தூக்கியதையோ யாரும் பார்க்கவில்லை.

காருக்குள் இருக்கிறான் என்று நினைத்து இடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டது.

கந்தசாமி அடியில் விழுந்து கிடந்த டிரைவரை தூக்க, கூட்டம் கூடியது அந்த இடத்தில். சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூச்சல் அதிகமாக, காவல்துறையினர் வந்து விட்டனர். அவர்களிடம் காரை ஒப்படைத்து விட்டு, டிரைவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு உடனே அங்கிருந்து சென்றான் கந்தசாமி. அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு தான், ஜெகன் வந்து விசயத்தை அறிந்தான்.

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.. குலசாமிக்கு நேத்திக்கடன் ஒன்னு செய்யனும் சாமி.. அப்ப தான் மனசு ஆறுதலாகும்” என்று தெய்வநாயகி பேச, ஜானகிக்கு கோபம் கோபமாக வந்தது.

அந்த விக்னேஷன் கடைசியாக கந்தசாமியை கொல்ல பார்த்து விட்டானே? இப்போது தப்பி விட்டான். இனியும் தப்புவானா? ஒவ்வொரு நாளும் இப்படி போராட முடியுமா?

அவனை என்ன செய்வது? என்று ஜானகி யோசிக்க ஆரம்பித்தாள். கந்தசாமி சொன்னது போல் அவனை திசை திருப்பினால் மட்டும் போதாது. அதை விட பெரிதாக.. அவன் வாழ்நாள் முழுவதும் மறக்காத ஒன்றை செய்ய வேண்டும்.

அவள் மனதில் பல நிகழ்ச்சிகள் ஓட, எதை பற்றியும் கந்தசாமியிடம் சொல்லவில்லை.

டிரைவரின் மருத்துவ செலவுக்கு பணத்தை கொடுத்து விட்டு வெளியே வர, ஜெகன் கந்தசாமியிடம் தனியாக பேசினான்.

“மாமா.. இத பண்ணது அந்த கிழவனோனு சந்தேகமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்லுற?”

“காலையில இருந்தே அம்மா சரி இல்ல. எதையோ சாதிக்க போற மாதிரி ரொம்ப சந்தோசமா சுத்திட்டு இருந்தாங்க. அவங்களும் அந்த கிழவனும் செஞ்ச வேலைனு நினைக்கிறேன்.”

கந்தசாமிக்கு புரிந்தது தான். அவனும் நேற்றே ஒரு முடிவுக்கு வந்து விட்டான்.

“அவன் இனிமே எதுவுமே செய்ய முடியாத மாதிரி ஒன்னு பண்ண போறேன்டா. அப்புறம் எல்லாம் சரியா போயிடும்” என்று அவனுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான்.

காரை சர்வீஸுக்கு விட்டு விட்டு, வீட்டுக்கு சென்று விட்டனர்.

இரவு அருகருகே படுத்திருந்தாலும், கணவன் மனைவி இருவரும் தூங்காமல் விழித்து தங்களது எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்.

கந்தசாமி ஜானகியை பார்த்து விட்டு, “தூங்கலயா?” என்று கேட்டான்.

“தூக்கம் வரல.. ப்ச்ச்”

“நான் வேணும்னா தாலாட்டு பாடவா?”

ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தவள், “பாடு பார்ப்போம்” என்றாள்.

தொண்டையை கணைத்துக் கொண்டு அவன் பாடுவது போல் பேசி வைக்க, அவளுக்கு சிரிப்பு வந்தது.

“போதும் போதும்.. இந்த பாட்ட கேட்டா வந்த தூக்கம் கூட ஓடிரும்” என்று நிறுத்தினாள்.

“என் குரல் வளத்த பார்த்து உனக்கு பொறாமை”

“ஆமா.. இந்த மாதிரி குரலெல்லாம் எங்க கிடைக்கும்? பேசாம சிங்கராகிடு”

“ஒரு நாள் அதுவும் ஆக போறேன். நீ ஏன் ஆட்டோகிராப்காக லைன்ல நிக்க போற பாரு” என்று காலரை தூக்கியவனை, பார்த்து சிரிப்பு தான் வந்தது.

“பொண்டாட்டி லைன்ல நிக்கனுமா? டூ மச்சா இல்ல?”

“நீ என் பொண்டாட்டியா?”

“எதே? நீ தான மேன் தாலி கட்டுன?”

“தாலி கட்டுனா பொண்டாட்டியா? என் கூட சந்தோசமா வாழ்ந்தா தான பொண்டாட்டி?”

“நான் சந்தோசமா தான் இருக்கேன்”

“இல்லையே.. நான் சந்தோசமா இல்லையே?”

“ஹான்?”

அவளருகே வந்தவன், “இன்னைக்கு கார் கண்ணு முன்னாடி நொறுங்கி இருக்கப்ப என்ன தோனுச்சு தெரியுமா?” என்று கேட்டான்.

அவள் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“அந்த கார விட்டு நான் இறங்காம இருந்திருந்தா, உள்ளயே நசுங்கி செத்துருப்பேன். ஆசையா கல்யாணம் பண்ண என் பொண்டாட்டி கூட சந்தோசமா வாழாமலே செத்துருப்பேன்”

அவளுக்கு கண்கள் கலங்கியது.

“நானும் அதான் நினைச்சேன்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“என்ன நினைச்ச?”

“என் மனசுல இருக்கத சொல்ல முடியாம போயிடுமோனு பயந்துட்டேன்”

“இப்ப சொல்லேன்”

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப.. கல்யாணத்தப்போ உன்னை இழந்துட்டேன்னு நினைச்சேன். ஆனா கிடைச்ச.. இன்னைக்கு…”

அழுகையில் அவளது குரல் கலங்க, உடனே கந்தசாமி அவளது இதழ்களில் முத்தமிட்டான்.

கண்ணீர் கண்ணை தாண்ட, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் ஜானகி.

2 Comments

Leave a Reply