லாவண்டர் 2

Loading

அன்று மாலை…

ஜானகி வேலை முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகு, அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மனதில் ஜாக்ஷி பேசிச் சென்ற ஒவ்வொரு வார்த்தையும் ஓடியது.

அவளது தந்தையை இழுத்து பேசியது மட்டும் சுருக்கென தைத்தது. ஜானகியின் தந்தை சிற்றம்பலம் தொழிலில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர்.

அவரது வாழ்வில் அவர் அவ்வளவு நல்லவராக இல்லாமல் போகலாம். ஆனால் தொழிலில் யாரும் தொடக்கூட முடியாத இடத்தில் இருந்தவர். அதனால் தான் அவரது சொந்த வாழ்வு பிரச்சனைகளை வைத்து கூட, அவரை யாராலும் தரையிறக்க முடியவில்லை.

ஜகதீஸ்வரியிடம் தான் அவர் தொழில் கற்றார். அவருக்கு மாமியாரின் மீது மரியாதை மலையளவு இருந்தது. ஜாக்ஷியின் அன்னை காதம்பரியை விவாகரத்து செய்து, ஜானகிக்காக மேனகாவோடு திருமணமும் செய்து கொண்டார்.

அவரோடு வாழ்ந்த நாட்களை பற்றி, மேனகா குறை சொன்னதே இல்லை.‌ அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார். பணத்திற்கோ ஆடம்பரத்திற்கோ எந்த குறையும் வந்தது இல்லை.

ஜானகியை அவர் உயிராக வளர்த்தார். சிறந்த கல்வி சிறந்த வாழ்வு தான் அவளுக்கு. ஜெகனுக்கும் அதே தான். இருவரையும் எவ்வளவு பொத்தி பொத்தி வளர்த்தாலும் அவரால் மறக்க முடியாத ஒரே விஷயம் ஜாக்ஷி.

ஜானகியின் முன்பு ஜாக்ஷியின் பெயரையே எடுக்க கூடாது என்று மேனகா எவ்வளவோ சண்டை போட்டுப் பார்த்தார். ஆனால் எதற்குமே சிற்றம்பலம் கவலைப்பட்டது இல்லை.

ஜகதீஸ்வரி பாட்டியையும் ஜாக்ஷியையும் பற்றி பேசாமல் அவர்களது வாழ்வில் ஒரு நாளும் சென்றது இல்லை.

வளர வளர, மேனகா ஜாக்ஷியும் அவளது பாட்டியும் மோசக்காரர்கள் என்று சொல்லி, பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைத்து வைத்தார்.

முதல் தாரத்தின் பெண் ஜாக்ஷி என்று தெரிந்த போது, ஜானகிக்கும் ஜெகனுக்கும் கூட அவளை பிடிக்காமல் போனது.

“ஜாக்ஷி நிறைய மார்க் வாங்கிருக்கா. ரொம்ப பெருமையா இருக்கு. நீங்களும் நல்லா படிக்கனும்”

“ஜாக்ஷிக்கு எந்த காலேஜ்ல இருந்து சீட் கிடைச்சுருக்கு தெரியுமா? சூப்பர் காலேஜ் அது. அவ திறமைக்கு இன்னும் நல்லா வளருவா”

“இத்தனை வருசமா வெளிநாட்டுலயே இருக்கா. இங்க அவ பாட்டி தான் பாவம் அவள நினைச்சு கவலைப்பட்டுட்டே இருக்காங்க. திரும்பி வந்தா நல்லா இருக்கும்”

“ஜாக்ஷி இன்னைக்கு வர்ரா.. ஜாக்ஷி இன்னைக்கு காலையில வர்ரா.. நான் பார்க்க போறேன்”

“இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? ஜாக்ஷி ஆஃபிஸ் வந்தா. இனிமே அவளும் ஆஃபிஸ்ல வேலை செய்வாளாம். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?”

“இன்னைக்கு பல நாள் திருடன் ஒருத்தன கையும் களவுமா பிடிச்சு துரத்தி விட்டோம். பிடிச்சது யாருங்குற? ஜாக்ஷி தான். நான் தெரிஞ்சும் எதுவும் பண்ண முடியாம இருந்தேன். அவ எத பத்தியும் கவலைப்படல. விளாசிட்டா. அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. அப்படியே பாட்டி மாதிரி”

ஜாக்ஷி… ஜாக்ஷி.. ஜாக்ஷி.. இந்த பெயரை கேட்டு கேட்டுத்தான் ஜானகியும் ஜெகனும் வளர்ந்தனர். அப்படித்தான் சிற்றம்பலம் அவர்களை வளர்த்தார். அவளது வீரதீர புராணத்தை படிக்காமல் ஒரு நாள் சாப்பாடு இறங்காது அவருக்கு.

அதனால் இருவருக்கும் ஜாக்ஷியை பற்றி நன்றாக தெரியும் என்றே நினைத்திருந்தனர். இன்று ஜாக்ஷி பேசிச் சென்றது அவளது எண்ணத்தை மாற்றியது.

ஜானகியின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள் ஜாக்ஷி.

காலையில் அவள் பேச ஆரம்பித்ததும், சம்பந்தமில்லாமல் எதெதோ பேசுகிறாளே என்று ஜானகிக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அங்கிருந்து கோர்வையாக விசயத்தை கொண்டு வந்து அவள் முடிக்கும் போது, யாருக்கும் எதிர்த்து பேச வாய் வரவில்லை.

“என் பணத்தில் ஆரம்பித்த தொழிலின் லாபத்தை நான் எடுத்துக் கொள்ளாமல் உனக்கா கொடுக்க முடியும்?” என்று கேட்டாளே!

வந்ததும் இங்கிருந்த பணத்தை திருடி கார் வாங்கியது போல் ஜானகியை கேள்வி கேட்டவர்கள் எல்லோரும், ஜாக்ஷி அப்படித்தான் எடுப்பேன் கேட்க நீ யார்? என்று கேட்டதும் அடங்கி நின்றனரே.

இத்தனைக்கும் அவள் குரல் உயர்த்தி பேசியபோதும் கூட, யாருக்கும் அவள் மீது கோபமே வரவில்லை.

‘இவ எப்படி இப்படி இருக்கா? இப்படி இருக்கதால தான் மொத்த பிஸ்னஸையும் ஒத்த ஆளா சமாளிக்கிறா போல’ என்று ஆச்சரியமாக நினைத்துக் கொண்டாள்.

“வேலை முடிஞ்சது கிளம்பலயா?” என்று கந்தசாமி வந்து நின்றான்.

அவனை பார்த்ததும் ஜானகியின் யோசனை அவன் மீது தாவியது.

“போகனும்”

“கிளம்புங்க” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அறையை பூட்டியவள், வாசலை நோக்கி நடந்தாள். தூரத்தில் கந்தசாமி கடைசி நேர வேலைகளை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தான்.

விளக்குகளை எல்லாம் அணைத்து முடித்தவன், அவளை நெருங்கி வந்தான்.

“என்ன?”

“ஒன்னுமில்ல..”

“என்ன கேட்கனும்?”

“நான் கார் வாங்குனது ஜாக்ஷிக்கு எப்படி தெரியும்?”

“நான் சொல்லல”

“நீங்க தான அவள வரச்சீங்க?”

“மேடம அவ இவனு பேசாதீங்கனு சொல்லிருக்கேன்”

“சரி.. இப்ப பதில் சொல்லுங்க”

“இங்க ஒரு பிரச்சனை.. எங்களால சுத்தமா சமாளிக்க முடியல. வேலைய விட்டுட்டு எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க. நீங்க ஃப்ரீயா இருந்தா வாங்கனு கூப்பிட்டேன். என்ன வேணுமாம்னு கேட்டாங்க. சேலரி இன்க்ரிமெண்ட் கேட்குறாங்கனு சொன்னேன். ஓகே வர்ரேன்னு சொல்லிட்டாங்க.”

கந்தசாமி நடந்தபடி பேச ஜானகியும் அவனோடு நடந்தாள்.

“அப்ப நீங்க வேற எதையுமே சொல்லலயா?”

“சொல்ல தேவையில்ல. அவங்க வந்து கேட்டாலே போதும். முடிச்சுடுவாங்கனு தெரியும்”

“அப்ப கார் விசயம்? அது அவ.. ஜாக்ஷியா கெஸ் பண்ணதா? அதெப்படி முடியும்? நான் கார் வாங்குனது எப்படி தெரிய வரும்?”

எந்த காரினால் பிரச்சனை வந்ததோ, அதே காரின் அருகே இருவரும் வந்து விட்டனர்.

கந்தசாமி நின்று அவளை நேராக பார்த்தான்.

“சொன்னா வருத்தப்படுவீங்க. ஆனா சொல்லாம விடுறது தப்பு. அதுனால சொல்லுறேன். எங்க எது நடந்தாலும் ஜகதீஸ்வரி பாட்டிக்கும் ஜாக்ஷி மேடம்க்கும் கண்டிப்பா தெரிஞ்சுடும்.”

“அது எப்படி? ஸ்பை வச்சுருப்பாங்களா என்ன?”

“அது தெரியாது. ஆனா அவங்களோட பார்ட்னர்ஸ் விசயத்த எல்லாம் கரெக்ட்டா கவனிப்பாங்க. நீங்களும் இப்போ ஒரு பார்ட்னர். உங்களோட விசயமும் அவங்களுக்கு தெரியும். நீங்க கார் வாங்குனது அவங்க காதுக்கு போகத்தான் செய்யும். அந்த கார வித்தாலும் யாருக்கு எவ்வளவு விலையில வித்தீங்கனு கூட அவங்களுக்கு தெரிஞ்சுடும்.”

“அப்போ கண்காணிச்சுட்டே இருப்பா?” என்று அதிருப்தியை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

“ஆமா. கோடி கோடியா பணத்த போட்டவங்க கண்டுக்காம இருந்துடுவாங்கனு நினைக்க மாட்டீங்க தான?”

கவனிப்பை நினைத்து எரிச்சல் பட்டு முடிப்பதற்குள், கந்தசாமி அவளை முட்டாளாக்குவது போல் கேள்வி கேட்டு வைத்தாள்.

எரிச்சலை காட்டி தன்னை மேலும் முட்டாளாக்காமல், “நான் ஏன் நினைக்கிறேன்?” என்று தோளை குலுக்கினாள்.

கந்தசாமி மணியை பார்த்து விட்டு, “நேரமாச்சு கிளம்புங்க. நாளைக்கு காலையில வெளிய போகனும். சீக்கிரமா கிளம்பி வாங்க” என்றவன் பைக்கில் ஏறிக் கொண்டான்.

‘இவன் என்ன எனக்கு ஆர்டர் போடுறான்? நான் பாஸா? இவன் பாஸா? ஆனா பல நாளா இப்படித்தான் செய்யுறான். ஜாக்ஷி கிட்ட மட்டும் மேடம் மேடம்னு உருக வேண்டியது. என் கிட்ட ஆர்டர் போட வேண்டியது’ என்று கடுப்போடு நினைத்தவள் காரில் ஏறி அமர, ஓட்டுநர் காரை எடுத்தார்.

வீடு சென்று சேரும் போது ஜெகன் வந்திருந்தான். சாப்பாடு மேசையில் தயாராக இருந்தது.

“க்கா..”

“என்னடா?”

“இன்னைக்கு ரொம்ப லேட்டா வர்ர?”

“ஒரு பிரச்சனை. முடிஞ்சதும் கிளம்பி வர்ரேன். பசிக்குது.. ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன். அம்மா எங்க?”

“அவங்க சாப்பிட்டு படுத்துட்டாங்க. தலை வலியாம்”

“சரி இரு வர்ரேன்” என்றவள், அறைக்குள் சென்று விட்டாள்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு வேறு உடையில் வந்தாள்.

“உட்காருகா … சாப்பிடலாம்”

“நீயும் சாப்பிடலயா?”

“ஆமா”

இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

“இன்னைக்கு ஃபேக்டரில என்ன நடந்துச்சு தெரியுமா?” என்று கேட்டவள், சாப்பிட்டபடியே முழு கதையும் சொல்லி முடித்தாள்.

“அப்ப யாரு கிளப்புனானு கூட ஜாக்ஷி கண்டு பிடிச்சுட்டாங்களா?”

“ஆமா. அவன போலீஸ்லயும் பிடிச்சு கொடுத்துட்டா”

“பயங்கரமான ஆளுகா.. நீங்க ரெண்டு நாளா கண்டு பிடிக்க முடியல. இருபது நிமிஷத்துல வந்து வேலைய முடிச்சுட்டு போயிட்டாங்க. கில்லாடி தான்”

“ஆமாடா.. அவ பேச ஆரம்பிக்கும் போது இவ என்ன லூசானு தோனுச்சு. ஆனா எங்க ஆரம்பிச்சு எங்க வந்து செக் வைக்கனும்னு கரெக்ட்டா வச்சா பாரு. செம்ம சாக். அப்ப தான் அப்பா ஏன் இவள தலையில தூக்கி வச்சுட்டு ஆடுனாருனு புரிஞ்சுச்சு. யார எங்க எப்படி அடிக்கனும்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்கா”

“நீயும் இப்ப பிஸ்னஸ பார்க்குறலகா.. நீயும் பெஸ்டா வருவ. நானும் காலேஜ் முடிச்சுட்டு கத்துக்கிறேன்.”

“என்னடா சொந்த அக்காவே இப்படி சொல்லுறாளேனு நினைக்க மாட்டனா ஒன்னு சொல்லுறேன்”

“என்னது?”

“நாம எல்லாம் எத்தனை வருசம் போராடுனாலும் அவ அளவுக்கு வரவே முடியாதுடா. அவ ரத்தத்துலயே ஊறி இருக்கு அதிகாரம் பண்ணுற திறமை. அவ வந்து நிக்க தான் செஞ்சா. அத்தனை பேரும் எந்திரிச்சு நின்னாங்க. அவ குரல உசத்துறா.. எல்லாம் வாய மூடிட்டு கேட்குறாங்க. போறப்போ என்னை அந்த கிழி கிழிக்கிறா. வீட்டுல குடும்ப விசயமா இருந்தா எதிர்த்து பேச வர்ர வாய்.. அங்க வரவே இல்ல. அவ பெரிய இடத்துலயும் நான் கீழ இருக்க மாதிரியும் ரொம்ப அசிங்கமா போச்சு”

“க்கா.. வருத்தப்படாத”

“வருத்தப்படாம எங்க இருக்கது? அவ பேசுன பேச்சுக்கு ஒரு பேச்சு எதிர்க்க முடியல. அந்த அளவு டாமினன்ட் கேரக்டர் எல்லாம் பிறப்புலயே வரனும்”

“அப்படி நாம யாரையும் அடிமை படுத்த வேணாம். நாம நல்லவங்களா இருப்போம்” என்று ஜானகி வருந்துவது பொறுக்காமல் சொன்னான்.

“நீ வேற.. அவ அடிமை படுத்துனா எல்லாரும் அவள எதிர்க்க தான செய்யனும்? அவ சொன்னா தலையாட்டுற அளவு மரியாதை வச்சுருக்காங்க. பொறாமையா இருக்குடா. அது மாதிரி எல்லாம் நான் நிமிர்ந்து நின்னு பேசுவனானு தெரியல”

“பேசலாம்கா. நாம இப்ப தான கத்துக்க ஆரம்பிச்சுருக்கோம்? ஒரு நாள் இதே மாதிரி பலத்தோட நாமலும் நிற்போம். கவலையே படாத”

“ம்ம்” என்றவள் தட்டை கழுவி வைத்தாள்.

“நீ படிச்சியா? பார்ட் டைம் வேலையில மறந்துட்டுயா?”

“இப்ப படிக்க தான் போறேன். தூக்கம் வர்ர வரை படிப்பு தான்.”

“அப்ப ஹாலுக்கு வா. நானும் ஃபைல்ஸ பார்க்கனும்”

அக்கா தம்பி இருவரும் துணையாக அமர்ந்து தங்களது வேலையை பார்த்தனர்.

ஜெகனுக்கு முதலில் தூக்கம் வந்து விட, அறைக்குச் சென்று விட்டான்.

வேலையில் மூழ்கி இருந்த ஜானகிக்கும் கண்கள் சொருக, தூக்கி வைத்து விட்டு மெத்தையில் விழுந்தாள்.

தூக்கம் கண்ணை சுழற்றிய போதும், ஜாக்ஷி திட்டிய வார்த்தைகள் காதில் ஒலித்தது. அதை நினைத்தபடியே உறங்கினாள்.

•••

அன்றொரு நாள்…

கந்தசாமி காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். இன்று அங்கு வேலை இருந்தது. அது முடிந்த பிறகு தான் தொழிற்சாலை செல்ல வேண்டும்.

செய்ய வேண்டிய வேலைகளை நினைத்தபடி கிளம்பிக் கொண்டிருக்க, “சாமி.. இங்க வாயா” என்று அவனுடைய தாய் அழைத்தார்.

தெய்வநாயகி கந்தசாமியின் அன்னை. அவருடைய கணவன் இதய கோளாறில் இறந்த பிறகு, மகன் மட்டுமே உலகமென வாழ்ந்து வருகிறார். கடவுள் பக்தி அதிகம் உண்டு. நெற்றியில் திருநீறு இல்லாமல் பார்க்கவே முடியாது. கணவன் இருந்தவரை எப்போதும் மஞ்சள் குங்குமம் நிறைந்து இருக்கும்.

தாயின் குரலை கேட்டதும் அருகே சென்றான்.

“சாயந்தரம் நம்ம பூசாரி கிட்ட பேசுனேன். யாரோ உன்னை பத்தி விசாரிச்சுருக்காங்க. அவங்க வீட்டுல பொண்ணு இருக்காம். விசயத்த நம்ம காதுலயும் போடனும்னு சொன்னாரு. நீ என்னபா சொல்லுற?”

கந்தசாமி ஒரு நிமிடம் யோசித்தான்.

“உங்களுக்கு பிடிச்சா பாருங்கமா” என்று விட்டான்.

தெய்வநாயகியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“சரிபா.. சரி.. நான் பார்த்து வைக்கிறேன். என்ன ஏதுனு கேட்டு வைக்கிறேன்”

தாய்க்கு தலையாட்டியவன், உடனே கிளம்பி விட்டான்.

நேராக அலுவலகம் சென்றவன் அங்கிருந்த ஒருவரை சந்தித்து வேலையை முடித்து விட்டு உடனே தொழிற்சாலை கிளம்பாமல் அமர்ந்திருந்தான்.

அந்த தொழிற்சாலை ஜானகிக்கு வந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது.

வேலையை செய்ய முடியாமல் திணறும் ஜானகி மாறி விட்டாள். அவனது வேகத்துக்கு நடக்க முடியாவிட்டால் ஓடப்பழகிக் கொண்டாள்.

கந்தசாமியும் தன்னால் முடிந்தவரை அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தான். ஒரு வருடத்தில் எத்தனையோ பிரச்சனைகள். அனைத்தையும் சமாளித்து வளர்ந்து கொண்டிருந்தாள்.

இன்னும் இரண்டு வருடங்கள் அவனுக்கு அங்கே வேலை இருக்கிறது. ஜெகன் படித்து முடித்து விட்டு வந்து விட்டால், அவனை ஜானகிக்கு துணையாக விட்டு விட்டு அலுவலகத்திற்கு திரும்பி விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.

திருமண ஆசை தாய்க்கு சில நாட்களாக இருப்பதை கவனித்திருந்தான். நேரடியாக கேட்கும் போது மறுக்க கூடாது என்றும் முடிவு செய்தது தான். ஆனால் என்னவோ அவனுக்கு சரியில்லை என்று தோன்றியது.

ஜானகி. பதில் தெளிவாக தெரிந்தாலும் அதை காட்ட பிடிக்கவில்லை. சொந்த மனதிடமே பொய் சொல்ல முடியாது அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு இருந்தான்.

ஜானகியை அவனுக்கு பல வருடங்களாக தெரியும். அதாவது அவன் சிற்றம்பலத்திடம் வேலை செய்ய ஆரம்பித்த போதிலிருந்து.

முதன் முதலில் அவளை பார்த்த போது, “யாரு சின்ன பொண்ணுங்கள ஆஃபிஸ்க்குள்ள விட்டது?” என்று கோபத்துடன் அருகே சென்றான்.

“பாப்பா இங்க என்ன பண்ணுற? எதுக்கு உள்ள வந்த?” என்று அதட்டியவனை, ஜானகி சற்று பயந்து போய் பார்த்தாள்.

பிறகு தைரியத்தை வரவைத்துக் கொண்டு, “என் அப்பாவ பார்க்கனும்” என்றாள்.

“அப்பாவா? ஏன் வீட்டுக்கு வந்ததும் பார்க்க மாட்டியா?”

“அவரு தான் இங்க வர சொன்னாரு”

‘யாரு அது? பொறுப்பில்லாம சின்ன பிள்ளைய வர வச்சது?’ என்று எரிச்சல் வந்தது.

“உன் அப்பா பேரென்ன?”

“சிற்றம்பலம்”

அதிர்வோடு வேறு எதாவது சிற்றம்பலம் இருக்கிறாரா? என்று யோசித்தான்.

“அவர் தான் இங்க ஓனர். அப்பா எங்க இருக்காரு?” என்று ஜானகி கேட்க, கந்தசாமியின் சந்தேகம் வலுத்தது.

“உன் பேரென்ன? நான் போய் உங்க மக வந்துருக்கானு சொல்லனும்”

“ஜானகி

“வா”

அழைத்துச் சென்று அமர வைத்தவன் சிற்றம்பலத்திடம் சொல்ல, “அதுக்குள்ள வந்துட்டாளா? உள்ள கூட்டிட்டு வா” என்றார் அவர்.

கந்தசாமி அழைத்து வந்ததும் சிற்றம்பலம் கை நீட்டி மகளை வரவேற்றார்.

“அம்மா அவன மட்டும் கூட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நான் வீட்டுக்கு போகாம இங்க வந்துருக்கேன்.”

“உனக்கு தான் எக்ஸாம் இருக்குல.”

“ஆனா ப்பா.. ஆஃபிஸ் ரொம்ப பெருசா இருக்குபா” என்று ஆச்சரியமாக கைவிரித்து சொல்ல சிற்றம்பலம் சிரித்தார்.

“கந்தசாமி.. ப்யூன் கிட்ட எதாவது சாப்பிட வாங்கிட்டு வர சொல்லு”

கந்தசாமி தலையாட்ட, “வந்ததும் சாப்பிட்டு அப்பா பக்கத்துல உட்கார்ந்து படிக்கனும். சரியா?” என்று கேட்டார்.

மகள் அவர் பேச்சை அறைகுறையாக கேட்டு விட்டு, “நான் இத சுத்தி பார்க்கவா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“இன்னொரு நாள் பார்க்கலாம். இப்ப படிக்குறது தான் முக்கியம்”

அடம்பிடிக்காமல் நல்ல பிள்ளையாக அவள் அமர்ந்து விட, கந்தசாமி வெளியேறினான்.

அன்று தான் ஜானகி முதன் முதலில் அலுவலகம் வந்தாள். சிற்றம்பலம் அவரது சொந்த வாழ்வை மறைத்து ஒன்றும் வைக்கவில்லை.

பிள்ளைகள் இங்கு வந்தால் தேவையில்லாத பேச்சுக்களை கேட்க நேரிடலாம் என்று அழைத்து வந்தது இல்லை.

இப்போது மேனகா மகனோடு வெளியூர் சென்றிருக்க, மகளை வீட்டில் தனியாக விட முடியாமல் காரில் அலுவலகம் வரச் சொல்லி விட்டார்.

அன்று அவளை பார்த்த பிறகு கந்தசாமி அவளை அடிக்கடி பார்த்தான். சிறு பிள்ளை என்றே பல வருடங்களாக கடந்தவன் மனதில் ஜானகி புகுந்தாள்.

ஜாக்ஷி அவளது பிறப்பின் உண்மையை சொன்னதும், தந்தையிடம் பேசி விட்டு அவள் அழுது ஓடும் போது கந்தசாமிக்கு மனம் வலித்தது.

அது வரை சிற்றம்பலத்தின் வாழ்வை பற்றிய அக்கறையே அவனுக்கு இருந்தது இல்லை. ஆனால் அன்று அவள் அழுத போது, அவர் மீது கோபம் வந்தது.

அதன் பிறகு பல நாட்கள் அவன் அவளை பார்க்கவே இல்லை.

மனம் போகும் பாதை அவனுக்கு புரிந்த போது, சந்தோசமும் பயமும் ஒன்றாக வந்தது. அவனது குடும்பம் எங்கே? அவள் எங்கே?

அவனுடைய தந்தை ஒரு சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவனும் இப்போது தான் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறான். சொந்தமாக ஒரே ஒரு வீடு தான் இருந்தது. வேறு எதுவுமே இல்லை.

அவளோ மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின்  இளவரசி. அவளது படோபடமும் அவனது எளிமையும் எங்கே சேரும்?

அவனுக்கு கழிவிரக்கம் அதிகமாக இருந்த போதும், மனதில் பூத்த காதல் அழியவில்லை. என்னவோ அந்த வயதின் ஆர்வம் அதை தீணி போட்டு வளர்க்கவே செய்தது.

அந்த ஆர்வத்திற்கு முடிவாக வந்தது அவனது தந்தையின் இறப்பு. தந்தையை பறி கொடுத்து அவன் அடைந்த துன்பத்தில், மொத்த உலகத்தையும் ஒரே நாளில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

சிற்றம்பலம் வந்து மாலை போட்டு ஆறுதல் சொல்லி விட்டு சென்ற போது, அவர் வந்து சென்ற கார் அன்று தனியாக தெரிந்தது. அவனது மொத்த சொந்தங்களுக்கு இடையே அவரது வித்தியாசம் பளிச்சென விசயத்தை புரியவைத்தது.

அதன் பின் அவனது ஆசைக்கு சமாதி கட்டி விட்டான். ஜானகியை பார்த்தால் மனதை கட்டுப்படுத்த ஆரம்பித்தான். அவளை பற்றிய செய்திகளில் அக்கறை காட்ட கூடாது என்று மனதை வேறு பக்கம் திருப்பினான்.

ஆனால் எல்லாம் அவனோடு தான். அவள் எதையும் அறியவில்லை. தந்தையின் பி.ஏ என்று அவனிடம் தான் தந்தையை பற்றி எப்போதும் விசாரிப்பாள்.

சிற்றம்பலம் விபத்துக்குள்ளாகிய செய்தியை கேட்டு ஓடி வந்த போது, அவனது மனதில் ஜானகியை பற்றிய கவலை தான் அதிகம் இருந்தது. ஜாக்ஷி எவ்வளவு தைரியமாக இருந்தாள். ஆனால் ஜானகி தந்தைக்காக கதறினாள்.

ஜாக்ஷிக்கு சிற்றம்பலம் ஒரு துரோகி. ஆனால் ஜானகிக்கு பாசமுள்ள தந்தை. இருவரும் எதிரும் புதிருமாக அந்த நிகழ்ச்சியை கையாண்டனர்.

ஜானகிக்கு ஆறுதல் சொல்ல மனம் துடித்தாலும், தனக்கும் அவர்களது குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கிளம்பி விட்டான்.

அதன் பின் பல பிரச்சனைகள். அவர்களது காரை விற்ற பிறகு மீண்டும் இந்த தொழிற்சாலை அவர்களை சந்திக்க வைத்தது.

அதே இடத்தில் அவளோடு வேலை செய்ய சொல்லி ஜாக்ஷி சொல்லும் போது, கந்தசாமியால் மறுக்க முடியவில்லை.

ஜானகியை விட்டு விலகுவது கூட சுலபம். ஜாக்ஷியின் பேச்சை தட்டுவது நடக்காத காரியம்.

ஆனால் ஒவ்வொரு நாளும் ஜானகியை பார்த்துக் கொண்டு மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பெரும்பாடாகத்தான் இருந்தது. அவன் போராட்டத்திற்கு முடிவாக திருமண பேச்சு வந்தது.

இந்த திருமணம் மட்டும் நடந்து விட்டால், அவனது போராட்டங்கள் எல்லாம் முடிந்து நிம்மதியான ஒரு வாழ்வை வாழலாம் என்று முடிவு செய்து கொண்டான்.

Leave a Reply