லாவண்டர் 4
![]()
ஜானகி காலையில் எழுந்ததும் சாப்பிடாமலே கிளம்பி விட்டாள். அவளிடம் பேச முயற்சித்த மேனகாவை, அவள் கண்டுகொள்ளவில்லை.
மேனகாவிற்கு கோபம் வந்தது. மகள் பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறாளே.
அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வாழ்வை அமைத்துக் கொண்டார். அதில் பாதியைக்கூட மகள் செய்ய மறுக்கிறாள்.
அவருடைய குடும்பம் சாதாரண குடும்பம். கஷ்டப்பட்டு தான் அப்போது ஜகதீஸ்வரி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பலரை பிடித்து, சிபாரிசு பிடித்து தான் சேர முடிந்தது.
வேலை கிடைத்ததும் உடனே வானில் பறக்க முடியவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்க, அவரது பார்வை காதம்பரியை பொறாமையாக பார்க்கும்.
பணத்தில் குளிக்கும் அவரது வாழ்வைப்போல தன் வாழ்வும் மாற வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். அதனால் தான் பார்வையை சிற்றம்பலம் பக்கம் திருப்பினார்.
ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் கூட அவரிடம் பழகினார். சிற்றம்பலமும் மேனகாவின் ஆசைக்கு இணங்கினார்.
சிற்றம்பலம் கொடுக்கும் பணத்தில், மேனகா சந்தோசமாக வாழ ஆரம்பித்தார். ஆனால் எல்லாம் ஒரு கட்டத்தில் போதாமல் போனது.
நிறைய வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த ஆசையின் பலனாக, ஜானகியை கருத்தரித்தார். சிற்றம்பலம் இனி தனக்கே சொந்தம் என்று முடிவும் கட்டினார்.
சிற்றம்பலம் குழந்தையை கலைக்க சொன்ன போது, மறுத்து ஜகதீஸ்வரியிடம் உண்மையை சொல்லி, காதம்பரியின் இடத்தை அடைந்தார்.
மேனகா எதிர்பார்க்காத ஒன்று, சிற்றம்பலத்தோடு தனி வீட்டில் வாழ்வது.
காதம்பரியின் இடத்துக்கு தான் வந்து விட்டால், அதே வீட்டில் தன்னையும் தங்க விடுவார்கள் என்ற கனவு உடைந்தது.
காதம்பரி விவாகரத்து கேட்டு விட, சிற்றம்பலம் பிரிய வேண்டியிருந்தது.
அது மட்டும் இன்று வரை மேனகாவிற்கு பிடிக்கவில்லை. அவரது பல நாள் கனவு அந்த மாளிகை போன்ற வீட்டில் ராணியாக வாழ வேண்டும் என்பது. அந்த கனவு காதம்பரியால் கலைந்து போக, சிற்றம்பலத்தோடு தனி வீட்டில் வாழ்ந்தார்.
அப்போதும் சிற்றம்பலத்திடம் நிறைய சொத்திருக்கும் என்பதால் அமைதியாக இருந்தார்.
ஜானகி பிறந்த பிறகு விவாகரத்து கிடைத்து விட்டது. இவர்கள் குடும்பமாக வாழ ஆரம்பித்தனர்.
காதம்பரி எவ்வளவு முயற்சித்தும், சிற்றம்பலத்தை அலுவலகத்தை விட்டு துரத்த முடியவில்லை. மேனகாவிற்கு அதுவே பெரிய வெற்றியாக தோன்றியது.
இப்படியே அந்த கிழவி ஜகதீஸ்வரி சிற்றம்பலத்தை உடன் வைத்திருந்தால், ஒரு நாள் அந்த வீட்டுக்கே அதிபதி ஆகலாம் என்று கனவு கோட்டை கட்டினார்.
ஆனால் அது நடக்கவே இல்லை. சிற்றம்பலம் அந்த வீட்டுக்கு திரும்பிப் போவதாக இல்லை. காதம்பரி அந்த வீட்டை விட்டுச் சென்ற பின்பும் கூட, அவர் அங்கே செல்லவில்லை.
மேனகா நல்லவர் போல், ஜகதீஸ்வரி தனியாக இருப்பார். துணையாக இருக்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும், சிற்றம்பலம் உறுதியாக இருந்தார்.
அந்த கனவு கலைந்து போனாலும், சிற்றம்பலம் சம்பாதிக்கும் பணத்தில் சந்தோசமாக தான் வாழ்ந்தனர். சிற்றம்பலம் வாழ வைத்தார்.
வாழ்க்கை மிக நன்றாக செல்வதாக மேனகா சந்தோசமாக இருந்தார். ஒரு பணக்காரனுக்கு ஜானகியை கட்டி வைக்க வேண்டும். ஜகதீஸ்வரி நிறுவனத்தில் ஜெகனை தூக்கி அமர வைக்க வேண்டும். அவ்வளவு தான் அவர் நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் ஜெகனை ஜகதீஸ்வரி குழுமத்திற்கு வாரிசாக்க வேண்டும் என்ற விசயத்தை சிற்றம்பலம் மறுத்தார். ஜாக்ஷி இருக்கிறாள். அதோடு காதம்பரி பெற்ற இன்னொரு மகன் இருக்கிறான். அவர்களை தாண்டி சொத்து ஜெகனுக்கு வர வாய்ப்பில்லை என்று விட்டார்.
ஆனாலும் மேனகா கனவு காணுவதை நிறுத்தவில்லை. ஜெகன் மட்டுமே அந்த குடும்பத்தின் ஆண் வாரிசு என்று நம்பினார்.
அந்த நம்பிக்கையில் மண்ணள்ளி போட்டு விட்டு, சிற்றம்பலம் இறந்து போனார். அது கூட பரவாயில்லை. ஜகதீஸ்வரி குழுமத்தில் இருந்த மொத்த தொடர்பையும் வெட்டிக் கொள்வதாக உயில் வேறு எழுதி வைத்திருக்கிறாரே.
இவர் எல்லாம் உயில் எழுதவில்லை என்று யார் அழுதது? இப்படி எழுதி வைத்திருப்பது முதலிலேயே தெரிந்திருந்தால், மேனகா யாருக்கும் தெரியாமல் கிழித்து போட்டிருப்பார்.
கடைசியில் அவரிடம் எதுவுமே சொல்லாமல் விட்டு, மொத்தமும் அவர் கையை விட்டுப் போனது.
மேனகா எவ்வளவோ நல்லவளாக நடிக்க பார்த்தார். எப்படியாவது ஜகதீஸ்வரி அவரை வீட்டுக்குள் வைத்துக் கொள்ள மாட்டாரா? என்று ஆவல் இன்னும் கூட போகவில்லை.
அப்படி இருக்க, மொத்தத்தையும் வெட்டியிருந்தார் சிற்றம்பலம். அதன் விளைவு பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. கூடவே ஜானகியும் ஜெகனும் வேறு சுமையாக.
ஜானகி வேலைக்கு போய் சம்பாதிப்பதெல்லாம் அவருக்கு போதாது. அதனால் தான் ஜாக்ஷி கொடுப்பதாக சொன்ன தொழிற்சாலையை வாங்கியே தீர வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினார்.
அவர் நினைத்ததால் தான் தொழிற்சாலை கிடைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அது ஜாக்ஷி நினைத்தால் மட்டும் தான் முடியும் என்பதை மறந்து போனார்.
இந்த தொழிற்சாலையை வைத்து நிறைய சம்பாதிக்க முடியும் என்று நினைக்க, மகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் கொடுக்க மறுக்கிறாள். கேட்டால் நூறு காரணம் சொல்கிறாள்.
அவருக்கு காரணம் வேண்டாம். பணம் தான் வேண்டும். அப்படி அவர் தவித்திருக்க, கடைசியாக கடவுள் கண்ணை திறந்தது போல் ஒருவன் வந்தான்.
அவனுக்கு ஜானகியை பிடித்திருக்கிறது என்று பெண் கேட்டான். அவன் பணக்காரன். நிறைய சொத்துக்கள் உண்டு. ஜாக்ஷி அளவுக்கு இல்லை என்றாலும் இவனும் பணக்காரன் தான்.
அவனுடைய முதல் மனைவி இறந்து விட்டாள். முக்கியமான விசயம், அவனது முதல் மனைவிக்கு குழந்தை எதுவும் இல்லை. அதனால் அவனது சொத்துக்களை பறிக்க ஆள் இல்லை.
எல்லாம் ஜானகிக்கு வந்து சேரும். அது மட்டுமா? ஜானகியோடு அவருக்கும் வரும். குடும்பமாக சென்று அவன் வீட்டில் தங்கி விட்டால் முடிந்தது.
காலத்துக்கும் நிம்மதியாக இருக்கலாம்.
ஆனால் அதற்கு ஜானகி ஒத்துக் கொள்ள வேண்டுமே? முடியவே முடியாது என்று மறுக்கிறாள். அவளால் ஒரு நல்லது நடக்கும் என்று காத்திருந்தால், அது நடக்காது போலவே.
இவளை எதை வைத்து சரி கட்டுவது? வீட்டை விட்டு போவதாக சொன்னால் அவளும் கிளம்பி விடுவாள். அதனால் வேறு எதாவது யோசிக்க வேண்டும் என்று யோசித்தார்.
•••
ஜானகி வேலையில் மூழ்கி இருந்தாள். வந்ததிலிருந்து அவள் அதிகம் பேசாதது கந்தசாமியின் கவனத்தில் பதிந்தது.
முகமும் உணர்வற்று இருக்க, ‘என்னாச்சு? ஏன் இப்படி இருக்கா?’ என்று பார்த்து வைத்தான்.
வாய்விட்டு கேட்க முடியவில்லை. இருவரும் சொந்த விசயங்களை பற்றி பேசுவது இல்லை.
கந்தசாமி தனக்கான எல்லையில் இருந்து கொள்ளவே எப்போதும் விரும்பினான். ஆனால் அவள் இப்படி இருக்கும் போது, வாயை மூடிக்கொண்டு இருப்பது கடினமாக இருந்தது.
“மேடம்..”
பார்வையை உயர்த்தினாள்.
“எதாவது பிரச்சனையா?” என்று கேட்டு விட்டான்.
அவளோ கேள்வியாக புருவம் சுருக்க, “ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கீங்களே.. எதாவது பிரச்சனையானு கேட்டேன்” என்றான்.
“வேலையில எந்த பிரச்சனையும் இல்ல சார். நீங்க உங்க வேலைய பாருங்க. நான் இத முடிச்சுட்டு சொல்லுறேன்” என்றவள் மீண்டும் கணினியின் பக்கமாக பார்வையை திருப்பினாள்.
ஒரு நொடி நின்றவன், பிறகு எதுவும் கேட்காமல் சென்று விட்டான்.
அவன் சென்றாலும் ஜானகி கண்டு கொள்ளாமல் வேலையை பார்த்தாள்.
அழுவதை எல்லாம் நேற்றே அழுது முடித்தாயிற்று. இனி உணர்ச்சிகள் எதுவும் மிச்சம் இல்லை. உணர்வற்று மூளைக்கு மட்டுமே வேலை கொடுக்க நினைத்திருந்தாள்.
அவள் முடிவு செய்தால் போதுமா? அவளது மனம் முடிவு செய்ய வேண்டாமா? அது ஒரு பக்கம் வருத்தத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது.
மாலை வீட்டுக்கு கிளம்பாமல் அங்கேயே அமர்ந்திருக்க, கந்தசாமி வந்தான்.
“மேடம் கிளம்பலயா?”
“இல்ல.. நீங்க போங்க”
“டைம் ஆச்சே?”
“நீங்க போங்க சார். நான் அப்புறமா போயிக்கிறேன்” என்று அவனை அனுப்பி விட்டான்.
அவன் சில நிமிடங்கள் தயங்கி நின்று விட்டுச் சென்று விட்டான்.
அவன் சென்ற சில நிமிடங்களில் இரண்டு பேர் வந்தனர். ஒரு மிஷன் பழுதாகி இருக்க, அதை சரி செய்ய ஆட்களை வரவழைத்து இருந்தாள்.
அவர்கள் வேலை செய்யும் போது அருகிலேயே நின்றாள். அவளோடு காவலாளியும் நின்றார்.
வேலை முடிந்து அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றதும், “மேடம்.. நீங்க கிளம்புறீங்களா?” என்று கேட்டார் காவலாளி.
இரவு வந்திருந்தது. அவரும் வீடு செல்ல வேண்டும்.
“நீங்க போகனுமா?” என்று கேட்டவள், மணியை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டாள்.
வீட்டுக்கு போக பிடிக்கவில்லை. அப்படியே எங்காவது ஓடி விடத்தான் ஆசையாக இருந்தது.
“ஆமா மேடம்.. நேரமாச்சு”
“சரி.. இதோ கிளம்பிட்டேன்” என்றவள், மனமில்லாமல் வெளியே வந்தாள்.
காரில் ஏறி அமர்ந்தவள், மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அந்த கார் கடந்து போக, கந்தசாமி அதை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டான்.
‘இவளுக்கு எதோ பிரச்சனை. என்னனு தான் தெரியல’ என்று நினைத்தபடி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ஜானகி தாமதமாக வீட்டுக்கு வர, மேனகா அவளுக்காக அப்போதும் காத்திருந்தார். ஜெகனும் கோபத்தோடு அமர்ந்திருந்தான்.
சற்று முன்பு தான் தாயிடம் வாக்கு வாதம் செய்திருந்தான். அந்த கோபம் குறையவில்லை.
ஜானகியை பார்தத்தும், “க்கா.. ஏன் லேட்டு?” என்று கேட்டான்.
“மிஷன் ரிப்பேர்டா.. முடிச்சுட்டு வர்ரேன்” என்றவள் உள்ளே சென்று விட்டாள்.
உடை மாற்றி வந்ததும் சாப்பிட அமர்ந்தனர்.
காலையில் இருந்து அவள் சாப்பிடவில்லை. இப்போது பசித்தது. உணவை வைக்கும் போது மேனகா மகளிடம் வந்தார்.
“ஜானகி… யோசிச்சியா? என்ன முடிவு பண்ணிருக்க? அவர வர சொல்லவா?” என்று ஆர்வமாக அவர் கேட்க, ஜானகி ஜெகனிடம் திரும்பினாள்.
“காலையில இருந்து நான் சாப்பிடவே இல்ல ஜெகன். இப்ப பசிக்குது. நான் சாப்பிடனுமா? எந்திரிச்சு போகட்டுமா? பட்டினி கிடந்து நான் செத்தா காசுக்கு விக்க அவங்களுக்கு மக இருக்க மாட்டானு சொல்லு”
அமைதியாக அவள் பேச, ஜெகன் தாயை தீயாக முறைத்தான்.
“அக்காவ கொன்னா தான் உனக்கு திருப்தியா இருக்குமா? சாப்பிட விடுமா.. போமா” என்று அதட்டினான்.
“என்னடா பெரிய உனக்கு மட்டுமே அக்கறை இருக்க மாதிரி பேசுற? அவ எனக்கு மகடா”
“ஆமா மகள விக்க நினைக்கிறவங்க எல்லாம் சொல்லிக்க வேண்டியது தான். ரொம்ப பெருமையா இருக்கு” என்று அவன் நக்கலடிக்க, ஜானகி அமைதியாக சாப்பிட்டாள்.
அவள் சாப்பிட்டு முடியும் வரை இருவரும் அமைதி காத்தனர்.
அவள் முடித்ததும் ஜெகன் வாயைத்திறந்தான்.
“க்கா.. இனிமே நான் பார்ட் டைம் வேலை பார்க்குறதா இல்ல. நான் தினமும் ஃபேக்டரிக்கே வர்ரேன்”
“ஏன்டா?”
“நீ இவ்வளவு தூரம் தனியா போராடும் போது நான் ஏன் வெளிய வேலைக்கு போகனும்? நானும் அங்கயே வர்ரேன். வேலைய இப்ப இருந்தே கத்துக்கிறேன். இன்னும் ரெண்டு வருசம் தான? நாலு வருசம் முடிச்சப்புறம் எனக்கு வேலை புரிஞ்சுடும்ல? அதான்”
“சரி வா”
“நீங்க பேசி முடிச்சாச்சா? இப்ப நான் சொல்லுறத கேளுங்க. அவர நான் வர சொல்லுறேன். பேசிப்பாரு. உனக்கு அவர பிடிக்கும். ரொம்ப நல்லவரு. உன்னை தங்கமா வச்சுப்பாரு.”
“அவன் நல்லவனா இல்லையாங்குறது பேச்சு இல்ல. என்னால அவன கட்டிக்க முடியாது. அவ்வளவு தான். நீங்க இத இதோட விடுறது நல்லது. எனக்கு வேலை இருக்கு” என்றவள் அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் மிகவும் அமைதியாக பேசுவது, ஜெகனுக்கு தான் பிடிக்கவில்லை. முகத்திலோ குரலிலோ உணர்ச்சியே இல்லாமல் நடைப்பிணம் போல் போகிறாள். அவளது மனதை நோகடித்த தாயின் மீது வெறுப்பு வந்தது.
“நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்க. ச்சை” என்று விட்டு அவனும் சென்று விட்டான்.
“நான் ஏன்டா திருந்தனும்? நான் என்ற தப்பா பண்ணுறேன்?” என்று மேனகா கத்தியதை கேட்க இருவருமே இல்லை.
