லாவண்டர் 5
![]()
தூக்கம் வராமல் உருண்டு கொண்டிருந்தான் கந்தசாமி. அவனுக்கு ஜானகியின் முகம் கண்ணில் நின்றது.
அவளை மறந்து விட நினைத்து திருமணத்திற்கு சம்மதித்தவன், இப்போது அவளது சோகத்தை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான்.
“இந்த நிலைமையில கல்யாணம் பண்ணா உருப்புடுமா?” என்று மூளை கேட்டது.
கந்தசாமிக்கு தன் மீதே கோபம் கோபமாக வந்தது. அவனால் ஏன் அவளை உதற முடியவில்லை.
அவளோடு சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி அவளை மறப்பது?
முதல் வேலையாக திருமணம் முடிந்த அடுத்த நாள், ஜாக்ஷியிடம் பேசி விட வேண்டும். இல்லை என்றால் பவானிக்கு துரோகம் செய்தது போல் ஆகி விடும்.
அவன் மனதில் பல திட்டங்களை போட்டிருக்க, விதி வேறு வகையில் திட்டம் போட்டு வைத்திருந்தது.
•••
ஜானகி இன்றும் அமைதியாக வேலைக்கு கிளம்பினாள். மேனகாவை காலையிலிருந்து காணவில்லை. எங்கே சென்றார்? என்று தேடக்கூட பிடிக்கவில்லை அவளுக்கு. தாயென்ற பாசம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய் விட்டது.
“க்கா.. சாப்பிடல?”
“பசிக்கலடா”
“பட்டினி கிடந்தா உன் உடம்பு தான்கா போகும். ஏற்கனவே ரொம்ப மெலிஞ்சுட்டே போற”
“ப்ச்ச்.. தோனுச்சுனா கேன்டின்ல எதாவது வாங்கி சாப்பிட்டுக்கிறேன்” என்று விட்டு கிளம்பினாள்.
காரில் ஏறியதும் சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தாள். சாலையில் எத்தனையோ மனிதர்கள். எல்லோரும் அவரவர் வேலையில் பரபரப்பாக இருக்க, ஜானகிக்கு மட்டும் என்னவோ வாழ எதுவுமே இல்லை என்பது போல விரக்தி வந்தது.
எதற்காக இந்த வாழ்க்கை? எதை நோக்கி இந்த வாழ்க்கை? எதுவும் புரியவில்லை.
முதலில் தாய், தந்தை, தம்பி என்று அழகான குடும்பத்தில் இளவரசியாக சந்தோசமாக வாழ்ந்து வந்தாள். அப்போதெல்லாம் அவளுக்கு பெரிய கனவுகள் இல்லை.
நன்றாக படித்து, தந்தையை போல் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது வரை மட்டும் தான் அவளது ஆசை இருந்தது.
தந்தையை பறி கொடுத்த பிறகு, யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ வேண்டும் என்று நினைத்தாள். தாயும் தம்பியும் தன் பொறுப்பு என்று முடிவு செய்தாள்.
அதாவது நிலைத்ததா? ஜாக்ஷி தேடி வந்து இந்த தொழிற்சாலையை கொடுத்தாள். அதை மறுக்க எந்தவித காரணமும் இல்லை என்பதால் வாங்கிக் கொண்டாள்.
இனிமேல் நல்ல படியாக தொழிலை கற்றுக் கொண்டு, பழைய வாழ்வை மீட்கலாம் என்று நினைத்து ஓட ஆரம்பித்தாள்.
இப்போது அதுவும் பிடிக்கவில்லை. யாருக்காக அவள் உழைக்க நினைக்கிறாளோ அவரே அவளை நோகடித்துப் பார்க்கிறார்.
தம்பியை தான் காக்க வேண்டும் என்று நினைத்திருக்க, இப்போது அவன் தான் அவளுக்கு பாதுகாப்பாக மாறுகிறான். எதற்காக வாழ்கிறாள் என்றே புரியாத இந்த வாழ்க்கையில் என்ன தான் செய்கிறாள்?
ஒரு கட்டத்தில் தாயின் பேச்சை கேட்டால் என்ன நடக்கும் என்று கூட யோசித்துப் பார்த்தாள்.
அந்த கிழவனை அவள் கட்டிக் கொண்டு சென்று விட்டால், மேனகாவிற்கு கேட்கும் போதெல்லாம் பணம் கிடைக்கும். ஜெகன் அவனது கனவுகளை துறந்து, படிக்கும் வயதில் வேலை செய்ய வேண்டியதில்லை. பழைய வாழ்வை இருவரும் வாழ்வார்கள்.
இருவரின் சந்தோசத்திற்காக, அவள் மட்டும் தினமும் கசப்பை விழுங்க வேண்டும்.
ஒருவனை இரண்டாவதாக திருமணம் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறல்ல தான். உலகில் எத்தனையோ நடக்கிறது தான். ஆனால் அவனது வயது?
அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்த போதும், அவனது வயது வித்தியாசம் காணாமல் போகாதே?
பார்க்க இளமையாகத்தான் தெரிவான். அவ்வளவு சீக்கிரம் அவனது வயதை கண்டு பிடித்து விட முடியாது. அவனது பெயர் அவளது நினைவுக்கு சட்டென வர மறுத்தாலும், அவனது முகம் அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது.
அவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி, நேரடியாக கேட்டு அவள் மறுத்திருந்தாள். அதனால் தான் மேனகாவை பிடித்து விட்டான்.
“டிரைவர் அண்ணா… நேரா ஆஃபிஸ் போங்க. ஃபேக்டரிக்கு வேணாம்”
“சரிங்கமா” என்று பதில் வந்து விட, மீண்டும் சன்னலில் பார்வையை பதித்தாள்.
சொந்த வாழ்க்கையில் புயலே அடித்தாலும், தொழிலையும் கவனித்தாக வேண்டும். இன்று ஜாக்ஷியை பார்த்து பேச வேண்டும். இருக்கும் மனநிலைக்கு எங்காவது ஓடி ஒளியத்தான் ஆசை. முடியாதே. அதனால் மனதை திடப்படுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றாள்.
அவளுக்கான நேரம் வரும் போதே ஜாக்ஷியை சந்திக்க முடிந்தது. வேலை சம்பந்தமாக பேசி விட்டு வெளியே வர, கந்தசாமியிடமிருந்து அழைப்பு வந்தது.
“எங்க இருக்கீங்க?”
“ஏன்?”
“இன்னும் வரலயே அதான் கேட்டேன்”
“இங்க ஜாக்ஷிய பார்க்க வந்தேன். கிளம்பிட்டேன்”
“ஓகே” என்று அவன் அழைப்பை துண்டித்து விட, கைபேசியை பார்த்துக் கொண்டே சென்று லிஃப்டில் நுழைந்தாள்.
வந்திருந்த பல குறுஞ்செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தவள், சுற்றுப்புறத்தை கவனிக்கவில்லை. அவளை பார்த்து விட்டு பலர் யாரென தெரியாமல் முணுமுணுத்தனர்.
லிஃப்ட் கீழே இறங்க, வேறு ஒருவர் அதில் ஏறினார். ஜானகியை பார்த்ததும் உடனே புன்னகைத்தார்.
“ஜானகி.. நல்லா இருக்கியாமா?” என்று கேட்டதும் கைபேசியை விட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
சிற்றம்பலத்தோடு வேலை பார்த்தவர்.
“நல்லா இருக்கேன் சார்”
“என்னமா இந்த பக்கம்?”
“ஜாக்ஷிய பார்க்க வந்தேன். முடிஞ்சது கிளம்பிட்டேன்.”
“ஓஹோ.. அப்பா இருந்தப்போ அடிக்கடி வருவ. இப்பலாம் காணோமேனு நினைச்சேன்”
ஜானகி பதில் சொல்லாமல் புன்னகைத்து விட்டு அமைதியானாள்.
தரை தளத்தில் இறங்கியதும் உடனே கிளம்பியும் விட்டாள்.
ஒவ்வொரு முறை இங்கு வரும் போதும், யாராவது ஒருவரை பார்த்து விடுகிறாள். அவர்களும் பழைய நினைவுகளை கிளறி விடுகின்றனர்.
‘என்னடா வாழ்க்கை இது? வாழவும் வழியில்லாம சாகவும் வழியில்லாம ச்சை’ என்று சலிப்போடு காரில் ஏறினாள்.
தொழிற்சாலைக்கு தாமதமாக வந்தவளை கந்தசாமி ஆராய்ந்தான். நேற்றை விட இன்று மோசமாக இருந்தாள். எதிலும் பிடிப்பே இல்லாதவள் போல் நடந்து கொண்டிருந்தாள்.
‘போகப்போக மோசமாகுறாளே? அப்படி என்ன பிரச்சனை இவளுக்கு?’ என்று கந்தசாமி தான் கவலைப்பட்டான்.
அவளோ கந்தசாமியிடம் பேசவே இல்லை. அவன் எதையாவது சொன்னால் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவனது குழப்பத்தை அதிகப்படுத்துவது போல் ஜெகனும் வந்து சேர்ந்தான். வந்ததும் அக்காவின் அருகே அமர்ந்து கொண்டு, அவள் சொல்லும் அத்தனை வேலையும் தட்டாமல் செய்தான்.
‘என்ன பண்ணுதுங்க ரெண்டும்?’ என்று கந்தசாமி நோட்டம் விட்டானே தவிர எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
•••
பவானி தன் கைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது மனம் முழுவதும் வலியும் வேதனையும் தான் நிறைந்து இருந்தது.
ஏகப்பட்ட அழைப்புகள். எண்ணிலடங்கா குறுஞ்செய்திகள். எதற்கும் பதில் அளிக்கும் தைரியம் வரவில்லை.
“பவானி.. இங்க வா” என்று தாயின் குரல் கேட்க, கைபேசியை அணைத்து போட்டு விட்டு எழுந்து சென்றாள்.
“என்னமா?”
“அத்த எதோ சொல்லுறாங்க கேளு”
உடனே அத்தையை பார்த்தாள்.
அவளுடைய தாய் மாமனின் மனைவி. பார்க்க அப்பாவியாக தெரிந்தாலும் வாயை திறந்தால் விசம் மட்டுமே கக்கும் பாம்பு என்று பவானி பலமுறை நினைத்திருக்கிறாள்.
பவானியின் தந்தை ஊதாரி. நிறைய கடன் வாங்கி விட்டு, கட்ட முடியாமல் ஊரை விட்டு ஓடி விட்டார். அது அனைத்தும் இவர்களது தலையில் வந்து விழ, பவானியின் அன்னை இந்துவுக்கு பிறந்த வீட்டை தேடி ஓட வேண்டிய கட்டாயம்.
அன்றிலிருந்து இன்று வரை இந்த வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக வாழ்கின்றனர் தாயும் மகளும்.
“என்ன அத்த?”
“நாளைக்கு கல்யாணத்துக்கு புடவை எடுக்கப்போறோம். அங்க வந்துட்டு இப்படி சனியன் புடிச்ச மூஞ்சியோட உர்ருனு நிக்காத. முகூர்த்தப்பட்ட நல்லா காஸ்ட்லியா எடுத்துக்க. அவங்க தான் அதுக்கு பணம் கட்டுவாங்க. ஆனா மத்த சேலை எதுவும் ஆயிரம் தாண்ட கூடாது. புரியுதா?”
“புரியுது”
“மாப்பிள்ளை கிட்ட பேசிப்பழகி இப்பவே கைக்குள்ள போட்டுக்க சொன்னேன். பேசுனியா இல்லையா?”
“இல்ல அத்த. அவருக்கு வேலை அதிகம் போல”
“அந்த வீட்டுக்கு நீ போனதும், அவனோட அம்மாவயும் அவனையும் பிரிச்சு உன் முந்தானையில முடிஞ்சுக்கிற. அத விட்டுட்டு அவன் கூட சண்டை போட்டு இந்த வீட்டுக்கு வர கூடாது”
இதோடு பல முறை இதை சொல்லி விட்டாலும், புதிதாக கேட்பது போல் தலையாட்டி வைத்தாள்.
அத்தை மாலா அவரது புராணத்தை விடாமல் படித்து ஓய்ந்த பிறகு, பவானி மீண்டும் அறைக்குள் வந்தாள்.
அந்த அறையில் தான் அவள் தாயோடு தங்கி இருக்கிறாள். இங்கே தங்குவதற்கும் மூன்று வேலை சாப்பாட்டுக்கும் மாலா புராணத்தை கேட்டே தீர வேண்டும்.
பவானி பெருமூச்சு விட்டு விட்டு துணிகளை மடித்து அடுக்க இந்து வந்தார்.
“பவானி..”
திரும்பிப் பார்த்தாள்.
“என்ன ஒரேயடியா அமைதியா இருக்க?”
மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“என்னடி? எத்தனை நாள் இப்படி இருக்கதா இருக்க? ஏய்.. உண்மைய சொல்லுடி.. இன்னமும் அவன் கூட பேசிட்டு இருக்கியா?” என்று கேட்டு வைக்க, “இல்ல” என்றாள்.
“அப்பாடா.. இத பாருடி.. இப்ப பார்த்துருக்கது ரொம்ப நல்ல மாப்பிள்ளை. அவர கட்டிக்கிட்டா காலம் முழுக்க நல்லா இருப்படி. பழைச எல்லாம் மறந்துடு. உன் மாமாவும் அத்தையும் உனக்கு நல்ல வரன தேடி கொடுத்துருக்காங்க”
“ஏன்மா பொய் சொல்லுற? அந்த மாப்பிள்ளை வேலை பார்க்குற இடத்துல மாமாவுக்கு ஒரு வேலையாகனும். அதுனால என்னை கட்டி வச்சா வேலை ஈசியா போயிடும்னு பண்ணுறாங்க. இதுல எனக்காக பண்ண மாதிரி ஏன் மாத்தி சொல்லுற?”
“அதுவும் இருக்கட்டும். ஆனா மாப்பிள்ளை நல்லவர்டி”
“ப்ச்ச்” என்று திரும்பிக் கொண்டாள். அவளுக்கு இந்த திருமணம் சுத்தமாக பிடிக்கவில்லை.
அவள் மனதில் வேறு ஒருவன் இருந்தான். இருக்கிறான். இனிமேல் இருப்பானா? தெரியாது.
அவனை மறந்து வேறு வாழ்வை வாழ வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். முடியுமா? என தெரியவில்லை.
அவளை மிரட்டி இதற்கு சம்மதிக்க வைத்தாலும், வாழ்க்கை வெறுப்பாக இருந்தது.
அதே விரக்தியோடு மறுநாள் புடவை எடுக்கச் சென்றாள்.
கந்தசாமி வரவில்லை. தெய்வநாயகி மட்டும் தான் வந்திருந்தார்.
“உனக்கு பிடிச்சத எடுமா.. காச பத்தி யோசிக்காத” என்று அவர் சொன்னாலும், அவளுக்கு எதிலும் ஆர்வம் வரவில்லை.
மாலாவோ இருப்பதிலே அதிக விலை கொண்ட புடவையாக எடுத்து போட்டு பார்க்க வைத்தார். அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. கடைசியாக சாதாரண விலையில் இருக்கும் ஒரு புடவையை கை காட்டினாள்.
அதையே தெய்வநாயகி எடுத்து விட, மாலாவுக்கு பிடிக்கவே இல்லை. வீட்டுக்கு சென்றதும் நன்றாக வாங்கிக் கட்டுவோம் என்று தெரிந்தாலும் பவானி வருத்தப்படவில்லை.
எல்லாம் முடிந்ததும் பணம் கட்ட கந்தசாமி வந்தான். பவானியை அவனிடம் பேசச்சொல்லி மாலா தள்ளி விட, அவளுக்கு சலிப்பாக இருந்தது.
உண்மையை சொல்லி விட மனம் துடித்தது. தாயை நினைத்து வாயை மூடிக் கொண்டாள்.
“சேலை பிடிச்சுருந்ததா?” என்று கந்தசாமியே முதலில் பேச, “ம்ம்” என்றாள்.
“எல்லாருக்கும் சாப்பாடு சொல்லிருந்தேன். என் கூட வர்ரியா பார்ஸல் வாங்கிட்டு வந்துடலாம்” என்றதும் தலையாட்டி விட்டு அவனோடு கடையை விட்டு வெளியேறினாள்.
ஜெகனோடு காரில் சென்று கொண்டிருந்த ஜானகி அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு, உடனே தலையை திருப்பிக் கொண்டது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஜெகன் அதை கவனித்து விட்டான்.
