லாவண்டர் 6

Loading

கந்தசாமியை நன்றாக பார்த்தாள் பவானி. நல்லவனாகத்தான் தோன்றியது. அவனை ஏமாற்றுவது அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவனை திருமணம் செய்யா விட்டால், தாயை அவள் இழக்க வேண்டும். தாயை தவிர அவளுக்கு உறவில்லை. அவரை விட்டு ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்றால், அதை அவளால் ஏற்கவே முடியாது.

“இன்னைக்கு வேலை இல்லையா?” என்று அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள்.

“ஸ்டோர் லீவ்”

தலையாட்டி வைத்தவன், உணவு பார்சலை வாங்கிக் கொண்டான்.

பவானி கையில் சிலவற்றை கொடுத்தவன், “உனக்கு வேற எதாவது வேணுமா?” என்று கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தாள். அதோடு இருவரும் கிளம்பினர்.

சேலையை வாங்கிக் கொண்டு எல்லோரும் வெளியே வந்து விட, பார்சலை கொடுத்து பவானியை அவள் குடும்பத்தோடு அனுப்பி விட்டான்.

அவனும் தெய்வநாயகியும் கிளம்ப, “ம்மா.. வேலை இருக்குமா.. அப்படியே பத்திரிக்கை அடிச்சுட்டாங்களானு பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று தாயை வீட்டில் விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

தொழிற்சாலைக்கு செல்ல, அங்கு ஜானகி இல்லை.

“மேடம் எங்க?”

“எதோ வேலையா வெளிய போனாங்க. எங்கனு சொல்லல”

“ஓஹோ.. சரி இருக்கத நாம பார்ப்போம்” என்று தன் வேலையை பார்த்தான்.

•••

ஜானகியின் முக மாற்றத்தை பார்த்த ஜெகன் ,சற்று தூரமாக தெரிந்த கந்தசாமியை பார்த்து விட்டு யோசனையில் மூழ்கினான்.

கந்தசாமியோடு ஜானகி பழகுவது அவனுக்கு சில நாட்களாக வித்தியாசமாக தெரிந்தது. ஆனால் ஒன்றாக வேலை செய்பவர்களை தவறாக நினைக்கக் கூடாது என்று மனதை மாற்றிக் கொண்டான்.

இப்போது கந்தசாமியோடு ஒரு பெண் போவதை பார்த்து விட்டு, ஜானகியின் முகம் போன போக்கை நம்பமுடியாமல் பார்த்தான்.

இவள் மனதில் எதாவது இருக்கிறதா? இருந்தால் சொல்லலாமே. கந்தசாமி ஒன்றும் தெரியாதவன் அல்ல. உண்மையை சொல்லப்போனால் மிக நல்லவன். நன்றாக தெரிந்தவன்.

அவனது மனதில் என்ன இருக்கிறது? என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம். தெரிந்து ஒரு முடிவை எடுக்கலாம். இப்படி ஒரு பெண்ணோடு அவன் போனதற்காக வருத்தப்பட வேண்டுமா? எதாவது தெரிந்த பெண்ணாக இருக்கலாம் அல்லவா?

ஜெகனுக்கு அக்காவின் வாழ்வில் எதோ ஒளி கிடைத்தது போல் இருந்தது. அவளை அந்த கிழவனுக்கு கட்டி வைப்பதை விட, கந்தசாமிக்கு கட்டி வைக்கலாம்.

இன்னும் விட்டால் தாய் என்ன வேண்டுமானாலும் செய்து, அக்காவை அந்த கிழவனுக்கு கட்டி வைத்துவிடுவார். அதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும்.

கந்தசாமியிடம் பேசினால் என்ன? என்று நினைத்துக் கொண்டே வேலையை பார்த்தான்.

இருவரும் ஒரு இடத்தில் மெடீரியலை பார்க்க வந்திருந்தனர். இன்று முடிவு சொல்லப்போவது இல்லை என்பதால், கந்தசாமியை பற்றிக்கவலை இல்லாமல் ஜானகி தம்பியோடு கிளம்பியிருந்தாள்.

வரும் வழியில் அவனை பார்த்ததும் மனம் வலித்தது. அதுவும் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணோடு. அவள் யாரென்று தெரியாவிட்டாலும், அவளை தான் திருமணம் செய்ய போகிறான் என்று அவளது மனம் கணித்தது.

இதற்கு முன்பு அவன் எந்த பெண்ணோடும் பழகியது இல்லை. ஜாக்ஷியின் அலுவலகத்தில் கூட, அவன் பெண்களோடு பேசுவான். ஆனால் பெண் தோழிகள் யாரும் அவனுக்கு கிடையாது.

ஜானகிக்கு வாழ்க்கை சுழற்றி அடிப்பது போல் தோன்றியது. மனதிற்கு பிடித்தவன் வேறு ஒருத்தியை திருமணம் செய்ய போகிறான். அவளை பெற்ற தாய், பிடிக்காதவனோடு அவளது திருமணத்தை நிச்சயிக்கிறார்.

திடீரென சிரிப்பு வந்தது.

“என்னகா?”

“ஒன்னுமில்லடா.. என் வாழ்க்கைய வச்சு ஒரு சீரியல் எடுக்கலாம். பிழிய பிழிய அழுற மாதிரி”

“ஏன்கா இப்படி லூசு மாதிரி பேசுற?” என்று ஜெகன் அதட்டினான்.

வந்த வேலை முடிந்து, இருவரும் மீண்டும் காரில் ஏறியதும் ஜானகி தம்பியை பார்த்தாள்.

அவள் ஒரு நாள் இல்லாமல் போனால், இந்த தொழிற்சாலையை இவன் தான் பார்க்க வேண்டும். அதற்காக அனைத்தையும் இவனுக்கு சொல்லிக் கொடுத்து விட வேண்டும்.

அவள் ஒன்றுமே தெரியாமல் திணறியது போல் ஜெகன் திணறக்கூடாது என்று நினைத்தவள், அப்போதே என்னென்ன சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

தொழிற்சாலைக்கு சென்றவள் அப்போதிருந்தே ஜெகனுக்கு தேவையானதை எல்லாம் சொன்னாள். அவளுக்கு தெரிந்த அனைத்தையும் சொன்னாள். அவனும் பொறுப்பாக கேட்டுக் கொண்டான்.

மாலை வீடு திரும்பும் போது, வாசலில் புதிதாக நின்ற காரை பார்த்து ஜெகன் குழம்பினான்.

“யாரு வந்துருக்கா?”

“இது அந்த கிழவனோட காரு”

ஜெகனுக்கு சட்டென கோபம் வந்தது.

“வீட்டுக்கே வந்துட்டானா?” என்று கேட்டவன், விறுவிறுவென உள்ளே சென்றான்.

அங்கே பழங்கள் நிறைந்த தட்டோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் விக்னேஷன்.

பார்த்ததும் சட்டென ஜெகனே குழம்பிப் போய் விட்டான்.

‘பார்த்தா வயசானவன் மாதிரி தெரியலயே?’ என்று நினைத்தபடி முன்னால் வந்து நின்றான்.

“வந்துட்டியா? வா வா.. இதான் என் மகன் ஜெகன்” என்று மேனகா சந்தோசமாக அறிமுகம் செய்து வைத்தார்.

“எப்படி இருக்க ஜெகன்?” என்று விக்னேஷன் கேட்க, “நீங்க எதுக்கு வந்துருக்கீங்க?” என்று அவன் கோபமாக கேட்டான்.

“தெரியாதா? உன் அம்மா சொல்லலயா?”

“நான் உங்கள தான கேட்டேன்? என் அம்மாவ கேட்கல” என்று அவன் முறைத்ததும் விக்னேஷனின் புருவம் உயர்ந்தது.

ஏன் வாசலில் நின்ற ஜானகி கூட அதிசயித்தாள்.

‘இவன் என்ன ஜாக்ஷி மாதிரி பேசுறான்’ என்று நினைத்தவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

“உன் அக்காவ பொண்ணு கேட்டு வந்துருக்கேன் ஜெகன்.”

“யாருக்கு? உங்க மகனுக்கா?” என்று கேட்டானே பார்ப்போம்.

ஜானகிக்கு சிரிப்பு வந்து விட, அவசரமாக உதட்டை கடித்தாள்.

“டேய் என்னடா பேச்சு இது?” என்று மேனகா நடுவில் வர, “விடுங்க சின்ன பையன்” என்றான் விக்னேஷன் பெருந்தன்மையாக.

“இன்னும் எனக்கு பதில் சொல்லலயே.. யாருக்கு?”

“எனக்கு தான்”

“உங்களுக்கும் என் அக்காவுக்கும் எத்தனை வருசம் வித்தியாசம் தெரியுமா?”

“தெரியலயேபா”

“என் அக்காவுக்கு உங்கள பிடிக்கல. அதுவாது தெரியுமா?”

“பெரியவங்க பேசுனா போதாதா?”

“ஆமா.. வயசுல பெரியவங்க பேசுனா போதும். ஆனா இப்படி வயசானவங்களுக்கு எங்கக்காவ கட்டி வைக்கனும்னு என்ன வந்துருக்கு?”

“டேய்.. சும்மா இருடா.. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. இவன நான் பார்த்துக்கிறேன்” என்று மேனகா மகனின் தலையில் தட்ட, “அவன ஏன்மா அடிக்கிறீங்க?” என்று கோபமாக கேட்டபடி உள்ளே வந்தாள் ஜானகி.

“மெதுவா பேசுடி”

“எனக்கு இப்படித்தான் பேசத்தெரியும். பதினெட்டு வருசம் பெரியவன எனக்கு பிடிச்சு கட்டி வைக்க பார்க்குறீங்க? இதுல இவரு தப்பா வேற நினைப்பாராம். நினைக்கட்டுமே” என்றவள் தம்பியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

“அப்படி சொல்லுகா.. பதினெட்டு வயசுல ஆம்பள அப்பா ஆகிடலாம். அப்படி பார்த்தா, இவரு மக வயசு உனக்கு. பொண்ணு வேணுமாம்ல?” என்று ஜெகன் தன் பங்குக்கு எகிறினான்.

மேனகா இருவரையும் தீயாய் முறைக்க, விக்னேஷன் எழுந்து நின்றான்.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சூடா இருக்கீங்க. இன்னொரு நாள் பேசுவோம். வர்ரேன்” என்று விக்னேஷன் நடக்க, “ஒரு நிமிஷம் தட்ட எடுத்துட்டு போங்க” என்றாள் ஜானகி.

“ஏய்.. சும்மா இரேன்டி”

“அதுல இருக்கது வெறும் பழங்கள் தான். சாப்பிடுங்க”

“நீங்க கொடுத்து நாங்க சாப்பிடனும்னு இல்ல..” என்ற ஜெகன், தட்டை தூக்கி வேகமாக நீட்டினான்.

விக்னேஷன் மேனகாவை ஒரு பார்வை பார்த்து விட்டு, தட்டை வாங்காமலே செல்ல ஜெகனுக்கு கோபம் வந்தது.

விறுவிறுவென பின்னால் சென்றவன், விக்னேஷன் கார் கதவை திறக்கவும் உள்ளே கொட்டி விட்டான்.

விக்னேஷன் அவனை உணர்வற்று பார்க்க, “இனிமே வீட்டு பக்கம் வரவேணாம். என் அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய நாங்க பார்த்துக்கிறோம். கிளம்புங்க” என்றான் கோபமாக.

விக்னேஷன் முகத்தில் திடீரென சிரிப்பு வந்தது. அவனது பார்வையும் சிரிப்பும் ஜெகன் வயிற்றில் புளியை கரைத்தது.

“நீ சின்ன பையன்.. உலகம் தெரியாம பேசுற. நான் பெரியவன். அதுனால உன்னை மன்னிச்சுட்டேன். கூடிய சீக்கிரம் எனக்கு மச்சானாகுற வழிய பார்க்குற.. என்ன?” என்று கேட்டவன் அவனது தோளில் தட்டி விட்டு காரில் ஏறிக் கிளம்பி விட்டான்.

‘கடவுளே.. வயசானவன்னு பார்த்தா நல்லவனும் இல்ல போல இருக்கே. இவன் கிட்ட இருந்து எப்படி அக்காவ காப்பாத்துறது? கந்தசாமி தான் இப்ப இருக்க வழி. அவருக்கு மட்டும் அக்காவ பிடிச்சுருந்தா, சத்தமில்லாம கல்யாணம் பண்ணி வச்சுடலாம்’ என்று முடிவு செய்தான்.

அவர்கள் இருக்கும் நிலைக்கு ஆரம்பரமாக திருமணம் செய்வதை விட, ஜானகியின் வாழ்வை காப்பாற்றுவது தான் சரியாக தோன்றியது.

அவன் நினைத்ததும் நடக்க விதி என்ன அவனது கட்டுப்பாட்டிலா இருக்கிறது?

அது அதற்கு தகுந்தது போல் ஒரு திட்டத்தை போட்டு வைத்திருந்தது.

வீட்டுக்குள் ஜெகன் நுழைந்ததும், மேனகா மகனை ஓங்கி அறைந்தார்.

“எவ்வளவு திமிர் இருந்தா அவர் கிட்ட அப்படி பேசுவ?” என்று அவர் கத்த, “அவனுக்கு எவ்வளவு தைரியமிருந்தா வீட்டுக்கே வருவான்?” என்று ஜெகன் கத்தினான்.

“அவன் இவன்னு பேசன பல்ல தட்டிருவேன்”

“தட்டுங்க. நீங்க எல்லாம் ஒரு அம்மா. மகளுக்கு அப்பா வயசுல ஒருத்தன பார்த்துருக்கீங்க. உங்கள சொல்லி குத்தமில்ல. உங்க வாழ்க்கைய நீங்க ஒழுங்கா வாழ்ந்திருந்தா அக்காவுக்கும் நல்லது நினைப்பீங்க.‌ நீங்களும் அப்பாவும் பண்ண தப்புல நாங்க தான சாகுறோம்”

“இங்க பாருடா.. மகன்னு பார்க்க மாட்டேன். என் வாழ்க்கைய பத்தி பேசாத சொல்லிட்டேன்”

“நாங்க என்ன பேசுறது? ஊரே பேசுது. அது போதாதா? அந்த ஜாக்ஷி போற இடத்துல எல்லாம் மரியாதை கிடைக்குது. அக்கா போற இடத்துல எல்லாம் அவமானமும் அசிங்கமும் தான் கிடைக்குது. எல்லாம் யாரால? நீங்க வாழ்ந்த கேவலமான வாழ்க்கையால”

பளாரென மீண்டும் அறை விழுந்தது.

“பெத்தவங்கள பத்தி இப்படி பேசுறியே? உருப்புடுவியா?”

“பிறந்த பிறப்ப தான் அசிங்க படுத்துறாங்க. பெத்தவங்கனு மரியாதை வேற வேணுமா? போமா.. அக்கா வாழ்க்கையில இனி நீங்க எதாவது முடிவெடுத்து பண்ணீங்க… உங்கள கொன்னுட்டு நானும் செத்துடுவேன். அக்கா அவ வாழ்க்கைய சந்தோசமா வாழ்ந்துட்டு போகட்டும். இது ஒன்னும் சும்மா சொல்லல. உங்க உடம்புல ஓடுற பிடிவாத இரத்தம் எனக்கும் ஓடுது. செய்வேன்”

விரல் நீட்டி எச்சரித்தவன், அங்கு விரக்தியாக நின்றிருந்த அக்காவின் கையை பிடித்து இழுத்துச் சென்று அறைக்குள் விட்டான்.

“போய் குளிச்சுட்டு வா. பசிக்குது. எதாவது ஆர்டர் போட்டு வைக்கிறேன்” என்று விட்டு கதவை அடைத்தான்.

தாயின் அடியில் கன்னம் எரிந்தாலும், அவனுக்கு அதை பற்றிய அக்கறை இல்ல. அவனது கடைசி மிரட்டலில் அதிர்ந்து போய் நின்றிருந்த தாயை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று விட்டான்.

Leave a Reply