லாவண்டர் 7

Loading

ஜெகனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. அன்று கல்லூரியில் ஜானகியின் வாழ்வை பற்றி நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அவளது வாழ்வை காப்பாற்றுவதை தவிர, அவனுக்கு வேறு ஒன்றும் முக்கியமாக தெரியவில்லை.

“சீனியர்” என்று குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான்.

கவிதா. ஜாக்ஷியின் காதலன் வீரபாண்டியனின் தங்கை. அவனை பார்த்து புன்னகைத்தான்.

“என்ன?”

“உங்களுக்கு எதாவது பிரச்சனையா?” என்று கேட்டவளை புருவம் உயர்த்திப் பார்த்தான்.

“ஏன்?”

“ரொம்ப சைலண்ட்டா இருக்கீங்களே.. இப்படி நீங்க இருக்க மாட்டீங்களே?”

கவிதா அக்கறையோடு கேட்டாள்.

ஜெகன் படிக்கும் கல்லூரியும் அவளது கல்லூரியும் வேறு வேறு. ஆனால் இருவரும் ஒரே வளாகத்தில் தான் இருந்தனர்.

வினய்யோடு கவிதாவுக்கு நடந்த பிரச்சனை எதுவும் ஜெகனுக்கு தெரியாது. கவிதாவும் ஜெகனும் சந்தித்துக் கொள்வது அவர்களது சிறப்பு வகுப்பில் தான்.

பல நேரம் ஜெகனின் வகுப்பு மாணவர்கள் வகுப்புக்கு வருவதில்லை. எப்போதாவது தான் வருவார்கள். ஆனால் கவிதாவிற்கு அவர்களை எல்லாம் நன்றாகத்தெரியும்.

ஜெகன் நன்றாக படிப்பவன். புத்திசாலி. அதை விட மற்றவர்களை சுலபமாக சிரிக்க வைக்கும் பண்புடையவன். அதனால் அவனிருக்கும் வகுப்பில் அவனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

கவிதா அவனிடம் பாடம் சம்பந்தமாக உதவி கேட்டு செல்ல, தயங்காமல் செய்தான். அதிலிருந்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும்.

இன்று அவனிடம் அவள் அப்படி கேட்க, “எதுவுமில்லயே” என்று சமாளித்தான்.

“ஆனா நீங்க சீரியஸா இருக்கது நல்லாவே இல்ல சீனியர். இத கொடுக்கலாம்னு வந்தேன். அமைதியா உட்கார்ந்துருக்கீங்களேனு கேட்டேன். தப்பா நினைக்காதீங்க. இந்தாங்க”

அவனது நண்பனிடமிருந்து வாங்கிக் கொடுத்திருந்ததை, திருப்பிக் கொடுக்கவே அவனது வகுப்பை தேடி வந்திருந்தாள்.

“முடிச்சுட்டியா?”

“ம்ம்..”

“சரி க்ளாஸுக்கு போ”

“எங்களுக்கு இனி க்ளாஸ் இல்ல. வீட்டுக்கு தான் போகனும். போற வழியில கொடுத்துடலாம்னு வந்தேன். கிளம்புறேன்” என்றவள் திரும்பி விட்டு உடனே நின்றாள்.

“சோகமா இருக்காதீங்க. செட் ஆகல” என்று விட்டு சிரித்தபடி சென்று விட்டாள்.

“என்னடா? உன் ஃபேன் வந்துட்டு போகுது போல?” என்று அவனது நண்பன் கேட்க, ஜெகன் அவனை சலிப்பாக பார்த்தான்.

“நானே ஏகப்பட்ட கடுப்புல இருக்கேன். வாங்கிக்கட்டாத”

“அத தான் ஏன்னு சொல்ல மாட்டேங்குறியே”

“உங்களுக்குலாம் அது புரியாதுடா.”

“டேய்.. யாரு கிட்டயாச்சும் கவுந்துட்டியா?”

“இப்ப அது ஒன்னு தான் குறைச்சல்” என்று எரிச்சலாக சொன்னவன், கவிதா கொடுத்ததை வைத்து விட்டு எதையோ எழுத ஆரம்பித்து விட்டான்.

சொல்ல மாட்டான் என்று நன்றாக தெரிந்த நண்பன் தன் வேலையை பார்த்தான்.

ஜெகன் கல்லூரி முடிந்ததும் நேராக தொழிற்சாலைக்குச் சென்றான். அவன் மனதில் ஒரே ஒரு விசயம் மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது.

கந்தசாமியிடம் பேச வேண்டும். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும். அவன் இது வரை அக்காவை நினைக்காவிட்டாலும், இனி அக்காவை காப்பாற்று என்று சொல்ல வேண்டும்.

அதைபற்றியே நினைத்துக் கொண்டு போனவன் தலையில் இடியை போட்டான் கந்தசாமி.

திருமண அழைப்பிதழ் வந்திருக்க, தாயிடம் சொல்லி விட்டு ஜானகிக்கு கொடுக்க எடுத்து வந்திருந்தான் புதுமாப்பிள்ளை.

அவன் மனதில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் வெளி உலகுக்கு அவன் நடித்தாக வேண்டும். ஜானகிக்கு தன்னுடைய திருமண அழைப்பிதழை வைக்கும் நிலை வர வேண்டுமா? என்று மனம் குமுறினாலும் அதை செய்தே ஆக வேண்டும்.

அவளிடம் அவன் வேலை பார்க்கிறான். அவள் முதலாளி. அவளிடம் சொல்லாமல் போனால் அது அவமரியாதை. அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு பத்திரிக்கையோடு பழம் பூ வெத்தலை பாக்கு என்று எல்லாம் தட்டில் வைத்து நீட்டினான்.

ஜானகிக்கு இதயம் இரண்டாக பிளந்தது. அந்த தட்டை வெறித்துப் பார்த்தாலும் காட்டிக் கொள்ளாமல் வாங்கிக் கொண்டாள்.

“நீங்க கண்டிப்பா வரனும் மேடம். வீட்டுல வந்து வைக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா…”

“இருக்கட்டும் சார். எங்க வச்சா என்ன? நான் வர்ரேன்” என்று விட்டாள்.

“ஜாக்ஷி மேடம்க்கு இன்விடேஷன் வைக்கனும். இப்ப தான் அப்பாயின்மெண்ட் கிடைச்சது. போயிட்டு வந்துடுறேன்”

அவள் தலையாட்ட உடனே கிளம்பி விட்டான்.

ஜானகி பொத்தென நாற்காலியில் விழுந்தாள். கையில் இருந்த பத்திரிக்கை நெருப்பாய் சுட்டது. அந்த சூடு தாங்காமல் கண்கள் எரிந்து கலங்கியது.

அதே கண்களோடு மணமகளின் பெயரை படித்தாள். “பவானி” என்று வாசித்தவளுக்கு தொண்டை அடைத்தது.

அதை தட்டின் மீது வைத்தவள், அவசரமாக அந்த தட்டை எடுத்து ஒரு நாற்காலியில் வைத்து பார்வையை விட்டு தள்ளி வைத்தாள்.

உள்ளம் உடைந்து ஊமையாக அழ வெளியில் கண்ணை துடைத்துக் கொண்டாள்.

‘அவனுக்கு பொருத்தமா ஒருத்தி கிடைச்சா போதும். நான் எல்லாம்.. பிறந்ததே ஒரு குடும்பத்த அழிச்சுட்டு தான் பிறந்துருக்கேன். எனக்கெல்லாம் ஒரு குடும்பம் அமையாது. நல்லா இருக்கட்டும்’ என்று நினைத்து முடிக்கும் முன் மீண்டும் கண்ணீர் இறங்கியது.

துடைத்தாள். மீண்டும் வந்தது. மீண்டும் மீண்டும் துடைத்து கட்டுப்படுத்த பார்த்தாள். ஒரு கட்டத்தில் முடியாமல் போக வேலையை விட்டு விட்டு அமைதியாக மேசையில் படுத்து விட்டாள்.

கந்தசாமி வேகமாக கிளம்பி ஓடினான். அவனது மனமும் வலியில் வாய்விட்டு அழ முடியாமல் தவித்தது.

பல்லைக்கடித்து சகித்தான். காரணம் அவன் ஜானகியை மறந்தே தீர வேண்டும். அதற்காக இந்த வேதனை எல்லாம் தேவை தான்.

பைக்கை எடுத்துக் கொண்டவன் வேகமாக சென்றான். காற்றை கிழித்துச் செல்லும் போது வலிகள் பின்னோக்கிச் சென்று மனம் சமாதானம் ஆனது.

ஜாக்ஷியை தேடிச் சென்று அதே போல் தட்டில் வைத்துக் கொடுத்தான்.

ஜாக்ஷி ஆச்சரியமாக பார்த்தாள்.

“கல்யாணமா!” என்று ஆச்சரியப்பட்டவள் எழுந்து நின்று தட்டை வாங்கிக் கொண்டாள்.

“நீங்க அவசியமா வரனும் மேடம்” என்று அவன் அழைக்க, ஜாக்ஷி தேதியை பார்த்தாள்.

சட்டென அவளது புருவம் சுருங்கியது.

“நான்.. ரெண்டு நாள் வெளியூர் போயிடுவேனே. இந்த தேதில.. வெளில தான் இருப்பேன்” என்றவளுக்கு சற்று வருத்தம் தான்.

அவளுக்கு சிற்றம்பலத்தோடு இருக்கும் போது கந்தசாமியை பிடிக்காது. ஆனால் அவனது திறமை அவளது கண்ணில் படாமல் இல்லை. சிற்றம்பலம் இறந்த பிறகு ஜாக்ஷி பொறுப்பெடுத்த போது, அவளுக்கு பல வகையில் உதவியாக இருந்தவன் கந்தசாமி தான். எப்போது எதை கேட்டாலும் அவளை மதித்து பதில் சொல்வான்.

அதனால் தான் அவனை நம்பி ஜானகியிடம் அனுப்பினாள். அவளுக்கு இழப்பு ஏற்படாமல் காப்பாற்றக்கூடியவன் அவன் மட்டும் தான். அதோடு ஜானகியை நன்றாக தெரிந்தவனும் கூட.

அவனது திருமணத்திற்கு செல்ல அவளுக்கும் ஆசை தான். ஆனால் வேலை இருக்கிறதே. அதையும் விட முடியாது.

“பரவாயில்ல மேடம். முடிஞ்சா வாங்க. இல்லனா மேரேஜ் முடிஞ்சதும் நாங்களே வந்து உங்கள மீட் பண்ணுறோம்” என்றான் அவன்.

ஜாக்ஷிக்கு அது பிடிக்கவில்லை. உடனே வேறு முடிவுக்கு வந்தாள்.

“கலாயணம் முடிஞ்சதும் ரெண்டு நாள்ல நான் ரிட்டன் வந்ததும் என் வீட்டுக்கு உன் வொய்ஃபோட வா. விருந்துக்கு.. என்னோட ட்ரீட். ஓகே?”

கந்தசாமிக்கு ஆச்சரியமாக இருந்தது.‌ ஜாக்ஷியின் வீட்டில் அவனுக்கு விருந்தா?

“மேடம்?”

“என்ன மேன்? கமான்.. நீ எனக்கு நிறைய வகையில ஹெல்ப்பா இருந்துருக்க. இது கூட செய்ய மாட்டனா? சோ என்னோட சின்ன ட்ரீட். அவ்வளவு தான்”

“கண்டிப்பா வர்ரேன் மேடம்” என்று வாக்கு கொடுத்தான்.

கூப்பிட்டதற்காக அவளும் சம்மதித்தற்காக அவனும் வருத்தப்படப்போவது தெரியாமல் இருவரும் அந்த நிமிடம் திருப்தி அடைந்தனர்.

“பொண்ணு யாரு? ரிலேட்டிவ்வா?”

“அரேன்ஜ் மேரேஜ் தான் மேடம்”

“ஓகே.. கல்யாணம் முடிஞ்சதும் தேவையான லீவ எடுத்துக்கோ. பார்த்துக்கலாம்”

“மேடம்…” என்று ஆரம்பித்தவன் யோசனையோடு நிறுத்தினான்.

“என்ன‌ இழுக்குற?”

“வேணாம். கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமே சொல்லுறேன்” என்று விட அவளும் தோளை குலுக்கி வைத்தாள்.

அவளிடம் விடை பெற்று வெளியே வந்தவன் பெருமூச்சு விட்டான். தொழிற்சாலையில் இனி வேலை பார்க்க முடியாது என்று சொல்ல வந்தான். இப்போது சொல்வதை விட திருமணத்திற்கு பிறகு சொன்னால் நிறைய கேள்விகள் வராது என்பதால் வாயை மூடிக் கொண்டான். இல்லை என்றால் ஜாக்ஷி துருவித் துருவி கேட்கும் கேள்வியில் உண்மையை உளறி விடுவான்.

•••

கல்லூரியிலிருந்து வந்த ஜெகன் உள்ளே நுழையும் போதே, வேலை முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரம் வந்திருந்தது.

ஆனால் பலர் கந்தசாமியை சூழ்ந்து கொண்டு நிற்க, ஜெகன் அருகே சென்றான்.

“எங்களுக்கு பத்திரிக்கை வைக்காம ஏமாத்திட்டியே கந்தசாமி” என்று சிலர் குறை பட்டனர்.

“ஆமா சார். உங்க கல்யாணத்துக்கு எங்கள விட்டீங்களே.. வந்தா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்ல?”

“ரெண்டு பக்கமிருந்தும் வெறும் அம்பது அறுபது பேரு தான் இருப்பாங்க. எல்லாரையும் கூப்பிட வேணாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்று சொன்னதையே திருப்பி திருப்பிச் சொன்னான் அவன்.

“சரி விடுங்க.. உங்க கல்யாணம் உங்க இஷ்டம்.. பொண்ணையாவது காட்டுங்க..” என்று ஒருவன் கேட்க, மற்றவர்களும் ஆமோதிக்க கந்தசாமி கைபேசியில் இருந்த படத்தை காட்டினான்.

பவானியை பார்த்து எல்லோரும் ஒன்று சொல்ல, ஜெகனுக்கு மட்டும் உணர்ச்சி பொங்கியது. இருந்த ஒரே வாய்ப்பையும் இழந்து விட்டானா?

“ஜெகன்? எப்ப வந்த?” என்று கந்தசாமி கவனித்து விட்டு கேட்க, “ஹான்.. இப்ப தான். அக்கா எங்க?” என்று கேட்டான்.

“உள்ள தான் இருக்காங்க”

உடனே நகர்ந்தான். இதைக்கேட்டு ஜானகி எப்படித் தாங்கினாள்?

கதவை தட்டி உள்ளே சென்றவன் ஜானகியின் கண்ணை பார்த்தான். சிவந்தது போல் இருந்தது. அழுது இருப்பாள்.

‘எல்லா பக்கமும் ஏன் இப்படி சோதனையா இருக்கு எங்களுக்கு?’ என்று நினைத்தவன் அருகே செல்ல, தட்டும் அழைப்பிதழும் கண்ணில் விழுந்தது.

‘அக்காவுக்கு பத்திரிக்கை வச்சுருக்கானா? அய்யோ அக்கா…’ என்று அவனது மனம் துடித்தது.

“என்னடா நிக்கிற? உட்காரு” என்று சோர்வாக சொன்னாள் ஜானகி.

“க்கா..”

“ம்ம்..”

“ரொம்ப டயர்டா இருக்க நீ”

“ஆமாடா.. பசிக்கல. சாப்பிடாம இப்படி இருக்கு”

“எதாவது வாங்கிட்டு வரவா?”

“வேணாம். இத முடிச்சுட்டு வெளிய போய் சாப்பிட்டுக்கலாம். நீ எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றதும் தலையாட்டினான்.

இருவரும் கிளம்பும் போது கந்தசாமியும் கிளம்பினான். அவனிடம் பேச நினைத்ததை பேசாமலே சென்றான் ஜெகன்.

அவனுக்கு இப்போது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இனி என்ன செய்து அக்காவின் வாழ்வை காப்பாற்றுவான்?

எங்கே போவது திடீர் மாப்பிள்ளைக்கு? அதுவும் ஜானகிக்கு பிடித்தது போல். அதற்கும் மேலாக கந்தசாமி போன்று ஒரு நல்லவனை தேட முடியுமா?

விக்னேஷின் சிரிப்பும் பார்வையும் இன்னும் அவனது அடிவயிற்றை கலங்கச் செய்தது. அவன் முந்துவதற்குள் ஜெகன் முந்த வேண்டும் ஆனால் எந்த பக்கம் போவது? என்று தெரியாமல் தடுமாறிப்போனான்.

Leave a Reply