லாவண்டர் 8
![]()
ஜெகனுக்கு ஜானகியை பார்க்கவே முடியவில்லை. உயிரற்றவள் போல் அவள் நடமாடும் போது, மனம் கலங்கியது.
‘கடவுளே.. அக்கா வாழ்க்கைய எப்படியாவது காப்பாத்திடு. எனக்கு எந்த வழியுமே தெரியல. எதாச்சும் பண்ணேன். ப்ளீஸ்’ என்று கெஞ்சினான்.
வேறு யாரிடம் சென்று கெஞ்ச முடியும்? அவனது வயதுக்கு அவனால் முடிந்ததை செய்ய நினைத்தான். அதிலும் முட்டுக்கட்டை விழுந்தது.
கந்தசாமியை இவ்வளவு தூரம் நேசிக்கிறாள் என்று முன்பே தெரிந்திருந்தக் கூடாதா?
இப்போது அவனுக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது. இனி என்ன செய்ய முடியும்? என்று தீவிரமாக யோசித்தாலும் ஒன்றுமே புலப்படவில்லை.
இவர்களது வருத்தத்தை பற்றிக் கவலைப்படாமல், மேனகா கைபேசியில் ரகசியமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.
அடிக்கடி வெளியே காணாமல் போவதும், வீட்டில் இருக்கும் போது கைபேசியோடு ஒட்டிக் கொண்டு அலைவதுமாக இருக்க, ஜெகனுக்கு அதுவும் பயத்தை கொடுத்தது.
மேனகா அன்று கொலை மிரட்டலுக்கு பிறகு வாயைத்திறந்து இருவரிடமும் பேசவில்லை. அதற்காகவெல்லாம் அவர் மாறி விட்டார் என்று நம்ப ஜெகனாலும் முடியாது.
அந்த விக்னேஷனோடு திருமணத்தை நடத்த அவர் எந்த எல்லைக்கும் போவார். அதற்குள் எதாவது செய்ய வேண்டும். எதுவும் முடியாவிட்டால், இங்கிருந்து ஜானகியை எங்காவது அனுப்பி விட வேண்டும்.
அந்த விக்னேஷன் மீது நல்ல அபிப்பிராயம் வர மறுத்தது. அவன் கையில் ஜானகியை கொடுப்பதை விட, கடலில் தள்ளி கொன்று விடலாம். அந்த பாவம் நடக்காமல் தான் தான் காக்க வேண்டும் என்று நினைத்தான்.
அன்று தொழிற்சாலை விடுமுறை நாள். ஜானகிக்கு காலையில் பெரிதாக வேலை இல்லை என்பதால் தூங்கிக் கொண்டிருந்தாள்.
ஜெகன் கல்லூரிப் பாடங்களை எழுத எழுந்திருந்தான். மேனகா காலையிலேயே அவனிடம் சொல்லாமல் கிளம்பிச் செல்வது கண்ணில் பட்டது.
‘என்ன குண்டு வெடிக்க காத்திருக்கோ தெரியல’ என்று நொந்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான்.
அத்தனை பாத்திரமும் காலியாக இருந்தது.
‘எதுவுமே செய்யலயா? அப்படி என்ன அவசரம்?’ என்று யோசித்தாலும் பசித்தது.
ஜானகி வேறு இன்னும் எழவில்லை.
“எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எதாவது வாங்கிட்டு வந்துடலாம்” என்று நினைத்தவன், கதவை அடைத்து பூட்டி விட்டுக் கிளம்பினான்.
அவனுக்கு தெரிந்த ஒரு ஹோட்டலில் உணவை பார்சல் வாங்க சென்றான்.
பார்சலுக்காக காத்திருந்தபடி கைபேசியை பார்த்துக் கொண்டு நிற்க, யாரோ பேசும் குரல் கேட்டது.
“ஒரு தடவ சொன்னா புரியாதா? எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. இப்படி மிரட்டி கூப்பிடுற?”
“திரும்ப திரும்ப அதையே சொல்லாத.. உனக்கே அந்த கல்யாணம் பிடிக்கல தான? என் கூட வந்துடுடி.. ப்ளீஸ்”
“இத பத்தி ஏற்கனவே பேசிட்டோம். இப்ப நான் உன் கதைய கேட்க வரல. என் முடிவ சொல்ல வந்தேன். இனிமே கால் பண்ணுறது மிரட்டுறது எல்லாம் வச்சுக்காத. மீறி செஞ்சாலும் நான் இனிமே கண்டுக்கவும் மாட்டேன்”
“அவ்வளவு தானா எல்லாம்? இதுக்கா அவ்வளவு ஆசையா காதலிச்சோம்?”
“அது முடிஞ்சு போனது. எனக்கு இப்ப வேலை இருக்கு. இனிமே இப்படி கூப்பிடாத. நான் வேற ஒருத்தர் பொண்டாட்டி ஆகப்போறேன்”
“அப்படி ஆன.. நான் செத்துடுவேன்”
“சாகும் போது என்னை நினைக்காத. அப்ப தான் உன் ஆன்மா சாந்தி அடையும்”
சொல்லி விட்டு விருட்டென திரும்பினாள்.
இயல்பான ஆர்வத்தோடு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஜெகன், அந்த பெண்ணை பார்த்தான். லேசாக புருவம் சுருங்கி பிறகு உயர்ந்து விரிந்தது.
‘இது.. கந்தசாமிக்கு நிச்சயமான பொண்ணுல?’ என்று அதிர்ந்தவன் அங்கிருந்தவனை பார்த்தான்.
செல்பவளின் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு, முகத்தை துடைத்துக் கொண்டு அந்த ஹோட்டலுக்குள் சென்றான்.
ஹோட்டலின் வெளியே இருந்த ஒரு பாதையின் முடிவில் ஜெகன் நின்றிருந்தான். அந்த பாதையில் சற்று தள்ளி தான் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். வேறு யாரும் அங்கில்லை.
அவன் அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவன் என்று புரிந்தது. சமையல் செய்யும் உடையை அணிந்திருந்தான். அவன் உள்ளே செல்ல, ஜெகனின் மூளை வேலை செய்வதை நிறுத்தியது.
‘என்ன நடக்குது இங்க?’ என்று புரியாமல் பார்த்தவனின் பார்சல் வந்து விட, வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
‘ஏற்கனவே ஒருத்தன லவ் பண்ணி, அவன கழட்டி விட்டுட்டு இந்த பொண்ணு கந்தசாமிய கல்யாணம் பண்ணுது. இது கந்தசாமிக்கு தெரியுமா? ஆனா கந்தசாமிக்கு இவ்வளவு டிமாண்ட்டா? லவ்வர கழட்டி விட்டுட்டு அவன் பின்னாடி போகுதே இந்த பொண்ணு?’ என்று நினைத்தவன் வீட்டுக்கு வந்தான்.
ஜானகி இன்னும் எழவில்லை. மேனகாவும் வரவில்லை. அவன் மட்டும் சாப்பிட அமர்ந்தான்.
மீண்டும் மீண்டும் ஹோட்டலில் இருவரும் பேசியது கருத்தில் ஓடியது.
அதை பற்றியே யோசித்துக் கொண்டு சாப்பிட, கைபேசி அதிர்ந்தது.
கவிதாவின் பெயரை பார்த்ததும் எடுத்தான்.
“சொல்லு கவிதா”
“சீனியர்.. அந்த நோட்ஸ உங்க ஃப்ரண்ட் கிட்ட கொடுத்துடலயே?” என்று அவசரமாக கேட்டாள்.
“இல்லை.. ஏன்?”
“அதுல என்னோட முக்கியமான பொருள் இருக்கு.”
“என்னது?”
“என்னோட லக்கி சார்ம்.. அதுல இருக்கா பாருங்களேன். ப்ளீஸ்..” என்று அவள் கெஞ்ச, உடனே எழுந்தவன் பையில் தேடி அந்த நோட்டை திறந்து பார்த்தான்.
உள்ளே நூலில் செய்த சிறிய பொம்மை இருந்தது.
“பொம்மையா?”
“ஆமா.. இருக்கா? ஹப்பா.. தொலைச்சுட்டேன்னு பயந்துட்டேன்”
“இவ்வளவு குட்டி பொம்மை லக்கி சார்மா?” என்று சிரிப்போடு கேட்டவன், அதை மீண்டும் உள்ளே வைத்து விட்டான்.
“அது எனக்கு பிடிச்ச பொம்ம. பத்திரமா வச்சுருங்க. நான் நாளைக்கு வாங்கிக்கிறேன்.”
“நீ என்ன பாப்பாவா பொம்மை வச்சு விளையாடுற?” என்று கேட்டவன் மீண்டும் சாப்பிட அமர்ந்தான்.
“அது.. விளையாட இல்ல. அந்த பொம்மை கிட்ட எதாவது கஷ்டத்த சொன்னா உடனே அது தீர்ந்துடும்னு ஒரு நம்பிக்கை”
“பார்ரா..! அப்ப குளோபல் வார்மிங் கரெப்ஷன் எல்லாம் தீர்க்க சொல்லி கேட்குறது?”
“கிண்டலா? அது யாரு கேட்குறாங்களோ அவங்களோடது தான் தீர்க்கும்”
“அப்ப உனக்கு குளோபல் வார்மிங் பத்தி கவலையில்லயா?”
“இப்போதைக்கு நான் பிராஜெக்ட்ட ஒழுங்கா முடிக்கிறத பத்தி மட்டும் தான் கவலைப்படுறேன். மத்தது எனக்கு வேணாம்”
“நீயும் சுயநலவாதி தான்”
“ஆனா நிஜம்மாவே அதுல ஒரு மேஜிக் இருக்கு சீனியர். வேணும்னா நீங்களும் கேட்டு பாருங்களேன். உங்களுக்கும் கொடுக்கும்”
“உன் லக்கி சார்ம் எனக்கு எப்படி கொடுக்கும்?”
“நம்புங்க சீனியர்.. நம்பிக்கையே இல்லாம பேசிட்டு இருக்கீங்க? ஒரு தடவ கேட்டுப்பாருங்க”
“அப்படியா?” என்றவனுக்கு உடனே ஜானகியின் பிரச்சனை தான் நினைவுக்கு வந்தது.
“ஆமா.. நீங்க கேட்டு பாருங்க..” என்றவள் அந்த பக்கம் யாரிடமோ பேசி விட்டு ,”நான் வைக்கிறேன்.. கூப்பிடுறாங்க. நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வந்துடுங்க.. பை” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
ஜெகன் கைபேசியை வைத்து விட்டு சாப்பிட்டு முடித்தான். கைகழுவி விட்டு அந்த நோட்டை எடுத்தான். உள்ளே பொம்மை இருந்தது.
‘கேட்டதும் கொடுப்பியா? அப்ப ஜானகி வாழ்க்கையில இப்ப இருக்க எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு பிடிக்க எனக்கு ஐடியா கொடு பார்ப்போம்’ என்று கேட்டவன், பிறகு சலிப்போடு அதை மூடி வைத்தான்.
பிறகு தனது பாடங்களை கவனித்துக் கொண்டிருக்க, ஜானகி தாமதமாக எழுந்து வந்தாள்.
“சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்கா.. இவ்வளவு லேட்டா எந்திரிக்கிற?”
“நைட் வேலை பார்த்துட்டு இருந்தேன்டா” என்று அவனை பார்க்காமல் பொய் சொல்லி விட்டுச் சென்றாள்.
“ஏன் வெளிய வாங்குன? வீட்டுல செய்யலயா?”
“காலங்காத்தலயே கிளம்பிப் போயிடுச்சு நம்மல பெத்தது” என்று வெறுப்போடு சொல்லி வைத்தான்.
“அப்ப மதியம் நானே செய்யுறேன்” என்றவள் ,ஜெகன் வாங்கி வைத்ததை சாப்பிட்டு விட்டு சமையலில் இறங்கினாள்.
வீட்டில் நிறைய பொருட்கள் இல்லை. மேனகா வாங்கி வைக்கவில்லை.
“கொடுக்குற காச எல்லாம் என்ன தான் செய்வாங்களோ தெரியல” என்று முணுமுணுத்து விட்டு, இருப்பதை வைத்து இரண்டு பேருக்கு மட்டும் செய்து முடித்தாள்.
இருவரும் சாப்பிட்டு விட்டு ஆளுக்கொரு பக்கம் வேலையை பார்த்தனர்.
படித்துக் கொண்டிருந்த ஜெகன் தலையில் திடீரென பல்ப் எறிந்தது. அவனது மூளை விதவிதமாக திட்டம் போட ஆரம்பிக்க, எழுதுவதை நிறுத்தி விட்டு யோசித்தான். யோசனை ஒரு இடத்தில் வந்து நிற்க, சட்டென எழுந்தான்.
‘இத சரியா யூஸ் பண்ணா வொர்க் அவுட் ஆகிடும்’ என்று முடிவு செய்தவன், அனைத்தையும் தூக்கி உள்ளே வைத்து விட்டு கிளம்பினான்.
“இந்த நேரத்துல எங்க கிளம்புற?” என்று ஜானகி கேட்க சட்டென நின்றான்.
“சாப்பிட எதாவது வாங்கலாம்னு போறேன். உனக்கு எதாவது வேணுமா?”
“இப்ப தானடா லன்ச் சாப்பிட்ட?”
“ஈவ்னிங் சாப்பிடகா.. சொல்லு வேணுமா?”
“உனக்கு என்ன தோணுதோ வாங்கிட்டு வா போ”
உடனே வெளியே வந்தவன், காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ஜானகி தொழிற்சாலை செல்லும் போது மட்டுமே டிரைவர் வருவார். மற்ற நேரம் ஜெகன் தான் ஓட்டுவான்.
முடிந்தவரை விரைவாக சென்றவன், அந்த ஹோட்டலை விட்டு தள்ளி காரை நிறுத்தி விட்டு நடந்து சென்றான்.
முதலில் அவனிடம் பேச வேண்டும். அவன் யாரென்று தெரியவில்லை. ஆனால் பேசியே ஆக வேண்டும்.
மதிய உணவு நேரம் முடிந்து விட்டதால் வேலை இல்லாமல் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.
அவன் மட்டும் தனிமையை நாடி முதலில் பார்த்த அதே பாதையில், சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான்.
‘பழம் நழுவி பால்ல விழுது போல’ என்று குதூகலமாக நினைத்தபடி ஜெகன் அவனிடம் சென்றான்.
“ஹாய்..” என்றதும் அவன் ஜெகனை புரியாமல் பார்த்தான்.
“உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும். காலையில நான் வந்தப்போ.. ஒரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தத கேட்டேன். உங்க லவ்வரா?”
“நீ யாரு அத கேட்க?”
“கோபப்படாதீங்க. நேரா விசயத்துக்கு வர்ரேன். அந்த பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்கு தான? அவர் பேரு கூட கந்தசாமி தான?” என்று கேட்டதும் அவனது பார்வையில் தீ பறந்தது.
“நீ யாரு? அவன் சொந்தக்காரனா?”
“இல்ல. சொந்தக்காரனாகனும்னு தான் ஆசைப்படுறேன்”
“என்ன?”
“அவர என் அக்கா லவ் பண்ணுறா. அவரு என்னடானா உங்க ஆளு கூட நிச்சயம் பண்ணிட்டாரு. நேத்து வரை இனி என் அக்கா வாழ்க்கை என்னாகுமோனு தான் கவலைப்பட்டேன். இப்ப தான் ஒரு ஐடியா கிடைச்சது. நேரா உங்கள பார்க்க ஓடி வந்தேன்”
“சரி இப்ப நான் என்ன பண்ணனும்ங்குற?”
“எனக்கு ஒன்னே ஒன்னு தான் தெரியனும். அந்த பொண்ணு… உங்க லவ்வர் இன்னமும் உங்கள லவ் பண்ணுறாங்களா?”
“லவ் பண்ணா கல்யாணத்த நிறுத்துனு சொல்லுறியா? நீ வேற. நான் செத்து போனாலும், பொணத்து மேல உட்கார்ந்து கல்யாணம் பண்ணிக்குவா. கல்நெஞ்சக்காரி”
“நீங்க செத்தெல்லாம் போக வேணாம். கல்யாணத்த நிறுத்த ஒரு ஐடியா பண்ணுவோம்”
“எதுவும் வேலைக்கு ஆகாது. அவளுக்கு அவ அம்மா தான் உயிரு. அவங்களுக்கு அவங்க அண்ணன் குடும்பம் தான் கடவுள். அவங்க என்ன சொல்லித்தொலைச்சாங்கனு தெரியல. என் கிட்ட வந்து மறந்துடுங்குறா.”
கோபமும் சோகமுமாக அவன் பேச, “அப்ப நாம ரெண்டு விசயம் பண்ணனும்” என்றான் ஜெகன்.
“என்ன சொல்லுற?”
“டீடைலா சொல்லுறேன். கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குள்ள ப்ளான முடிச்சுடலாம். உங்க ஃபோன் நம்பர் கொடுங்க” என்று கேட்க, அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
“அடக்கொடுங்க ப்ரோ..” என்று கேட்டதும் சொன்னான்.
“உங்க பேரு கேட்கலயே?”
“மதுசூதனன்”
“மது ப்ரோ.. ஃப்ரீயா ஆனதும் உடனே கால் பண்ணுங்க. உங்க காதலி உங்களுக்கு தான்.”
“நீ யாருனு சொல்லலயே?”
“நான் ஜெகன். கந்தசாமி வேலை பார்க்குற ஃபேக்டரி எங்களோடது தான்” என்றதும் மதுவின் கண்கள் விரிந்தது.
‘அவ்வளவு பெரிய இடமா?’ என்று நினைத்துக் கொண்டு, ஜெகனின் எண்ணை பதிவு செய்து வைத்தான்.
“மறக்காம கால் பண்ணுங்க” என்றவன் கிளம்பிச் சென்று காரில் ஏறினான்.
உண்மையிலேயே ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதை எப்படியாவது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு கிளம்பினான்.
