லாவண்டர் 9

Loading

கந்தசாமியின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லா வேலையும் கந்தசாமியே பார்க்க வேண்டும் என்பதால், அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டான்.

அதுவே ஜானகிக்கு நிம்மதியாக இருந்தது. அவனை பார்த்து விட்டு போலியாக நடிக்க முடியாமல் அவள் படும் பாடு ஆண்டவன் தான் அறிவான்.

அவன் அதிகமாக கண்ணில் படாமல் இருப்பதால், மனதை திருப்பி வேலைகளை கவனித்தாள். இப்போதேல்லாம் அவளது எண்ணங்கள் ஜாக்ஷியை அதிகமாக சுற்றி வந்தது.

தொழிற்சாலை கைக்கு வந்த பிறகு, அவள் அடிக்கடி ஜாக்ஷியை நினைத்து பார்ப்பாள். அவளது ஆளுமையும் திறமையும் அவளது கண்ணை பறிக்கும். அது போன்ற ஆளுமை வேண்டும் என்று ஆசை கூட வரும். ஆனால் அது அவளுக்கு சரி வராது என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இப்போது வேறு விதமாக யோசித்தாள். ஜாக்ஷியை பிடிக்காது தான். இப்போதும் அவளை பார்த்தால் சிரிப்பாளா? என்றால் முடியவே முடியாது என்று யோசிக்காமல் சொல்வாள்.

ஆனால் அவள் வாழ்வில் எத்தனை கஷ்டங்களை தாங்கி வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

ஜானகி தாயின் பாசத்தோடு தந்தையின் அரவணைப்போடு வளர, ஜாக்ஷி தாய் தந்தையை விட்டு விலகி வெறுப்போடு வளர்ந்தாள்.

இதோ இந்த நிமிடம் ஜானகி பைத்தியமாக வேலையை கட்டிக் கொண்டு அழுவது போல், ஜாக்ஷி சிறுவயதில் இருந்திருக்கிறாள்.

ஒரே ஒரு முறை மேனகா மகளின் ஆசையை கேட்காமல் அவளை நோகடித்த போதே, அவள் சாவு வரை யோசித்து விட்டாள். எங்கோ போனாலும் அவமானம் என்று கூனிக்குறுகிப்போகிறாள்.

இது தானே ஜாக்ஷிக்கும் நடந்திருக்கும் என்று நியாய மனம் எடுத்துச் சொன்னது. ஜானகி பிறக்கும் முன்பு அவளுடைய பெற்றோர்கள் பிரிந்து, விவாகரத்து வாங்கும் விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது அவளை பேசுபவர்கள் முன்பு ஜாக்ஷியையும் கேள்வி கேட்டிருப்பார்கள். நினைத்ததும் பாவமாக தோன்றியது.

தன்னுடைய கஷ்டத்தில் தான் பிறருடைய கஷ்டம் புரிய ஆரம்பித்தது.

ஆனாலும் அவளை காக்க அவளது பாட்டி இருந்தார். ஜானகிக்கு? யாருமில்லாதது போல் இருந்தது.

தைரியமாக எதையும் செய்ய முடியவில்லை. கந்தசாமியிடம் மனதை திறக்க முடியவில்லை. அவன் சந்தோசமாக வாழட்டும் என்று ஒதுங்கத்தான் தோன்றியது.

மேனகாவிடம் சண்டை போட்டாலும், அவரை அடக்க முடியவில்லை. எதோ பெரிதாக திட்டம் போடுகின்றார் என்று தெளிவாக தெரிந்தது. அந்த விக்னேஷனோடு சேர்ந்து எப்படியாவது திருமணத்தை நடத்தி விட பார்க்கின்றார். எல்லாம் புரிந்தாலும், அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

எங்காவது ஓடிப்போகலாம். அல்லது செத்து விடலாம். ஆனால் ஜெகன்? அவனை என்ன செய்வது? அவன் இன்னும் படிப்பை கூட முடிக்கவில்லை. அவன் தலையில் மொத்த பாரத்தையும் வைக்கும் அளவு மனம் கல்லாகவில்லை.

‘இப்படியே போச்சுனா ஒரு நாள் செத்து தான் போவேன். அதுக்கு முன்னாடி… ஒரே ஒரு நாள் நான் நிம்மதியா வாழ கூடாதா? எல்லாத்தையும் மறந்துட்டு சிரிச்சு சந்தோசமா?’ என்று நினைத்ததும் கண்ணீர் தான் வந்தது.

‘எப்போவோ யாருக்கோ மன்னிக்க முடியாத துரோகம் பண்ணிருக்கேன் போல. வாழ்க்கை கழுத்த நெரிக்கும் போது ஒன்னுமே செய்ய முடியல’

அவளுக்குள்ளாகவே புலம்பும் நிலைக்கு வந்திருந்தாள். புலம்பலும் கண்ணீரும் அவளை அமைதிப்படுத்தாமல், வேதனையை அதிகரிக்கத்தான் செய்தது. ஆனால் அதையும் பிடித்தே செய்தாள்.

தன்னை தானே வதைத்துக் கொள்வதில் மனம் மாஸ்டர் பட்டம் வாங்கியது. அதற்கு எப்போதும் வேண்டாத விசயங்களும், தவறான எண்ணங்களும் தான் முதலில் தோன்றும். அதை ஒதுக்கி நல்லதை கொண்டு வர போராடத்தான் வேண்டும்.

ஜானகியின் மனதிலும் இப்போது வேண்டாத எண்ணங்கள் நிறைந்திருந்தது. அதை நீக்காமல் அதனுள்ளேயே மூழ்க ஆரம்பித்தாள்.

கந்தசாமி வந்து விடுமுறைக்காக நின்றான்.

“கல்யாணத்துக்கு அப்புறம் மூணு நாள் லீவ் வேணும் மேடம்” என்று கேட்ட போது, அவளது கண்களிடம் சிந்த கண்ணீர் மிச்சமில்லை.

தலையாட்டி வைத்தவள், “எடுத்துக்கோங்க” என்றாள்.

“நீங்க கல்யாணத்துக்கு வரனும் மேடம்” என்று சொன்னவனுக்கு அவள் வரவே கூடாது என்ற பேராசை.

அவளுக்கும் மேலும் காயப்பட தைரியமில்லை தான். அதனால் பொதுவாக, “வர்ரேன்” என்று சொல்லி வைத்தாள்.

“நான் கிளம்புறேன்..” என்ற கந்தசாமிக்கு, உள்ளே என்னவோ செய்தது. அவள் பதில் பேசாமல் இருக்க வேகமாக வெளியேறி விட்டான்.

நெஞ்சம் பற்றி எரிய, அவன் சென்றதும் தண்ணீரை குடித்து அணைக்க பார்த்தாள்.

இனி திருமணம் முடிந்து தான் அவனை பார்க்க முடியும். வற்றிப்போன கண்ணீர் திடீரென ஊற்றெடுத்து அவளை கலங்க வைத்தது.

கந்தசாமிக்கோ மூச்சு சற்று இலகுவாக வந்தது.

‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும். இனி இங்க வர வேணாம். நேரா ஜாக்ஷி மேடம் கிட்ட பேசிட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்.

•••

நாளை காலை திருமணம்..

கை நிறைய மருதாணி பூசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பவானி. மிக நெருங்கிய சொந்த பந்தங்கள் தவிர, யாருக்கும் சொல்லாததால் விழா எதுவும் பெரிதாக இல்லை.

காலையில் கிளம்பிச் செல்ல வேண்டும். மாப்பிள்ளை வீட்டில் ஐம்பது பேர். பெண் வீட்டில் ஐம்பது பேர். திருமணத்தை முடித்ததும், வீடு திரும்ப வேண்டும்.

மிகமிகச் சாதாரணமாக அந்த திருமணம் நடப்பது பவானிக்கு ஆறுதலாக இருந்தது. பலரை சமாளிக்க வேண்டாம்.

மருதாணி காயும் வரை அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“படுடி.. காலையில எந்திருக்கனும்ல?”

‘ஆமா.. எந்திரிச்சு தான் ஆகனும். தூக்கத்துலயே சாக முடியாது. அவ்வளவு கொடுத்து வைக்கல நான்’ என்று நினைத்தவள், தாய்க்கு பதில் சொல்லவில்லை.

அவர் வேலை செய்த களைப்பில் உறங்க ஆரம்பித்து விட, பவானியின் கைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.

அதை எடுத்து படித்தவளின் கண்கள் விரிந்தது.

மதுசூதனன் அனுப்பி இருந்தான். அன்று நேரடியாக சென்று பேசியப்பிறகு, அவன் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை.

இன்று பார்த்ததும் உள்ளம் திடுக்கிட்டது. இது வரை அமைதியாக இருந்து விட்டு இனி பிரச்சனை செய்வானா?

செய்தியை அவசரமாக மீண்டும் படித்தாள்.

“நீ என்னை வேணாம்னு சொன்னா அப்படியே போயிட மாட்டேன். நாளைக்கு என்ன நடந்தாலும் நீ வாய திறக்க கூடாது. இது நம்ம காதல் மேல சத்தியம்” என்று மொட்டையாக அனுப்பி இருந்தான்.

‘என்ன செய்ய போறான்?’ என்று பதட்டமாக பார்த்தவள், ஓடிச் சென்று கைகழுவி விட்டு வந்து, “என்ன செய்ய போற? எதாவது நடந்து எங்கம்மாவுக்கு எதாச்சும் ஆச்சு.. அப்புறம் அவ்வளவு தான் பார்த்துக்க” என்று செய்தி அனுப்பினாள்.

அவன் பார்க்கவே இல்லை. இந்துவை ஒரு நொடி பார்த்து விட்டு அழைப்பு விடுத்தாள். அவன் ஏற்கவில்லை.

பயந்து போனவள் இரவு முழுவதும் தூங்காமல் கழித்தாள்.

•••

இரவு சாப்பிட பிடிக்காமல் ஜானகி வேலையை பார்த்துக் கொண்டிருக்க, “க்கா.. நாளைக்கு கந்தசாமிக்கு கல்யாணம் தான?” என்று கேட்டான் ஜெகன்.

அதை மறக்க முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க, இந்த கேள்வி மேலும் காயப்படுத்தியது.

“ம்ம்” என்று சமாளித்துக் கொண்டு பதிலளித்தாள்.

“நாளைக்கு போகலாமா?”

“எனக்கு வேலை இருக்குடா”

“என்னகா பொறுப்பில்லாம பேசுற? கந்தசாமி கல்யாணத்த விட என்ன பெரிய வேலை உனக்கு?”

ஜானகிக்கு தம்பியை அடிக்க வேண்டும் போல் இருந்தது. காயத்தில் கத்தியை விட்டு திருகும் வேலையை செய்தால்?

“வேலை இருக்குனா விடேன்டா”

“அதெல்லாம் முடியாது. எந்த வேலையா இருந்தாலும் அத அப்புறமா பார்த்துக்கலாம். நாளைக்கு கல்யாணத்துக்கு போறோம். நீ வர்ர”

“என்னால முடியாது. நீ வேணா போயிட்டு வா. பணம் தர்ரேன் மொய் வச்சுடு. இல்லையா கிஃப்ட் வாங்கி கொடுத்துடு”

“லூசா நீ? கந்தசாமி நம்ம கிட்ட வேலை பார்க்குறவரு. அதுவும் அப்பா இருந்தப்போ இருந்து பார்க்குறாரு. அப்பாவுக்கு கந்சாமிய எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியாதா? அது மட்டுமா? கந்தசாமி இல்லனா இந்த ஃபேக்டரியவே இவ்வளவு தூரம் கொண்டு வந்துருக்க முடியாது. ஆமா தான?”

ஜானகி அமைதியாக இருந்தாள். எல்லாமே உண்மை தான். அதற்காக? அவளது மனதை புதைக்க முடியுமா?

“அப்படிப்பட்டவர் கல்யாணத்துக்கு நீ போகாம நான் மட்டும் போய் நிக்கவா? பத்திரிக்கை உனக்கு தான் வச்சாரு. ஒழுங்கா காலையில கிளம்புற.. நாம கல்யாணத்துக்கு போறோம். சொல்லிட்டேன்”

“ஏன்டா நீ வேற? என்னால முடியாதுனா விடேன்”

“விட முடியாது. வந்து தான் ஆகனும். நமக்கு ரொம்ப முக்கியமானவங்க விசேசத்துக்கு நாம போகலனா எப்படி? அம்மாவ முடிஞ்சா கூட்டிட்டு போயிருப்பேன். ஆனா இப்ப முடியாது. அதுனால நாம மட்டும் போறோம். கல்யாணத்த முடிக்கிறோம்”

“யாருக்குடா கல்யாணத்த முடிக்க போற?” என்று வேகமாக வந்து நின்றார் மேனகா.

அவரது கண்கள் இருவரையும் சந்தேகமாக பார்த்தது.

“கந்தசாமிக்கு நாளைக்கு கல்யாணம். பத்திரிக்கை வச்சு கூப்பிட்டுருக்கார். அதுக்கு போறோம். ஏன்? உங்களுக்கு என்ன?”

“அவனுக்கா? அவன் கல்யாணம் பண்ணுறான்னு சொல்லவே இல்லயே..”

“உங்க கிட்ட சொல்லிட்டு தான் பண்ணனுமா? முதலாளிங்குற பேர்ல அக்காக்கு மட்டும் தான் பத்திரிக்கை. நான் அக்கா கூட துணைக்கு போறேன்”

“போ போ.. அந்த கல்யாணத்த பார்த்துட்டாச்சும் உன் அக்காவுக்கு கல்யாண ஆசை வருதானு பார்க்கலாம்” என்று விட்டு வெடுக்கென திரும்பிச் சென்றார்.

ஜானகிக்கு வலித்தது. இப்படி ஒரு நிலைமை வர வேண்டுமா? ஆனால் மனம் திடீரென மாற்றி யோசித்தது.

ஒரு வேளை கந்தசாமியின் திருமணத்தை கண்ணால் பார்த்து விட்டால், அவளது மனம் மாறக்கூடுமோ? அவனை வேறு ஒருத்தியின் கணவனாக பார்த்து விட்டால், மீண்டும் அவனை பற்றி நினைக்க மனம் விரும்பாது.

அறுவை சிகிச்சையாக இதை செய்தால் தான் என்ன? என்று தோன்றவும், சற்று தைரியம் வந்தது.

“சரி போகலாம்” என்று தம்பியிடம் ஒப்புக் கொண்டாள்.

ஜெகனுக்கு அப்போது தான் நிம்மதி மூச்சு வந்தது.

‘நாளைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கனும் ஆண்டவா’ என்று வேண்டிக் கொண்டான்.

மேனகா அறைக்கு வந்து விட்டு, கைபேசியில் விக்னேஷன் அனுப்பிய விவரத்தை பார்த்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு ஜானகியோடு விக்னேஷனுக்கு திருமணம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து விட்டது.

ஜானகியை கடத்திக் கொண்டு சென்று, தாலி கட்ட திட்டம். அதோடு அவளை அழைத்துக் கொண்டு சில மாதங்கள் வெளிநாட்டுக்குச் சென்று விட வேண்டும். அங்கே அவளது மனதை மாற்றி விட்டு, பிறகு தான் நாடு திரும்ப வேண்டும்.

எல்லாம் விக்னேஷனின் திட்டம். மேனகா அதற்கு சந்தோசமாக சம்மதித்தார். ஏனென்றால் அவருக்கும் லாபம் இருந்தது.

ஜானகியோடு விக்னேஷன் திருமணம் முடிந்ததும், மேனகாவும் ஜெகனும் அவர்கள் நாடு திரும்பும் வரை அவன் வீட்டில் தங்கலாம். அந்த மிகப்பெரிய பங்களாவில் ராணியாக வாழலாம்.

ஜானகி மனம் மாறி திரும்பி வந்த பிறகு, அவர்களுடனே இருப்பதில் பிரச்சனை இல்லை. அப்போது பிரச்சனையை அப்போது பார்த்துக் கொள்ளலாம். முதலில் ஜானகியை அழைத்துச் செல்ல வேண்டும். அது மட்டும் தான் பெரிய வேலை.

அவளை கடத்தும் முன்பு ஜெகனை வேறு அப்புறப் படுத்த வேண்டும். இப்போதெல்லாம் ஜெகன் ஜானகியோடு ஒட்டிக் கொண்டே அலைகிறான். அது மேனகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

விக்னேஷன் கேட்க போது, “அவன நான் சமாளிச்சுக்கிறேன்” என்று தைரியமாக சொல்லி விட்டார். அவனை அந்த நாளில் மட்டும் அப்புறப்படுத்த திட்டம் கூட போட்டு விட்டார்.

திருமணத்திற்கான நகை புடவை எல்லாம் மேனகாவே வாங்கினார். விக்னேஷன் எல்லாவற்றுக்கும் பணம் கொடுக்க, அதை செலவழிக்கும் போது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இருந்தது.

திருமணம் முடிந்து விட்டால் இதை விட பலமடங்கு கிடைக்குமே! அந்த ஆசையில் ஆகாச கோட்டைகளை கட்ட ஆரம்பித்தார்.

அத்தனைக்கும் எதிராக ஒரு திட்டத்தை வைத்திருந்தான் ஜெகன். நாளை அதை நிறைவேற்றுவது பற்றி யோசித்தபடி தூங்காமல் கிடந்தான்.

தொடரும்.

Leave a Reply