சித்திரமே 22
![]()
“நீ கூட என்னை துரத்துரல?” என்று வேதா வழக்கம் போல் கண்ணீர் வடிக்க, இம்முறை விக்ரம் சாலையை பார்த்து அசையாமல் இருந்தான்.
“உன் பொண்டாட்டிக்கு நான் இருக்கது இடைஞ்சலா இருக்கு. நீயும் அவ கூட சேர்ந்துட்டு என்னை துரத்துற. அது சரி.. ஏற்கனவே கல்யாணம் பண்ணத என் கிட்ட இருந்து மறைச்சுட்டு தான இருந்திருக்க. நீ அவ பேச்சு கேட்டு ஆடுறதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?”
“க்கா..”
“எதுக்குடா மறைச்ச? தெரிஞ்சா அப்பவே டைவர்ஸ் பண்ணுனு சொல்லுவேன்னு தான?” என்று கேட்க, ஆம் என்றா சொல்ல முடியும்?
“அத பத்தி பேசாத கா. எல்லாம் பழைய கதை. நீ இப்ப எதுக்கு அழுற? மாமாவே கொஞ்ச நாள் தான் இங்க இருக்காரு. அவர் கூட நீ இருக்க வேணாமா? பசங்களும் ஹாஸ்டல்ல இருக்காங்க. நேரா போய் அவங்கள பாரு. தாராவ விடு. நான் பார்த்துக்கிறேன்”
“எப்படியோ என்னை துரத்துற. அவ உன்னையும் துரத்தாம பார்த்துக்க” என்று கூறினாலும், விக்ரம் அசரவில்லை.
சுந்தரின் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினான். அதுவும் பெரிய வீடு தான். ஆனால் விக்ரமின் வீடளவு கிடையாது. சுந்தரின் வருமானத்திற்கு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வசதியாகவே வைத்திருந்தான்.
பெட்டியை தூக்கிக் கொண்டு விக்ரம் உள்ளே நுழைய, “வா பா விக்ரம். நல்லா இருக்கியா?” என்று வேகமாக வந்து உபசரித்தார் சுந்தரின் தாயார் கோமதி.
“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்பா. உட்காரு. காபி கொண்டு வர்ரேன்” என்று கூற, “இல்ல அத்தை. அக்காவ விடத்தான் வந்தேன். வேலை இருக்கு” என்று மறுத்தான்.
“சுந்தர் சொன்னான்பா. ஆனாலும் அடிக்கடி வீட்டு பக்கம் வந்து போகலாம்ல? கல்யாணம் ஆகிடுச்சு. பொண்டாட்டி புள்ளையோட ஒரு நாள் விருந்துக்கு வரனும்”
“சாரி அத்த. உங்கள கல்யாணத்துக்கு கூப்பிட முடியல.”
“பரவாயில்ல விடு. நீங்க சந்தோசமா இருந்தா சரி”
“கிளம்புறேன் அத்த. ஒரு நாள் அவங்கள கூட்டிட்டு வர்ரேன்.”
“சரிபா. பார்த்து போயிட்டு வா. ஆனா மறக்காம கூட்டிட்டுவா. உன் மகன் உன்னை மாதிரியே இருக்கான். சுந்தர் ஃபோட்டோ காட்டுனதுல இருந்து கண்ணுக்குள்ளயே இருக்கான். பேரென்ன?”
“விதார்த்.”
“சரி சரி”
“வர்ரேன் அத்த. பை கா” என்று விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட்டான்.
வேண்டாவெறுப்பாய் நின்றிருந்த மருமகளை, சலிப்பாக பார்த்தார் கோமதி.
“பிறந்த வீட்டு சுகம் விட்டுருச்சா?” என்று கேட்க, வேதா பதில் பேசவில்லை.
“கொண்டு போய் உள்ள வச்சுட்டு வந்து, வீட்ட க்ளீன் பண்ணு” என்று அதிகாரமாக சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
‘நான் ஏன் செய்யனும்? முடியாது ‘ என்று மனதில் தான் கத்த முடிந்தது. வெளியில் கத்தி விட்டால் அவ்வளவு தான்.
சுந்தர் எல்லாவற்றிற்கும் சண்டை போடுவான். ஆனால், சண்டையை உடனே மறந்து தானே பேசி மனைவியை சமாதானம் செய்து விடுவான்.
எவ்வளவு தூரம் மற்ற விசயங்களில் விட்டுக் கொடுக்கிறானோ, அதற்கு நேர்மாறாக அன்னை விசயத்தில் இருப்பான். கோமதியை அவமதித்து வேதா ஒரு வார்த்தை பேசி விட்டாலும், அவளை அழுத்தமாய் பார்த்து விட்டுச் சென்று விடுவான். திட்டவோ கோபப்படவோ மாட்டான். அமைதியாய் அவளை ஒதுக்கி தள்ள வேதாவிற்கு திண்டாட்டமாகி விடும். அதன் பின் எத்தனை நாளானாலும் சரி. வேதா தான் அவன் பின்னாடி அலைந்து சரிகட்ட வேண்டியிருக்கும். அவன் ஒரு அடி கூட இறங்கி வர மாட்டான்.
கோமதியிடம் மன்னிப்புக்கேட்டு, சுந்தரிடம் மன்னிப்புக்கேட்டு, அவனை மீண்டும் பேச வைக்கவே வேதா போராட வேண்டும். அதனால் அவன் இருக்கும் போது கோமதி எதைச்சொன்னாலும் செய்து விடுவாள். அவன் இல்லாத நேரம் தான் சண்டை பிடிப்பது.
கோமதி, மகனுக்கு அழைத்து விசயத்தை சொல்லி கோள் மூட்டும் கெட்ட பழக்கம் எதையும் வளர்த்துக் கொள்ளவில்லை. அது வேதாவுக்கு சாதகமாக இருந்தது. அவரிடம் சண்டை போட்டு விட்டு, தம்பி வீட்டில் சென்று அமர்ந்து விடுவது அவளது வழக்கமாக அமைந்து விட்டது.
இப்போது கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும், கணவன் எந்த நேரமும் வந்து விடுவான் என்பதால் வாயை அடக்கிக் கொண்டு வேலைகளை பார்த்தாள்.
அங்கு அறைக்குள் அடைந்து கிடந்தாள் விசாகா. இன்டர்காம் ஒலிக்க ஆரம்பித்தது.
எடுத்து காதில் வைக்க, “கீழ வா” என்று உத்தரவிட்டாள் சித்தாரா. விசாகா பேசும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
“கிராதகி. என்னை வச்சு செய்யனே வந்துருக்கா” என்று நொந்து கொண்டு கீழே வந்தாள்.
சித்தாராவும் விதார்த்தும் அமர்ந்து இருந்தனர். விதார்த் க்ரையான்ஸை வைத்து வரைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்து வரைவதை பார்த்துக் கொண்டிருந்த சித்தாரா, விசாகாவிடம் திரும்பினாள்.
“டூ வீலர் லைசன்ஸ் இருக்கா?”
மறுப்பாக தலையாட்ட, “இத்தனை வயசாகுது. லைசன்ஸ் கூட எடுக்கல” என்று முறைத்து விட்டு, “க்ளாஸ்க்கு ஏற்பாடு பண்ணுறேன். ஒழுங்கா போற” என்று கூறினாள்.
விசாகா தலையாட்ட, “சமைக்க தெரியுமா?” என்று அடுத்த கேள்வி வந்தது.
அதற்கும் மறுப்பாக தலையாட்ட, “ஆண்ட்டி” என்று குரல் கொடுத்தாள்.
“என்னம்மா?” என்று அல்லி எட்டிப்பார்க்க, “இன்னைக்கு லன்ச்ல எதாவது ஒரு டிஸ் இவ கண்டிப்பா பண்ணிருக்கனும். பண்ண வைங்க” என்று கூறி விரலசைவில் விசாகாவை விரட்டினாள்.
மனமில்லை என்றாலும் நடந்தவள், சட்டென நின்றாள்.
“என் கிட்ட இதெல்லாம் கேட்குறீங்க? உங்களுக்கு தெரியுமா?”
சித்தாராவை சந்தேகமாக பார்த்தபடி கேட்டாள். இவளை மட்டும் வேலை செய்ய வைத்து விட்டு, சித்தாரா சொகுசாக இருக்கிறாளே என்று மனதில் எரிச்சல் பட்டுக் கொண்டாள்.அதன் விளைவு தான் இந்த கேள்வி.
“காரே ஓட்டுவேன் நான். பார்க்குறியா?”
“அப்போ சமையல்?”
“விது… அம்மா செய்யுற சாப்பாடு உனக்கு புடிக்குமா?”
“ஐஐ.. புடிக்குமே.. அந்த கொழுக்கட்ட பிடிக்குமே. பூரி பிடிக்குமே. தோசை பிடிக்குமே. எல்லாம் பிடிக்கும்” என்று அவன் வேகமாக கையை விரித்துக் கூற, சித்தாரா அவன் கன்னத்தை கிள்ளி கொஞ்சினாள்.
‘ஒரே நேரத்துல அல்ட்ரா மார்டனா இருக்கா. கூடவே சமைக்கவும் செய்யுறாளே!’ என்று ஆச்சரியப்பட்டவாறு சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவளை அழைத்து நிற்க வைத்து, அல்லி அமைதியாக வேலை சொன்னார். அவர் கொஞ்சம் அதட்டி இருந்தாலும், விசாகா எகிறியிருப்பாள். ஆனால் அல்லி அவ்வளவு பொறுமையாக சொல்லிக் கொடுத்தார். அவளால் மறுக்கவே முடியவில்லை.
மதிய உணவில் சித்தாரா விசாகா சமைத்ததை சாப்பிட்டு விட்டு, “குட்” என்று விட, விசாகாவிற்கு பெருமையாக இருந்தது. முதல் முறையாக பாராட்டு வாங்குகிறாள்.
சொல்லிக்கொடுத்து அருகே நின்று செய்ய வைத்தது அல்லியாக இருந்தாலும், செய்தவளையே சித்தாரா பாராட்டி விட விசாகாவின் முகம் மலர்ந்து விட்டது.
இங்கு சித்தாரா வந்த இத்தனை நாட்களில், முதல் முறையாக அவர்களோடு ஒன்றாக சாப்பிட்டாள். அதுவும் விதார்த் பேசிக் கொண்டே இருக்கும் போது, ஒரு கலகலப்பு அங்கே இருந்தது.
சித்தாராவின் பிள்ளை என்பதாலே, விதார்த்திடம் விசாகாவும் வேதாவும் ஒட்டியது இல்லை. ஆதுவும் வேதா எப்போது பார்த்தாலும், “பிள்ளைய பெத்து அவன காட்டியே சொத்தயும் புடுங்கிட்டா” என்று திட்டிக் கொண்டே இருந்தாள். அதனால் விதார்த்தின் மீது பெரிதாக பாசம் வரவில்லை.
இப்போது அவனைக்கூட பிடித்து இருந்தது. அல்லியின் குணம் கூட இப்போது வித்தியாசமாக இருந்தது. எல்லாவற்றையும் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
சித்தாராவும் எந்த நேரமும் கடுமையை காட்டிக் கொண்டிருக்கவில்லை. அல்லியுடனும் விதார்த்துடனும் சிரித்துப்பேசிக் கொண்டிருந்தாள்.
விசாகா இதை மௌனமாக கவனித்தாள். சரியாகச்சொன்னால், இப்போது தான் நன்றாக கவனித்தாள். அவர்கள் இயல்பாக இருக்கும் போது, மிகவும் சந்தோசமாக இருந்தனர். சந்தோசத்திற்காக நண்பர்களை தேடிச் செல்லவில்லை. பொழுதை போக்க பணத்தை செலவழிக்கவில்லை. ஆர்வமிகுதியில் கண்டதையும் செய்து கொண்டு, எதுவும் பிடிக்காமல் சலிக்கவில்லை. உலக அரசியல் உள்ளூர் விபரம் என்று எதையாவது பேசி, தான் அறிவாளி என்று காட்டிக் கொள்ளவில்லை.
அவர்களுக்குத் தெரிந்த விசயங்களை, விளையாட்டாகவோ விவரமாகவோ பேசினார்கள். இருந்ததை ரசித்து சாப்பிட்டார்கள். முக்கியமாக போலித்தனமில்லாமல் மனம் விட்டு சிரித்தார்கள்.
விதார்த் வேறு அவனது பங்குங்கு நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டு, இருவரிடமும் மாற்றி மாற்றி செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
விசாகா விதார்த்தை நன்றாக பார்த்தாள். அவனுக்கு உலகமே சித்தாரா தான் என்று இருந்தான். அவளும் மகனுக்காக பார்த்து பார்த்து செய்தாள். அவன் சேட்டையே செய்த போதும், சிரிப்போடு தடுத்தாளே தவிர அதட்டவோ மிரட்டவோ இல்லை.
இப்படி விசாகாவுக்கு பாசம் கிடைக்கவே இல்லையே. எப்போதும் சித்தியை குறை சொல்லிக் கொண்டே அருகே அமர்ந்து இருக்கும் அக்கா. இருக்கிறானா? இல்லையா? என்று தெரியாத அண்ணன். முழு நேரமும் குடியில் இருந்த தந்தை. எட்டி தூரமாய் நின்று, சாப்பாடு மட்டும் வைத்து விட்டு ஒதுங்கிப்போகும் சித்தி.
இப்படித்தான் வாழ்க்கை இருந்தது. பணத்துக்காக நட்பு, பணக்கார நட்பு என்று அவளது நட்பு வட்டங்கள் இருந்த போதும், அவளிடம் பாசம் காட்டவோ நெருங்கி பழகவோ யாருமே இல்லை.
சாப்பிட்டாயா? என்று கேட்கவும், என்ன செய்கிறாள்? என்று கவனிக்கவும் யாருமே இல்லை. அல்லி தான், வீட்டில் இருந்தால் அந்த அந்த நேரத்திற்கு சாப்பிட அழைப்பார். அப்போதும் விசாகா முகத்திலடித்தது போல் பேசி விட்டால், ஒதுங்கி விடுவார்.
கண்கலங்கி விடும் போல் இருக்க, வேகமாக அறைக்கு சென்று விட்டாள்.
கண்டும் காணாமல் அவளை சித்தாரா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். காலையில் தான் இந்த முடிவுக்கு வந்தாள்.
அவள் நினைத்தது போல் விசாகா முட்டாள் அல்ல. அவளை வேதா முட்டாளாக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.
முதலில், விசாகாவின் கண்ணிலிருந்து வேதா மாட்டிய சாயத்தை அவிழ்த்து எறிய வேண்டும். அதற்கு வேதா இங்கிருந்தால் சரி வராது என்று முடிவெடித்து, துரத்தியும் விட்டாள்.
விசாகாவும் வெட்டியாக பொழுதை கழித்தால் தானே மற்றதை யோசிக்க நேரமிருக்கும்? இனி அவளை பம்பரமாக சுழற்றி விட வேண்டும் முடிவு செய்து விட்டாள்.
அல்லியிடமும் அவளுக்கு இணக்கம் வர வேண்டும் என்று தான் சமையலில் இறக்கி விட்டாள்.
இனி அவளது சிந்தனைகள் சரியாக பயணிக்கும் என்ற திருப்தி வந்தது.
மகனை அல்லியிடம் விட்டு விட்டு அறைக்கு வந்தவள், அங்கு படிக்காமல் கிடந்த புத்தகத்தை பார்த்தாள்.
“எல்லாம் ஆன்டி ஹீரோ கதை. எனக்கு பிடிக்கவே இல்ல.” என்று எரிச்சலாக புலம்பினாலும், அவளுக்கு வேறு வழியும் இல்லை.
இப்போது வரை அவள் படித்த கதைகள் அவளுக்கு உபயோகமாக தான் இருந்தது. நாயகன் நாயகியின் செயல்கள் தான் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அவர்களை தவிர்த்து, கதையில் வரும் அத்தனை பேரையும் கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டாள்.
அந்த புரிதல் தான், அல்லி, விசாகா, வேதாவை நன்றாக புரிந்து கொள்ள வைத்தது. யாரை எப்படி அடக்க முடியும் என்று தெளிவு படுத்தியது.
இனி இருப்பது விக்ரம் மட்டுமே. அவனுக்கான தண்டனையை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.
“புக்க படிப்போம். அப்புறம் யோசிப்போம்” என்று அமர்ந்து விட்டாள்.
நாயகன் வழக்கமான ஆன்டி ஹீரோ தான். நாயகி ஏழைப்பெண்.
“ரிச் ஹீரோ பூர் ஹீரோயின் கான்சப்ட் சின்ட்ரெல்லா காலத்து கான்சப்ட்டா. இன்னுமா வச்சு ஓட்டுறீங்க?” என்று எரிச்சலானாள்.
நாயகி பணத்திற்காக நாயகனிடம் வந்து சேர்ந்தாள். அதாவது திருமணம் இல்லாமல் இருவரும் வாழ்ந்தனர். நாயகிக்கு திடுதிப்பென காதல் முளைத்து விட்டது.
அடிக்கடி கண்ணை கசக்கி வைத்தாள்.
“இந்த ஹீரோயினிங்க அழாம இருக்காதுங்களா? இது வரை படிச்ச அத்தனை கதையிலயும் ஹீரோயின் வாட்டர் டேப்பா தான் இருக்குதுங்க” என்று சலித்தவள், ‘தான் எப்போதாவது அழுதிருக்கிறோமா?’ என்று யோசித்தாள்.
அவள் அழுததாக நினைவே இல்லை.
“அந்த சித்தாரா அழுதுருப்பாளோ?” என்று கண் மூடி யோசிக்க, அழுதிருந்தாள்.
விக்ரமும் சித்தாராவும் காதலிக்க ஆரம்பித்து, அன்பை பகிர்ந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
திடீரென ஒரு நாள், விக்ரம் அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றான். அன்று அவனுக்கு பிறந்தநாள் என்று கூறியதும், சித்தாரா அதிர்ந்து போனாள்.
“இத முதல்லயே சொல்லலாம்ல? நான் எந்த கிஃப்ட்டும் வாங்கல” என்று சித்தாரா சினுங்க, “நான் கேட்குறத கொடு போதும். கொடுப்பியா?” என்று கேட்டான்.
“சரி கேளுங்க”
“சத்தியமா?”
“சரியில்லயே.. என்ன கேட்க போறீங்க?”
“உன்னால முடியாதத கேட்க மாட்டேன்”
அவன் வார்த்தையை நம்பினாள். அவனை அவள் எப்போதுமே நம்பினாள். அதனால் கேட்ட சத்தியத்தை கொடுத்து விட்டாள்.
“சரி சத்தியம். கேளுங்க” என்றதும், “இப்ப இந்த நிமிஷம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டு வைத்தான்.
சித்தாரா அதிர்ந்து போய் சில நொடிகள் நின்று விட்டு, உடனே சிரித்தாள்.
“விளையாடாதீங்க. எதுல எல்லாம் விளையாடுறதுனு இல்லையா?” என்று கேட்க, விக்ரமின் முகம் தீவிரமாக இருந்தது. அதில் அவளது சிரிப்பு குறைந்தது.
“ஆர் யூ சீரியஸ்?” என்று கேட்க, தலையாட்டினான்.
“இப்பவே இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா நீ எப்ப சரினு சொல்லுறியோ அப்போ வாழலாம். உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் சொல்லிட்டு” என்று உறுதி கொடுத்தான்.
சித்தாராவிற்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால், சத்தியம் செய்து விட்டவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“தாரா.. உனக்கு பிடிக்கலயா?”
“அப்படி இல்ல. சடன்னா கல்யாணம் பண்ணிக்கலாம்னா எப்படி? என்னைக்கோ ஒரு நாள் கல்யாணம் பண்ணிப்போம் தான். குடும்பத்து முன்னாடி.. எல்லாரு கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கி.. அப்படி நினைச்சிருந்தேன். ஆனா.. திடீர்னு கோவில்ல” என்று தடுமாறி பேச, அவளை ஒரு இடத்தில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான்.
அவளது கையைப்பிடித்துக் கொண்டு எதிரே பார்த்தபடி இருந்தவன், சில நிமிடங்கள் வரை பேசவே இல்லை. பிறகு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, “கிளம்பலாமா?” என்று எழுந்து விட்டான்.
அவன் முகம் முழுவதும் ஒரு வேதனை. அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அவளை சமாதானம் செய்யவோ வற்புறுத்தவோ இல்லை. அவளது பேச்சை ஜீரணித்துக் கொள்ள தான் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தான்.
அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தவள், “பண்ணிக்கலாம்” என்று சம்மததித்து விட்டாள்.
விக்ரம் சட்டென திரும்பி பார்த்தான்.
“என்ன சொன்ன? திரும்ப சொல்லு?”
“கல்யாணம் பண்ணிக்கலாம். தாலி வாங்கிட்டு வாங்க” என்று விட்டாள்.
அது கோவிலாக இல்லை என்றால், கட்டிப்படித்து முத்த மழை பொழிந்திருப்பான் போலும். அவனது கை பரபரத்ததும், அதை அவசரமாக மூடி தன்னை கட்டுப்படுத்தியதும், அவளது விழிகளில் விழத்தான் செய்தது. அதில் அவளுக்கு வெட்கமும் வந்தது.
“ஒரே நிமிஷம். வந்துடுறேன்” என்று வேகமாக சென்று, தாலியை வாங்கி வந்தான்.
அது கோவில் மரத்தில் கட்டப்படும் தாலி. திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டி, கன்னிப் பெண்கள் மரத்தில் கட்டும் தாலி. அதை வாங்கிக் கொண்டு வந்தான். வெறும் மஞ்சள் கிழங்கு தான் அதில் இருந்தது.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பணக்காரன் அவன். ஊருக்குள் பெரிய பணக்காரரின் மகள் அவள். வெறும் மஞ்சள் கிழங்கை கட்டி, யாருமே இல்லாமல் கடவுள் சன்னிதானத்தில் மனதார வேண்டிக் கொண்டு, தாலியை கட்டி மூன்று முடிச்சிட்டான். குங்குமத்தை வைத்ததும், சித்தாராவிற்கு உள்ளே குறுகுறுப்பாய் இருந்தது. ஆனாலும் சந்தோசமாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.
அப்போது அதில் பெரும் தவறு எதுவும் தெரியவில்லை. அடுத்த இரண்டு நாட்களில் கண்ணீர் வடித்த போது தான் தவறின் வீரியம் புரிந்தது.
தொடரும்.
