ராஜா ராணி 1

Loading

கதிரவன் கண்ணை முடி துயில் கொள்ள நிலவோ தனியாய் தூங்கி விட்ட பகலவனை நினைத்து வானத்தில் காய தொடங்கி இருந்தது . எத்தனையோ நட்சத்திர கூட்டம் தாங்கள் உடன் இருப்பதாக கண்சிமிட்டி உணர்த்திய போதும் பகலவன் சென்ற திசையை மட்டுமே நோக்கி சென்றது காதலனை பிடித்து விடும் நோக்கத்தில். உலகம் தொடங்கிய காலம் தொட்டு இந்த காதலர்களின் காதல் விளையாட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களுக்கு தான் அதை ரசித்துப் பார்க்க நேரம் இல்லை.

ராமின் காரும் அதை கவனியாமல் அவன் கையில பறந்து கொண்டிருந்தது. ஒரு திருமணத்தின் வரவேற்புக்கு சென்று திரும்பி கொண்டிருந்தான். மாலை மயங்கிய அந்தப்பொழுதின் குளுமையை அவன் அனுபவித்ததாக தெரியவில்லை. மாறாக ஒரு இறுக்கத்துடன் இருந்தான். சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்தவை அப்படி. சரியாக வரவேற்பு நிகழ்வுகள் தொடங்கும் போது அவன் கார் அந்த

ஹோட்டலில் நுழைந்தது. காரை விட்டு இறங்கி மணமக்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசை கையில் எடுத்தவன் அங்கிருந்த பணியாளரிடம் காரை பார்க் செய்ய சாவியை கொடுத்து விட்டு உள்ளே சென்றான்.

“வாங்க வாங்க வாங்க ராம் வாங்க” என்று பலமான வரவேற்பு வைத்தவர் அன்றைய வரவேற்பு நடக்கும் மணமகளின் தந்தை.

சின்ன தலையசைப்பில் அதை ஏற்றுக்கொண்டவன், “நல்ல இருக்கீங்களா சார்? சாரி கல்யாணத்திற்கு வர முடியல” என்று ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு இரண்டு வார்த்தையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

பாவம் அவரும் அடுத்து வருபவர்களை வரவேற்க வேண்டுமே. இடத்தை காலி செய்து உள்ளே சென்று அமர்ந்தான். மணமகளின் தந்தை அவனுடைய தொழில் வட்டாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்.

மணமக்கள் மணமேடையில் தோன்ற சுற்றி இருந்த நண்பர்களின் சத்தம் அந்த ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலை ஒரு கை பார்த்தது. கேலி கூச்சலின் நடுவில் மாட்டிக் கொண்ட மணமக்களும் அதை வெறுத்தாக தெரியவில்லை. சந்தோசமாகவே நண்பர்களின் கேலிக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தனர். பரிசுகளை சிலர் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்ப வந்ததும் வராததுமாய் முதலில் சென்று பரிசை கொடுக்க ராமிற்க்கு விருப்பம் இல்லை. அவனுக்கு முன் வந்தவர்கள் கொடுக்கட்டுமே என்ற எண்ணத்தில் அமர்ந்து இருந்தவன் அப்போது வாசலில் சலசலப்பு கொஞ்சம் அதிகமாக கேட்க பார்வையை அங்கு திருப்பினான்.

அங்கு வந்து கொண்டிருந்தவளை பார்த்து ராமின் முகம் இறுகியது. “இவ வருவா னு தெரிஞ்சா முதல்லையே கொடுத்துட்டு போயிருப்பேன் ” என்று நினைத்த படி அவளின் முகத்தை பார்க்க அவளும் இவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவளும் அவனை எதிர் பார்க்கவில்லை என்பதை அவள் முகத்திலே தெரிந்து கொண்டான்.

ராம் யோசனையில் அமர்ந்து இருக்க மணமகளின் தந்தை அவனை மேடைக்கு அழைத்து சென்றார். அவன் மேடையேறும் அதே நேரம் இன்னொரு புறம் அவளும் ஏறினாள் மணமகனின் தந்தையோடு. மணமகனின் தந்தை அவளது உறவினர்.

இருவரும் இதை எதிர் பார்க்கவில்லை.  ஆனால் அதற்காக ஒருவர் இன்னொருவருக்கு விட்டு கொடுத்து இறங்கவும் இல்லை. பரிசை கொடுத்து விட்டு மணமகனின் பக்கம் ராம் நிற்க அவள் மணமகளின் பக்கம் நின்று கொண்டாள். புகைப்படம் எடுத்து விட்டு “சாரி மேரேஜ்க்கு வர முடியல” என்று இருவரும் ஒரே குரலில் சொல்ல அடுத்த நொடி இருவரும் அடுத்தவரை பார்த்தனர்.

அவன் வருவான் என்று அவளும் அவள் வருவாள் என்று அவனும் திருமணத்தை தவிர்த்து வரவேற்பு க்கு வர முடிவு செய்து இருந்தனர். அதை புரிந்து கொண்ட ராமின் முகத்தில் நக்கல் சிரிப்பு வந்தமர்ந்தது . அவளுக்கோ “ஐயோ” என்று இருந்தது …. அவன் சிரிப்பை பார்த்து.

மணமக்களை வாழ்த்தி விட்டு இருவரும் ஒன்றாகவே கீழிறங்கினர். அந்நேரம் ஒருவர் “மிஸ்டர் அன்ட் மிஸஸ் ராம் . வாங்க வாங்க சாப்பிட்டு போகலாம்” என்று அழைக்க யுவராணி இப்போது நக்கலாக ராமை பார்த்தாள். அவன் அதை திரும்பி பார்த்தால் தானே “இல்ல சார் எனக்கு இப்போ ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு . நம்ம வீட்டு பங்சன் இதுல நீங்க சொல்லி தான் சாப்பிடனுமா என்ன… வேலை இருக்கதால தான் கிளம்புறேன்.” என்று நாசுக்காக அவரிடம் பேசியவன் மறந்தும் யுவராணி யை சேர்க்காமல் “நான்” என்று மட்டுமே பேசி முடித்தான். யுவராணிக்கு கோபம் லேசாக எட்டி பார்க்க அவள் சிறு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வர…. ராமும் உடன் வர இருவரும் ஒன்றாகவே நடந்து வெளியில் வந்தனர். இடையில் பார்த்து விசாரித்த எல்லோரையும் அழகாக தவிர்த்து விட்டு வெளியில் வந்தவர்கள் இருவரையும் அவரவர் கார் நிறுத்தி இருக்கும் இடத்துக்கு பணியாளர் அழைத்து செல்ல இருவரும் பிரிந்தனர்.

ஆனால் அவர்கள் காரோ அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு இருக்க மீண்டும் சந்திக்கும் தருணம்…..

இருவரும் அடுத்தவரின் காரை பார்த்தாலும் நிமிர்ந்து காருக்கு உரிமையாளரை பார்க்காமல் தவிர்த்து காரில் ஏறி அமர்ந்தனர்.

அந்நேரம் யுவராணியிடம் மணமகனின் தந்தை எதோ பேச வர ராம் முதலில் கிளம்பி சென்று விட்டான் தனது ஜாகுவார் எக்ஸ்.எஃப் ல் .

கை காரை ஓட்டிக்கொண்டு இருக்க ராமின் மனம் யுவராணி யிடம் இருந்தது. எப்போதும் போல் அவளின் உடை அவளுக்கு பொருத்தமாக அமைந்து இருந்த போதும் ஏதோ கூடுதலாக அதில் தோன்றியது. யோசித்தவனுக்கு பளிச்சென்று விளங்கியது காலர் வைத்த அவளது சல்வார். தாலி அவள் கழுத்தில் இருப்பது தெரியா வண்ணம் அணிந்து இருக்க வேண்டும். இவ்வளவு நேரம் இல்லாத குறுகுறுப்பு இப்போது அவனுக்கு தோன்றியது. “தாலியை இன்னும் அணிந்து இருப்பாளா?” அறிந்து கொள்ள மனம் விளைந்த போதும் எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியவில்லை. கார் கண்ணாடியை கீழிறக்கி விட்டு இயற்கை காற்றை சுவாசித்தபடி சென்றவன் மனதில் மீண்டும் யுவராணியின் நினைவுகளே.

எப்போதும் அவள் அணியும் உடை அவளுக்கென்று அளவெடுத்து தைக்கப்படும் . அதில் ஆடம்பரம் இருக்காது . அவள் அழகு மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் உடைகள் அவை. அவள் ஒன்றும் சாதாரண பெண் இல்லையே. ஆட்டோ மொபைல் உலகில் முடிசூடா மன்னரான சிதாராமனின் ஒரே புதல்வி. அதற்கேற்ப யுவராணி ஒரு இளவரசியாக தான் திகழ்ந்தாள். ஆடம்பரத்தை காட்டாமல் ஆபாசமாக இல்லாமல் பந்தமாக பொருந்தும் உடையில் அதற்கு பொருத்தமாக வைர நகைகள் அவளுக்கு அழகை அள்ளி கொடுக்கும். அவள் அணிந்து இருந்த சல்வார் பட்டிகாடு என்று ஒதுக்கிவிட முடியாத படி விலையுயர்ந்ததே. இது தான் இவளிடம் குழப்பம் . தமிழ் நாட்டின் மகள் என்று எண்ணும் அளவிற்கு அவள் உடை பழக்கம் இருந்தாலும் சில பல விசயங்களில் வெளிநாடு சென்று படித்த பழக்கமும் தென்படும்.

யுவராணி பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்று நினைத்து கொண்டே சென்றவனின் கை தன்னிச்சையாக அவன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்தது.

*.*.*.*.*.*.

ஹோட்டலில் இருந்து தன் வேய்ரானில் கிளம்பிய யுவராணிக்கும் ராமின் நினைவு தான் . “இன்று இவர் வருவார் னு ஏன் யோசிக்காம போனேன்?” என்று நொந்து கொண்டாள். அவனை பற்றி நினைத்து பார்க்க அவளுக்கு எதுவும் இல்லை. திருமணம் முடிந்ததில் இருந்து இன்று வரை ராம் ஒரு நல்ல நண்பனாக மட்டுமே இருந்தான். கணவன் என்ற எண்ணம் அவளுக்கு வரும் அளவு நடந்து கொண்டதில்லை . கடைசி சில சம்பவங்களை தவிர. சேர்ந்து இருந்த ஆறு மாதமும் சரி இப்போது பிரிந்து இருக்கும் ஐந்து மாதமும் சரி அப்படி ஒன்றும் அவளை அவன் பாதித்தது இல்லை. எப்போதும் போல் இருந்தவன் முகம் மட்டும் சிரிப்பை தொலைத்தது போல் ஒரு தோற்றம் அவளுள். .

வீடு வந்து சேர்ந்த இருவரும் தங்களது வேலையில் மூழ்கி போயினர். இப்படி இருக்கும் இவர்களை சேர்த்து வைக்க ஆறு மனங்கள் சேர்ந்து திட்டம் தீட்டுவதை பற்றி அறியாமல்.

*.*.*.*.*.*.*.*

மாலை நேரம் வேலை முடிந்து , பள்ளி முடிந்து என வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தவர்கள்,  வீட்டிலிருந்து மாலை நேரத்தை அனுபவிக்க வெளியே கிளம்பியவர்கள் என பலர் சாலையில் அங்குமிங்கும் சென்று கொண்டிருக்க , நெரிசலில் சிக்காமல் எப்படியோ தப்பித்து வீடு வந்து சேர்ந்தாள் அனிதா. வேலை முடிந்த வீட்டிற்குள் நுழைந்தவளை தடுத்தார் எதிர் வீட்டு அபூர்வா மாமி. அவரின் அழைப்பில் நின்றவள் “சொல்லுங்க மாமி” என்று புன்னகையுடன் கேட்க “ஏன்டி மா இப்படி களைச்சு போய் வந்துருக்க” என்று அக்கறையோடு வினவ “எல்லாம் வேலை டென்சன் மாமி” என்று பதில் சொன்வளின்முகம் சோர்ந்து இருந்தது. “உன் தோப்பனார் இருக்கச்ச நல்லா கவனிச்சுண்டார். இப்போ கவனிக்க ஆளு இல்லாம இப்படி இளச்சுண்டே போற.. செத்த இரு” என்று அவளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றவர் கையில் சின்ன பாத்திரத்தோடு வந்தார். “பஜ்ஜி போட்டேன்டிமா.. கை கால அலம்பின்டு மறக்காம சாப்பிட்டுடு. அடுப்புல வேலை இருக்கு” என்று அவள் கையில் திணித்து விட்டு உடனே நகர்ந்தார். நின்றால் அனிதா திருப்பி கொடுத்து விடுவாள் என்பது அவருக்கு தெரியாதா என்ன?

அவர் அன்பில் கரைந்த கண்களை இமை தட்டி சரி செய்து விட்டு வீட்டை திறந்து உள்ளே நுழைந்தாள். சில மாதங்களாக தாக்கும் தனிமை இப்போதும் அவளை தாக்கியது. தந்தை இல்லாமல் வீடு களையிழந்து கிடக்க சோர்ந்த மனதை திடப்படுத்திக் கொண்டு தன் வேலைகளில் கவனமானாள்.. மாமி கொடுத்த பஜ்ஜியையும் அவர் பாசத்தையும் வீணாக்க மனம் இல்லாமல் சாப்பிட்டவளுக்கு மீண்டும் தந்தையின் நினைவில் கண்ணை கரித்தது. அவர் இருக்கும் வரையில் சின்ன வகையிலாவது ஏதேனும் சிற்றுண்டி இருந்து கொண்டே இருக்கும். அவரின் மறைவு பெரிய இழப்பாக இருந்தாலும் அபூர்வா மாமியும் வெங்கடாஜலபதி மாமாவும் எதையாவது திணித்து சாப்பிட வைத்து விடுவர். உலகில் இப்படியும் சிலர் இருப்பது அதிசயமாக இருக்கும் அனிதா விற்கு. அவள் தங்கி இருக்கும் வீடு அவர்களுடையது தான். குடித்தனம் வந்ததிலிருந்து இன்று வரை அவர்கள் காட்டும் பாசம் அவளை மலைக்க வைக்கும். தந்தை இறப்பில் அமிழ்ந்து போனவளை தேற்றி தந்தையின் கடைசி காரியங்களை விசாரித்து அறிந்து அவர்களே உடனிருந்து செய்ததை எப்படி மறப்பாள். மனம் எங்கெங்கோ சுற்றி கொண்டு இருக்க தட்டில் இருந்த பஜ்ஜி காலியானதை உணர்ந்து எழுந்து வேலைகளை கவனிக்க சென்றாள்.

*.*.*.*.*.*.*.*.

காலை நேர பரபரப்பு என்பது அந்த வீட்டில் மருந்துக்கு கூட இல்லை. சத்தம் என்பது அவர்கள் வீட்டு பூஜையறையில் இருந்து மட்டும் மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது. நேற்று எடுத்த முடிவு நல்லபடியாக நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அமர்ந்து இருந்தார் பரிமளம். அவர் பூஜையை முடித்து விட்டு வெளியேறும் அதே நேரம் தன் அறையில் இருந்து வெளியில் வந்தார் ராதாரவி.

ராதாரவியின் தந்தை தனக்கு பிடித்த சினிமா நடிகரின் மகன் பெயரையே தன் மகனுக்கு வைத்தார்… அது ஒரு தனிக்கதை…

பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் ராதாரவி என்றும் பெண்ணாக இருந்தால் அதில் பாதி ராதா என்றும் தான் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சிவஞானம். (ராதாரவியின் தந்தை). சாதாரணமாக மாமியார் (சிவஞானத்தின் அன்னை) மருமகளுக்கு (மனைவி) எந்த விசயத்திலும் ஒத்து போகாது. ஆனால் பெயர் விசயத்தில் இருவரும் ஒன்றாக எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினர்.

சிவஞானத்தின் அன்னை மகனிடம் பேசாமல் இருந்து போராட மனைவி அமுதவல்லியோ பேச்சு மட்டுமல்லாமல் சிவஞானம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேலையையும் தொட்டு கூட பார்க்கவில்லை. இவர்களுடன் போராடினாரே ஒழிய பெயரை மட்டும் மாற்றவில்லை.

அமுதா ராமன் என்று பெயர் வைக்க நினைத்து முடியாமல் போனதால், கூப்பிடும் போது ராமா என்று கூப்பிட்டு தன் எதிர்ப்பை காட்டினால் , சிவஞானத்தின் அன்னை ராணி கண்ணா என்று அழைப்பார்.

ராதாரவியை ராதா என்று அழைப்பது சிவஞானம் மட்டுமே. ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கும் போது சிவஞானம் ‘ராதாரவி’ என்று பள்ளியில் கொடுத்து விட அதற்கு மேல் போராடி பயன் இல்லை என்ற நிலைமைக்கு வந்தனர் மாமியாரும் மருமகளும்.

அதன் பின் தான் சரியாக பேச ஆரம்பித்தனர். ஆனாலும் ராதாரவி ஒரு குழந்தையாகவே இருந்து விட்டார். வேறு குழந்தை உண்டாக வில்லை என்றாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடும்ப வாரிசாக ராதா இருப்பதே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு .

சிவஞானம் தன் தம்பிகளுடன் இருக்க முடியாமல் சொத்தை பிரித்து எடுத்துக் கொண்டு ஊட்டியில் எஸ்டேட்டை வாங்கி செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் அடிக்கடி அன்னையை பார்க்க மட்டுமே சொந்த ஊர் சென்று வருவார்.

எஸ்டேட்டில் தன் உழைப்பை காட்டி பொருளாதாரத்தில் நல்ல நிலையை எட்டி விட்டார். ஆனால் அவர் மகன் ராதாரவிக்கு அவர்களின் எஸ்டேட்டில் எந்த பற்றும் இல்லை. அவரின் எண்ணம் சிறந்த ஆசிரியராக வேண்டும் என்பதே. அதற்கு முயன்று கல்லூரி பேராசியராகவும், சில காலங்களில் நல்லாசிரியர் விருதும் வாங்கிவிட்டார்.

தந்தை இருக்கும் வரை தன் பணியை பார்த்துக்கொண்டு இருந்தவர் அவரின் மறைவுக்குப் பின் எஸ்டேட்டின் பொறுப்பு அவரின் கீழ் வர தடுமாறி போனார். அப்போது அவருக்கு கை கொடுத்தது அவரின் மூத்தமகன் ராஜாராம் தான் . பதினெட்டு வயதில் படிப்போடு தொழிலையும் கவனித்துக் கொண்டான்.

ராதாரவி ,தந்தையின் பெயரைக் கொண்டும் சொத்துக்களை கொண்டும் இல்லாமல் தனியாகவே கல்லூரி ஒன்றை தொடங்கி இருந்ததால் அதன் பொறுப்பை பார்த்துக் கொள்ள ராம் எஸ்டேட்டை கவனித்தான். தொழிலில் வெற்றி பெற்ற தன் மகன் வாழ்வில் தோற்றுவிட கூடாது என்பதே ராதாவின் வேண்டுதலும்.

மனைவி பரிமளம் கொடுத்த தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டவர் குங்குமத்தை எடுத்து பரிமளத்தின் வகிட்டில் வைத்து விட்டு , ‘எல்லாம் சரியாகும்’ என்பது போல் தலையை வருடிவிட்டு தோட்டத்து பக்கம் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

பரிமளமும் ஒரு பெருமூச்சுடன் அடுத்த வேலையை கவனிக்க சென்றார்.

Leave a Reply