சித்திரமே 11

Loading

“ஆண்ட்டி எங்க?” என்று அதிகாரமாக சித்தாரா கேட்க, அங்கிருந்தவர்கள் அவளது உடையை பார்த்து வந்த அதிர்ச்சியிலிருந்து வேகமாக மீண்டனர்
அவளது உடையில் அதிர்ந்தவர்கள், அதிகாரத்தில் பம்மினர்.

“பின்னாடி கார்டன்ல இருப்பாங்க மேடம்” என்று ஒரு பெண் கூறியதும், வேகமாக திரும்பிச் சென்றாள்.

நடக்கும் போது பார்வை வீட்டுப் பின் பக்க கதவைத் தேடியது. கண்ணாடி கதவுக்கு வெளியே இயற்கை காட்சி தெரிய, வேகமாக அதை நோக்கி நடந்தாள்.

கதவை திறந்து இறங்கியவளுக்கு, எந்த பக்கம் செல்வதென்று யோசனை வந்தது. காற்றில் அல்லியின் சத்தம் கேட்க, அந்த பாதை நோக்கி நடந்தாள். வழியில் இருந்த அத்தனை பேரும் அவளைப்பார்த்து வாயைப்பிளந்தனர்.

அவள் அதை கண்டு கொள்ளாமல் அங்கே இருந்த மரங்களை பார்த்தாள். எல்லாமே பழம் தரும் மரங்கள். விதவிதமாக ஒரே இடத்தில் வளர்ந்து இருந்தது. இல்லை வளர்த்து இருந்தனர். மாமரம் கண்ணில் விழ நின்று விட்டாள்.

‘மாம்பழம் இருக்குமா? இன்னும் சீஸன் வரலையோ?’ என்று தேடிக் கொண்டிருக்க, “நல்ல பழமா பார்த்து பறி” என்று அல்லியின் குரல் கேட்டது.

யாரிடமோ பேசுகிறார் என்று புரிய, உடனே அந்த பக்கம் சென்றாள்.

கொய்யா மரத்தில் இருந்த கனிகளை ஒருவன் பறித்துக் கொண்டிருக்க, தூரத்தில் தென்னை மரத்தில் ஏறி ஒருவன் அமர்ந்து இருந்தான்.

“ம்மா.. எத்தனை வெட்ட?” என்று மரத்திலிருந்தே குரல் கொடுக்க, “மூணு வெட்டு போதும்” என்று பதில் சொன்ன அல்லி திரும்பி பார்த்து அதிர்ந்து நின்றார்.

நேற்று பட்டுச்சேலையில் பந்தமாக வந்தாள். இரவு சுடிதாரில் வந்தாள். இப்பொழுது ஜீன்ஸில் வருகிறாள். அடுத்து? நினைத்து பார்க்கவே தலை சுற்றியது.

“குட் மார்னிங் ஆண்ட்டி” என்று அருகே வந்து நின்றதும், அல்லி பார்வையை மாற்றிக் கொண்டார்.

“குட் மார்னிங் மா”

“என்ன பறிக்கிறீங்க?”

“பழங்கள்.. உனக்கு என்ன பழம் பிடிக்கும்?”

“எனக்கு எல்லாமே பிடிக்கும். மார்னிங் ரூம்க்கே காபி அனுப்புனதுக்கு தாங்க்ஸ். விது மார்னிங் பால் எல்லாம் குடிக்க மாட்டான். அதுனால அத எடுத்துட சொல்லுங்க.”

“ஓஓ.. சரிமா”

“சாப்பிட்டீங்களா?”

“இன்னும் இல்லமா. இத முடிச்சுட்டு தான் சாப்பிடனும். உனக்கு பசிக்குதா? சாப்பிடு போ”

“நீங்களும் வாங்க. சேர்ந்தே சாப்பிடுவோம்” என்றவள் மற்றவர்களை பார்க்க, அவளை வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென திரும்பி நின்றனர்.

அவர்களது பார்வையை கவனித்த அல்லி முறைத்து விட்டு, “இதெல்லாம் கொண்டு வந்து உள்ள வைங்க” என்று அதட்டி விட்டு, சித்தாராவோடு நடந்தார்.

“விளக்கு ஏத்துறியாமா? நேத்தே சொல்லலாம்னு இருந்தேன். நடந்த பிரச்சனையில நீங்க மேல போகவும் விட்டுட்டேன். இப்ப…” என்று நிறுத்த, “பண்ணலாம் ஆண்ட்டி.” என்றாள்.

உடனே அல்லிக்கு முகம் மலர்ந்து விட்டது. இருவரும் வீட்டுக்குள் நுழைய, மகனை உணவு மேசை நாற்காலியில் அமர வைத்து விட்டு நிமிர்ந்த விக்ரம், அதிர்ந்து போய் பார்த்தான்.

அவளது சிகை அலங்காரமும் உடை அலங்காரமும் அவனை மூச்சடைக்க வைக்க, அவள் விக்ரமை பார்க்கவில்லை. அல்லியிடம் பேசியபடி வந்து கொண்டிருந்தாள்.

“ம்மா…” என்று விது கத்த, உடனே மகன் பக்கம் திரும்பினாள்.

“ம்மா..” என்று விது கையாட்டி சிரிக்க, “இரு அம்மா இப்போ வர்ரேன்” என்று கூறி விட்டு அல்லியோடு வேறு பக்கம் நடந்தாள்.

அருகே நின்றிருந்த கணவனை அவள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அல்லி பார்த்து விட்டார். அவருக்கு சங்கடமாகி விட, பார்வையை தழைத்துக் கொண்டு வேகமாக பூஜை அறை இருக்கும் பக்கம் சென்றார்.

விக்ரம் அவள் சென்றப்பிறகுதான் சுயநினைவை அடைந்தான்.

‘இது தான் அந்த புது டிரெஸ்ஸா?’ என்று நினைத்தவனுக்கு தன்னை மீறி புன்னகை வந்தது.

அல்லி பூஜை அறைக்கதவை திறந்து விட்டு, “உள்ள வாமா” என்றதும் சித்தாராவின் பார்வை அங்கே நடுநாயகமாக இருந்த பெண்ணின் படத்தில் விழுந்தது.

கிட்டத்தட்ட விசாகா ஜாடையில் இருந்தார் அவர். ஆனால் பழைய கால பாணியில் சேலை உடுத்தி, தலைவாரி, உதட்டில் ஒரு முறைவலோடு இருந்தார்.

“அக்கா… உன் மாமியார். இவங்கள எல்லாம் பெத்தவங்க. தினமும் பூ போட்டு விளக்கு ஏத்துவேன். உனக்கு பிடிச்சதுனா நீ கூட செய்யலாம். வேணாம்னா பிரச்சனை இல்ல.‌ புது விளக்கு இருக்கு. துடைச்சு வைக்கிறேன். ஏத்துமா” என்றவர் வேகமாக அங்கே இருந்த பெட்டியை எடுத்து, உள்ளே வைத்திருந்த பல புது விளக்குகளில் ஒன்றை எடுத்து துடைத்து எண்ணெய் ஊற்றி திரியிட்டார்.

அது மருமகளுக்காக அவர் வாங்கி வைத்தது. இனி பயன்படாது என்று ஓரம் கட்டியதும் கூட. இன்று அது பயன்படப்போகிறது என்றதும் உள்ளம் பூரிக்க துடைத்து வைத்தார்.

சித்தாரா அங்கிருந்த அத்தனை படங்களையும் கடனே என்று பார்த்தாள்.

‘கடவுள்.. ஆக்ட்சுவலி இந்த கதை உலகத்தோட கடவுள் வெண்பனில? இங்க நிஜ உலகத்தோட கடவுள வச்சுருக்காங்க? வெண்பனி ஃபோட்டோ ஒன்னு கிடைச்சா வச்சு கும்புடலாம்’ என்று கேலியாக நினைத்தபடி நின்று இருந்தாள்.

விளக்கு ஏற்ற தயாரானதும் அவள் கையில் தீப்பெட்டியை கொடுத்து விட்டு, “ஏத்து மா” என்று அருகே நின்றார்.

அவளும் சொன்னதைச் செய்தாள். உலகத்திலேயே ஏன் கதை உலகத்திலேயே ஜீன்ஸ் க்ராப் டாப் அணிந்து, அல்ட்ரா மார்டனாக விளக்கேற்றியவள் இவள் மட்டும் தான்.

அல்லி கண்ணை மூடி சாமி கும்பிட, அதைப்பார்த்து தானும் நின்றவள் எதையும் வேண்டிக் கொள்ளவில்லை. கடமையை செய்து விட்டு அவரோடு வெளியே வந்தாள்.

உணவு மேசையில் அவளை அமரச்சொல்லி விட்டு அல்லி நகர, “என்ன கண்ட்ராவி இது” என்று வேதா கத்தினாள்.

மூவரும் அவளை திரும்பி பார்த்தனர். விறுவிறுவென அங்கு வந்த வேதா, சித்தாராவின் உடையை உக்கிரமாக பார்த்தாள்.

“என்ன டிரெஸ்டி இது?”

“அத நீ ஏன்டி கேட்குற?”

“விக்ரம்…” என்று அவள் பல்லைக்கடிக்க, மகனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தவன் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தான்.

“இவ என்னை இவ்வளவு தடவ டி சொல்லுறா கேட்க மாட்டியா நீ?”

“நீ எத கொடுக்குறியோ அத தான் அவ திருப்பிக் கொடுக்குறா. இடையில நான் என்ன கேட்க?” என்று அலட்டாமல் பதில் வந்தது.

“இது கொஞ்சம் கூட சரி இல்ல. நீ கொடுக்குற இடத்துல இவ ஆடுறா” என்று வேதா கத்தினாள்.

“ஃப்ரி சோனு பார்த்துட்டு போ” என்று சித்தாரா கூறியதும் விக்ரமுக்கு சிரிப்பு வந்து விட்டது.

மகன் பக்கம் திரும்பி சிரிப்பை அடக்கினான்.

“உன் ஆட்டத்த பார்க்குறது தான் என் வேலையா? இதெல்லாம் ஒரு ட்ரெஸ்னு போட்டு ஆடுற. இதெல்லாம் கேட்கமாட்டியாடா?” என்று சித்தாராவிடம் ஆரம்பித்து, அவளது பார்வை மாறவும் வேகமாக தம்பியிடம் தாவி இருந்தாள்.

“என் ட்ரஸ்ஸ பத்தி எவன் என்ன கேட்குறது? நீ தான் கிழவி.. சேலைய கட்டிட்டு சுத்துவ. நான் ஏன் இப்படி அழுது வடியுற சேலையில சேத்தனும்? ஏன் விது அம்மாவுக்கு இந்த ட்ரெஸ் நல்லா இருக்குல?” என்று மகனிடம் வந்தாள்.

“சூப்பர் மா” என்று வேகமாக உணவை விழுங்கி விட்டு அவன் சொல்ல, மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்த விக்ரமுக்கு புன்னகை அரும்பியது.

“நீ தான்டா என் செல்லம்” என்று கொஞ்சி விட்டு, தட்டில் இருந்த உணவை அள்ளி தானும் மகனுக்கு ஊட்டி விட்டு, சாப்பிட ஆரம்பித்தாள்.

அங்கு நின்றிருந்த வேதாவின் இதயம் சுக்கலாக சிதறிய சத்தம் யார் காதிலும் விழவில்லை. வேதாவை டி என்று அழைத்ததை கூட‌ அவளால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் கிழவி என்று அழைத்து விட்டாளே?

எத்தனை போராட்டத்தோடு தன் இளமையை காக்கிறாள். இவளானால் வந்ததிலிருந்து அவளை கிழவி ஆக்கிக் கொண்டிருக்கிறாளே?

அதிர்ச்சியில் அவள் நிற்க மற்றவர்கள் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். அல்லி வர அவரையும் சித்தாரா அமரச்சொன்னாள்.

“நீயும் உட்கார் வேதா” என்று அல்லி கூறியதும் தான், வேதா அதிர்ச்சியிலிருந்து மீண்டாள்.

“இப்ப சாப்பாடு ஒன்னு தான் கேடு. இந்த ட்ரஸ்ஸ பார்த்து நீயும் எதுவும் சொல்லல தான?” என்று எகிறினாள்.

சித்தாரா ஆச்சரியமாக பார்த்தாள்.

“நீயுமா? ஆண்ட்டி… இவளுக்கும் உங்களுக்கும் ஒரே வயசா?” என்று கேட்டு வேதாவின் கௌரவத்தை நொறுக்கித்தள்ளினாள்.

விக்ரமுக்கு இப்போது சிரிப்பு வந்தாலும், அக்காவை பார்த்து சற்று பாவமாக இருக்க, மனைவியின் பக்கம் திரும்பினான்.

“அக்கா சித்திய நீ போ வானு தான் பேசும்” என்று விக்ரம் அதட்டல் போல் சொல்ல, சித்தாரா தோளை குலுக்கிக் கொண்டாள்.

விக்ரம் சாப்பிட்டு முடித்துக் கிளம்பி விட, வேதா சாப்பிடமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

சித்தாரா மகனை அல்லியிடம் கொடுத்து விட்டு, வீட்டை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தாள்.

கீழே இருந்த அறைகள் எல்லாம் யாருடையது என்று தெரியவில்லை. பூஜை அறையும் அல்லியின் அறையையும் மட்டும் பார்த்து விட்டுப் படிகளில் ஏறினாள்.

படியில் பக்கவாட்டில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் கண்ணை பறித்தது. ரசித்தபடி மேலே ஏறிச் செல்ல, அங்கு வரிசையாக நான்கைந்து கதவுகள் இருந்தன.

அனைத்தும் பூட்டியிருக்க பால்கனி பக்கம் பார்த்தாள். வரிசையாக அழகுச் செடிகள் இருக்க, ஒரு பெண் அதை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு பராமரித்துக் கொண்டிருந்தாள். மற்றொருவள் அங்கிருந்த தரையை துடைத்துக் கொண்டிருந்தாள்.

சித்தாராவை கவனித்து விட்டு இருவரும் நிற்க, “வேலையை பார்” என்பது போல் கையசைத்து விட்டு அடுத்தமாடிக்கு சென்றாள்.

அங்கும் அறையும் பால்கனியும் இருந்தன. ஆனால் பால்கனியில் வேதா கைபேசியை காதுக்கு கொடுத்தபடி அமர்ந்து இருந்தாள்.

‘இவ கிட்ட பேசுனா மூட் ஸ்பாயில் ஆகிடும்’ என்று சலிப்பாக நினைத்துக் கொண்டு, அடுத்த தளத்திற்கு சென்றாள்.

நேற்று இரவு விக்ரம் அழைத்துச் சென்ற இடம். உடனே நீச்சல் குளம் இருக்கும் பக்கம் சென்றாள். கண்ணாடி கதவை திறந்து உள்ளே செல்ல, தண்ணீரின் மெல்லிய சலசலப்பு காற்றில் மிதந்து வந்தது.

சுத்தமாக இருந்த குளத்தை பார்த்து விட்டு, “ஸ்விம் பண்ணனும். அதுக்கு ஸ்விம் சூட் வாங்கனும்” என்று மனதில் குறித்துக் கொண்டு சுற்றியும் பார்த்தாள்.

மேல் தளம் அந்த நீச்சல் குளத்தை மறைக்கவில்லை. வெயில் நன்றாக தண்ணீரில் பிரதிபலித்தது. அதை பார்த்தவளுக்கு யோசனை வந்தது.

‘இதெல்லாம் வெண்பனி டீடைலா எழுதுமா? இல்ல நார்மலா இங்க இருக்கதா?’ என்று யோசித்தபடி திரும்ப, வேறு ஒரு கதவு கண்ணில் பட்டது.

திறந்தவள் முகம் மலர்ந்தது. அது உடற்பயிற்சி கூடம். சந்தோசமாக உள்ளே நுழைந்தாள். பல உபகரணங்கள் அவளது கண்ணை பறித்தன. அவளது இயல்புக்கு பூவை பார்த்து முகம் மலராமல், டம்பில்ஸை பார்த்து தான் முகம் மலர்ந்தது.

உள்ளே மூவர் எல்லாவற்றையும் துடைத்துக் கொண்டிருக்க, கையை பின்னால் கட்டிக் கொண்டு சுற்றி பார்த்தாள்.

‘வொர்க் அவுட் பண்ணியே ஆகனும்’ என்று நினைத்துக்கொண்டவள் அங்கிருந்ததை ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்தாள்.

மூவரும் வேலை செய்வதை விட்டு விட்டு அவளை பார்க்க, ஒரு கையசைவில் அவர்களை வேலை செய்ய சொல்லிவிட்டு, உபகரணங்களை பார்த்தபடி வெளியேறினாள்.

நேற்று விக்ரமோடு வந்த பக்கம் நடந்தாள். புத்தகங்கள் இருக்கும் அறையை விட்டு விட்டு, அடுத்த அறையை திறக்க பார்க்க பூட்டியிருந்தது.

“பூட்டி வச்சுருக்கானா?” என்று சந்தேகமாக பார்த்து விட்டு, மூன்றாவது அறையைத்திறந்தாள்.

ஹோம் தியேட்டர். பார்த்ததும் அவளது விழிகள் விரிந்தன.

“வாவ்” என்று ரசித்தவள் உள்ளே சென்று ஒவ்வொன்றையும் நிதானமாக பார்த்து விட்டு, வெளியே வந்தாள்.

இனி மிஞ்சி இருப்பது அவர்களது அறை உள்ள தளம் தான். அதற்கும் படியேறிச் சென்றவள், அறைக்குள் நுழைந்தாள்.

நேராக பால்கனி சென்றவள் கீழே பார்த்தாள். புல் தரையில் பந்தை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தான் விதார்த். அவனோடு அல்லியும் நிற்க, திருப்தியோடு கைபேசியை எடுத்தாள்.

தொடரும்.

Leave a Reply