சித்திரமே 12

Loading

“மாம்” என்று பதிந்திருந்த எண்ணை அழுத்திய சித்தாரா, பால்கனி சுவற்றில் சாய்ந்து, கண்ணை மகன் மீது வைத்தபடி கைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

“சித்து.. எப்படிமா இருக்க?” என்று மகாதேவி பேச, “ஃபைன் மா” என்றாள்.

“அங்க அந்த வேதவல்லி எதுவும் பிரச்சனை பண்ணாளா?”

“பண்ணாம  இருப்பாளா? ஆனா அத நான் பார்த்துக்குறேன். நீங்க ஏன் ரிஜிஸ்டர் ஆஃபிஸ்க்கு வந்தீங்க?”

“அத நீ உன் வீட்டுக்காரு கிட்ட கேட்கலயா?”

“உங்கள கேட்டா பதில் சொல்லுங்கமா” என்று சித்தாரா சலிப்பாக சொல்ல, “உங்கப்பா தான் திடீர்னு வந்து சொன்னார்” என்று நிறுத்தினார்.

“என்ன சொன்னார்?”

“நாளைக்கு சித்துவுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம். ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல கையெழுத்து போட போகனும்னு சொன்னார்”

“உடனே‌ நீங்க சரினு சொல்லிட்டீங்களா?”

“இல்ல. முதல்ல உங்கப்பா உனக்கு போன் பண்ணி விசாரிக்கிறதா தான் சொன்னார். ஆனா நீ தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டியாமே.. அப்படியா சித்து? நீ தான் கேட்டியா?”

“ஆமா நான் தான் கேட்டேன். அதுனால தான் நீங்க வந்தீங்களா?”

“இல்லமா. இந்த கல்யாணம் நடக்குறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நான் கல்யாணம் பண்ணுறதே என் புள்ளைக்காக தான். இந்த கல்யாணம் நடக்கலனா பிள்ளைய தூக்கிட்டு போயிட்டே இருப்பேன்னு சொல்லிருக்கார் அவரு”

“சோ?”

“விதுவ அவர் உன் கிட்ட இருந்து பிரிச்சுட்டா? நீ விது மேல உயிரயே வச்சுருக்கனு தெரியும். நீயாவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டுருக்க. எங்களுக்கும் உன்னை கல்யாண கோலத்துல பார்க்கனும்னு ஆசை. அதான் சம்மதிச்சுட்டாரு அப்பா. நாங்களும் வந்தோம்”

‘பிள்ளைய பிரிச்சுருவேன்னு மிரட்டுனானா? பார்த்துக்கிறேன்’ என்று முடிவு செய்தவள், “நீங்க எனக்கு ஃபோன் பண்ண வேண்டியது தான?” என்று கேட்டாள்.

“அப்பா தான் பண்ண வேணாம்னு சொன்னாரு. நான் எதாவது பேசி உன்‌ மனச மாத்திடுவேன்னு.. ஆனா உன் அப்பாவுக்கும் நீ அவர கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல சித்து”

“நான் ஒன்னும் அவன் மேல ஆசைப்பட்டு காதல்ல உருகி கல்யாணம் பண்ணல. என்னை எச்சி இலை மாதிரி யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிஞ்சானே. அதுக்கு அவன் அனுபவிக்க வேணாம்? இப்ப அவன் சொத்து என் கையில. ஆஃபிஸ் பூர்விக சொத்து இல்லாம மத்த எல்லாத்துலயும் என் பேரையும் விது பேரையும் சேர்த்து வச்சுருக்கான். இனி இருக்கு. பார்த்துக்கிறேன்”

“ஆனா.. நான் சொல்லுறேன்னு கோபப்படாத. நீ ஏன் பழசை எல்லாம் விட்டுட்டு வாழ முயற்சி பண்ண கூடாது”

“அதுக்கு அவன் தலைக்கனம் குறையனும்ல? இப்பவும் அவன் எதுக்காகவோ என்னை இங்க கூட்டிட்டு வந்துருக்கான். விசயம் வெளிய வரட்டும். நீங்க ஃப்ரியா விடுங்க நான் பார்த்துக்கிறேன்”

“சரிமா. விது எங்க? என்ன பண்ணுறான்?”

“அவன் விக்ரமோட சித்திக்கூட விளையாடிட்டு இருக்கான்”

“அவங்க எப்படி?”

“ஓரளவு ஓகே தான். வேதா அளவுக்கு இல்ல.”

“சரி பத்திரமா இரு”

“ம்ம். நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு, இன்னும் யோசனையாக இருந்தது.

விக்ரம் எதற்காக திருமணத்திற்கு சம்மதித்தான் என்று?

மகனை பார்த்தாள். அவன் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தான். அல்லி இன்னும் அவனருகில் தான் இருந்தார். அதனால் திருப்தியாக அறைக்குள் வந்தவள், நேற்று பாதியில் வைத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்.

படித்து முடிக்கும் போது சலிப்பாக இருந்தது.

“இதுல என்ன கான்சப்ட் இருக்கு? பாதிக்கதை முழுக்க அந்த ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு மனசு இருக்கும்னே யோசிக்காம அவள அவன் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறான். முதல்ல அவன எதிர்த்து நின்னவ போகப்போக அழுது வடியுறா. அது கூட பரவாயில்ல. அழுதுட்டு இருக்கும் போதே, ஹீரோ அவள பார்த்து சிரிச்சான்னு லவ் பண்ண ஆரம்பிச்சுடுறா. எப்படி முடியும்? அவ்வளவு டார்ச்சர் பண்ணுறவன் ஒரு சைக்கோனு தோனாதா? லவ் எப்படிடா வருது? லவ் பண்ண ஆரம்பிச்சதும் அவன் பண்ண அத்தனை கொடுமையும் மறந்துட்டு, இன்னும் கொஞ்சம் கொடுமை படுத்துனு அவன் காலடில விழுறா. ஹீரோ அவள கடைசி நாலு வரில புரிஞ்சுட்டானாம். கதை முடிஞ்சதாம். இதுல என்ன சொல்ல வர்ராங்க? நம்மல கொடுமை பண்ணா, அத தனியா பார்க்கும் போது தான் கஷ்டம். அவனையே லவ் பண்ணி கால்ல விழுந்துடு. அப்ப கஷ்டமாவே இருக்காதுனா? இப்படி எல்லாமா கதை உலகத்த உருவாக்குறாங்க?”

எரிச்சலில் பேசியவள், அந்த புத்தகத்தை பட்டென மூடி வைத்து விட்டாள். பசியெடுக்க மணியை பார்த்து விட்டு கீழே இறங்கினாள். நேற்று புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்து விட்டு மகனை தேடிச் சென்றாள்.

அவன் தோட்டத்தில் கிடந்த நாற்காலியில் சொகுசாக அமர்ந்து காலாட்டிக் கொண்டே, பாட்டி சொல்லும் கதையை கேட்டுக் கொண்டிருந்தான். அன்னையை பார்த்ததும் இறங்கி ஓடி வந்தான்.

அவனை கையில் தூக்கிக் கொண்டு, “சாப்பிடலாமா? பசிக்கலயா உனக்கு?” என்று கேட்டாள்.

“இல்லயே” என்று விதார்த் கைவிரிக்க, “ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பிள்ளை விளையாடி களைச்சுட்டான்னு ஜூஸ் கொடுத்தேன்மா. இப்ப சாப்பிடலாம். சரியா இருக்கும்” என்றார் அல்லி.

“அப்போ வாங்க. சேர்ந்தே சாப்பிடுவோம்” என்று அழைத்துச் சென்றாள்.

உணவுகள் எல்லாம் சுவையாக இருந்தது. நேற்றைப்போலவே இன்றும் விருந்து உணவு தான். மகன் சாப்பிட்டு முடித்ததும் மடியில் படுத்து தூங்க ஆரம்பிக்க, சோபாவில் அமர்ந்து அவனை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தவள் அல்லியை பார்த்தாள்.

அவர் வேதாவிற்கு உணவு கொண்டு செல்ல உதரவிட்டுக் கொண்டிருந்தார்.

“ஆண்ட்டி”

“என்னமா?”

“இங்க வாங்க” என்று அழைத்தவள் எதிரில் அமரச்சொன்னாள்.

“என்ன விசயம்? விது தூங்கிட்டானா? ரூம்ல படுக்க வைக்கலாமா?”

“கொஞ்ச நேரம் இருக்கட்டும். நீங்க எனக்கு இந்த வீட்ட பத்தி சொல்லுங்க” என்று கேட்க, அவர் அதிர்ச்சியும் குழப்பமுமாக பார்த்தார்.

“விக்ரம் சொல்லலையா?”

“நான் கேட்கல. நீங்க சொல்லுங்க”

சத்தமில்லாமல் பெருமூச்சு விட்டவர், குடும்பத்தை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

“அவர் தான் உன் மாமனார். வேதாச்சலம். பூஜை ரும்ல பார்த்தியே அவங்க சுபலட்சுமி. கல்யாணம் ஆகி மூணு புள்ளையும் பெத்து நல்லா தான் வாழ்ந்துருக்காங்க. வேதா மூத்த மக. அவங்க பாட்டி ஈஸ்வரி, மகன் பேர பாதி எடுத்து வேதவல்லினு வச்சுருக்காங்க. வேதாக்கு நாலு வயசு இருக்கும் போது, விக்ரம் பிறந்துருக்கான். அவங்க தாத்தா பேரு சேனாதிபதிய எடுத்து, விக்ரமசேனானு வச்சுட்டாங்க. மூணாவதா விக்ரமுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது, விசாகா பிறந்துருக்கா.

விசாகாவ அவங்க எதிர்பார்க்கல. அதுனாலயோ என்னமோ விசாகா பிறந்ததுல இருந்து சுபலட்சுமி அக்காவுக்கு நிறைய உடம்பு கெட்டுப்போயிருக்கு. விசாகாவுக்கு மூணு வயசிருக்கும் போது, சுபா அக்கா இறந்து போயிட்டாங்க.

மூணு பிள்ளைங்களையும் வச்சுகிட்டு, ஈஸ்வரி அத்தையாலயும் இவராலயும் கவனிக்க முடியல. அதுவும் சின்ன பிள்ளை விசாகா. வயசுக்கு வரப்போற பொம்பள பிள்ளை வேதானு யார பார்க்க யார விடனு தெரியல.

அப்ப எனக்கு பதினெட்டு வயசு தான். எங்கப்பாம்மா என்னை தவிர இன்னும் ரெண்டு பசங்கள பெத்துருந்தாங்க. பணம் காசு எதுவும் இல்ல. அண்ணனுங்க கொஞ்சம் வளர்ந்ததும் குடும்பத்துல இருந்து பிரிஞ்சுட்டானுங்க. எங்க தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற செலவு தன் தலையில விழுந்துடுமோனு பயம்.

எங்கப்பாவும் அம்மாவும் எதுவும் எனக்குனு சேர்த்து வைக்கல. எங்களுக்கு சாப்பாடு போடவே அவங்க போராடனும். அப்ப தான் ஈஸ்வரி அத்த வந்து என்னை பொண்ணு கேட்டாங்க.

அப்போ என்னை விட வேதாவுக்கு நாலு வயசு தான் கம்மி. எங்கம்மாவுக்கு தயக்கம். ஆனா பணக்கார வீட்டுல மக வாழ்ந்தா போதும்னு, அப்பா சரினு சொல்லிட்டாரு. கல்யாணமும் நடந்துச்சு.”

இடையில் நிறுத்தியவருக்கு அன்றைய நாட்கள் நினைவில் வந்தது. திருமணம் முடிந்த முதல் நாளே வேதாச்சலம் அல்லிக்கொடிக்கு இட்ட கட்டளை, குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது தான்.

தன் மூன்று பிள்ளைகளையும் வளர்க்கத்தான் அழைத்து வந்தார் என்று தெளிவாக சொல்லி விட்டார். அதே தான் ஈஸ்வரியிடம் வேறு மாதிரி வந்தது.

“வீட்டுல வயசுக்கு வர்ர பிள்ளை இருக்கா. வயித்த தள்ளிட்டு நின்னுடாத. மூணு பிள்ளைங்கள நீ தான் கவனிக்கனும்” என்று அதிகாரமாக கூறி, மூவருக்கும் தாயாக வந்தாரா? இல்லை ஆயாவாக வந்தாரா? என்று அவருக்கே தெரியாமல் செய்து விட்டார் ஈஸ்வரி.

“அப்புறம்? நீங்க இவங்கள சரி பண்ணலயா?”

“என்னம்மா?” என்று தன் நினைவிலிருந்து வெளியே வந்தவர் புரியாமல் கேட்க, “இல்ல இவங்க மூணு பேரும் இப்படி இருக்காங்களே. நீங்க திருத்தலயானு கேட்டேன்” என்று பொறுமையாக கேட்டாள்.

“எங்க? மூணு பேரும் என் கிட்ட பேசவே வருசக் கணக்காச்சு. விசாகா என் கிட்ட ஒட்ட நினைச்சாலும், வேதா விட மாட்டா. சொன்னனே என்னை விட நாலு வயசு தான் கம்மி. அதுனால நீ வா போனு தான் பேசுவா. அவளாவது பேசுவா. விக்ரம் என் முகத்த கூட பார்க்க மாட்டான். நான் வந்தாலே ஒதுங்கிப்போவான். மீறி பேசுனா தலைய மட்டும் தான் ஆட்டுவான். விசாகவ வளர வளர என் கிட்ட இருந்து வேதா தள்ளி வச்சுட்டா. அதுவும் எல்லாம் ஈஸ்வரி அத்த இருக்க வரை தான். வேதாவுக்கு சடங்கு வைக்கிற வரை தான் இருந்தாங்க. அப்புறம் போய்ட்டாங்க. நீ வந்ததால தான் பாட்டி போயிட்டாங்கனு வேதா தான் சண்டை போட்டா”

மீண்டும் நிறுத்தி பெரு மூச்சு விட்டவருக்கு, வேதா பேசியது தான் நினைவில் வந்தது. ஈஸ்வரியின் இறப்புக்கு காரணமே அல்லி தான் என்றாள்.

அது மட்டுமா? இன்னும் எவ்வளவோ பேசினாள். அதை எல்லாம் நினைக்கும் போதே கசப்பை உண்டது போல் இருந்தது.

“இப்பவரை இவங்கள நீங்க மாத்தவே இல்லையே” என்று சித்தாரா குறைபட, “போராடி தோத்துட்டேன்” என்று பெருமூச்சு விட்டார்.

“வேதாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல? அப்புறம் ஏன் இங்கயே இருக்கா?”

“அவ வீட்டுக்காரு ஒரு இடத்துல இருக்க மாட்டாரு”

“அப்படினா?”

“அவரு லாரி ஆஃபிஸ் வச்சுருக்காரு. லவ் பண்ணுறேன்னு ஒரு நாள் வந்து நின்னா. அவங்கப்பா வசதி பத்தல வேணாம்னு சொன்னாரு. உடனே வீட்டுல இருந்த எலி மருந்த தின்னுட்டா. காப்பாத்தி அவருக்கே கட்டி வச்சுட்டோம். ஆனா அவர் உழைப்பாளி. லாரிய அவரே ஓட்டிட்டு போயிடுவாரு பல நேரம். அப்ப எல்லாம் மாமியார் கூட சண்டை போட்டுட்டு இங்க வந்துடுவா.”

“ஓஹோ..”

“அவ வீட்டுக்காரு வந்து இங்க இருந்து கூட்டிட்டு போயிடுவாரு”

“சரி விசாகா?”

“இப்ப வரை என் கிட்ட ஒட்டுனது இல்ல. அப்ப அப்ப அக்கா சொல்லிக் கொடுத்தா என் கிட்ட கோபப்படுவா. அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட் தான் ஆதிரா. ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சாங்க. இப்ப ஆதிரா அவங்க தாத்தாவோட கம்பெனியில வேலை பார்க்குறா. விசாகா வேலையும் பார்க்கல. படிக்கவும் இல்ல. காலையில கிளம்பி போனா ஃப்ரண்டோட ஊர் சுத்திட்டு வருவா”

“வெறும் ஃப்ரண்டா?”

“இல்ல. யாரையோ லவ் பண்ணுறானு தோனுது. அவளா சொன்னா தான் தெரியும்”

“ம்ம்.. விக்ரம்?”

“அவன பத்தி நான் என்னமா சொல்லுறது? உனக்கே தெரியுமே”

“எனக்கு தெரிஞ்சது வேற. அவன் என்னை பழிவாங்க யூஸ் பண்ணிக்கிட்டான். வீட்டுல அவன் எப்படி? அத சொல்லுங்க”

இவர்கள் கதை நன்றாக தெரிந்ததால் அல்லிக்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் விக்ரமை பற்றியும் கூறினார்.

“அவன் பெருசா யார் கிட்டயும் பேச மாட்டான். எந்த நேரமும் படிப்பு மட்டும் தான். அப்போ அப்போ வீடியோ கேம் விளையாடுவான். நிறைய ஃப்ரண்ட் இல்ல. வாகீசன தவிர. அவங்கப்பா அவன் பதினாறு வயசா இருக்கும் போதே, ஸ்கூல் முடிச்சு கம்பெனிக்கு கூட்டிட்டு போயிடுவாரு. அங்க வேலை எல்லாம் பார்க்க மாட்டான். வேலை நடக்குறத கவனிச்சுட்டே இருப்பான். அப்படி கவனிச்சுட்டே இருந்து தான் காலேஜ் முடியும் போதே வேலையில சேர்ந்தான். எல்லாம் அவங்க அப்பா கிட்ட இருந்து அவனுக்கு வந்தது. அஞ்சு வயசு வரை அக்கா அவன வளர்த்தாலும், அவன் மேல எல்லாரும் பாசத்த பொழிஞ்சுருக்காங்க. அதட்டவோ மிரட்டவோ பாட்டி விட்டதே இல்ல. அவனுக்கு அம்மாவும் அப்பாவும் வேணாம்.‌ பாட்டி போதும். அவங்க போனப்புறம் ரொம்ப அமைதியாகிட்டான். இடையில கொஞ்ச நாள் அவன் சிரிச்சு பார்த்தேன். அப்புறம் முன்ன விட ரொம்ப அமைதியா இருக்கவும் என்னனு கேட்டா, நீங்க பிரிஞ்சுட்டீங்கனு தெரிஞ்சது. இப்ப விது கூட தான் அவன் திரும்ப சிரிக்கிறான்.”

அத்தனையும் சொல்லி முடித்தவர் சித்தாராவை பார்த்தார். அவள் முகத்தில் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

“என்ன யோசிக்கிற?”

“என் மாமனாரும் விக்ரமும் ரொம்ப க்ளோஸோ?”

“அப்படி சொல்ல முடியாது. ஆனா அப்பாவுக்கு ஒன்னுனா தாங்க மாட்டான்” என்று கூற, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.

“மாமனாருக்கு என்ன ஆச்சு?”

“நிறைய குடிப்பாரு. அதுல உடம்புல பல பிரச்சனை வந்து.. போயிட்டாரு. ஆனா சுபா அக்கா இறந்தப்புறம் தான் நிறைய குடிக்கிறதா அத்த சொல்லுவாங்க. அத தடுக்க தான் ரெண்டு வருசமா போராடி கடைசியா என்னை கட்டி வச்சாங்க”

‘அப்போ.. வேதாவுக்கு பதினாலு வயசு இருக்கப்போ பதினெட்டு வயசுல வந்த சித்திய பிடிக்கல. தம்பிக்கும் தங்கச்சிக்கும் அவங்கள பிடிக்கவிடாம பார்த்துக்கிட்டா.’ என்று ஓரளவு அனுமானித்தாள்.

“உங்களுக்கு குழந்தை எதுவும் பிறக்கலயா?” என்று சித்தாரா கேட்க, ஒரு நொடி அவரது முகம் வேதனையில் சுருங்கி பிறகு அமைதியாகி விட்டது.

“என்ன விசயம்? நீங்க தைரியமா என் கிட்ட பேசலாம். நான் வெளிய சொல்லிடுவேன்னு தோனுச்சுனா வேணாம்”

“அப்படி இல்லமா” என்று முணுமுணுத்தவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

பல வருடமாக மனதிற்குள் தனிமையில் அவர் படும் துயரங்களை திறந்து காட்டி விட்டால் தான் என்ன? என்று முடிவுக்கு வந்து வாயைத்திறந்தார்.

“இங்க கல்யாணம் பண்ணி வந்ததும் அத்தையும் அவரும் பிள்ளைய பெத்துக்கவே கூடாதுனு சொல்லிட்டாங்க” என்றதும், “வாட்?” என்று சித்தாரா அதிர்ந்தாள்.

“மூணு பிள்ளைய பார்க்க தான் நான். எனக்குனு ஒரு பிள்ளைய பெத்துக்க கூடாதுனு சொல்லிட்டாங்க. நானும் பெத்துக்கவே இல்ல”

“என்ன அராஜகம் இது? நீங்க பிள்ளை பெத்துக்க கூடாதுனா அப்புறம் எதுக்கு கல்யாணம்? அதுக்கு ஒரு நானிய பார்த்து வீட்டுல வைக்க வேண்டியது தான?”

“இப்படி எல்லாம் எனக்காக பேச யாருமே அப்ப இல்ல. பிள்ளை மேல கொள்ள ஆசை. இருந்தும் பெத்துக்கல. ஆளாளுக்கு முதல்ல பிள்ளை உண்டானு கேட்டாங்க. அப்புறம் போகப்போக மலடினு சொல்லிட்டாங்க. அவருக்கு தான் மூணு பிள்ளைங்க இருக்கே. என் கிட்ட தான் குறைனு ஊரே பேசுச்சு. அப்பவும், இந்த குறைனால தான் இவள பிள்ளையோட இருக்க என் மகனுக்கு கட்டி வச்சேன்னு அத்தை ஜாடை மாடையா பேச, ஊரே அவங்கள தலையில தூக்கி வச்சது. தியாகம் பண்ணிட்டாங்களாம். அப்போ எல்லாம் தனியா உட்கார்ந்து அழுதுட்டே இருப்பேன். மாசம் மாசம் தலைக்கு குளிக்க ஒரு நாள் லேட்டானாலும், பப்பாளிய மூணு வேளை கொடுத்துடும் கிழவி. பிள்ளை எப்படியும் தங்கிடக்கூடாதுனு இவங்க சதி பண்ணிட்டு, கடைசியா எனக்கு மலடி..” பேசிக்கொண்டே வந்தவருக்கு விம்மல் வெடித்தது.

சித்தாராவிற்கு அவரை பார்க்க பாவமாக இருந்தது.

‘குடும்ப பழக்கம் போல. வாழ வர்ர பொண்ணுங்க மனச உடைக்கிறது. இடியட்ஸ்’ என்று மனதில் திட்டி விட்டு அங்கிருந்த தண்ணீர் டம்ளரை தள்ளி வைத்தாள்.

“குடிங்க. அவங்க எல்லாம் இப்போ நரகத்துல கிடப்பாங்க. விடுங்க” என்று கூற, தண்ணீரை குடித்து கண்ணீரை கட்டுப்படுத்தினார் அல்லி.

அதன் பிறகு அவராகவே பேசினார்.

“அந்த பேச்ச எல்லாம் கூட ஓரளவு சகிச்சுட்டு இவங்க மூணு பேர் மேலயும் பாசத்த காட்டி மனச தேத்திக்கலாம்னு இருந்தேன். ஆனா அதுவும் முடியல. என் கிட்ட இவங்க ஒட்டவே இல்ல. வீட்டு பொறுப்ப மட்டும் தான் நான் பார்க்க முடிஞ்சது. வேதாவுக்கு கல்யாணம் ஆகி அவளுக்கு குழந்தை பிறந்துச்சு. நான் தூக்கவே கூடாதுனு சொல்லிட்டாமா..” என்றவருக்கு கடைசி வார்த்தையை சொல்லும் போது, எவ்வளவு முயன்றும் குரல் உடைவதை தடுக்க முடியவில்லை.

“நீ மலடி என் பிள்ளைய தொட்டா அதுக்கு எதாவது ஆகிடும். தொடாத போனு துரத்திட்டா. இப்ப வரை அந்த பிள்ளைங்கள நான் தூக்குனதும் இல்ல கொஞ்சுனதும் இல்ல. வேலைக்காரி தான் எல்லாம் பார்ப்பா. நான் முதல்ல தூக்குன குழந்தை விது தான்” என்று கூறியவர் கண்ணீர் வழிந்த கண்ணோடு விதார்த்தை ஆசையாக பார்த்தார்.

தொடரும்.

Leave a Reply